அசுவமா நதி (கோம்பையாறு) அணை - பண்பாட்டுச் சூழல் நடை
அசுவமா நதி (கோம்பையாறு) அணை - பண்பாட்டுச் சூழல் நடை
=================================பண்பாட்டுச் சூழல் நடையின் 15 வது பயணமாக உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி குன்னத்தூர் - குறிஞ்சி நகர் ஊரின் அருகேயுள்ள அசுவமா நதி அணைக்கு 18.02.2024 அன்று சென்று இருந்தோம்.
இந்த பயணத்தின் குறிப்பான 5 செய்திகள் உள்ளது. அவை பின் வருமாறு
1. புலிகள் (Panthera tigris) நடமாடும் காடாகவும் மதுரை வனப்பகுதி விளங்குகிறது
2. ஸ்ரீவில்லிபுத்தூர் - மதுரை - ஆண்டிபட்டி வனப்பகுதியில் யானைகள் வந்து செல்கின்றன. அதன் வலசை பாதையாக சாப்டூர் வனப்பகுதி துவங்கி உசிலம்பட்டி வாசிமலை வரை இருக்கிறது
3. மலைகளில் இருந்து கீழிறக்கப்பட்ட பளியர் பழங்குடி மக்கள் தங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் மலைக்கு மேல் அல்லது மலையடிவாரத்தில் கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
4. அசுவமா நதி அணை சீமை கருவேலம் அடர்ந்து உள்ளது. மேலும் அணையின் நீர்த்தேக்க பகுதி தூர்ந்து போய் உள்ளது. அசுவமா நதி சீரமைக்கப்பட வேண்டும்.
5. இப்பயணத்தில் யானைகள் வழித்தடம் புலி, சிறுத்தை, கரடி, செந்நாய் உள்ளிட்ட பாலூட்டிகளின் நடமாட்டம், 100க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 60க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 10க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள், 4 தும்பி வகைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
அதிகாலை 6.30 மணிக்கு உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு முன்பதிவு செய்த அணைந்து நண்பர்களும் வந்து சேர்ந்துவிட்டனர். உசிலம்பட்டியில் இருந்து தொட்டப்பநாயக்கனூர் - குன்னத்தூர் பகுதிக்கு அவரவர் வாகனத்தில் புறப்பட்டு அசுவமா நதியை அடைந்தோம். ஏறக்குறைய 70 பேர் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். நான்கு பக்கமும் மலைகள் சூழ்ந்த அழகான பசுமையான நிலப்பரப்பு. வந்திருந்த எல்லோருக்கும் வரவேற்பையும் அறிமுக உரையும் தமிழ்தாசன் வழங்கினார். அதன் பின் இயற்கை பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. விஸ்வா அவர்கள் நிகழ்வின் நோக்கம் பற்றி எடுத்துரைத்து, துறைசார் அறிஞர்களை அறிமுகம் செய்து வந்திருந்தவர்களை துறைரீதியாக தனித்தனி குழுவாக வகைப்படுத்தினார். கண் மருத்துவர்களும் பறவையிலாளர்களுமான மரு. பத்ரி நாராயணன் அவர்களும், மரு. ஹீமோக்ளோபின் அவர்களும் அங்குள்ள பறவைகளை காட்டி பங்கேற்ப்பாளர்களுக்கு பறவைகளை அறிமுகம் செய்து வைத்தனர். ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர் திரு. ரவீந்திரன் அவர்களும் தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் பார்கவிதை அவர்களும் சேர்ந்து ஒவ்வொரு தாவரத்தையும் காட்டி அத்தாவரத்தின் இயல்பு பற்றி எடுத்துரைத்தார்கள். அப்படியே அசுவமா நதி அணையின் கரையில் நடந்து தெற்கு எல்லையில் உள்ள மிகைநீர் மதகு வரை சென்று திருப்பினோம். இயற்கை உழவர்கள் திரு. அலெக்ஸ் கருணாகரன் அவர்களும் காளிமுத்து அவர்களும் எங்களுக்கு காலை உணவு கொண்டு வந்திருந்தனர். கவுனி அரிசியில் செய்த இனிப்பு பொங்கலும், இலுப்பம்பூ சம்பா அரிசியில் செய்த வெண்பொங்கலும், அம்மிக் கல்லில் அரைத்த தேங்காய் சட்டினியும், முருங்கை ரசமும் காலை உணவாக எங்களுக்கு எடுத்து வந்து பரிமாறினார்கள். இயற்கைவழி வேளாண்மை பற்றியும் உணவு பற்றியும் உழவர்கள் காளிமுத்து அவர்களும், அலெக்ஸ் கருணாகரன் அவர்களும் எடுத்துரைத்தனர். குறிஞ்சி நகர் பகுதியில் குடியிருக்கும் பளியர் பழங்குடி மக்களின் சார்பாக திருமதி ராணி அவர்கள் வந்து தங்கள் கடந்த கால மற்றும் இன்றைய வாழ்க்கை நெருக்கடிகள், பளியர் மக்கள் சந்தித்த ஒடுக்குமுறைகள் பற்றி பேசினார். தங்கள் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு வழக்கறிஞர் மலைச்சாமி அவர்கள் பெரிதும் உதவியதாக அவர்கள் தெரிவித்தார். வழக்கறிஞர் மலைச்சாமி அவர்களுக்கு மதுரை இயற்கை பண்பாட்டு மையம் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். பளியர் மக்களுக்கும் திரு. அலெக்ஸ் கருணாகரன் அவர்களுக்கும் திரு.காளிமுத்து அவர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதையை செய்தார். அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள திரு.காளிமுத்து அவர்கள் வேளாண்மை செய்யும் தோட்டம் அமைந்துள்ள கோம்பை பகுதிக்கு சென்றோம். அங்கு வந்து சென்ற யானைகளின் சாணம் மற்றும் வழித்தடத்தை ஆவணம் செய்தோம். அங்கிருந்து மதியம் 12.30 மணிக்கு நிகழ்வை நிறைவு செய்து மதுரைக்கு திரும்பினோம். இந்நிகழ்வில் 60 க்கும் மேற்பட்ட பறவையினங்கள், 100க்கும் மேற்பட்ட தாவர வகைகளை ஆவணம் செய்தோம். மதுரை பேரையூர் வனப்பகுதியை தொடர்ந்து மதுரை உசிலம்பட்டி வனப்பகுதியிலும் யானைகளின் சாணம் மற்றும் வழித்தடம் ஒளிப்படம் வழியாக ஆவணம் செய்தோம். இப்பகுதியில் வாழும் பளியர்கள் வாசிமலையை உள்ளடக்கிய தெற்குமலையில் புலி மற்றும் சிறுத்தைகள் இருப்பதாகவும் அதை கடந்த மாதம் கூட நேரில் கண்டதாகவும் கூறினார்கள். அசுவமா நதி கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதியில் சீமை கருவேலம் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. கரைகளில் நடந்து செல்லக் கூட முடியாத வண்ணம் சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளது. நீர்த்தேக்க பகுதி தூர்ந்து போய் உள்ளது. நீரை தேக்கும் தன்மையை அணை இழந்துவிட்டது என்று கருதும் நிலையில் உள்ளது அசுவமா நதி அணை.
அசுவமா நதி அணை மற்றும் கோம்பை பகுதியில் குழுவாக நாம் ஆவணம் செய்தவற்றை தொகுத்து கீழே எழுதி இருக்கிறோம்.
மலைகளும் மலையோடைகளும்:
அசுவமா நதி அணையின் வடக்கில் இருந்து தெற்கு வரை உள்ள மலைகள் சந்தை மலை, குதிரைமலை, வாசிமலை, வகுத்துப்பாறை மலை, வெள்ளப்பாறை மலை என நீண்டு கிடக்கிறது. குதிரைமலை துவங்கி வெள்ளப்பாறை மலை வரை இருக்கும் மலைத்தொடர்ச்சியை தெற்கு மலை என்று மக்கள் அழைக்கின்றனர். பழங்காலத்தில் சந்தை நடைபெற்றதால் சந்தை மலை என பெயர் வந்தது. சாத்தன் கணவாய் தான் தெற்குமலையை - சந்தை மலையை இரண்டாக பிரிக்கிறது.
தெற்குமலை:
தெற்குமலையின் வடகிழக்குச் சரிவில் அசுவமா நதி அணை அமைந்துள்ளது. தெற்குமலையின் வடக்குச் சரிவில் வாழும் மக்கள் இதே மலையை மீனாட்சிமலை என்று அழைக்கின்றனர். அம்மலையில் மீனாட்சி கோயில் ஒன்று உள்ளது.
தெற்குமலையில் உலக்கை வெள்ள அருவி உள்ளது. இவை போக வாசிமலை ஓடை, குஞ்சான் கிணற்று ஓடை, குதிரை கல்லு ஓடை, புறா ஓத்து, கோரையூத்து, பூலாம்பாறை ஓடை, பட்டறை பாறை ஓடை, மொட்டு ஊத்து ஆகிய ஊற்றுக்கள், ஓடைகள் உள்ளது. மொட்டு ஊத்து அருகே கன்னிமார் கோயில் உள்ளது. அரிவாளை பட்டை தீட்டும் பாறை என்பதால் பட்டறை பாறை என்று பெயர் வைத்துள்ளனர். இந்த ஓடைகள் அனைத்தும் அசுவமா நதி அணைக்கு வந்து சேர்கிறது. குதிரைமலையில் இருந்து வரும் ஆறு குதிரையாறு என்ற புரிதலில் இருந்து அசுவமா நதி என வடமொழியில் இப்பெயர் பின்னாட்களில் சூட்டப்பட்டு இருக்கலாம் . குதிரைப் போல வேகமாக வெள்ளநீர் பாயும் ஆறு என்பதால் இப்பெயர் வந்து என உசிலம்பட்டி மக்கள் கூறுகின்றனர். வாலாந்தூர் கடந்து செல்லும் இந்த ஆற்றை தெற்காறு என்று மக்கள் அழைக்கின்றனர். தெற்குமலையில் இருந்து வரும் ஆறு என்பதால் இப்பெயர் வந்திருக்கலாம். அசுவமா நதி அணை தெற்காறு உபவடிநில கோட்டத்தில் உள்ள ஒரு அணையாகும். அசுவமா நதி துவங்கும் தெற்குமலையில் வாழும் பளியர் மக்கள், மலையடிவார ஊர்மக்கள் அனைவரும் கோம்பையாறு என்றே இந்த ஆற்றை அழைக்கின்றனர். மதுரை திருமங்கலம் அருகே குண்டாறு என்றும், காரியாபட்டி அருகே மந்திரி ஓடை என்றும் இந்த ஆறு பல பெயர்களை பெறுகிறது.
தெற்குமலை வெள்ளப்பாறை வகுத்துப்பாறை மலைகளில் தோன்றும் வகுத்துப்பாறை ஓடை, பொன்னியாற்று ஓடை, பனிச்சுனை ஓடை, வெள்ளப்பாறை ஓடை கோம்பையாற்றின் மேற்கு கரையில் சென்று கலக்கிறது. மீனாட்சிமலையில் தோன்றும் சடையாள் ஓடை உசிலம்பட்டி அருகே கோம்பையாற்றின் (அசுவமா நதி) மேற்கு கரையில் சென்று கலக்கிறது.
வடக்குமலை:
உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி கணவாய் சாலை வரை வடக்கு திசையில் நீண்டு கிடக்கும் மலையை வடக்கு மலை என்று மக்கள் அழைக்கின்றனர். ஆண்டிபட்டி கணவாய் தான் தெற்குமலை - வடக்குமலையை இரண்டாக பிரிக்கிறது. மொட்டைமலை, தங்கலான்கரடு, தம்பிட்டான்கரடு, முத்துபாண்டிப்பட்டி மலை, பரமசிவன் கோயில் மலை, தலையரிச்சினன்காடு, சின்ன குறத்திக் கோயில் கரடு உள்ளிட்ட தொடர்ச்சியை வடக்குமலை என்கின்றனர்.
வடக்குமலை தலையரிச்சினன்காட்டிலிருந்து தோன்றுகிறது வண்ணான் ஓடை. இதனை செட்டியாபட்டி ஓடை என்றும் அழைப்பர். தம்பிட்டான் கரடு, பரமசிவன் கோயில் மலையில் இருந்து தோன்றும் கன்னிமுத்து ஓடை. குன்னதுபட்டி வழியாக செல்லும் இந்த ஓடையை உதிமான் ஓடை என்றும் அழைப்பர். உதிமான் பாய் என்கிற இசுலாமியரின் பெயரால் இந்த ஓடை அழைப்படுகிறது. மொட்டமலை, தங்கலான் பாறை பகுதியில் இருந்து உருவாகி நக்கலப்பட்டி வழியாக ஓடுகிறது ஒன்பது கண் ஓடை. இதனை ஏழுகண் ஓடை என்றும் அழைப்பர். அசுவமா நதியின் கிழக்கில் வாசிநகர் பகுதியில் கொப்புலான் கரடு மலை உள்ளது. அதில் இருந்து சடச்சி ஓடை உருவாகுகிறது. சடச்சி அம்மன் கோயில் கடந்து செல்வதால் சடச்சி ஓடை ஆயிற்று. மேற்சொன்ன ஓடைகள் அனைத்தும் வண்ணான் ஓடையில் விழுந்து கோம்பையாற்றின் கிழக்குக் கரையில் சென்று கலக்கிறது.
அசுவமா நதி அணை விவரம்:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட குன்னத்தூர் பகுதியில் 2006 ஆம் ஆண்டு கட்டப்பட்டது அசுவமா நதி அணை.
தேக்க முழு மட்டம் (FTL): 963.0 அடி (Feet)
அதிகபட்ச நீர் மட்டம் (MWL): 967.84 அடி
கரையின் மேல்மட்டம் (TBL): 974.4 அடி
கரையின் மேற்பரப்பு அகலம் (TWB): 12 அடி
தேக்க ஆழம் (SD) : 8.2 அடி
படுகை மட்டம் (LS) : 954.7 அடி
கரையின் நீளம்: 2755.91 அடி
கொள்ளளவு (Capacity) : 0.499 CubSec
நீர்பிடிப்பு பகுதியின் அளவு (Catchment): 14.99 சதுர கி.மீ
நீர் பரப்பளளவு (WSA): 10526.68 ஏக்கர்
அணை மதகு (Weir) எண்ணிக்கை: 1
அணை மதகு நீளம்: 196.85 அடி
மடை (Sluice) எண்ணிக்கை: 2
நீர் வெளியேற்றும் திறன்: 6447.25 cubsec
அசுவமாநதி என்னும் கோம்பையாறு உசிலம்பட்டி, சிறுபட்டி, திம்மநத்தம், ஆலங்குளம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, கீழக்குயில்குடி, குறையூர், உரப்பனூர், செங்குளம், சாத்தாங்குடி, திருமங்கலம், நடுக்கோட்டை, மேல உப்பிலிக்குண்டு வழியாக காரியாபட்டி வட்டம் பே.புதுப்பட்டி அருகே குண்டாற்றுடன் (கௌண்டா நதி + வரட்டாறு) கலக்கிறது.
மலைகள் மலையோடைகள், அணை, விவரங்களை தமிழ் தாசன் ஆவணம் செய்தார்
பளியர் பழங்குடி மக்கள்:
ஏறக்குறைய 80 குடும்பங்களை சேர்ந்த பளியர் பழங்குடி மக்கள் குறிஞ்சி நகர் பகுதியில் வசிக்கின்றனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் மலைவாழ் பழங்குடி மக்களாக தெற்குமலையில் குடியிருந்தனர். பளியர்கள் வாழ்ந்த குடிசைகள் இன்றும் மலைக்கு மேல் உள்ளது. காட்டுக்கு காட்டுயிர்க்கும் ஆபத்து விளைவிக்க கூடும் என்ற காரணம் சொல்லி 1985 ஆம் ஆண்டு அரசால் அவர்கள் மலைக்கு கீழ் இறக்கப்பட்டார்கள். அதன் பிறகு பல்வேறு இன்னல்களை ஒடுக்குமுறைகளை அம்மக்கள் சந்தித்ததனார். (தகவல் சேகரிப்பு: தமிழ்தாசன் & சதிஷ்குமார் விளாச்சேரி )
கோயில்கள் :
பளியர்கள் குலதெய்வமான பளிச்சியம்மன் மோரூத்து மேலே தெற்குமலையில் உள்ளது. அசுவமா நதி அணைக்கு சற்று முன்பாக பாண்டிச்சாமி கோயில் உள்ளது. அக்கோயில் அமைந்திருக்கும் பகுதியில் கோயில் கட்டுப்பாடு எல்லை துவங்குகிறது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. கணவாய் சாத்தன் கோயில், கோரையூத்து கன்னிமார் கோயில், வாசிமலையன் கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ளது. வாசிமலையன் கோயில் இப்பகுதியில் புகழ்பெற்ற கோயிலாகும். ஆண்டிபட்டி கணவாய் போல வாசிமலைக்கும் வடக்குமலைக்கும் இடையில் ஒரு கணவாய் உள்ளது. அதனை சாத்தன் கணவாய் என்று அழைக்கின்றனர். ஏழுமலை பலசுனை பாறை முருகன் கோயில் வழியாகவும் வாசிமலையை அடையலாம். உசிலம்பட்டி அசுவமா நதி கடந்து கோம்பை கணவாய் வழியாகவும் வாசிமலையை அடையலாம். கணவாய் வழியாக ஏறுகிறவர்கள் சாத்தன் கோயிலில் மரக்கிளை அல்லது குலை ஒடித்துவிட்டு வழிப்பாடு செய்துவிட்டு செல்வது வழக்கம். வாசிமலையான் கோயில் திருவிழா புரட்டாசி மாதம் நடைபெறுகிறது. வனத்துறை அனுமதிக்கும் நாட்களில் மட்டுந்தான் மலையேற முடியும்.
பாறை ஓவியங்கள்:
4000 ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் தெற்குமலையில் தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்பாறை புடவில் மூன்று காலங்களை சேர்ந்த 8 க்கும் மேற்பட்ட ஓவியங்கள் உள்ளன. செம்பாறை புடவு பளியர்கள் வழிபாட்டு தலமாக உள்ளது. கன்னிமார் கோயில் பாறையிலும், பெத்தாம்பாறையிலும் பாறை ஓவியங்கள் திரு. காந்திராஜன் அவர்களால் கண்டறியப்பட்டுள்ளது. (தகவல் சேகரிப்பு: Devi Arivu Selvam பேரா. ப. தேவி அறிவு செல்வம்)
யானை வழித்தடம்:
பேரையூர் ம.கல்லுப்பட்டி பகுதியை போல உசிலம்பட்டி வாசிமலை பகுதியிலும் யானைகள் நடமாட்டம் உள்ளது. 09.02.2024 அன்று பேரையூர் ம.கல்லுப்பட்டி அய்யனார் கோயில் அணைப் பகுதியில் ஒரு குட்டி யானை உட்பட நான்கு யானைகள் காணொளியாக அப்பகுதி மேய்ச்சல்காரர்கள் பதிவு செய்தனர். அதே ஒரு குட்டியுடன் நான்கு யானைகளை 10.02.2024 அன்று அசுவமா நதி கோம்பை பகுதியில் சுற்றி திரிந்ததை நண்பர் காளிமுத்து உட்பட அப்பகுதி விவசாயிகள் கண்டு உள்ளனர். நாம் 18.02.204 அன்று நேரடியாக சென்று அதன் சாணத்தை ஆவணம் செய்தோம். 22.02.2024 அன்று இரவு யானைகள் கோம்பை பகுதிக்கு வந்துள்ளனர். அதன் சாணம் புகைப்படடம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காட்டுயிர்கள்:
பளியர் மக்கள் வாய்மொழியாக சொன்ன தகவலின் அடிப்படையில் வாசிமலை, தெற்குமலை பகுதியில் யானைகள் மட்டுமல்ல புலிகளும் வாழுகின்றன. புலிகளை கடந்த மாதம் கூட அவர்கள் பார்த்து இருக்கின்றனர். இவை போக சிறுத்தை, சாம்பல் நிற அணில், கரடி, செந்நாய், புனுகு பூனை, காட்டுப் பூனை, மரநாய், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, சருகுமான், புள்ளிமான், கடா மான், கேளையாடு, காட்டுமாடு, சாம்பல் நிற மந்தி, குல்லாய் குரங்கு, சாம்பல் நிற தேவாங்கு உள்ளிட்ட காட்டுயிர்கள் உள்ளதாக பளியர் மக்கள் கூறுகின்றனர். (தகவல் சேகரிப்பு: தமிழ்தாசன்)
பறவைகள்:
இந்நிகழ்வில் மருத்துவர் பத்ரி நாராயணன் மற்றும் மரு. ஹீமோக்ளோபின் அவர்கள் தலைமையில் ஏறக்குறைய 60க்கும் மேற்பட்டபறவைகள் ஆவணம் செய்யப்பட்டது. செம்மார்பு குக்குறுவான், பச்சை குக்குறுவான், பச்சை பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், ஓணான் கொத்தி கழுகு, மாங்குயில், வல்லூறு, பழுப்பு கீச்சன், கருஞ்சிட்டு, புதர் சிட்டு, வெண்புருவ வாலாட்டி, காட்டுக் கே கதிர்க்குருவி, சாம்பல் கதிர்க்குருவி, தகைவிலான், சாம்பல் தகைவிலான், புள்ளி ஆந்தை, பெரிய கொக்கு, சின்ன கொக்கு, உன்னி கொக்கு, முக்குளிப்பான், தாழைக் கோழி,
சுடலைக்குயில், குயில், கள்ளிப் புறா, புள்ளிப்புறா, செம்போத்து, பச்சை வாயன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட பறவைகள் திரு. பரணி வெங்கட் & மு. வித்யாசாகர் உள்ளிட்ட பறவை ஆர்வலர்களால் ஆவணம் செய்யப்பட்டது. ஆவணம் செய்யப்பட்ட பறவைகள் பட்டியல் இ-ப்ர்ட் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://ebird.org/checklist/S161957478
https://ebird.org/checklist/S161958565
ஊர்வனங்கள் & இரு வாழ்விகள் ஆய்வாளர் திரு விஸ்வா Vishwa Wishtohelp அவர்களால் இப்பகுதியில் உள்ள பூச்சிகள், எட்டுக்காலிகள், சிலந்திகள், பூச்சிகள் ஆவணம் செய்யப்பட்டது. அவை பின் வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
எட்டுக்காலி (Arachnid):
1. Funnel web wolf spider (குழல்வலை தரைச் சிலந்தி), 2. Signature spider, 3. Green Lynx spider - Peucetia viridans பச்சை மயிர்காலி சிலந்தி உள்ளிட்டவைகளில் ஆவணம் செய்யப்பட்டது.
பட்டாம்பூச்சிகள் (Butterflies):
Swallowtails / அழகிகள்:
Blue mormon - கருநீல வண்ணன்
Crimson rose - சிவப்புடல் அழகி
Commom Mormon - கறிவேப்பிலை அழகன்
Common lime - எலுமிச்சை அழகி
Common rose - உரோசா அழகி
Blues / நீலன்கள்:
Tiny Grass Blue - சிறுபுல் நீலன்
Bright Babul Blue - அடர் கருவேல நீலன்
Common lineblue - வெண் வரி நீலன்
Small Cupid - சிறிய மன்மதன்
Red flash - சிவப்பு மின்னி
Forget me not - பயறு நீலன்
Tailess Lineblue - வாலில்லா வரி நீலன்
Common Four Ring - நான்கு வட்டன்
Whites and yellows / வெள்ளையன், புல்வெளியாள்கள்:
Common Emigrant - கொள்ளை வெள்ளையன்
Common Grass Yellow - மஞ்சளாத்தி
Little orange tip - சிறிய காவிக்கடவி
Crimson Tip - கருஞ்சிவப்பு நுனிச்சிறகன்
Common Jezebel - இச்சைமஞ்சள் அழகி
Brush Footed Butterflies / வரியன், சிறகன், வசீகரன்:
Common Castor - ஆமணக்கு சிறகன்
Tawny Coster - செவ்வந்தி சிறகன்
Lemon Pansy - எலுமிச்சை வசீகரன்
Chocolate Pansy - பழுப்புநிற வசீகரன்
White four ring - நான்கு வட்டன்
Tawny Coster - செவ்வந்தி சிறகன்
Plain Tiger - வெந்தய வரியன்
வண்டுகள் (Bug, Beetle):
1. Darth Maul bug (Spilostethus hospes), 2. Melea bugs (மாவுப் பூச்சி)
Beetle:
1. Banana leaf scaring beetle, 2. Blister beetle
எறும்புகள்:
1. Crazy Black ants, 2. Camponotos compressor
தும்பிகள்:
தட்டான் (Dragonflies):
1. Red marsh trotter
ஊசி தட்டான் (Dameslfly):
1. Golden dartlet (மஞ்சள் ஊசித் தட்டான்), 2.
நீர் வண்டுகள் (Water beetle):
1. Water strider (நீர் மிதவை பூச்சி)
1. இலைத் தாவி (Leaf hopper): - Fieberiella
வெட்டுக்கிளி (Grasshopper)
1. Short horned gaudy grasshopper (Neorthacris sp)
நத்தை (Caddisfly):
1. Slug ஓட்டில்லா நத்தை
பல்லிகள் (Lizard):
1. Oriental Garden lizard - ஓணான்
பாம்பு (Snake):
1. Bronze back tree snake - கொம்பேறிமூக்கன்
எட்டுக்காலிகள் துவங்கி பாம்புகள் வரை அனைத்தும் திரு. விஸ்வா அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது.
தாவர வகைகள்:
திரு. கார்த்திகேயன் பார்கவிதை & திரு. இரவிந்திரன் அவர்களால் ஆவணம் செய்யபட்டுள்ளது
உசிலை
உடை மரம்
கல் அத்தி
குருந்தம்
சூரை இலந்தை
செங்கத்தாரி
தணக்கம்
நொச்சி
பச்சை கிளுவை
புளியாவாரை - Mundulea sericea
பூவந்தி
முள் கிளுவை
வாகை
வாத நாராயணன்
விடத்தலை
வீரை
வெப்பாலை
வெருவெட்டான்
வெள்வேலம்
உட்பட 45 வகையான மரங்களும்
நாயுருவி
துத்தி
பேய் மிரட்டி
தும்பை
காட்டு சுண்டை
வேலிப்பருத்தி
சீதேவி செங்கழுநீர்
கூத்தன் குதும்பை
குரண்டி முள்
கிலுகிலுப்பை
விஷ்ணுகிரந்தி
லிங்கக்கோவை
சிறுகண்பீளை
நாய் பாகல்
காட்டு நிலவேம்பு
செந்தட்டி
மலை முடக்கத்தான்
உப்பிலாங்கொடி
சுக்குநாறி புல்
பிரண்டை
கொடிக்கள்ளி
மூக்கிரட்டை
நேத்திரப்பூண்டு
கள்ளிமுளையான்
நெருஞ்சி
சித்திரமூலம்
கரும்பூலா
உட்பட 75 வகையான மூலிகைகளும் ஆவணப்படுத்தப்பட்டன.
இப்பகுதியில் தட்டான்கள் ஊசி தட்டான்கள், நீர் வாழ் உயிரிகள் நிறைய இருந்தன. அதில் கவனம் செலுத்த இயலவில்லை அல்லது அதற்கான குழு இந்நிகழ்வில் பங்கேற்கவில்லை.
வரவு செலவு விவரம்:
வரவு:
திரு. பிரவீன் டேனி (அன்பு சூழ் உலகு) - ரூ. 1500
ம.இ.ப.மையம் - ரூ. 750
செலவு:
உணவு 50 பேர்: ரூ. 2000
பாக்குமர தட்டு 50 எண்ணிக்கை : ரூ. 250
மதுரை இயற்கை பண்பாட்டு மையம் (MNCF)
8903241263


Comments
Post a Comment