கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் 
அழகுநாச்சியம்மன் கோயில்காடும் 



    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மூவன் சிவல்பட்டி, நாகப்பன் சிவல்பட்டி, கள்ளங்காடு உள்ளிட்ட கிராமங்களில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் தொன்மையான கோயில்காடுகளும், தொல்லியல் மேடுகளும், பிற்கால  பாண்டியர் கோயிலும் காணப்படுகிறது. சுமார் 3500 ஆண்டுகள் தொன்மையான கல்பதுக்கை, கற்திட்டை, குத்துக்கல், கல்வட்டம், கற்குவியல், முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல வகையான பெருங்கற்கால சின்னங்கள் நூற்றுக்கணக்கில் இப்பகுதியில் காணப்படுகிறது. மேலும் இப்பகுதியில் சிவப்பு நிற பானை ஓடுகள், சுட்ட செங்கற்கள், இரும்பு கசடுகள் படிந்த செம்புரான் கற்கள் இப்பகுதி முழுதும் கிடைக்கின்றன. நாட்டார் வழிபாட்டில் பண்பாட்டு மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த கோயில் காடுகளும் இப்பகுதியில் காணப்படுகிறது. அழகு நாச்சியம்மன் கோயில் காடும், பெருங்காட்டு கருப்பு கோயில் காடும் இப்பகுதியில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இக் கோயில்காடுகளில் தேவாங்கு, காட்டு பூனை, மரநாய், காட்டு முயல் உள்ளிட்ட  10 வகை பாலூட்டி காட்டுயிர்களும்; புள்ளி ஆந்தை, செம்பருந்து, காட்டு கீச்சான், கதிர்குருவி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பறவையினங்களும் ஆவணம் செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை குழுவினர் ஆய்வு செய்து கண்டறிந்தனர். மேலும் கள்ளங்காடு பகுதியில் சிதிலமடைந்த நிலையில் கிபி14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர்கள் காலத்து சிவன் கோயிலும் காணப்படுகிறது. அதனை அங்காள ஈஸ்வரி உடனுறை அகளங்கேசுவரர் சிவன் கோயில் என்று மக்கள் அழைக்கின்றனர். இக்கோயிலின் அதிட்டான பகுதியில் காணப்படும் சிதைந்த கல்வெட்டுகள் தொல்லியல்துறையால் படித்தறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

 




மக்கள் தொகை:

பூதமங்கலத்தில் 3412, கொடுக்கம்பட்டியில் 3317, வஞ்சிநகரத்தில் 4824 பேர் வாழ்வதாக 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மொத்தம் 11553 பேர் இன்மூன்று ஊராட்சி பகுதியில் வாழ்கிறார்கள். இக்கோயில்க்காட்டை சுற்றி 20க்கும் மேற்பட்ட ஊர்கள் அமைந்திருக்கின்றன. இவர்கள் அனைவரின் அடிப்படை வாழ்வாதாரம் என்பது கால்நடை வளர்ப்பும், வேளாண்மையும் தான். கால்நடை வளர்ப்போருக்கு மேய்ச்சல் நிலமாகவும், ரிப்பாசனத்தை நம்பி வேளாண்மை செய்வோருக்கு நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் இக்கோயில்காடு விளங்குகிறது.

பாம்பாறு - கோட்டக்கரையாறு வடிநில கோட்டம்: 

சிறுமலை (கிழக்கு),  அழகர்மலை, நெடுமலை, பூலாமலை, பூதக்குடிமலை, வெள்ளிமலை, நெடுங்குட்டு, செந்துறை, முடிமலை, கரந்தமலை, பெரியமலை, பிரான்மலை என ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் சிதறி கிடக்கும்  கிழக்கு தொடர்ச்சிமலைகளில் இருந்து உருவாகும் உப்பாறு, திருமணிமுத்தாறு, பாலாறு, சருகணியாறு, நாட்டாறு, விருசுழியாறு, பாம்பாறு, கோட்டக்கரையாறு உள்ளிட்ட பல்வேறு சிற்றாறுகளை கொண்டது பாம்பாறு - கோட்டக்கரையாறு வடிநிலக்கோட்டம். இவை அனைத்தும் பருவகால ஆறுகள்தாம். திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்கள் பாம்பாறு - கோட்டைக்கரையாறு மூலம் பாசனம் பெறுகிறது. குறிப்பாக சிவகங்கை மாவட்டமே இந்த ஆறுகள் மூலம் பெருபான்மையாக பயன்பெறுகின்றன. இந்த ஆறுகளில் ஆண்டுக்கு ஓரிரு நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் நீரோடும். ஏனைய நாட்களில் ஆண்டுமுழுதும் வறண்டே கிடக்கும். 

திண்டுக்கல் மாவட்டம் முடிமலை, செந்துறை மலைப்பகுதியில் உருவாகும் பாலாறும்; திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் உள்ள கரந்தமலை மலையில் உருவாகும் திருமணிமுத்தாறும் அழகர்மலை பெரியருவி பள்ளத்தாக்கில் உருவாகும் உப்பாறும் கம்பூர், கருங்காலக்குடி, கொட்டாம்பட்டி சிங்கம்புணரி பகுதிகளில் பாயும் சிற்றாறுகளாகும். கருங்காலக்குடி, வஞ்சிநகரம், கள்ளங்காடு, சிவல்பட்டி, நெல்லுகுண்டுபட்டி உள்ளிட்ட பகுதிகள் உப்பாறு - திருமணிமுத்தாறு - பாலாறு படுகைகளுக்கு இடையில் அமைந்துள்ளது. 

திருமணிமுத்தாறில் இருந்து சிவல்பட்டி அதிகார கண்மாய் நேரடியாக பாசனம் பெறுகிறது.  அழகுநாச்சியம்மன் கோயிலில் (மேற்கு) இருந்து ஒரு கி.மீ தொலைவில் தான் திருமணிமுத்தாறு பாய்கிறது.  

திருமணிமுத்தாறு: 

திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலையில் தோன்றுகிறது திருமணிமுத்தாறு. பூலாமலை, நெடுமலை, பூதக்குடி மலை, சூரக்குட்டு  உள்ளிட்ட மலைகள் திருமணிமுத்தாறின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்குகின்றன. திருமணிமுத்தாறு, மணிமுத்தாறு என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. பாம்பாற்றின் ஒரு துணையாராக திருமணிமுத்தாறு விளங்குகிறது. இது பருவகாலங்களில் மட்டுமே நீரோடும் ஓர் சிற்றாறு ஆகும். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஈர்க்கம்பட்டி, வெள்ளினிப்பட்டி; மதுரை மாவட்டம் அய்யப்பட்டி, மலம்பட்டி, காடம்பட்டி,  வஞ்சிப்பட்டி, நெல்லுகுண்டுபட்டி சிவல்பட்டி, பூதமங்கலம், உடன்பட்டி, எ. மலம்பட்டி; சிவகங்கை மாவட்டம் சேண்டலைப்பட்டி, மாம்பட்டி, எரியூர், கருவேல்குறிச்சி, வேதவழி, கோவில்பட்டி, கல்லல் முன்பாக  கள்ளிப்பட்டு அருகே பாம்பாறு ஆற்றுடன் கலந்து ராமநாதபுரம் மாவட்டம் சுந்தரபாண்டியன் பட்டினம் அருகே கடலில் கலக்கிறது. 

முல்லைத் திணைகுடிகளின் நாகரீகம்:

 கிழக்கு தொடர்ச்சிமலைகளில் தோன்றும் பாம்பாறு - கோட்டக்கரையாறு வடிநில கோட்டத்தில் உள்ள திருமணிமுத்தாறு மற்றும் பாலாறு என்னும் இரு சிறிய ஆற்று படுகைகளுக்கு இடையில் உள்ள முல்லைத்திணை பகுதியான வஞ்சிநகரம், கள்ளங்காடு, சிவல்பட்டி பகுதிகளில் கிடைக்கும் வாழிட மற்றும் புதைவிட தொல்லியல் எச்சங்கள் முக்கியமானதாகும். சுமார்  3500  வருடங்கள் தொடர்ச்சியாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்த சான்றுகள் கிடைக்கிறது. நதிக்கரை அகழாய்வுகள் நமக்கு மருத திணைக்குடிகளின் நாகரீக வளர்ச்சியை அறிவியல்பூர்வமாக கண்டறிய உதவியது போல இப்பகுதியில் விரிவான அகழாய்வு நடத்தப்பட்டால் முல்லை திணைக்குடிகளின் சமூக வளர்ச்சி, பொருளுற்பத்தி குறித்து  நாம் அறிந்து கொள்ள முடியும் 

  



    இப்பகுதியில் வேளாண்மைக்காக நிலத்தை உழவு செய்யும் பொழுது பல்வேறு தொல்லியல் சின்னங்ககளை அதன் முக்கியத்துவம் அறியாமல் மக்கள் அகற்றிவிட்டனர். எனவே இப்பகுதியின் வரலாற்று மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் கருதி மரங்கள் அடர்ந்த கோயில்காடுகளை தமிழ்நாடு பல்லுயிரிய வகைமை சட்டத்தின் (Biological Diversity Act of 2002) கீழ் பல்லுயிரிய மரபு தளமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்று கோரி ஒரு மனுவும் (மனு எண்: 21031); கோயில்காடுகள் அல்லாத நிலப்பரப்பில் உள்ள தொல்லியல் மேட்டை தொன்மையான சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958) பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை முன்வர வேண்டும் என கோரி ஒரு மனுவும் (மனு எண்:14381) (TN/REV/MDU//COLLMGDP/04NOV24//10425851) இன்று (04.11.2024) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக கொடுத்தோம். 


நிசம்பசூதனி சிலை:

முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள், மக்களையும், தேவர்களையும், ரிஷி முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் கொடுஞ்செயல் தாளாது அனைவரும் பார்வதி தேவியை நாடிச் சென்றனர். அன்னையும், அந்த அரக்கர்களை அழிக்க 'கவுசீகி' என்ற அழகிய பெண் வடிவம் எடுத்து வந்தாள். அவள் அழகைக் கண்டு மயங்கிய சும்ப, நிசும்பர்கள், அவளை மணக்க எண்ணினர். ஆனால் அன்னையோ, "இருவரில் யார் மிகுந்த பலசாலியோ அவர்களையே மணப்பேன்" என்று கூறினாள். இதையடுத்து சும்ப, நிசும்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்து போயினர். அவர்கள் அழிவுக்கு காரணமானதால், இந்த அன்னையை 'நிசும்பசூதனி' என்று அழைத்தனர். சோழர்களால் குலதெய்வமாக வணங்கப்பட்டவள், இந்த நிசும்பசூதனி. கி.பி. 850-ல் உறையூரில் சிற்றரசனாக பதவி ஏற்ற விஜயாலய சோழன். பின்பு தஞ்சையை ஆண்ட முத்தரையர்களை வீழ்த்தி, பழையாறையில் இருந்து தஞ்சைக்கு தலைநகரை மாற்றினார். அங்கே தனது வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனி தேவிக்கு கோவில் எழுப்பினார். சோழர்கள் நிர்மாணித்த தஞ்சை நிசும்பசூதனி ஆலயம் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. பின்பு வந்த ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் என அனைத்து சோழ மன்னர்களும் போருக்கு செல்வதற்கு முன்னர், இந்த அம்மனை வணங்கி விட்டு சென்று வெற்றியுடன் திரும்பினர். தங்கள் வெற்றிக்கு காரணமான நிசும்பசூதனியை குல தெய்வமாக வழிப்பட்டனர். இவளே தஞ்சையை காக்கும் காவல் தெய்வம் ஆனாள்.

கள்ளங்காடு அழகுநாச்சியம்மன், கொங்கம்பட்டி நீலியம்மன், பேய்ப்பனையம்பட்டி பட்டத்தரசி அம்மன், கரையிபட்டி வடக்குவாச்செல்வி அம்மன் என வெவ்வேறு பெயர்களில் வழிபடும் அம்மன் சிலைகள் நான்கும் நிசம்பசூதனி அம்மன் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. மேற்சொன்ன ஊர்கள் அனைத்தும் அருகருகே திருமணிமுத்தாறு கரைகளில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அழகுநாச்சியம்மன் கோயில்காடு: 

    அழகுநாச்சியம்மன் கோயில் என்பது இந்திய தொல்குடி மரபில் காணப்படும் கோவில்காடு அமைப்பாகும். மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வஞ்சிநகரம் ஊராட்சிக்கு  உட்பட்ட மூவன் சிவல்பட்டி கிராமத்தில் அழகுநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயில் உசில், குருந்தம், விடத்தலை உள்ளிட்ட மரங்கள் சூழ்ந்த புதர்காட்டின் அருகே 10.133562, 78.383048 அட்சரேகை (Lat) - தீர்க்கரேகை (Long) நில நேர்கோட்டில் அமைந்துள்ளது. இப்பகுதி ஒரு காலத்தில் அதிகார கோட்டை என்று அழைக்கப்பட்டதாக ஊர் மக்கள் சொல்கின்றனர். வஞ்சிநகரத்தில் சுமார் 240 ஏக்கருக்கு, பூதமங்கலத்தில் சுமார் 120 ஏக்கரும்,   கொடுக்கம்பட்டியில் சுமார் 60 ஏக்கரும் என மூன்று கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 420 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக அழகு நாச்சியம்மன் கோயில்காடு விளங்குகிறது. 






அழகுநாச்சியம்மன் கோயிலோடு தொடர்புடைய இந்த இயற்கையான காடுதான், இப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார மக்களின் மேய்ச்சல் நிலமாகவும், கால்நடை வளர்ப்புக்கு ஆதாரமாகவும் விளங்குகிறது. சுத்துப்பட்டி ஊர்களில் இருந்து வந்து பலரும் தங்கள் கால்நடைகளை அழகுநாச்சியம்மன் கோயில்காட்டில் மேய்க்கிறார்கள். அழகுநாச்சியம்மன் கோயில்காட்டில் ஆடு மாடுகளுக்கிடையில் வெட்டவெயிலில் துண்டால் தலைப்பாகை கட்டிக்க கொண்டு நிற்கும் பல மேய்ச்சல்காரர்களை எப்போதுமே நாம் பார்க்க முடியும். 


                                


அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழா:

   சோழ தேசம் பொன்னி வளநாட்டில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவள் அழகு நாச்சியம்மன். சோழ மன்னன் ஒருவன் அழகு நாச்சியம்மன் மீது காதல் வயப்பட, அவளை அடைய விரும்புகிறான். அதற்கு விருப்பமில்லாத அழகு நாச்சியம்மன் குடும்பத்தார்கள் சோழ தேசத்தில் இருந்து அழகுநாச்சியம்மனை வேறு தேசம் தப்பித்து போக செய்கிறார்கள். புதுக்கோட்டை, பொன்னமராவதி வழியாக மல்லக்கோட்டை வருகிறார் அழகு நாச்சியம்மன். மல்லாக்கோட்டையில் உள்ளவர்கள் அதிகாரகோட்டைக்கு செல்லும்படி வழிகாட்டி உள்ளனர். அழகுநாச்சியம்மன் தப்பித்து செல்வதை அறிந்து சோழமன்னன் பின் தொடர்ந்தே வந்து இருக்கிறான். அழகு நாச்சியம்மனை தேடி வந்த சோழ மன்னனை இப்பகுதியில் உள்ளவர்கள் மிதிப்பாறை என்ற பகுதியில் போரிட்டு விரட்டி வென்றார்களாம். அதிகார கோட்டை பகுதியில் உள்ள அடர்ந்த தும்பைக்காட்டில் அழகு நாச்சியம்மன் மறைந்து தெய்வமாகிவிடுகிறார் என அழகுநாச்சியம்மன் தெய்வமான கதையாக கூறுகிறார்கள். பின்னர் மன்னர்கள் அழகு நாச்சியம்மனுக்கு பட்டாடை சாற்றி வழிபட்டதாக ஊர் மக்களிடையே கதைகள் உண்டு. நாகப்பன் சிவல்பட்டி ஊரை சேர்ந்த ஆசிரியர் திரு. உடையப்பன் அவர்கள் இக்கதையை கூறினார். சிவல்பட்டி, கள்ளங்காடு உள்ளிட்ட பகுதிகள் அதிகார கோட்டை என்றே முன்பு அழைக்கப்பட்டது. அம்மனுக்கு சாமியாடி கரகம் எடுக்க வரும் கண்மாய்க்கு பெயர் அதிகார கண்மாய் என்றே அழைக்கப்படுகிறது. அப்பகுதி கோட்டைக்காடு என்று அழைக்கப்படுகிறது. கோட்டை காடு என்று அழைக்கப்படும் பகுதியில் (கோயிலுக்கு தெற்கில் அதிகார கண்மாய் ஒட்டிய பகுதி) கோட்டை கொத்தாளங்களுடன் அரண்மனை ஒன்று இருந்ததாகவும் இப்பகுதியில் கதைகள் உண்டு. 



நெல்லுகுண்டுபட்டி, நாகப்பன் சிவல்பட்டி, மூவன் சிவல்பட்டி, தாயம்பட்டி, கொடுக்கம்பட்டி, காம்பாளிப்பட்டி, கண்டுவப்பட்டி, நல்ல சுக்காம்பட்டி உள்ளிட்ட ஊர்கார்களுக்கு தெய்வமாக அழகுநாச்சியம்மன் விளங்குகிறார். 

பங்குனி மாசம் வெள்ளிக்கிழமை காப்பு கட்டி 15வது திருவிழா நடக்கும். நெல்லுகுண்டுபட்டி மந்தையில் உள்ள சாமி வீட்டி இருந்து தலையில் கரகம் எடுத்து, பொங்கல் கூடையுடன் புறப்பட்டு சாமியாடி வருவார்கள். எடுத்துவரப்பட்டு கரகம் அழகு நாச்சியம்மன் ஊருணியில் அலங்கரிக்கப்படுகிறது. அன்று இரவு பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து வழிபடுகிறார்கள். அன்று இரவு பச்சை தண்ணீர் ஊற்றி விளக்கேற்றும் சிற்ப்பட்டு வழிபாடும் நிகழ்கிறது. பச்சை தண்ணி விளக்கு தெய்வம் என்ற பெயரும் அழகுநாச்சியம்மனுக்கு உண்டு. பச்சை தண்ணியில் விளக்கெரியும் போது எந்த திசையில் உள்ள திரி வழக்கத்தை விட கொழுந்துவிட்டு எரிகிறதோ, அந்த திசையில் உள்ள ஊருக்கு அச்சுறுத்தல் இருக்கும் என்பது ஊரார் நம்பிக்கை. பொங்கல் வைத்து வழிபட்ட பின் அலங்கரிக்கப்பட்ட கரகங்களை மீண்டும் நெல்லுகுண்டுபட்டி மந்தைக்கு எடுத்து செல்கிறார்கள். பின் அடுத்தநாள் கரகங்களை கொண்டு வந்து அழகுநாச்சியம்மன் கோயில் ஊருணியில் அமுக்கி எடுத்து நிறைவு செய்கிறார்கள். இரண்டுநாளும் நெல்லுகுண்டுபட்டியில் நாடகம், கூத்து நடைபெறுகிறது.  கோயில் பூசாரிகள் மட்டும் பங்குபெறும் திருவிழா ஆடிமாதம்  நடைபெறுகிறது. 

    அழகுநாச்சியம்மன் கோயில் திருவிழாவை 17 கரைகாரர்கள் சேர்ந்து நடத்துகிறார்கள். அதில் மூன்றாவது கரைகாரராக நாகூர் சேர்வை வகையறாவை சேர்ந்த நெல்லுகுண்டுபட்டி இசுலாமிய குடும்பத்தார்கள் கோயில் திருவிழாவில் மரியாதையை பெறுகிறார்கள். கோயில் மரியாதையாக வழங்கப்படும் பூ, பழம், திருநீர் ஆகியவற்றை இசுலாமியர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.




அழகு நாச்சியம்மன் கோயிலில் காணப்படும் மீன் சின்னம் 




பெருங்காட்டு கருப்பு கோயில்காடு: 

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மூவன் சிவல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. பெரிய கருப்பர், முத்து கருப்பர் என இரண்டு தெய்வங்கள் இக்கோயில் வழிபடப்படுகிறது. உசில், குருந்தம், விடத்தலை உள்ளிட்ட மரங்கள் சூழ்ந்த புதர்காட்டின் அருகே 10.123039, 78.394364 அட்சரேகை (Lat) - தீர்க்கரேகை (Long) நில நேர்கோட்டில் அமைந்துள்ளது இக்கோயில். அழகு நாச்சியம்மன் கோயில்காட்டின் ஒரு பகுதியில் பெருங்காட்டு கருப்பு கோயில் அமைந்துள்ளது. மருத்துவர் (முடிதிருத்தும்) சமூக மக்களுக்குரிய கோயிலாக பெருங்காட்டு கோயில் விளங்குகிறது. பெரிய கருப்பர், முத்து கருப்பர் என இரு தெய்வங்கள் இக்கோயிலில் வீற்று இருக்கிறது. இப்பகுதியில் விரவி இருந்த இயற்கையான புதர்காடு அண்மையில் மரங்கள் வெட்டப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. 




அகளங்கேசுவரர் சிவன் கோயில்: 

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம் வஞ்சிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளங்காடு பகுதியில் 10.131442, 78.388598 அட்சரேகை (Lat) - தீர்க்கரேகை (Long) நில நேர்கோட்டில் அமைந்துள்ளது அகளங்கேசுவரர் சிவன் கோயில். இக்கோயிலில் அதிட்டான பகுதியில் கல்வெட்டுகள் காணப்படுகின்றனர். இக்கல்வெட்டில் உள்ள செய்திகள்  தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையால் படியெடுத்து 2005 ஆம் ஆண்டு வெளியிடடபட்டுள்ளது. சிதைந்த கல்வெட்டில் கோயிலுக்குரிய நிலக்கொடை பற்றியும் அதன் விளைச்சலில் தட்டுப்பாடு ஏற்பட்டது பற்றியும் கூறுகிறது. கல்வெட்டு முற்றுப்பெறவில்லை. பிற்கால பாண்டியர் கோயில்கள் என்னும் கட்டுயிரையில் தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார். ''கருங்காலக்குடிக்கு அருகிலுள்ள வஞ்சிநகரம்‌ பகுதியிலுள்ள கள்ளங்காடு என்ற பகுதியில்‌ (அதிகரம்‌) பொ.ஆ 1324ல்‌ அகளங்க ஈஸ்வரமுடையார்‌ கோயில்‌ என்ற பெயரில்‌ மாவலிவாணாதிராயர்‌ அவனி நாராயணதேவர்‌ என்னும்‌ வழுதிநாராயணதேவரால்‌ சிவன்கோயில்‌ ஒன்று கட்டப்பட்டுள்ளது” இக்கோயில்‌ தற்போது அதிட்டானத்‌துடன்‌ மட்டும்‌ காட்சியளிக்கிறது''. (ஆவணம் இதழ்24 - 2013 / பக்கம் 247)

இக்கோயிலின் தெற்கே வாணன் பாறை, மேற்கே மாவலி பாறை, வடக்கே திருவெண் காடன் பாறை, கிழக்கே  காளாங்கரை உள்ளது. 







    

அகளங்கா எனும் பெயர் கொண்ட குலோத்துங்க சோழன்: 

இன்னங் கலிங்கத் திகல்வேந்த ருண்டென்றோ

தென்னன் தமிழ்நாட்டைச் சீறியோ- சென்னி

அகளங் காவுன்றன் அயிராவதத்தின்

நிகளங் கால்விட்ட நிலைவு. 

- ஒட்டக்கூத்தர் புகழேந்தி முதலானோர் தனிப்பாடல்கள் (11) 


நூற்றுப்பத் தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை

நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் - மாற்றலரைப்

பொன்றப் பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா

என்றும் கிழியாதென் பாட்டு!

- அவ்வையார் தனிப்பாடல்கள் (32) 


இக்கோயில் கல்வெட்டு கிபி 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று த.ந அரசு தொல்லியல்துறை ஆவணங்கள் குறிப்பிடுகிறது. கிபி 12ஆம் நூற்றாண்டில் வாழ்த்த குலோத்துங்க சோழனின் பெயர் அகளங்கா என்று புலவர் ஒட்டக்கூத்தர் தனிப்பாடல்கள் திரட்டு நூலிலும், அவ்வையார் தனிப்பாடல்கள் நூலிலும் குறிப்பிடப்படுகிறது. கள்ளங்காடு பகுதியில் உள்ள அகளங்கா ஈஸ்வரர் கோயிலுக்கும்  குலோத்துங்க சோழனுக்கும் ஏதும் தொடர்பு இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். அழகு நாச்சியம்மன் சோழ தேசத்தில் இருந்து வந்த கன்னி தெய்வம் என்று இப்பகுதி மக்களிடம் கதைகள் உள்ளது. 

மாலிக்கபூர்  படையெடுப்பின் போது இக்கோயில் இடிக்கப்பட்டு இருக்கலாம். இன்று அதிட்டான பகுதிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. கோயிலின் சிதைந்த உறுப்புகள் அருகே வெட்டவெளியில் குவிக்கப்பட்டுள்ளன. கோயிலின் பழைய ஆவுடைலிங்கமும் நந்தியும் வெளியில் எடுத்து வைக்கப்பட்டுள்ளது.  அதிட்டானத்தின் மீது புதிய கோயில் எழுப்பி இப்பகுதி மக்கள் வழிபாட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதம் பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இக்கோயிலில் வழிபடுகின்றனர். 


கல்வெட்டு: 

அகளங்கீசுவரமுடைய கோயிலில் படித்தறியப்படாத ஒரு துண்டுக்கு கல்வெட்டு பேரா. தேவி அறிவு செல்வம் அவர்களால் கண்டறியப்பட்டது. இக்கல்வெட்டில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த வழுதி நாராயணன் என்ற வாணாதிராயர் பெயரும், நிலத்தின் வரிகள் பற்றிய நிலவரங்களை தெரிவிக்கும் விவரங்களும் காணப்படுகின்றன. இக்கல்வெட்டு  செய்தியினை தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம் அவர்கள் படித்தறிய உதவினார்.

https://ebird.org/checklist/S199569870



தொல்லியல் வரலாற்று சின்னங்கள்: 

அழகுநாச்சியம்மன் கோயிலுக்கும் கள்ளங்காடு சிவன் கோயிலுக்கும் இடைப்பட்ட அழகுநாச்சியம்மன் கோயில்காடு மற்றும் மேய்ச்சல் நிலத்தில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான கற்பதுக்கைகள், குத்துக்கற்கள், கல்வட்டங்கள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள்,  சிவப்பு நிற பானை ஓடுகள், சுட்ட செங்கற்கள், இரும்பு கசடுகள் படிந்த செம்புரான் கற்கள் மேற்பரப்பில் கிடைக்கின்றன. இப்பகுதியில்  ஈமக்காடு மட்டுமல்ல பழமையான தொழில் நகரம் அல்லது குடியிருப்புகளும் இருந்திருக்கலாம். விரிவான அகழாய்வுகள் நடைபெற்றால் இப்பகுதியின் தொன்மையை அறிய நமக்கு உதவும். 







பாலின் தேவை: 

ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ அவன் எடுத்து கொள்ளும் அன்றாட உணவில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் ஊட்டச்சத்துக்கள் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் நாளொன்றுக்கு 300 கிராம் பால் தேவை என்று இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் (ICMR) பரிந்துரை செய்கிறது. 


இறைச்சியின் தேவை: 

பரிணாம கோட்பாட்டின் படி மனிதன் என்பவன் தாவரம் மற்றும் இறைச்சி வகை உணவுகளை உண்ணும் என அனைத்துண்ணியாவன். மனிதனுக்கு உணவில் புரத சத்து (Protien) மிக முக்கியமானதாகும். ஆரோக்கியமான மனிதன் தன் உடல் எடையில் ஒரு கிலோ எடைக்கு 0.83 கிராம் புரத சத்தை கொண்டிருக்க வேண்டும். உதாரணத்த்திற்கு 65 கிலோ எடை கொண்ட மனிதனுக்கு நாளொன்றுக்கு 54 கிராம் புரதம் தேவைப்படுகிறது என இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் பரிந்துரை செய்கிறது.   



மேய்ச்சல் நிலமும் கால்நடைகளும்:

இடைக்கற்காலத்தில் இருந்தே கால்நடை வளர்ப்பும் மேய்ச்சல் தொழிலும் இருந்திற்கான சான்றுகள் உலகில் கிடைக்கின்றன. காட்டு விலங்குகளாக இருந்த மாடு, ஆடு, யானை, நாய் உள்ளிட்ட விலங்குகளை மனிதர்கள் வளர்ப்பு விலங்காக மாற்றும் முயற்சிகளுக்கு சான்றாக தொன்மையான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. மனித சமூகத்தின் அன்றாட உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளில் கால்நடைகளின் தேவை முக்கிய இடத்தை பெறுகிறது. 

பால் உற்பத்தி: 

கலப்பின மற்றும் அயலக பசுக்களின் மூலம் நாளொன்றுக்கு தோராயமாக 8.43 கிலோ பாலும், நாட்டு மாடுகள் மூலம் நாளொன்றுக்கு தோராயமாக 3.54 கிலோ பாலும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் மூலம் கடந்த 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் 239.30 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அவ்வாண்டில் தமிழ்நாட்டில் 10.80 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் பால் உற்பத்தி 230.58 என்பது குறிப்பிடத்தக்கது. உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. ஒவ்வொரு நபருக்கும் நாள் ஒன்றுக்கு 471 கிராம் பால் கிடைக்கும் வகையில் இந்திய நாட்டில் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அது 384 கிராம் அளவாக இருக்கிறது. (Basic Animal Husbandry Statistics 2024 - BAHS). ஒவ்வொரு மனிதனுக்கும் நாளொன்றுக்கு 300 கிராம் பால் தேவை என்று இந்திய மருத்துவ ஆய்வு நிறுவனம் (ICMR) பரிந்துரை செய்கிறது. 
  



பசுக்கள் மூலம் 52%, எருமைகள் மூலம் 45%, ஆடுகள் மூலம் 3% என கால்நடைகள் வாயிலாக இந்தியாவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.  


தமிழ்நாட்டில் கடந்த 2023-24 ஆம் ஆண்டு மொத்தம் 10.80 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் (2022-23) 10.31 மில்லியன் டன் பாலும், (2021-22) 10.10 மில்லியன் டன் பாலும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  




இறைச்சி உற்பத்தி: 

கடந்த 2022-23 ஆம் ஆண்டு 9.77 மில்லியன் டன் இறைச்சியும், 2023-24 ஆம் ஆண்டு 10.25 மில்லியன் டன் (Million tonnes) இறைச்சியும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் நாட்டின் இறைச்சி உற்பத்தி அதிகரித்து கொண்டே செல்கிறது என்பதை இந்திய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதில் தமிழ்நாடு 7.49% இறைச்சி உற்பத்தி செய்து நாட்டின் இறைச்சி உற்பத்தியில் 6ஆம் இடத்தில் உள்ளது.  (Basic Animal Husbandry Statistics 2024 - BAHS)





கம்பளி (Wool) உற்பத்தி: 
இந்தியாவில் மொத்தம் 33.69 மில்லியன் கிலோ (Kgs) கம்பளி கடந்த 2023-24 ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-18 ஆம் ஆண்டில் மொத்தம் 41.46 மில்லியன் கிலோ கம்பளியும், 2018-19 ஆம் ஆண்டில் 40.42 மில்லியன் கிலோ கம்பளியும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 1,960 கிலோ மட்டுமே கம்பளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 



கால்நடை வளர்ப்பில் மதுரையும் சிவகங்கையும்:

தமிழ்நாடு அரசின் கால்நடை & வளர்ப்பு விலங்குகள் துறை கால்நடை பற்றிய ஒரு மாதிரி கணக்கெடுப்பை கடந்த 2022-23 ஆண்டு (Integrated Sample Survey Report 2022-23 pdf, Animal Husbandry and Veterinary Services department, TN Govt) வெளியிட்டு இருந்தது. அதன்படி சுமார் 2 கோடி 45 லட்சம் கால்நடைகள் உள்ளன. அதில் 47.48 லட்சம் பால்தரும் மாடுகள் அடக்கம்.



தமிழ்நாட்டில் 12,585 பால் உற்பத்தி கூட்டுறவு மையங்களும், அதில் 20.30 லட்சம் பால் உற்பத்தியாளர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு 2017-18 ஆம் ஆண்டில் சராசரியாக நாள்தோறும் 206 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து இந்திய நாட்டின் பால் உற்பத்தி செய்யும் தலைசிறந்த 10 மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது என தமிழ்நாடு அரசின் ஆவின் இணையதளம் குறிப்பிடுகிறது. (https://aavin.tn.gov.in/milk-production-section2#:~:text=Milk%20Procurement:,state%20cooperatives%20across%20the%20country.)


கால்நடைகளின் பால் உற்பத்தி திறன்:



கால்நடை வளர்ப்பில் இருந்து பெறப்படும் இறைச்சி, எரு, தோல் அளவு:



கள்ளங்காடு தரிசு நிலமல்ல பொன்விளையும் பூமி:

கள்ளங்காடு பகுதியில் நாளொன்றுக்கு சுமார் 60,000 செம்மறி ஆடுகள், 20,000 வெள்ளாடுகள், 15,000 மாடுகள் மேய்வதாக இப்பகுதியில் மேய்ச்சலில் ஈடுபடும் மக்கள் தெரிவித்தனர். சுமார் 10 பேரிடம் நான் (தமிழ்தாசன்) நேரில் விசாரித்த போது அவர்கள் அனைவரும் ஏறக்குறைய இந்த எண்ணிக்கையை தான் கூறினார்கள். சுற்றியுள்ள பதினெட்டுபட்டி கிராமங்களும் கள்ளங்காடு பகுதியில்தான் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து மேய்கின்றனர்.

மழைக்காலங்களில் இப்பகுதியில் ஆடுமாடுகளை மேய்க்க வருவோர் எண்ணிக்கையும் கால்நடைகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாகும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனர். காரணம் கள்ளங்காடு பகுதி ஒரு மெட்டு பகுதியாகும். மழை பெய்ந்தால் இப்பகுதியில் விரைவில் வடிந்தோடிவிடும் என்பதால், மற்ற பகுதியில் உள்ள மேய்ச்சல் தொழில் புரியும் மக்களும் கள்ளங்காடு பகுதிக்கு தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து மேய்ப்பர்கள்.  கள்ளங்காடு என்பது மதுரை மாவட்டத்திற்குள் இருந்தாலும், அது சிவகங்கை மாவட்ட எல்லை ஓரமாகவும் இருப்பதால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்களும் தங்கள் கால்நடைகளை இப்பகுதியில் மேய்க்கின்றனர்.


பால் உற்பத்தி வழியே பெறப்படும் வருமானம்:

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மதுரை மாவட்ட மக்கள் தொகை 30.38 லட்சம் ஆகும். ஒரு நபருக்கு 300 கிராம் பால் தேவையை பூர்த்தி செய்ய நாள் ஒன்றுக்கு சுமார் 10 லட்சம் கிலோ அதாவது 1000 டன் பால் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறாக மதுரை மக்களின் பால் தேவையில் 24,000 கிலோ பால் கள்ளங்காடு பகுதியில் மேயும் கால்நடைகள் வாயிலாக தினசரி பெறப்படுகிறது. 

இறைச்சி வழியே பெறப்படும் வருமானம்:



கால்நடை எருவின் வழியே பெறப்படும் வருமானம்:




பால் மற்றும் இறைச்சி உற்பத்தி வாயிலாக மட்டும் கள்ளங்காடு பகுதியில் மேயும் கால்நடைகளின் வழியே ஆண்டுக்கு சுமார் 59 கோடி (58,81,39,200) ரூபாய் வருமானம் கிடைக்கிறது. அரசின் எந்த மூலதனம் முதலீடுகள் இல்லாமல், சுற்றுச்சூழல் சீர்கேடு இல்லாமல், கல்வியில் பின் தங்கிய பிரிவினருக்கு கால்நடை வளர்ப்பு வழியே கிடைக்கும் இந்த வருமானம் என்பது ஒரு மிகப்பெரிய வேலை வாய்ப்பாகும். இது போக கால்நடைகளின் எரு, தோல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் என பல உற்பத்தி பொருட்களை கணக்கில் கொண்டால் இந்த மதிப்பு உயரும். இது கால்நடைகளில் வழியே பெறப்படும் வருமானம் மட்டுமே. இந்த கள்ளங்காட்டை நம்பி வேளாண்மை, மூலிகை பறித்தல் போன்ற தொழில்களை கணக்கிட்டால் கள்ளங்காடு ஒரு பொன்விளையும் பூமி என்பது புரியும். 


பல்லுயிரிய வகைமை: 

    அழகுநாச்சியம்மன் கோயில்காடு, கள்ளங்காடு சிவன் கோயில் மற்றும் பெருங்காட்டு கருப்பு கோயில்காடு உள்ளிட்ட கோயில்களும் அக்கோயிலோடு தொடர்புடைய புதர்காட்டிலும் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் அக்டோபர் மாதம் ஆய்வு செய்தோம். இம்மூன்று கோயில்களும் மூன்று திசைகளில் ஒன்றுக்கொன்று ஒரு கி.மீ தொலைவிலேயே ஒரே பகுதியில் அமைந்துள்ளது. 


   மேலே குறிப்பிட்டுள்ள மூன்று கோயில்களுக்கும் தொடர்புடைய புதர்காட்டில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான கல்பதுக்கை, கற்திட்டை, கல்வட்டம், கற்குவியல், முதுமக்கள் தாழி உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் பெருமளவில் விரவிக் கிடக்கிறது. 


தாவரங்கள்: 

    மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் மேற்கொண்ட ஆய்வில் உசிலை, களா, காரை, குருந்தம், ஆத்தி, ஆலம், அரசம், நீர்க்கடம்பு, இலந்தை, வெள்வேல், தொரட்டி, தைலம், திருகுக்கள்ளி, செங்கத்தாறி, மஞ்சநத்தி, இலுப்பை, கூகமத்தி உள்ளிட்ட மரங்கள் காணப்படுகிறது. ஆவாரை, சிறுபூனைக்காலி, தும்பை, நாயுருவி, குறிச்சி, குன்றிமணி, சீதேவி செங்கழுநீர், வெண் சாரணை, குப்பை கீரை, தாத்தா பூ உள்ளிட்ட தாவரங்கள் அழகுநாச்சியம்மன் மற்றும் பெருங்காட்டு கோயில்காட்டில் ஆவணம் செய்யப்பட்டன.  முல்லைத்திணைக்கே உரித்தான உசிலை, குருந்தம், திருகுகள்ளி, மஞ்சணத்தி உள்ளிட்ட புதர்காட்டு சூழல் மண்டலத்தின் தாவரங்களே அதிகம் இப்பகுதியில் காணப்படுகிறது. 


பறவைகள்: 

    புள்ளி புறா (Spotted Dove), பட்டை கழுத்து கள்ளிப்புறா (Eurasian Collared-Dove), செண்டு வாத்து (Knob-billed Duck), புள்ளி மூக்கு வாத்து (Indian Spot-billed Duck), செண்பகம் (Greater Coucal), ஆசியக்குயில் (Asian Koel), மலை உழவரன் (Alpine Swift), நாட்டு உழவரன் (Little Swift), பனை உழவரன் (Asian Palm Swift), நீர்க்கோழி (White-breasted Waterhen), செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing), நீர்காகம் (Indian Cormorant), சின்ன கொக்கு (Little Egret), குளத்து கொக்கு (Indian Pond-Heron), உன்னிக்கொக்கு (Eastern Cattle-Egret), நடுத்தர கொக்கு (Medium Egret), பெரிய கொக்கு (Great Egret), வல்லூறு (Shikra),  செம்பருந்து (Brahminy Kite), புள்ளி ஆந்தை (Spotted Owlet), கொண்டலாத்தி (Eurasian Hoopoe), சிறிய மீன் கொத்தி (Common Kingfisher), வெண்மார்பு மீன்கொத்தி (White-throated Kingfisher), கருவெள்ளை மீன் கொத்தி (Pied Kingfisher), பனங்காடை (Indian Roller), செம்மார்பு குக்குறுவான் (Coppersmith Barbet), பொன்முதுகு மரங்கொத்தி (Black-rumped Flameback), செந்தார் பைங்கிளி (Rose-ringed Parakeet), காட்டுக் கீச்சான் (Common Woodshrike), கரிச்சான் (Black Drongo), வேதிவால் குருவி (Indian Paradise-Flycatcher), வால்காக்கை (Rufous Treepie), காகம் (House Crow), காட்டு கதிர்குருவி (Jungle Prinia), சாம்பல் கதிர்குருவி (Ashy Prinia), தகைவிலான் (Barn Swallow), செம்பிட்ட தகைவிலான் (Eastern Red-rumped Swallow), வெண்புருவ சின்னான் (White-browed Bulbul), செங்குத கொண்டைக்குருவி (Red-vented Bulbul), வெண்தலை சிலம்பன் (Yellow-billed Babbler), நாகணவாய் (Common Myna), பழுப்பு நிற ஈப்பிடிப்பான் (Asian Brown Flycatcher), கருஞ்சிட்டு (Indian Robin), நீல பூங்குருவி (Blue Rock-Thrush), வெளிர் அலகு பூங்கொத்தி (Pale-billed Flowerpecker), ஊதா பிட்ட தேனிசிட்டு (Purple-rumped Sunbird) ஊதா தேன்சிட்டு (Purple Sunbird) நீண்ட அலகு தேன்சிட்டு (Loten's Sunbird), வெண்புருவ வாலாட்டி (White-browed Wagtail), அக்கா குயில் (Common Hawk-Cuckoo), பெரும்புள்ளி கழுகு (Greater Spotted Eagle), ராஜாளி பருந்து (Bonelli's Eagle), நீல வாழ் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater), மயில் (Indian peafowl), கவுதாரி (Grey francolin), புதர்காடை (Jungle bush quail) உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் அழகுநாச்சியம்மன் கோயில்காடு, பெருங்காட்டு கருப்பு கோயில் காடு உள்ளிட்ட பகுதிகளில் அக்டோபர் (2024) மாதம் ஆவணம் செய்யப்பட்டது. 



வண்ணத்துப்பூச்சிகள்: 

    கொள்ளை வெள்ளையன் (Common Emigrant), வெண்புள்ளிக் கருப்பன் (Common Crow), உரோசா அழகி (Common rose), சிவப்புடல் அழகி (சிவப்புடல் அழகி), கறிவேப்பிலை அழகன் (Common Mormon), சிறிய காவிக்கடவி (Little Orange Tip), எலுமிச்சை அழகி (Lime Butterfly), இச்சைமஞ்சள் அழகி (Common Jezebel), முட்டைக்கோசு வெள்ளையன் (Indian Cabbage White), புங்க நீலன் (Common Cerulean), சிறுபுல் நீலன் (Tiny Grass Blue), மங்கிய வெள்ளையன் (Lesser Albatross), கொக்கிக்குறி வெள்ளையன் (Pioneer), பசலை சிறகன்(Danaid Eggfly) உள்ளிட்ட 14 வகை வண்ணனைத்துப்பூச்சிகள் அக்டோபர் (2024) மாதம் ஆவணம் செய்யப்பட்டது. நாடுகள் கடந்து வலசை வரும் தேசாந்திரி (Wandering glider) என்கிற தட்டான் ஆயிரக்கணக்கில் இப்பகுதியில் காணப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 










காட்டுயிர்கள்:

    புள்ளிமான் (Spotted Deer), குறுநரி (Bengal Fox), முள்ளெலி (Madras Hedgehoge) சாம்பல் நிற தேவாங்கு (Grey Slender loris), செம்முககுரங்கு (bonnet macaque), காட்டுப்பூனை (Jungle cat), மரநாய் (Asian palm civet), சாம்பல் நிற கீரி (Indian grey mongoose), மூவரி அணில் (three striped palm squirrel), உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பாலூட்டி வகை காட்டுயிர்கள் கள்ளங்காடு அழகுநாச்சியம்மன் கோயில்காட்டை வாழிடமாக கொண்டுள்ளது. புள்ளிமான், நரி, வெருகு, மரநாய், புனுகுப்பூனை, சாம்பல் நிற தேவாங்கு, உடும்பு உள்ளிட்ட காட்டுயிர்கள் இந்திய அரசின் காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1972படி பட்டியல் 1இல் வைக்கப்பட்டுள்ள உயிரினங்கள் ஆகும். தேவாங்கு, மரநாய், புனுகுப்பூனை, நரி, வெருகு உள்ளிட்ட காட்டுயிர்கள் உலக அளவில் அச்சுறுத்தல் மற்றும் அழியும் விளிம்பில் உள்ள உயிரினங்களாக அடையாளம் காணப்பட்டு செம்பட்டியல் (Redlist) வகைப்பாட்டிற்குள் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கழகத்தால் (IUCN) வைக்கப்பட்டுள்ளது. அதில் சாம்பல் நிற தேவாங்கு தென்னிந்திய மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய (Endemic) உயிரினமாகும்.








உடும்பு, மலை பாம்பு, பாறை பல்லி, அரணை, பச்சோந்தி, இந்திய பச்சைப்பாம்பு, எண்ணெய்ப்பனையன், ஊதுபைத் தவளை, குள்ளத்தேரை,  விசிறித்தொண்டை ஓணான், வலைவரையன் பாம்பு, குழித்தவளை கொம்பேறிமூர்க்கன், மனைப் பூரான், கரட்டாண்டி ஓணான், வெண்கல அரணை உள்ளிட்ட 30க்கு மேற்பட்ட ஊர்வன உயிரிகளும்,தென் நிலப்பாச்சான், குச்சி பூச்சி, பெருமரவட்டை, பச்சை வேடன் சிலந்தி உள்ளிட்ட பூச்சிகளும் சிலந்திகளும்  இக்கோயில்காட்டில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. 




















பண்பாட்டு மற்றும் பல்லுயிரிகள் நோக்கில் ஆய்வு:

    வெவ்வேறு பருவங்கள், வெவ்வேறு காலங்கள் என பல்லுயிரிய வகைமை குறித்த விரிவான தொடர் ஆய்வுகள் இப்பகுதியில் நடைபெற்றால் அழகு நாச்சியம்மன் மற்றும் பெருங்காட்டு கருப்பு கோயில்காட்டின் பல்லுயிரிய வளத்தை அறிந்து கொள்ள முடியும். வரலாற்று நோக்கிலும், பல்லுயிரிய நோக்கிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கள்ளங்காடு, பெருங்காட்டு கருப்பு கோயில், அழகுநாச்சியம்மன் கோயில் விளங்குகிறது. இந்த பகுதியின் வரலாற்று சின்னங்களும் பல்லுயிரிய வகைமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.  

    எனவே இப்பகுதியில் உள்ள கோயில்காடுகளை பல்லுயிரிய மரபு தலமாகவும், கோயில்காடுகள் அல்லாத நிலப்பரப்பில் உள்ள தொல்லியல் மேட்டை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் தொல்லியல் நோக்கில் விரிவான அகழாய்வு செய்து, அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். 

கிராம சபை தீர்மானம்:

சிப்காட் அமைக்க எதிரிப்பு தெரிவித்தும், இப்பகுதியை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க குறிக்கும் கடந்த 01.05.2025 அன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் நகல் கீழே இணைக்கப்பட்டுள்ளது.  














கள்ளங்காடு பகுதியில் சிப்காட் அமைக்க மக்கள் எதிர்ப்பு: 
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கள்ளங்காடு பகுதியில்  278 ஏக்கரில் சிப்காட் அமைப்பதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு உள்ளூர் பகுதி மக்கள் கடுமையாக ஏதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 19.08.2025 அன்று காவல்துறையினர் குவிக்கப்பட்டு சிப்காட் பணிகளை தொடங்க வந்த அரசு ஊழியர்களை உள்ளூர் மக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 







---- ஆய்வுக்குழு ----

பேரா. ப. தேவி அறிவு செல்வம் (கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)

மரு. தி. பத்ரி நாராயணன் (பறவையிலாளர்) 

மரு. ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)

திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)

திரு. மு. அறிவு செல்வம் (தொல்லியல் ஆய்வாளர்)

திரு. பு.இரா. விஸ்வநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)

திரு. ச. ஜோதிமணி (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)

திரு. ரெ. வெங்கடராமன் (சூழல் ஒளிப்பட கலைஞர்)

திருமிகு. சந்தியா (வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்)

திரு. முருகராஜ் (ஓவியர்)

திரு. தமிழ்தாசன் (எ) மே. ஜான்சன் மேத்தியூ (சூழலியல் ஆய்வாளர்)


ஒளிப்படங்கள்: 

தமிழ்தாசன், ச. ஜோதிமணி, ரெ. வெங்கடராமன் 


கட்டுரை தொகுப்பு 

தமிழ்தாசன் 


ஆதாரங்கள்
  • மக்கள் தொகை: https://www.tnrd.tn.gov.in/.../census.../pdf/23-Madurai.pdf
  • ம.இ.ப.அ. குழுவினர் ஆய்வறிக்கை
  • The Wildlife Protection Act of 1972 (WPA) Schedule I lists
  • https://www.iucnredlist.org
  • The Biological Diversity Act, 2002
  • மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு - த.நா. அரசு தொல்லியல்துறை வெளியீடு
  • மதுரை மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 1 - த.நா. அரசு தொல்லியல்துறை வெளியீடு
  • இந்திய கால்நடை & பால்வளத்துறை அறிக்கை 2023-24 (https://dahd.gov.in/sites/default/files/2024-11/BAHS-2024.pdf)
  • கால்நடை வளர்ப்பு மாதிரி ஆய்வறிக்கை  https://www.scribd.com/document/888339020/Integrated-Sample-Survey-Report-2022-23

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

Written on 04.11.2024 & Updated 06.10.2025

 தமிழறிஞர், பட்டிமன்ற பேச்சாளர் திரு. ஞானசம்பந்தன் அவர்கள் பேசிய காணொளி: https://youtu.be/TAMblrMoaGQ?si=BSEfbBXpTTLkEpPH

சேறல் சமூக ஊடகம் கள்ளங்காடு பகுதியை குறித்து வெளியிட்ட காணொளி   https://www.youtube.com/watch?v=IobUFyWEUNc

Comments

Popular posts from this blog

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை