அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை
அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை
பண்பாட்டுச் சூழல் நடையின் 23 வது பயணமாக மேலூர் வட்டம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பால்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருவிமலைக்கு 29.09.2024, ஞாயிறு சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 60 பேர் வரை பங்கெடுத்தனர்.
| பண்பாட்டுச் சூழல் நடை - குழு புகைப்படம் |
சமணர் கற்படுக்கை, பாறையில் இரண்டடுக்கு உரல், விளக்கு போன்ற ஐந்து பாறை குழிகள், சிதைந்த நிலையில் கிடைத்த பிற்கால பாண்டிய மன்னரின் சிவன் கோயில், சூலக்கல், பெரிய கண்மாய் மடைத்தூண் கல்வெட்டு, அருவிக்குளம் ஊற்று, பல்லுயிரிகளின் வாழிடம் என வரலாற்று நோக்கில் புதிய கண்டறிதல்களும், பல்லுயிரிய அடிப்படையில் விரிவான ஆவணங்களும் அருவிமலை பயணத்தில் கிடைக்கப் பெற்றோம். அருவிமலையில் முல்லை மற்றும் பாலைத் திணைக்குரிய உயிரினங்களையும் அத்திணைகளுக்குரிய மக்கள் வாழ்வியல் கூறுகளையும் காண முடிகிறது.
அருவிமலை:
| அருவிமலை மேற்கு பக்கம் |
| அருவிமலை மேற்கு பக்கம் |
| அருவிமலை தென்கிழக்கு பக்கம் |
வரலாற்றில் அருவிமலை:
அருவிமலைக்கு அருகாமையில் உள்ள அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், கருங்காலக்குடி, கீழவளவு, திருவாதவூர் உள்ளிட்ட மலைக்குன்றுகளில் ஈராயிரமாண்டுக்கு முந்தைய கற்படுக்கைகளும், தமிழிக் கல்வெட்டுகளும் கிடைக்கின்றன. அருவிமலை புடவிலும் சமணர் கற்படுக்கைகள் காணப்படுகின்றன. கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயில் ஒன்றும் மலையின் உச்சியில் காணப்படுகிறது.
![]() |
| பேரா. ப. தேவி அறிவு செல்வம் |
![]() |
| திரு. மு. அறிவு செல்வம் |
சமணர் படுக்கை பள்ளியும் பஞ்சபாண்டவர் அறையும் :
அருவிமலையின் சிவன் கோயில் அருகிலும் கருப்பணசாமி கோவில் அருகிலும் புடவுகள் (குகை) காணப்படுகின்றன. அதில் சிவன் கோயில் அருகில் 30 பேர் தங்குமளவிலான குகைத்தளத்தில் 12க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் அடையாளம் காணப்பட்டது. வரிசையாக சரிவாக செதுக்கியிருக்கிறார்கள். மலையை துண்டாக்கி செதுக்கியிருக்கிறார்கள். வெட்டுப்பட்ட மலையின் பகுதிகள் படுக்கை முன்புறம் கிடக்கின்றன.
| சமணர் கற்படுக்கைகள் |
இரண்டு அடுக்கு கொண்ட உரல் மற்றும் விளக்கு எரிப்பதற்கான விளக்கு போன்ற 5 குழிகள் பாறையின் தரைப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது. இக்குகைத்தளம் மணல்மேவி பராமரிப்பின்றி இருக்கிறது. மேலும் சிவன் கோயில் கடந்து மலை மேல் உள்ள முனீஸ்வரன் கோயில் செல்லும் வழியில் இருப்பாறைகள் சந்திக்கும் இடுக்கு பகுதியை "பள்ளிக்கூடம்" என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இவ்விடத்தில் பள்ளி நடைபெற்றதாக தங்கள் முன்னோர்கள் கூறியதாக மக்கள் தெரிவித்தனர். இப்பாறை இடுக்கு அருகில் தரையில் கல்வெட்டுகள் இருந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை தொல்லியல் துறை கண்டறிய வேண்டும்.
| பள்ளிக்கூடம் / பள்ளி என்று அழைக்கப்படும் பகுதி |
| சமணர் பள்ளி நடைபெற்ற இடம் |
| தொன்மையான பாறை ஓவியமா என்று அறிய முடியாதளவுக்கு காணப்படும் அண்மைக்கால கிறுக்கல்கள் |
அருவிமலையின் அடிவாரத்தில் உள்ள கருப்பணசாமி கோயில் அருகே மலையின் மேல் இரு புடவுகள் காணப்படுகின்றன. அதனை பஞ்சபாண்டவர் புடவு அல்லது பஞ்சபாண்டவர் அறை என்று மக்கள் அழைக்கின்றனர். இப்புடவின் தரைப்பகுதியில் கால்தடம், ஆடுபுலியாட்டம் கோடுகள் உள்ளிட்ட சில கீறல்களும், பாறையின் மேல் பாறை ஓவியங்கள் போன்ற சில வடிவங்களும் காணப்படுகின்றன.
திருமேலழகிய பாண்டிய நாயனார் சிவன் கோயில்:
| மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய அருவிமலை சிவன் கோயிலின் தோற்றம் |
| சிவன் கோயிலின் இன்றைய நிலை |
| சிவன் கோயில் அருகேயுள்ள பாறையில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டு |
| சிவன் கோயில் முன்பு காணப்படும் சுனை |
| கோயில் கட்டுவதற்காக உடைக்கப்பட்டு இருக்கும் அருவிமலை பாறைகள் |
| திரு. கதிரேசன் அவர்கள் |
அருவிமலை சிவன்கோயில் கல்வெட்டுகள் காட்டும் நிலப்பரப்பு:
சிவன் கோயிலின் அருகேயே உள்ள பாறையிலும், சிவன் கோயில் அதிட்டானத்திலும் கி.பி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு காணப்படுகிறது. அதில் பாறையில் உள்ள கல்வெட்டில் சிவன் கோயிலுக்கு நிலக்கொடை கொடுத்த செய்திகள் விரவிக் கிடக்கிறது. அதில் குறிக்கப்படும் எல்லைகளில் கிழக்கு நோக்கின பாறை ஒன்றை எல்லையாக கூறுகிறது. அருவிமலை கிழக்கு அடிவாரத்தில் களப்பாறை என்ற சிறிய ஊர் உள்ளது. களப்பாறை என்ற சிறிய பாறையின் அருகே உள்ள குடியிருப்பு என்பதால் அப்பாறையின் பெயரால் ஊர் பெயரும் அழைக்கப்படுகிறது. அருவிப்பட்டி என்றும் மக்களால் களப்பாறை அழைக்கப்படுகிறது. கல்வெட்டு குறிப்பிடும் அருவிக்குடி இன்றைய களப்பாறையாக இருக்கலாம்.
அருவிமலையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் மூர்த்திகுட்டு என்னும் மலைப்பாறை உள்ளது. மூர்த்திகுட்டு மலை கல்லுடைக்கும் குவாரிப் பணிக்காக உடைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கின பாறை என்று கல்வெட்டு குறிப்பிடும் பாறை களப்பாறை அல்லது மூர்த்திக்குட்டு மலையாக இருக்கலாம். 15 ஆண்டுகளுக்கு முன்பு அருவிமலையும் குவாரி பணிக்காக வெட்டியெடுக்கப்பட்டு நிறுத்தப்பட்டது. அருவிமலை வடப்பகுதியில் அருவிமலையின் பாறைகள் வெட்டியெடுக்கப்பட்டு பள்ளமான பாறைக் கிடங்கு ஒன்றை காண முடிகிறது.
வடப்பறப்பு நாட்டு பாக்குடி, தென்பறப்பு நாட்டு திருமோகூர் கோயில், சுரநாட்டு வீரசூளாமணி, அருவிக்குடி என்ற ஊர் பெயர்கள் அருவிமலை சிவன்கோயில் கல்வெட்டில் காணப்படுகின்றன. பாக்குடி என்ற பெயர் பல இடங்களில் வருகிறது. அருவிமலையின் கிழக்கு சரிவில் 'பால்குடி' என்ற பெயரில் உள்ள ஊர் தான் அந்நாளில் பாக்குடி என்று அழைக்கப்பட்டது என்று கருதலாம். அருவிமலையில் இருந்து கிழக்கு திசையில் மூர்த்திகுட்டு மலைக்கு அருகே 'வீரசூடாமணிபட்டி' ஊர் உள்ளது. அதுவே கல்வெட்டு குறிப்பிடும் வீரசூளாமணியாக இருக்கலாம். வட பறப்பு நாட்டு திருமோகூர் கோயில் என்றும் அதே பேரில் ஒத்தக்கடை - திருவாதவூர் சாலையில் அமைந்துள்ளது. அருவிமலைக்கு கிழக்கில் இருந்த பெருவழி (வணிக பாதை) குறித்தும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
அம்மாண்டி ஏரி, கல்லாண்டார் குளம், உப்பாறு உள்ளிட்ட நீர்நிலைகள் பற்றி கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. அம்மாண்டி ஏரி என்பது அமணன் குளம் என்று திரிந்துள்ளது. மூர்த்திகுட்டு மலையின் தென்மேற்கு முனையில் அமணன்குளம் கண்மாய் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. பருவகாலங்களில் மட்டும் நீரோடும் ஓர் சிற்றாறுதான் உப்பாறு. அழகர்மலையின் பெரியருவி பள்ளதாக்கில் இருந்து உற்பத்தியாகி வரும் பெரியருவி ஓடை கடுமிட்டான்பட்டி, சாணிப்பட்டி, பெரியகற்பூரம்பட்டி, அய்வத்தான்பட்டி, களப்பாறை, தும்பைப்பட்டி கடந்து செல்கிறது. பெரியருவி ஓடை, தெற்காறு, உப்பாறு என்று பல பெயர்களில் மக்கள் அழைக்கின்றனர். உப்பாறு என்று கல்வெட்டில் குறிப்பிடப்படும் இந்த ஆறு அய்வத்தான்பட்டி கடந்து, களப்பாறை ஊருக்கும் ராயர்பட்டி ஊருக்கும் இடையில் ஓடுகிறது. கல்வெட்டில் குறிப்பிடப்படும் கல்லாண்டார் குளம் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை. பழிப்பிணி கண்மாய் மடையில் கல்வெட்டு உள்ளதாக மதுரை மாவட்ட கல்வெட்டு நூல் கூறுகிறது. ஆனால் பழிப்பிணி கண்மாயில் மடையை கண்டறிய இயலவில்லை. பழிப்பிணி கண்மாய் அரசு ஆவணங்களில் பணிப்பிணி கண்மாய் என்று குறிப்பிடப்படுகிறது. அருவிமலையின் கிழக்கில் ராயர்பட்டி ஊருக்கு அருகில் அக்கண்மாய் உள்ளது.
| அமணன் குளம் |
| பணிப்பிணி கண்மாய் |
| மூர்த்திக்குட்டு மலை |
| கல் குவாரிக்காக உடைக்கப்படும் மூர்த்திக்குட்டு மலை |
சூலக்கல்:
சிவன்கோயிலுக்கு நிலக்கொடை கொடுத்து அதற்கு எல்லைக்கல்லாக சூலாயுதம் பொறிக்கப்பட்டு நடப்படும் கல்லை சூலக்கல் அல்லது திருசூலக்கல் என்று அழைக்கிறார்கள். பெருமாள் கோயில் நிலக்கொடையை குறிக்கும் எல்லைக்கல் திருவாழிக்கல் என்று அழைக்கப்படுகிறது. அருவிமலை சிவன்கோயிலுக்கு நிலக்கொடையாக கொடுக்கப்பட்ட நிலங்களை காட்டும் சூலக்கற்கள் மூன்று இடங்களில் உள்ளதை ஆவணம் செய்தோம். கண்மாய்ப்பட்டி தனியார் தோட்டத்தில் இரண்டும், அய்வத்தான்பட்டியில் வழிபாட்டில் உள்ள ஒரு சூலக்கல்லும் ஆவணம் செய்தோம்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பால்குடி கிராமத்தில் ஆண்டுகள் பழமையான ஆசிரியம் கல்வெட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையினாரால் 19.12.2024 அன்று கண்டறியப்பட்டது. பாண்டிய நாட்டு ஆய்வு மைய உறுப்பினர் திரு. உதயக்குமார், முத்துப்பாண்டி அவர்களால் கல்வெட்டு படியெடுக்கப்பட்டது. கல்வெட்டில் உள்ள வாசகங்களை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்கள் வாசித்து அளித்தார்.
கல்வெட்டு விவரம்:
கல்வெட்டின் கீழ் பகுதியில் அஷ்டமங்கலம் சின்னங்களின் ஒன்றான பூரண கும்பம் செதுக்கப்பட்டுள்ளது. 14ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த சுந்தரபாண்டியன் காலத்தில் வைகாசி 12வது நாளில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் காலத்தில் மிகப்பெரிய கலகம் ஏற்பட்ட போது மேலூர் பகுதியில் குறுநில தலைவனாக இருந்த தெய்வச்சிலை பெருமான் என்னும் சிங்கதேவன், துருக்கர் படை எடுப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலாம் கொடுத்துள்ளான் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.
அருவிமலை சிவன் கோயிலை பராமரித்து வரும் பால்குடி கிராமத்தை சேர்ந்த திரு. கதிரேசன் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் 15.12.2024 அன்று மீண்டும் பால்குடி கிராமத்திற்கு அங்கே காணப்படும் கற்திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்களை ஆவணம் செய்தோம். இரும்புக்காலத்தில் நீத்தார் நினைவாக எழுப்பட்ட நினைவுச் சின்னங்கள் மிகப் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் அதனை பெருங்கற்படைக்காலம் என்றும் அழைக்கின்றனர்.
மதலை கருப்பு, அய்யனார், ஏழுப்பறையன் உள்ளிட்ட தெய்வங்களாக பெருங்கற்கால சின்னங்களை இவ்வூரில் உள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர். அருவிக்குளம், சின்ன அருவிக்குளம் நீர்நிலைகளில், வயல்வெளிகளில் மதலை, அய்யனார் கோயில் பகுதிகளில் என பால்குடி கிராமத்தின் பல பகுதிகளில் பெருங்கற்கால சின்னங்கள் பால்குடி கிராமத்தில் விரவி கிடக்கிறது. வேளாண்மைக்கு இடையூறாக இருப்பதால் பல பெருகற்கால சின்னங்களை மக்கள் அகற்றி விட்டனர். எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பெருங்கற்கால சின்னங்களை மதுரை மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
நீர்நிலைகள்:
| வீரசூடாமணிபட்டி சின்ன கண்மாய் |
| மலையடிவாரத்தில் உள்ள அருவிக்குளம் கண்மாய் |
அருவிமலை அடிவாரத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கும், அழகர்மலை பெரியருவி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகி வரும் உப்பாற்றுக்கும் நீர்ப்பிடிப்பு பகுதியாக அருவிமலை விளங்குகிறது. அருவிமலையின் வடகிழக்கு முனையில் இருந்து தெற்கு வரை வரிசையாக உள்ள நீர்நிலைகள் அருவிக்குளம், பரம்பேத்தி கண்மாய், தட்டான் கண்மாய், ஏழுப்பறையன் கோயில் ஊருணி, சாத்தமுத்து கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களுக்கு நேரடியான நீர்ப்பிடிப்பு பகுதியாக அருவிமலை விளங்குகிறது.
அருவிமலையின் தென்மேற்கு முனையில் அய்யர் ஊற்று குடிநீர் ஊருணி உள்ளது. தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் இந்த ஊருணியில் வந்து குடிநீர் எடுத்து செல்கிறார்கள். அருவிக்குளத்திலும் அங்காங்கே இயற்கையான நன்னீர் ஊற்றுகள் உள்ளன. ஒரு அடி தோண்டினால் நன்னீர் ஊற்று கிடைக்கும் பல இடங்களை மக்கள் அறிந்து வைத்துள்ளனர். ஊற்று நீரை தான் இன்றும் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
| அருவிக்குளம் கண்மாயில் உள்ள நன்னீர் ஊற்று |
| கண்மாய்பட்டி திரு. பிரபகாரன் ஊற்று நீரை பருகுகிறார் |
![]() |
| கச்சிராயன்பட்டி ஊராட்சியில் உள்ள நீர்நிலைகள் பட்டியல் - ஊராட்சி வரைப்படத்தில் உள்ள விபரம் |
வீரசூடாமணிபட்டி கண்மாய்:
மூர்த்திகுட்டு மலையின் மேற்கில் அமணன் குளமும், கிழக்கில் வீரசூடாமணிபட்டி பெரிய கண்மாய், சின்ன கண்மாய் அமைந்து இருக்கிறது. அமணன் குளம் கண்மாய் அருவிமலை சிவன் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது.
|
| 1784-ஆம் ஆண்டு வெட்டப்பட்ட மடைத்தூண் கல்வெட்டு |
பெரியக் கண்மாயில் கி.பி 1784 ஆம் ஆண்டு வெட்டப்பட்ட மடைத்தூண் கல்வெட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் கண்டறியப்பட்டது. அய்வத்தன்பட்டி அய்யாக்கண்ணு, கோட்டைப்பட்டி கல்லணை சுந்தரம், சின்னக் கற்பூரம்பட்டி தங்கடைக்கண், கண்மாய்பட்டி பிரபாகரன் உள்ளிட்டவர்கள் இக்கல்வெட்டு எழுத்துக்களை படியெடுக்க உறுதுணையாக இருந்தனர். அக்கல்வெட்டு செய்தியினை தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் அவர்கள் படித்தறிய உதவினார். "அழகர்சாமி காப்பார், மல்லச்சி காப்பார். மணியம் சாமிப்பிள்ளை அவர்கள் முன்னிலையில் அழகன் ஆசாரி நட்டு கொடுத்த நாட்டு கல் என்றும், வீரசூடாமணிபட்டி பெரிய கண்மாயில் இருந்த பழைய மடையை வீரப்பன் அம்பலக்காரர், வீரணன் ஆகியோர் சீரமைப்பு செய்தனர்" என்றும் கல்வெட்டு கூறுகிறது. பாண்டியர் கால பாசன ஏரிகள், கண்மாய்கள் ஊர் மக்களால் தொடர்ந்து சீரமைப்பு செய்யப்பட்டு இருக்கிறது என்பதனை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
மூர்த்திக்குட்டு அடிவாரத்தில் பெரிய கண்மாய் கரையில் வடக்கு வாச்செல்வி அம்மன் கோயிலும் (செல்லாயி அம்மன்), தெற்கு கரையில் அஞ்சுமுழி அழகியம்மன் கோயிலும் உள்ளது. சின்ன கண்மாயின் தெற்கு கரையில் ஆலமரத்தடியில் அய்யனார் கோயிலும் உள்ளது.
சிறுகனிம சலுகை விதி 1959 பிரிவு 36ன் படி குவாரியின் வெளி முனை பகுதியிலிருந்து அட்சரேகை, தீர்க்கரேகை அடிப்படையில் ஏரி, குளம், கண்மாய், ஏந்தல் போன்ற நீர்நிலைகளில் இருந்தும் தொல்லியல் சின்னங்கள் அமைந்த பகுதியில் இருந்தும் 500 மீட்டர் இடைவெளி விட்டுத்தான் குவாரி நடைபெற வேண்டும். ஆனால் வரலாற்று மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த இக்கண்மாய் நீர்ப்பிடிப்பு பகுதியிலேயே குவாரி பணிக்காக பாறைகள் வெட்டப்படுகிறது. இக்கண்மாயின் கரையில் இருந்து 50 மீட்டர் இடைவெளியில் அமைந்துள்ள மூர்த்திக்குட்டு மலைப்பாறையும் வெட்டப்படுவது வேதனையாக உள்ளது.
வேளாண்மை:
இப்பகுதியில் நெல்லு, வரகு, தினை, எள்ளு, செங்கழுநீர் (Cyanthillium cinereum மாக இருக்கலாம்) உள்ளிட்ட பயிர் செய்த நிலங்கள் கொடையாக கொடுக்கப்பட்ட செய்தியினை அருவிமலை சிவன் கோயில் கல்வெட்டு கூறுகிறது. இதன் வழியாக பன்னெடுங்காலமாக இப்பகுதியில் நஞ்சை புஞ்சை பயிர்களை வேளாண்மை செய்து வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இப்பயிர்கள் அனைத்தும் இன்றும் இப்பகுதி உழவர்களால் பயிரிடப்பட்டு வருவது சிறப்புக்குரியதாகும். முல்லைப்பெரியாறு - வைகை பாசன கால்வாய்கள் விரிவாக்கம் மேலூர் பகுதியில் பண்பாட்டிலும், உற்பத்தியிலும் பண்பாட்டிலும், பொருளாதாரத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முல்லைப்பெரியாறு பாசனக் கால்வாய் அருவிமலை சுற்றியுள்ள கிராமங்களின் ஊடாக செல்வதை காண முடிகிறது. நஞ்சை நிலங்களில் நெல், வாழை, கரும்பு பயிரிடப்படுகிறது. புஞ்சை நிலங்களில் வரகு, கம்பு, சோளம், தினை, கடலை, மொச்சை, தட்டாம்பயர், துவரம்பருப்பு, உளுந்து, பருத்தி உள்ளிட்ட பயிர்களும்; கத்திரி, தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளும்; செவ்வந்தி, சம்பங்கி, சேவல் கொண்டை உள்ளிட்ட பூ வகைகளும் இப்பகுதியில் பயிரிடப்படுகிறது.
கால்நடை & மீன்பிடி:
நாட்டு மாடு, கலப்பின மாடுகள், வெள்ளாடு, செம்மறி, கோழி, சேவல் வளர்ப்பு முதன்மையாக இருக்கிறது. பாசன கண்மாய்களில் மீன்பிடிக்கும் தொழிலும் உப தொழிலாக இப்பகுதியில் இருக்கிறது. பாப்பான்குளபட்டி கண்மாய் மீன்பிடித் திருவிழா இப்பகுதியில் புகழ் பெற்றதாகும். காட்டு முயல் உள்ளிட்ட காட்டுயிர்களை வேட்டையாடுவது ஓர் வாழ்வாதாரமாக வலையர் சமூக மக்களுக்கு இருந்து வந்து இருக்கிறது. வனத்துறை சட்டம், நகரமயம் உருவாக்கும் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் அச்சமூகத்தின் கல்வி பெரும் தலைமுறைகளின் வளர்ச்சி போக்கு அவர்களை வேட்டை தொழிலில் இருந்து வெளியேற செய்து இருக்கிறது.
சமய வழிபாடு:
அருவிமலை திருமேலாழி நாயனார் சிவன் கோயில் முற்றிலும் சிதைந்துவிட்டது. கோயில் அதிட்டானம், தூண்கள் என கோயிலின் கட்டுமான உறுப்புகள் அங்குமிங்குமாக சிதைந்து கிடக்கிறது. மலை உச்சியில் முனீஸ்வரன் கோயில் உள்ளது. கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு ஆண்டுதோறும் அருவிமலையில் நிகழ்கிறது.
| அருவிமலை கருப்பசாமி கோயில் |
| அருவிமலை முனீஸ்வரன் கோயில் |
அருவிமலை கருப்புசாமி கோயில், மலைநாச்சியம்மன், ஏழுப்பறையன் உள்ளிட்ட நாட்டார் தெய்வங்கள் அருவிமலை அடிவாரத்தில் உள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் அருவிமலை கருப்புசாமி கோயில் மாடு மரியாதை பெறுகிறது. கண்மாய்பட்டி பன்னிக்கருப்பு, கச்சிராயன்பட்டி துவராபதி அம்மன், வீரசூடாமணிபட்டி, அஞ்சுமுழி அழகியாத்தாள் உள்ளிட்ட தெய்வங்களும் அக்கோயில்களின் திருவிழாக்களும் புகழ் பெற்றதாகும்.
கந்தூரி விழா:
பால்குடியில் 300 ஆண்டுகளாக கந்தூரி விழா நடைபெறுவதாக பால்குடி இஸ்லாமிய ஜமாத் தலைவர் திரு. அப்துல் காதர் அவர்கள் தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வளர்பிறை வியாழக்கிழமை அன்று கந்தூரி விழா நடைபெறுகிறது. கந்தூரி விழாவுக்கு பால்குடி பறையர் வகையறாவினர்க்கும், முத்தரையர் வகையறாவினர் ஆடும் கொடுக்கிறார்கள். கந்தூரி விழாவிலும், விருந்திலும் அனைத்து சமய, சமூக மக்களும் பங்குபெறுகிறார்கள். மதலை கோயில் மற்றும் நெவுலி அய்யனார் கோயிலில் பால்குடி காதர்ஷா வகையறாவும் ஒரு கரையாக இருக்கிறார்கள். இவ்விரு கோயில் திருவிழாக்களில் கோயில் மரியாதையாக கொடுக்கப்படும் திருநீரை ராவுத்தர் வகையறாவினர் பெற்றுக் கொள்கிறார்கள்.
| அருவிக்குளம் கண்மாயில் காணப்படும் இஸ்லாமியர் தொழுகை தளம் |
ஆடிமாசம் நடைபெறும் வீரசூடாமணிபட்டி அஞ்சுமுழி கோயில் திருவிழாவில் நூறுக்கும் மேற்பட்ட கிடா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல் பலி கொடுத்து வழிபடுகிறார்கள். ராவுத்தர் குன்று என்று அழைக்கப்படும் சின்ன கண்மாய் பாறையில் பால்குடி காதர்ஷா வகையறாவினர் பாத்தியா ஓதி, சக்கரை கொடுத்த பின்பு கறி பங்கு பிரித்து கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.அஞ்சுமுழி கோயில் திருவிழாவில் 4வது காரைக்கார்களாக காதர்ஷா வகையறா மரியாதையை பெறுகிறார்கள். பாரம்பரியமாகவே இப்பகுதி மக்கள் சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியாக திகழ்கிறார்கள்.
அருவிமலை பல்லுயிர்கள்:
தாவரங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், பாலூட்டி வகை விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களை இப்பயணத்தில் நாங்கள் ஆவணம் செய்தோம். கண்மாய்பட்டி ஊரைச் சேர்ந்த திரு. பொ. சந்தானபாண்டி அவர்கள் ஜனவரி 2020 முதல் நவம்பர் 2021 வரை தனது முனைவர் பட்ட ஆய்வாக அருவிமலை தொல்மருத்துவம் (ETHNOMEDICINAL PLANTS OF ARUVIMALAI) என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று இருக்கிறார். நல்வாய்ப்பாக அருவிமலை உயிரினங்கள் குறித்தும், அங்குள்ள மூலிகை தாவரங்கள் குறித்தும், வலையர் பழங்குடி மக்களின் மருத்துவ அறிவு, பயன்பாடு மற்றும் நுட்பம் குறித்தும் அறிந்து கொள்ள அவரின் ஆய்வு நமக்கு பெரிதும் உதவுகிறது. திரு. பொ. சந்தானபாண்டி அவர்களின் ஆய்வில் அருவிமலையில் 30 வகை மரங்களும், 53 வகை செடிகளும், 15 வகை புதர் தாவரங்களும், 8 வகை கொடி தாவரங்களும் 2 வகை மரமயவேறி (Linana) என மொத்தம் 108 தாவரங்களை ஆவணம் செய்திருக்கிறார். அதில் 4 தாவரங்கள் அழிவின் விளிம்பில் உள்ள செம்பட்டியல் (IUCN - Red List) வகைப்படுத்தட்ட தாவரங்களும் அடங்கும். அவரின் ஆய்வில் அருவிமலையில் 60 வகை பறவைகளை ஆவணம் செய்துள்ளதாக குறிப்பிடுகிறார்.
தாவரங்கள்:
பரம்பை, வில்வம், அழிஞ்சில், வாகை, வேம்பு, மூங்கில், மலையாத்தி, ஆத்தி, பனை, ஆவாரை, சரக்கொன்றை, மரக்காரை (பெருங்காரை), புரசுமரம், ஆனைப்பழம் (காட்டுவேப்பிலை), சென்கொன்றை, ஆலமரம், ஆவிமரம், மருதாணி, மலைமஞ்சணாத்தி, மஞ்சணத்தி, வாழை, ஈச்சம், சீமைக்கருவேலம், நாவல், புளியமரம், நீர்மருது, பூவரசம், நொச்சி, வெப்பாலை, இலந்தை, கருங்காலி உள்ளிட்ட 31 வகை மரங்கள்; சிறுகுறிஞ்சான், முள்சங்கு, எருக்கு, சிறுக்கிளா, பச்சிலை, மகாலிக்கிழங்கு, சதுரக்கள்ளி, காட்டுக்களா, வெண்புலா, தழுதலை (கட்டு துளசி), அவுரி, அதாலை, சப்பாத்திக்கள்ளி, கண்டைக்கள்ளி, ஆனைச்சுண்டை உள்ளிட்ட புத்தர் வகை தாவரங்கள் உள்ளிட்ட 108 வகை தாவரங்கள் திரு. பொ. சந்தானபாண்டி அவர்கள் ஆய்வில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. கருங்காலி மரம் அருவிமலையில் உள்ளது. அது அவர் பட்டியலில் விடுபட்டுள்ளது.
பாலூட்டி வகை விலங்குகள்:
காட்டுப் பூனை Jungle Cat, புனுகு பூனை Small Indian Civet, மரநாய் Common Palm Civet, காட்டுப் பன்றி Indian Wild Boar, காட்டு முயல் Indian Hare, குல்லாய் குரங்கு Bonnet Macaque, சாம்பல் நிறக் கீரி Indian Grey Mongoose, சாம்பல் நிற தேவாங்கு Grey Slender Loris, இந்திய அணில் Three Striped palm squirrel, மூஞ்சூறு House shrew, இந்திய வெள்ளெலி Indian Gerbil, வீட்டு எலி House Mouse, வயக்காட்டு எலி Little Indian Field Mouse, பாறை எலி Cutch Rock Rat, புதர் எலி Indian Bush Rat, பெருச்சாளி Greater Bandicoot Rat, கருப்பெலி House Rat / Black Rat, பழுப்பு நிற எலி Brown Rat, பழந்திண்ணி வௌவால் Indian flying fox உள்ளிட்ட 19 வகை பாலூட்டி விலங்குகள் அருவிமலையை வாழிடமாக கொண்டு வாழுகின்றன. இந்திய நரி Indian fox, அலங்கு Indian pangolin இவ்விரு உயிரினங்களும் இப்பகுதியில் கடந்த பத்தாண்டுகளாக காண முடியவில்லை எனவும், இவை அற்றுப் போய்விட்டது எனவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பறவைகள்:
இப்பயணத்தில்மருத்துவர் பத்ரி நாராயணன், காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் திரு. ஜோதிமணி மற்றும் திரு. சக்திவேல் அவர்கள் அதில் 31 வகை பறவைகளை ஆவணம் செய்தனர். (பார்க்க https://ebird.org/checklist/S196833572)
வல்லூறு Shikra, நாகணவாய் Common myna, நீர்க்கோழி White-breasted waterhen, புள்ளி மூக்கு வாத்து Indian spot billed duck, பாம்புத்தாரா Oriental darter, கபில நிற நெட்டைக்காலி Tawny pipit, வயல் நெட்டைக்காலி Paddyfield pipit, பெரிய கொக்கு Great egret, சாம்பல் நாரை Grey heron, நடுத்தரக் கொக்கு Intermediate egret, குளத்துக் கொக்கு Indian pond heron, தவிட்டு சிலம்பன் Yellow-billed babbler, புள்ளி ஆந்தை Spotted owlet, கொம்பன் ஆந்தை Indian eagle-owl, உண்ணிக்கொக்கு Cattle egret, சிறிய பச்சைக் கொக்கு Striated heron, கொசு உள்ளான் Littele stint, செம்போத்து Greater coucal, கருவெள்ளை மீன்கொத்தி Pied Kingfisher, ஊதா தேன்சிட்டு Purple Sunbird, நீளஅலகு தேன்சிட்டு Loten's Sunbird, ஓணான் கொத்தி கழுகு Short-toed Snake-Eagle, சுடலை குயில் Pied Cuckoo, மாடப்புறா Rock dove, புதர்சிட்டு Indian Robin, பனங்காடை Indian roller, அண்டங்காக்கை Large-billed crow, காக்கை House crow, காடை Common quail, பனை உழவாரன் Asian palm swift, வால் காக்கை Rufous treepie, சீழ்க்கைச் சிறகி Lesser whistling duck, கரிச்சான் Black drongo, பொன்முதுகு மரங்கொத்தி Black-rumped flameback, சின்னக் கொக்கு Little egret, குயில் Asian koel, வெண்தொண்டைச் சில்லை Indian silverbill, கௌதாரி Grey francolin, நாமக்கோழி Eurasian coot, வெண்மார்பு மீன்கொத்தி White-throated kingfisher, செம்பருந்து Brahminy kite, அக்கா குயில் Common Hawk-Cuckoo, நீளவால் தாழைக்கோழி Pheasant-tailed Jacana, கருங்குருகு Black bittern, மஞ்சள் கொக்கு Yellow bittern, தேன்சிட்டு Purple-rumped sunbird, மூவண்ண சில்லை Tricolored Munia, புள்ளிச்சில்லை Scaly-Breasted Munia, பச்சை ஈப்பிடிப்பான் Asian Green Bee-eater, நீலவால் பஞ்சுருட்டான் Blue-tailed bee-eater, சின்ன நீர்க்காகம் Little Cormoran, கரும்பருந்து Black Kite, நீல பூங்குருவி Blue Rock-Thrush, வெண்புருவ குருவி White-browed wagtail, குடுமிக் கழுகு Changeable Hawk-Eagle, இராக்கொக்கு Black-crowned night heron, மாங்குயில் Indian golden oriole, தையல்சிட்டு Common tailorbird, சிட்டுக்குருவி House sparrow, மயில் Indian peafowl, கூழைக்கடா Spot-billed Pelican, நீல முக பூங்குயில் Blue-faced Malkoha, தூக்கணாங்குருவி Baya weaver, நீலத் தாழைக்கோழி Grey-headed swamphen, கதிர்குருவி Plain Prinia, சாம்பல் கதிர்க்குருவி Ashy prinia, அன்றில் Red-naped ibis, செம்மார்பு குக்குறுவான் Coppersmith Barbet, பச்சைக்கிளி Rose-ringed parakeet, கருப்பு கொண்டை Red-vented bulbul, செண்டு வாத்து Knob Billed Duck, புள்ளிப்புறா Spotted dove, கள்ளிப்புறா Laughing dove, கருந்தலை நாகணவாய் Brahminy Starling, முக்குளிப்பான் Little grebe, கருந்தலை அன்றில் Black-headed Ibis, கொண்டலாத்தி Common Hoopoe, சிவப்பு மூக்கு ஆள்காட்டி Red-wattled lapwing, Common Kingfisher சிறிய மீன்கொத்தி, செந்நாரை Purple Heron உள்ளிட்ட 78 வகை பறவைகள் அருவிமலையில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது திரு. ச. ஜோதிமணி அவர்கள் 31 வகை பறவைகளை ஆவணம் செய்தார். ஏற்கனவே திரு. பொ. பொ. சந்தானபாண்டி அவர்கள் அருவிமலையில் 2021 -2022 காலக்கட்டத்தில் அருவிமலை மற்றும் அதன் அடிவார நீர்நிலைகளில் 60 வகை பறவைகளை ஆவணம் செய்து இருக்கிறார். இவர்கள் இருவர் பட்டியலில் விடுபட்டுள்ள சீழ்க்கை சிறகி, புள்ளிமூக்கு வாத்து, பாம்புத்தாரா,சிறிய மீன்கொத்தி, செந்நாரை உள்ளிட்ட சில பறவைகளை நான் (தமிழ்தாசன்) ஆவணம் செய்தேன். ஆக மொத்தம் அருவிமலையில் 80 வகை பறவைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு பருவகாலங்களில் நடைபெறும் விரிவான ஆய்வுகள் அருவிமலையின் பல்லுயிர்கள் குறித்த புதிய செய்திகளை, ஆவணங்களை நமக்கு கொண்டு வரும்.
வண்ணத்துப்பூச்சிகள்:
பொன்னழகன் Southern Bird Wing, மயில் வசீகரன் Peacock Pansy, முரண் நவாப் Anomalous nawab, கருநீல வேங்கை Dark Blue tiger, நீல வேங்கை Blue tiger, செவ்வந்தி சிறகன் Tawny coster, சிவப்புடல் அழகி Crimson rose, வெண்புள்ளிக் கருப்பன் Common crow, பசலை சிறகன் Danaid eggfly, எலுமிச்சை வசீகரன் Lemon pansy, கருநீல வண்ணன் Blue Mormon, எலுமிச்சை அழகி Common lime, கறுப்புச் சிறகன் Black rajah, வெந்தய வரியன் Plain tiger, கொள்ளை வெள்ளையன் Common emigrant, வரி ஆமணக்கு சிறகன் Angled castor, கொள்ளை வெள்ளையன் Common pierrot, அவரை வெள்ளையன் Mottled emigrant, மஞ்சாடை Common gull, இச்சைமஞ்சள் அழகி Common jezebel, பயறு நீலன் Gram blue, மஞ்சளாத்தி Common grass yellow, பெரிய பசலைச் சிறகன் Great eggfly, வெண் காவி நுனிச் சிறகன் White orange tip, மஞ்சள் காவிக்கடவி Yellow orange tip, Chocolate pansy, Zebra blue, உரோசா அழகி Common rose, நீல மயில் அழகன் Common banded peacock, கறிவேப்பிலை அழகன் Common Mormon, நாடோடி Common wanderer, வெள்ளிவரையன் Common silverline, புல் தாவி Grass demon, வெண் நான்கு வட்டன் White fourring, நான்கு வட்டன் Common four ring, கரும்புல் நீலன் Dark grass blue உள்ளிட்ட 36 வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆவணம் செய்யப்பட்டது. இதில் முதல் 16 வகை வண்ணத்துப்பூச்சிகள் இந்த பயணத்தில் திரு. சத்யமுர்த்தி அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது. திரு. பொ. சந்தானபாண்டி அவர்களின் ஆய்வில் ஆவணப்படுத்தப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை பதிவேடு:
அருவிமலை கச்சிராயன்பட்டி ஊராட்சி வருவாய்த்துறை பதிவேட்டில் சர்வே எண் 782, 697 உள்ளடக்கிய பகுதியாக கட்டப்பட்டுள்ளது. அதில் சர்வே எண் 697 குவாரி பகுதியாக தெரிகிறது. அருவிக்குளம் கண்மாய் சர்வே எண் 781இல் கட்டப்பட்டுள்ளது. அருவிமலை தென்மேற்கு முனை அடிவாரத்தில் காணப்படும் அய்யர் ஊற்று பல்வேறு மக்களின் குடிநீராதாரமாக விளங்குகிறது. அதன் வரைபடம் பட்டூர் ஊராட்சியில் சர்வே எண் 255 என காட்டப்பட்டுள்ளது.
வாழ்த்து, பாராட்டு & நன்றி:
பால்குடி பகுதியை சேர்ந்த திரு. கதிரேசன் மற்றும் தும்பைப்பட்டி திரு பிரபு அவர்கள் சிதைந்த அருவிமலை சிவன் கோயிலை மீண்டும் எழுப்பும் முயற்சியை மேற்கொண்டனர். அம்முயற்சி கைகொடுக்கவில்லை. கோயில் பெயரில் வழிபாடு, அன்னதானம் உள்ளிட்டவைகளை தொடர்ந்து திரு. கதிரேசன் அவர்கள் எடுத்து செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு நம் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறோம். அரசின் ஒத்துழைப்போடு கோயில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அவருக்கு அறிவுறுத்தினோம்.
கண்மாய்பட்டியை சேர்ந்த திரு. பொ. சந்தானபாண்டி அவர்கள் தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக தன் ஊரில் உள்ள அருவிமலையின் பல்லுயிரிய வளத்தையும், அதனை நுட்பமாக பயன்படுத்தும் வலையர் சமூகத்தின் மரபார்ந்த அறிவையும் ஆய்வு செய்து ஆவணமாக்கியதற்காக அவருக்கு எங்களின் பாராட்டுகளை அன்புடன் தெரிவித்து கொள்கிறோம். திரு. பொ. சந்தானபாண்டி அவர்களின் ஆய்வு மதுரையின் பண்பாடுச் சூழலியல் களத்திற்கு என்றும் பெரும் வெளிச்சமாக இருக்கும் என்றும் உறுதியாக சொல்லலாம். இந்நிகழ்வுக்கு நேரிடையாக திரு. பொ. சந்தானபாண்டி வந்து அருவிமலையில் அவர் மேற்கொண்ட ஆய்வு குறித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.
அருவிமலை பயணம் அமைய காரணமாக இருந்த கோட்டைப்பட்டி திரு. கல்லணை சுந்தரம் அவர்களுக்கும், பயணத்தில் உறுதுணையாக இருந்த பால்குடி திரு. கதிரேசன் அவர்களுக்கும், கண்மாய்பட்டி திரு. பிரபாகரன், சின்ன கற்பூரம்பட்டி திரு. தங்கடைக்கண், அய்வத்தான்பட்டி அய்யாக்கண்ணு அவர்களுக்கும் எங்கள் அன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.
இந்நடையின் கால நேரம்:
29.09.2024 அன்று காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரை அருவிமலையிலும், காலை 11 மணிக்கு வீரசூடாமணிபட்டி பெரிய கண்மாயிலும் குழுவாக ஆவணம் செய்தோம்.
வரவு - செலவு:
காலை உணவுக்கு (50 பேர்) ரூ. 1700 செலவானது. மருத்துவர் பத்ரி நாராயணன் அவர்கள் செலவை ஏற்றுக் கொண்டார். மேலும் திருமிகு சரஸ்வதி அவர்கள் 50 பேருக்கான கம்பங்கூழ் கொடுத்தார்.
---- ஆய்வுக்குழு ----
- மரு. தி. பத்ரி நாராயணன் (பறவையிலாளர்)
- பேரா. ப. தேவி அறிவு செல்வம் (கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)
- திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)
- திரு. மு. அறிவு செல்வம் (தொல்லியல் ஆய்வாளர்)
- திரு. ச. ஜோதிமணி (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)
- திரு. சத்திய மூர்த்தி (வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்)
- திரு. மரு. பாரத் கிருஷ்ணன் (பொதுநல மருத்துவர்)
- திருமிகு. யாஷிகா (ஆய்வு மாணவர்)
- திருமிகு. லேகாஸ்ரீ (ஆய்வு மாணவர்)
- திருமிகு லெட்சுமி ஜெயபிரகாஷ் (சூழல் ஆர்வலர்)
- திரு. ச. சதீஷ்குமார் (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)
- திரு. க. சக்திவேல் (பறவையிலாளர்)
- திரு. சீனிவாசன் (பறவையிலாளர்)
- திரு. தமிழ்தாசன் (சூழலியல் ஆய்வாளர்)
ஒளிப்படங்கள்:
திரு. ச. ஜோதிமணி & தமிழ்தாசன்
உதவிய நூல்கள்:
- மதுரை மாவட்டக் கல்வெட்டு தொகுதி 1: த.நா.அரசு தொல்லியல்துறை வெளியீடு 2005
- மதுரை மாவட்டத் தொல்லியல் கையேடு: த.நா.அரசு தொல்லியல்துறை வெளியீடு 2005
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு:
அருவிமலை சமணர் படுகையை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ''மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை'' சார்பாக மனு கொடுத்தோம்.
மனு இரசீது: 15488
மனு எண்: TN/TOURCUL/MDU/A/COLLMGDP/14OCT24/10334128
மனு நாள்: 14.10.24
கட்டுரைத் தொகுப்பு
-- தமிழ்தாசன்
நாளிதழ் செய்திகள்:
![]() |
| The Hindu Online News - 22.10.2024 |
| Dinamalar 2024 |
நிகழ்வு அழைப்பிதழ்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
17.10.2024
கட்டுரை புதுப்பிக்கப்பட்ட நாள்: 23.12.2024









Comments
Post a Comment