மஞ்சமலை - பண்பாட்டுச் சூழல் நடை
பண்பாட்டுச் சூழல் நடை - மஞ்சமலை
கடந்த 19.03.2023, ஞாயிறு அன்று காலை பண்பாட்டுச் சூழல் நடை பயணமாக மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியில் உள்ள மஞ்சமலைக்கு சென்று இருந்தோம். நிகழ்வுக்கு முன்பதிவு கட்டாயம் என்று அறிவித்து இருந்தோம். இந்நிகழ்விற்கு சுமார் 90 பேர் வரை கூகுள் படிவம் மூலம் தங்கள் வருகையை முன்பதிவு செய்து இருந்தனர். முன்பதிவு செய்தவர்களுக்கு இந்நிகழ்வின் நோக்கம், கடைபிடிக்க வேண்டிய நெறிகள் போன்றவை முன்பே அறிவுறுத்தப்பட்டது.
காலை 7 மணிக்கு பாலமேடு பேருந்து நிலையத்தில் இருந்து வலையப்பட்டி மஞ்சமலை அடிவாரத்திற்கு அனைவரும் ஒன்றாக வந்து சேர்ந்தோம். கல்லூரி மாணவர்கள், சூழல் ஆர்வலர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், புகைப்பட கலைஞர்கள் என பல்வேறு துறை சார்ந்த சுமார் 76 நபர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். வருகை பதிவேடு மூலம் முன்பதிவு செய்த பங்கேற்பாளர்களின் இருப்பை உறுதி செய்து கொண்டோம். ஒவ்வொருவரும் தங்கள் விருப்பம் என்னவென்பதை முன்பதிவு செய்து இருந்தனர். தாவரங்கள் ஆவணம் செய்யும் குழு, பண்பாட்டு தொடர்புகள் ஆவணம் செய்யும் குழு - இப்படியாக பறவைகள், வண்ணத்துப்பூச்சி, ஊர்வனங்கள் என ஒவ்வொரு குழுவாக 76 பேரையும் ஒழுங்குபடுத்தி, ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு துறைசார் நெறியாளர் தலைமையின் கீழ் அனைவரையும் மஞ்சமலை அடிவாரத்தில் இருந்து அருள்மிகு மஞ்சமலையான் கோவில்வரை நடையாக அழைத்து சென்றோம். செல்லும் வழியெங்கும் உள்ள தாவரங்கள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், ஊர்வனங்கள், பண்பாட்டு தொடர்புகள் பற்றிய குறிப்புகளை, அனுபவங்களை நெறியாளர்கள் பகிர்ந்து கொண்டனர். மஞ்சமலையான் கோவில் முன்பு வட்டமாக அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரை பற்றிய சுயஅறிமுகத்தகோடு பேச தொடங்கினோம். இந்த நிகழ்வில் செய்த ஆவணங்களை, அனுபவங்களை ஒவ்வொருவரும் பகிர்ந்து கொண்டார்கள்.
அங்கயே ஒரு குழுப் புகைப்படம் எடுத்து கொண்டு மீண்டும் கீழே மலையடிவாரத்துக்கு காலை 9.30 வாக்கில் இறங்கிவிட்டோம். பங்கேற்ப்பாளர்கள் அனைவருக்கும் மலையடிவாரத்தில் காலை உணவு ஏற்பாடு செய்து இருந்தோம்.
மலையடிவாரத்தில் காலை உணவை முடித்துவிட்டு மஞ்சமலையில் இருந்து பாலமேடு செல்லும் வழியில் உள்ள மறவபட்டி பெருமாள் கோவிலுக்கு சென்றோம்.
மறவபட்டி பெருமாள் கோவில்:
12-13 ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டிய மன்னர்களால் கட்டபட்ட கோயில் இது என்பது வரலாற்று அறிஞர்களின் கருத்து. மிகவும் சிதிலமடைந்து நிலையில் இருக்கிறது. கோட்டை சுவர்கள் கொண்ட இக்கோவில், பசுமையான மலைகள் சூழ்ந்த நிலப்பரப்பில் அமைந்துள்ளது. கோட்டை சுவர்களும், கோவில் கட்டுமானமும் முற்றிலும் சிதைந்த நிலையில் இருப்பது வேதனைக்குரியது. இதே போன்றதொரு கோட்டை சுவர் கொண்ட கோவில் ஒன்று அருகாமையில் இருக்கிறது. அக்கோவில் செல்லும் வழி முற்புதர்கள் அடர்ந்து இருப்பதால், நாங்கள் அக்கோவிலுக்கு போகவில்லை. மேலும் சிதிலம் அடைந்த நிலையில் உள்ள இக்கோவிலை பாதுகாத்து புனரமைக்க மாவட்ட ஆட்சியரிடம் கோருவோம்.
மஞ்சமலை ஐயனார் கோவில்:
மஞ்சமலை கோவிலில் அய்யனார், கருப்பு, கன்னிமார் என பல தெய்வ சிலைகளை காண முடிந்தது. 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் புரவி எடுக்கும் (குதிரை எடுப்பு) திருவிழா நடப்பதாக மக்கள் கூறுகின்றனர். கடைசியாக 2018 ஆம் ஆண்டு திருவிழா நடைபெற்று இருக்கிறது. அரண்மனை ஜாமீன் அவர்களிடம் பிடிமண் கொடுத்து, அதன் பின் குதிரை சிலைகள், சாமி சிலைகள் செய்வதற்கான திருப்பணிகள் அரசம்பட்டியில் நடக்கும். பின்னர் மேளதாளம் முழங்க மக்கள் ஊர்வலமாக வளையப்பட்டி மந்தைக்கு வருவார்கள் எனவும், பின் பூஜைகள் செய்து அங்கிருந்து பரிவாரங்களுடன் சாமி சிலைகள், குதிரை சிலைகள், இதர சிலைகள் மஞ்சமலை கோவிலுக்கு எடுத்து வரப்படும் என மக்கள் தெரிவித்தனர்.
பல்லுயிர்கள் ஆவணம்:
வேதிவால் குருவி, தோட்டகள்ளன், நீலத் தொண்டை ஈப்பிடிப்பான், நாணல் கதிர்குருவி, பச்சை கதிர்குருவி, வெண்முதுகு சோலைப்பாடி, கருஞ்சிட்டு, துடுப்புவால் கரிச்சான், மாங்குயில் உள்ளிட்ட 40 வகை பறவையினங்களையும்
மரகத அழகி, எலுமிச்சை அழகி, கரும்புள்ளி நீலன், வரிநீலன், கொன்னை வெள்ளையன், வெளிர்சிவப்பு, செஞ்சிறகன், வெள்ளையன், வெண்ணிற தாவி உள்ளிட்ட 45 வகை வண்ணத்துப்பூச்சிகளையும்
சாம்பல் அணில், இலைமூக்கு வௌவால், நட்டுவாகாலி, பச்சை ஓணான், ஓநாய் சிலந்தி முட்டைகளுடன், மரவட்டை, ஓணான் உள்ளிட்ட உயிரினங்களையும்
அழிஞ்சில், தொரட்டி, தும்பிலி, குகமதி, பூனை குருகு போன்ற அரிய மரங்கள் உட்பட 52 வகை தாவரங்களை அடையாளம் கண்டு ஆவணம் செய்தோம்.
மஞ்சமலை ஆறு:
மஞ்சமலையில் உற்பத்தி ஆகும் ஆறு மஞ்சமலை ஆறு ஆகும். மஞ்சமலை ஆற்றில் தான் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. மஞ்சமலை ஆற்றை மரக்கிளி ஓடை என்றும் மக்கள் அழைக்கின்றனர். அலங்காநல்லூர் - வலசை என்ற ஊர் அருகில் சாத்தையாறுடன் இணைந்து மதுரை வண்டியூர் அருகே வைகை ஆற்றில் கலக்கிறது மஞ்சமலை ஆறு.
இந்நிகழ்வில் ஏறக்குறைய 75 நபர்களுக்கான காலை உணவு மற்றும் இதர செலவுகளை சேர்த்து மொத்தம் 2250 ரூ செலவானது.
இந்நிகழ்வில் 40 வகை பறவைகளையும், 45 வகை வண்ணத்துப்பூச்சிகளையும், 52 வகை தாவரங்களையும் ஆவணம் செய்தோம்.
தொடர்ந்து பயணிப்போம்.
ஒருங்கிணைப்பு குழு
மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை
Comments
Post a Comment