திருச்சுனை - சேக்கிபட்டி - அய்யப்பட்டி ஊர்களில் பண்பாட்டு & பல்லுயிர் சூழல் ஆய்வு

மதுரை மேலூர் - கொட்டாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள திருச்சுனை, சேக்கிபட்டி, அய்யாப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அமைந்துள்ள மலைகளை உடைத்து கல்குவாரியாக்குவதற்கு 30.10.2023 தேதி அன்று 20 ஆண்டு காலத்திற்கு ஏலம் விடுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக ஏலம் அறிவிப்பு மீண்டும் 30.11.2023 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.


கல்குவாரிகள் ஏலம் அறிவிப்பிற்கு உள்ளன திருச்சுனை கோழிமுட்டை பாறை, சேக்கிபட்டி பனிமலை குட்டு, அய்யப்பட்டி வண்ணான்பாறை உள்ளிட்ட மலை பாறைகளை அதன் வாழ்விட சூழலை பல்வேறு துறைசார்ந்த வல்லுநர்களுடன் கடந்த 28-10-2023 முதல் 04.11.2023 வரை ஆய்வு செய்தோம்.




திருச்சுனை கோழிமுட்டை பாறை: 

மதுரை மாவட்டம் மேலூர் - கொட்டாம்பட்டி அருகேயுள்ளது திருச்சுனை ஊர். இவ்வூரில் 13-ம் நூற்றாண்டில் மாற்வர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் கட்டப்பட்டுள்ள அகஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க ஊர். அகஸ்தீஸ்வரர் கோயில் குன்றிற்கு மேற்கில் 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கோழிமுட்டை பாறை. தோற்றத்தில் கோழிமுட்டை போன்றே இருப்பதால் மக்கள் இம்மலையை இவ்வாறு அழைக்கின்றனர். இம்மலை நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. இம்மலையில் பெய்யும் மழை நீர் செக்கடிபட்டி புதுக்கண்மாய்க்கும், மடையினி கண்மாய்க்கும், கஞ்சி காத்தான் குளத்திற்கு செல்கிறது. கோழிமுட்டை மலையின் உச்சியில் சிறிய பரப்பளவில் வேளாண்மை செய்கிறார்கள். கோழிமுட்டை பாறையை சுற்றிலும் வெள்ளச்சின்ன பாறை, செக்கடிபாறை, மொச்சுக்குட்டு பாறை என பல்வேறு மலைப்பாறைகள் உள்ளன.




அய்யாப்பட்டி வண்ணான் பாறை: 

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் ஓட்டக்கோவில்பட்டி - தறுக்காகுடி அருகே அமைந்துள்ளது அய்யாப்பட்டி. வரலாற்று சிறப்புமிக்க ஊர். "இவ்வூரில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டுள்ள சிவன் கோயில் ஒன்றுள்ளது. பிற்கால பாண்டியர் கல்வெட்டுகளில், இவ்வூரின் பெயர் திருக்காய்க்குடி என்று சூட்டப்பட்டுள்ளது. இவ்வூர் பிற்கால பாண்டியராட்சி காலத்தில் சுரநாடு என்ற நாட்டுப் பிரிவுக்கிற்கு உட்பட்டு இருந்தது. இங்கெழுந்து அருளியுள்ள சிவபெருமான், சுரநாட்டுத் திருக்காய்க்குடியில் உடையார் திருகோட்டீசுவரமுடைய நாயனார் என்று அழைக்கப்பட்டுள்ளார். பிற்காலத்தில் இவ்வூருக்கு வேழகுலநாரை அன நல்லூர் ஆன தறுக்காக்குடி என்ற பெயரும் தருக்காய்க்குடி என்ற பெயரும் வழங்கியுள்ளன. திருக்காய்க்குடி என்ற பெயரே நாளடைவில் தருக்காய்க்குடி என்றும் தறுக்காக்குடி என்றும் மறுவியுள்ளது எனலாம். விசய நகர வேந்தர் காலத்தில் இவ்வூர் துவாராபதி நாடு என்ற நட்டு பிரிவிற்கு உட்பட்டு இருந்துள்ளது". (மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு)

அய்யாப்பட்டியில் உள்ள வண்ணான் பாறை மீது வேளாண்குடி மக்கள் கடந்து 20 ஆண்டுகளாக குடிசை அமைத்து குடியிருந்து வருகிறார்கள். வண்ணான் பாறை சின்னாண்டி கண்மாய், அப்பச்சி ஊரணி ஆகிய நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது.


சேக்கிபட்டி பனிமலைக் குட்டு: 

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கருங்காலக்குடிக்கு அருகே அமைந்துள்ளது சேக்கிபட்டி கிராமம். இவ்வூரின் தென்கிழக்கில் உள்ளது பனிமலை குட்டு மற்றும் பாசிப்பாறை. பனிமலைக் குன்றின் உச்சியில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. மேலும் இக்குன்றின் மீது காட்டும்மன் காவலுக்கு இருப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர். ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று இக்குன்றில் உள்ள முருகன் கோயிலில் பொங்கல் வைத்து திருவிழா நடக்கிறது. கார்த்திகை மாதமும் வழிபாடுகள் நடைபெறுகிறது. அறுவடையில் முதல் காணிக்கையை முருகனுக்கு வைத்து வழிபடுவது வேளாண்குடி மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. பயிர்களை உலர்த்துவதற்கும், கால்நடைகளை மேய்ப்பதற்கும் இந்த மலையை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.





வவ்வால் புடவு:

வவ்வால் புடவு:
சேக்கிபட்டி பனிமலையில் இயற்கையாக அமைந்த புடவுகள், குகைகள் உள்ளன. அதனை மக்கள் ''பார்'' என்று அழைகின்றனர். வவ்வால் பார், புலிப்பார், ஆட்டுப்பார், மான்பார், மயில்பார் என 5க்கும் மேற்பட்ட புடவுகள் இம்மலையில் உள்ளது. வவ்வால் புடவு என்று அழைக்கப்படும் இயற்கையாக அமைந்த இரண்டு குகைகள் காணப்படுகின்றன. முதல் குகையின் உள்ளே 50 பேர் அமர்ந்து கொள்ளும் வகையிலாக இயற்கையாக அமைந்துள்ளது. இங்கு மழை தண்ணீர் தேங்கி சிறு குளமாக காணப்படுகிறது. சமணர் படுக்கைகள் போன்று இரண்டு படுக்கைகள் வெட்டி வைக்கப்பட்டுள்ளன. தரையில் சில செதுக்களை காண முடிகிறது. அருகில் இருக்கும் மற்றொரு குகையானது உள்ளே நீண்ட குகையாக சென்று கொண்டிருக்கிறது. வவ்வால்கள் அதிக எண்ணிக்கையில் காணப்படுவதால் கடைசி வரை சென்று ஆய்வு செய்ய இயலவில்லை. இப்புடவின் அடிவாரத்தில் மருந்து அரைக்கும் குழி ஒன்றும் காணப்படுகிறது. இது போன்ற குழிகள் பெரும்பாலும் சமண சமயத்தை தழுவிய முனிவர்கள் தங்குகின்ற பகுதியில்தான் இருப்பது வழக்கம். மேலும் இக்குகையின் தரையில் காட்டுப்பன்றி, தேர், ஆட்டுப்புலியாட்டம் ஆகியவை செதுக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் சுமார் 200 ஆண்டுகளுக்குள் இருக்கலாம். குகையின் உள்பகுதியில் எங்கேனும் பாறை ஓவியங்கள் இருந்து அதனை பார்த்து உள்ளூர் மக்கள் இவற்றை செதுக்கியிருக்கலாம். எனவே இதனை தொல்லியல்துறை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.






பாசிப்பாறை:

பாசிப்பாறை மீது உச்சி பிள்ளையார் கோயிலும் பாறைக்குன்றின் அடிவாரத்த்தில் பாசிக்குளமும் தாமரைக்குளமும் உள்ளது. இந்த குளம் கோவிலோடு தொடர்புடைய புனிதநீராடும் தீர்த்தக்குளம், தருமம் என்று நம்புகின்றனர். அழகர் கோயில் கும்பாபிஷேகதிற்கு பாசிகுளத்தில் இருந்து நீரெடுத்து செல்வது மரபு.




ஒடுங்காகுடி ஆண்டவர் தர்கா: 

சேக்கிபட்டியில் பனிமலை குட்டின் மேற்கு முனையில் ஒரு சிறிய காட்டுப்பகுதிக்குள் அமைந்துள்ளது ஒடுங்காகுடி ஆண்டவர் தர்கா. இதனை ஒடுங்காகுடி ஆண்டவர் கோயில்காடு எனவும் அழைகின்றனர். பன்னெடுங்காலமாக சேக்கிபட்டி முத்தாலம்மன் மாசி மாத திருவிழா வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. முத்தாலம்மன் கோயில் 13 முக்கிய காரணக்காரர்களில் ஒரு காரணக்காராக ஒடுங்காகுடி தர்காவும் உள்ளது. இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழாவின் போது ஊர் மக்கள் அனைவரும் கோழி, ஆடு பலிகொடுத்து ஒடுங்காகுடி ஆண்டவரை வழிபடுகின்றனர். சேக்கிபட்டி ஊர் மக்கள் ஒன்றுகூடி நடந்தும் பொது திருவிழாக்களில் ஒன்றாகவே கந்தூரி விழாவும் நடத்தப்படுகிறது. சமூக நல்லிணக்கத்திற்கு பெரும் முன்னோடியாக இக்கிராமங்கள் விளங்குகிறது.

வேளாண்மை தொழில்: 

நெல்லு, கரும்பு, கத்திரி, மிளகாய், வேர்க்கடலை, பூ விவசாயம் , கம்பு, சோளம் உள்ளிட்டவைகள் முதன்மையாக பயிரிடப்படுகிறது.

பல்லுயிர் சூழல்:  

பனிமலையில் நல்லதண்ணி ஊத்து, வண்ணான் ஊத்து உள்ளிட்ட சுனைகள் உள்ளன. இம்மலையானது நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ளது. இம்மலையில் பெய்யும் மழைநீர் கிழக்கில் பெரியப்பால் குண்டு, சின்னப்பால் குண்டு கண்மாய்களை நிறைக்கிறது. மலையில் இருந்து இந்த கண்மாய்களுக்கு வரும் நீர் பால் போன்ற தூய்மையான நிறத்தில் இருப்பதால் இவ்வாறு குளங்களுக்கு பெயரிட்டுள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். பால்குண்டு கண்மாய் நிறைந்து மறுகால் ஓடும் நீர் அடுத்தடுத்துள்ள ஆலம்பட்டி, குன்னாராம்பட்டி, அம்மாபட்டி, உடப்பம்பட்டி, தேனக்குடிபட்டி, உடைக்குளம், மாங்குளம், பெரியகுளம், செக்கடிபட்டி புதுக்கண்மாய், மடையினி கண்மாய் என தொடர் கண்மாய்களை நிறைத்து கருங்காலக்குடி கண்மாய் வரை செல்கிறது. இந்த தொடர்கண்மாய்களை நீராதாரமாக கொண்டு பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் உழவர்கள் வேளாண்மையில் ஈடுபடுகிறார்கள். மீன்பிடி தொழிலுக்கும், கால்நடை வளர்ப்புக்கும் இந்த கண்மாய்கள் ஆதாரமாக இருக்கிறது.

பனிமலைகுட்டின் மேற்கு முனையில் அடர்ந்த சிறுகாடு உள்ளது. அதில் அறிய வகை உயிரினங்களான சாம்பல் நிற தேவாங்கு, முள்ளெலி, அலங்கு உள்ளிட்டவைகளும் வெருகு, புனுகு பூனை, உடும்பு, முயல், கீறி உள்ளிட்ட உயிரினங்கள் வாழிடமாக கொண்டு வாழுகின்றன. காட்டுமாடுகளும், கடா மான்களும் புள்ளிமான்களும் இப்பகுதிக்கு வந்து செல்கின்றன.

கடலாத்தி, தான்றி, வெப்பாலை, சிறுபூனைகாலி, ஆதாளை, சுக்குநாறி புல், என மரம், செடி, கொடி, புல் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தாவரங்களை ஆவணம் செய்தோம். அரிய வகை மூலிகைகளான சேத்து புண்ணை ஆற்றும் சேத்துக்கு ராஜா என்கின்ற மூலிகைகள் அதிகமாக காணப்படுகிறது

செம்மார்பு குக்குறுவான், வெளிர் அலகு பூங்கொத்தி, தையல் சிட்டு, பனங்காடை, கூகை ஆந்தை, புள்ளி ஆந்தை, வல்லூறு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பறவைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. வனத்துறை இப்பகுதியினை ஆய்வு செய்ய முன்வர வேண்டும் என கோருகிறோம்.

திருச்சுனை, சேக்கிபட்டி, அய்யப்பட்டி பகுதிகளில் ஆய்வுக் குழு வல்லுநர்களால் பதிவு செய்யப்பட்ட பல்துறைசார் ஆவணங்களையும், கல்குவாரி அமைந்தால் மேல்குறிப்பட்ட தொல்லியல் & வரலாற்று தடங்கள், பண்பாட்டு கூறுகள், மக்களின் வாழ்வாதார தொழில்கள், வேளாண்மை பயிர் வகைகள், பல்லுயிரிகளின் வாழ்விடச் சூழல் எனஅனைத்தும் மிகப் பெரிய அச்சுறுத்தலையும் பாதிப்பையும் சந்திக்கும் என்பதையும் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வோம்.




ஆய்வுகக்குழுவில் அங்கம் வகித்தோர்கள்: 

  • பேரா. ப. தேவி அறிவு செல்வம் - கோயில் கட்டிடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர் 
  • பேரா. ராஜேஸ் - விலங்கியல்துறை பேராசிரியர் 
  • மரு. பத்ரி நாராயணன் - பறவையிலாளர் 
  • திரு. காளிமுத்து - இயற்கை வேளாண் ஆய்வளர் 
  • திரு. கார்த்திகேயன் பார்கவிதை - தாவரவியல் ஆய்வாளர் 
  • திரு. விஸ்வா - ஊர்வனங்கள் ஆய்வளர் 
  • திரு. வீரேஷ் - காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்
  • திரு. தமிழ்தாசன் - நீரியல் ஆய்வாளர்     


ஒருங்கிணைப்பு:

மதுரை இயற்கை பண்பாட்டு பேரவை 

05.11.2023


Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை