வெள்ளமலை, வெள்ளலூர் நாடு - பண்பாட்டுச் சூழல் நடை
வெள்ளமலை, வெள்ளலூர் நாடு - பண்பாட்டுச் சூழல் நடை
பண்பாட்டுச்
சூழல் நடையின் 22 வது பயணமாக மேலூர் வட்டம், அம்பலக்காரன்பட்டி & குறிச்சிப்பட்டி
ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள வெள்ளமலைக்கு 18.08.2024, ஞாயிறு சென்று இருந்தோம். இந்நிகழ்வில்
ஏறக்குறைய 80 பேர் வரை பங்கெடுத்தனர். வெள்ளமலை பயணத்தில் 71 வகை தாவரங்களும், 40 வகை பறவைகளும், 23 வகை பாலூட்டி விலங்குகளும், 36 வகை வண்ணத்துப்பூச்சிகளும், 6 வகை தட்டான்களும், 44 வகை ஊர்வனங்களும் இன்னபிற பூச்சியினங்களும் வெள்ளமலை காட்டில் ஆவணம் செய்தோம். இந்த பயணத்தின் குறிப்பான இரண்டு செய்திகளை கீழே
கொடுத்துளோம். விரிவான செய்தியை ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
1. வெள்ளமலையின் வடக்குச்சரிவு மதுரை மாவட்ட வருவாய்துறை கட்டுப்பாட்டிலும் தெற்குச்சரிவு சிவகங்கை மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. புள்ளிமான்கள், கடா மான்கள், தேவாங்குகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் வாழும் வெள்ளமலை கோயில்காட்டின் வடக்குச் சரிவை பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க வேண்டும்.
2. ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலயே படையை எதிர்த்து வரிகொடா போரில் கொல்லப்பட்ட வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த 5000 பேர் நினைவை போற்றும் விதமாக வெள்ளமலையில் நினைவுத்தூண், வளைவு, மணிமண்டபம் எழுப்ப இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் முன்வர வேண்டும்.
வெள்ளமலை ஒரு கோயில்காடு:
மதுரை
மாவட்டம் மேலூர் வட்டம், அம்பலக்காரன்பட்டி & குறிச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது வெள்ளமலை. கிழக்கில் தேவன் பெருமாள்பட்டி துவங்கி மேற்கில் வளையராதினிபட்டி வரை சுமார் 9 கி.மீ நீளமும்,
1 கி.மீ அகலமும், அதிகபட்சம் 150 மீட்டர் உயரமும், சுமார்
1000 ஏக்கர் பரப்பளவும் கொண்டதாக வெள்ளமலை கரடு நீண்டு கிடக்கிறது. உயரம் அதிகமில்லாத வெள்ளமலை காட்டில் புள்ளிமான், கடா மான், தேவாங்கு, உடும்பு உள்ளிட்ட காட்டு விலங்குகள் பரவலாக காணப்படுகிறது. பண்பாட்டுச் சூழல் நடையில் பங்கெடுத்தவர்கள் பலரும் புள்ளி மான்களையும், கடா மான்களையும், உடும்பையும் நேரில் கண்டனர். வரிகொடா போரில் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த 5000 பேர் ஆங்கிலேயே படையால் வெள்ளமலை காட்டில் வைத்துதான் கொல்லப்பட்டனர் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். வெள்ளமலையை வெள்ளிமலை என்றும் அழைக்கிறார்கள்.
கன்னிமார் தேவி கோவில், வங்கொலைகாரி கோவில், அருள்மிகு அய்யனார் கோவில், சடை முனியன், அரசர் சுவாமி திருக்கோவில், வெள்ளமலை கோவில், ஶ்ரீமலை ஈஸ்வர், ஆகாய வெள்ளமலை கோவில், முருகன் கோவில், அருள்மிகு காளி கோவில், நான்கு விளக்கு தூண் உள்ளிட்ட கோயில்கள் வெள்ளமலையில் வழிபாட்டில் உள்ளது.
கிராமத்தெய்வத்தின் பெயரால் மக்களால் பாரம்பரியமாக பாதுகாக்கப்படும் இயற்கையான காட்டை கோயில்காடு என்று வகைப்படுத்துகின்றனர். கோயில்காடு என்பது தங்கள் தெய்வத்திற்குரிய நிலம் என்ற நம்பிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் ஊர் சபையின் வாயிலாக விதிக்கப்பட்டிருக்கும். காட்டில் செருப்பணிந்து செல்லக்கூடாது, காட்டில் உள்ள எந்த மரங்களும் வெட்டக்கூடாது, காட்டில் உள்ள எந்த விலங்குகளையும் வேட்டையாடக் கூடாது உள்ளிட்ட ஊர் கட்டுப்பாடுகள் பன்னெடுங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒழுங்கினை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்காடுகளில் பார்க்க முடியும். கோயில்காட்டை பாதுக்காக்க ஊரிலிருந்தே காவலுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாக்கப்படும். அப்படியான பாரம்பரிய ஒழுங்குகளை வெள்ளமலை கோயில்காட்டில் நாம் காண முடியும். வெள்ளமலையை எவ்வாறெல்லாம் வெள்ளலூர் நாட்டு மக்கள் பாதுகாத்து வருகின்றனர் என்பதனை குறிப்பிட்டு 1962 ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் எழுதிய பரிந்துரை கடிதம் அதற்கு சான்றாக உள்ளது.
1960களில் மதுரை மாவட்டத்தில் உள்ள சமவெளி பசுமை பரப்புகளான கரடுகள், புதர்காடுகள் உள்ளிட்ட பகுதிகளை வனத்துறையின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கைகள் நடைபெற்றது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக தங்கள் கோயில்காடு அறிவிக்கப்பட்டால், காட்டுக்குள் ஊர் மக்கள் மேற்கொள்ளும் பாரம்பரிய நடவடிக்கை தடைபடும் என்று மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. அதனால் மதுரை மாவட்ட வருவாய்த்துறையின் கீழ் புறம்போக்கு பகுதியாகவே வெள்ளமலை வனப்பகுதி இன்றும் நீடிக்கக்கிறது. இவ்வாறு ஏழை காத்த அம்மன் கோயிலோடு தொடர்புடைய வெள்ளலூர் வெள்ளமலை காடும், ஆண்டிக் கோயிலோடு தொடர்புடைய இடையபட்டி வெள்ளிமலை காடும், அரசு வருவாய்த்துறை ஆவணத்தில் புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தாலும், நடைமுறையில் மக்களால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியவே இக்கோயில் காடுகள் இருந்து வருகின்றன. அதற்கு சான்றாக 8.2.1963 தேதியிட்ட தமிழ்நாடு அரசின் அரசாணை (Ms No 305) ஒன்றும் அறிவிப்பு பதாகையாக வெள்ளமலை காட்டின் நுழைவு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது.
1963 ஆம்
வெளியிடப்பட்ட அந்த அரசாணை இவ்வாறு குறிப்பிடுகிறது.
''தங்கள்
குலதெய்வமான ஏழைகாத்த அம்மன் மீதான பய-பக்தியின் காரணமாக
வெள்ளமலை காட்டை இப்பகுதி பொதுமக்களே பாதுகாத்து வருகின்றனர். காற்றடித்து விழுந்த மரங்களாயினும் பட்டு போன மரங்களாயினும் அதை ஏழைக் காத்த அம்மன் கோயிலுக்காக பாதுகாத்தே வருகின்றனர். வெள்ளமலை காட்டில் உள்ள மரங்களை எடுத்து தங்கள் சொந்த தேவைக்கு பயன்படுத்துவது தெய்வக்குத்தமாகிவிடும் என்று மக்கள் நம்புகின்றனர். அதன் காரணமாக வெள்ளமலை காடு பாதுகாக்கப்பட்டு வருகிறது. வெள்ளமலையில் உள்ள மரங்கள் பயன்படுத்தப்பட்டால் அது கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட கோயில் காரியங்களுக்காக மட்டுமே மரங்கள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்டது. அதுவும் இரு ஊர் சபை மற்றும் மக்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே பயன்படுத்தப்பட்டது'' என்று மதுரை மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையோடு அந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளமலைக்கு இடையே செல்லும் மேலூர் - சிவகங்கை நெடுஞ்சாலையில் ‘’காட்டு விலங்குகள் சாலையை கடக்கும் பகுதி’’ என்கிற அரசின் எச்சரிக்கை பதாகையை சாலைகளில் பார்க்கலாம். காட்டுப் பூனை Jungle Cat, புனுகு பூனை Small Indian Civet, மரநாய் Common Palm Civet, அலங்கு / எறும்புத்தின்னி Indian pangolin, காட்டுப் பன்றி Indian Wild Boar, புள்ளி மான் Spotted Deer, மிளா / கடா மான் Sambar Deer, காட்டு முயல் Indian Hare, குல்லாய் குரங்கு Bonnet Macaque, சாம்பல் நிறக் கீரி Indian Grey Mongoose, சாம்பல் நிற தேவாங்கு Grey Slender Loris, இந்திய அணில் Three Striped palm squirrel, தென்னிந்திய முள்ளெலி Bare bellied Hedgehog,, மூஞ்சூறு House shrew, இந்திய வெள்ளெலி Indian Gerbil, வீட்டு எலி House Mouse, வயக்காட்டு எலி Little Indian Field Mouse, பாறை எலி Cutch Rock Rat, புதர் எலி Indian Bush Rat, பெருச்சாளி Greater Bandicoot Rat, கருப்பெலி House Rat / Black Rat, பழுப்பு நிற எலி Brown Rat உள்ளிட்ட 23 பாலூட்டி வகை காட்டு விலங்குகள் வெள்ளிமலையில் காணப்படுகின்றன. புள்ளிமான்கள், கடா மான்கள், குரங்கு, அணில், கீரி உள்ளிட்ட விலங்குகளை நாங்கள் இப்பயணத்தில் நேரில் கண்டோம். இதர உயிரினங்ககளின் இருப்பை அக்காட்டு விலங்குகளின் ஒளிப்படங்களை காண்பித்து மக்களிடம் கலந்து பேசி ஆவணம் செய்தோம்.
வெகு இயல்பாக காணப்பட்ட நரிகள், குள்ளநரிகள் கடந்த 10 ஆண்டுகளாக வெள்ளமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காண முடிவதில்லை. நரியின் ஊளைச் சத்தமும் எங்கேயும் கேட்பதில்லை என்று மக்கள் தெரிவித்தனர். வெள்ளமலை பகுதியை ஒட்டி வாழ்ந்த நரிகள் அழிந்து போயின. மதுரை மாவட்டத்தில் நரிகள் அற்று போய்விட்டன.
வெள்ளமலை தாவரங்கள்:
உசிலை,
வெருவெட்டான், வெள்வேலம், வேம்பு, விடத்தலை, குருந்தம், காக்கா முள், ஆவி, வெப்பாலை, மஞ்சநத்தி, புங்கை, இலந்தை, சிறு இலந்தை, மாவிலங்கை, கூகமத்தி, பிடவம், பனை, சீமை கருவேலம் உள்ளிட்ட 18 வகை மரங்களும்; ஆவாரம், தெரணி, கொடிக்கள்ளி, சிட்டிபுல், முசுண்டை, குருவிச்சி, ஓரிதழ் தாமரை, பற்படாகம், நத்தை சூரி, நாய் கடுகு, புண்ணாக்கு பூண்டு, செம்பூண்டு, திருகுக்கள்ளி, காட்டு சுண்டை, காட்டு துளசி, செங்கத்தாறி, இண்டு முள், சப்பாத்தி கள்ளி, பிரண்டை, விராலி, பல்லி பூண்டு, கடிகாரப் புல், நெருஞ்சி, யானை நெருஞ்சி, வெடிக்காய் செடி, மூக்கிரட்டை, தாராக்கீரை, தாமரை, நாயுருவி, நேத்ரம் பூண்டு, வெண் வாடாமல்லி, முடக்கத்தான், பூனை மீசை, மீனங்கண்ணி, கானா வாழை, வெள்ளருகு, எருக்கு, கோவைக்காய், நறுந்தாளி, குப்பைக்கீரை, தாத்தா பூ, சிறுபூனைக்காலி, ஊமத்தை, சீந்தில், வேலிப்பருத்தி, மூவிலைக்கொடி, ஆமணக்கு, துத்தி, கற்பூர துளசி, தகரை உள்ளிட்ட 50 வகை மூலிகை செடிகளும்; பார்த்தீனியம், உன்னி செடி, காங்கிரஸ்/கம்யூனிஸ்ட் பச்சை உள்ளிட்ட அயல்தாவர களைச்செடிகளும் வெள்ளமலை காட்டில் தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது. தலமர ஊற்று என்றொரு பகுதி வெள்ளமலையில் உள்ளது.
சீமை கருவேல மரங்கள் வெள்ளமலை காட்டுப்பகுதியில் பரவி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. அரசின் உதவியோடு அதனை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வெள்ளமலை பறவைகள்:
புதர்காட்டில் வாழும் பறவைகளையும், மலையடிவார குளங்களில் நீர்நிலைசார் பறவைளையும் இப்பகுதியில் பரவலாக காண முடியும். சீழ்க்கை
சீராகி - Lesser Whistling-Duck, வல்லூறு Shikra, கரும்பருந்து Black Kite, செம்மார்பு குக்குறுவான் Coppersmith Barbet, பொன்முதுகு மரங்கொத்தி Black-rumped Flameback, செந்தார்
பைங்கிளி Rose-ringed Parakeet, கதிர்குருவி Plain Prinia, கொண்டாலத்தி Hoopoes, வெண்புருவ சின்னான்
White-browed Bulbul, மயில் Indian Peafowl, புள்ளிப்புறா Spotted Dove, செண்பகம்
Greater Coucal, நீல முக பூங்குயில் Blue-faced Malkoha, சுடலை குயில் Pied
Cuckoo, குருகு Indian Pond-Heron, ஆசியக் குயில் Asian Koel, அக்கா குயில் Common
Hawk-Cuckoo, பனை உழவாரன் Asian Palm Swift, செந்தலை அன்றில் Red-naped Ibis, புள்ளி ஆந்தை Spotted Owlet, பனங்காடை
Indian Roller, கருந்தலை மாங்குயில் Black-hooded oriole, கரிச்சான் Black Drongo,
வால்காக்கை Rufous Treepie, காகம் House Crow, தையல்சிட்டு Common Tailorbird, செங்குத
கொண்டைக்குருவி Red-vented Bulbul, வெண்தலை சிலம்பன் Yellow-billed Babbler, கருந்தலை
நாகணவாய் Brahminy Starling, நாகணவாய் Common Myna, புதர்சிட்டு Indian Robin, வெளிர்
அலகுபூங்கொத்தி, ஊதாப்பிட்ட தேன்சிட்டு Purple-rumped Sunbird, ஊதா தேன்சிட்டு
Purple Sunbird, தேன்சிட்டு Loten's Sunbird, தூக்கணாங்குருவி Baya Weaver, புள்ளிச்
சில்லை Scaly-breasted Munia, சிட்டுக்குருவி House Sparrow, மாங்குயில் Indian
Golden Oriole, மூவண்ண சில்லை Tricolored
Munia உள்ளிட்ட 40 வகை பறவைகள் வெள்ளமலை பகுதியில் மருத்துவர் ஹீமோக்ளோபின், வெங்கட்ராமன்,
சக்திவேல், கமலேஷ் உள்ளிட்டோர்களால் ஆவணம் செய்யப்பட்டது.
வெள்ளமலை
வண்ணத்துப்பூச்சிகள்:
Common lime எலுமிச்சை
அழகி, Common Mormon கறிவேப்பிலை
அழகன், Crimson Rose உரோசா அழகி, Common silverline வெள்ளிவரையன், Common
Pierrot புள்ளி நீலன், Lime blue எலுமிச்சை நீலன், Forget me not பயறு நீலன், Tiny Grass blue சிறுபுல் நீலன், Dark Grass Blue கரும்புல் நீலன், Bright Babul blue அடர் கருவேல நீலன், Little orange tip சிறிய காவிக்கடவி, Plain orange
tip காவி நுனிச்சிறகன், Yellow
orange tip மஞ்சள் காவிக்கடவி, Crimson tip கருஞ்சிவப்பு நுனிச்சிறகன், Common Grass
yellow மஞ்சளாத்தி,
Small Grass yellow சிறு
மஞ்சளாத்தி, Common
emigrant கொள்ளை வெள்ளையன், Mottled
Emigrant அவரை வெள்ளையன், Common Gull மஞ்சாடை, Pioneer கொக்கிக்குறி வெள்ளையன், Psyche வெண்மதி, Chocolate Pansy பழுப்புநிற வசீகரன் Lemon Pansy எலுமிச்சை வசீகரன், Blue pansy நீல வசீகரன், Common Castor ஆமணக்கு சிறகன், Tawny coster செவ்வந்தி சிறகன், Plain tiger வெந்தய வரியன், Striped Tiger வரி வேங்கை, Dark Blue tiger கருநீல வேங்கை, Danaid Eggfly பசலை சிறகன், Common crow வெண்புள்ளிக் கருப்பன், Double Banded
Crow இரு பட்டைக் கருப்பன், Black Rajah கறுப்புச் சிறகன், Common Banded Awl பழுப்பு நாமத்தாவி, Indian grizzled
skipper நரைச்சிறகுத்தாவி
உள்ளிட்ட 36 வகை வண்ணத்துப்பூச்சிகள்
வெள்ளமலை பகுதியில் ஆவணம் செய்யப்பட்டது.
வெள்ளமலை
தட்டான்கள்:
Ditch Jewel தேன்
தட்டான், long legged
marsh Skimmer நெட்டைக்கால்
தட்டான், Slender
Skimmer பச்சைச் சதுப்பன், Ruddy Marsh
Skimmer குங்குமத்தட்டான்,
Common picture Wing ஓவியச்
சிறகன், Golden
Dartlet தங்க ஊசித் தட்டான் உள்ளிட்ட 6 வகை தட்டான்கள் வெள்ளமலையில் ஆவணம் செய்யப்பட்டது.
வெள்ளமலை
காட்டில் ஊர்வனங்கள்:
உடும்பு Bengal Monitor Lizard, பச்சோந்தி Indian Chameleon, ஓணான் Garden Lizard, பச்சை ஓணான் Green Forest Lizard, பாறை ஓணான் Peninsular Rock Agama, விசிறி தொண்டை ஓணான் Fan Throated Lizard, அரணை Keeled Indian Mabuya, பிப்பிரான் அரணை Bibrons's Skink, பாம்புகண் அரணை Snake Eyed Lizard, நாகம் / நல்ல பாம்பு Spectacled Cobra, கண்ணாடி விரியன் Russell’s Viper, சுருட்டை விரியன் Saw Scaled Viper, கட்டு வரியன் Common Krait, நாணல் குச்சி பவளப்பாம்பு Slender Coral Snake, புழுப் பாம்பு Blind Worm Snake, ஊசி புழு பாம்பு Beaked Worm Snake, பச்சை பாம்பு Long Nosed Vine Snake, பூனைக்கண் பாம்பு Common Cat Snake, சிவப்பு மண்ணுளிப் பாம்பு Red Sand Boa, மண்ணுளிப் பாம்பு Common Sand Boa, தண்ணீர் பாம்பு Checkered Keelback , சதுரங்க பாம்பு Olive Keelback, வெள்ளிக் கோல் வரையன் Common Wolf Snake, பட்டைக் கோல் வரையன் Barred Wolf Snake, தென்னக வரையன் Southern Wolf Snake, கொம்பேறிமூக்கன் Common Bronzeback Tree Snake, அலங்கார பாம்பு Common Bridle Snake, எண்ணெய் பனையன் Common Kukri, ஓலைப் பாம்பு Streaked Kukri / Banded Kukri, மோதிர வளையன் Common Trinket Snake, கருந்தலைப் பாம்பு Dumerill’s Black Headed Snake, மலைப் பாம்பு Indian Rock Python, ஓடுகாலி பாம்பு Joseph’s Racer, சாரைப் பாம்பு Indian Rat Snake , புல்லுருவி பாம்பு Striped Keelback, வீட்டுப் பல்லி House Gecko, வீட்டு புள்ளிப் பல்லி Spotted House Gecko, மரப் பல்லி Leshenault's Leaf Toed Gecko, புற்றுப் பல்லி Termite Hill Gecko, செதில் பல்லி Scaly Gecko, வளையிலை விரல் பள்ளி Reticulated Leaf Toed Gecko, உடுதிரள் ஆமை Indian Star Tortoise, குளத்து ஆமை Indian Black Turtle, வழுக்கோடு ஆமை Flapshell Turtle உள்ளிட்ட ஊர்வன வகைப்பட்ட உயிரினங்கள் இக்காட்டில் காணப்படுகின்றன.
உடும்பு, ஓணான் உள்ளிட்ட உயிரினங்களை நேரில் கண்டு ஆவணம் செய்தோம். இதர உயிரினங்களை மக்களிடம் படங்களை காட்டி விசாரித்து ஆவணம் செய்தோம்.
வெள்ளமலையில் எட்டுக்காலிகள் Arachnids 🕷️
1. செந்தேள் Indian red scopion (Hottenotta tumulus)
2. வெண்தேள் Whip scorpion (Thelyphonus sepiaris)
3. மூதாய் உன்னி Velvet mite (Trombidiidae)
சிலந்திகள்:
Argiope pulchella, Gasteracantha geminata, Bijoaraneus mitificus, Poltys sp., Lycosa sp., Hippasa sp., Plexippus sp., Hersilia sp., Neoscona sp., Hyllus sp., Carrhotus sp. உள்ளிட்ட உயிரினங்கள் காட்டுயிர் ஆய்வாளர் திரு. ர. கிஷோர் அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது.
வெள்ளமலை காட்டில் உள்ள இதர பூச்சியினங்கள்:
Crotalaria Moth அலங்கார
அந்துப்பூச்சி,
Indian black Ant இந்திய கட்டெறும்பு,
Asian Weaver Ant - தையல்
மர எறும்பு Leucostoma (bee
fly) - தேனீ, Delta
(Potter wasp) - குளவி,Leptodialepis
bipartitus - Yellow-headed spider-hunting wasp - மஞ்சள்
தலை குளவி, Ropalidia marginata
- மஞ்சள் வரி காகிதக் குளவி, Greater Banded
hornet - பெருகொம்பு குளவி, Xylocopa (carpenter
bees) - தச்சர் தேனீ, Microchrysa
flaviventris (soldier fly) - சிப்பாய்
தேனீ, Cicadas,
Indian Red bug - சிவப்பு
கணுக்காலிகள்,
Darkling beetles - அடர்
கருப்பு ஆறுகால வண்டு, Neorthacris
(grasshopper) - பச்சை
பழுப்பு வெட்டுக்கிளி, Spotted
locust - புள்ளி சிறுகொம்பு வெட்டுக்கிளி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பூச்சியினங்கள் ஆவணம் செய்யப்பட்டது. மழைக்காலங்களில் மின்மினி பூச்சிகள் இப்பகுதியில் பரவலாக காண முடிகிறது.
வெள்ளமலை
பகுதியில் நாங்கள் மேற்கொண்ட மூன்றுமணி நேர நடையில் மேல்குறிப்பிட்டுள்ள உயிரினங்கள் ஆவணம் செய்யப்பட்டது. ஆண்டு முழுதும் பல்வேறு பருவநிலை காலங்களில் ஆய்வு செய்தால் வெள்ளமலை கோயில்காட்டின் பல்லுயிரிய வகைமையை விரிவாக அறிந்து கொள்ள முடியும்.
அரசின் பதிவேட்டில் வெள்ளமலை வடக்குச்சரிவு புறம்போக்கு என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதால்
சிப்காட், சிட்கோ, சிறைச்சாலை என அரசின் பல்வேறு
திட்டங்களுக்கு வெள்ளமலைப் பகுதி ஒதுக்கப்படுகிறது. வெள்ளலூர் நாட்டு மக்களின் எதிர்ப்பு காரணமாக வெள்ளமலைக் காட்டை அழித்து மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்கள் எதுவும் அமலாகவில்லை. எனவே வரலாற்று நோக்கிலும் பல்லுயிரிய நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளமலையை மதுரை மாவட்ட வனத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
வெள்ளலூர்
நாடு:
வெள்ளமலைச் சரிவில் அமைந்த ஊர் என்பதனால் வெள்ளலூர் என்று பெயர் வந்து இருக்கலாம். வல்லடிகாரர் கோயில் அருகே வெள்ளக்கண்மாய் உள்ளது. 1910 ஆம் ஆண்டு கட்டப்பட்ட வெள்ள விநாயகர் கோயிலும் வெள்ளலூர் நாட்டில் உள்ளது.
250 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வெள்ளலூர் படுகொலை நிகழ்வுக்கு பிறகு வெவ்வேறு பகுதிகளுக்கு அங்குமிங்குமாக சிதறிப்போன மக்களை மீண்டும் நாட்டு கூட்டமாக ஒருங்கிணைத்தவர்கள் திரு. வீரணன் அம்பலம் மற்றும் கட்டக்காளை (எ) முத்துக்கருப்பன் அவர்கள் தாம் என்றார் திரு.சீனிவாசன் அவர்கள். பேரழிவில் இருந்து தப்பிய மக்களை மீட்டு ஒன்று சேர்த்த திரு. வீரணன் அம்பலம் அவர்களின் திருவுருவச் சிலையும் மணிமண்டபமும் வெள்ளலூர் நாட்டில் அமைந்துள்ளது. கான்சாகிப் படையில் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த வெள்ளையன் என்கிற முக்கிய தளபதியாக இருந்தார். அவருக்கு வெள்ளலூர் சாலையில் கோயில் ஒன்று இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்தின் போது இடிக்கப்பட்டுவிட்டது என்று திரு. சீனிவாசன் அவர்கள் தெரிவித்தார்.
வெள்ளலூர்
நாடு என்பது ஏறத்தாழ ஐம்பதுக்கும் அதிகமான சிறிய ஊர்களின் பகுதியாகும். இந்த ஐம்பது ஊர்களும் சுமார் ஐந்து மாகாணங்களுக்குள் அடங்கியிருக்கிறது. அவை
2. உறங்கான்பட்டி
3. அம்பலகாரன்பட்டி
4. குறிச்சிபட்டி
5. மலைப்பட்டி
(மலம்பட்டி)
மூண்டவாசி, வேங்கைப்புலி, சம்மட்டி, நய்க்கான், சாயும் படைதாங்கி, வெக்காலி, சலுப்புலி, திருமான், செம்புலி, நண்டன்-கோப்பன், பூலான்-மலவராயன் என 11 கரைகள் உள்ளன. விவசாயம் செழிக்க ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளன்று வெள்ளலூர் மக்களின் முதல் தெய்வமான கருங்கல் மந்தையில் 63 ஊர் மக்களும் ஒன்று கூடி நடைபெறும் வெற்றிலைப்பிரி விழா வெள்ளலூர் நாட்டின் முக்கிய நிகழ்வாகும். ஆண்கள் மேல்சட்டை இல்லாமல் தலைப்பாகை கட்டி, வேட்டி அணிந்து, பாரம்பரிய முறையில் வெள்ளலூர் கருங்கல் மந்தையில் நடைபெறும் நாட்டுக்கூட்டம் தனித்துவமானது.
வெள்ளலூர் நாட்டில் கருங்கல் மந்தைசாமி, அம்பலகாரன்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு வல்லடிகாரர் கோவில், கோவில்பட்டியில் அமைந்துள்ள ஏழைகாத்த அம்மன் கோவில் உள்ளிட்ட மூன்று தெய்வங்கள் ஊர் பொது கோவிலாக விளங்குகின்றன. வல்லடிகாரர் கோயில் திருவிழா மாசி மாத இறுதியிலோ அல்லது பங்குனி மாத தொடக்கத்திலோ நடைபெறும். ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா புரட்டாசி மாதம் நடைபெறும். இரு கோயில்களுக்கும் தனியான தேர் உள்ளது.
வல்லடிகாரர் கோயில்:
வெள்ளலூர் பகுதியில் உள்ள 63 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 15 நாட்கள் காப்பு கட்டி விரதத்துடன் வல்லடிகாரர் கோயில் மாசி திருவிழா துவங்கிறது. உச்சிப்பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. திருவிழாவை ஒட்டி நடைபெறும் மஞ்சுவிரட்டு போட்டியில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்து காளைகள் கொண்டு வரப்படுகிறது. கோயிலில் உள்ள சேமங்குதிரைக்கு கதம்பம், பூமாலைகள் சாற்றி வழிபடுகின்றனர். திருவிழாவில் நடைபெறும் தேரோட்டத்தில் வல்லடிகாரர் சாமி எழுந்தருளி காட்சி தருகிறார். வல்லடிகாரர் கோயில் சேமங்குதிரையை கேலி செய்த ஆங்கிலேய அதிகாரி ஒருவர் வெள்ளக்கண்மாயில் இறந்து போனதாக ஐதீகம் உள்ளது.
மஞ்சுவிரட்டு தொழுவம்:
வல்லடிகாரர் கோயில் திருவிழா முன்னிட்டு மஞ்சுவிரட்டு நிகழ்வு நடைபெறுகிறது. வல்லடிகாரர் கோயில் முன்பு அம்பலகாரன்பட்டிக்கு உரித்தான மஞ்சுவிரட்டு தொழுவம் ஒன்றும், நாயத்தான்பட்டிக்கு உரித்தான மஞ்சுவிரட்டு தொழுவம் ஒன்றும் அமைந்துள்ளது.
ஏழைகாத்த
அம்மன் கோயில்:
ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா புரட்டாசி மாதம் நடைபெறுகிறது. வெள்ளலூர் நாட்டில் உள்ள 63 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 15 நாட்கள் காப்பு கட்டி விரதத்துடன் விழா துவங்குகிறது. விழாவில் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த ஏழு சிறுமிகள் தெய்வங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு வழிபடுவது வழக்கம். ஆண்கள், சிறுவர்கள் தங்கள் உடலில் வைக்கோல் பிரி போர்த்தி பலவித வேடங்களை அணிந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோட்டநத்தம்பட்டி துவங்கி கோவில்பட்டியில் உள்ள ஏழைகாத்த அம்மன் கோயில் வரை ஊர்வலமாக பெண்களால் மதுக்கலய மண் உருவ பொம்மைகள் எடுத்துவரப்பட்டு நேர்த்திகடன் செலுத்தி வழிபாடு நடைபெறுகிறது.
ஏழைக்காத்த அம்மன் கோயிலுக்கும் வல்லடிகாரர் கோயிலுக்கும் தனித்தனியான தேர் உள்ளது. இரு கோயில் தேரோட்டமும் சுற்றுவட்டார பகுதியில் சிறப்பு பெற்றதாகும். பக்தர்கள் தீர்த்தவாரி இறங்க இரு கோயில் வெளியிலும் தெப்பக்குளமும் உள்ளது. வெள்ளலூர் நாட்டில் திருவிழா நடைபெறும் 15 நாட்களும் ஊர் மக்கள் யாரும் அசைவம் உண்ணுவதில்லை. அப்பகுதியில் உள்ள உணவகங்களும் திருவிழா நாட்களில் அசைவம் சமைப்பதில்லை.
நீர்நிலைகள்:
வெள்ளமலையில் விழும் மழைநீர் அருகில் உள்ள கண்மாய், குளங்களை நிறைக்கிறது. வைகை - பெரியார் பாசன கால்வாயில் இருந்தும் உபரி நீர் இப்பகுதிக்கு கிடைக்கிறது.
வைகை - பெரியார் பிரதான பாசன கால்வாயின் 9 வது கிளைக் கால்வாய் 22வது மடையில் இருந்து கால் வெட்டி உபரிநீரை மேலூர் அம்பலக்காரன்பட்டி கிராமத்தில் உள்ள மெய்யப்பன் ஊரணி, பேயன்கருப்பன் கண்மாய், இளங்கண்மாய், முள்ளிக்கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு கொண்டு வர வேண்டும் என்று 23.5.1929 அன்று வெள்ளலூர் பழையூர்பட்டியை சேர்ந்த மு.பெருமாள் அவர்கள் வரைபடங்களுடன் கூடிய விரிவான மனுவினை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அவர்களுக்கு கொடுத்துள்ளனர்.
வேளாண்மை & கால்நடை வளர்ப்பு:
வைகை - பெரியார் கால்வாய் நீர் கிடைக்கும் சமயங்களிலும் கிணறு பாசனம் கொண்டவர்களுக்கும் நெல், வாழை, ஆளக்கரும்பு, தென்னை பயிரிடுகின்றனர். எள்ளு, சோளம், வரகு, குதிரைவாலி, கம்பு, கேப்பை, சாமை, கடலை, மொச்சை, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு உள்ளிட்ட மானாவாரி பயிர்களும் வேளாண்மை செய்யப்படுகிறது. கத்திரி, வெண்டை, சீனி அவரை, தக்காளி, பூசணி, பீர்க்கு, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறித் தோட்டம்; முருங்கை, குமட்டிக்கீரை, கல்குமட்டி, பொன்னாங்கண்ணி, பிரண்டை உள்ளிட்ட கீரை வகைகளும் பனை மரங்கள் இப்பகுதியில் அதிகளவில் காணப்படுகிறது. பனை சார்ந்த தொழிலும் இப்பகுதியில் காண முடிகிறது.
வெள்ளமலை சுற்றுவட்டார பகுதிகளில் முதன்மை தொழில் கால்நடை வளர்ப்புதான். முக்கால்வாசி வீடுகளிலும் பசுமாடு வளர்க்கப்படுகிறது. காளை, ஆடு, கோழி, சேவல் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும் இம்மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
கான்சாகிப், மருதநாயகம் என்று அழைக்கப்பட்ட யூசுப்கான் மதுரையில் ஆட்சி செய்த போது அழகர்மலை அடிவாரத்தில் மேலூர் - வெள்ளாளப்பட்டிக்கு இடையில் கோட்டைகளைக் கட்டினார். கள்ளர்களைச் சாலைக் காவலர்களாக, அரசாங்க அதிகாரிகளாக நியமித்து அவர்கள் கொள்ளையடிக்காமல் பாதுகாக்கும் பணியை செய்ய ஏற்பாடுகளை செய்தார். யூசுப்கான் அவரது படையில் கள்ளர்களைப் படை வீரர்களாக சேர்த்துக் கொண்டார். குடிகாவல், தெருக்காவல், ஊர்க்காவல், திசைக்காவல் எனப் பல்வேறு பதவிகளை கான்சாகிப் உருவாக்கி அப்பதவிகளைக் கள்ளர்களுக்குக் கொடுத்தார். யூசுப்கான் ஆட்சியில் கள்ளர் இன மக்களிடம் வரி வசூல் செய்வதில்லை என்ற முடிவை எடுத்து அதை பிரகடனப்படுத்தவும் செய்தார்.
சென்னை
கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கள்ளர்களைப் பற்றி பின்வருமாறு யூசுப்கான் குறிப்பிட்டு இருந்தார். ''கள்ளர்கள் சாதாரணமான மனிதர்கள் அல்ல. கள்ளர்கள் அசூர போர்குணமிக்கவர்கள். போரில் தங்கள் உயிரைப் பற்றி பெரிதும் கவலைப்படாமல் எதிரிகள் மீது பாய்ந்து தாக்குதல் நடத்தி, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட வீரர்கள் என்று கள்ளர்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
1764 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற போரில் யூசுப்கான் பின்னடைவை சந்தித்தார். ஆற்காட்டு நவாப் மற்றும் ஆங்கிலேயர்களால் வீழ்த்தப்பட்ட யூசுப்கான் 15.10.1764 மதுரை சம்மட்டிபுரத்தில் தூக்கிலிடப்பட்டார். அதன் பின் மேஜர் டொனால்ட் கேம்ப்பெல் தலைமையிலான படை கான்சாகிப்க்கு ஆதரவாக இருந்த எண்ணற்ற குழுக்களைச் சிதறடித்தது.
கான்சாகிப்-ன் வீழ்ச்சிக்கு பிறகு,
நவாப்புக்கு கள்ளர்கள் பெரும் சவாலாக இருந்தனர். நவாப் மற்றும் ஆங்கிலேயே அரசுக்கு கள்ளர்கள் கப்பம் கட்ட மறுத்தனர். மேலும் நவாப் அரசின் பகுதிகளுக்குள் ஊடுருவதைத் தொடர்ந்தனர். ஆகவே இப்போர்க்குணமிக்க குடிகளை ஒடுக்கும் பொருட்டு, கேப்டன் ரூம்லே தலைமையில் 1500 குதிரைப் படைவீர்கள் கொண்ட ஐந்து பெரும்படையை நவாப் அனுப்பினார். மேலூரில் முகாமிட்டிருந்த கேப்டன் ரூம்லே கள்ளர்களின் தலைவர்களை வந்து நேரில் சந்திக்குமாறு அழைப்பாணை விடுத்திருந்தார். யாரும் நேரில் வரவில்லை. தொடர்ந்து அவர்கள் அரசுக்கு அடங்காத போக்கையே வெளிப்படுத்தினர்கள்.
Madura Country Manual J H nelson Gazettee 1868 |
தன் படையுடன் வெள்ளளூரை சுற்றி வளைத்த நின்ற ரூம்லே, நாட்டாரை / கிராமத்தலைவர்களை அழைத்து சரணடையுமாறு கோரினார். ஆனால் ஒட்டு மொத்த கள்ளர்களும் ரூம்லே ஆணையை ஏற்க மறுத்துவிட்டனர். ஆயுதங்களுடன் ஆங்கில படைக்கு எதிரான நிலையிலே நான்கு திசைகளில் இருந்தும் கள்ளர்கள் தயாராக இருந்தனர். அதனால் அவரது படையினர் வெள்ளலூர் நாட்டுக் கள்ளர்கள் நிலைகளைத் தாக்கினார். வேலிகளுக்கு தீயிட்டனர். தீயிலிருந்து தப்பியோடிய கள்ளர்களை கண்டந்துண்டமாக வெட்டிச் சாய்த்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 3000 பேர் கொல்லப்பட்டனர்.
அதன்பின் வரிவசூல் செய்ய வந்த நவாப்பின் பத்து வருவாய் ஊழியர்களை பழிதீர்க்கும் விதமாக வெள்ளலூர் நாட்டை சேர்ந்த கள்ளர்கள் கொலை செய்தனர். ரூம்லே படையினர் வெள்ளலூர் நாட்டு மக்களில் 3000 பேரை கொலை செய்த பிறகும், தலைவர்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள் என்று அறிந்த பிறகும், கப்பம் கட்ட மறுத்தனர், நவாப் அரசின் வருவாய்த்துறை ஊழியர்களை கொலை செய்தனர். எனவே ரூம்லே இன்னொரு படையை அனுப்பி, இரண்டாம் முறை வெள்ளலூர் நாட்டைத் தாக்கி, மக்களில் 2000 பேருக்கு மேற்பட்டோரைக் கொன்று பழித் தீர்த்தார்.
கேப்டன் சார்லஸ் ரூம்லே தலைமையில் வந்த வெள்ளையர் படை, வரி கொடுக்க மறுத்த காரணத்தினால் வெள்ளலூர் நாட்டைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 5000 பேரை கொலை செய்ததாக திரு. கலைமணி அம்பலம் (கண்டதேவி: பக்கம் 61-62) குறிப்பிடுகிறார். கேப்டன் ரூம்லே அவர்கள் சில நூறு பேரை கொலை செய்ததாக தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார். இப்படுகொலை நடந்து 30 ஆண்டுகளுக்கு பின் வந்த தாமஸ் டர்ன்புல் அவர்கள் வெள்ளலூர் மக்களிடம் நேரில் சென்று விசாரித்து எழுதுகிற போது கேப்டன் ரூம்லே தலைமையிலான படை கொன்றது சில நூறு பேரையல்ல, 5000 பேரை என்று எழுதுகிறார். (Thomas Turnbull, Account of the Various Tribes of Cullaries in the Country of Madurai and Sivaganga - 13th Jan 1817)
![]() |
Madura Country Manual J H Nelson Gazettee 1868 |
வெள்ளலூர் படுகொலையை பற்றி குறிப்பிட்டு செல்லும் மெட்ராஸ் அரசு அச்சகம் பதிப்பித்து 1868 ஆம் ஆண்டு வெளியிட்ட ‘’The Madurai Country Manual by JH Nelson‘(பக்கம் 46) ஒரே நாளில் 3000 பேர் படுகொலை செய்யப்பட்டனர் என பதிவு செய்கிறது.
வெள்ளலூர் நாட்டில் 5000 பேர் படுகொலை செய்யப்பட்ட இந்த வரலாற்றை 1906 ஆம் ஆண்டு மெட்ராஸ் அரசு அச்சகம் பதிப்பித்து வெளியிட்ட ‘’Madurai (India:
District) -- Gazetteers‘ பக்கம்
89, கே. ராஜய்யன் அவர்கள் எழுதிய ‘’மதுரை வரலாறு 1736 – 1801’’ (பக்கம்209-201), தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியிட்ட ‘’மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு’’ 2005 (பக்கம் 135) ஆகிய நூல்கள் பதிவு செய்துள்ளன.
''வரி கொடுக்க மறுத்ததால் கேப்டன் ரூம்லே தலைமையிலான வெள்ளையர் படை 1772இல் ஆகஸ்ட் மாதம் 5000 கள்ளர்களை ஆண், பெண், குழந்தைகள் என எந்த பாகுபாடுமில்லாமல் படுகொலை செய்தனர்'' என்று எழுத்தாளர் திரு. சிவ.கலைமானி அம்பலம் அவர்கள் 'கண்டதேவி' நூலில் (2024 வெளியீடு - பக்கம் 61) இல் பதிவு செய்திருக்கிறார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் 5000 பேர் எண்ணிக்கை, கொல்லப்பட்ட ஆண்டு, தேதியை குறிப்பிட்டு எழுதினீர்கள் என்று திரு. கலைமணி அவர்களிடம் கைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டேன் (தமிழ்தாசன்). Thomas Turnbull, Account of the Various Tribes of Cullaries in the Country of Madurai and Sivaganga - 13th Jan 1817 குறிப்பில் இந்த விபரங்கள் உள்ளதாக என்னிடம் (தமிழ்தாசன்) குறிப்பிட்டார். விரைவில் இதனை ஆங்கிலத்தில் நூலக வெளியிடவும் இருப்பதாக என்னிடம் கூறினார்.
இந்த படுகொலை வெள்ளலூர் நாட்டில் எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பது பற்றி குறிப்புகள் நமக்கு கிடைக்கவில்லை. இந்த படுகொலை குறித்து அடுத்த தலைமுறைக்கு கடந்தும் கதைப்பாடல்கள், நாட்டார் பாடல்கள், கும்மிப்பாடல் எதுவும் வெள்ளலூரில் உள்ளதா? அக்காலத்தில் வெள்ளலூர் நாட்டில் 5000திற்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வாழ்ந்தார்களா? நடுகற்கள் சான்றுகள் ஏதும் உள்ளனவா என்கிற களச்சான்றுகள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். நெல்சன் குறிப்புகள் 5000 பேர் படுகொலை செய்யப்பட்ட விவரத்தை தெரிவிக்கும் போது வெள்ளாளப்பட்டி (Vellalapatti) என்றே குறிப்பிடுகிறது.
நாட்டார்களின் நாட்டுக்கூட்டம்:
ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழா துவங்குவதை ஒட்டி நாட்டுத் தெய்வங்கள், வனதேவதைகள், வெள்ளமலை தெய்வங்களை வணங்கி வழிபடும் வழக்கம் பன்னெடுங்காலமாக நிகழ்கிறது. அதன் ஒரு பகுதியாக போரில் கொல்லப்பட்ட 5000 முன்னோர்களை தெய்வமாக வணங்கி வழிபடும் நாட்டார்கள் நாட்டுக்கூட்டம் வெள்ளமலையில் நடைபெறுகிறது. வேல் ஒன்றை நட்டு வைத்து, அதற்கு பூமாலை சாற்றி, கற்களை குவித்து, பழம் மாற்றி, விளக்கேற்றி வழிபடுகின்றனர். 1772 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட போர்குணமிக்க தங்கள் முன்னோர்களின் நினைவாக இந்த வழிபாடு கடந்த 250 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்று வெள்ளலூர் பகுதியை சேர்ந்த இந்திய விடுதலை போராட்ட வீரர் பெ. சொக்கலிங்கம் (சுதந்திர போராட்ட தியாகி) அவர்களின் மகன் சீனிவாசன் அவர்கள் குறிப்பிடுகிறார். இந்த சடங்கு மேற்சொன்ன காரணத்திற்குதான் நிகழ்த்தப்படுகிறது என்பது பற்றி இதர நாட்டார் தலைவர்களிடம் கேட்க நேரமில்லாமல் போனது.
கடந்த 10.09.2024 அன்று கொல்லப்பட்ட 5000 முன்னோர்களின் நினைவாக 5000 தீப விளக்குகள் ஏற்றி வெள்ளலூர் நாட்டுமக்கள் வழிபட்டனர். விளக்கேற்றி வழிபடும் நிகழ்வு 2024ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்திய தேச விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயே படையினரால் வெள்ளலூரில் 5000 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆங்கிலேயே படையை எதிர்த்து நின்ற போர்குணமிக்க வெள்ளலூர் நாட்டு மக்களின் நினைவை போற்றும் விதமாக மத்திய - மாநில அரசுகளால் நினைவுத்தூண், மணிமண்டபம் எழுப்பப்பட வேண்டும். இந்த வரலாற்றை ஆய்வு செய்து ''இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளலூர் நாட்டின் பங்கு'' குறித்து நூல் ஒன்றையும் மத்திய - மாநில அரசுகளின் சார்பில் வெளியிட வேண்டும்.
![]() |
பெ.சொ. சீனிவாசன் அவர்கள் |
குறிப்பு:
வெள்ளமலையில் உள்ள பல்லுயிரியங்கள் குறித்து ஆய்வு செய்து கொடுக்க வேண்டுமென்று வெள்ளலூர் நாட்டு மக்கள் சேவை மன்ற நிர்வாகிகள் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையிடம் கேட்டுக் கொண்டனர். அதனடிப்படையில் இந்த பண்பாட்டுச் சூழல் நடை வெள்ளமலையில் திட்டமிடப்பட்டு இருந்தது. காலை உணவாக வெண்பொங்கலும், உளுந்த வடையும், குடிநீரும் மக்கள் சேவை மன்ற நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். வெள்ளலூர் நாட்டு மக்கள் மிகுந்த அன்புடன் எங்களை உபசரித்து வழியனுப்பினர். இந்நிகழ்வுக்கு காரணமாக அமைந்த நண்பர் கோ.பிரபகரன் அவர்கள், வெள்ளலூர் நாட்டு மக்களின் வழக்கங்கள், வரலாறுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்த ஐயா சீனிவாசன் மற்றும் ஊர் மக்களுக்கும் அவர்களின் அன்புக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். பண்பாட்டு மற்றும் பல்லுயிரிய நோக்கிலும் விரிவான ஆய்வுக்குரிய பகுதியாக வெள்ளலூர் நாடு விளங்குகிறது.
களத்தகவல் மற்றும் உடன் பயணித்த ஊர் மக்கள்:
திரு. சீனிவாசன் ஐயா, திரு. பால தண்டாயுதம், திரு. கோ.பிரபாகரன், திரு. சு.செல்வம், திரு. பாலமுருகன், திரு. முத்து, திரு. மோகனசுந்தரம், திரு. கலைச்செல்வம், திரு. சீனிவாசன், திரு. சுதாகரன், திரு. மாதவன், திரு. அழகுராஜா, திரு. கொத்தாளம், திரு. பாண்டியன், திரு. பாண்டி, திரு. சுப்பையா, திரு. தமிழரசன், திரு. திருப்பதி, திரு. பாலதண்டாயுதம், திரு. குமரன், திரு. முத்துக்காளை வெள்ளலூர் நாடு, மதுரை மாவட்டம்.
---- ஆய்வுக்குழு
----
- பேரா.
ப. தேவி அறிவு செல்வம் (கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)
- மரு.
ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)
- திருமிகு.
சரஸ்வதி பத்ரி நாராயணன்
- திரு.
பு. இரா. விஸ்வநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)
- திரு.
நே. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)
- திரு.
ர. கிஷோர் (சூழல் & காட்டுயிர் ஆய்வாளர்)
- திருமிகு.
யாஷிகா (ஆய்வு மாணவர்)
- திரு.
பரணி வெங்கட் (ஒளிப்பட கலைஞர்)
- திரு.
ம. அழகப்பன் (வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்)
- திருமிகு
லெட்சுமி ஜெயபிரகாஷ் (சூழல் ஆர்வலர்)
- திரு.
க. சக்திவேல் (பறவையிலாளர்)
- திரு. கமலேஷ் (பறவை ஆர்வலர்)
- திரு.
வெ. ராஜன் (வரலாற்று ஆர்வலர்)
- திரு.
தமிழ்தாசன் (சூழலியல் ஆய்வாளர்)
ஒளிப்படங்கள்:
பரணி வெங்கட், கோபுரம் தெய்வா, விஸ்வா, & தமிழ்தாசன்
18.08.2024 அன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை வெள்ளமலை கோயில்காட்டில் குழுவாக ஆவணம் செய்தோம்.
வரவு
- செலவு:
இந்நிகழ்வுக்கு நன்கொடைகள் யாரிடமும் பெறப்படவில்லை. காலை உணவுக்கு ஏற்பட்ட செலவை நண்பர் கோ.பிரபாகரன், மக்கள் சேவை மன்றம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
உதவிய நூல்கள் & ஆதாரங்கள்
இணையதளம்:
- https://kallarkulavaralaru.blogspot.com/2017/12/blog-post_8.html
- https://ebird.org/checklist/S192067117
கட்டுரை தொகுப்பு
- தமிழ்தாசன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
13.09.2024
![]() |
இந்து தமிழ் நாளிதழ் 18.09.2024 |
![]() |
தீக்கதிர் நாளிதழ் 16.09.2024 |
![]() |
இந்து தமிழ் நாளிதழ் - 22.10.2024 |
சிறப்பான செயல்பாடு. மேலும் பல இடங்களை பாதுகாக்க வாழ்த்துகள்..
ReplyDelete