கருங்காலிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

  பண்பாட்டுச் சூழல் பயணம் - கருங்காலிக்குடி


கடந்த 05.02.2023, ஞாயிறு அன்று பண்பாட்டுச் சூழல் பயணமாக சிவகங்கை மாவட்டம் நெடுங்குளம் பகுதியில் உள்ள கருங்காலிக்குடி கிராமத்திற்கு சென்று இருந்தோம். இப்பயணத்தில் 38 வகை பறவையினங்களையும், 11 வகை வண்ணத்துப்பூச்சியினங்களையும், 3 வகை தட்டான் இனங்களையும், 27 வகையான தாவரங்களையும் ஆவணம் செய்தோம். மேலும் அப்பகுதியில் 12ஆம் நூற்றாண்டு சிவன் கோவில், கருப்பசாமி கோயில், சிதிலமடைந்த சிற்பங்கள், தலை மொட்டை மழிக்கும் தர்ஹா இருப்பதையும் ஆவணம் செய்தோம்.


 

கருங்காலிக்குடி கண்மாய் பகுதியிலும் அதனை ஒட்டியுள்ள வயலோர பகுதியிலும் ஆவணம் செய்யும் நோக்கோடு சூழலியல் ஆர்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கிய குழுவாக அப்பகுதியில் உள்ள பல்லுயிர் வளத்தையும், பண்பாட்டு கூறுகளையும் ஆவணம் செய்தோம்.

செண்டு தலை வாத்து, புள்ளி மூக்கு வாத்து, முக்குளிப்பான், நாமக்கோழி, கம்புள் நீர்க்கோழி செந்நாரை, சாம்பல் நாரை, சின்ன கொக்கு, பெரிய கொக்கு, குளத்துக் கொக்கு, சின்ன அன்றில், நீலத்தாழை கோழி, நீலவால் பஞ்சுருட்டான், புள்ளிச் சில்லை, சுடலைக் குயில், வேதிவால் குருவி, கருஞ்சிவப்பு கீச்சான் உள்ளிட்ட 38 வகையான பறவையினங்களையும்

செவ்வந்தி சிறகன், சிவப்புடல் அழகி, எலுமிச்சை நீலன், கருவேப்பிலை அழகி, அமணனுக்கு சிறகன், பழுப்பு வசீகரன், கொக்கிக் குறி வெள்ளையன், சிறுகாவிநிற சிறகன், முப்புள்ளி புல்மஞ்சள் சிறகன், எலுமிச்சை நிற அழகி, வரி நீலன், கரும்புள்ளி நீலன் உள்ளிட்ட 11 வகை வண்ணத்துப்பூச்சிகளையும்


ஓவிய சிறகன், செந்தட்டான், மஞ்சள் ஊசி தட்டான் உள்ளிட்ட மூன்றுவகை தட்டான்களையும் சூழலியல் ஆர்வலர்கள் ஆவணம் செய்தார்கள்.

தாவரங்களில் - கொடி வகைகளான - முசுண்டை, சிறுபூனைக்காலி, தம்பட்டை அவரை, வேலி பருத்தி, கோவை, அப்பக் கோவை, மூவிலைக் கொடி, நறுந்தாளி, குன்றிமணி, முடக்கத்தான், கானா வாழை

செடி வகைகளில் - ஆவாரை, விழுதி, காட்டு நிலவேம்பு, கோபுரம் தாங்கி, துத்தி, சிற்றாமுட்டி, நரிப்பயறு, வெண் பூலா, சிறு பீளை, நாட்டு உன்னி, நாயுருவி, ஆடையொட்டி வகை,

மரங்களில் - நாட்டுக் கருவேலம், செங்கத்தாறி, இலந்தை, வேம்பு உள்ளிட தாவர வகைகளையும் ஆவணம் செய்தோம்.


 

கருங்காலிக்குடியில் 12ஆம் நூற்றாண்டு சிவன் கோவில் ஒன்று சிதிலமடைந்த நிலையில் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இக்கோவிலின் கல்வெட்டுகள் படித்தறியப்பட்டு தொல்லியல்துறை வெளியிடும் 26வது ஆவணம் இதழில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இக்கோவிலை பற்றி வேறெந்த குறிப்புகளும் தொல்லியல் துறையிடம் இருப்பதாக தெரியவில்லை. இக்கோவில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகவும், இக்கோவிலை பிற்கால பாண்டிய மன்னனாகிய சுந்தரபாண்டிய மன்னன் கட்டுவித்தாகவும் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறுகிறார். பிற்கால பாண்டியர்கள் கட்டுவித்த கோவிலில் எஞ்சியிருக்கும் வெகு சில கோவில்களில் கருங்காலக்குடி கோவில் ஒன்றாகும்.



 



இக்கோவிலை புதுப்பித்து பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று புது தில்லியின் ASI இன் டைரக்டர் ஜெனரல் ராகேஷ் திவாரிக்கும், சென்னை வட்டத்தின் கண்காணிப்பு தொல்லியல் ஆய்வாளருக்கும் 2014 ஆம் ஆண்டு பரிந்துரையை அனுப்பியதாக இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் கண்காணிப்பாளர் திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்கள் நாளிதழ் பேட்டி ஒன்றில் கூறுகிறார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

கருங்காலக்குடி ஏரிக்கரையில் அமைந்துள்ள இந்த சிவன் கோவிலுக்கு அணுகு சாலை இல்லை, சுற்றி ஊர் குடியிருப்புகள் இல்லை. கோவிலின் மேற்பரப்பு முழுதும் புதர்கள் முளைத்து கிடக்கிறது. ஏற்கனவே கோவிலில் லிங்கம் காணவில்லை. இப்படியான நிலையில் உள்ள இந்த கோவிலை பாதுகாப்பதற்கான முயற்சிகளை உடனடியாக அரசும் வரலாற்று ஆர்வலர்களும் விரைந்து முன்னெடுக்க வேண்டும். மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை சார்பாக இப்பகுதியில் ஆவணம் செய்த பல்லுயிரிய வளங்களையும், சிதலமடைந்த சிவன் கோவிலின் நிலையை பற்றியும் அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வோம்.

மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை
05.02.2023, ஞாயிறு

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை