துருசுமலை அய்யனார் கோயில்காடு & பழனியாண்டவர் அணை - பண்பாட்டுச் சூழல் நடை
துருசுமலை அய்யனார் கோயில்காடு & பழனியாண்டவர் அணை - பண்பாட்டுச் சூழல் நடை
பண்பாட்டுச் சூழல் நடையின் 20 வது பயணமாக தா.வாடிப்பட்டி வட்டம், குலசேகரன்கோட்டை ஊரில் அமைந்துள்ள பழனியாண்டவர் நீர்த்தேக்கம், பாலதண்டாயுதபாணி முருகன் கோயில், ச.பெருமாள்பட்டி துருசுமலை அய்யனார் கோயில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 09.06.2024, ஞாயிறு அன்று சென்று இருந்தோம். இந்த பயணத்தின் குறிப்பான இரண்டு செய்திகளை கீழே கொடுத்துளோம். விரிவான செய்தியை ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
1. சிறுமலை அடிவாரத்தில் குலசேகரன்கோட்டை ஊருக்கு அருகில் அமைந்துள்ள பழனியாண்டவர் அணையும் அதனை ஒட்டிய பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது. மதுரை மாவட்டத்திற்கு வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைப்பதற்கு பழனியாண்டவர் அணை தகுந்த இடம் என்று பரிந்துரை செய்கிறோம். இங்கே 41 வகை பறவையினங்களும் 25 வகை வண்ணத்துப்பூச்சி இனங்களும் ஆவணம் செய்யப்பட்டது. ஆனால் பழனியாண்டவர் அணையின் நீர்பிடிப்பு பகுதி சீமை கருவேல மரங்கள் அடர்ந்தும், மணல்மேவி தூர்ந்தும் போய் கிடக்கிறது. இதனை உரிய முறையில் பராமரித்தால் மதுரை மாவட்டத்தில் ஒரு முக்கியமான பொழுது போக்கு இடமாக இது அமையக் கூடும். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மதுரை மாவட்ட நிர்வாகதிற்கும் பொதுப்பணித்துறைக்கும் கோரிக்கை வைக்கிறோம்.
2. ச.பெருமாள்பட்டியில் உள்ள துருசுமலை பாறையில் அமைந்துள்ளது அய்யனார் கோயில். இக்கோயிலோடு தொடர்புடைய இயற்கையான மலைப்பாறைகளும் உசில் மரக் காடும் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 30க்கும் மேற்பட்ட தாவர இனங்களும், 25க்கும் மேற்பட்ட பறவையினங்களும், 10க்கும் மேற்பட்ட வண்ணனைத்துப்பூச்சி இனங்களும் துருசுமலை ஆவணம் செய்யப்பட்டது. துருசுமலை அய்யனார் கோயில்காடு பல்லுயிரிய மரபு தலமாக அறிவிக்க தேர்வு செய்ய தகுந்த இடம் என்பதனை தமிழ்நாடு உயிரிப்` பல்வகைமை வாரியத்திற்கு (TNBB) பரிந்துரை செய்கிறோம்.
பழனியாண்டவர் அணையும் காட்டு நீரோடைகளும்:
-------------------------
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சிறுமலையின் தென்கிழக்கு சரிவில் உள்ள மிதியக்கரடு மலைக்கும் கூகை கரடு மலைக்கும் குறுக்கே கட்டப்பட்டுள்ளது பழனியாண்டவர் நீர்த்தேக்கம். கூகை கரடு என்று விராலிப்பட்டி மக்களும் அதே மலையை மாடுதிண்ணி கரடு என்றும் குலசேகரன்கோட்டை மக்களும் அழைக்கின்றனர். பழனியாண்டவர் நீர்த்தேக்கத்தால் குலசேகரன்கோட்டை, சல்லக்குளம், வாடிப்பட்டி, நரிமேடு, மேட்டு நீரேத்தான் கண்மாய்கள் பாசனம் பெறுகின்றன. வாடிப்பட்டி குலசேகரன்கோட்டையில் இருந்து - தர்மராஜன் கோட்டை பாலதண்டாயுதபாணி முருகன் கோயில் செல்லும் சாலை நீர்த்தேக்கத்தின் குறுக்கே செல்வதால் நீர்த்தேக்கம் இரண்டாக பிளவுற்றது போல காட்சியளிக்கும். பார்ப்பதற்கு ஒரு கண்மாயை போல இருக்கும் நீர்த்தேக்க பகுதிகள் கருவேல மரங்கள் அடர்ந்து, தூர்ந்து போயுள்ளது.
ஆதானை ஓடை மறுகால் கரையின் அருகே வெள்ளிமலை கருப்பசாமி கோயில் ஒன்று ஆலமரத்தின் கீழ் அமைந்துள்ளது. அக்கோயிலின் அருகே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அமைத்த வட்டக்கிணறு ஒன்றும் பயன்பாட்டில் உள்ளது.
குடுமி பருந்து, பொறி வல்லூறு, ஓணான் கொத்தி கழுகு, இந்திய புள்ளி கழுகு, நீல முக பூங்குயில், பனை உழவரன், புள்ளிப்புறா, செம்மரபு குக்குறுவான் உள்ளிட்ட 41 வகை பறவை இனங்கள் பழனியாண்டவர் அணை பகுதியில் ஆவணம் செய்யப்பட்டது. https://ebird.org/checklist/S180297557
மஞ்சளாத்தி Common Grass Yellow, வெந்தய வரியன் Plain tiger, வரி வேங்கை Striped tiger, நீல வேங்கை Blue tiger, நாட்டு நீல அழகி Common Jay, கருநீல வண்ணன் Blue mormon, மடுப்பனை நீலன் Plain Cupid, கறிவேப்பிலை அழகன் Common mormon, உரோசா அழகி Common rose, கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் Crimson tip, சிறிய காவிக்கடவி Small Orange tip, மஞ்சள் காவிக்கடவி Yellow Orange tip, கொள்ளை வெள்ளையன் Common Emigrant, அவரை வெள்ளையன் Mottled emigrant, பழுப்புநிற வசீகரன் Chocolate pansy, எலுமிச்சை வசீகரன் Lemon pansy, புள்ளி நீலன் Common Pierrot, வெண்புள்ளிக் கருப்பன் Common crow, இரு பட்டைக் கருப்பன் Double Banded crow, எலுமிச்சை அழகி Common Lime butterfly, புள்ளி புல் அந்துப்பூச்சி Pygospila tyres (Spotted grass moth) உள்ளிட்ட 25 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆவணம் செய்யப்பட்டது.
மிதிய கரட்டு ஓடை, கன்னிமார் ஊற்று & ஆதனை ஓடை:
----------------------------
பழனியாண்டவர் அணையின் மேற்கு பக்கம் மிதியக் கரட்டோடையும், கிழக்கு பக்கம் கூகை கரடு மலையை ஒட்டி ஓடிவரும் ஆதானை ஓடையும், கன்னிமார் ஊற்று ஓடையும் பழனியாண்டவர் நீர்த்தேக்கத்தில் தேக்கப்படுகிறது. மிதிய கரட்டோடை சானாம்பட்டி, பெருமாள்பட்டி கடந்து சல்லக்குளம் கண்மாயில் கலக்கிறது.
ஆதானை ஓடையும் கன்னிமார் ஊற்று ஓடையும் அணைக்கு முன்பாக ஒன்று சேர்ந்து ஆதானை ஓடை என்று பெயர் பெறுகிறது. அணையை கடந்து போகும் வழியில் பாலதண்டாயுதபாணி கோயில் அருகே சல்லக்குளம் ஓடை, பெரிய ஓடை, சின்ன ஓடை மூன்றாக ஆதானை ஓடை பிரிகிறது. சல்லக்குளம் ஓடை சல்லக்குளம் கண்மாய்க்கும், சின்ன ஓடை வாடிப்பட்டி பொன்பெருமாள் மலையின் வடக்குசரிவில் உள்ள குலசேகரன்கோட்டை கண்மாய்க்கும் போய் சேர்க்கிறது. பெரிய ஓடை குலசேகரன்கோட்டை, நரிமேடு கண்மாய் கடந்து மேட்டு நீரேத்தான் கண்மாயில் கலக்கிறது.
வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி முருகன் கோயில்:
-------------------------------
குலசேகரன்கோட்டை ஊரில் தர்மராஜன் கோட்டை என்னும் பகுதியில் மாடுதிண்ணி கரட்டு மலையின் அடிவாரத்தில் உள்ள முருகன் பாறையில் அமைந்துள்ளது பாலதண்டாயுதபாணி முருகன் கோயில். 6 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் வளாகத்தில் வெப்பாலை மரங்கள் அதிகம் காணப்பட்டது. கொடியேற்றத்துடன் துவங்கும் வைகாசி விசாகம் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி, பால்குடம், பூக்குழி இறங்கி முருகனை வழிபடுகின்றனர். இரண்டாம் நாள் திருவிழாவில் பட்டுப்பல்லக்கில் முருகன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 1924 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இக்கோயிலுக்கு வரி விலக்கு மற்றும் நீர் பாய்ச்சும் உரிமை வழங்கிய ஆவணம் இருப்பதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். வெப்பாலை, மருதம், பராய், அழிஞ்சில், கருக்குவாச்சி, விடத்தலை, உசிலை, தடசு, வேம்பு, புங்கை, வாகை, தேக்கு, தூங்குமூஞ்சி, கத்தி சவுக்கு, திருகு கள்ளி உள்ளிட்ட மரங்களும், குன்றிமணி, முசுண்டை, சென்னி, வெண்பூலா, குப்பைமேனி, சுள்ளி வகை, விஷ்ணு கிராந்தி, இம்பூரல், வெள்ளருகு, எழுத்தாணிப் பூண்டு உள்ளிட்ட செடிகளும் என 25 வகை தாவரங்கள் பாலதண்டாயுதபாணி கோயிலில் ஆவணம் செய்யப்பட்டது.
துருசுமலை அய்யனார் கோயில்:
----------------------------
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், ச.பெருமாள்பட்டி ஊரில் வரட்டாற்று ஓடையின் கரையில் அமைந்துள்ளது துருசுமலை அய்யனார் கோயில். கிட்டத்தட்ட 20 படிக்கட்டுகளை தாண்டி விமானங்கள் இல்லாமல் கல்காரத்துடன் இக் கோயில் உள்ளது. கருவறை மற்றும் முன்புறம் சிறு மண்டபத்துடன் காட்சியளிக்கிறது. கருவறையில் அய்யனார் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். வெளிப்புறம் ஏற்கனவே வழிபாட்டில் இருந்த அய்யனார் யானை வாகனத்துடனும், கருப்பணசாமி மற்றும் நினைவு கல்லாக இருக்கும் இரண்டு மனித உருவங்களும் கல் சிலை வடிவில் உள்ளனர். லாட சன்னாசிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. முன்புறம் இருக்கும் மண்டப தூணில் அதனை கட்டிய கொடையாளிகளின் ஆண் பெண் உருவ சிற்பங்கள் உள்ளது. 1929 ஆம் ஆண்டு கோயில் கட்டப்பட்டதாக வெளிப்புற சுவரில் கல்வெட்டாக காட்டப்பட்டுள்ளது. படிக்கட்டின் வாயில் முன்புறம் குதிரை வாகனத்தில் அய்யனாரும், சுக்கு மாந்தடியுடன் கருப்பண்ணசாமியும் சுதை சிற்பங்களாக காட்சியளிக்கின்றனர். கோயில் வளாகத்தில் வேண்டுதலுக்காக வைக்கப்பட்ட மண் குதிரைகள் நிறைந்து காட்சியளிக்கிறது.
அய்யனாருக்கு சைவ படையல்கள் வைக்கப்படுகிறது. கோயிலின் தென்கிழக்கில் 300 அடி தூரத்தில் ஏழுகன்னிமார் சிலையும், கருப்பசாமி சிலையும் வழிபாட்டில் உள்ளது. கிடாவெட்டு உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கும் வழிபாடு கருப்பசாமிக்கு நிகழ்த்தப்படுகிறது. ஐப்பசி மாதம் கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். அய்யனார் கோயிலுக்கு உரிய இயற்கையான காடு 12 ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது.
துருசுமலை கோயில்காட்டின் பல்லுயிரியம்:
--------------------------------------
விடத்தலை, உசிலை, திருகு கள்ளி, குறுந்தம், நெய் குருந்தம், வெறுவெட்டான், புங்கை, ஆலம், அரசு, மஞ்சநத்தி, வெப்பாலை, பனை உள்ளிட்ட 20 வகை தாவர இனங்களும்;
சிறுபக்கி, கருஞ்சிட்டு, புதர்சிட்டு, தேன்சிட்டு, சாம்பல் தகைவிலான், கருந்தோள் பருந்து, கதிர்குருவி உள்ளிட்ட 25 வகை பறவையினங்கள் துருசுமலையில் ஆவணம் செய்யப்பட்டது. https://ebird.org/checklist/S180297555
விரிவான ஆய்வுகள் இப்பகுதியின் பண்பாட்டு மற்றும் பல்லுயிரிய சூழல் குறித்த பல தரவுகளை நமக்கு தரக்கூடும்.
வருவாய்த்துறை பதிவேடு:
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், ச.பெருமாள்பட்டி கிராமம் சர்வே எண் 481இல் துருசுமலை அய்யனார் கோயிலும், கோயில்காடும் வருவாய்த்துறை வரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது.
---- ஆய்வுக்குழு & கட்டுரை தொகுப்பு ----
- மருத்துவர் திரு. தி. பத்ரி நாராயணன் (பறவையிலாளர்)
- பேரா. ப. தேவி அறிவு செல்வம் (கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)
- மரு. ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)
- திரு. ச. ஜோதிமணி (காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்)
- திரு. பு. இரா. விஸ்வநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)
- திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)
- திருமிகு லெட்சுமி ஜெயபிரகாஷ் (சூழல் ஆர்வலர்)
- திரு. க. சக்திவேல் (பறவையிலாளர்)
- திரு. சி. சதிஷ்குமார் (பசுமை செயல்பாட்டாளர்)
- திருமிகு. ஸ்ரீ. சந்தியா ஶ்ரீ, அமிர்தவர்ஷினி, க.சூரியநாரயணன் (காட்டுயிர் ஆய்வாளர்கள்)
- திரு. வெ. ராஜன் (வரலாற்று ஆர்வலர்)
- திரு. தமிழ்தாசன் (சூழலியல் ஆய்வாளர்)
ஒளிப்படங்கள்: திரு. ஜோதிமணி, திரு. விஸ்வா, சதிஷ்குமார், சந்தியா & தமிழ்தாசன்
இந்நடையின் கால நேரம்:
காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பழனியாண்டவர் அணையிலும் கோதண்டபாணி கோயில் வளாகத்திலும் ஆவணம் செய்தோம். பின் காலை 9 மணி முதல் 11 மணி வரை துருசுமலை அய்யனார் கோயில் பகுதியில் ஆவணம் செய்தோம்.
இந்நடையில் பொதுவான நிதி செலவு செய்யப்படவில்லை.
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
8903241263
https://www.facebook.com/manacufo
#BHS
#maduraibiodiversity
#MaduraiHeritage
#maduraiwildlife
#MaduraiWetlands
#sacredgrooves
Comments
Post a Comment