வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை
வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை
Arid Grasslands, Kallikudi - Cultural Nature Walk
மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாகுளம் வறள் புல்வெளிகள் பகுதிக்கு 22.12.2024 அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 26வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 பேர் வரை பங்கெடுத்தனர்.
உலர் இலையுதிர்காடு, புதர் காடு, கோயில்காடு, பள்ளத்தாக்கு, மலை, குன்று, கரடு, பாறை, அருவி, ஆறு, சுனை, ஏரி, குளம், அணை, வயல்வெளி என மதுரை மாவட்டத்தில் காணப்படும் குறிஞ்சி, முல்லை, மருதம் உள்ளிட்ட திணை மண்டலத்தின் பல்வேறு நிலவியல் அமைப்புகள் ஊடே பயணித்து, அப்பகுதியின் முதற்பொழுது மற்றும் கருப்பொருள் குறித்த கள ஆவணங்களை சேகரித்து வந்து இருக்கிறோம். முல்லைத் திணை உயிரியல் மண்டலத்தின் ஒரு பகுதியாக விளங்கும் வறள் புல்வெளிகளை பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் மதுரை கள்ளிக்குடியில் ஆவணம் செய்தோம். மதுரை மாவட்டத்தின் காணப்படும் வறள் புல்வெளிகள் குறித்த உரையாடலுக்கு இந்நிகழ்வு வலு சேர்க்கும் என்று நம்புகிறோம்.
இந்த நடையில் கள்ளிக்குடி பொந்து பாறை கற்படுக்கை, முருகன் கோயில், பிற்பாண்டியர் கால பெருமாள் கோயில், பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகியவற்றை பார்த்தோம். மஞ்சணத்தி, இலந்தை, வெள்வேலம், வெண்பூலா உள்ளிட்ட உயரம் குறைவான மரங்களும், ஆவாரை, கொழுஞ்சி, எருக்கு, குரண்டி, கள்ளி, அவுரி உள்ளிட்ட செடிகளும் என 44 வகை தாவரங்கள் இப்பகுதியில் ஆவணம் செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் அரிதாக காணப்படும் பாம்பாதிரி மரம் ஒன்று இப்பகுதியில் காண முடிந்தது. புல்வெளிக்கழுகு, கல் கவுதாரி, கள்ளிப்புறா, புதர் வானம்பாடி, நாணல் கதிர் குருவி, புதர் சிட்டு, வெண்தலை சிலம்பன், தூக்கனாங்குருவி, தினைக்குருவி, நெல்வயல் நெட்டைக்காலி, செம்மூக்கு ஆள்காட்டி உள்ளிட்ட 101 வகை பறவைகளை ஆவணம் செய்தோம். புள்ளிமான், காட்டு பூனை (வெருகு), காட்டுப்பன்றி, காட்டு முயல் உள்ளிட்ட பாலூட்டி வகை காட்டு விலங்குகள் இப்புல்வெளிகளில் வாழுகின்றன. சாரை, நாகம், வெள்ளிக்கோல் வரையன், விசிறித் தொண்டை ஓணான், பாறைப்பல்லி உள்ளிட்ட ஊர்வன வகை உயிரினங்களும்; நாமதாவி, கறிவேப்பிலை அழகன், உரோசா அழகி, சிவப்புடல் அழகி, புள்ளி நீலன், கரும்புள்ளி நீலன் உள்ளிட்ட 26 வகை வண்ணத்துப்பூச்சிகளை ஆவணம் செய்தோம். கள்ளிக்குடி பொந்து பாறையிலும், சுற்றியிருந்த பாறை இடுக்கு பிளவுகளிலும் நரிகள் வாழ்ந்து வந்தன. ஆனால் இப்பகுதியில் கல்குவாரிகள் இயங்க துவங்கி பின்பு பாறைகள் வெடிவைத்து உடைக்கப்பட்டன. அதன் காரணமாக இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த நரிகள் காணாமல் போய்விட்டது என கள்ளிக்குடியை சேர்ந்த உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
புல்வெளிகள்:
இந்தியாவில் மிக குறைவாக புரிந்து கொள்ளப்பட்ட சூழல் மண்டலம் புல்வெளிகள் ஆகும். அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை தவிர அனைத்து இடங்களிலும் புல்வெளிகள் காணப்படுகின்றன. நிலம், கடல், மலை, காடு, ஆறு, ஏரி என அனைத்து இடங்களிலும் புல்வெளிகள் காணப்படுகின்றன. புற்கள் அடர்ந்த பகுதியினை அல்லது புல் வகைகள் பெருமான்மையாக உள்ள நிலப்பரப்பை புல்வெளிகள் என அழைக்கிறோம். நெல், கோதுமை, சோளம், கம்பு, வரகு , தினை உள்ளிட்ட பயிர்கள் துவங்கி மூங்கில், பனை உள்ளிட்ட மரங்களும் புல் குடும்பத்தை சார்ந்த தாவரங்களாகும். புற்கள் கால்நடைகளின் தீவனமாகவும், புல்வெளிகள் மேய்ச்சல் நிலமாகவும் விளங்குகின்றன. புல்வெளியானது இயற்கையாக காணப்படுகிறது. அதே சமயம் மனிதர்களால் புதர்செடிகள் அல்லது மர வகைகளை அழித்துவிடும் போதும் அவ்விடத்தை புல்வெளிகள் நிரப்புகின்றன. புல்வெளிகள் என்பது புற்கள் நிறைந்த பகுதியன்று, தாவர வகைகளில் புற்கள் மிகுதியாக காணப்படும் பகுதியாகும். புல்வெளிகளில் இதர மரங்கள், புதர்கள், செடிகள் ஆங்காங்கே வளர்ந்து இருப்பதை காண முடியும். இந்தியாவில் பல்வேறு நிலமைப்புகளுக்கு ஏற்ப புல்வெளிகளின் தன்மையும், வகையும் அமைகின்றன. வெப்பமண்டல புல்வெளிகள் (Temperate), வெள்ள சமவெளி புற்கள் (Terai), சவன்னா புல்வெளிகள் (Savanna), மித வறள் புல்வெளிகள் (Semi-Arid), வறள் புல்வெளிகள் (Arid), சோலை புல்வெளிகள் (Shola Grasslands), பண்ணி புல்வெளிகள் (Banni) என பலவகை புல்வெளிகள் இந்திய நிலப்பரப்பில் காணப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பரவலாக வறள் புல்வெளில்களே அதிகம் காணப்படுகின்றன. வறள் புல்வெளிகள் குறித்து நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
வறள் புல்வெளிகள்:
மழைப்பொழிவு குறைவான வறண்ட பகுதி அல்லது மழை மறைவு பகுதிகளே வறள் புல்வெளிகள் வளரும் நிலவியல் அமைப்பை கொண்டு இருக்கின்றன. எனவே தண்ணீர் பற்றாக்குறையை தாங்கி வளரும் திறன் படைத்த புற்களும், செடிகளும், உயரமற்ற மரங்களும் மட்டுமே வறள் புல்வெளிகளில் ஆங்காங்கே வளருகின்றன. அனைத்து புல்வெளி வகைகளிலும் அழிவுறும் நிலையில் இருக்கும் புல்வெளிகள் வறள் புல்வெளிகள் ஆகும். வறள் புல்வெளிகள் அரசின் ஆவணங்களில் தரிசு அல்லது புறம்போக்கு என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேளாண்மை, பாசன விரிவாக்கம், நகரமயக்கம், தொழிற்சாலை விரிவாக்கம் காரணமாக புல்வெளிகள் என்னும் உயிரிய சூழல் மண்டலம் அழிந்து வருகின்றன. கானமயில், நரி, அலங்கு என அழிவுறும் நிலையில் உள்ள உயிரினங்கள் வறள் புல்வெளிகளிகளில் காணப்படுகின்றன.
பண்பாட்டு நோக்கில் புல்வெளிகள்:
வைகை வடிநில கோட்டத்திற்கும் தாமிரபரணி வடிநில கோட்டத்திற்கும் இடையில் இருக்கும் திருமங்கலம், கள்ளிக்குடி, காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் பகுதிகளில் வறள் புல்வெளிகளே அதிகம் காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தரிசு நிலங்கள் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. இராபர்ட் புரூஸ்புட் என்ற ஐரோப்பிய அறிஞர் விருதுநகர் மாவட்டம் ஆவியூரில் பழைய கற்கால சில்லு ஒன்றை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். இடைக்கற்கால மனிதன் வாழ்ந்த தடயங்கள் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே புதுப்பட்டி, சிவரக்கோட்டை போன்ற இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வூர்கள் மதுரை – விருதுநகர் மாவட்டத்தில் ஓடும் காட்டாறான குண்டாற்றின் கரைகளில் உள்ள வறள் புல்வெளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் சிட்டுலொட்டி பகுதியில் உள்ள கோபால்சாமி மலையில் கல்லாலான வட்டச்சில்லு, அரைப்புக் கற்கள், சிவப்பு நிற பானை ஓடுகள், புதிய கற்கால கற்கோடரி, இரும்புக் கசடுகள், பல்லாங்குழி அமைப்பு, ஒரு பாறைச் செதுக்கல், இரும்புக்காலத்தைச் சேர்ந்த சேதமடைந்த கல்திட்டை ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. முற்பாண்டியர் மற்றும் பிற்பாண்டியர் கால கோயில்கள் கள்ளிக்குடி, திருமாணிக்கம், திருமங்கலம் பகுதியில் காணப்படுகின்றது. பாண்டிய மன்னர் ஆட்சி காலத்தில் இப்பகுதிகள் ஏரிப்பாசனம் பெற்று புல்வெளிகள் விளை நிலங்களாக மாற்றமடைந்தன என்பதற்கு சான்றுகளாக இக்கோயில்கள் திகழ்கின்றன.
உலர் இலையுதிர் காடுகள், புதர்காடுகள், பொட்டல் காடுகள், கோயில்காடுகள் போல புல்வெளிகளும் மேய்ச்சல் நிலமாக விளங்குகிறது. முல்லை திணைக்குரிய மக்களும், அம்மக்கள் சார்ந்த பண்பாட்டு கூறுகளையும் விழுமியங்களையும், வறள் புல்வெளிகளில் நாம் காண முடியும்.
சூழலியல் நோக்கில் புல்வெளிகள்:
உலகவில் 20% கார்பனை புல்வெளிகள் நிலத்தடியில் தக்கவைத்து இருக்கின்றன. ஆழமாக வேரூன்றிய புற்கள் மண்ணில் கணிசமான அளவு கார்பனை சேமித்து வைக்கின்றன. அவ்வாறாக புல்வெளிகள் காணப்படும் பகுதிகளில் 60 - 80% கார்பனை புல்வெளிகள் சேமித்து வைக்கின்றன. கார்பனை நிலத்தடியில் சேகரித்து வைப்பதன் மூலம் புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்தும் முக்கிய காரணிகளாக புல்வெளிகள் விளங்குகின்றன.
புல்வெளிகளில் பூக்கும் தாவரங்கள் பரவலாக காணப்படுகிறது. அதன் மகரந்த சேர்க்கை நிகழவும், மகரந்த சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் பூச்சியினங்களையும் புல்வெளிகள் பாதுகாக்கிறது. பாலூட்டி வகை காட்டுயிரிகள், பறவைகள், ஊர்வன உயிரிகள், இருவாழ்விகள், பூச்சியினங்கள் என அனைத்து வகை உயிரினங்களின் வாழிடமாகவும் புல்வெளிகள் விளங்குகின்றன. நரி, கான மயில், வரகு கோழி உள்ளிட்ட அருகி வரும் உயிரினங்களின் வாழிடமாக புல்வெளிகள் உள்ளன. புல்வெளிகளின் அழிவு அதை சார்ந்திருக்கும் உயிரினங்களையும் அழிவுக்கு உள்ளாக்குகிறது.
மதுரை மாவட்ட வறள் புல்வெளிகள்:
மதுரை மாவட்டத்தில் வாசிமலை, சதுரகிரி, அழகர்மலை, சிறுமலை அடிவார பகுதிகளில் வறள் புல்வெளிகளை காண முடியும். மதுரையில் திருமங்கலம், தோப்பூர், சிவரக்கோட்டை, நேசனேரி, கரடிக்கல், கள்ளிக்குடி, வில்லூர், தென்னமநல்லூர், தே. கல்லுப்பட்டி, பாறைக்குளம், பேரையூர் பகுதிகளில் காணப்படும் வறள் புல்வெளிகள் பல்லுயிரிய பெருக்கமுள்ள பகுதிகளாகும். சுமார் 170 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள வறள் புல்வெளிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய நரி, புள்ளிமான், வெருகு, மரநாய், புனுகு பூனை, காட்டு முயல், அலங்கு, உடும்பு, பாம்பு, பல்லி, ஓணான் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் புகழிடமாகவும் புல்வெளிகள் விளங்குகின்றன. பல்லுயிரிய பெருக்கமுள்ள வறள் புல்வெளிகளை மறு ஆய்வு செய்து தகுதி வாய்ந்த புல்வெளி பகுதிகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். காடு, மலை, ஏரி, சதுப்பு நிலம் என பல்வேறு இயற்கை அமைப்புகள் பல்லுயிரிய நோக்கில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்படுவது போல பல்லுயிரிய நோக்கில் புல்வெளிகள் பாதுகாக்கப்பட வேண்டும். பாதுகாக்கப்பட்ட வறள் புல்வெளிகள் என்று தமிழ்நாட்டில் எதுவும் இதுவரை வகைப்படுத்தப்பட்டவில்லை.
குண்டாறு:
மதுரை மாவட்ட உசிலம்பட்டி முதல் பேரையூர் வரை உள்ள மலைத்தொடர்களான நாகமலை, வெள்ளைக்கரடு, வடக்கு மலை, தெற்கு மலை, குதிரைமலை, வாசிமலை, எழுமலை பண்ணைக்காடு, சதுரகிரி, எத்திலா மலை வரை உள்ள மலைத்தொடர்கள் குண்டாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களின் ஊடே 150 கி.மீ நீளம் பாய்ந்து சாயல்குடி மூக்கையூர் அருகே மன்னார் வளைகுடாவில் கலக்கிறது. குண்டாறு என்பது ஒரு ஆண்டில் சில நாட்கள் மட்டுமே நீரோடும் பருவகால ஆறாகும். மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகும் ஒரே ஆறு குண்டாறு ஆகும். நாகமலை கிருதுமால் நதியும் சதுரகிரி கவுண்டா நதியும் குண்டாற்றின் கிளையாறுகள்தாம். குண்டாறு தோன்றும் மலையடிவார பகுதிகளிலும், குண்டாறு பாயும் இருகரைகளிலும் வறள் புல்வெளிகளை காண முடியும்.
கள்ளிக்குடி:
மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டம் திருமங்கலம் - விருதுநகர் தேசிய நெடுஞ்சாலைக்கு இடையில் குண்டாற்றின் துணையாராக உள்ள கமண்டல ஆற்றின் கரையில் அமைந்துள்ளது கள்ளிக்குடி. வறள் புல்வெளிகளில் பரவலாக கள்ளிச் செடிகள் காணப்படுகின்றன. கள்ளிச்செடி நிறைந்த பகுதி என்பதால் கள்ளிக்குடி என பெயர் வந்து இருக்கலாம். வேலம், குறிச்சி, குரவம், பூலா போன்ற மரங்கள் வறள் புல்வெளிகளில் காண முடியும். அதனை சுட்டும் வகையில் கருவேலம்பட்டி, வன்னிவேலம்பட்டி, வேளா(லா)ம்பூர், தேவன்குறிச்சி, கல்குறிச்சி, குராயூர், பூலாம்பட்டி, குரண்டி, சோளம்பட்டி, புல்லக்கோட்டை, காரைக்கேணி உள்ளிட்ட பெயர்களை கொண்ட ஊர்களை இப்பகுதியில் பரவலாக காண முடியும். கள்ளிக்குடி, தென்னவநல்லூர், புல்லூர்க்குடி, கல்குறிச்சி, குரண்டி உள்ளிட்ட ஊரின் பெயர்கள் திருமங்கலம் - உசிலம்பட்டியில் உள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
பெருமாள் கோயில்:
கள்ளிக்குடி பகுதியில் காணப்படும் பெருமாள் கோயில் பழமையானதாகும். இக்கோயிலில் காணப்படும் பிற்பாண்டியர் கால 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் இப்பகுதியில் உள்ள ஏரிகள், நர்சானி வாய்க்கால், நீர்பாசன உழவு நெறிமுறைகள் குறித்த செய்திகளை தெரிவிக்கின்றன. க.வெள்ளாகுளம் பகுதியில் பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஒன்றும் உள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்:
அலங்காரவள்ளி அம்மன் கோயில்:
பொந்து பாறை முருகன் கோயில்:
வெள்ளாகுளம் பகுதியில் பொந்து பாறை என்று அழைக்கப்படும் பாறையின் உச்சியில் முருகன் கோயில் ஒன்று உள்ளது. பாறையின் பெயருக்கேற்ற வகையில் பொந்து போன்ற இயற்கையான குகைத்தளம் ஒன்று உள்ளது. இதில் நான்கு அடி அகலம் கொண்ட ஏழு கற்படுக்கைகளும், மழை நீர் வழிந்தோட குகை தளத்தின் வாயிலின் தரைதளத்தில் சிறிய வாய்க்கால் போன்ற அமைப்பும் வெட்டப்பட்டுள்ளது. சிறப்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பணி ஏதோ காரணத்தால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. குகைக்கு உள்ளே, குகைக்கு வெளியே என இரண்டு மருந்து அரைக்கும் குழிகளும் காணப்படுகின்றன. இதன் காலம் 1500 முதல் 1800 ஆண்டுகளாக இருக்கலாம் என பாண்டிய நாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர் அருண்சந்திரன் ஆய்வு செய்த 2021 ஆம் ஆண்டு வெளிப்படுத்தியுள்ளார். இந்த குகைக்குள் ஆஞ்சநேயர் சிற்பம் ஒன்று வழிபாட்டில் உள்ளது.
புல்வெளிக் கழுகு:
மத்திய ஆசிய பகுதிகளில் இருந்து குளிர்காலங்களில் இந்தியாவிற்கு வலசை வரும் புல்வெளிக் கழுகு முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் பறவையியலார் மருத்துவர் ஹீமோக்ளோப்ளின் அவர்களால் 22.12.2024 அன்று மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள வறள் புல்வெளி பகுதியில் ஆவணம் செய்யப்பட்டது. புல்வெளிக் கழுகுகள் கிழக்கு ருமேனியாவிலிருந்து தெற்கு உருசியா வரையிலான பகுதிகள் மற்றும் மத்திய ஆசியாவின் புல்வெளிகள் முதல் மங்கோலியா வரையிலான பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் வசிக்கும் பறவைகள், அவற்றின் குளிர்காலத்தை ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் கழிக்கின்றன. பொதுவாக வட இந்திய மாநிலங்களில் அதிகம் தென்படும் இவை, அரிதாகவே தென்னிந்தியாவிற்கு வலசை வருகின்றன. கடந்த சில வருடங்கள் முன் சென்னை மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் புல்வெளிக் கழுகு பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுக்க புல்வெளிக் கழுகுகளின் எண்னிக்கை குறைந்து வருகிறது. உலகளவில் அழிவையும் அச்சுறுத்தலையும் சந்திக்கும் உயிரினங்களை இயற்கை பாதுகாப்புச் சங்கம் (IUCN) செம்பட்டியல் வகைப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றது. புல்வெளிக் கழுகினத்தை அருகி வரும் (EN) உயிரினமாக இயற்கை பாதுகாப்புச் சங்கம் (IUCN) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்தகைய பல அரிய வகை உயிரினங்களின் வாழிடமாக விளங்கும் மதுரை மாவட்ட வறள் புல்வெளிகளை பாதுகாக்க வேண்டும்.
வறள் புல்வெளிகள் பாதுகாப்பு:
மரங்கள் வெட்டும் போது காடுகளின் அழிவாக கருதும் மனநிலை, புல்வெளிகள் அழிக்கப்படும் போது நமக்கு இருப்பதில்லை. பொருளாதார நோக்கில் புல்வெளிகள் என்பது எதற்கும் தகுதியற்ற தரிசு நிலம் என்கிற கற்பிதம் அதற்கு காரணமாக இருக்கிறது. புல்வெளிகள் உலகின் 20% கார்பனை நிலத்தடியில் தக்க வைத்துள்ளன. புல்வெளிகளின் அழிவு காலநிலை மாற்றத்தோடு தொடர்புடைய பேரழிப்பு நிகழ்வாகும்.
யானைகளும், புலிகளும் வாழும் பரப்பில் ஓங்கி வளர்ந்த மரங்கள் அடர்ந்த பகுதி தான் காடு என்கிற புரிதல் நம்மில் பலருக்கும் உண்டு. புல்வெளிகளும் மதிப்புமிக்க பல்லுயிரிய காடுகள்தாம். நரி, வெருகு, அலங்கு என அழிவுறும் பல காட்டுயிரிகள் புல்வெளிகளை வாழிடமாக கொண்டுள்ளன. தாவரக்கூட்டத்தின் அடர்த்தி, உயரம், தன்மை எவ்வாறு அமைய வேண்டுமென்பதை இயற்கைதான் தீர்மானிக்கிறது. அதனை ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் தட்ப வெட்பமும் மண்வளமும் தான் முடிவு செய்கிறது. குறிஞ்சி நிலத்தின் சிகரங்களில் வேங்கை மரம் பெரிதென்றால், முல்லை நிலத்தின் புல்வெளிகளில் வெள்வேலம் மரம் பெரிது. இயற்கையின் படைப்பில் இரண்டும் பல்லுயிரிய பெருக்கமுள்ள நிலப்பரப்புகள்தாம். தமிழர் மரபிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் யாவும் ''தெய்வம் உணாவே மாமரம் புட்பறை செய்தி யாழின் பகுதியோடு'' மக்கள் அடர்த்தியாக வாழும் திணையியல் மண்டலங்கள்தாம். பழைய கற்காலத்தில் இருந்தே மனிதனுக்கும் புற்களுக்குமான உறவு கண்டறியப்பட்டுள்ளது. கால்நடை சமூகத்தின் நாகரீக தொட்டில் புல்வெளிகள்தாம். கி.மு.2400ஆம் ஆண்டிலிருந்து காகிதம் தயாரிக்கவும் புற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புற்கள் நிறைந்த நிலப்பரப்பை கண்டதும் தரிசுக்காடு, பொட்டல்காடு, புறம்போக்கு நிலம் என்ற புரிதல் நமக்கும் அரசுக்கும் மாற வேண்டும்.
பல்லுயிரிய நோக்கில் காப்பு காடு, பறவைகள் சரணாலயம், காட்டுயிர் தேசிய பூங்கா ஆகியவைகளுக்கு இணையானவை புல்வெளிகள் ஆகும். வளர்ந்த நாடுகளில் புல்வெளிகளை உயிரிய சூழல் மண்டலமாக கருதும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் புல்வெளிகள், பொட்டல் காடுகள் தரிசு என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பண்ணி புல்வெளிகளும் ராஜஸ்தான் பகுதியில் உள்ள பாலைவன புல்வெளிகளும் பல்லுயிரிய நோக்கில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையால் பராமரிக்கப்படுகின்றன. புல்வெளிகள் அவைகளின் பண்பாட்டு பொருளிய மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் குறித்த சிந்தனை போக்குகள் இந்தியாவில் மேலும் வளர்ச்சியடைய வேண்டும். வறள் புல்வெளிகள் மேய்ச்சல் நிலமாகவும் விளங்குகின்றன. பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வறள் புல்வெளிகள் தரிசு அல்லது பொறம்போக்கு என்றே அரசு ஆவணங்களில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மறுவரையரை செய்ய வேண்டும். மதுரையில் திருமங்கலம், தோப்பூர், சிவரக்கோட்டை, நேசனேரி, கரடிக்கல், கள்ளிக்குடி, வில்லூர், தென்னமநல்லூர், தே. கல்லுப்பட்டி, பாறைக்குளம், பேரையூர் பகுதிகளில் காணப்படும் வறள் புல்வெளிகள் பல்லுயிரிய பெருக்கமுள்ள பகுதிகளாகும். மதுரை மாவட்டத்தில் சுமார் 170 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள வறள் புல்வெளிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய நரி, புள்ளிமான், வெருகு, மரநாய், புனுகு பூனை, காட்டு முயல், அலங்கு, உடும்பு, முள்ளெலி, விசிரித் கழுத்து ஓணான், சாரை பாம்பு உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் புகழிடமாகவும் புல்வெளிகள் விளங்குகின்றன. பல்லுயிரிய பெருக்கமுள்ள வறள் புல்வெளிகள் ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். புல்வெளிகளோ அல்லது இதர எவ்வித நிலவியல் பகுதிகளோ பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் போது மக்களின் பூர்வீக வாழ்வாதார உரிமைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசுகள் சட்டரீதியாக உறுதி செய்திட வேண்டும்.
பண்பாட்டுச் சூழல் நடையில் ஆவணம் செய்யப்பட்ட பல்லுயிரிகள்:
தாவரங்கள்:
தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்களால் வெள்ளாகுளம் செவல்காட்டு பகுதியில் 22.12.2024 அன்று ஆவணம் செய்யப்பட்ட தாவர வகைகள் பின்வருமாறு -
மஞ்சநத்தி (Morinda tinctoria), நாட்டுக் கருவேலம் (Acacia nilotica), நாட்டு வாகை (Albizia lebbeck), வேம்பு Azadirachta indica), வெள்வேலம் (Acacia leucopholea), நஞ்சுண்டான் (Balanites roxburghii), இலந்தை (Ziziphus jujuba), பனை (Borassus flabellifer), பாம்பாதிரி (Dolichandrone atrovirens), சீமைக் கருவேலம் (Prosopis juliflora), ஆவாரை (Senna auriculata), வெண்பூலா (flueggea virosa), கொழுஞ்சி (Tephrosia purpurea), தும்பை (Leucas aspera), எருக்கு (Calotropis gigantea), Ipomea sp, பல்லிப் பூண்டு (Striga sp), காட்டாமணக்கு (Jatropha curcas), விஷ்ணு கிராந்தி, காட்டு துவரை, குரண்டி, அவுரி, சிறுகண் பீளை, கூத்தன் குதும்பை, நாய்க்கடுகு, கொட்டிக் கிழங்கு, நெருஞ்சி, வெள்ளருகு, காசு்கட்டி, நீ்ர் மேல் நெருப்பு, துத்தி, பேய் மிரட்டி, மூக்கிரட்டை, பிரண்டை, முசுண்டை, பேய் பீர்க்கை, நறுந்தாளி, வேலி பருத்தி, முதியோர் கூந்தல், கோவைக்காய், அப்பக்கோவை, சங்கு பூ நீலம், சிறுபூனைக்காலி,நெய்வேலி காட்டாமணக்கு உள்ளிட்ட 44 வகை தாவரங்கள் செவல்காட்டு பகுதியில் ஆவணம் செய்தோம்.
வண்ணத்துப்பூச்சிகள்:
வெள்ளாகுளம் செவல்காட்டு பகுதியில் 22.12.2024 அன்று ஆவணம் செய்யப்பட்ட வண்ணத்துப்பூச்சிகள் வகைகள்:
Common Banded Awl, Dart spp, Common Mormon, Crimson Rose, Common rose, Common Cerulean, Common pierrot, Black spotted pierrot, Stripped Pierrot, Tiny Grass Blue, Forget me not, Gram Blue, Crimson tip, Common Emigrant, Small Grass Yellow, Plain Tiger, Blue Tiger, Common crow, Danaid eggfly, Blue Pansy, Yellow Pansy, Chocolate Pansy, Lemon Pansy, Peacock Pansy, Common Castor, Tawny coster
பறவைகள்:
பறவையியல் ஆய்வாளர் மருத்துவர் ஹீமோக்ளோப்ளின், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர் ஜோதிமணி, சக்திவேல், கமலேஷ் ஆகியோரால் வெள்ளாகுளம் செவல்காடு மற்றும் பள்ளப்பச்சேரி (செங்குளம்) கண்மாய் பகுதியில் 22.12.2024 அன்று ஆவணம் செய்யப்பட்ட பறவையினங்கள் பின்வருமாறு -
Lesser Whistling Duck - Dendrocygna javanica, Knob-billed Duck - Sarkidiornis melanotos, Indian Spot-billed Duck - Anas poecilorhyncha, Northern Pintail - Anas acuta, Garganey - Spatula querquedula, Indian Peafowl - Pavo cristatus, Grey Francolin - Ortygornis pondicerianus, Jungle Quail - Perdicula asiatica, Feral Pigeon - Columba livia, Collared Dove - Streptopelia decaocto, Spotted Dove - Spilopelia chinensis, Laughing Dove - Spilopelia senegalensis, Chestnut-bellied Sandgrouse - Pterocles exustus, Greater Coucal (Southern) - Centropus sinensis parroti, Asian Koel - Eudynamys scolopaceus, Blue-faced Malkoha - Phaenicophaeus viridirostris, Pied Cuckoo Clamator jacobinus, Asian Koel - Eudynamys scolopaceus, Common Hawk Cuckoo - Hierococcyx varius, Alpine Swift - Tachymarptis melba, Asian Palm Swift - Cypsiurus balasiensis, Common Moorhen - Gallinula chloropus, Eurasian Coot - Fulica atra, Black-winged Stilt - Himantopus himantopus, Grey-headed Swamphen - Porphyrio poliocephalus, White breasted Waterhen Amaurornis phoenicurus, Little Ringed Plover - Thinornis dubius, Yellow-wattled Lapwing Vanellus malabaricus, Red-wattled Lapwing - Vanellus indicus, Pheasant tailed Jacana - Hydrophasianus chirurgus, River Tern - Sterna aurantia, Green sandpiper - Tringa ochropus, Wood Sandpiper - Tringa glareola, Common Greenshank - Tringa nebularia, Asian Openbill - Anastomus oscitans, Painted Stork - Mycteria leucocephala, Oriental Darter - Anhinga melanogaster, Little Cormorant - Microcarbo niger, Glossy Ibis - Plegadis falcinellus, Black-headed Ibis - Threskiornis melanocephalus, Red-naped Ibis - Pseudibis papillosa, Eastern Cattle-Egret - Ardea coromanda, Little Egret - Egretta garzetta, Grey Heron - Ardea cinerea, Purple Heron - Ardea purpurea, Indian Pond Heron - Ardeola grayii, Eastern Cattle Egret - Ardea coromanda, Medium Egret - Ardea intermedia, Black winged Kite - Elanus caeruleus, Crested Honey buzzard - Pernis ptilorhynchus, Short toed Eagle - Circaetus gallicus, Steppe Eagle - Aquila nipalensis, Booted Eagle - Hieraaetus pennatus, Shikra - Tachyspiza badia, Montagu's Harrier - Circus pygargus, Black Kite - Milvus migrans, White eyed Buzzard - Butastur teesa, Spotted Owlet - Athene brama, Asian Green Bee-eater - Merops orientalis, Blue tailed Bee eater - Merops philippinus, Indian Paradise Flycatcher - Terpsiphone paradisi, White throated Kingfisher - Halcyon smyrnensis, Pied Kingfisher - Ceryle rudis, Indian Roller - Coracias benghalensis, Black rumped Flameback - Dinopium benghalense, Common Kestrel - Falco tinnunculus, Ring necked Parakeet - Psittacula krameri, Black Drongo - Dicrurus macrocercus, Bay backed Shrike - Lanius vittatus, Rufous Treepie - Dendrocitta vagabunda, House Crow - Corvus splendens, Large-billed Crow - Corvus macrorhynchos, Ashy crowned Sparrow Lark - Eremopterix griseus, Jerdon's Bushlark - Plocealauda affinis, Indian Bushlark - Plocealauda erythroptera, Common Tailorbird - Orthotomus sutorius, Plain Prinia - Prinia inornata, Zitting Cisticola - Cisticola juncidis, Booted Warbler - Iduna caligata, Blyth's Reed Warbler - Acrocephalus dumetorum, Barn Swallow - Hirundo rustica, Eastern Red rumped Swallow - Cecropis daurica, Red vented Bulbul - Pycnonotus cafer, Large Grey Babbler - Argya malcolmi, Yellow billed Babbler - Argya affinis, Rose coloured Starling - Pastor roseus, Brahminy Starling - Sturnia pagodarum, Common Myna - Acridotheres tristis, Indian Robin - Copsychus fulicatus, Pale billed Flowerpecker - Dicaeum erythrorhynchos, Pied Bushchat - Saxicola caprata, Purple rumped Sunbird - Leptocoma zeylonica, Purple Sunbird - Cinnyris asiaticus, Baya Weaver - Ploceus philippinus, Indian Silverbill - Euodice malabarica, Scaly breasted Munia - Lonchura punctulata, Tricoloured Munia - Lonchura malacca, House Sparrow - Passer domesticus, White-browed Wagtail - Motacilla maderaspatensis, Paddyfield Pipit - Anthus rufulus, Blyth's Pipit -Anthus godlewskii.
https://ebird.org/checklist/S206537428
https://ebird.org/checklist/S206537577
https://ebird.org/checklist/S206156228
வரவு செலவு:
உணவுக்கான செலவு தொகையை திருமிகு சரஸ்வதி பத்ரி நாராயணன் அவர்கள் ஏற்றுக் கொண்டு 50 பேருக்கான கேப்பை கூழும், புளியோதரை சாதமும் ஏற்பாடு செய்திருந்தார். 50 பேருக்கான வடையை திரு. ஜோதிமணி அவர்கள் செய்து இருந்தார். இந்நிகழ்வுக்கு வேறு யாரிடமும் நன்கொடைகள் பெறவில்லை.
பல்வேறு துறை சார் ஆளுமைகள், ஆர்வலர்கள், ஒளிப்பட கலைஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், உள்ளூர் மக்கள் என பல தரப்பட்ட மக்கள் பண்பாட்டுச் சூழல் நடையின் ஆவண திரட்டல் பணிக்கு மிகப் பெரிய பங்களிப்பை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒளிப்படங்கள்:
திருமிகு. ச.ஜோதிமணி, ரெ.வெங்கட்ராமன், மரு. தி.ஹீமோக்ளோப்ளின், இரா.விஸ்வநாத் , ச.குமரேசன், தமிழ்தாசன்
---- ஆய்வுக்குழு ----
- மரு. தி. ஹீமோக்ளோப்ளின் (பறவையிலாளர்)
- திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)
- திரு. பு. இரா. விஸ்வாநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)
- திரு. ச. ஜோதிமணி (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)
- திரு. ச. ஜோதிகண்ணன் (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)
- திரு. ரெ. வெங்கட்ராமன் (ஒளிப்பட கலைஞர்)
- திரு. ச. சதீஷ்குமார் (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)
- திரு. க. சக்திவேல் (பறவையிலாளர்)
- திரு. மு. கமலேஷ் (பறவையிலாளர்)
- திரு. சீனிவாசன் (பறவையிலாளர்)
- திருமிகு. லட்சுமி பிரகாஷ்
- திரு. தமிழ்தாசன் (சூழலியல் ஆய்வாளர்)
ஆதாரம்:
- மதுரை மாவட்ட கல்வெட்டு தொகுதி - II; த.நா அரசு தொல்லியல்துறை வெளியீடு 2005
- இயற்புற்களும் மேய்ச்சல் நிலங்களும் - கிடை இதழ் Jan 2023
- https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/discovery-samanars-beds-madurai
- https://kalkionline.com/lifestyle/spirituality/gopalswamy-kudavari-temple-madurai
- மதுரை மரங்கள் - பார்கவிதை பதிப்பகம் 2023
கட்டுரைத் தொகுப்பு
தமிழ்தாசன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
02.01.25
நாளிதழ் மற்றும் ஊடக செய்திகள்:

























Comments
Post a Comment