பாண்டமுத்துமலை, மாங்குளம் - பெண்கள் பண்பாட்டுச் சூழல் நடை

 பெண்களுக்காக பெண்களால் நடத்தப்பட்ட பண்பாட்டு சூழல் நடை நிகழ்வு 31.12.2023 அன்று மாலை மதுரை மேலூர் வட்டம் மாங்குளம் பகுதியில் உள்ள பாண்டமுத்துமலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 30 பெண்கள் பங்கெடுத்தனர்.





பண்டமுத்து மலையின் கிழக்கு சரிவில் உள்ள முற்றுப்பெறாத குடைவரை கோயிலை பார்வையிட்டனர். அதன் பின் அங்கயே அம்மலையின் வரலாற்று செய்திகளை பேரா. தேவி உரை வழியாக கேட்டு அறிந்தனர். அதன் பின் பாண்டமுத்துமலைக்கு மேலேறி அங்குள்ள பாறைமடை அம்மன் கோவிலை அதன் சுனையை, மலையின் உச்சியில் இருந்து தெரியும் மதுரையின் அழகை கண்டு ரசித்தனர். பின் மருத்துவர் ஹிமோக்ளோபின் அவர்களின் உரையை கேட்டுவிட்டு மலை இறங்கி வீடு திரும்பினார்.





பேரா. தேவி மற்றும் மரு. ஹீமோக்ளோபின் அவர்கள் உரையின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் மு. லிங்கேஸ்வரி, வரலாற்றுத்துறை இணை பேராசிரியர் நாகேஸ்வரி, வழக்கறிஞர் கீர்த்தி, ஆசிரியர்கள் மு.பத்மா, சங்கவி, சங்கீதா, விவசாயி நந்தினி, மாணவி சினேகா, அக்குஹீலர் துர்காதேவி, மாங்குளம் மாயாண்டிபுரம் ஊரை சேர்ந்த தமிழரசி மற்றும் காட்டுயிர் & விலங்கியல் பயிலும் கல்லூரி மாணவிகளும் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். மதுரை வழக்கறிஞர் சங்கத்தின் (MBA) சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் தலைவர் & வழக்கறிஞர் M.K.சுரேஷ் அவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்து கொண்டார். ஊட்டி, ராஜபாளையம், திருச்சி, பெரம்பலூர், மதுரை பேரையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பெண்கள் வந்து பங்கெடுத்தனர். பண்பாடு மற்றும் சூழலியல் தளங்களில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளது அல்லது பெண்களின் பங்களிப்பு மறைக்கப்பட்டுவிடுகிறது. பொதுசமூக நீரோட்டட்தில் பெண்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தவும், தங்கள் அடையாளத்தை கண்டடைவையும், சூழலியல் மற்றும் பண்பாட்டு துறைசார் கருத்துகளை பெண்களிடம் எடுத்து செல்லவும் பெண்களுக்கான பண்பாட்டுச் சூழல் நடை மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தின் வாயிலாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வினை பேரா. ப. தேவி அறிவு செல்வம் & மருத்துவர் ஹீமோக்ளோபின் அவர்களும் தலைமையேற்று சிறப்பாக வழிநடத்தினார்கள்.


நிகழ்வில் கோயில் கட்டிடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் பேரா. ப. தேவி அறிவு செல்வம் அவர்கள் பேசியதாவது தொல் பழங்காலத்தில் நீர் நெருப்பு, நிலம், காற்று ஆகாயம் உள்ளிட்ட ஐம்பூதங்களை வழிபட்ட மனிதன் ஐம்பூதங்கள் உறைகொண்டிருக்கும் மலை, காடு, கடல், மரம், ஆறு, ஏரி குளங்களை வழிபட்டான். தொடர்ந்து மர வழிபாடு, கல் வழிபாடு, நடுகல் வழிபாடு அதில் உருவங்களை கோட்டுருவமாக வரைந்தும் வண்ணங்களாலும் உருவங்களை ஏற்படுத்தி வழிபடத் தொடங்கினான். அதன் பின் உருவ வழிபாட்டிற்கும் கோயில் கட்டும் நடவடிக்கைக்கும் வந்தடைந்தான். சங்க காலத்திலும் அதற்கு முன்பும் மரத்தாலும் செங்கலாலும் கோயில் கட்டி வழிபாடு செய்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் கல் பாறைகளை குடைந்து குடைவரை கோயில்களை அமைக்கும் பணி கிபி ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கிபி 9ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்றுள்ளது .மதுரையில் ஒன்பது குடைவரை கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று இந்த பாண்ட முத்து மலை என்று அழைக்கப்படும் பாறையில் அமைந்துள்ள இந்தக் குடைவரையானது மலையின் சரிவில் மேற்கு நோக்கி உள்ளது. இரண்டு முழு தூண்கள் மற்றும் இரண்டு அரை தூண்களுடன் கோண வடிவ போதிகைகளை கொண்டுள்ளது . குடைவரையின் காலம் கிபி ஏழாம் நூற்றாண்டாக இருக்கலாம் . இக் குடைவரையானதுகோயில்களின் முன்னோடி எனலாம் . குடைவரை கோயில்களுக்கு ஆகம விதிகள் கிடையாது. மூன்று இறை உருவங்களை வைப்பதற்காக குடையப்பட்டதாக தெரிகிறது . இவ்வூர் மக்கள் இதனை மூன்று கதவு கோயில் என்றும் இம்மலையின் மீது அம்மன் கோயில் ஒன்று இருப்பதால் அம்மன் குளம் என்றும் அழைக்கிறார்கள்.குடைவரை முற்றுப் பெறாமல் நின்றதற்கான காரணம் பாறையின் தன்மை, படை எடுப்பினால் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் போன்ற காரணங்களாக இருக்கலாம்.

மேலும் இப் பகுதியைச் சுற்றி 32 குளங்கள் இருக்கிறது .அதில் ஒரு குளம் தர்மம் குளம் . பாறையின் அடிவாரத்தில் உள்ளது. இங்கு மலையில் இருந்து வரும் நீரானது தேக்கி வைக்கப்பட்டு சுத்துப்பட்டு 18 கிராம மக்கள் குடிநீருக்காக பயன்படுகிறது. பாண்டுமுத்து மலை அருகே பெரிய குளமும் அதில் இரண்டு மடைத் தூண்களும் உள்ளன. மூன்று கதவு கோயிலுக்கு எதிரே கல்லால் ஆன ஒரு அடி உயர அகலம் கொண்ட யானை வாகனம் ஒன்றும் காணப்படுகிறது பொதுவாக குளத்தங்கரையில் அய்யனார் கோயில் இருக்கும். எங்கும் அய்யனார் கோயில் இருந்ததற்கான இந்த யானை வாகனம் காணப்படுகிறது . மேலும் வரலாற்றுக்கு முந்தைய வழிபாடான கல்வழிபாடும் இப்பகுதியில் இன்றும் வழிபாட்டில் உள்ளது. அருகே தானியங்களை சேமித்து வைக்கும் கீழ்பகுதியில் சிறு துளையுடன் கூடிய தொன்மையான குளுமை ஒன்று 26 /10/ 2020 அன்று ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அதனை தினமலர் நாளிதழ் செய்தியாக வெளியிட்டு இருந்தது. சுற்று வட்டாரத்தில் 50க்கும் மேற்பட்ட சிறு பாறை குன்றுகள் இருக்கின்றன. பறையங்குளம் அதனைச் சுற்றி ஈச்ச மரம் சூழ்ந்த ஈச்சங் கரை , பாண்ட முத்து மலை ,புல்லாம் புடவு என்னும் குகை போன்ற அமைப்பு, உடப்பு பாறை, சக்கிலியன் குட்டு ,சாமியார் குட்டு ,கல்லடைச்சான் மலை எனப் பல மலைகள் உள்ளன .இம் மலை அடிவாரத்தில் மருந்து அரைக்கும் குழி ஒன்றும் காணப்படுகிறது. இம் மலைக்கு அருகே மீனாட்சிபுரம் பகுதியில் கழுகுமலை என்னும் ஓவா மலையில் பொது ஆண்டு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கருதப்படும் ஆறு தமிழி கல்வெட்டுகள் உள்ளன. அதில் சங்க கால பாண்டிய மன்னர் நெடுஞ்செழியன், அவரது சகலையின் தந்தை போன்றோர் சமணர்களுக்கு கற்படுக்கை செய்து கொடுத்ததையும் முத்து வணிகம் மற்றும் வணிகர்கள் குழு பற்றிய விவரங்களும் இக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம் மலையில் செங்காவியில் எழுதிய ஓவியக் குறியீடுகளும் காணப்படுகின்றன. இந்த முற்றுப்பெறாத குடைவரையைச் சுற்றி பல மலைகளும் தொல்லியல் தடயங்களும் சூழ்ந்து உள்ளன. மலையின் மேலே பாறைமடை அம்மன் கோயில் உள்ளது. இந்த சிறிய கருவறை கொண்ட கோயிலில் விநாயகரும் நான்கு கரங்கள் கொண்ட பாரைமடையம்மனும் உள்ளனர் . கோயிலுக்கு வெளியே லிங்கம், நந்தி, சப்த கன்னியர்கள் மற்றும் கல் வழிபாடும் உள்ளது. கோயிலுக்கு அருகே வற்றாத சுனை ஒன்றும் நீர் நிறைந்து காணப்படுகிறது. மலை மேலும் ஒரு மருந்து அரைக்கும் குழி காணப்படுகிறது.

கல்வெட்டில் பெண்கள்:
மதுரையை பொறுத்தவரை கிபி ஏழாம் நூற்றாண்டில் திருப்பரங்குன்றத்தில் கொற்றவை மற்றும் ஜேஷ்டா தேவிக்கு குடைவரை கோயிலை பாண்டி மன்னரின் தளபதியான சாத்தன் கணபதியின் மனைவி நக்கன் கொற்றி குடைவரை கோயிலை எடுத்துள்ளார். 12 ஆம் நூற்றாண்டில் திருவாதவூரில் கௌரி மற்றும் சந்திரசேகருக்கு தேவரடியார் பெண் ஒருவர் கோயில் எடுத்துள்ளார். சாத்தம் பெற்றி , பூண்டாள் சோலை , ஆலால சுந்தரநங்கை , வீரசோழியாழ்வார் , தணி முழுதுடையாள் , சுந்தரபாண்டியன் மனைவி திருவுடையாள், திருப்புவனம் கோயிலில் கிபி பத்தாம் நூற்றாண்டில் பெண் ஒருவர் போன்றோர் ஏழாம் நூற்றாண்டில் இருந்து 18ஆம் நூற்றாண்டு வரை பண்பாட்டிலும் பொது சேவையிலும் ஈடுபட்டுள்ளார்கள்.'

பறவையியல் ஆய்வாளர் மருத்துவர் ஹீமோக்ளோபின் பேசியதாவது: தினமும் வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள், குடும்பத்தை கவனிப்பது என உழலும் பெண்களுக்கு பறவை பார்த்தால் என்பது வீட்டை தாண்டி இருக்கும் வேறு ஒரு உலகத்தை தரிசிப்பதாக முதலில் அமைகிறது. பறவை பார்த்தல் என்பது உழைக்கும் பெண்களுக்கு இளைப்பாறுதலாக இருக்கும். பறவைகளை ஆய்வு நோக்கில் பார்ப்பதன் வழியாக நம் சுற்றுச்சூழலில் ஏற்ப்படும் மாற்றங்களை நம்மால் முன்னதாகவே உணர முடியும், கணிக்க முடியும். பறவைகள் நம் சூழலின் காலக்கண்ணாடி. நம் அடுத்த தலைமுறைக்கு பறவைகளை பற்றிய அறிவியல் செய்திகளை கற்றுக் கொடுக்க முடியும். இன்றைய நடையில் இந்த பாண்டமுத்து மலையை சுற்றி பூஞ்சை பருந்து, மாங்குயில், சூறைக்குருவி, தகைவிலான் குருவி, புள்ளி ஆந்தை, தேன்சிட்டு, அன்றில், வென்மார்பு மீன்கொத்தி உள்ளிட்ட 34 வகை பறவைகளை இன்றைக்கு ஆவணம் செய்தோம். https://ebird.org/checklist/S157595074

மதுரை இயற்கை பண்பாட்டு மையம் (MNCF)
31.12.2023

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை