வெள்ளமலை, வெள்ளலூர் நாடு - பண்பாட்டுச் சூழல் நடை
வெள்ளமலை, வெள்ளலூர் நாடு - பண்பாட்டுச் சூழல் நடை பண்பாட்டுச் சூழல் நடையின் 22 வது பயணமாக மேலூர் வட்டம், அம்பலக்காரன்பட்டி & குறிச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வெள்ளமலைக்கு 18.08.2024, ஞாயிறு சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 80 பேர் வரை பங்கெடுத்தனர். வெள்ளமலை பயணத்தில் 71 வகை தாவரங்களும், 40 வகை பறவைகளும், 23 வகை பாலூட்டி விலங்குகளும், 36 வகை வண்ணத்துப்பூச்சிகளும், 6 வகை தட்டான்களும், 44 வகை ஊர்வனங்களும் இன்னபிற பூச்சியினங்களும் வெள்ளமலை காட்டில் ஆவணம் செய்தோம். இந்த பயணத்தின் குறிப்பான இரண்டு செய்திகளை கீழே கொடுத்துளோம். விரிவான செய்தியை ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம். 1. வெள்ளமலையின் வடக்குச்சரிவு மதுரை மாவட்ட வருவாய்துறை கட்டுப்பாட்டிலும் தெற்குச்சரிவு சிவகங்கை மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. புள்ளிமான்கள், கடா மான்கள், தேவாங்குகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வாழும் வெள்ளமலை கோயில்காட்டின் வடக்குச் சரிவை பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க வேண்டும். ...