மூன்றுமலை - பண்பாட்டுச் சூழல் நடை
மூன்றுமலை - பண்பாட்டுச் சூழல் நடை
====================
பண்பாட்டுச் சூழல் நடையின் 18 வது பயணமாக உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ள மூன்றுமலைக்கு 28.04.2024, ஞாயிறு அன்று சென்று இருந்தோம். மூன்று மலையை பெண்மலை என்றும் அழைக்கிறார்கள். இந்த பயணத்தின் குறிப்பான ஐந்து செய்திகளை கீழே கொடுத்துளோம். விரிவான செய்தியை ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
1. பெண்மலையில் அமைந்துள்ள 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளது. பழங்கால கற்திட்டைகள் அல்லிகுண்டம் கண்மாயில் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.
2. புள்ளி சிறு தாவி (Spotted small flat) பட்டாம்பூச்சி முதல்முறையாக மதுரை மாவட்டத்தில் இம்மலையின் அடிவாரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
3. அரிதாக வெளியில் காணப்படும் செவ்வாய் பூங்குயில் (Sirkeer Malkoha) பறவை இப்பகுதியில் ஆவணம் செய்யப்பட்டது.
4. இந்நடையில் 90க்கு அதிகமான தாவர இனங்களும், 51 வகையான பறவையினங்கள், 14 வகை வண்ணத்துப்பூச்சி இனங்களும், 3 வகை ஊர்வனங்களும் ஆவணம் செய்யப்பட்டது.
5. பொய்கைமலை - மூன்றுமலை - புத்தூர்மலை உள்ளிட்ட மலைகள் பல்லுயிரிய மரபு தளமாக (BHS) அறிவிக்க தகுதி வாய்ந்த பகுதியாக இருக்கும் என்று நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.
மூன்றுமலை / மூனுமலை / பெண்மலை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம் பகுதியில் அல்லிகுண்டம் பெருங்காமநல்லூர் ஊர்களுக்கு இடையில் அமைந்துள்ளது மூனுமலை. சுமார் 500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தெற்கில் பெ.கன்னியம்பட்டி, பெருங்காமநல்லூர்; மேற்கில் பெருமாள்கோவில்பட்டி, அல்லிகுண்டம்; வடக்கில் அயோத்திப்பட்டி, வகுரணி சந்தைப்பட்டி; கிழக்கில் குமரன்பட்டி, ஓணம்பட்டி ஆகிய ஊர்கள் மூனுமலையின் நாலுபுற எல்லைகளாக விளங்குகின்றன.
பெயர் காரணம்:
மூன்றுமலையின் வடக்கு பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூன்று மலைகளின் சிகரமும் தெரிவதால் இம்மலையை மூன்று மலை / மூனு மலை / பெண்மலை / பொட்டமலை என்று அழைக்கின்றனர். மலையின் மூன்று சிகரங்களை ஒரு முகம் இரு மார்பகங்கள் என்று உருவகப்படுத்தி பெண்மலை, பொட்டமலை என்றும் மலையின் வடக்கு பகுதியில் உள்ளவர்கள் அழைக்கின்றனர். மூன்றுமலை / மூனு மலை என்று சொல்வது மொத்த மலைகளையும் குறிக்கும் பெயராக இருக்கிறது. பெண்மலை என்ற பெயர் மலையின் வடக்கு பகுதி உருவத்தை குறிக்கும் சொல்லாக இருக்கிறது. பெ.கண்ணியம்பட்டியில் உள்ளவர்களும் மூன்றுமலை என்றே அழைக்கின்றனர்.
பெருங்காமநல்லூர் ஊரில் இருந்து பார்த்தால் இருமலைகள் தான் தெரியும். எனவே பெருங்காமநல்லூர் ஊரில் இம்மலையை ரெட்டைமலை என்று அழைக்கின்றனர். மேற்கில் உள்ளவர்கள் பெருமாள்மலை என்று அழைக்கின்றனர். பெருமாள் கோயில் விளக்கு தூண் மலையில் அமைந்துள்ளதால் பெருமாள்கோயில் மலை என்று அழைக்கின்றனர்.
மலையின் உச்சியை அல்லது மலையின் சிகரத்தை கொண்டையம் என சொல்வது மதுரை பகுதி மக்களின் வழக்காகும். மூன்று மலையின் மூன்று சிகரத்தை - கிழக்கு கொண்டையம், மேற்கு கொண்டையம், சின்ன கொண்டையம் என்று கன்னியம்பட்டி மக்கள் அழைக்கின்றனர். மேற்கு கொண்டையம் பகுதியை வெள்ளைப்பாறை என்றும் அழைக்கிறார்கள். கிழக்கு கொண்டையம் மலையில் சாமிப்புடவு என்று பெயரில் இரு குகைகள் உள்ளன. தொம்பரம்பாறை, நெத்திப்பாறை ஆகிய பகுதிகள் கிழக்கு கொண்டையம் மலையில் உள்ளது. சக்கிலியர்பாறையும் கிழக்கு பகுதியில் உள்ளது. மாட்டு தோல் காயப்போடும் இடம் என்பதால் இப்பெயர் வந்தது என கன்னியம்பட்டியை சேர்ந்த திரு. காசிமாயன் அவர்கள் தெரிவித்தார்.
நீர்வளம்:
மூன்றுமலையின் தெற்கு பகுதியில் பல்வேறு ஊற்றுகள், சுனைகள் உள்ளதால் தெற்குப்பகுதி மலை பசுமையாக உள்ளது. பல்வேறு ஊற்றுகளும், சுனைகளும், வெண்மருத மரங்களும், இலுப்பை மரங்களும் மலையின் தெற்குபகுதியில் அதிகம் காணப்படுகின்றன. கிழக்கு கொண்டையம் பகுதியில் தொம்பரம்பாறை ஊற்று, நெத்திப்பாறை ஊற்று, பாலூத்து, காட்டுக் கிணறு, மூனுக்குழி பள்ளம் உள்ளிட்ட ஊற்றுகளும், சுனைகளும் உள்ளன. மலையின் அடிவாரத்தில் கன்னிமார் ஊற்று உள்ளது. மூனு மலையின் தெற்கு சரிவில் கன்னிமார் ஓடை என்ற பெயரில் கல்லுக்குளம், உடக்குளம் கண்மாய்களுக்கு நீர் பாய்ந்தோடுகிறது. அதன் பின் பெருங்காமநல்லூர், அழகுரெட்டிபட்டி, தங்களாச்சேரி கடந்து பூசலாபுரம் அருகே குண்டாற்றுடன் (வரட்டாறு) கலக்கிறது.
---- வரலாற்று சின்னங்கள் ----
வெள்ளை நிற பாறை ஓவியங்கள்:
பெண்மலை பகுதியில் பத்து பேர் அமரும் வண்ணம் குகை அமைந்துள்ளது. அதனை மக்கள் புலிப்புடவு என்று அழைக்கின்றனர். அக்குகையில் பழமையான வெள்ளைநிற பாறை ஓவியங்கள் காணப்படுகிறது. பொதுவாக தமிழ்நாட்டில் வெள்ளை நிற பாறை ஓவியங்களின் காலம் 3000 வருடங்கள் என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. குகையின் மேற்புறத்தில் ஆண்,பெண் மனித உருவங்கள் தனியாகவும், வேட்டைக்கு செல்வது போன்றும் குறியீடுகள், சூரியன், சந்திரன் மற்றும் விலங்குகள் என கிட்டத்தட்ட 50 எண்ணிக்கையில் வெள்ளை நிற பாறை ஓவியங்கள் உள்ளன. அண்மையில் குகையில் யாகம் வளர்க்கப்பட்டு பூசைகள் நடப்பதால், குகையின் மேல்புறம் புகைப்படிந்து கருப்பாக காட்சியளிக்கிறது. இதனால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளைநிற பாறை ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளது. தமிழ்நாடு அரசு மூன்றுமலை பாறை ஓவியங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூனுமலையின் கிழக்கு கொண்டையம் பகுதியில் சாமிப்புடவு என்ற பெயரில் இரு குகைகள் இருக்கிறது. முருகன்குகை, வேலன் குகை என்று மக்கள் அழைக்கின்றனர். அதில் ஒரு குகை நீண்டதூரம் கொண்டதாகவும், வவ்வால்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இக்குகைகளில் வரலாற்று சின்னங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
பழங்கால கற்திட்டைகள்:
மூனுமலையின் மேற்கு சரிவில் மாசாணகருப்புச்சாமி கோயிலும், அல்லிக் குண்டம் கண்மாயும் உள்ளது. கண்மாயின் கிழக்கு முனையில் இறந்தவர்கள் நினைவாக கல் வைத்து எழுப்பப்படும் ஈமக்காடு அமைந்துள்ளது. அதன் அருகே பழங்காலத்தை சேர்ந்த இரண்டு கற்திட்டைகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் சிதைந்த நிலையில் இருக்கும் சிற்பங்களை நீர்நிலைகளில் போட்டுவிடும் பழக்கம் உள்ளது. அவ்வாறு போடப்பட்ட இரண்டு விநாயகர் சிற்பங்களும் சிதைந்த நிலையில் கற்திட்டைகளின் அருகில் காணப்படுகிறது. அல்லிகுண்டம் - அயோத்திப்பட்டி சாலையில் 400 ஆண்டுகள் பழமையான சதிக்கல் இருப்பதாக மக்கள் தெரிவித்தனர். அதனை எங்களால் கண்டடைய இயலவில்லை.
கோயில்கள்:
பெ.கன்னியம்பட்டி பகுதியில் மூனுமலையின் தெற்குசரிவில் 2 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் அடர்ந்த பகுதியில் அமைந்துள்ளது ஏழுகன்னிமார் கோயில். இக்கோயில் ஊர் பொதுக்கோயிலாகும். கோயிலின் தல மரமாக ஆத்தி மரம் உள்ளது. கன்னிமார், கருப்பசாமி, சன்னாசி உள்ளிட்ட தெய்வ சிலைகள் கோவிலில் காணப்படுகின்றன. கன்னிமார் ஊற்று அருகே மருத மரத்தினடியில் நாகம்மாள் சிலைகள் காணப்படுகிறது. ஆண்டுதோறும் ஏழுகன்னிமார் கோயில் திருவிழா புரட்டாசி மாதம் வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். பெருங்காமநல்லூரரில் இருந்து எடுத்துவரப்படும் மண்சிலை தெய்வ மற்றும் விலங்கு உருவங்கள் கன்னியம்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு, தெய்வ சிலைகள் கண்திறக்கப்படுகிறது. கிடாவெட்டு, முடிகாணிக்கை உள்ளிட்ட சடங்குகள் திருவிழாவின் போது நிகழுகிறது.
அண்மைக் காலத்தில் மூன்றுமலையின் வடக்கு சரிவில் லிங்கேஸ்வரர் - மலைமீனாட்சி வழிபாடும், புலிப்புடவு குகையில் சிவலிங்க சிலையும், வராகினி சிலையும் அதற்கு முன்புறம் யாக குண்டமும், குகையின் வெளிப்புறத்தில் நின்ற நிலையிலான மூன்றடி உயர அகத்தியரின் சிற்பம் வைக்கப்பட்டு வழிபாடும் நடைபெறுகிறது.
---- பல்லுயிரிய வளம் ----
28.04.2024 அன்று காலை 7 மணி முதல் 10 மணி வரை மூன்றுமலை அடிவாரத்தில் நடைபெற்ற பல்லுயிரிய ஆய்வில் 90க்கு அதிகமான தாவர இனங்களும், 51 வகையான பறவையினங்கள், 14 வகை வண்ணத்துப்பூச்சி இனங்களும், 3 வகை ஊர்வனங்களும் ஆவணம் செய்யப்பட்டது. காட்டு முயல், காட்டு பூனை துவங்கி சுமார் 20க்கும் மேற்பட்ட பாலூட்டி வகை உயிரினங்களும் இம்மலையில் இருப்பதாக மக்களின் வாய்மொழி ஆதாரமாக ஆவணம் செய்யப்பட்டது. விரிவான ஆய்வுகள் பல்லுயிரிய வளம் பற்றிய கூடுதல் தகவல்களை நமக்கு தரக்கூடும்.
----- புத்தூர்மலை ------
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் சுமார் 870 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது புத்தூர் மலை. வடக்கில் வடுகபட்டி, ஆ. ராமநாதபுரம்; கிழக்கில் ஆரியப்பட்டி, செம்பட்டி; தெற்கில் கட்டத்தேவன்பட்டி, தெற்கில் அய்யன்மேட்டுப்பட்டி; மேற்கில் போத்தம்பட்டி, மலைப்பட்டி ஆகிய ஊர்கள் புத்தூர் மலையின் நான்குபுற எல்லைகளாக உள்ளன.
புத்தூர் மலையின் வடக்கிழக்கு பகுதியில் உள்ள ஆ. ராமநாதபுரம் ஊருக்கு அருகில் நரிப்பள்ளி பொடவு என்கிற குகைதளத்தின் உட்பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான வெள்ளை நிற பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பாறை ஓவியங்கள் உள்ளன.
இம்மலையின் மேற்கு பகுதியில் கி.பி. 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமணர் தீர்த்தங்கர்களின் புடைப்பு சிற்பங்களும், சிற்பங்கள் நடுவே வட்டெழுத்துக் கல்வெட்டும் கண்டறியப்பட்டுள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள தீர்த்தங்கரர்களின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் காட்டப்பட்டுள்ளன. நின்ற நிலையில் ஒரு தீர்த்தங்கரர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளுர் மக்களால் வைதீகக் கோயிலாகக் கருதப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றது. புத்தூர்மலையின் தெற்கு பகுதியில் மலைராமர் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. பாறைகளில் செதுக்கப்பட்டுள்ள அனுமார் மற்றும் ராமர் சிற்பங்கள் காணப்படுகிறது. புத்தூர் மலையின் பல்லுயிரிய வளம் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
பொய்கைமலையில் நாம் செய்த ஆய்வுகள் குறித்து விரிவாக அறிந்து கொள்ள https://www.facebook.com/share/p/sL4fytSkHKQHWStg/?mibextid=oFDknk இந்த பதிவில் சென்று பார்க்கலாம்.
இந்நடையில் ஆவணம் செய்யப்பட்ட பல்லுயிரிகள் பட்டியல் மற்றும் வரலாற்று தடங்கள் உரிய அரசு துறைகளின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கப்படும். உசிலம்பட்டி வட்டத்தில் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள பொய்கைமலை - மூன்றுமலை - புத்தூர் மலை ஆகிய மூன்றுமலைகளும் பல்லுயிரிய மரபு தளமாக (BHS) அறிவிக்க தகுதி வாய்ந்த இடங்களாகும். இது தொடர்பான ஆவணங்கள் தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எடுத்து செல்வோம். நன்றி
இந்நடையில் ஆவணம் செய்யப்பட்ட பறவைகள் விவரம் கீழே இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
1. மூன்றுமலை பறவைகள் பட்டியல்: https://ebird.org/checklist/S170689139
2. அல்லிகுண்டம் கண்மாய் பறவைகள் பட்டியல்: https://ebird.org/checklist/S170688475
------------------------------------
வருவாய்த்துறை பதிவேடு:
மூன்றுமாலையின் தெற்கு பகுதி பெருங்காமநல்லூர் கிராம வரைப்படத்தில் சர்வே எண் 28, மலையின் வடக்கு பகுதி வகுரணி கிராமத்தில் சர்வே எண் 284, மலையின் மேற்குப்பகுதி அல்லிகுண்டம் சர்வே எண் 1இல் காட்டப்பட்டுள்ளது.
இந்நடையின் செலவு:
உணவு 30 பேர் : ரூ. 1350
---- ஆய்வுக்குழு & கட்டுரை தொகுப்பு ----
- பேரா. ப. தேவி அறிவு செல்வம் (கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)
- மரு. ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)
- திரு. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)
- திரு. விஷ்வா நாகலட்சுமி (காட்டுயிர் ஆய்வாளர்)
- திரு. சி. சதிஷ்குமார் விளாச்சேரி (சமூக ஆர்வலர்)
- திரு. க. சக்திவேல் (பறவையிலாளர்)
- திரு. தமிழ்தாசன் (சூழலியல் ஆய்வாளர்)
ஒளிப்படங்கள்:
திரு. விஸ்வா, சதிஷ்குமார், கார்த்திகேயன் & தமிழ்தாசன்
வழித்துணையாக இருந்தவர்கள்
திரு. தங்கமாயன், அயோத்திப்பட்டி
திரு. காசிமாயண்டி, பெ. கன்னியம்பட்டி
திரு. அ. சந்துரு, பிரித்திகா உணவகம், அல்லிகுண்டம்
உணவு ஏற்பாடு:
பிரித்திகா உணவகம், அல்லிகுண்டம் - 6382514189
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
8903241263
https://www.facebook.com/manacufo
#BHS
#MaduraiHeritage
#maduraibiodiversity
#maduraiwildlife


Comments
Post a Comment