பொய்கை மலை - பண்பாட்டுச் சூழல் நடை
பொய்கை மலை - பண்பாட்டுச் சூழல் நடை
=================================
பண்பாட்டுச் சூழல் நடையின் 17 வது பயணமாக உசிலம்பட்டி வட்டம், சேடப்பட்டி ஊராட்சி ஒன்றியம் குப்பல்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பரமன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பொய்கைமலைக்கு 10.03.2024, ஞாயிறு அன்று சென்று இருந்தோம். பொய்கைமலையானது வருவாய்துறையின் பதிவேட்டின் கீழ் கரடு என்ற வகைப்பாட்டில் உள்ளது. பொய்கைமலை சுமார் 45 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த பயணத்தின் குறிப்பான நான்கு செய்திகளை கீழே கொடுத்துளோம். விரிவான செய்தியை ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.
1. பண்பாட்டு மற்றும் பல்லுயிர்ச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பொய்கைமலை உள்ளது. இம்மலையை பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Spot) அறிவிப்பதற்கு தகுதி வாய்ந்த இடம் என்பதை தமிழ்நாடு அரசுக்கும், மதுரை மாவட்ட வனத்துறைக்கும் தாழ்மையோடு பரிந்துரைக்கிறோம்.
2. பொய்கைமலையின் வடகிழக்கு உச்சியில் 400 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோயில் ஒன்று பாழடைந்த நிலையில் இருக்கிறது. மலையின் வடமேற்கு சரிவில் சமணர் தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழே கி.பி 910 ஆம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்து கல்வெட்டு காணப்படுகிறது. மலையின் வடமேற்கு அடிவாரக் குகையில் ரெட்டைக்கால் முனியாண்டி கோயில் அமைந்துள்ளது. மலையின் வடகிழக்கு முனை அடிவாரம் பொய்கையாற்றின் தென்கரையில் ஆத்து கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது.
3. பொய்கையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் இங்கு நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் இத்திருவிழா காண பொய்கைமலைக்கு வருகின்றனர்.
4. இம்மலையில் சுமார் 80 வகையான தாவர இனங்கள், 14 பாலூட்டி வகை விலங்குகள், 57 வகை பறவை இனங்கள், 18 வகை வண்ணத்துபூச்சி இனங்கள், ஊர்வனங்கள், பூச்சிகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. பல்லுயிரிய நோக்கிலும் இம்மலை முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது.
பொய்கைமலையை போல அல்லிகுண்டம் பகுதியில் கன்னியம்பட்டி மலையும், உசிலம்பட்டி - ஆரியபட்டி அருகேயுள்ள புத்தூர் மலையும் பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க தகுதி வாய்ந்த மலைகளாகும். அதனை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.
பண்பாட்டுச் சூழல் நடை பயண விவரம்:
10.03.2024 அன்று காலை 6.45 மணிக்கு இந்நிகழ்வுக்கு முன்பதிவு செய்த 30 பேருடன் பரமன்பட்டிக்கு மந்தைக்கு வந்து சேர்ந்தோம். பொய்கைமலை பெருமாள் கோயில் செல்லும் படிக்கட்டுக்கு மேற்கில் உள்ள பாறையின் வழியாக பொய்கை மலையின் உச்சியில் உள்ள பெருமாள் கோயிலை அடைந்தோம். பின் அங்கிருந்து கடவு வழியாக இறங்கி ஊதுப்பாறை - ஒத்தமலை இடையில் பொய்கைமலையின் மேற்கு சரிவு அடிவாரத்தில் நடந்து சமணர் கோயிலை அடைந்தோம். அங்கே குழுப் புகைப்படம் எடுத்துவிட்டு ரெட்டைகால் முனியாண்டி கோயில் வழியாக ஆற்றுப்பாதையில் இறங்கி சின்னக்கட்டளை மண்டகபடி வழியாக பரமன்பட்டி மந்தையை 10.30 மணிக்கு வந்தடைந்தோம். இப்பயணம் முழுக்க எங்களுக்கு வழிகாட்டிகளாக பரமன்பட்டியை சேர்ந்த திரு. மாயழகு, வாசிமலை மற்றும் மாயழகு அவரின் மகன் சிவா (10வது படிக்கிறார்) உடன் வந்தார்கள். காலை 10.45 மணிக்கு உணவு வந்தது. பின் அங்கிருந்து 11.30 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு செல்லும்வழியில் பெருங்காமநல்லூர் ஈகியர் நினைவு தூணை கண்டுவிட்டு வீடு திரும்பினோம். பொய்கைமலை பகுதியில் நாம் ஆவணம் செய்த விவரங்களை விரிவாக கீழே கொடுத்துள்ளோம்.
பொய்கை மலை:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், சேடப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பல்நத்தம் - கு. ஆண்டிபட்டி - பரமன்பட்டி ஊர்களின் வருவாய் கோட்டத்திற்குள் அமைந்துள்ளது பொய்கைமலை. பரமன்பட்டியில் துவங்கும் மலை கு.ஆண்டிபட்டி வரை நீண்டுகிடக்கிறது. பொய்கைமலை சுமார் 2 கி.மீ நீளம் கொண்டது. மொத்த மலைகளும் பொய்கைமலை என்றே அழைக்கப்படுகிறது. ஆண்டிபட்டி பக்கம் தனித்திருக்கும் இருக்கும் ஒரு மலையை ஒத்தமலை என்கின்றனர். சமணர் சிற்பங்களுக்கு மேல் கப்பல் போன்ற வடிவம் கொண்ட ஒரு பாறை இருக்கிறது. அச்சிறுபகுதியை கப்பல்மலை என்கின்றனர். அங்காங்கே குகைகள், புடவுகள் போன்ற அமைப்பை பொய்கைமலையில் காண முடிகிறது. சில இடங்களில் பாறை ஓவியம் போன்ற வடிவங்களை பொய்கைமலையில் காண முடிந்தது. பொய்கைமலையின் மத்திய பகுதியில் நான்கு பக்கமும் மலைகள் சூழ பள்ளத்தாக்கு போன்ற பகுதி அமைந்திருக்கிறது. அப்பகுதியை 'கடவு' என்கின்றனர். பொய்கைமலையின் கடவு பகுதியில் வேர்கடலை, சோளம், தட்டாம்பயிறு, கானப்பயிறு, பாசிப்பயிறு, உளுந்து உள்ளிட்ட பயிர் வகைகளை ஆண்டிபட்டி ஊர் மக்கள் பயிரிட்டு வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக கடவு பகுதியில் வேளாண்மை நடைபெறவில்லை.
பொய்கை மலையின் எல்லைகள்:
வடகிழக்கு: சின்னக்கட்டளை, பரமன்பட்டி ஊர் & பொய்கை ஆறு
கிழக்கு: பரமன்பட்டி கண்மாய்
தென்மேற்கு: கு. ஆண்டிபட்டி ஊர் & ஆண்டிபட்டி கண்மாய்
மேற்கு: சேடப்பட்டி
பொய்கை மலை: அட்சரேகை தீர்கரேகை (Latlong) 9.838690,77.808548
பொய்கைமலை கோயில்களும் & திருவிழாக்களும்
சவணர் (சமணர்) கோயில்:
பொய்கைமலையின் வடமேற்கு சரிவின் அடிவாரத்தில் உள்ள குகையில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண சமய தீர்த்தங்கரர்களான மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, பத்மாவதி, பிராமி, சுந்தரி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன. சிற்பங்களுக்கு கீழே அதனை செய்வித்தவர்களின் விவரங்கள் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. அதன் காலம் கி.பி 910 ஆம் ஆண்டு. தெளிவற்ற இக்கல்வெட்டில்
''..ஞ்ஸவ ஸிஸ்ரீ குறண்டி அட்தேவர்க்கு அடிகள் அம்ஞ்சி பேரால் செய்வித்த திருமேனி இஞ்வர்மாணாக் கிசுஞ்க்கள்ஞ்வித்த திருமேனி ஞ்.ல்லி கொற்றி(த்த) தேவர் பேரால் சேவித்த திருமேனிஞ்.'' என்று எழுதப்பட்டுள்ளது. ஐந்து திருமேனிகளை ஒரு பெண் அடியார் உட்பட ஐவர் செய்து கொடுத்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. குறண்டி சமணபள்ளியின் பெயரும் இக்கல்வெட்டில் இடம் பெறுகிறது.
சமண சிற்பங்கள் முக்குடையுடன், அமர்ந்த நிலையில், இயக்கியர்களுடன் நான்கு மகாவீரர் சிற்பங்களும், அதனைத் தொடர்ந்து நின்ற நிலையில் 3 சிற்பங்களும், அமர்ந்த நிலையில் ஒரு மகாவீரர் சிற்பமும், அதனைத் தொடர்ந்து நின்ற நிலையில் இயக்கியருடன் ஒரு தீர்த்தங்கரர் என மொத்தம் ஒன்பது தீர்த்தங்கரர் சிற்பங்கள் புடைப்பு சிற்பங்களாக இங்கு உள்ளனர்.
இங்கு சித்திரை மாதம் பௌர்ணமி அன்று வழிபாடு, திருவிழா நடைபெறுகிறது. மேலும் இப்பகுதியில் விளையும் விளைச்சலின் முதல் அறுவடையை இங்கு படைத்து வழிபாடு செய்கின்றனர் . மேலும் இங்கு விலங்கு பலியிட்டு வழிபாடும் செய்யப்படுகிறது. இப்பகுதி மக்கள் வைதீக தெய்வங்களாக கருதி மஞ்சள், எண்ணெய், சந்தனம், குங்குமம் போன்றவற்றை சாற்றி வழிபடுகின்றனர். இதனை சவணர் (சமணர்) கோயில் என்றே மக்கள் அழைக்கின்றனர். இந்த மலையில் உள்ள ஒரு குகையில் சமணர் படுகை போன்ற அமைப்பு உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். அதற்க்கான பாதைகள் இல்லாததால் போக முடியவில்லை.
சமணர் சிற்பம் & கோயில் பற்றிய மேலுள்ள விவரங்களை கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர் பேரா. ப. தேவி அறிவு செல்வம் Devi Arivu Selvam அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
பெருமாள் கோயில்:
பொய்கைமலையின் வடகிழக்கு உச்சியில் அமைந்துள்ளது பெருமாள் கோயில். 400 வருடங்கள் தொன்மையான கோயில் ஒன்று இங்கு முழுவதும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இடிந்த பகுதிகளைக் கொண்டு கருவறை, மண்டபம், கோபுரம் என சிறப்பானதொரு கட்டுமானத்துடன் கோயில் இருந்துள்ளதை தெரிந்து கொள்ள முடிகிறது. அப்பகுதியை ஆய்வு செய்து பார்த்த பொழுது நீர் பிடிப்பு, தொடர் விவசாயம் போன்ற காரணங்களால் இக்கோயில் இடிந்து இருக்கலாம் என தெரிகிறது. கோயிலில் உயரமான கோபுர நிலைக் கால்களில் பொதுவாக கங்கை, யமுனை நதி தேவதைகள் கொடி பெண்களாக வடித்திருப்பார் . இக்கோயிலின் சிதைந்த நிலையில் இருக்கும் கோபுர நிலைக் காலில் துவார பாலகர்கள், நாகபந்தம் மற்றும் முத்துச்சர அமைப்புடன் இந்த கோபுரம் நிலைக் கால் காணப்படுகிறது.
பொதுவாக கட்டுமான கோயிலில் மூலவர் கருங்கல்லாக இருக்கும் பொழுது அபிஷேகம் செய்த நீர் வெளியேறுவதற்காக கருவறையிலிருந்து வெளிப்புறமாக நீர் வழி தூம்பு வடக்கு நோக்கி அமைக்கப்படும். இங்கும் அதே போல் நீர் வழி தூம்பு என்னும் பிரநாளமானது வாழைப்பூ வடிவில் சிம்ம முகத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இக் கோயிலானது மன்னர்கள் அல்லது குறுநில மன்னர்களால் கட்டுப்பட்டு உள்ளது என்பதை இந்த பிரநாளம் வழியாக தெரிந்து கொள்ள முடிகிறது. சமீபத்தில் இடிந்து போன கருங்கற்களை கொண்டு அடிப்பகுதியை அடுக்கி வைத்து ள்ளனர். மேலும் சிற்பங்கள் எதுவும் காணப்படாததால் இக்கோயில் பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்துகொள்ள முடியவில்லை.
கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர் பேரா. ப. தேவி அறிவு செல்வம் Devi Arivu Selvam அவர்கள் இக்கோயில் பற்றிய மேலுள்ள விவரங்களை ஆவணம் செய்து தொகுத்து கொடுத்தார்.
கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகள் கீழே நல்ல நிலையில் உள்ளது. பின் மேலே செல்ல செல்ல படிக்கட்டு பாதைகள் முள்ளடர்ந்து பயன்படுத்தும்படியாக இப்போதில்லை. எனவே பெருமாள் கோயிலை அடைய மலையின் பாறைகள் மீது ஏறிப் போக வேண்டும். மலைக்கு செல்ல இயலாததால் கீழே மலையில் சிறு தொலைவில் படிக்கட்டில் ஏறி வாரவாரம் துளசி வைத்து தீபம் ஏற்றி வணங்கிவிட்டு செல்கின்றனர். பெருமாள் கோயில் அருகே தீபம் ஏற்றும் விளக்குத்தூன் உள்ளது. விளக்கை நன்கொடை அளித்தவரின் பெயர் விளக்கின் அடிபுரத்தில் கல்வெட்டாக இருக்கிறது. விழா காலங்களில் இங்கு தீபம் ஏற்றப்படுகிறது.
பெருமாள் கோயிலின் கட்டுமானம் முற்றுப்பெறாத நிலையில் இருக்கிறது. மேலும் சிதிலமடைந்து இருக்கிறது. மலையில் தாய் மகள் இருவர் தங்கி இருந்ததாகவும், மகள் பூப்பெய்து அடைவதருக்குள் ஒரு கோயில் முழுமையாக கட்டிவிட வேண்டும் என ஆரம்பித்ததாகவும் கோயில் கட்டி முடிப்பதற்குள் அவர் மகள் பூப்பெய்து விட்டததால் இந்த கோயில் கட்டும் பணியை பாதியில் நிறுத்திவிட்டதாக இந்த பகுதி மக்களிடம் கோயில் கட்டுமானம் தொடர்பான பழங்கதை ஒன்று புழக்கத்தில் உள்ளது. மேலுள்ள விவரங்கள் சமூக ஆர்வலர் திரு. சதிஷ்குமார் விளாச்சேரி சதிஷ்குமார் விளாச்சேரி அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது.
ரெட்டைகால் முனியாண்டி கோயில்:
பொய்கைமலையின் வடகிழக்கு முனை அடிவாரத்தில் பொய்கையாற்றின் தென்கரையை ஒட்டி இரு பாறைகள் முக்கோண வடிவு கொண்ட சிறு குகையில் உள்ளது முனியாண்டி கோயில். இருபாறைகள் கால் போல் உள்ளதால் ரெட்டைக்கால் முனியாண்டி என்று அழைக்கின்றனர். முனியாண்டிக்கு ஆடு, கோழி, சேவல் பலிகொடுத்து வேண்டிக் கொள்ளும் வழக்கம் உள்ளது.
ஆத்து கருப்பணசாமி கோயில்:
மலையின் வடகிழக்கு முனையில் பொய்கையாற்றின் தென்கரையில் அமைந்துள்ளது ஆத்து கருப்பணசாமி கோயில். சித்திரை மாதம் நிறைமதி நாள் இரவில் குப்பல்நத்ததில் இருந்து மண்ணால் செய்த திருவுருவச் சிலைகள் பரமன்பட்டி ஆனந்தி அம்மன் கோயில் மந்தைக்கு எடுத்துவரப்பட்டு, பொய்கையாற்றில் நீராடி கருப்பணசாமி கோயிலில் வைத்து சிலைகள் கண்திறக்கப்பட்டு வழிபாடு நடக்கிறது. காவல்காரர்கள் வகையறாவினர் கொண்டுவரும் கோழிக்குஞ்சின் பிஞ்சு கால்விரல் கத்தியால் கீறப்பட்டு, அதில் வடியும் குருதியை கருப்பணசாமி நெற்றியில் பூசி கண்திறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
வெங்கடாசலபதி பெருமாள் கோயில், குப்பல்நத்தம்:
பொய்கைமலையில் இருந்து 2 கி.மீ தொலைவில் குப்பல்நத்தம் ஊரில் அமைந்துள்ளது வெங்கடாசலபதி பெருமாள் கோயில். சுற்றுவட்டார ஊர்களில் செல்வாக்கை செலுத்தும் நிகழ்வாக குப்பல்நத்தம் வெங்கடாசலபதி பெருமாள் கள்ளழகராக பொய்கையாற்றில் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குபெரும் குப்பல்நத்தம் சித்திரைத் திருவிழா மூன்று நாள் திருவிழாவாக வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பொய்கைமலையின் வடக்கு முனையில் உள்ள பொய்கையாற்றில் கள்ளழகர் எழுந்தருளி பொய்கையாற்றின் வடக்கு கரையில் உள்ள சின்னக்கட்டளை மண்டகபடியில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். மதுரை நகரில் வைகையாற்றில் அழகர்மலை கள்ளழகர் இறங்கும் அதே நேரத்தில் பொய்கையாற்றில் குப்பல்நத்தம் கள்ளழகர் இறங்குகிறார்.
பொய்கையாறு & நீர்நிலைகள்:
பொய்கைமலையின் வடக்கு திசையில் பாய்ந்தோடுகிறது பொய்கையாறு. இதனை பொய்கைநதி என்றும் மக்கள் அழைக்கின்றனர். மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம், மள்ளபுரம் பகுதி மலைகளில் தோன்றும் அய்யனார் கோயில் ஓடையும் எழுமலை பகுதிகளில் தோன்றும் பாலசுனைபாறை ஓடையும், தாழையூத்து கருப்புசாமி மலையில் தோன்றும் தாழையூத்து ஓடையும் ஆத்தங்கரைப்பட்டி அருகே இணைகிறது. ஆத்தங்கரைப்பட்டி மாதாந்தம் அருகே கவுண்டியா நதி என்று பெயர் பெறுகிறது. கௌண்டா நதி என்றும் மக்கள் அழைக்கின்றனர். பொதுப்பணித்துறை ஆவணங்களும் கௌண்டா நதி என்றே குறிப்பிடுகிறது. ஆத்தங்கரைப்பட்டி, காமாட்சிபுரம், மேலதிருமாணிக்கம், அதிகாரிப்பட்டி, சேடப்பட்டி கடந்து பொய்கைமலையின் வடக்குமுனையை தழுவிக் கொண்டு பரமன்பட்டி வரும் ஆறு, அவ்விடத்தில் பொய்கையாறு என்று பெயர் பெறுகிறது. இவ்விடத்தில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைத் திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு புகழ் பெற்ற நிகழ்வாகும்.
பரமன்பட்டி, பூசலாபுரம், சௌடார்பட்டி, கிழவனேரி, திரளி, மேலநேசனேரி, அரசப்பட்டி கடந்து சிவரக்கோட்டை அருகே வரட்டாறு ஆற்றுடன் இணைந்து கமண்டலநதி என்னும் பெயரில் சலுப்பபிள்ளையார்நத்தம், ச. பெருமாள்பட்டி, க.வெள்ளாங்குளம் கடந்து கள்ளிக்குடி - சென்னம்பட்டி அருகே (கமண்டலநதி) குண்டாற்றுடன் இணைகிறது. சிவரக்கோட்டையில் இருந்து வரும் கமண்டலநதியும் (பொய்கையாறு) கெஞ்சம்பட்டி, கள்ளிக்குடி கடந்து வரும் கமண்டலநதியும் கள்ளிக்குடி - சென்னம்பட்டி அருகே ஒன்று சேர்ந்து குண்டாறு என்ற பெயருடன் வையம்பட்டி, பிசிண்டி, காரியனேந்தல், வடக்குபுளியம்பட்டி, தோணுகால், கணக்கனேந்தல், ஜோகில்பட்டி கடந்து பெருஞ்சாலி புதுப்பட்டி அருகே காரியாபட்டி கடந்து வரும் மந்திரி ஓடையுடன் (அசுவமா நதி) கலக்கிறது. பின் குண்டாறு என்ற பெயருடன் திருச்சுழி, மண்டலமாணிக்கம், கமுதி கடந்து சாயல்குடி - மூக்கையூர் அருகே மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. குண்டாறு ஒரு பருவகால (non-perennial river) ஆறாகும்
பொய்கைமலை சுற்றியுள்ள கண்மாய்கள்:
பொய்கை மலையின் கடவு பகுதியில் பொழியும் மழை வடிந்து கு.ஆண்டிபட்டி அருகியுள்ள மொச்சிகுளம் கண்மாய்க்கு செல்கிறது. மொச்சிகுளம் மறுகால் தண்ணீர் ஆண்டிபட்டி, குப்பல்நத்தம் கண்மாய்கள் நிறைத்து பூசலாபுரம் அருகே பொய்கையாற்றில் கலந்துவிடுகிறது. பொய்கைமலையின் கிழக்குச் சரிவில் பொழியும் மழைநீர் பரமன்பட்டி கண்மாய் நிறைத்து பொய்கையாற்றில் கலக்கிறது. பரமன்பட்டி, கு.ஆண்டிபட்டி, குப்பல்நத்தம், மொச்சிகுளம் உள்ளிட்ட கண்மாய்களின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் பொய்கைமலை விளங்குகிறது.
பொய்கைமலை ஊதுப் பாறை:
பொய்கைமலையின் கடவுப் பகுதியில் உள்ள ஒரு பாறையின் துளையில் வாய் வைத்து ஊதினால் அப்பாறை பிளவில் உள்ள பெருந்துளை வழியாக தண்ணீர் கொப்பளித்து கொட்டும் என்றும் அதனை குடிநீராக மேய்ச்சல் மற்றும் வேளாண் மக்கள் பயன்படுத்துவார்கள் என்று மக்கள் தெரிவித்தனர். அப்பாறையை ஊதுப் பாறை என்று மக்கள் அழைக்கின்றனர். நாங்கள் சென்றது கோடை வெயில் காலம் என்பதால் அப்பாறையில் தண்ணீர் வரவில்லை.
கிணறு:
சமணர் கோவில் எதிரில் ஒரு பழமையான கிணறு ஒன்று உள்ளது. அது இன்று பயன்பாட்டில் இல்லாத ஒரு பாழடைந்த நிலையில் இருக்கிறது. இக்கிணற்றில் கால்நடைகளை வைத்து தண்ணீர் ஏற்றம் இறைத்து விவசாயம் செய்துள்ளனர்.
வேளாண் பயிர்கள்:
மானாவாரி பயிர்களான சோளம், கம்பு, குதிரைவாலி, கடலை, துவரம்பருப்பு, பாசி பயிறு, மொச்சைபயிறு, உளுந்து, தட்டாம்பயிறு உள்ளிட்ட பயிர் வகைகள் இப்பகுதியில் பயிரப்படுகின்றன.
மேய்ச்சல் தொழில்:
குறும்பாடு, வெள்ளாடு, செம்மறி ஆடு, கிடை மாடுகள் உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு தொழிலும் இப்பகுதியில் முக்கியத் தொழிலாக உள்ளது. பொய்கைமலை கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும் உள்ளது.
மேலுள்ள விவரங்கள் திரு. தமிழ் தாசன், சதிஷ்குமார் விளாச்சேரிகுமார் அவர்களால் ஆவணம் செய்து தொகுக்கப்பட்டுள்ளது.
காட்டுயிர்கள்:
பாலூட்டிகள்:
Indian Hare - காட்டு முயல், Indian Fox - வங்காள நரி, Indian Grey Mongoose - சாம்பல் நிறக் கீரி, Small Indian Civet - புனுகு பூனை, Common Palm Civet - மரநாய், Jungle Cat - காட்டுப் பூனை, Indian Wild Boar - காட்டுப் பன்றி, Grey Slender Loris - சாம்பல் நிற தேவாங்கு, Lesser mouse-tailed bat - எலிவால் வௌவால், Three Striped palm squirrel - இந்திய அணில், Bare bellied Hedgehog - தென்னிந்திய முள்ளெலி, Indian Gerbil - இந்திய வெள்ளெலி, Greater Bandicoot Rat - பெருச்சாளி, House Rat / Black Rat - கருப்பெலி உள்ளிட்ட 14 பாலூட்டி வகை விலங்கினங்கள் பொதிகைமலை மற்றும் அதனையொட்டி உள்ள வயக்காடுகளில் வாழுகின்றன. மேல் குறிப்பிட்டுள்ள விலங்குகளின் புகைப்படங்களை மக்களிடம் காட்டி உறுதி செய்து தொகுத்த பட்டியல் இது. இப்பட்டியலில் குறிப்பிடப்படும் பாலூட்டிகள் இன்றும் இப்பகுதியில் வாழ்கின்றன. கீரி, இந்திய அணில், எலிவால் வௌவால், வெள்ளெலி பொந்து உள்ளிட்டவைகள் இந்நடையில் ஆவணம் செய்யப்பட்டது.
பறவைகள்:
இந்நிகழ்வில் பறவையிலாளர்கள் மருத்துவர் பத்ரி நாராயணன், மரு. ஹீமோக்ளோபின், காட்டுயிர் ஒளிப்படகலைஞர் திரு. ஜோதிமணி அவர்கள் தலைமையில் ஏறக்குறைய 57 வகை பறவை இனங்கள் ஆவணம் செய்யப்பட்டது. கொம்பன் ஆந்தை, ஓணான் கொத்தி கழுகு, கருங்கழுகு, வல்லூறு, மஞ்சள் தொண்டை சிட்டுக்குருவி, மாம்பழச் சிட்டு, பச்சை பஞ்சுருட்டான், நீலவால் பஞ்சுருட்டான், மாங்குயில், பழுப்பு கீச்சன், கருஞ்சிட்டு, காட்டுக் கதிர்க்குருவி, சாம்பல் கதிர்க்குருவி, புள்ளி ஆந்தை, உன்னி கொக்கு, அக்கா குயில், கள்ளிப் புறா, புள்ளிப்புறா, செம்போத்து உள்ளிட்ட 57 வகை பறவையினங்கள் இன்றைய பயணத்தில் ஆவணம் செய்யப்பட்டது. பறவைகள் பட்டியல் இ-ப்ர்ட் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திரு. ஜோதிமணி பட்டியல் - https://ebird.org/checklist/S164276346
பொய்கைமலை தாவர வகைகள்:
தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் பார்கவிதை Karthikeyan Parkavithai அவர்களால் இந்த பயணத்தில் ஆவணம் செய்யபட்டுள்ள தாவர வகைகள்
நீர் மருதம் -Terminalia arjuna, ஆலம் Ficus benghalensis, அரசு Ficus religiosa, இச்சி Ficus amplissima, கல் அத்தி Ficus mollis, வேம்பு Azadirachta indica, புங்கை Pongamia pinnata, ஆவி Holoptelea integrifolia, வெள்வேலம் Vachellia leucophloea, உடை Vachellia planifrons, வெருவெட்டான் Dalbergia coromandeliana, செங்கத்தாறி Capparis sepiaria, நஞ்சுண்டான் Balanites aegyptiaca, இலந்தை Ziziphus mauritiana, மஞ்சணத்தி Morinda tinctoria, குருந்தம் Atalantia monophylla, மா Mangifera indica, வாகை Albizia lebbeck, புளி Tamarindus indica, தூங்குமூஞ்சி மரம் Samanea saman, குல்முஹர் Delonix regia, இலவம் Ceiba pentandra, பனை Borassus flabellifer, தென்னை Cocos nucifera, ஈச்சம் Phoenix sylvestris, திருகுக்கள்ளி- Euphorbia lacei உள்ளிட்ட மரங்களும்,
காட்டு துளசி, கொழுஞ்சி, கூத்தன் குதும்பை, ஆதாளை, எருக்கு, ஆவாரை, தாத்தா பூண்டு, களா, கோபுரந்தாங்கி, காரை, காட்டாமணக்கு, இரயிலடி பூண்டு, சிறுகண் பீளை, பெரும்பீளை
பேய்மிரட்டி, தும்பை, வெண் பூலா, கரும்பூலா, அவுரி, முதியோர் கூந்தல், நாயுருவி, நிலக்கடம்பு, குருவிச்சி, மருள், சேத்துக்கு ராசா, சீதேவி செங்கழுநீர், குரண்டி, காட்டு கனகாம்பரம், காட்டு முள்ளி, சப்பாத்திக்கள்ளி, குப்பைமேனி, நெருஞ்சி, வேலிபருத்தி, மூக்கிரட்டை, முடக்கத்தான், பிரண்டை, லிங்கக்கோவை, கோவை
தலைச்சுருளி, மருள் ஊமத்தை, நெய்வேலி காட்டாமணக்கு, செந்தும்பை, மூவிலைக்கொடி, நறுந்தாளி, சுரை உள்ளிட்ட செடிகளும்
அறுகம்புல், சுக்குநாறிப் புல், கடிகாரப் புல் உள்ளிட்ட புற்களும், பார்த்தீனியம், கம்யூனிஸ்ட் பச்சை, சீமைக் கருவேலம் - Prosopis juliflora உள்ளிட்ட தாவரங்களும் பொய்கைமலையில் ஆவணம் செய்யப்பட்டது. இதன் மருத்துவ பயன்பாடுகளை சித்த மருத்துவர் நல்லதம்பி அவர்கள் ஆவணம் செய்தார்.
பட்டாம்பூச்சிகள் - Butterflies:
Crimson rose - சிவப்புடல் அழகி, Common rose - உரோசா அழகி, Common tiger - வெந்தய வரியன், Tawny coaster - செவ்வந்தி சிறகன், White orange tip - மஞ்சள் காவிக்கடவி, Yellow pansy - மஞ்சள் வசீகரன், Common pierrot - கரும்புள்ளி நீலன், Common mormon - கறிவேப்பிலை அழகன், Common crow - வெண்புள்ளிக் கருப்பன், Choclate pansy - பழுப்புநிற வசீகரன், Yellow Orange tip - வெண் ஆரஞ்சு நுனிச் சிறகன், Forget me not - பயறு நீலன், Common Gull - மஞ்சாடை, Stripped Tiger - வரி வேங்கை, Small Salmon Arab - சிறு சந்தன அரபு, Small orange Tip - சிறுக்காவி நுனிச் சிறகன், Grass yellow - மஞ்சளாத்தி, Blue Pansy - நீல வசீகரன் உள்ளிட்ட 18 வகை பட்டம்பூச்சிகள் திரு. Karthikeyan Parkavithai, Vishwa Vishwanath & வீரமணி அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது.
ஊர்வனங்கள் & இரு வாழ்விகள் ஆய்வாளர் திரு விஸ்வா Vishwa Vishwanath & திரு. வீரமணி அவர்களால் இப்பகுதியில் உள்ள பூச்சிகள், எட்டுக்காலிகள், சிலந்திகள், பூச்சிகள் ஆவணம் செய்யப்பட்டது. அவை
Moth
crimson banded handmaiden amata passalis
Skink
Eutropis carinata - Keeled Indian Skink
Lizard
Calotes Versicolor - Oriental Garden Lizard
Bee -
Stingless bee
Wasp
1. Potter wasp, 2. Braconid wasp,
Bugs
1. Assassin bug, 2. Darth Maul bug - Spilostethus hospes, 3. Halyomorpha - Stink bug
Tree hopper -
Leptocentrus moringae
Dragonfly
Diplacodes trivialis - Ground skimmer
Ant -
Oecophylla smaragdina - Asian weaver ant
Forest cockroach -
Ectobius sp
Spider
Signature spider - Argiope sp, White crab spider - Thomisus sp, White lynx spider -
Oxyopes shweta
பெருங்காமநல்லூர் படுகொலை நினைவுத்தூண்:
இந்தியா முழுவதும் குறிப்பிட்ட பிரிவினர் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் (Criminal Tribes Act) கீழ் கொண்டு வரப்பட்டனர். சுமார் 213 சாதிகளைக் குற்றப் பரம்பரையினர் பட்டியலில் ஆங்கிலேய அரசு இணைத்தது. பிரமலைக் கள்ளர்கள் அதிகம் வாழும் பகுதியில் அதிகாரிகள் இந்தச் சட்டத்தை வேகமாக அமல்படுத்தி வருகையில், மதுரை மாவட்ட பெருங்காமநல்லூர் கிராமத்திற்கு வந்தனர். ஆனால் அந்தச் சட்டத்திற்கு அடிபணிய அந்தக் பெருங்காமநல்லூர் மக்கள் மறுத்தனர். மக்கள் போராட்டம் எதிர்ப்புணர்வும் வலுத்தது. மக்களின் எதிர்ப்புணர்வை அடக்க 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி ஆங்கிலேய அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்நிகழ்வில் ‘மாயக்காள்’ என்ற ஒரு பெண் உள்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பெருங்காமநல்லூர் அப்பாவி மக்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூடு, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எதிரொலித்தது.
உயிர்த் தியாகம் புரிந்தவர்களுக்கு, ஊர் மக்களில் இருவர் நினைவு மண்டபம் எழுப்ப நிலத்தை அன்பளிப்பாக வழங்கினார்கள். அதில் ஒரு நினைவுத் தூணில் உயிர்த்தியாகம் புரிந்த பதினாறு பேர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இப்போது தமிழக அரசு பெருங்காமநல்லூர் படுகொலை மற்றும் இம்மக்களின் விடுதலை போராட்ட வரலாற்றை நினைவுக்கூறும் விதமாக பெருங்காமநல்லூரில் மணிமண்டபம் அமைத்திருக்கிறது.
பெருங்காமநல்லூர் நினைவுத்தூண் முன்னின்று குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
வருவாய்த்துறை பதிவேடு:
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், குப்பல்நத்தம் ஊராட்சி வரைப்படத்தில் சர்வே எண் 111இல் பொய்கைமலை கட்டப்பட்டுள்ளது.
வழித்துணையாக இருந்தவர்கள்:
1. மாயழகு, பரமன்பட்டி
2. வாசிமலை, பரமன்பட்டி
பொய்கை மலை நடை - வரவு செலவு விவரம்:
நன்கொடை:
திரு. பிரவீன் டேனி (அன்பு சூழ் உலகு) - ரூ. 1200
திரு. செந்தில், திருமங்கலம் - ரூ. 1000
செலவு:
உணவு 30 பேர் : ரூ. 1300
கையிருப்பு: ரூ 900
மதுரை இயற்கை பண்பாட்டு மையம் (MNCF)
8903241263
https://www.facebook.com/manacufo
Comments
Post a Comment