இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்

இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் 
பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்

பண்பாட்டுச் சூழல் நடை  


உலக அலையாதிக்காடுகள் தினத்தை முன்னிட்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்க்கரை சாலைகளில் உள்ள அலையாத்திக்காடுகள், ஆற்றின் கழிமுகங்கள், வரலாற்று தளங்கள் சென்று பார்வையிட்டோம். 27.07.2025, ஞாயிறு அன்று பண்பாட்டு சூழல் நடையின் 33வது பயணத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர். 

காலை 5 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து தனி சிற்றுந்து வாகனத்தில் புறப்பட்டு காலை 8.30 மணிக்கு இராமநாதபுரம் சுற்றுச் சாலையில் உள்ள வசந்தம் உணவகத்தில் காலை உணவை சாப்பிட்டோம். பின் அங்கிருந்து காலை 9.15 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டம், ஆற்றாங்கரை ஊராட்சி பகுதியில் வைகை பொழிக்கு (estuary) வந்து சேர்ந்தோம். வைகையாறும் - பாக் விரிகுடா கடலும் கூடுமிடத்தை பார்வையிட்டோம். கடல்வாழ் உயிரிகள், கடல்சார் பறவைகள் குறித்து திரு. இரவீந்திரன் அவர்களும், வைகையின் கழிமுக பகுதியில் காணப்படும் தாவரங்கள் குறித்து திரு. கார்த்திகேயன் அவர்களும், கடல் நண்டு, சங்கு குறித்து திரு. விஸ்வா அவர்களும் எடுத்துரைத்தனர். ஆற்றாங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு. முகமது அலி ஜின்னா அவர்கள் வைகை கழிமுக பகுதியில் ஊராட்சி சார்பாக முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்கள், இப்பகுதி மீனவர்களின் வாழ்வியல் குறித்து சிறப்புரையாற்றினார். 

அங்கிருந்து காலை 10.30 மணிக்கு சேதுபதி மன்னர்களின் சத்திரம், அழகன்குளம் அகழாய்வு நடைபெற்ற அரசினர் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றார். தாமதமானதால் தேவிப்பட்டணம் செல்லும் திட்டத்தை கைவிட்டு நேரடியாக காரங்காடு படகு குழாமிற்கு நண்பகல் 12.30க்கு சென்று விட்டோம். 

காரங்காடு வனச்சரக அலுவலர் திரு. திவாகர் அவர்கள், அலையாத்திக்காடுகளின் தோற்றம் மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். பின் பகல் 1.45 மணிக்கு வனத்துறையால் நடத்தப்படும் படகு சவாரியில் அலையாத்திக்காடுகளையும், கடலையும் கண்டு ரசித்தோம். ஆழம் குறைவான பொழியில் நிறுத்தி குளிக்கவும் அனுமதித்தார்கள். சிறுவர்களுக்கு (5-12 வயது) 100 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 

படகு பயணத்தை முடித்துவிட்டு பகல் 3 மணிக்கு உப்பூர் கிராமத்தில் உள்ள எம்.எஸ் உணவகத்திற்கு வந்துவிட்டோம். மூன்று பொறித்த மீன்கள் அடங்கிய ஒரு மீன் சாப்பாட்டின் விலை 130 ரூபாய். முரல் மீன் பொரித்து தந்தார்கள். 

அங்கிருந்து சுந்திரபாண்டியன் பட்டணம் பகுதியில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான சமணர் கோயிலுக்கு மாலை 5 மணி அளவில் வந்து சேர்ந்தோம். இக்கோயில் குறித்து திருமிகு தமிழினியாள் அவர்களும், தமிழ்தாசன் அவர்களும் எடுத்துரைத்தனர். பின் அங்கிருந்து மாலை 6 மணிக்கு மதுரை நோக்கி புறபட்டு, இரவு 10 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி வந்து சேர்ந்தோம். பறவையியலாளர் ஹீமோக்ளோபின், காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்கள் ஜோதிமணி, வெங்கடராமன் இப்பயணத்தில் 30க்கும் மேற்பட்ட கடற்கரை பறவைகளை ஆவணம் செய்தனர்.

eBird Checklist - 27 Jul 2025 - Vaigai River estuary, Atrangarai beach - 29 species https://ebird.org/checklist/S263068538

இராமநாதபுரம் என்னும் நெய்தல் நிலத்தின் சிறப்புகள்: 

தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட கடற்பரப்பை கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். தமிழ்நாட்டின் 1076 கி.மீ நீளமுள்ள கடற்கரையில் சுமார் 250 கி.மீ நீளமுள்ள கடற்கரை இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் நான்கில் ஒரு பங்கு கடற்கரை பகுதி இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது. கடல் பரப்பின் அங்கமான வளைகுடா (Gulf), விரிகுடா (Bay), நீரிணை (Strait), சேற்றுத்திட்டுகள் (Mudflats), கடல்தீவுகள் (Island), பவளத்திட்டுகள் (Coral Reef), சுண்ணாம்பு படுகை (Limestone shoals) போன்றவைகளும்; கடற்கரையோர கழிமுகங்கள் (Delta), ஆற்று பொழிமுகங்கள் (Estuaries), காயல்கள் (Lagoons) சதுப்புநிலங்கள் (Marsh & Swamps), அலையாத்திக்காடுகள் (Mangrove Forest), மணற்குன்றுகள் (Sand Dunes), உப்பங்கழிகள் (Salt Pans), உவர்நீர் ஏரிகள் (Lagoons), உள்நாட்டு ஏரிகள் (Manmade Lakes), கடற்பாறைகள் (Sea Rocks), செம்மண் தேரிக்காடுகள் (Red Sand Desert), கடற்கரை புதர்காடுகள் (Coastal Shrubs), புல்வெளிகள் (Coastal Grasslands) என பலவகைப்பட்ட சூழலியல் அமைப்புகளை கொண்டது இராமநாதபுரம் மாவட்டம். ஆறும் கடலும் சேரும் பொழிமுகங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகம். 

பழங்கால மக்கள் வாழிடங்கள், தொல்லியல் மேடுகள், மன்னர் கால பழமையான  சமண, பௌத்த, சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவ வழிபாட்டு தளங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. அழகன்குளம், தொண்டி, மருங்கூர்பட்டினம், தேவிபட்டினம், பெரியப்பட்டினம், சுந்தரபாண்டியன்பட்டினம், கீழக்கரை, புதுப்பட்டினம், முடிவீரன்பட்டினம் போன்ற மிகப் பழமையான இயற்கைத் துறைமுகங்கள் இம்மாவட்டத்தில் இருந்துள்ளன. கிபி.13, 14ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளில் 'முத்தூற்றுக்கூற்றம்' எனும் நாட்டுப்பிரிவில் தொண்டி, நானாதேசிப்பட்டினம், சுந்தரபாண்டியன்பட்டினம், முத்துராமலிங்கபட்டினம், பாசிப்பட்டினம், நீர்ப்பட்டினம் ஆகிய துறைமுகப் பட்டினங்கள் இருந்ததாக கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. ரோமானியர்கள், அரேபியர்கள், சீனர்கள், போர்ச்சுகீயர்கள், டச்சுக்காரர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் வணிகத்திற்காக வருகை புரிந்த வரலாறுகளையும் இராமநாதபுரம் மாவட்டம் கொண்டுள்ளது. வரலாற்று நோக்கிலும் சூழலியல் நோக்கிலும் பல சிறப்புகளை கொண்டது இராமநாதபுரம் மாவட்டம்.           


இராமநாதபுரம் மாவட்ட பல்லுயிரிய & சூழலியல் சிறப்புகள்

மன்னாரின் வளைகுடா “உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த மண்டலம் என அழைக்கப்படுகிறது” ஏனெனில் இதில் 4,223க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. மன்னார்  வளைகுடாவில் காணப்படும் அலையாத்திக்காடுகள் 9 வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. அவை கடல்சார் பறவைகள் மற்றும் கடல் பாம்புயினங்கள் உள்ளிட்ட பல்வேறு கடல் உயிரினங்களுக்கு வாழிடமாகவும் ஆதாரமாகவும் உள்ளன. மன்னார் தேசிய பூங்கா மற்றும் பறவைகள் காப்பகத்திற்கு ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட வலசைப் பறவைகள் வருகை தருகின்றன.

இராமநாதபுரம் வனத்துறை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்துறையின் கீழ்காணும் இடங்களை  பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணிக்கின்றது:

  1. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா
  2. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம் 
  3. தேர்த்தங்கல் பறவைகள் காப்பகம் 
  4. சக்கரக்கோட்டை பறவைகள் காப்பகம் 
  5. மேலசெல்வனூர் & கீழசெல்வனூர் பறவைகள் காப்பகம் 
  6. காஞ்சிரங்குளம் பறவைகள் காப்பகம் 
  7. சித்திராங்குடி பறவைகள் காப்பகம்
  8. தனுசுகோடி பூநாரைகள் காப்பகம்    

இதில் மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா, தேர்த்தங்கல் மற்றும் சக்கரக்கோட்டை பறவைகள் காப்பகம் ராம்சார் தளமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறு பறவைகள் சரணாலயங்கள் மற்றும் மூன்று ராம்சார் தளங்கள் கொண்ட ஒரே மாவட்டம் இராமநாதபுரம் விளங்குகிறது. இவை தவிர 13 அலையாத்திக்காடுகள் தொகுதிகள், 110 சதுர கிமீ பரப்பளவு கொண்ட பவளப் பாறைகள், கழிமுக பகுதிகள் இராமநாதபுரம் வனத்துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ளது. 



மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா ராமேஸ்வரத்திலிருந்து கன்னியாகுமரி வரை தெற்குப் பகுதியில் பரவியுள்ளது. மண்டபத்திலிருந்து தூத்துக்குடிவரை 160 கிமீ தூரம் கடற்கரையோரம்  21 குடியிருப்பில்லாத தீவுகள் இதில் அடங்கும். இந்த தீவுகள் கரையிலிருந்து சராசரியாக 2 முதல் 10 கிமீ தொலைவில் உள்ளன. மேலும் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம்1989ஆம் ஆண்டு இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இது ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரிவரை 10,500 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது.

கடல்சார் பல்லுயிரிய வகைமைகளையும் அவற்றின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு 1986இல் இந்த 21 தீவுகளையும் ஆழமற்ற கடல்பரப்பையும் மன்னர் வளைகுடா தேசிய பூங்காவாக அறிவித்தது.

இந்த 21 தீவுகள் கரையை அடிப்படையாகக் கொண்டு நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன: மண்டபம், கீழக்கரை, வேம்பார் மற்றும் தூத்துக்குடி குழுக்கள். 

மண்டபம் குழுவில் 7 தீவுகள் உள்ளன:
சிங்கில், குருசோடை, புள்ளிவாசல், பூமரிச்சான், மனோலி, மனோலிபுட்டு மற்றும் ஹேர்.

கீழக்கரை குழுவில் 7 தீவுகள் உள்ளன:
முள்ளி, வலை, தலையாரி, அப்பா, பூவரசன்பட்டி, வாலிமுனை மற்றும் ஆனைப்பர்.

வேம்பார் குழுவில் 3 தீவுகள் உள்ளன:
நல்லத்தண்ணி, புலுவினிச்சல்லி மற்றும் உப்புத்தண்ணி.

தூத்துக்குடி குழுவில் 4 தீவுகள் உள்ளன:
கரியச்சல்லி, விலாங்குசல்லி, காசுவார் & வான்.

மன்னார் வளைகுடாவில் உள்ள உள்ள 21 தீவுகளிலும் பவளத்திட்டுகள் காணப்படுகின்றன. இவை கடலில் வாழும் மீன்களில் சுமார் 25% உயிரினங்களின் வாழ்வுக்கு ஆதாரமாக உள்ளது.


பல்லுயிரிய வகைமை: 
மன்னார் வளைகுடாவில் 4,223க்கும் மேற்பட்ட தாவர மற்றும் விலங்கினங்கள் காணப்படுகின்றன. இவ்வளைகுடாவில் பல வகை கடல் தாவரங்கள், விலங்கின உயிரினங்கள் காணப்படுகின்றன. பவளத் திட்டுகள், (coral reefs), கடற்பாறைகள், கடற்கரை மணல்கள், சேற்றுத் திட்டுகள் (mud flats), ஆற்றாங்கரை பொழிகள் (estuaries), அலையாத்திக்காடுகள், கடல்வாழைகள் (seaweed)  மற்றும் கடற்புற்கள் (seagrass beds) உள்ளிட்ட பல்வகைப்பட்ட கடலோர சூழலியல் அமைப்புகள்தான் சிறப்பு வாய்ந்த இத்தகைய பல்லுயிரிய வகைமைக்கு ஆதாரமாக விளங்குகிறது. அதில் அரிய வகை சங்குகள், இறால்கள், நண்டு வகைகள், முத்துச் சிப்பிகள், ஆவுளியாக்கள்(dugongs), கடல் ஆமைகள், கடற்குதிரைகள் (seahorses), கடல் பாம்புகள், கடல் வெள்ளரிகள் (sea cucumbers) போன்றவை குறிப்பிடத்தக்க சில உயிரினங்கள் ஆகும். 

மன்னாரின் வளைகுடாவில் கீழ்க்கண்ட பல்லுயிரிய இனங்கள் அடக்கம்: 

  • 117 வகை பவளத் திட்டுகள் (Corals)
  • 14 வகை கடற்புற்கள் (Sea grasses)
  • 158 வகை ஓட்டுலிகள் (crustaceans)
  • 856 வகை மெல்லுடலிகள் (molluscs)
  • 1147 வகை துடுப்பு மீன்கள் (fin fishes)
  • 153 வகை முட்தோலிகள் (echinoderms)
  • 181 வகை கடல்வாழைகள் (seaweeds)

மேலும் பருவகால அடிப்படையில் இடம்பெயரும் கடல் பாலூட்டி உயிரினங்களான திமிங்கிலங்கள் (whales), ஓங்கில்கள் (dolphins), கடற்பன்றிகள் (porpoises) மற்றும் கடல் ஆமைகள் (turtles) இங்குள்ளன. மன்னார் வளைகுடா அலையாத்திக்காடுகளில் 9 வகையான தாவரங்கள் காணப்படுகின்றன. இவ்வளைகுடா கடற்பறவைகள் மற்றும் கடல் பாம்புகளை போன்ற பல்வகையான கடல் உயிரினங்களுக்கும் ஆதாரமாக உள்ளன.

இராமநாதபுரம் மாவட்ட பல்லுயிரிய & சூழலியல் சிறப்புகள்  குறித்து மேலே உள்ள தரவுகள் இராமநாதபுரம் மாவட்ட வனத்துறையின் இணையதள பக்கத்தில் (https://ramanathapuram.nic.in/departments/forest-environment-climate-change) இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை. 

இராமநாதபுரம் மாவட்ட பறவைகள்: 
இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை, சேற்று ஈரநிலம், அலையாத்திக்காடு, உவர்நீர் ஏரிகள், தேரிக்காடு, கடற்கரை புல்வெளிகள், புதர்காடுகள் என பல்வேறு சூழல் மண்டலங்கள் உள்ளன. அது பல்வேறு பறவையினங்களுக்கு ஆதாரமாக உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் 256 வகையான பறவையினங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளதாக ஈபிர்ட் (ebird) இணையதளம் குறிப்பிடுகிறது. அதில் குறிப்பாக வாலிநோக்கம் பகுதியில் 150க்கும் மேற்பட்ட பறவையினங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. (https://ebird.org/region/IN-TN-RA/bird-list) 

வாழிடமும் வலசையும்:
நகரும் எல்லா உயிரினங்களும் இப்பூவுலகில் இரைதேடி அலைகின்றன. ஒரு உயிரினம் ஓரிடத்தில் தங்கி, அங்கயே இரைத் தேடி, தன் அடுத்த தலைமுறையை ஈன்று, உழன்று திரிகிற பகுதியைத்தான் வாழிடம் என்பர். அதில் பறக்கும், நீந்தும் உயிரினங்கள் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளன. பருவ நிலை மாற்றம் காரணமாக பறவைகள் தங்கள் வாழிடத்தை விட்டு வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு இரைத்தேடி இடம் பெயர்கின்றன. அப்பறவைகளை வலசை பறவைகள் என்பர். அவை குறிப்பிட்ட காலத்திற்கு வலசை வரும் பகுதிகளில் தங்கி, இரைதேடி, பின் தங்கள் வாழிட பகுதிகளுக்கு திரும்பும். உலகில் எல்லா பறவைகளும், எல்லா நீர்வாழ் உயிரினமும் வலசை போவதில்லை. 


உதாரணமாக மயில்கள் தங்கள் வாழிடங்களில் இரைகளைத் தேடி கொள்கின்றன அல்லது எல்லா பருவங்களிலும் உணவு கிடைக்கும் வாழிடத்தை, உணவு பழக்கத்தை மயில்கள் பரிணாமத்தில் பெற்று இருக்கின்றன. அவைகளுக்கு நெடுந்தூரம் வலசை போக வேண்டிய தேவை இல்லை. பெரிய பூநாரை என்னும் பறவைகள் ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா போன்ற வாழிட பகுதிகளில் இருந்து இந்தியாவின் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர, பின் இலங்கை போன்ற பகுதிகளுக்கு செப்டம்பர் மாதத்தில் வலசை வரத் துவங்கி மார்ச் மாதம் தங்கள் வாழிட பகுதிகளுக்கு திரும்புகின்றன. அவ்வாறு 5000 கிமீ கடந்து இராமநாதபுரம், இலங்கை கடற்கரை பகுதிகளுக்கு பூநாரைகள் வருகின்றன. இராமநாதபுரம் வருகிற வழியில் இந்தியாவின், தமிழ்நாட்டின் சில பகுதிகளில் இவைகள் இறங்கி இரைதேடி ஒவ்வொரு இடமாக செல்கின்றன. இது போல குறைந்த தூர எல்லைகளில் இருந்தும் தொலைதூர எல்லைகள் இருந்தும் வெவ்வேறு பருவ காலங்களில் பல பறவைகள் குஜராத், ஒரிசா, மேற்கு வங்கம் கர்நாடகா, ஆந்திர, கேரளா, தமிழ்நாடு என இந்தியாவின் பல பகுதிகளுக்கு வலசை வருகின்றன. அவ்வாறு இராமநாதபுரம் மாவட்டதிற்கு நூற்றுக் கணக்கான பறவையினங்கள் ஆண்டுதோறும் வலசை வருகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு வனத்துறை ஏற்பாடு செய்த பறவைகள் கணக்கெடுப்பில் ஒரே நேரத்தில் 7000 எண்ணிக்கையிலான நீர்சார் பறவைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. (https://timesofindia.indiatimes.com/city/madurai/more-than-7000-water-fowls-found/articleshow/97471394.cms)


பட்டியல்படுத்தப்படும் பல்லுயிர்கள்:
வாழிட இழப்பு, வேட்டை உள்ளிட்ட காரணங்களால் அச்சுறுத்தலை சந்திக்கும் பல்லுயிரிய வகைமையின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பல சட்டங்கள் இயற்றப்பட்டன. அவ்வாறு அச்சுறுத்தலை சந்திக்கும் பல்லுயிர்களை முக்கியத்துவம் கருதி பட்டியல் 1, பட்டியல் 2 என இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1956 வகைப்படுத்தப்படுகிறது. உலகளவில் நோக்குகின்ற போது பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கழகம் (IUCN) என்கிற அமைப்பு அழிந்துவிட்ட உயிரினங்கள், அழிந்து வரும் உயிரினங்கள், அருகி வரும் உயிரினங்கள், அச்சுறுத்தலை சந்திக்கும் உயிரினங்கள் ஆகியவற்றை தொகுத்து செம்பட்டியல் என்கிற வகைப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றன. ஆய்வுகளின் அடிப்படையில் தாவரங்கள், பாலூட்டிகள், பறவைகள், ஊர்வனங்கள், இருவாழிகள், பூச்சிகள் உள்ளிட்ட அணைத்து வகை உயிரினங்களையும் இப்பட்டியலுக்குள் கொண்டு வருகிறார்கள். பல்லுயிரிய பாதுகாப்பு நோக்கில் ஒவ்வொரு உயிரினத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள மேற்சொன்ன இவ்விரு பட்டியல்கள் நமக்கு உதவுகின்றன. 


ஒரு புள்ளிவிபரம் (https://myna.stateofindiasbirds.in) இராமநாதபுரம் மாவட்டத்தில் 248 வகை பறவைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது. அதில் 98 வகை பறவையினங்கள் வலசை பறவைகள் என குறிப்பிடுகிறது. இந்திய அரசு காட்டுயிர் சட்டத்தின் வரையறைப்படி பட்டியல் ஒன்றில் 33 வகை பறவைகள் அதில் அடங்கும். இராமநாதபுரம் மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்ட 248 பறவைகளில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு கழகத்தின் செம்பட்டியலில் 15 வகை பறவைகள் உள்ளன. அதில் சாம்பல் உப்புக்கொத்தி (Pluvialis squatarola), நீர்கால் உள்ளான் (Calidris tenuirostris), அகன்ற அலகு உள்ளான் (Calidris falcinellus), வளைமூக்கு உள்ளான் (Calidris ferruginea), ஆற்று ஆலா (Sterna aurantia), முசல் கிண்ணாத்தி (Esacus recurvirostris), பெரிய கோட்டான் (Numenius arquata), பட்டைவால் மூக்கன் (Limosa lapponica), கருவால் மூக்கன் (Limosa limosa), செங்கால் கல்திருப்பி (Arenaria interpres), டன்லின் உள்ளான் (Calidris alpina) என உலக இயற்கை பாதுகாப்பு கழகம் வரையறைப்படி அச்சுறுத்தல் மற்றும் அழிவை சந்திக்கும் 15 வகை பறவைகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. அனுமன் உப்புக்கொத்தி (Charadrius seebohmi) என்னும் பறவை தென்னிந்திய மற்றும் இலங்கை பகுதிகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரினமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. பறவையியலார் இரவீந்திரன் மற்றும் பைஜு இருவரும் கடற்கரை பறவைகள், அதன் வாழிடம், இனப்பெருக்கம் நடைபெறும் இடம் என பல ஆய்வுகளை செய்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்லுயிரிய வகைமையின் சிறப்புகளை வெளிக் கொணர பெரும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அவர்களின் அரும்பணியை நாம் மனதார பாராட்டுகிறோம். வாழ்த்துகிறோம். 

(https://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/8317/9230#:~:text=Hanuman%20Plover%20Charadrius%20seebohmi%20is,2023).



பாலூட்டி வகை விலங்குகள்:
இராமநாதபுரம் மாவட்டத்தில் புள்ளிமான், காட்டு பன்றி, நெடுநரி, குறுநரி, வெருகு உள்ளிட்ட பாலூட்டி வகை காட்டுயிர்கள் வாழுகின்றன. பார்திபனூர், பரமக்குடி, நயினார் கோயில், சாயல்குடி, நரிப்பையூர், முதுகளத்தூர் கிடாத்திருக்கை, கமுதி, திருவாடானை ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் காணப்படுகின்றன. வைகை, குண்டாறு, பாம்பாறு உள்ளிட்ட ஆறுகளில், கண்மாய்களில் காணப்படும் கருவேல முட்புதர்கள் புள்ளிமான்கள் வாழ்வதற்கு மறைவான பகுதியாக உள்ளது. இப்பகுதியில் புள்ளிமான்கள் விபத்து அல்லது நாய்க்கடி காரணமாக மான்கள் இறந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவாடானை சூச்சனி, மணிகண்டி பகுதியில் நெடு நரிகள் இருக்கலாம் என தெரிகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு 3 ஆடுகள் நரிகள் கடித்ததில் பலியான செய்தி நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. நரிப்பையூர், நரிக்குடி உள்ளிட்ட ஊர் பெயர்கள் நரிகளின் நடமாட்டம் இருந்த பகுதி என்பதை நமக்கு தெரிவிக்கிறது. முதுகளத்தூர், பசும்பொன், கமுதி போன்ற பகுதியில் நரிகள் இருக்கலாம். வெகுவாக காணப்பட்ட  இராமநாதபுரம் பகுதியில் நரிகள் அருகி வருகின்றன.  இராமநாதபுரம் பயிர்கள் விளையும் நஞ்சை மற்றும் புஞ்சை பகுதிகளில் காட்டுப்பன்றிகள் இருக்கின்றன. இதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அதனால் பயிர்களுக்கு சேதம் செய்வதாகவும் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு இணைப்புக் கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி தெரிவித்தார். வெருகு, சாம்பல் நிற கீரி, மூவரியணில், முள்ளெலி போன்ற நில வாழ் பாலூட்டி விலங்குகள் பரவலாக காணப்படுகிறது. 

கடல்சார் பாலூட்டி விலங்குகளான அவுளியா, ஓங்கில், திமிங்கலம் பாக் விரிகுடாவில், மன்னர் வளைகுடா கடலில் காணப்படுகிறது.  

இத்தனை செழிப்பான பல்லுயிரிய வகைமை, பல்லுயிரிய பெருக்கம் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைய காரணமான இயற்கை தளங்கள், சூழலியல் முக்கியத்துவம் பற்றி புரிந்து கொண்டால்தான் இராமநாதபுரம் மாவட்ட பல்லுயிரிகளை பாதுகாக்க முடியும். இத்தனை பல்லுயிரிகள் வாழ தகுந்த நிலப்பரப்புதான் பல்லாயிரமாண்டுகளாக பன்மைத்துவமான பண்பாட்டைக் கொண்ட மனித சமூகத்தின் வாழிடமாகவும் இராமநாதபுரம் விளங்குகிறது.  அதற்கு காரணமான கடல் & கடற்கரையோர நிலவியல், நீரியல் அமைப்புகளை, அதன் உள்ளார்ந்த வேறுபாடுகளை அறிந்து கொள்வோம். 


ஆழி / பெருங்கடல் (Ocean): 
இந்த பூமியும், அதில் உள்ள கண்டத்திட்டுகளும் ஒரே கடல்நீரால் தான் சூழப்பட்டுள்ளது. எனினும் நிலவியல் எல்லைகள், காலநிலை, உவர்நீரின் தன்மை, ஆழம் ஆகிய வேறுபாடுகளை கணக்கில் கொண்டு ஐந்து பெருங்கடல்கள் உலகின் பரப்பில் பிரிக்கப்பட்டுள்ளது. பசிபிக், அட்லாண்டிக், தெற்கு, ஆர்க்டிக் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகியவை உலகில் காணப்படும் ஐந்து பெருங்கடல்களாகும். அந்த வகையில் பெருங்கடல் (Ocean) அல்லது ஆழி என்பது பூமிப்பந்தின் பெரும்பகுதியை சூழ்ந்திருக்கும் பரந்த, தொடர்ச்சியான உவர்நீரைக் கொண்ட நீர்பரப்பாகும். பெருங்கடல்கள் பூமியின் மேற்பரப்பில் 70% க்கும் அதிகமான பரப்பளவை சூழ்ந்துள்ளன. ஒப்பீட்டளவில் பெருங்கடல் (Ocean) என்பது கடலை (Sea) விட பரப்பில் பெரிது. கடலை விட பெருங்கடல் ஆழமானவை.

கடல் (Sea):
கடல் (Sea) பொதுவாக பெருங்கடலின் விளிம்புகளில் காணப்படுகின்றன. கடல் (Sea) பெரும்பாலும் கடற்கரைகள், தீபகற்பங்கள் (Peninsula) அல்லது தீவுகள் (Island) போன்ற நிலப்பகுதிகளால் முழுமையாக அல்லது சிறுப்பகுதியை சூழப்பட்டிருக்கும் நீர்நிலையாகும். ஏறக்குறைய அனைத்து கடல்களும் நிலத்தின் விளிம்புகளில்தான் காணப்படுகின்றன. பெருங்கடல் (Ocean) ஆழம் கொண்டவை. எனவே சூரிய ஒளி ஊடுருவும் ஆழம் கொண்ட கடலில்தான் அதிகமாக பல்லுயிரிய வகைமை காணப்படுகின்றன. உலகில் 50க்கும் மேற்பட்ட கடல் உள்ளது (Source: National Oceanic and Atmospheric Administration). 

கடலைப் போன்றே இருக்கும் பெரிய உவர்நீர் பரப்பை ஏன் விரிகுடா, வளைகுடா, இடுக்கேரி என்று அழைக்கிறோம்? வளைகுடா (Gulf), விரிகுடா (Bay), குடைவெளி (Bight), இடுக்கேரி (Fjord), நீரிணை (Strait), கடற்கால்வாய் (Channel) ஆகியவை கண்டத்திட்டுகள் அல்லது நிலத்தின் விளிம்புகளில் காணப்படும் கடல்சார் நிலவியல் அமைப்புகளாகும்.




வளைகுடா (Gulf) - விரிகுடா (Bay):
நிலத்தின் விளிம்பில் காணப்படும் பிளவுகள், வளைவுகள் மற்றும் இடுக்குகள் எங்கும் விரவிக்கிடக்கிற கடல்நீர் பரப்பு தான் வளைகுடாவும் (Gulf) விரிகுடாவும் (Bay). இதன் முப்புறமும் நிலத்தின் எல்லைகள் சூழ்ந்திருக்கும். நிலத்தின் அகன்ற மற்றும் குறுகலான வடிவத் தோற்றம், கடல்நீர் உட்புகும் வாய்ப்பகுதி, அதன் ஆழம், பரப்பு போன்றவை கொண்டே வளைகுடா, விரிகுடா என வகைப்படுத்தப்படுகிறது.     வளைகுடா மற்றும் விரிகுடா போன்ற கடல்நீர் உட்புகும் நிலப்பிளவுகள் பெரும்பாலும் கண்டத்திட்டுகள் இயக்கவியல் நிகழ்வுகளினால் (tectonic activity) உருவாகின்றன. விரிகுடா மற்றும் வளைகுடா ஆகியவை கடலை போன்றே நிலத்தின் கடற்கரை விளிம்புகளில் காணப்படும் உவர்நீர் பரப்புகளாகும். இவைகள் கடல் மற்றும் பெருங்கடல்களின் ஒரு பகுதியாகும். 


வளைகுடா (Gulf):
வளைகுடா (Gulf) பொதுவாக குறுகிய வாயிலைக் கொண்டிருக்கும். இதன் வடிவம் குறுகலாக அல்லது ஒரு சீரற்ற கால்வாய் போன்று இருக்கலாம். மன்னார் வளைகுடா, கட்ச் வளைகுடா இந்தியாவில் காணப்படும் வளைகுடாக்கள் ஆகும்.



விரிகுடா (Bay):
விரிகுடாக்கள் (Bay) பொதுவாக அரைக்கோளம் அல்லது சுற்றுகோளம் போன்ற வடிவத்தில் காணப்படலாம். விரிகுடா (Bay) என்பது கடல் நிலத்தில் அகலமாக, திறந்தவாறு உள்ள ஒரு குடைவெளியான பகுதி ஆகும். விரிகுடா பொதுவாக அகலமான வாயிலைக் கொண்டிருக்கும். வளைகுடாவை விட விரிகுடா பெரிய மற்றும் ஆழமான  நீர்நிலையாகும். வங்காள விரிகுடா, பாக் விரிகுடா இந்தியாவில் காணப்படும் விரிகுடாக்கள் ஆகும்.  


முனையம் (Cape):
நிலத்தின் ஊடே நுழைந்துவிட்ட கடலை வளைகுடா, விரிகுடா என அழைப்பது போல, கடலின் ஊடே நுழைந்துவிட்ட கூர்மையான நிலத்தை முனையம் என்பர். கடல், பெருங்கடல், ஏரி அல்லது நதியில் நீளமாக நீண்டு செல்லும் குறுகிய நிலப்பகுதி முனையம் ஆகும். கடற்கரையிலிருந்து கடலுக்குள் ஊடுருவி துருத்தி நிற்கிற நிலத்தின் கூரிய முனையாகும். உதாரணமாக இந்தியவின் குமரி முனையம், தென்னாபிரிக்காவின் கோப் முனையம் அறியப்பட்ட பகுதிகளாகும். 

நீரிணை (Strait): 
இருவேறு கடல்நீர் அமைப்புகளை இணைக்கும் ஒடுக்கமான, இடுக்கான கடற்பகுதி நீரிணை (Strait) எனப்படுகிறது. இரண்டு நிலப்பகுதிகளின் இடுக்கில் நீரிணைகள் அமைந்திருக்கும். கடல்வழி போக்குவரத்திற்கு வழித்தடங்களாக நீரிணைகள் அமைகின்றன. வங்காள விரிகுடாவையும் மன்னார் வளைகுடாவையும் இரண்டிற்கும் இடையேயுள்ள பாக் விரிகுடாவையும் இணைக்கும் நீரியல் அமைப்பாக பாக் நீரிணை இருக்கிறது.   



கடற்கால்வாய் & கடல்வழி (Channel, Canal & Passage): 
கடல்பகுதியில் உள்ள தீவுகள் அல்லது திட்டுகளுக்கு இடையே காணப்படும் அகலமான கடல்நீர் பகுதியை கடற்கால்வாய் (Channel) என்பர். கடற்கால்வாய்கள் நீரிணைகளை விட அகலமானவை. கடற்கால்வாய்கள் இருவேறு கடல் நீர்நிலைகளை இணைக்கும் அமைப்பாகவும் இருக்கலாம் அல்லது ஒரே கடல் நீர்நிலைகளில் காணப்படும் இரு தீவுகளுக்கு இடையிலும் அமைந்திருக்கலாம். கப்பல் போக்குவரத்துக்கான வழித்தடமாக கடற்கால்வாய்கள் விளங்குகின்றன. பத்துபாகை கடற்கால்வாய்தான் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை பிரிக்கிறது. கடற்கால்வாய்கள் இயற்கையானவை. எனினும் கப்பல் போக்குவரத்திற்க்காக கடல்பகுதியில் மனித சமூகத்தால் உருவாக்கப்பட்ட கால்வாய்களும் இருக்கின்றன. கரீபிய கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் இரண்டையும் இணைக்கும் கடல் வழித்தடமான பனாமா கால்வாய் (Panama Canal) திட்டம் 1904 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது. நீரிணை, கடற்கால்வாய்களில் உள்ள கப்பல் போக்குவரத்து தடங்களை கடல்வழி (Passage) என்பர்.            


  
கடலடி படுகை (Shoals):
கடலடி படுகை என்பது ஒரு இயற்கையான, நீரில் மூழ்கிய திட்டு அல்லது பிற உறையாத பொருட்களால் உருவான குன்று, பள்ளம் அல்லது தடுப்பு (ridge, bank, or bar) ஆகும். இது நீரின் அடிப்பகுதியிலிருந்து மேலே உயர்ந்து, நீர்மேற்பரப்பில் காணப்படும். கப்பல் போக்குவரத்திற்கு தடையாக அல்லது சிக்கலாக கடலடி திட்டுகள் பார்க்கப்படுகின்றன. இந்தியா இலங்கை இடையே இணைப்பு பாலம் போல அமைந்திருக்கும் இராமர் பாலம் அல்லது ஆதாம் பாலம் ஒரு கடலடி திட்டாகும். சுன்னாம்பு படிமங்களால் (Limestone Shoals) இராமர் பாலம் காணப்படுகிறது.  இராமர் பாலத்திற்கு வடக்கேயுள்ள கடல்நீர் பாக் விரிகுடா எனவும், தெற்கேயுள்ள கடல்நீர் பரப்பு மன்னர் வளைகுடா எனவும் அழைக்கப்படுகிறது. வங்காள விரிகுடா கடலை பாக் விரிகுடா வழியாக மன்னார் வளைகுடா கடலோடு இணைக்கும் நீரியல் அமைப்பை பாக் நீரிணை என அழைக்கின்றனர்.



குடைவெளி (Bight):
குடைவெளிகள் (Bight) விரிகுடாவை (Bay) போன்ற தோற்றம் கொண்டவை. ஆனால் குடைவெளி என்பது கடற்கரையில் காணப்படும் மென்மையான, அகலமான வளைவு மட்டுமே ஆகும். குடைவேளியோர கடல் வளைகுடாவை விட ஆழம் குறைவான பகுதியாக காணப்படலாம். ஆஸ்திரேலியா பெருங்குடைவெளி உலகின் மிகப்பெரிய குடைவெளியாகும். 



இடுக்கேரி (Fjord): 
கடல் நீரானது உட்புகுந்து இரு மருங்கும் மலைகளாலான நிலப்பகுதியால் சூழப்பட்ட நீர்நிலையை இடுக்கேரி (Fjord) என்கின்றனர். கடலோர பனிமலைகளில் நிகழும் பனி உருகுதல், பனிச்சரிவு, அரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இடுக்கேரி அல்லது மலையிடைக் கடல் உருவாகிறது. இந்தியாவில் இடுக்கேரி அமைப்புகள் காணப்படவில்லை.   மேற்கு கிரீன்லாந்து பகுதியில் அமைந்துள்ள இல்லுலிஸ்ஸாட் (Ilulissat Icefjord) இடுக்கேரி பரவலாக அறியப்பட்ட இடுக்கேரி அமைப்பாகும். 



கழிமுகங்கள், சதுப்புநிலங்கள், புல்வெளிகள், உப்பங்கழிகள், உள்நாட்டு ஏரிகள், பொழிமுகங்கள் ஆகியவை கடற்கரையில் இருந்து நிலத்தின் உட்பகுதியில் காணப்படும் சூழலியல் அமைப்புகளாகும். 

ஆற்று கழிமுகங்கள் (River Delta): 
ஆற்று கழிமுகம் என்பது ஒரு ஆறு கடலுடன் அல்லது காயலுடன் கூடுமிடத்தில் இடத்தில் உருவாகும் வளமான வண்டல்மண் சேர்மான பரப்பை குறிக்கும். ஆற்று கழிமுகங்கள் பெரும்பாலும் முக்கோண வடிவ நிலப்பகுதியாக இருக்கிறது. கடல் சேருமிடத்தில் ஒரு ஆறு பல ஆறுகளாக கிளைத்து (distributaries) கடலை சேர்கின்றன. கிளையாறுகளுக்கு அகமும் புறமும் ஆற்று கழிமுகங்கள் உருவாகின்றன. ஆறு கொண்டு வரும் கனிமங்கள், தாதுக்கள், வண்டல்கள், ஊட்டச்சத்துக்கள் கழிமுகங்களில் படிவதால், இது பயிர் வளர்ச்சிக்கு மிகவும் உகந்த பகுதியாக இருக்கிறது. நெல்வயல்களின் தொகுதியாக கழிமுகங்கள் விளங்குகின்றன. சதுப்புநிலங்கள், உப்பங்கழிகள், காயல்கள் கழிமுகங்களில் உருவாக்குகின்றன. தஞ்சவூர், திருவாரூர், நாகபட்டினம், மயிலாடுதுறை ஆகியவை காவிரி ஆற்றின் கழிமுக பகுதிகளாகும். பரமக்குடி, இராமநாதபுரம் வைகையின் டெல்டா பகுதிகள் என கருதலாம்.

ஆற்றுக்குடா (அ) பொழி (Estuaries): 
ஆறும் கடலும் சந்திக்கும் இடத்தை பொழி அல்லது ஆற்றுக்குடா என அழைக்கலாம். குமரி மாவட்டத்தில் ஆறும் கடலும் சேருமிடத்தை பொழி என்று அழைக்கின்றனர். கடலுக்கும் நிலத்துக்கும் இடைப்பட்ட பிளவை விரிகுடா, வளைகுடா என அழைப்பது போல ஆறு ஏற்படுத்தும் நிலப்பிளவை ஆற்றுக்குடா என அழைக்கலாம். ஆற்றின் நன்னீரும் கடலின் (முந்நீர்) உவர் நீரும் கலந்து ஒரு தனித்துவமான சூழலை உருவாக்குகின்றன. இவை வளமான உயிரியல் சூழல் (ecosystem) தொகுதியாகவும், பலவகை உயிரினங்களுக்கு வாழ்விடமும் அளிக்கிறது. மீன், இறால் பெருக்கம் நிறைந்த பகுதியாக இருப்பதால் மீன்பிடி  தொழிலுக்கு ஆதாரமாக ஆற்றுக்குடா பொழிகள் விளங்குகின்றன. கடலிலிருந்து உள்நாட்டு பகுதிகளுக்கு கப்பலை செலுத்த ஆற்றுக்குடா பகுதிகள் உதவுகின்றன. பூம்புகார், முசிறி, தொண்டி, கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட பண்டைய துறைமுகங்களை ஆற்றுக்குடா பகுதியில் அமைத்தனர்.  


கடற்கரை சதுப்புநிலம் (Coastal Vegetative Wetlands):   
கடற்கரையோரத்தில் ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் இருக்ககூடிய நிலங்களை சதுப்புநிலம் (Coastal Wetlands) என்பர். சேறும் நீரும் சூழ்ந்த பகுதியே கடற்கரை சதுப்புநிலம் ஆகும். ஈரநில புல்வெளிகளும் (Marshes), ஈரநிலக் காடுகளும் (Swamps)  கடற்கரை சதுப்புநிலத்தின் உயிர்ச்சூழல் பகுதிகளாகும். புற்கள், சிறு தாவரங்கள் என தோற்றத்தில்  புல்வெளிகளாக காணப்படும் சேற்றுபகுதியே ஈரநில புல்வெளிகளாகும். சேறும் நீரும் நிறைந்த கடலோர பகுதியில் காணப்படும் புதர் செடிகள், மரங்கள் அடர்ந்த பகுதியே ஈரநில காடுகளாகும். அலையாத்திக்காடுகள் (Mangrove Forest & scrubs) ஈரநில காடுகளின் ஒரு அங்கமாகும். கடற்கரை சதுப்பு நிலங்கள் புயல் அல்லது காலநிலை பேரிடர்களான ஆழிப்பேரலைகளில் இருந்தும், பெருவெள்ளத்தில் இருந்தும் உள்நாட்டு பகுதிகளை பாதுகாக்க உதவுகின்றன. பள்ளிக்கரணை சதுப்புநிலம் தமிழ்நாட்டில் அறியப்பட்ட ஈரநில புல்வெளியாகும். பிச்சாவரம், முத்துப்பேட்டை, காரங்காடு ஆகியவை தமிழ்நாட்டில் அறியப்பட்ட ஈரநில காடுகளாகும். வேம்பாறு - கன்னிராஜபுரம், மூக்கையூர், வாலிநோக்கம், காஞ்சிரங்குடி சேதுக்கரை, களிமண்குண்டு, பெரியப்பட்டினம், நொச்சியூரணி, மண்டபம், ஆற்றாங்கரை, முத்துரெகுநாதபுரம், திருப்பாலைக்குடி, காரங்காடு, தொண்டி, சுந்தரபாண்டியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரநில புல்வெளிகளும், ஈரநில காடுகளும் காணப்படுகிறது. மூக்கையூர், காரங்காடு, சுந்தரபாண்டியபட்டணம் ஆகிய பகுதிகளில் அலையாத்திக்காடு இருக்கின்றன.


காயல் (Lagoon): 
கடற்கரையோரத்தில் நிலத்தின் உட்பகுதியில் காயல்கள் (Lagoons) காணப்படுகின்றன. இவை மிகுந்த உப்புத்தன்மை கொண்டதாக இருக்கும். இவை ஆழம் குறைவான நீர்நிலையாகும். மணற்திட்டு, மணல்மேடு, மணல்படுகை, பவளத் திட்டு உள்ளிட்ட தடுப்புகளால்  கடலிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு நீர்நிலையாகும். பழவேற்காடு ஏரி தமிழகத்தில் அறியப்பட்ட காயல் ஆகும்.  அரியமான் கடற்கரையில் இருந்து கிழக்கில் இதுபோன்ற காயல்கள் அமைந்துள்ளன. வாலிநோக்கம் பிராமணன்குளம், களிமண்குண்டு, பெரியப்பட்டினம் ஆகிய பகுதிகளில்  காயல்கள் காணப்படுகின்றன.

உள்நாட்டு ஏரிகள் (Inland Lakes):
வேளாண்மையை பெருக்கவும் விரிவுபடுத்தவும் 1000 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு நீர்நிலைகளை பாண்டிய மன்னர்கள் இராமநாதபுரம் பகுதியில் கட்டினார்கள். ஏரி, கண்மாய, ஏந்தல், தாங்கல், குளம் என்கிற பெயரில் பல நீர்நிலைகளை அமைத்தனர். இராஜசிங்கமங்கலம் கண்மாய் கிபி 10 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. அது பற்றி தொல்லியல், வரலாறு பகுதியில் பார்க்கலாம். சக்கரக்கோட்டை, காஞ்சிரங்குடி போன்ற உருவாக்கப்பட்ட ஏரிகள் இன்று பல்லாயிரம் பறவைகளின் வாழிடமாகவும் பாசனத்திற்கு ஆதாரமான  நீர்நிலையாகவும் விளங்குகிறது. இராமநாதபுரத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் காஞ்சிரங்குளம் இந்திய அரசால் பறவைகள் காப்பகம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.    

கடற்கரை புல்வெளிகள் (Coastal Grasslands): 
சதுப்புநிலத்தில் காணப்படும் புல்வெளிகள் ஈரமான சேற்றுப்பகுதிகளில் மட்டுமே வளரும் தன்மை கொண்டவை. எனவே சதுப்புநிலம் புல்வெளிகள் வகைப்பாட்டிற்குள் வைக்கப்படாமல் ஈரநிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெப்பமண்டல கடற்கரையோர பகுதிகளில் வறல் புல்வெளிகள் காணப்படுகின்றன. இவை குறிஞ்சி, முல்லை, மருதம் நிலங்களில் காணப்படும் புல்வெளிகளில் இருந்து சற்று வேறுபட்டவை. நெய்தல் வறண்ட நிலத்தில் காணப்படும் இந்த புல்வெளிகளை தருவை, தரவை என அழைக்கின்றனர். நெய்தல் நில மக்களின் மேய்ச்சலுக்கு இப்புல்வெளிகளே ஆதாரமாக விளங்குகின்றன.   மரைமான் என்று அழைக்கப்படும் திருகு கொம்பு மான்களுக்கு (black Buck) இப்புல்வெளிகள் வாழ்விடம் அளிக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் காணப்படும் வாலாந்தரவை, தரவைத்தோப்பு போன்ற ஊர் பெயர்கள் கடற்கரை புல்வெளிகள் நிறைந்த பகுதி என்பதை எடுத்து சொகின்றன.  


தேரிக்காடு (Red Sand Desert):
தேரி என்ற சொல் மணற்குன்றுகளையும் மண்மேடுகளையும் குறிக்கிறது. கல்வெட்டுக்களில் தெற்றி எனுஞ்சொல்லை மேட்டுநிலத்தைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் வறண்ட பகுதிகளால் செம்மண் மேடுகளாக குன்றகளாக தேரிக்காடுகள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் காணப்படும் கரிசல் மண் கருநிற இருந்தாலும் நீரைத் தக்கவைப்பதால் ஓரளவேனும் பயிர்செய்ய முடிகிறது. ஆனால் தேரிக்காடு என்பது நீரை ஈர்த்து வைக்காத செம்மண் மேடுகளைக் கொண்டதாக உள்ளது. வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய பனை, உடை, கருவேலம், ஆவாரம், கொழிஞ்சி போன்றவையே தேரிக்காட்டில் மிகுதியாய் வளர்கின்றன.



இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி வட்டம் செவல், தரைக்குடி, வெட்டுக்காடு, வெள்ளப்பட்டி, நரிப்பையூர், உரல்கிணறு, பூப்பாண்டியபுரம், இலந்தைகுளம், கடுகு சந்தை, குதிரைமொழி, செல்வனூர், மேலக்கிடாரம் வரை செவக்காடு என்று அழைக்கப்படும் செம்மண் தேரிக்காடு விரவிக்கிடக்கிறது.    


மணற்குன்று (Coastal Sand Dunes):

கடற்கரையோரம் காணப்படும் மணலாலான மேடு அல்லது குன்றுகளையே மணல்மேடு / மணற்குன்று என்பர். இவை காற்றின் இயக்கத்தால் உருவாக்கப்படும் மணலாலான மலை அல்லது குன்றுகளாகும். இதனை சங்க நூல்கள் எக்கர் என குறிப்பிடுகின்றன. மணல்மேடுகள் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான வகையான மணல்மேடுகள் சிறு குன்று போல குவிந்து கிடக்கும் வடிவத்தில் காணப்படுகின்றன. மணல் குன்றுகள் இயற்கை அரண் போன்று செயல்பட்டு, புயல் அலைகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து கடற்கரைகளை பாதுகாக்கின்றன. இவை கடற்கரை தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு முக்கியமான வாழிடங்களாகவும் விளங்குகின்றன. காற்றின் இயக்கம், மணலின் இருப்பு, தரைமட்ட த் தாவரங்களின் அடர்த்தி இவைதான் மணல்குன்றுகளின் தோற்றம், இருப்பு மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றை தீர்மானிக்கின்றன. காற்றின் போக்கு மற்றும் அலைகளின் தாக்கம் காரணமாக மணற்குன்றுகள் தொடர்ச்சியாக இடமாற்றமும் வடிவமாற்றமும் அடையும். இராமநாதபுரம் கடற்கரை முழுதும் மணற்குன்றுகளை பார்க்க முடியும். 

அடும்பும் எக்கரும்:

அடும்பு - தரையோடு தரையாகப் படர்ந்து  வளரும் கொடி வகை. இளஞ்சிவப்பு நிறத்தில் பூக்கும். இக்கொடி வகையைக் கடற்கரை மணலில் படர்ந்திருப்பதைப் பலரும் கண்டிருக்கக்கூடும். இது நெய்தல் நிலத்தாவரம் என்பதை சில சங்க இலக்கியக் குறிப்புகள் உறுதி செய்கின்றன.

"அடும்பு இவர் அணி எக்கர்" (கலித்தொகை - 132)

"அடும்பமர் எக்கர் அம்சிறை உளரும்”  (அகநானூறு - 320)

"குன்றோங்கு வெண்மணல் கொடியடும்பு" (நற்றிணை - 254) 

மேற்சொன்ன சங்கப்பாடல் குறிப்புகள் இது நெய்தல் நிலக் கொடி என்பதை உறுதி செய்கிறது. 

 "மானடியன்ன கவட்டிலை அடும்பு"  (குறுந்தொகை - 243) 

மேற்சொன்ன சங்கப்பாடல் மூலம் அடும்பின் இலை இரண்டாக பிளவுற்றிருக்கும் என்பதை அறிய முடிகின்றது.

எக்கர் - என்னும் சொல்லுக்கு மணற்மேடு என்று பொருள். சங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் எக்கர் என்னும் சொல் பரவிக் கிடக்கின்றது.  சங்க இலக்கியத்தில் தோரயமாக 7000 சொற்கள் இடம் பெற்றுள்ளது. குறைந்தது நான்கைந்து முறையாவது இந்த 7000 சொற்களையும் கடந்து வந்திருப்பேன். சங்க இலக்கியத்தில் எனக்கு விருப்பமான சொற்களில் ஒரு பத்து சொற்களைச் சொல்லச் சொன்னால் அவசியம் அப்பட்டியலில் "எக்கர்" என்னும் சொல்லும் இடம்பெற்றிருக்கும். காரணம் என்ன என்றெல்லாம் சொல்லத் தெரியவில்லை. 

அடும்பும் எக்கரும் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரை திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் எழுதியது. இத்தலைப்பில் உள்ள படங்கள் வைகையாறு கடல் சேரும் பகுதியில் அவரால் எடுக்கப்பட்டவை. 

ஆறுகளும் கடலும் கூடுமிடங்கள்: 

இராமநாதபுரம் மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை எல்லைகளாக வேம்பாறும் பாம்பாறும் திகழுகின்றன. வேம்பாறு வேம்பார் என்னுமிடத்தில் கடலில் கலக்கிறது. குண்டாறு சாயல்குடி மூக்கையூர் அருகே கடலில் கலக்கிறது. வைகையாறு அழகன்குளம் அருகே கடலில் கலக்கிறது. கோட்டைக்கரையாறு காரங்காடு அருகே கடலில் கலக்கிறது. பாம்பாறு சுந்தரபாண்டியன்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது. இவைத் தவிர்த்து இன்னும் சில ஆறுகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடலில் கலக்கின்றன.

வைகையாறு - கடல் சேருமிடம்: 

தேனி மாவட்டம், மேகமலை வருசநாடு மலைப்பகுதிகளில் தோன்றும் வைகையாறு, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் வழியாக சுமார் 295 கிமீ நீளம் ஓடி இறுதியாக ஆற்றாங்கரை என்னும் பகுதியில் பாக் விரிகுடா (Palk Bay) கடலில் கலக்கிறது. சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், காப்பியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் என தமிழின் அனைத்து வகை இலக்கியங்களிலும் பாடப்பட்ட ஒரு ஆறாக வைகை விளங்குகிறது. பாற்கடல் சிவபெருமானுக்கு நஞ்சளித்தது. சிவபெருமானுக்கு நஞ்சளித்த கடலோடு வைகை சேருவதில்லை என்று 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் புகழேந்தி பாடுகிறார். 

நாரியிட பாகருக்கு நஞ்சளித்த பாவியென்று   
வாரியிடம் புகுதா வைகையே – மாறி
இடத்தும் புறத்தும் இருகரையும் பாய்ந்து
நடத்தும் தமிழ்ப் பாண்டிய நாடு. 

இப்பாடலில் சிவனுக்கு நஞ்சளித்த காரணத்தால் வையை கடல் புகவில்லை என்று புராண காரணத்தை சொல்லும் புகழேந்தி புலவர், அடுத்த வரியில் தமிழ் பாண்டிய நாட்டில் வைகையின் இருகரைகளில் இடத்தும் புறத்துமுள்ள நீர்நிலைகளை நிறைத்து பாய்ந்தோடும் வைகை என்று குறிப்பிடுகிறார். மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய பெரிய பாசன ஏரிகளை நிரப்புவதால் வைகை ஆற்று நீர் முழுவதும் பாசனத்திற்க்கே பயன்படும் வண்ணம் பாண்டிய மன்னர்கள் ஏரி, கண்மாய், குளங்களை வெட்டினர். பரப்பளவில் தமிழ்நாட்டின் பெரிய கண்மாய்களாக  இராமநாதபுரம் பெரிய கண்மாய், ராஜசிங்கமங்களம் கண்மாய் போன்ற பெரிய கண்மாய்களை வைகையாறு நிரப்புகிறது. பாண்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் இருந்தே வைகையாற்றின் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தி வந்தனர் என்பதை அவர்களின் கல்வெட்டில் செய்திகள் வழியே அறிந்து கொள்கிறோம். 

பொழிமுக மீன்கள்:

ஆற்றாங்கரை கிராமம் வைகையும் கடலும் சேருமிடமான பொழியில் 88 வகை மீன்கள், இறால்கள், திருக்கை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களை கடந்த 2024 ஆம் ஆண்டில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை வைகையின் பொழியில் ஆவணம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. (https://mncfteamwork.blogspot.com/2024/11/blog-post_11.html)







இராமநாதபுரம் மாவட்ட கிழக்கு கடற்கரையின் தொல்லியல்

தொல்லியல் ஆய்வாளர் திரு இராஜகுரு அவர்களுக்கு நன்றி:

இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டம் வைகையாறும் வங்ககடலும் ஒன்றும் சேரும் ஆற்றாங்கரை ஊராட்சி துவங்கி கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருவாடானை வட்டம் பாம்பாறு பாக் விரிகுடா கடலில் கலக்கும் சுந்தரபாண்டியபட்டணம் வரை இந்த பயணம் அமைந்தது. ஆற்றாங்கரை, அழகன்குளம், உப்பூர், காரங்காடு, தொண்டி, இடையன்வலசை ஆகிய பகுதிகளிலுக்கு சென்றோம். இக்கட்டுரையில் ஆற்றாங்கரை முதல் இராமநாதபுரம் மாவட்டம் எல்லையான சுந்தரபாண்டியபட்டனம் வரை உள்ள ஊர்களின் சிறப்புகளை காணலாம். இக்கட்டுரையில் வரும் தொல்லியல் தரவுகள் பல தொல்லியல் ஆய்வாளர் திரு. இராஜகுரு அவர்கள் எழுதி, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் தொகுப்பட்டுள்ள கட்டுரைகளில் (https://www.tholliyal.com) இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. கள ஆய்வுகள் வழியாக இராமநாதபுரம் மாவட்டத்தின் தொல்லியல் சிறப்புகளை பதிவு செய்து வரும் திரு.இராஜகுரு அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம். 


கிழக்கு கடற்க்கரை பாண்டியன் நாட்டின் ஓர் எல்லை:

பாண்டியர்கள், சோழர்கள், சுல்தான்கள், நாயக்கர்கள், சேதுபதி மன்னர்கள், போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரின் ஆட்சி பரப்பாக வரலாற்றில் இராமநாதபுரம் மாவட்ட கிழக்கு கடற்கரை இருந்திருக்கிறது. வெள்ளாற்றின் கீழேயுள்ள கிழக்கு கடற்கரை பாண்டிய நாட்டின் எல்லையாக இருந்ததை பெருங்கதை பாடல் கூறுவதாக வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு நூல் கூறுகிறது. 

வெள்ளாறது வடக்கா மேற்குப் பெருவழியாம்
தெள்ளார் புனர்கன்னி தெற்காகும் - உள்ளார்
ஆண்டகடல் கிழக்கா யைம்பத்தாறு காதம்
பாண்டிநாட் டெல்லை பகர்
(பெருங்கதை 2098)

பாண்டி நாட்டின் வட எல்லை வெள்ளாறு. தெள்ளாறு எனப்படும் தெள்ளாற்றின் பெரும் வழியே மேற்கு எல்லையாகும். புனர் கன்னி யென்பது குமரிமுனை ஆகும். பாண்டி நாட்டின் கிழக்கு எல்லையாக 56 காத தூரத்தில் அமைந்துள்ள கடல் (கடற்கரை) என குறிக்கப்படுகிறது. (108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு பக் 456)

அழகன்குளம் சங்ககால துறைமுக நகரம்

 இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வட்டம், வைகையாறு வங்கக்கடலில் சேரும் கழிமுக பகுதியில் அமைந்துள்ளது அழகன்குளம் ஊராட்சி. இங்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மூலம் 1986 முதல் 2017 வரை 8 கட்டங்களாக நடத்தப்பட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு  செய்யப்பட்ட அகழாய்வு மூலம் இவ்வூர் கி.மு. 4ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.12ஆம் நூற்றாண்டு வரை மிகச் சிறப்புடன் விளங்கியுள்ளது என்பதை அறிய முடிகிறது.  

இங்கு கிடைத்த மணி செய்யும் கற்கள், பாசிகள், தக்களி, சிப்பி, சங்கு  வளையல்கள், அரிட்டைன், ஆம்போரா, ரௌலட்டட் ஆகிய ரோமானிய நாட்டு ஓடுகள், கருப்பு சிவப்பு நிற ஓடுகள், மௌரியப் பானை ஓடுகள், குறியீடுகள், தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் முதலியன இவ்வூரின் பழமையைச் சொல்கிறது. ரோமானிய ஓடுகளும், ரோமானிய மன்னர்களின் காசுகளும் அகழாய்வில் கிடைத்துள்ளதால் இங்கு ரோமானியக் குடியிருப்பு இருந்திருக்கிறது என்பதையும், இங்குள்ள மக்களோடு அவர்கள் வாணிக உறவு கொண்டிருந்தார்கள் என்பதையும்  அறிய முடிகிறது.

 இங்கு கப்பல் உருவம் வரையப்பட்ட பானை ஓடு ஒன்றும், அச்சில் பதிக்கப் பெறுவதற்காகக் குடையப்பெற்ற காளை உருவத்தோடு கூடிய பானை ஓடு ஒன்றும், யானை ஓன்று செடியைத் தும்பிக்கையால் வளைத்து உண்ண முயல்வது போன்ற உருவம் பொறிக்கப்பட்ட பானை ஓடு ஒன்றும் கிடைத்துள்ளன.

 அழகன்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பானை ஓட்டில்சமுதஹஎனும் சொல் உள்ளது. இலங்கை குகைக் கல்வெட்டுகளிலும் இச்சொல் காணப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் பழங்காலம் முதல் தொடர்பு இருந்துள்ளதை அறியலாம்.

சேதுபதி கால சத்திரம் ஒன்று ஆற்றாங்கரை கிராமத்தில் சிதிலமடைந்து காணப்படுகிறது. 

 கிரேக்க கலைப்பாணியை ஒத்துள்ள, ஒரு பெண் தன் குழந்தையை இடுப்பில் தாங்கி உள்ளதைப்போன்று சுடுமண் பொம்மை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றொரு பானை ஓட்டில் மூன்று பெண்கள், விசிறியை தம் கைகளில் கொண்டும், ஒரு கையில் மதுக்குடத்தைத் தாங்கியும் காணப்படுகின்றனர். இவை எகிப்து பிரமீடுகளில் உள்ள வண்ண உருவங்களை போன்று உள்ளன. அரேபியர்களோடு இருந்த வாணிகத் தொடர்புக்குச் சான்றாக அரபி எழுத்தில் எழுதப்பட்ட சங்கு ஒன்று கிடைத்துள்ளது. அழகன்குளம் கோட்டைமேடு, அம்மன் கோயில் திடல், அரசு மேல்நிலை பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன.

 அழகன்குளம் அகழாய்வுகளின் வெளிப்பாடுகள் :

1986-87 -ல் இருகுழிகள் தோண்டி முதல் அகழாய்வைத் தொடங்கினர். இந்த அகழாய்வுகளில் மட்டும் 193 குறியீடுகள் உள்ள ஓடுகளும், 60 தமிழி எழுத்துப் பொறிப்பு உள்ள ஓடுகளும் கிடைத்துள்ளன. இதில் கிடைத்த பொருட்களின் கார்பன் சோதனையில் இது 2360 ஆண்டுகள் பழமையானது என அறியப்பட்டுள்ளது.

1990 – 91 இல் இரண்டாம் கட்ட அகழாய்வில் 4 குழிகள் தோண்டப்பட்டன. ஹரப்பா நாகரிகத்தில் கிடைத்த களிமண் தகடு உருவம் போன்று ஒரு பகடைக் காய் கிடைத்தது. கி.மு.350-320-ஐச் சேர்ந்த யானை உருவம் உள்ள சங்ககால பாண்டியர் காசு கிடைத்தது.

1993-94 இல் மூன்றாம் கட்ட அகழாய்வில் தமிழி எழுத்துகள் எழுதப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கிடைத்தன.

1995-96 இல் நான்காம் கட்ட அகழாய்வில் காளை உருவம் பொறித்த சங்ககால பாண்டியர் காசு, குறியீடு உள்ள ஓடுகள், ரோமானிய கப்பல் போன்ற உருவம் பொறிக்கப்பட்ட ஓடு ஆகியன கிடைத்தன.

1996-97 இல் நடந்த ஐந்தாம் கட்ட அகழாய்வில் 6 குழிகள் தோண்டப்பட்டன. கி.மு.4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நந்த அரசர்களின் வெள்ளிக்காசு, சங்ககால பாண்டியர், ரோமானியர் காசுகள் கிடைத்தன. 1997-98 இல் ஆறாம் கட்ட அகழாய்வில் 18 குழிகள் கோட்டைமேட்டிலும், ஒரு குழி அம்மன்கோயில் குடியிருப்பிலும் தோண்டப்பட்டன.

2015-16 இல் ஏழாம் கட்ட அகழாய்வு நீண்ட இடைவெளிக்கு பின் துவங்கியது.

2016-17 இல் எட்டாம் கட்டமாக  விரிவான அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், கோட்டைமேடு ஆகிய பகுதிகளில் 52 குழிகளுக்கும் மேல் தோண்டப்பட்டன. இதில் 13,000 பழங்காலப் பொருட்கள் கண்டறியப்பட்டன.

மனிதன் முதன் முதலாகப் பயன்படுத்திய வெள்ளி முத்திரை காசுகள், சதுர வடிவில் செப்புக் காசுகள் என 50க்கும் மேற்பட்டவை இங்கு கிடைத்துள்ளன. கூட்டல் குறி போன்ற முத்திரை, சுடுமண் பொம்மை, சுடுமண் குழாய்கள், இரும்புப் பொருட்கள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட ஆபரணங்கள், கல்மணிகள், சங்கு ஆபரணங்கள், ஆபரணங்கள், பச்சைநிற கற்கள், கண்ணாடி மணிகள் ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. 150 கிராம் எடையுள்ள விதையுடன் செங்கற்களால் கட்டப்பட்ட சிறிய தானிய விதை கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அழகன்குளத்தில் மட்டுமே பழங்கால மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.

 1986 முதல் 1998 வரையில் 6 கட்டங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் வெறும் 19 குழிகள் மட்டுமே தோண்டப்பட்டன. இதன் ஆய்வு அறிக்கை 2005 இல் வெளியிடப்பட்டது. ஆனால் 7 மற்றும் 8 ஆம் கட்டங்களில் 55க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டி ஆய்வு செய்யப்பட்டன. அதிகளவில் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் இதன் அய்வு அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தேவிபட்டினம்:

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்குகடற்கரையில் திருச்சி செல்லும் சாலையில் தேவிபட்டினம் அமைந்துள்ளது. முதலாம் இராஜராஜ சோழனின் பட்டத்து அரசியான லோக மகா தேவியின் பெயரில் இவ்வூர் அமைக்கப்பட்டதாகக் கூறுவர். உலக மகா தேவி பட்டினம் என்பது நாளடைவில் தேவிபட்டினம் என வழங்கப்பட்டு வருகிறது. இவ்வூரின் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள திலகேஸ்வரர் கோயில் சிவனுக்காகவும், கடற்கரை ஓரம் கடலடைத்த இராமர் கோயில் திருமாலுக்காகவும், படையாச்சி தெருவில் உள்ள உலகம்மன் ஆலயம் அம்மனுக்காகவும் அமைக்கப்பட்டுள்ளன. 

திலகேஸ்வரர் கோயில்:

கோபுரத்தை சிறியதாகவும், விமானத்தை பெரியதாகவும்  அமைப்பது சோழர் கால கட்டடக்கலை. திலகேஸ்வரர் கோயில் விமானம் பெரியதாக அமைக்கப்பட்டுள்ளதால் அது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. இங்கு கடலடைத்த இராமர் கோயில் உள்ளது. இது நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது.   கி.பி.13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டும் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஜடாவர்மன் விக்கிரம பாண்டியன் கல்வெட்டும் முறையே இளங்கோ மங்கலமகிய உலக மாதேவிப்பட்டினம் என்றும் புறக்குடி ஆகிய ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றன. கி.பி. 1533 ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு தேவிபட்டினத்தை தேவிபட்டினம் என்றே குறிப்பிடுகின்றது. இம்மூன்று கல்வெட்டுகளும் தேவிபட்டினம் செவ்விருக்கை நாட்டில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றன. 

கடலடைத்த இராமர் கோயில்:

கடலடைத்த இராமர் கோயிலுக்கு எதிரில் கடல் நடுவே அமைந்துள்ள நவபாஷாணம் எனப்படும் நவக்கிரகங்கள், பாவங்கள் நீங்கவும், முன்னோர் வழிபாட்டிற்கும் மக்களால் வழிபடப்படுகிறது. இவ்வூர் இராமாயணத்தோடு தொடர்புடையது. இராமபிரான் இலங்கைக்குச் செல்லும் முன்னர் உப்பூரில் விநாயகரை வழிபட்டுவிட்டு, இங்கு கடலிலே ஒன்பது கற்களை ஒன்பது கோள்களாக பாவித்து வழிபட்டபோது கடல் அலைகள் குறுக்கிட்டதால், விஷ்ணுவை வேண்டினார் என்றும், பின்னர் கடல் அலைகள் அமைதியடைந்தன என்றும் புராணங்கள் கூறுகின்றன. இதனால் இங்குள்ள திருமால் கடலடைத்த இராமர் என அழைக்கப்படுகிறார். இக் கடலடைத்த இராமர் கோயில் நவகிரகத்துக்கு எதிரில் உள்ளது. 

பெருவயல் ரெணப்பலி முருகன் கோயில்:

தேவிபட்டினம் அருகே பெருவயலில், ரெணபலி முருகன் கோயில் கட்டயத்தேவர் என்ற குமாரமுத்து விஜயரகுநாத சேதுபதி (கி.பி.1728-1735) மன்னரின் (பிரதானி) வைரவன் சேர்வைக்காரரால் கட்டப்பட்டது. அவருக்கு பின் கி.பி.1736-ல் குமாரமுத்து சேதுபதி பெருவயல் கலையனூர் எனும் கிராமத்தை கோயிலுக்கு தானமாகக் கொடுத்த கல்வெட்டு இந்த கோயிலில் உள்ளது. இந்த கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர் கல்வெட்டை 2024 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கண்டெடுத்து படியெடுத்து ஆய்வு செய்தார். இந்த கல்வெட்டு 800 ஆண்டுகள் பழமையான முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1216-1244)காலத்தைச் சேர்ந்ததாகும். பாண்டியர் காலத்தில் இந்த கோயிலுக்கு தானம்வழங்கப்பட்டதை கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் சந்தி விக்கிரகப்பேறு என்ற வரியும், மதுரோதய வளநாட்டுக் காஞை இருக்கை என்ற நாட்டுப் பிரிவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டில் சொல்லப்படும் பெருமணலூர் மந்திரி இராமனான பல்லவராயன் என்பவர், முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்த ஒரு அரசு அதிகாரியாவார். வெட்டுப் போதிகை கற்கள் இவ்வூரில் இருந்து அழிந்து போன ஒரு பாண்டியர் கால சிவன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டவையாக இருக்கலாம். 


திருப்பாலைக்குடி சோழர் காலத்து சிவன் கோயில்: 

இராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் அருகே திருப்பாலைக்குடியில் மந்திரநாதசுவாமி - நல்லமங்கை அம்மன் சிவன் கோயில் உள்ளது. இருதளங்களைக் கொண்டுள்ள இக்கோயில் விமானத்தின் மேல்பகுதி செங்கற்களாலும், பிற பகுதிகள் மணற்பாறை கற்களாலும் கட்டப்பட்டுள்ளன. உபபீடம் 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தலவிருட்சம் பழமையான வன்னிமரம். கி.பி.1219ஆம் ஆண்டு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் இக்கோயில் இறைவன் பெயர் அபிமானராமன் எனப்படுகிறது. 

கி.பி.1281ஆம் ஆண்டு முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு, மருதூர் என்ற மானாபரணபட்டினத்தைச் சேர்ந்த அம்பிசோறன் என்ற திருவாசகன், ஆளுடைபிள்ளையார் உருவத்தை இங்கு அமைத்தார் என்கிறது. மருதூர், மானாபரணபட்டினம் இவ்வூரின் வேறு பெயர்களாகலாம். ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் வெட்டிய மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனுக்கு மானாபரணன் என்ற பெயரும் உண்டு. அவன் பெயர் இவ்வூருக்கு சூட்டப்பட்டுள்ளது.

கோயில் அமைப்பு கொண்டு இது கி.பி.11-ம் நூற்றாண்டில் சோழர்காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். பாலை மரங்கள் நிறைந்த குடியிருப்பு எனும் பொருளில் இவ்வூர் திருப்பாலைக்குடி எனப்படுகிறது. கோயில் அருகில் இடைக்காலப் பானை ஓடுகளுடன், போர்சலின் வகை சீனப்பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


தொண்டி:

சங்க இலக்கியம் பாடுகிற தொண்டி அரபிக் கடலோரம் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள சேரர்களின் துறைமுக நகரம் என அறிய முடிகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் கடலுண்டி என்று அழைக்கப்படும் கடற்கரை பட்டினமே சேரர் தொண்டியாக இருக்கலாம் என்று கேரளா அரசின் இணையதளம் கூறுகிறது. (http://kerala.gov.in/index.php?option=com_content&view=article&id=2852&Itemid=2291) 

வங்க ஈட்டத்து தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொகு கருப்பூரமும் சுமந்து உடன் வந்த
கொண்டலொடு புகுந்து கோ மகன் கூடல் (சிலம்பு / மது 14: 107-110)

வங்கக் கடலோரம் கிழக்கு கடற்கரையில் பாண்டிய நாட்டில் எல்லைக்கு உட்பட்ட துறைமுக நகரமாக உள்ள தொண்டி பற்றி சிலப்பதிகாரம் பாடுகிறது. கிழக்கிலிருந்து வரும் காற்று தொண்டி துறைமுகத்தில் குவிக்கப்பட்டுள்ள அகில், துகில், ஆரம், கற்பூரம் ஆகிய பொருள்களின் வாசனைகளை சுமந்து கொண்டு மதுரை வருகிறது என தொண்டி பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீழவளவு பஞ்சபாண்டவர் மலைக் குகைப் பகுதியில் காணப்படும் பள்ளி ஒன்றை தொண்டியை சேர்ந்த இலவோன் என்பவன் அமைத்து கொடுத்தான் என கிமு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழவளவு தமிழிக் கல்வெட்டு கூறுகிறது.

1980, 1994-95 & 2005 ஆம் ஆண்டுகளில் தொண்டியம்மன் கோயில் அருகில் உள்ள மேட்டுப்பகுதியில் நடையற்ற அகழாய்வில் சுடுமண்ணாலான காதணி, வட்டு, கருப்பு பச்சை மணிகள், அணிகலன்கள், முதலாம் இராஜராஜ சோழன் காலத்திய செம்பு காசு, நாயக்கர் கால செம்பு காசு, இடைக்காலத்தைச் சேர்ந்த பானையோடுகள், சுட்ட செங்கல் கிடைத்தன. சுட்ட செங்கலின் காலம் கிமு 2 முதல் 3 ஆக இருக்கலாம் என தொல்லியல் அறிஞர்கள் கணித்தனர்.   சிலப்பதிகாரமும், கீழவளவு தமிழிக் கல்வெட்டும், தமிழக அரசு மேற்கொண்ட அகழாய்வு பணியும் தொண்டியின் தொன்மைக்கு சான்றாக உள்ளன.  

சங்க காலத்தில் கிழக்கு கரையிலும், மேற்கு கரையிலும் இரண்டு தொண்டி பட்டணங்கள் இருந்தன என ஆய்வாளர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் (ஆய்வு களஞ்சியம்: தொகுதி 4 பக் 83) குறிப்பிடுகிறார். ஆ. சிங்காரவேலு முதலியார் எழுதிய அபிதானசிந்தாமணி நூலில் (பக் 1093) மேற்குக்கடற்கரை சேரர் பகுதியிலும், கிழக்கு கடற்கரை பாண்டிய நாட்டில் இருவேறு தொண்டி என்னும் துறைமுகப் பட்டினங்கள் இருந்தன என குறிப்பிடுகிறார். 


பாண்டிக்கோவை என்ற நூல் கி.பி.7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனின் துறைமுகமாக தொண்டி விளங்கியதாக தெரிவிக்கிறது. யாப்பெருங்கலக்காரிகை உரையில் கி.பி. 9ஆம் நூற்றாண்டில் ஆண்ட வரகுண பாண்டியன் காலத்தில் இவ்வூர் வரகுணன் தொண்டி என அழைக்கப்பட்டதாகக் கூறுகிறது. நந்திக்கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னனான மூன்றாம் நந்திவர்மனை தொண்டியைக் கைப்பற்றியதற்காக பாராட்டுகிறது. மேற்கண்ட இலக்கிய தகவல்கள் மூலம் சிலப்பதிகார காலம் முதல் கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரை தொண்டி முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. கி.பி.12 முதல் 14 ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர் ஆட்சியின் போது கிழக்கு நாடுகளுடன் முக்கியமான வாணிகத் துறைமுகமாக தொண்டி விளங்கியது. இப்பகுதியில் கிடைத்த சீன மண்பாண்டங்களின் மூலம் இதை அறிய முடிகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை நகரத்தார்கள் தொண்டி துறை முகம் வழியாக இறக்குமதி செய்துள்ளார்கள். அப்போது இங்கிருந்து இலங்கைக்கு 200 பயணிகள் பயணம் செய்யும் கப்பல் போக்குவரத்து நடந்து வந்துள்ளது. சேதுப்பாதையில் அமைந்துள்ள தொண்டி பாண்டியர் ஆட்சிக்காலத்தில் இடையளநாடு, தலையூர் நாடு என வழங்கப்பட்ட பகுதியில் இருந்துள்ளது.

தொண்டி நம்புதலையில் உள்ள நம்பு ஈஸ்வரர் கோவில் ஸ்வஸ்திரி என்று சொல் துவங்கி அதில் 61 வரிகள் எழுத்துக்கள் அமைந்துள்ளன. எழுத்தமைவை கொண்டு 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கல்வெட்டில், இந்த கோவில் அமைந்துள்ள இடத்தின் பெயர் தொண்டி பவித்ரமாணிக்க பட்டணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது முதலாம் இராஜராஜசோழனின் பெயர்களில் ஒன்று ஆகும். சோழர்கள் ஆட்சிக்காலத்தில் இவ்வூர் முக்கியத்துவம் பெற்று விளங்கி இருந்திருப்பதை இது காட்டுகிறது. கைக்களங்குளம் எனும் கண்மாயில் கிடைத்த வீராபாண்டிய மன்னனின் கல்வெட்டு அதை கழிகணக்குளம் எனக் கூறுகிறது. நந்திக்கலம்பகம் என்ற நூல் பல்லவ மன்னனான மூன்றாம் நந்திவர்மனை தொண்டியைக் கைப்பற்றியதற்காக பாராட்டுகிறது. மேற்கண்ட இலக்கிய தகவல்கள் மூலம் சிலப்பதிகார காலம் முதல் கி.பி.9 ஆம் நூற்றாண்டு வரை தொண்டி முக்கிய துறைமுகமாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.

உந்திபூத்த பெருமாள் கோயில்:
தொண்டி, உந்திபூத்த பெருமாள் கோயில் திருப்பணியின் போது கருடாழ்வார் சன்னதியின் உள்பகுதிச் சுவரில் இருந்த கல்வெட்டு திரு. இராஜகுரு அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஆவணம் செய்யப்பட்டது. கி.பி.1315 முதல் கி.பி.1334 வரை ஆண்ட திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீபராக்கிரமபாண்டியனின் 15-ம் ஆட்சியாண்டில் அதாவது கி.பி.1329-ம் ஆண்டில் இந்த கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இக்கோயில் இறைவன் பெயர் தற்போது உந்தி பூத்த பெருமாள் என அழைக்கப்பட்டாலும் கல்வெட்டில் கோயில் பெயர் திருமேற்கோயில் எனவும், இறைவன் பெயர் புரவுவரி விண்ணகர பெருயான் எனவும் கூறப்பட்டுள்ளது. கோயிலுக்கு நிலத்தானம் வழங்கிய செய்தி கல்வெட்டில் இடம் பெற்றுள்ளது. 

சோழந்தூர்:

இராமநாதபுரம் மாவட்டம் நாயாற்றங்கரையில் அமைந்துள்ளது சோழந்தூர். வைகையின் கிளையாறான நாயாற்றின் கரையில் அமைந்துள்ள சோழந்தூரில் சிதறிக் கிடக்கும் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் மூலம் புதைந்த நிலையில் ஒரு சங்க கால நகரம் இருந்த தடயத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தினர் 2019 ஆம் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளனர். குளங்களை தூர்வாரிய போது சுடுமண் உறைகிணற்றின் ஓடுகள், தடித்த, மெல்லிய கருப்பு சிவப்பு பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. இங்கு சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. சற்று தள்ளி முதுமக்கள் தாழியின் ஓடுகளும் காணப்படுகின்றன. சன்னாப் மேடு என்னுமிடத்தில் செங்கலால் கட்டப்பட்ட ஒரு கட்டடத்தின் அடிப்பக்கம் மட்டும் கண்டறியப்பட்டது. இது அழிந்துபோன ஒரு கோயிலாக இருக்கலாம். அருகில் கல்லாலான அமர்ந்த கோலத்தில்  ஒரு திருமால் சிற்பம் உள்ளது. அதை முனீஸ்வரராக வழிபடுகிறார்கள். அதேபோல் குளத்தின் கிழக்கில் வட்ட வடிவ ஆவுடையாருடன் ஒரு சிவலிங்கமும் உள்ளது. இவ்வூரில் சங்க கால கருப்பு சிவப்பு பானை ஓடுகளுடன் இடைக்காலத்தைச் சேர்ந்த தடயங்களும் காணப்படுகின்றன. ராமநாதபுரத்திலிருந்து சோழந்தூர் செல்லும் வழியில் சக்கரவாளநல்லூர் சங்ககால, இடைக்கால வாழ்விடப் பகுதியாகவும், தேவிபட்டினம், சிங்கனேந்தல், முத்துசாமிபுரம் ஆகிய ஊர்கள் இடைக்கால வாழ்விடப் பகுதிகளாகவும் உள்ளன என தொல்லியல் ஆய்வாளர் திரு. இராஜகுரு அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்திருந்தார். 

இராஜசிங்கப் பெருங்குளம் (எ) ஆர்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய் :

இராமநாதபுரத்தில் இருந்து காரைக்குடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது R.S.மங்கலம் என அழைக்கப்படும் இராஜசிங்கமங்கலம். இவ்வூரில் கைலாசநாதர் கோவில், கலியபெருமாள் கோவில், இராஜசிங்கப் பெருங்குளம் எனும் R.S.மங்கலம் பெரிய கண்மாய் ஆகியவை புகழ் பெற்றவை. மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி.900 முதல் கி.பி.920 வரை பாண்டிய நாட்டை ஆண்டவன். இவன் காலத்தில் தான் பாண்டியர் வரலாறு கூறும் சின்னமனூர் செப்பேடுகள் உருவாக்கப்பட்டன. இச்செப்பேடுகளில் இராஜசிம்ம மங்கலம் பேரேரியுடன் நகரையும் இராசசிம்ம பாண்டியன் உருவாக்கியதை அவன் மெய்க்கீர்த்தி கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

“உலப்பிலோத வொலி கடல் போல்
ஒருங்கு முன்னந் தான மைத்த
இராஜசிங்கப் பெருங்குளக்கீழ்ச் சூழு நகரிருந்தருளி”

இம்மன்னன் காலத்திலேயே வைகை மற்றும் கோட்டக்கரையாறு ஆறுகளில் இருந்து இராஜசிங்கமங்கலத்து கண்மாய்க்கு நீர்வரத்துக்கால் அமைக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் நயினார்கோயில் சாலையில் பாண்டியூருக்கு அருகில் வைகை நதியிலிருந்து செல்லும் நாட்டார் கால்வாய் மூலம் தண்ணீர் இராஜசிங்கமங்கலம் கண்மாய்க்கு செல்கிறது. இக்கண்மாய் நீர்பிடிப்பு பரப்பு 147 சதுர மைல் (36,325 ஏக்கர்) ஆகும். 

கி.பி.1162 இல் திருநெல்வேலியில் இருந்து பாண்டிய நாட்டின் தென்பகுதியை ஆண்டு வந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை ஆண்டுவந்த பராக்கிரம பாண்டியன் மீது போர் தொடுத்து மதுரையைக் கைப்பற்றியபோது பராக்கிரம பாண்டியனுக்கு உதவியாக வந்த இலங்கை பராக்கிரம பாகு என்ற மன்னனின் தளபதி இலங்காபுரித் தண்டநாயகன் மதுரை போவதற்குள் பராக்கிரம பாண்டியன் கொல்லப்பட்டதால் அச்சிங்களப்படை குலசேகர பாண்டியன் படையுடன் நடத்திய போரினால் இக்கண்மாய் பாதிக்கப்பட்டதெனவும் அதை தண்ட நாயகன் சரி செய்ததாகவும் இலங்கையின் மகாவம்சம் நூல் கூறுகிறது. 

இக்கண்மாய் சேதுபதிகளின் ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பாக பேணப்பட்டு நீரை வெளிவிட 48 மடை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. ”நாரை பறக்காத நாற்பத்தெட்டு பெருமடைக் கண்மாய்” என்ற வழக்கு இப்பகுதியில் கூறப்படுகிறது. இக்கண்மாய் நிரம்பும்போது அதிலிருந்து 72 கண்மாய்களுக்கு நீர் செல்லவும் உபரி நீர் கடலுக்கு செல்லவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கண்மாய் மடைகள் பெயரில் செட்டியமடை, பெருமாள் மடை, புல்லமடை, செங்கமடை என பல ஊர்கள் அமைக்கப்பட்டன. 


கைலாசநாதர் கோவில்

ஆர்.எஸ் மங்கலம் பிரம்மதேயமாக வழங்கப்பட்டிருப்பதால் இவ்வூரில் உள்ள கைலாசநாதர் கோவிலும் மூன்றாம் இராசசிம்மன் காலத்தில் தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். இக்கோவிலில் காணப்படும் கி.பி.1142 ஐச் சேர்ந்த சடையவர்மன் சீவல்லபன் என்ற பாண்டிய மன்னனின் கல்வெட்டு இவ்வூர் வரகுண வளநாட்டில் உள்ளதாக தெரிவிக்கிறது. அதில் பிரமதேயமாகவும் தேவமானியமாகவும் நம்பிள்ளை மானாபரணன் என்பவர் வழங்கிய செய்தி உள்ளது. இவர் மன்னனின் பிரதிநிதியாக இருக்கலாம். இக்கல்வெட்டில் மன்னன் பெயர் முதலிய செய்திகள் அழிந்த நிலையில் உள்ளன. “திருமடந்தையும் சயமடந்தையும்” என்ற மெய்கீர்த்தியைக் கொண்டு இக்கல்வெட்டு கி.பி. 1132 முதல் கி.பி.1162 வரையிலான ஆண்டுகளில் ஆட்சி செய்த சடையவர்மன் சீவல்லபன் காலத்தைச் சேர்ந்தது என அறிய முடிகிறது. இது இம்மன்னனின் 10 ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டுள்ளது. 

கலியபெருமாள் கோவில்:

இக்கோயிலின் அமைப்பை கொண்டு இது பாண்டியர்கள் கால கோயில் என கருதலாம். இவ்வூரை உருவாக காரணமான மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் மிகச்சிறந்த வைஷ்ணவனாக அறியப்பட்டவன் என சேதுபதிகள் செப்பேடுகள் என்ற நூலில் எஸ்.எம்.கமால் தெரிவிப்பதன் (பக்கம் 319) மூலம் இவ்வூரில் உள்ள கலியபெருமாள் கோவிலும் இராசசிம்ம பாண்டியன் காலத்திலேயே கட்டப்பட்டிருக்க வேண்டும் என கருதலாம். இக்கோயிலில் கல்வெட்டுகள் கண்டறியப்படவில்லை. 


அறுநூற்று மங்கலம்:

ஆர்.எஸ்.மங்கலம் அருகே அறுநூற்று மங்கலம் கண்மாய்க் கரையில்  இடிந்த நிலையில் உள்ள சிவன்கோவிலில் பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டுகளை தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு 2019 ஆம் ஆண்டு கண்டறிந்தார். இதில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன், மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் காலத்தைச் சேர்ந்தவை. கோயில் முன்பு கிடக்கும் கற்கள், தூண்களில் கல்வெட்டுகள் உள்ளன.

இடைக்காலத்தில் பிராமணர்களின் குடியிருப்புகள் ‘மங்கலம்’ என அழைக்கப்பட்டன. அரசர்கள் பிராமணர்களுக்கு நிலதானம் தரும்போது தம் பெயருடன் ‘மங்கலம்’ என்பதையும் இணைத்து ஊர் உருவாக்கி உள்ளனர். அதேபோல் வணிகக் குழுக்களின் பாதுகாப்புப் படைவீரர்கள் எனக் கருதப்படும் அறுநூற்றுவர், தங்கள் பெயரில், பிராமணர்களுக்காக ஒரு ஊர் உருவாக்கி, அதை அவர்களுக்கு தானமாகக் கொடுத்துள்ளனர். இதனால் இவ்வூரின் பெயர் அறுநூற்றுமங்கலம் என ஆகியுள்ளது. இவ்வூரின் காவல் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுள்ளனர். இதே அறுநூற்றுவர் பெயரில் திருவாடானை அருகே அறுநூற்றுவயல் என்ற ஊரும் உள்ளது. கி.பி.1297 முதல் கி.பி.1342 வரை மதுரையை ஆண்ட கடைசி பாண்டிய மன்னனான  மூன்றாம் சடையவர்மன் வீரபாண்டியனின் 18 ஆம் ஆட்சியாண்டில் (கிபி 1315) வெளியிடப்பட்ட இக்கல்வெட்டில் அரும்பூர்க் கூற்றத்து அறுநூற்று மங்கலத்து திருஅகத்தீஸ்வரமுடைய நாயனார்க்கு, பாரூர் எனும் பதினெண்பூமி நல்லூரைச் சேர்ந்த இராக்கதன் பூவண்டான் என்பவர் ராக்காலத்து பூஜைக்கு தேவையான அமுதுபடி, கறியமுது, திருவிளக்கெண்ணெய் பல நிவந்தங்களுக்குரிய செலவுக்கு அறுநூற்று மங்கலத்து பெருங்குளத்து பள்ளமடையில் இருந்து நீர் பாயும் ஒரு ‘மா’ நிலத்தைத் தானமாகக் கொடுத்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது. இக்குளமும், பள்ளமடையும் தற்போதும் உள்ளன. கல்வெட்டில் நிலத்தைக் குறிக்கும் ‘ரூ’ எனும் குறியீடு  உள்ளது. பதினெண்பூமி என்பது வணிகர் மற்றும் அவர்களின் பாதுகாப்பு வீரர் கொண்ட குழு ஆகும். இவர்களின் குடியிருப்பு பாரூரில் உருவானபின் பதினெண்பூமிநல்லூர் என அவ்வூர் பெயர் மாற்றப்பட்டிருக்கலாம். பாரூர் திருவாடானை அருகில் உள்ளது. 

இங்குள்ள மற்றொரு கல்வெட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் (கி.பி.1216 முதல் கி.பி.1244 வரை) மூன்று வரி கொண்ட துண்டுக் கல்வெட்டு உள்ளது. இம்மன்னன் சோழநாட்டைக் கைப்பற்றி, பின் அவர்களிடமே வழங்கிய வரலாற்றுச் செய்தி இதில்  உள்ளது.

குலமாணிக்கம் சுந்தரபாண்டிய நல்லூர் குணாபதபெருமாள் என்பவர் இக்கோயில் இறைவனுக்கு நிலதானம் வழங்கியுள்ள செய்தியை இங்கு காணப்படும் மற்றொரு கல்வெட்டு குறிப்பிடுகிறது. குலமாணிக்கம் என்ற ஊர் பெயர் பிற்காலத்தில் சுந்தரபாண்டிய நல்லூர் என மாற்றப்பட்டுள்ளது. குலமாணிக்கம் இங்கிருந்து 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. அறுநூற்று மங்கலம், அரும்பொற்கூற்றம் என்ற நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. 14ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் இது அரும்பூர் கூற்றம் என மாறியுள்ளது.


செங்கமடை ஆறுமுக கோட்டை: 

இராமநாதபுரம் ஆர்.எஸ் மங்கலம் திருவாடானை சாலையில் அமைந்துள்ளது செங்கமடை. இவ்வூரில் பழமையான கோட்டை ஒன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கிறது. கி.பி.1713 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட விஜய ரெகுநாத சேதுபதி தன் ஆட்சிக்காலத்தில் மூன்று கோட்டைகள் கட்டி உள்ளார். கமுதி, பாம்பன் ஆகிய ஊர்களைப் போன்று இராசசிங்கமங்கலம் அருகில் செங்கமடையில் கோட்டைக்கரை எனும் ஆற்றின் கரையில் அறுங்கோண வடிவில் ஆறுமுகங்களுடன் கட்டப்பட்ட இந்தக்கோட்டை ஆறுமுகம் கோட்டை எனப்படுகிறது. இதை திருவுடையத்தேவர் என்ற முத்து விஜயரெகுநாத சேதுபதி, பிரஞ்சுப் பொறியாளர்களைக் கொண்டு கட்டியுள்ளார். இது முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையைச் சுற்றி அகழி அமைக்கப்பட்டு தற்போது அது தூர்ந்த நிலையில் உள்ளது. கோட்டையின் மேற்குப்பகுதியில் கல்நிலை வாசல்களுடன் இரு பெரிய அறைகள் உள்ளன. இவை வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இதன் சுவர்களும் கோட்டை சுவர்கள் போன்று பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக உள்ளன. இங்கு விளக்கு வைக்கும் சாளரங்கள் உள்ளன. கோட்டையின் மேலே ஏறிச் செல்ல படிகள் உள்ளன. வீரர்கள் நின்றுகொண்டு கோட்டையின் வெளிப்பகுதிகளைக் கண்காணிக்கவும், துப்பாக்கியால் சுடவும் கோட்டைச் சுவர்களில் மேல், கீழ், நடுப் பகுதிகளில் துளைகள் உள்ளன. கோட்டையின் தென்பகுதியில் கோட்டையின் பொறுப்பாளர் தங்கி இருந்த செவ்வக வடிவிலான சிறிய அரண்மனை இடிந்த நிலையில் உள்ளது.

இக்கோட்டை கி.பி.1801 க்குப் பிறகு ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டதாக இராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஞ்சுக் கட்டடக்கலையில் அமைக்கப்பட்ட இக்கோட்டையில் வீரர்கள் தங்குவதற்கு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் நடுவில் முனீஸ்வரர், கருப்பசாமி கோவிலும் அதன் அருகில் குளமும் உள்ளது. இக்குளம் கோவில் ஆகியவை கோட்டை கட்டிய காலத்திலேயே அமைக்கப்பட்டவை. இக்கோட்டைக்குள் முனீஸ்வரர், கருப்பசாமி கோயில், குளம் ஆகியவை உள்ளன. இக்குளத்தின் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதிகளில் புதைந்தநிலையில் செங்கல் கட்டுமானம் உள்ளது. இதில் செங்கற்களை இணைக்க களிமண் சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்செங்கற்கள், நீளம் 23 செ.மீ., அகலம் 13.5 செ.மீ., உயரம் 5 செ.மீ. எனும் அளவில் உள்ளன. இவை இடைக்காலத்தைச் சேர்ந்த செங்கல் அளவில் உள்ளன. இக்கட்டுமானம் பிற்காலப் பாண்டியர்களால் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையின் அடிப்பகுதியாக இருக்கலாம். அக்குளத்தைச் சுற்றிலும் முதுமக்கள் தாழி பானை ஓடுகள் உள்ளிட்ட பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் அருகே ஓடும் ஆற்றின் பெயர் கோட்டைக்கரை ஆறு என அழைக்கப்படுகிறது. எனவே இங்கு சங்ககாலம் முதல் கோட்டை இருந்திருக்கலாம். 


காரங்காடு: 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கோட்டக்கரையாறு கடலில் சேருமிடத்தில் காரங்காடு அமைந்துள்ளது. இராமநாதபுரம் வனத்துறை சார்பாக காரங்காடு அலையாத்திக்காடுகளுக்குள் அழைத்து செல்லும் படகு சவாரி ஒருங்கிணைக்கப்படுகிறது. சுமார் 1 மணி நேர படகு சவாரிக்கு ஒரு நபருக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இயற்கையான அலையாதிக்காடுகளை கண்டுகளிக்க ஏற்ற இடமாக காரங்காடு விளங்குகிறது. காரங்காடு அருள்மிகு சிவசந்தடி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் ஆடித்திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. 







காரங்காடு ஒரு கிறித்துவ கிராமம் என்று சொல்லுமளவிற்கு இங்கே 90% பேர் கிருத்துவ மதத்தை பின்பற்றும் மீனவர்களாக இருக்கிறார்கள். காரங்காட்டில் அமைந்துள்ள ரோமானிய கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த தூய செங்கோல் மரியன்னை கோயில் 130 ஆண்டுகள் பழமையானது. இந்த தேவாலயத்தில் நடைபெறும் கொடியேற்றத்துடன் துவங்கும் காரங்காடு தூய செங்கோல் மரியன்னை திருத்தல திருவிழாவை 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருவிழாவில் நடைபெறும் மூன்று தேர்களின் வீதி உலா புகழ் பெற்றது. சப்பர பவனியில் முதல் தேர் புனித மிக்கேல் அதிதூதர், இரண்டாம் தேர் புனித செபஸ்தியார், மூன்றாம் தேர் புனித செங்கோல் மரியன்னை திருவுருவம் தாங்கிய தேர்பவனி நடைபெறுகிறது. 

அதே போல ஆண்டு தோறும் பிப்ரவரி முதல் சனிக்கிழமையில் புனித செங்கோல் மரியன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது. மரியன்னைக்கு பொங்கல் வைத்து அதை கடல் தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக படகில் கடலுக்குள் சென்று பொங்கலை மீன்களுக்கு இரையாக அந்நாளில் வழங்குவர். காரங்காடு மரியன்னை ஆலயம் அருகே நூற்றாண்டு கால சத்திரம் ஒன்று இருக்கிறது.   

பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் நீர்பட்டினம் காரங்காடாக இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு கருதுகிறார். காரங்காடு தேவாலயத்தின் பின்புறம் உள்ள உப்பங்கழிப் பகுதியில் அதிகளவில் பானை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்வூரில் இருந்து இலங்கைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்பானைகள் ஏற்றுமதியானதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். 

இரவீந்திரன், ரவிச்சந்திரன், கிஷோர் ஆகியோர் இராமநாதபுரம் காரங்காடு அலையாத்திக்காடுகள் பகுதியில் 107 வகை பறவைகளை ஆவணம் செய்து ஆய்விதழ் வெளியிட்டுள்ளனர். (https://threatenedtaxa.org/index.php/JoTT/article/view/8356)


எம். எஸ். உணவகம், உப்பூர் 

ஆனந்தூர் புத்த சமய தடங்கள்: 

இலங்கையின் தொடர்பால் இராமநாதபுரம் மாவட்ட கடற்கரைப் பகுதிகளில் புத்த மதம் செழித்து இருந்தது. அதற்கு சான்றாக இராமேஸ்வரம் அரியான்குண்டு பகுதியிலும், திருவாடானை அருகே மணிகண்டியிலும், திருவாடானை ஆனந்தூர் மற்றும் சுந்தரபாண்டியன்பட்டினம் பகுதியிலும் புத்தர் சிலை கண்டறிந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சுந்தரபாண்டியன்பட்டணம் சிவன் கோயிலில் முன்பு புத்தருக்கு ஒரு சன்னதி இருந்ததாக அவ்வூர் மக்கள் தெரிவித்தனர். ஆனந்தூர் அருகில் சம்மந்தவயல் என்ற ஊரில் கி.பி. 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை அங்குள்ள வயல் வரப்பில் 2016 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Photo by Mr. Rajaguru

ஆனந்தூரில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரரின் சிற்பத்தை இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் 2021 ஆம் ஆண்டு கண்டுபிடித்தது. 

புத்தரின் முதன்மைச் சீடரான ஆனந்தரின் பெயரால் ஆனந்தூர் என்ற ஊர் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அருகில் உள்ள  சம்மந்தவயல் ஊரில் பழைய  பெயர்  அமணவயல் என இவ்வூர் மக்கள் தெரிவித்தனர். மேலும் வடக்கலூர், தீர்த்தான்குளம் ஆகிய ஊர்கள் இதன் அருகில் அமைந்துள்ளதால் இப்பகுதியில் சமணமும் செழித்து இருந்திது. சுத்தமல்லி என்பது சித்த மௌலி என்பதன் திரிபு. சித்தர்களாகிய மகாவீரர் அல்லது புத்தரின் உருவத்தைத் தலையில் தாங்கியவர்களைக் குறிப்பிடும் இச்சொல் அவர்கள்  குடியிருந்த ஊருக்கும் பெயராகியுள்ளது. சுத்தமல்லியில் சோழர் கால கலைப்பாணியில் அமைந்த சிவன் கோயிலும், உலகம்மன் என்ற காளி கோயிலும் உள்ளன. இவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம். சிவன் கோயில் எதிரில் உள்ள ஏந்தல் கண்மாய்  நீரை பகிர்ந்து கொள்ள அமைக்கப்பட்ட கல்வெட்டுகள் கோயிலின் அருகில் சேதமடைந்த நிலையில் உள்ளன. இவை சேதுபதி மன்னர்கள் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம். அருகருகே உள்ள ஆனந்தூர் சுத்தமல்லி அமணவயல் ஒரு காலத்தில் சமணமும் பௌத்தமும் செழித்திருந்த ஊரக அறிய முடிகிறது. 


பாசிபட்டினம்: 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் பாசியாற்றங்கரையில் அமைந்துள்ளது பாசிபட்டணம். மதுரையை ஆண்ட பராக்கிராம பாண்டியனுக்கும், திருநெல்வேலியை ஆண்ட குலசேகரபாண்டியனுக்கும் மதுரையை ஆட்சி செயவதில் நடந்த போரின் போது கி.பி.1168 ல் பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரம பாகுவின் படையும், குலசேகரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் படையும் தொண்டி பாசிபட்டினத்தில் போரிட்டதாக ஆரிப்பாக்கம் கல்வெட்டு தெரிவிக்கிறது. இதில் சோழர் தோற்றனர். 

பின்னர் நடந்த போர்களில் சிங்கள படையை சோழர் வென்றனர். சோழ நாட்டின் எல்லையான சுந்தரபாண்டியபட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பாண்டிய நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் சோழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது. இப்பகுதிகளில் சோழ நாட்டு வீரர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். 

Photo by Mr. Rajaguru

பாசியம்மன் கோயில்:

ஏற்கனவே சிங்களபடையிடம் தோற்றுப்போன பாசிபட்டினத்தில் மீண்டெழுந்த தங்கள் வெற்றியின் அடையாளமாக எட்டு கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மனுக்கு ஒரு கோயிலை கி.பி.1168 க்கு பின் சோழர்கள் கட்டியுள்ளனர்.  இங்குள்ள கடற்கரை அருகில் பிற்கால சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோயிலில், கருவறை, அர்த்தமண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் வடக்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது. கோயில் விமானம் வண்டிக்கூடு போன்ற அமைப்பில் சாலை விமானமாக அமைந்துள்ளது. விமானத்தின் அதிஷ்டானம் ஜகதி, முப்பட்டைக்கு முதம், கண்டம், பட்டிகை என பாதபந்த அதிஷ்டானமாக அமைந்துள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட சிதிலமடைந்த பாசியம்மன் கோயிலை புதுப்பிக்க தொல்லியில் நிறுவனம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று தொல்லியல் ஆய்வாளர் திரு.இராஜகுரு அவர்களின் 2023 ஆம் ஆண்டு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா:

இசுலாமியர்களும் படையாட்சிகளும் அடர்த்தியாக வாழும் ஊரு பாசிபட்டினம். மதநல்லிணக்கம் பேணும் மரபை கொண்ட தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கும் ஊர்களில் ஒன்று பாசிபட்டினம். இவ்வூரில் இறைநேசர் சர்தார் நைனா முகமது அடக்கமாகியுள்ளார். ஆண்டுதோறும் அவரின் நினைவுநாளில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. அருகில் வயல் மாணவநகரி கிராமத்தில் இருந்து கப்பல் விமானம் போன்ற அலங்கார ரதத்துடனும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள பாசிபட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடையும். அதனைத் தொடர்ந்து தர்கா நிர்வாகிகள் சந்தக்கூடு உடன் வந்தவர்களை நாட்டிய குதிரை, மேளதாளங்கள் முழங்க தர்காவிற்குள் அழைத்து செல்வர். அங்கு மவுலீது ஓதி பாசிப்பட்டினம் வன்னியர் படையாட்சி சமூகத்தினர் கொடிமரம் உள்ள கொடியை ஏற்றுவர். சாதி, மத வேறுபாடுகளை கடந்து இந்துக்கள், இசுலாமியர்கள், கிறித்துவர்கள் ஒன்றாக இந்த சந்தனக்கூடு திருவிழாவில் பங்குபெறுவர்கள். இங்கு அடங்கியிருக்கும் இறைநேசரின் தந்தையே கோட்டைப்பட்டினத்தில் அடக்கமாகியிருக்கும் ராவுத்தர் நெய்னார் என சொல்கின்றனர். மன்னர்களுக்கு குதிரைகளை கொடுத்த குதிரை வணிகராகத் திகழ்ந்தவர் என நம்பப்படுகிறது. 


சங்க இலக்கியம் காட்டும் மருங்கூர் பட்டினம்: 

சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, மதுரைக்காஞ்சி ஆகியவற்றில் காட்டப்படும் மருங்கூர்பட்டினம் தான் இன்றைய அழகன்குளம் என்று சில அறிஞர்கள் கருதினார்கள். மருங்கூர் என்ற பெயர் கொண்ட ஊர்கள் கன்னியாகுமரி, நாகப்பட்டினம், கடலூர், இராமநாதபுரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் காணப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூரில் (11.652585, 79.540049) 2024 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை அகழாய்வு மேற்கொள்கிறது. 

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பாறு கடலில் கலக்குமிடத்தில் மருங்கூர் (9.829173, 79.068910) என்ற ஊர் உள்ளது. அவ்வூரில் மேற்பரப்பு ஆய்வு மேற்கொண்ட இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் திரு. இராஜகுரு அவர்களால் கருப்பு சிவப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், அறுத்த சங்குகள், பானை மற்றும் கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், வட்டச் சில்லுகள், அரைப்புக் கல், சீனநாட்டு போர்சலைன், செலடன் வகை பானை ஓடுகள், சுடுமண் உறைகிணற்றின் உடைந்த ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. 

நாகை மாவட்டம் (10.849503, 79.749714) வெட்டாறு ஆற்றாங்கரையிலும், கன்னியாகுமரி மாவட்டம் (8.171333, 77.503424) பழையாறு ஆற்றாங்கரையிலும் மருங்கூர் பெயர் கொண்ட ஊர் அமைந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் தான் கடற்கரைக்கு அருகாமையில் உள்ளது.  

தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன்
கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர்
இரும் கழி படப்பை மருங்கூர் பட்டினத்து (அகம் 227: 16 - 20) 

உயர்ந்த காவல் கோட்டை மதில் சுவர்களை கொண்டது ஊணூர். பெண் யானை மிதித்ததால், கத்திரிகாயின் வரிகளை போன்று தழும்புகளை கொண்ட தழும்பன் எனும் சிற்றரசன் ஆளும் ஊணூரில், தூங்கல் ஓரியார் என்னும் புலவரால் நல்லிசையுடன் பாடப்பெற்ற பாடல் கேட்கும். கழிமுக பகுதியில் காணப்படும் காடுகள் நிறைந்த செல்வ வளமிக்க நகராகியாக மருங்கூர்பட்டினம் என அகநானூறு பாடல் கூறுகிறது. 

திருவுடை வியல் நகர் வரு விருந்து அயர்மார்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த    
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி, எல் பட
அகல் அங்காடி அசை நிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங் கட் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத்து அன்ன (நற்றிணை 258: 4 -10)

பெரிய நகரமான மருங்கூர் பட்டினத்தில் பொன் வளையல் அணிந்த மகளிர் கொல்லையில் காய வைத்திருந்த கொக்கு நகம் போன்ற கருவாட்டையும், மீன் சந்தையில் உள்ள பச்சை இறாலையும் கொத்தி கொண்டு பாய்மர கப்பலின் உச்சி கூம்பில் போய் அமரும் காக்கை. 

பெரும் சே இறவின் துய் தலை முடங்கல்
சிறு வெண் காக்கை நாள் இரை பெறூஉம்
பசும் பூண் வழுதி மருங்கை அன்ன (நற்றிணை 358: 8-10)

பெரிய கடல் வாழ் இறாலை வெண்மை நிறத்தில் காணப்படும் கடற்காக்கை இரையாக பெரும் பசும்பூண் வழுதி பாண்டியனின் மருங்கூர். 

மேலே குறிப்பிட்டுள்ள மூன்ற சங்க பாடல்களில் இருந்தும் மருங்கூர் பட்டினம் என்பது நெய்தல் நிலப்பகுதியான கடற்கரை பட்டினம் என்பது தெளிவு. அகநானூறு மற்றும் நற்றிணை பாடல்கள் மருங்கூர் பட்டினம் என்பது கடற்கரையில் இருந்த பெரிய நகரம் என்றும் இங்கே அங்காடி இருந்தது என்றும் குறிப்பிடுகிறது. இரும் கழி படப்பை என்பது அலையாத்திக்காடு அல்லது சதுப்புநில பரப்பை குறிப்பதாக கருதலாம். மனிதர்களோடு நகரத்தில் வாழும் காக்கையும் (House Crow), கடற்கரையில் வாழும் கடற்காக்கையும் (Sea Gull) மருங்கூர் பாண்டிய மன்னன் ஆட்சியின் கீழ் இருந்தது என நற்றிணை பாடல் (358) தெரிவிக்கிறது. அகநானூறு பாடல், மருங்கூர் அருகிலுள்ள ஊராக தழும்பன் ஆளும் ஊணூரை குறிப்பிடுகிறது. 

மருங்கூர் மகாகணபதி கோயில் எதிரே எல்லை முனீஸ்வரராக வழிபாட்டில் உள்ள 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால சூலக்கல் ஒன்றை 2016 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு கண்டு வெளிப்படுத்தியுள்ளார். தீர்த்தாண்டதானம் சிவன் கோயிலுக்கு தேவதானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லையை குறிக்கும் சூலகலலாக இது இருக்கலாம். மருங்கூரில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் தீர்த்தாண்டதானம் கல்வெட்டுகள் மூலம் இவ்வூர் சங்க காலம் முதல் கி.பி.15-ம் நூற்றாண்டு வரை வணிக மையமாக இருந்ததை அறியலாம். எனவே சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் மருங்கூர்பட்டினம் இதுதான் என தொல்லியல் ஆய்வாளர் திரு. இராஜகுரு குறிப்பிடுகிறார். 

ஊணூர்: 
தழும்பன் என்னும் சிற்றரசன் ஆளும் ஊணூர், கடற்கரை அருகேயுள்ள நெல்விளையும் பூமியாக சங்க பாடல்கள் குறிப்பிடுகின்றன. மருங்கூர் பட்டினம் அருகேயுள்ள ஊர் ஊணூர் என்பதை அகப்பாடல் (227) தெரிவிக்கிறது.

இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் (குறுந்தொகை 300: 9-10)

பாணர்களுக்கு தலைவனான பெரும் புண்பட்ட தழும்பனின் ஊணூர் என குறுந்தொகை (300) பாடல் குறிப்பிடுகிறது. 

முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும்
பழம் பல் நெல்லின் ஊணூர் (அகம் 220: 12-13)  

கடலின் அலை ஓசை கேட்கும் தொலைவில் உள்ள நெல்விளையும் பூமியாக ஊணூர் உள்ளது என மேற்சொன்ன அகப்பாடல் பாடுகிறது. 

தூங்கல் ஓரி என்னும் பெண்பால் புலவர் பாடிய நல்லிசை கேட்கும் தழும்பனின் ஊணூர் என்று அகப்பாடல் (227) குறிப்பிடுகிறது.  சங்ககாலப் புலவர்களில் ஒருவரான தூங்கல் ஓரியார் பாடிய மூன்று பாடல்கள் குறுந்தொகை 151, 295, நற்றிணை 60 இல் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் மருங்கூர் அருகே ஓரியூர் எனும் ஊர் உள்ளது. ஓரியூர் என இன்று அழைக்கப்படும் ஊர் தூங்கல் ஓரி என்னும் பெண்பால் புலவர் நினைவால் வழங்கப்பட்டிருக்கலாம். முடிவாக சங்க இலக்கியம் குறிப்பிடும் மருங்கூர்பட்டினம், ஊணூர் இன்றைய இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் உள்ள மருங்கூர் மற்றும் ஓரியூராக இருக்கலாம். முடிவாக சங்க இலக்கியம் குறிப்பிடும் மருங்கூர்பட்டினம், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஓரியூர் அருகேயுள்ள மருங்கூர்  ஆக இருக்கலாம். ஊணூர் என்பது மருங்கூர் அருகே இருந்து அழிந்து போன ஊரக இருக்கலாம் அல்லது ஊணூர் என்பது தூங்கல் ஓரியார் இறப்பிற்கு பின் அவரின் நினைவாக ஓரியூர் என்று வழங்கப்பட்டு இருக்கலாம். 

தூய அருளானந்தர் திருத்தலம்:
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம் ஓரியூரில் 300 ஆண்டுகள் பழமையான கிறித்துவ திருத்தலம் ஒன்று அமைந்துள்ளது. இத்திருத்தலம் சேதுபதி மன்னர் - போர்த்துக்கீசியர் இந்திய வருகையோடு தொடர்புடைய வரலாற்றை பேசுகிறது. பெப்ரவரி 4, 1693 இராமநாதபுரம் மாவட்டம் ஓரியுரில் ஜான் டி பிரிட்டோ என்ற அருளானந்தர் சேதுபதி மன்னர் படையினரால் தலை வெட்டப்பட்டு மறைசாட்சியாக மரித்தார். ஓரியூரில் எழுபட்ட முதல் திருத்தல கட்டடம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயமாகும். இது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அப்போது அருளானந்தருக்கு புனிதர் பட்டம் கிடைக்கப் பெறாததால் புனித ஆரோக்கிய அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்டது..இரண்டாவது திருத்தல கட்டடம் 08-04-1852- இல் புனித அருளானந்தர் புனிதராக அறிவிக்கப்பட்டார். அதன் நினைவாக 1890 -ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இவ்விடத்தில் தான் புனித அருளானந்தரை கழுவிலேற்றினர். இவ்வாலயத்தில் புனித அருளானந்தரின் கல்லறை மற்றும் அவரது உடலை கழுவிலேற்றிய கழுமரத்தின் ஒரு துண்டு ஆகியவை காணப்படுகின்றது. 

நிலவியல் அமைவிடம் (GPS):
மருங்கூர் -  9.829222, 79.069147
ஓரியூர் - 9.851941, 79.049438



தீர்த்தாண்டதானம்:

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கிழக்குக்கடற்கரை தொண்டி அருகேயுள்ளது தீர்த்தாண்டதானம். இங்கு சோழர் கால சர்வதீர்த்தேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. 

சர்வதீர்த்தேஸ்வரர் கோயில்

சர்வதீஸ்வரர் கோயில் அமைப்பை நோக்குகின்ற போது இது சோழர்கால கோயிலாக இருக்கலாம் என அறிய முடிகிறது. இந்த இடம் சீதையை தேடி சோர்வடைந்த ராமருக்கு ஏற்பட்ட தாகத்தை போக்கிய தீர்த்தம் உடையது என்பதால் இது தீர்த்தம் தந்த ஸ்தானம் என்று அழைக்கப்பட்டது – பின்னர் அது தீர்த்தாண்டதானமாக மாறியது என்று புராணங்கள் கூறும். இங்குள்ள சிவபெருமானிடம் இராமர் அருள் பெற்று, கோயில் தீர்த்தத்தில் நீராடி ராமர் சென்றார் என்றும் புராணங்கள் கூறுகிறது. 

தீர்த்தாண்டதானம் சிவன் கோயில் கல்வெட்டுக்கள் இவ்வூரை திட்டானம் என்றும், கோயிலின் ஏழு கல்வெட்டுகளில் நான்கு இங்கு தங்கி இருந்த வணிகக்குழுக்களையும், வணிகர்களையும் குறிப்பிடுகிறது. திட்டானம்  என்றால் மரக்கலம் நிறுத்தும் மேட்டுப்பகுதி என்று பொருள். இதன் அருகில் உள்ள ஊர் வட்டானம். வட்டானம் என்பது வட்டவடிவமான மரக்கலத்தைக் குறிக்கிறது. இங்கு வட்டவடிவமான பரிசல் கட்டும் தொழில் நடந்திருக்கலாம். தளி மருங்கூர் ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் வீரகேரளபுரமான நானதேசிப்பட்டினம் என பெயர் பெற்றிருந்தது. 


இடையன் வலசை சமண கற்க்கோயில்

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், புல்லக்கடம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட இடையன் வலசையில் சமணக் கோயில் அமைந்துள்ளது. இதனை ராமர் பாதக் கோயில் என்று குறிப்பிட்டு ஊராட்சி மற்றும் சுற்றுலாத்துறை சார்பாக சாலை ஓரத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் பார்சுவநாதர் சிற்பம், பாத வழிபாடு சிலை, விநாயகர் சிலை, கருடாழ்வார் சிலை, ஆயுதமேந்தி நாயுடன் நிற்கும் வீரக்கல் சிற்பம் என ஒரே இடத்தில் சமண, சைவ, வைணவ, நாட்டார் வழிபாட்டு நெறிகளின் எச்சங்களை காண முடிகிறது. ஆயிரமாண்டுகளுக்கு முன்பு சிறப்புடன் இயங்கி வந்த பழமையான சமணர் கோயில் இன்று எவ்வித பராமரிப்புமின்றி சிதிலமடைந்து கிடக்கிறது. இடையன்வலசை மட்டுமல்ல இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலக்கிடாரம், கேணிக்கரை, கமுதி,  மேல அரும்பூர், ஆனந்தூர், திருப்புல்லாணி கோரைக்குட்டம், பெரியபட்டினம், மேலக்கிடாரம், கீழச்சீத்தை, கீழ்ச்சாக்குளம், பசும்பொன் ஆகிய ஊர்களில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்துள்ளது.  இடையன்வலசையில் உள்ள இந்த கோயில் சமணர்களின் கட்டுமான கோயிலாகும். 





இவ்விடத்தில் மூன்று கட்டுமானங்களை பார்க்க முடிகிறது. கருவரை அமைப்புடன் உள்ள நடுக் கோயிலில் மூலவர் சிலை காணவில்லை. அக்கோயிலின் உட்பக்க கிழக்கு சுவரில் பார்சுவநாதர் சிற்பம் காணப்படுகிறது. நடுக்கோயிலின் வடக்கு பக்கத்தில் மண்டபத்தில் மேடையின் மீது இரு பாதங்கள் சிற்பமாக செதுக்கப்பட்டு வணங்கப்படுகிறது. நடுக்கோயிலின் தென்பக்கம் உள்ள சிறிய கோயில் கருவறையில் விநாயகர் சிலை காணப்படுகிறது. அதன் அருகே ஊருணி கரையில் உள்ள கருவேல மரத்தடியில் நடுகல் ஒன்றும் காணப்படுகிறது.

இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தொல்லியல் ஆய்வாளர் திரு. இராஜகுரு அவர்கள் இக்கோயில் குறித்து கொடுத்த செய்தி குறிப்பில் சுந்தரபாண்டியன்பட்டினம், பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் கோபால மடம், ராமர் பாதம் என அழைக்கப்படும் கோயில், சமணப் பள்ளி ஆகியவை 2016-ம் ஆண்டு கண்டறியப்பட்டன. இங்கு 4 துண்டுக்கல்வெட்டுக்கள் உள்ளன. இவை திரிபுவனச் சக்கரவத்திகள் விக்கிரமபாண்டியனின் 5ஆம் ஆட்சியாண்டில்  வெளியிடப்பட்டுள்ளன.  இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் காணப்படுகிறது. இவர் அரசு அதிகாரியாக இருக்கலாம்.  இதில் ‘இத்தேசிநா’ என வரும் சொல் மூலம் வணிகர்கள் இக்கோயிலுக்கு நிலதானம் வழங்கியிருப்பதை அறிய முடிகிறது.

இக்கோயில் கருவறை, மகா மண்டபம், முன்மண்டபம் என்ற அமைப்பில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இதன் மகாமண்டப வலதுபுற சுவரில் 27 செ.மீ. உயரம், 17 செ.மீ. அகலம் உடைய நின்ற நிலையிலான 23-ம் சமண தீர்த்தங்கரர் பார்சுவநாதர் புடைப்புச் சிற்பம் உள்ளது. இங்கு கல்லாலான சித்தசக்கரம் வெளிப்புறச் சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரம் ஏதுமின்றி தட்டையாக உள்ளது. சதுர வடிவ மற்றும் எண்பட்டை  தூண்களில் தரங்க போதிகை அமைப்பு காணப்படுகிறது. இது பாண்டியர் காலக் கட்டடக்கலை அமைப்பில் உள்ளது. அதன் அமைப்பைக் கொண்டு கி.பி. 9-ம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப்பட்டதாகக் கருதலாம்.

இதன் கருவறையில் அமர்ந்த நிலையில், சமண தீர்த்தங்கரர் கற்சிற்பம் இருந்து காணாமல் போனதாகச் சொல்லப் படுகிறது. கருவறை விமானமின்றி உள்ளது.கருவறை, மகா மண்டபத்தில் மீன்கள் புடைப்புச் சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத்தின் உள்புற சுவரில் எதிர் எதிரே அமைந்த நிலையில் பெரிய அளவிலான மீன்களின் இரு புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மூலஸ்தானத்தின் உள்ளே சிறிய அளவில் மூன்றும், பெரிய அளவில் ஆறுமாக ஒன்பது மீன்கள் புடைப்புச் சிற்பமாகவும் கோட்டுருவமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மீன் சின்னங்களைக் கொண்டு, இப்பள்ளி சமணர்களின் பதினெட்டாம் தீர்த்தங்கரரான அரநாதருக்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் இதன் உள்பகுதியில் சுவர் ஓவியங்கள் இருந்து அழிந்துபோன தடயங்கள் காணப்படுகின்றன. 18-ம் சமணத் தீர்த்தங்கரர் அரநாதர் வாகனம் மீன் என்பதால், இது அவருக்குக் கட்டப்பட்டதாகக் கருதலாம்.  

மகாமண்டபம் சுவரில் உரலில் மருந்து இடிக்கும் ஒருவரின் புடைப்புச் சிற்பம், சமணர்களின் மருத்துவ தானத்தைக் குறிப்பதாக உள்ளது. இங்கு 4 துண்டுக் கல்வெட்டுகள் உள்ளன. இவை கி.பி.13-ம் நூற்றாண்டு விக்கிரமபாண்டியன் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். இதில் வெட்டுடையார் உய்யவனதார முதலி என்பவர் பெயர் உள்ளது.

இப்பள்ளியிலிருந்து, ஐம்பது அடி தூரத்தில் பாதக்கோயில் உள்ளது.  இதை இராமர் பாதம் என்கிறார்கள். நான்கு தூண்களுக்கு நடுவே கல்லால் அமைக்கப்பட்ட ஒரு ஜோடி பாதம்  உள்ளது. இதன் இரு தூண்களிலும் வணங்கிய நிலையிலுள்ள இருவரின் சிற்பம் உள்ளது. இவர்களின் தலைக்கு மேல் ஒருகுடை அமைப்பு உள்ளது. எனவே இது சமணர்களால் அமைக்கப்பட்ட பாதக்கோயில் என்பது உறுதியாகிறது. இவர்கள் இப்பாதக் கோயிலை அமைத்தவர்களாய் இருக்கலாம். இதன் முன்புறம் கருடாழ்வார் சிற்பம் சிறு சன்னதி அமைத்து நிறுவப்பட்டுள்ளது. இது சுந்தரபாண்டியன்பட்டினத்தில் இருந்து பின்பு அழிந்துபோன தசரதராம விண்ணகராழ்வார் என்ற பெருமாள் கோயிலில் இருந்து எடுத்துவரப்பட்டதாக இருக்கலாம். 




 மேலூர், திருமலை, குன்றக்குடி, அனுமந்தக்குடி, இடையமடம் வழியாக மதுரை - தொண்டியை இணைக்கும் வணிகப்பெருவழி ஒன்று  இருந்துள்ளது. இப்பெருவழிகளில் வணிகர்கள் தங்கள் வழிபாட்டுக்கென கட்டியுள்ள சமணப்பள்ளிகள் அவர்கள் இங்கு வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றுகளாக விளங்குகின்றன. பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கு இராஜராஜசோழன் பெயரில் அமைந்த ''ராரா பெருவழி'' என பெயர் இருப்பதை இராமநாதபுரம் மாவட்டம்,  தொண்டி அருகிலுள்ள நம்புதாளையில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால கல்வெட்டு குறிப்பிடுகிறது.  இப்பகுதிகளில் ஓடும் விருசுழி மற்றும் பாம்பாற்றின் கரைகளில் சமணப்பள்ளிகள் பல இருந்துள்ளன. அனுமந்தக்குடியில் ஒரு கட்டுமான சமணப் பள்ளி வழிபாட்டில் உள்ளது. 

இப்பகுதியில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் மதங்களுக்கிடையே ஏற்பட்ட பூசலில், சைவ, வைணவ கோயில்களும், சமண, புத்த பள்ளிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்போதும்  இப்பகுதியில் பல கோயில்கள் இடிந்த நிலையில் காணப்படுவது இதற்குச் சான்றாக உள்ளது. இதன் முன்புறம் கி.பி. 1865 இல் கேரளாவில் தயாரிக்கப்பட்ட ஓடுகள் கொண்டு வேய்ந்துள்ளனர். ஆனால் அது முற்றிலும் இடிந்துவிட்டது. 

கி.பி. 14 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிருந்த சமண புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் வேறு மதங்களுக்கு மாறியதால், இப்பகுதிகளில் இருந்த சமண, புத்தப்  பள்ளிகள் கைவிடப்பட்டு இடிந்து போன நிலையில், பிற்காலத்தில் அவை மடங்களாகவோ, சத்திரங்களாகவோ, கோயிலாகவோ மாற்றப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கி.பி. பதினான்காம் நூற்றாண்டு வரை இடையமடம் சமணப் பள்ளியாக வழிபாட்டில் இருந்திருக்கவேண்டும். அதன்பின்பு இது சமணர்களால் கைவிடப்பட்டு இடிந்த நிலையில் இருந்ததை சேதுபதிகள் காலத்தில் அப்பகுதி மக்கள் புனரமைத்து மடமாகப் பயன்படுத்தி இருக்கலாம். கிழவன் சேதுபதி வழங்கிய ஒரு செப்பேட்டில் எல்லை குறிப்பிடும் போது இடையமடம்  குறிப்பிடப்பட்டுள்ளது இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

ஆனாலும் கற்களை மாற்றி அமைத்து கட்டப்பட்டுள்ளதால் இதன் அமைப்பு மாறியும் சிற்பங்கள் சிதைக்கப்பட்டும் உள்ளன. பார்சுவநாதர் சிற்பம் சுண்ணாம்பு சுதை கொண்டு பூசி மறைக்கப்பட்டிருந்துள்ளது. சுண்ணாம்பு பெயர்ந்து விழுந்த பின் சிற்பம் தற்போது வெளிப்பட்டுள்ளது. இங்குள்ள மூலஸ்தான நுழைவுவாயிலின் மேல்பகுதியில் உள்ள கஜலட்சுமி சிற்பம் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதாக இருக்கலாம். இதன் எதிர்புறம் விநாயகருக்கென தனி சன்னதி உள்ளது. இதில் தாமரைப் பீடத்தில் அமர்ந்த நிலையில் விநாயகர் இருக்கிறார். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இது மடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.

சமணப் பள்ளியாகவும், கோபால மடமாகவும் வரலாற்றில் இடம்பெற்ற இக்கோயிலின் மேல் பகுதியில் செடிகள் வளர்ந்துள்ளன. இதன் உள்ளே இடிந்து அழிந்து வருகிறது. இதைப் பழுது நீக்கித் தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என்று இராஜகுரு அவர்கள் தெரிவித்தார். 


போர் வீரர்கள் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல்:

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஊராட்சி ஒன்றியம், புல்லக்கடம்பன் ஊராட்சி, இடையன்வலசை கிராமத்தில் அமைந்துள்ள இடையமடம் அல்லது ராமர் பாதக்கோயில் என்று அழைக்கப்படும் சமணக் கோயிலின் அருகே வீரர்களின் நினைவாக எழுபட்ட சிறிய நடுகல் காணப்படுகிறது.இதனை தொல்லியல் ஆய்வாளர் திரு. அபிஷேக் அவர்கள் கடந்த 2024 ஆம் ஆண்டு ஆவணம் செய்தார். கருவேலமரத்தடியில் காணப்படும் இந்நடுகல் கி.பி. 16 - 17 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். பண்டைய தமிழர்கள் தங்கள் ஊர், ஆநிரைகள் மற்றும் வீரர்களை காக்க போர் புரிந்தவர்களை சிறப்பிக்கும் வகையில் நடுகற்களை நட்டு வழிபட்டனர். இந்த நடுகற்களில் போர்வீரர்களின் உருவங்களும், அவர்களுடன் போரிட்ட நாய்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இடையன்வலசை ராமர் பாதகக் கோயில் அருகே காணப்படும் நடுகலில் இரண்டு போர் வீரர்கள் வாள் மற்றும் கேடயத்துடன் இரண்டு நாய்களை வைத்துள்ளனர். அவர்களின் பின்புறம் ஒருவர் குடை பிடித்துக்கொண்டு நிற்கிறார். போர் வீரர்களுக்கு முன்னதாக நாய்கள் காட்டப்பட்டு இருக்கும் சிலைகள் இராமநாதபுரத்தில் மிக மிக குறைவு. நடுகல்லின் உயரம் 24 செ.மீ, அகலம் - 30 செ.மீ ஆகும். 

இராமநாதபுரம் மாவட்டத்தில் நாய்கள் காட்டப்படும் நடுகற்கள் இதுவரை கிடைக்கவில்லை. அவ்வகையில் இடையன்வலசை நடுகல் கவனம் பெறுகிறது. அதில் நாய் உருவங்கள் இருப்பது தனித்துவமான ஒன்றாக விளங்குகிறது. இந்த நினைவுக்கல் பாதுகாப்பின்றி வெட்ட வெளியில் தனியாக கிடக்கிறது. சிறியதாக இருப்பதனால் தொலைந்துபோக அதிகம் வாய்ப்புள்ளது. இதன் அருமை கருதி இராமநாதபுரம் மாவட்ட தொல்லியல் துறை இந்த நினைவுக் கல்லை பாதுகாக்க வேண்டும். திருவாடானை வட்டம் சூரம்புலி அருகே  செம்பிலான்குடியில் தன் தலையை தானே அரிந்து காணிக்கையாகக் கொடுத்த வீரனின் நவகண்ட சிற்பம் 2019 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது..   கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


புல்லுக்குடி: 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகே உள்ளது புல்லுக்குடி (9.701751, 78.931600) கிராமம். இவ்வூரில் உள்ள கயிலாசநாதசுவாமி சிவன் கோயில் விமானத்தின் கீழ்பகுதியில் குமுதம், ஜகதி, பட்டிகை ஆகிய இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. இது 105 வரிகள் கொண்ட ஒரே கல்வெட்டு ஆகும். கல்வெட்டு, கி.பி.1190 முதல் கி.பி.1218 வரை மதுரையை ஆட்சி செய்த முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது.  இதன் முதல்பகுதி அழிந்துள்ளது.  மன்னரின் பெயர் வரும் இடங்கள் சேதமடைந்துள்ளன. மெய்க்கீர்த்திகொண்டு மன்னர் பெயர் அறியமுடிகிறது. மன்னரின் ஒன்பதாம் ஆட்சியாண்டின் எதிராமாண்டின் எதிராமாண்டு என்பதால் இக்கல்வெட்டின் காலம் கி.பி.1201 ஆகும். 

புல்லுக்குடி சிவன் கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் அரும்பொற்கூற்றத்தில் உள்ள புலிகுடி எனவும், இக்கோயில் இறைவன் பெயர் ஸ்ரீகயிலாயமுடையார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. புல்லுகுடி எனும் இவ்வூர் பெயர் சோழர் காலத்தில் புலிகுடியாக மாற்றப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. புல் எனும் பெயரில் உள்ள ஊர்களில் எல்லாம் சமண சமயத் தடயங்கள் காணப்படுகின்றன. புல்லுகுடியிலும் கண்மாய் கரையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சமண தீர்த்தங்கரர் சிலை இருந்து பின்பு அது காணாமல் போயுள்ளது. இப்பகுதி அரும்பொற்கூற்றத்தில் இருப்பதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. தொண்டி செல்லும் சாலையில் இரண்டு கி.மீ. தொலைவில்  உள்ள அரும்பூர் இக்கூற்றத்தின் தலைமையிடமாக இருக்கலாம். 

இதில் கேரளசிங்க வளநாடு (திருப்பத்தூர்), அண்டநாடு (திருப்புவனம்),  வடதலைச் செம்பில் நாடு (முதுகுளத்தூர்) ஆகிய நாடுகளும், அரும்பொற்கூற்றம், மிழலைக் கூற்றம் (ஆவுடையார்கோயில்) ஆகிய கூற்றங்களும் அண்டநாட்டு பெருமணலூர் (கீழடி அருகில் உள்ளது), வடதலைச் செம்பில் நாட்டு ஆயக்குடியான அழகியபாண்டியநல்லூர் (பரமக்குடி அருகில் உள்ள ஆய்குடி), கேரளசிங்க வளநாட்டு வெளியாற்றூர், மிழலைக் கூற்றத்து சிபிராந்தகநல்லூர், கூற்றுத்தைச்சன்னூர், வடபாம்பாற்றுதியூர், பொன்பற்றி போன்ற பல ஊர்களைச் சேர்ந்த  அரசு அதிகாரிகளின் பெயர்களும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இக்கல்வெட்டின் மெய்க்கீர்த்தியில் “வில்லவர், செம்பியர், விராடர், மராடர், பல்லவர் திறையுடன் முறை முறை பணிய” என வருகிறது. அதாவது செம்பியர் எனும் சோழர்களும் திறையுடன் வந்து தன்னைப் பணிந்தார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மூன்றாம் குலோத்துங்க சோழனின் (கி.பி.1178 – கி.பி.1218) தயவில் ஆட்சி நடத்தி வந்தவர் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேவதான இறையிலியாக நிலம் கொடுக்கப்பட்ட செய்தியினை புல்லுக்குடி சிவன்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது.  மேலஅரும்பூர் கூத்தப்பெருமாள் அய்யனார் கோயில் குளக்கரையில் சேதுபதி கால சூலக்கல் ஒன்றும், மேல அரும்பூர் உத்தமபாண்டீஸ்வரர் கோயில் பின்புறம் ஒன்றும்,  கருப்பசாமி கோயில் குளத்தில் ஒன்றுமாக மேலும் இரண்டு சோழர் கால சூலக்கற்கள் 2017 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் இராஜகுரு அவர்களால் கண்டறியப்பட்டது. கி.பி.1711 முதல் கி.பி.1725 வரை சேதுநாட்டை ஆண்ட முத்துவிஜயரகுநாத சேதுபதியின் பெயரால் விளத்தூர் திருவினாபிள்ளை என்பவர் புல்லுகுடியில் உள்ள கயிலாசநாதசுவாமி கோயிலுக்கு அரும்பூரில் உள்ள நிலத்தைத் தானமாக வழங்கியுள்ள செய்தியினை மேலஅரும்பூர் சூலக்கல் தெரிவிக்கிறது.   சோழர் கால சூலக்கற்களில் கல்வெட்டுகள் இல்லை. 


சுந்தரபாண்டியன் பட்டணம்:

ஏகாம்பரேஸ்வரர் கோவில் (9.842226, 79.094245) என்று அழைக்கப்படும் பழமையான சிவன் கோயில் இவ்வூரில் உள்ளது. “முத்தூற்றுக் கூற்றத்து கீழ்கூற்று சுத்தவல்லியான சுந்தரபாண்டியபுரம் என கல்வெட்டுகளில் இவ்வூர்  குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வூரின் பழைய பெயர் சுத்தவல்லி. இது முதலாம் குலோத்துங்கசோழனின் மகள் சுத்தமல்லியாழ்வார் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது. முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், சுத்தவல்லி என்ற இவ்வூர் பெயர் சுந்தரபாண்டியபுரம் என மாற்றப்பட்டிருக்கிறது. சுந்தரபாண்டியன்பட்டினமும், சோழகன்பேட்டையும் இரட்டை வணிக நகரங்களாக இருந்திருக்க வேண்டும். இவ்வூர் மலைமண்டலமான சேர (கேரள) நாட்டுடன்  தொடர்புடையதாக இருந்துள்ளது. மலைமண்டலத்துக் காந்தளூரான எறிவீரபட்டினத்து இராமன் திருவிக்கிரமனான தேவேந்திர வல்லபப் பதினெண்பூமிச் சமையச் சக்கரவத்திகள் என்பவர் இக்கோயிலுக்கு நிலதானம்  வழங்கியுள்ளார். கி.பி.13ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டில் சொக்ககூத்தர், தம்பிராட்டி என  இறைவன், இறைவி பெயர் சொல்லப்பட்டுள்ளது. இதே கல்வெட்டில் ஆட்டை எனும் சோழர்கள் பயன்படுத்திய ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வூரில் பாண்டியர் காலத்திலேயே ஒரு மடம் இருந்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. தற்போதும் சிவன்கோயிலின் தெற்கே ஒரு மடம் உள்ளது. இதன் அமைப்பைக் கொண்டு இம்மடம் கி.பி.8ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கருதலாம். இந்த மடத்துக்கு நிலதானம் வழங்கப்பட்டதாக கல்வெட்டுகள் சொல்கின்றன. இம்மடம் பௌத்தமடமாக இருந்து பின் சைவ மடமாக மாற்றப்பட்டிருக்கலாம். அங்குள்ள ஒரு நாசிக்கூட்டில் புத்தரின் புடைப்புச் சிற்பம் உள்ளது இதை உறுதிப்படுத்துகிறது. அதேபோல இராமேஸ்வரம் அருகில் அரியாங்குண்டு பகுதியில் ஒரு பெரிய பௌத்தப் பள்ளி இருந்துள்ளது. அங்கு புத்தரின் கற்சிற்பமும் கிடைத்துள்ளது. 

சிவன் கோயிலின் எதிரில் உள்ள ஐயாகுளத்தின் கிழக்குக் கரையில் மண்ணில் புதைந்தநிலையில் ஒரு  சுடுமண் உறைகிணறு உள்ளது. இங்குள்ள கிணறு ஒரே அளவுள்ள இரு வட்டமான சுடுமண் உறைகளை ஒன்றன் மீது ஒன்று அடுக்கி அதன் இடையில் களிமண்ணால் பூசப்பட்டுள்ளது. இக்குளத்தின் வடக்கில்  மரைக்காயர் குளம் உள்ளது. இக்குளம் நிரம்பிய பின் அதன் மிகைநீர் ஐயாகுளத்துக்கு வருவதற்வாக நான்கு சுடுமண் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றைச் சுற்றிலும் செங்கல் கட்டுமானம் உள்ளது. இந்த இரு குளங்களும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம். இவ்வூரில் காணப்படும் சோழர் காலத் தடயங்கள் மூலம் இந்த உறைகிணறு கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். ஐயாகுளத்தின் கரையில் சீனநாட்டுப் பானை ஓடுகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத்தாதுக்கள், சுடுமண் கூரை ஓடுகள், வட்டச் சில்லுகள், அறுத்த சங்கு  ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஐயாகுளத்தை அகலப்படுத்தியபோது இந்த ஓடுகள் வெளிப்பட்டிருக்கலாம். சீனநாட்டுப் பானை ஓடுகளில் போர்சலைன் (Porcelain), செலடன் (Celadon)   என இருவகைகள் உள்ளன. இந்த இருவகை ஓடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எழுத்து & தொகுப்பு 
தமிழ்தாசன்

ஒளிப்படம்: 
  • திரு. ச. ஜோதிமணி (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)
  • திரு. ரெ. வெங்கடராமன் (சூழல் ஒளிப்பட கலைஞர்)
  • திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை (தாவரவியல் ஆய்வாளர்)
  • மரு. த. ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)
  • திரு. பு.இரா. விஸ்வநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)
  • திரு. ந. இரவீந்திரன் (பறவையியலாளர்)
  • திரு. சி. சதிஷ்குமார்  (பசுமை செயல்பாட்டாளர்)
  • திரு. வி. கௌதமா (பறவையியல் ஆர்வலர்)
  • திரு.  கே. ஸ்ரீனிவாசன்  
  • திரு. தமிழ்தாசன் (எ) மே. ஜான்சன் (பண்பாட்டுச் சூழலியலாளர்)




























































































































































































Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை