மாலைக் கோயில்காடு & ஓந்திமலை - பண்பாட்டுச் சூழல் நடை

 மாலைக் கோயில்காடு & ஓந்திமலை - பண்பாட்டுச் சூழல் நடை

====================
பண்பாட்டுச் சூழல் நடையின் 19 வது பயணமாக உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பட்டி - சின்னக்குறவக்குடி ஊரில் அமைந்துள்ள மாலைக் கோயில்காடு பகுதிக்கு 12.05.2024, ஞாயிறு அன்று சென்று இருந்தோம். சங்கரநாராயண நாடார் மெட்ரிக் (PSU ASN) பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இந்நடையில் பங்கெடுத்தனர். மாலைக்கோயில்காடு பகுதி செல்லும் வழியில் அமைந்துள்ள சின்ன குறவக்குடி கண்மாய், குறவக்குடி கண்மாய், சடச்சிப்பட்டி கண்மாய், அய்யனார்குளம் கண்மாய், வின்னக்குடி கண்மாய், வாலாந்தூர் கண்மாய் உள்ளிட்ட 6 நீர்நிலைகளையும் ஆவணம் செய்தோம். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே கரடிப்பட்டி ஊரில் அமைந்துள்ள ஓந்திமலை பகுதிக்கும் சென்று ஆவணம் செய்தோம். இந்த பயணத்தின் குறிப்பான ஐந்து செய்திகளை கீழே கொடுத்துளோம். விரிவான செய்தியை ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.




1. மாலைக் கோயில்காடு பரப்பளவில் மதுரை மாவட்டத்தின் பெரிய கோயில்காடு ஆகும். மதுரை நகருக்கு அருகில் சமவெளியில் எஞ்சியிருக்கும் இப்பசுமை பரப்பு பாதுகாக்கப்பட வேண்டும்.
2. மாலைக் காட்டில் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரு அடுக்குநிலை நடுகல், கழுமரம் வழிபாடு நடைபெறுகிறது. மாலைக் கோயில்காடும், சின்னகுறவக்குடி கண்மாயும் பல்லுயிரிய மரபு தலமாக (Biodiversity Heritage Site - BHS) அறிவிக்க தகுதி வாய்ந்த பகுதிகளாகும்.
3. மாலைக்கோயில் காட்டில் 37 வகை பறவை இனங்களும், 16 வகை பட்டாம்பூச்சி இனங்களும், 15 வகை தாவர இனங்களும், 5 வகை தும்பி இனங்களும், 3 வகை எறும்பு இனங்களும் இக்கோயில் காட்டில் ஆவணம் செய்யப்பட்டது. விரிவான தொடர் ஆய்வுகள் இப்பகுதியில் நடைபெற்றால் மாலைக்கோயில்காட்டின் பல்லுயிரிய வளத்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
4. அய்யனார்குளம், குறவக்குடி, வின்னக்குடி, சின்ன குறவக்குடி, சடச்சிப்பட்டி, வாலாந்தூர் கண்மாய்கள் பல்லுயிரிய பெருக்கமுள்ள மதுரை மாவட்டத்தின் ஈரநில (Wetland) பகுதியாக அறிவிக்க தகுதி வாய்ந்த நீர்நிலைகளாகும். ஆண்டுமுழுதும் இக்கண்மாய்களில் நீர் இருப்பது அதன் தனிச்சிறப்பாகும். ஆயிரக்கணக்கில் பறவைகள் கூட்டம் கூட்டமாக இந்த நீர்நிலைகளில் எப்போதும் காண முடிகிறது. 25 க்கும் மேற்பட்ட பறவைகள் இனங்கள் இந்த நீர்நிலைகளில் ஆவணம் செய்தோம்.
5. ஓந்திமலை பகுதியில் 16வகை பறவை இனங்கள் ஆவணம் செய்யப்பட்டது. யானைமலை, நாகமலை, பசுமலை போல ஓந்திமலையும் விலங்கின் பெயரை தாங்கி நிற்கும் மதுரை மாவட்டத்தின் பெருமைமிகு அடையாளமாகும். (பச்சை + ஓந்தி = பச்சோந்தி) நாகமலை - ஓந்திமலை ஊர்வன வகை உயிரினங்கள் பெருக்கமுள்ள பகுதியாகும். நாகமலை ஊர்வனங்களின் சரணாலயமாக அறிவிப்பது ஊர்வனங்கள் பற்றிய விழிப்புணர்வுக்கும் பாதுகாப்புக்கும் உறுதுணையாக இருக்கும்.

கோயில்காடு: 
இயற்கையாக அமைந்துள்ள காட்டை தெய்வ நிலமாக கருதி வழிபடுவது கோயில் காடு அமைப்புமுறையாகும். கோயிலை கட்டிய பிறகு மனிதனால் உருவாக்கப்படும் தோட்டமும், காடும் 'நந்தவனம் அல்லது சாமித் தோப்பு' என்று அழைக்கப்படுகிறது. கோயில்காடு என்பது இயற்கையான காட்டை குறிக்கும். நந்தவனம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட தோட்டம் அல்லது காட்டை குறிக்கும். கோயில்காடு என்பது நாட்டார் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய தொன்மையான இயற்கை வழிப்பாட்டின் எச்சமாகும். வேளாண் நிலங்களுக்காக இயற்கையான காடுகள் அழிக்கப்பட்டு வேளாண் நிலங்களாக மாற்றும் போது மேய்ச்சல் தேவை அல்லது தெய்வம் உறைக் கொள்ளும் இடமாக அந்த இயற்கையான காட்டின் ஒரு பகுதியை அப்படியே விட்டு வைப்பது தொல்குடிகளின் வழக்கமாகவும். அவ்வாறு எஞ்சியுள்ள காட்டை தெய்வமாக கருதி அக்காட்டினுள் மரங்கள் வெட்டுவது, விலங்குகள் வேட்டையாடுவது, செருப்பணிந்து செல்வது தெய்வகுத்தமா கருதி பாதுகாக்கப்படும். மேலும் ஊர் மக்களே கோயில்காட்டை பாதுகாக்க காவலுக்கு ஆள் நியமித்து இரவு பகல் பாதுகாத்து வருவர். வயல்வெளியாக, புஞ்சை நிலமாக மாறும் முன்  ஒவ்வொரு திணையிலும் ஆதியில் என்னென்ன தாவரங்கள், காட்டுயிர்கள் இருந்தன என்பதற்கான நிகழ்கால சான்றுகளாக கோயில்காடுகளே விளங்குகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் தொன்மையான விதை வங்கிகளாக கோயில்காடுகள் விலகுகின்றன. எனவே கோயில்காடுகள் பாதுகாப்பு என்பது மிக முக்கியமானதாக அமைகிறது.

---- மாலைக் கோயில்காடு ----

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மின்னாம்பட்டி - சின்ன குறவக்குடியில் அமைந்துள்ளது மாலைக்கோயில். இக்கோவில் மின்னாம்பட்டி ஊர் மக்களுக்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். மாலைக் கோயில் என்பது இந்திய தொல்குடி மரபில் காணப்படும் கோவில்காடு அமைப்பாகும்.
கோயில்காடு என்பது நாட்டார் தெய்வ வழிபாட்டோடு தொடர்புடைய தொன்மையான இயற்கை வழிப்பாட்டின் எச்சமாகும். ஏறக்குறைய 51 ஏக்கர் பரப்பளவை கொண்டது மாலைக் கோயில் காடு. உசிலை, களா, காரை, குருந்தம், திருகுக்கள்ளி, செங்கத்தாறி, மஞ்சநத்தி, சிறுபூனைக்காலி, தும்பை, நாயுருவி, குறிச்சி, குன்றிமணி, சீதேவி செங்கழுநீர், வெண் சாரணை, குப்பை கீரை, தாத்தா பூ உள்ளிட்ட தாவரங்கள் மாலைக் கோயில் காட்டில் காணப்படுகின்றன. மாலைக்கோயில் காட்டில் 37 வகை பறவை இனங்களும், 16 வகை பட்டாம்பூச்சி இனங்களும், 15 வகை தாவர இனங்களும், 5 வகை தும்பி இனங்களும், 3 வகை எறும்பு இனங்களும் இக்கோயில் காட்டில் ஆவணம் செய்யப்பட்டது. விரிவான தொடர் ஆய்வுகள் இப்பகுதியில் நடைபெற்றால் மாலைக்கோயில்காட்டின் பல்லுயிரிய வளத்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். மதுரை இடையபட்டி வெள்ளிமலை கோயில் காட்டிற்கு அடுத்து மதுரை மாவட்டத்தின் சமவெளியில் உள்ள பெரிய கோயில்காடு மாலைக் கோயில்காடு ஆகும்.

மாலையம்மன் வழிபாடு:
காட்டின் மையத்தில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒன்பது அடுக்குகளை கொண்ட இரண்டு அடுக்குநிலை நடுகற்கள் உள்ளது. ஒரு அடுக்குநிலை நடுகல் முழுமையாகவும் மற்றொரு அடுக்குநிலை நடுகல்லானது மூன்றாக உடைந்து சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது. காளை, புலி, வில்லேந்திய வீரர்கள், இடுப்பில் குழந்தையோடு உள்ள பெண்கள் உள்ளிட்ட உருவங்கள் காட்டப்பட்டுள்ளது. இந்த நடுகற்களை 'மாலையம்மன்' என்று ஊர் மக்கள் வழிபடுகின்றனர். மாலையம்மன் எதிரில் மரத்தாலான சிறு பீடத்தின் மீது வைக்கப்பட்ட கழுமரமும் வழிபாட்டில் உள்ளது. அதனை 'மாலைப் பெருமாள்' என்று ஊர் மக்கள் வழிபடுகின்றனர். சின்னகுறவக்குடி, மின்னாம்பட்டி, வெள்ளைக்காரன்பட்டி, உடநாட்டுபட்டி உள்ளிட்ட ஊர்களில் உள்ள அனைத்து மக்களும் மாலையம்மனை வழிபடுகின்றனர். இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் கற்கள் அதிகளவில் மாலைக் கோயில் காட்டில் காணப்படுகின்றன.

மாலைக் கோயில் திருவிழா:
சித்திரை மாதம் மின்னாம்பட்டி மலைப்பெருமாள் (வேப்பிலை பெருமாள்) கோயில் திருவிழா முடிந்ததும் வைகாசி மாதம் மாலையம்மன் திருவிழா நடைபெறுவது வழக்கம். மாலைக் கோயிலுக்கு பாத்தியப்பட்ட ஊர்களில் உள்ள ஏழு மந்தைகார்களுக்கு நேரில் போய் பழம், வெற்றிலை, பாக்கு வைத்து மின்னாம்பட்டி ஊர் பெரியவர்கள் அழைப்பு விடுக்கிறார்கள். திருவிழா அன்று இரவு நடைபெறும் வழிபாட்டில் நாயக்கர் சமூக (ராஜகம்பளத்தார்) மக்கள் மட்டுமே பங்கு பெறுகின்றனர். திருவிழா வழிபாடு நடைபெறும் இரவு ஆண்கள் மேலாடையும், பெண்கள் மேல்சட்டையும் அணிவதில்லை. திருவிழாவுக்கு வரும் மந்தைக்காரர்கள் முன்பு மின்னாம்பட்டி பெண்கள் விழுந்து வணங்கி மரியாதை செய்கிறார்கள்.

படையல்:
பச்சை மூங்கிலில் பின்னிய கூடையில், இடிச்ச சிறுதானிய கம்பில் செய்த கொழுக்கட்டைகளை அதில் வைத்து படையல் செய்கிறார்கள். தரையில் சாணி மொழுகி மஞ்சப்பொடி போட்டு அதில் படையலை குவித்து, அதன் பின் மல்லிகைப்பூ சாற்றி அபிசேகம் செய்கிறார்கள். மஞ்சப்பொடியும் பசுநெய்யும் கலந்து மாலையம்மனுக்கு தேய்க்கப்படுகிறது. அதே நெய்யில் திரிப் போட்டு விளக்கேற்றுகிறார்கள்.

மாலையம்மனை வழிபட்ட நீரைக் மந்திரித்து கலயத்தில் நிறைத்து, ஏழு மந்தைகாரர்களுக்கும் கொடுக்கிறார்கள். அதற்கு 'கன்னி கொடுத்தல்' என்று பெயர். அனைத்து மந்தைகாரர்களும் மாலையம்மனை சுற்றி நின்று வழிபட்டு, அருள் இறக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. வழிபாடு தெலுங்கு மொழியில் நடக்கிறது. அதன் பின் மாடுகளை பிடித்து கொண்டு போய் விடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதற்கு 'பொலியோட்டம்' என்று பெயர். திருவிழா மற்றும் வழிபாட்டின் மையமாக மாலையம்மன் மட்டுமே விளங்குகிறார். மாலைப் பெருமாளுக்கு தனியான வழிபாடுகள் சடங்குகள் நிகழ்த்தப்படுவதில்லை.

மாடு ஓட்டுதல்:
கரூர், திண்டுக்கல், திருச்சி பகுதிகளில் பொதுவாக காணக்கூடிய சலகூர் மாடுகளை (தம்பிரான் மாடு) ஓட்டிவருவது திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். இவ்வகை மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டுவதில்லை. மாட்டுக் கொம்பில் கயிறு கட்டியிருக்கும். அதை பிடித்து தான் மாட்டை கட்டுப்படுத்த வேண்டும். உறுமி அடித்து இம்மாடுகளை ஓட்டி வருவார்கள். மந்தைக்காரர்கள் பிரம்பு கம்பை கொண்டு மாடுகளை ஓட்டிவருகிறார்கள். வெவ்வேறு மந்தைகளில் இருந்து ஓட்டி வரப்படும் மாடுகளுக்கும் மந்தைகாரர்களுக்கும் மின்னாம்பட்டி ஊர்மக்கள் உணவும் அடைக்கலமும் கொடுக்கிறார்கள். ஒரு மந்தைக்கு 25 - 30 மாடுகள் வரை ஓட்டி வரப்படுகிறது. திருவிழா அன்று வெவ்வெறு மந்தைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் ஓட்டி வரப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட தொலைவில் மாடுகளை நிறுத்தி மாலைக் கோயில் நோக்கி ஓட்டி வருவார்கள். மாலைக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள எலுமிச்சை பழத்தை முதலில் எடுக்கும் மாடு, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. பந்தயத்தில் வெற்றிப் பெற்ற மாட்டுக்கு - மல்லு வெட்டி, இரண்டு மூங்கில் குலை, தோரணம், மஞ்சப்பொடி, ஒரு எலுமிச்சை பழம் பரிசாக கொடுக்கப்படுகிறது. மாடு ஓட்டிவரும் பந்தயத்தில் வெற்றிபெறுவது பெருமையாக கருதப்படுகிறது. சுற்றுப்புறத்தில் உள்ள ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாடு ஓட்டிவரும் நிகழ்வை காண வருகின்றனர். மாலைக் கோயில் திருவிழா வைகாசி, ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக திருவிழா நடைபெறவில்லை.

"நாட்டு மாடு இன்றும் உயிருடன் இருக்கும் பகுதி உடுமலை, சிவகிரி, சங்கரன்கோயில், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் - பகுதியில் மட்டுமே.

இதில் மாடு குறித்த நம்பிக்கையுடன் களைகளை அதிகம் வைத்துள்ளதுடன் "ஆவுலப்பன் " என மாடு என பெயர் வைக்கும் குலங்களில் முதலிடம் பெறுவது கம்பளத்து நாயக்கர், கோனார், ஒக்லிய - காப்பிளிய கவுண்டர் குலங்கள் மட்டுமே.

அரசின் சட்டம் வனத்துறையின் அறிவற்ற கெடுபிடிகளால் மாடுகள் மெய்ச்சல் நிலத்திற்கு பெரும் சிரமத்திற்கு இக்குழுக்கள் ஆளாகின்றனர்" என்கிறார் எழுத்தாளர் முத்துநாகு அவர்கள்.

மாலைக் கோயில்காட்டில் ஊர் மக்கள் செருப்பணிந்து செல்வதில்லை. காட்டில் உள்ள மரங்கள், விலங்குகள் வேட்டையாட அனுமதியில்லை. இவ்வாறான கட்டுப்பாடுகள் மூலம் காடும் காட்டுயிர்களும் நெடுங்காலமாக பாதுகாக்கப்படுகிறது. மதுரை நகருக்கு அருகில் சமவெளியில் எஞ்சியிருக்கும் இயற்கையான காடு மதுரை மாவட்டத்தின் முக்கியமான பசுமை பரப்பாக கருதி பாதுகாக்கப்பட வேண்டும்.

மாலைக் கோயில்காடும், சின்னகுறவக்குடி கண்மாயும் பல்லுயிரிய மரபு தலமாக (BHS) அறிவிக்க தகுதி வாய்ந்த பல்லுயிரிய மற்றும் பண்பாட்டு கூறுகளை கொண்ட பகுதியாகும். மதுரை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அரசும் அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

--- நாகமலை நீரோடைகளும் ஈரநிலங்களும்---

அய்யனார்குளம் கண்மாய் & வின்னக்குடி கண்மாய்:
நாகமலைத்தொடர் மதுரை துவரிமான் துவங்கி திண்டுக்கல் விருவீடு வரை ஒரு பாம்பை போல நீண்டுக் கிடக்கிறது. நாகமலைத் தொடர் சுமார் 35 கி.மீ நீளம் கொண்டது. நாகமலையின் தெற்கு பகுதியில் உள்ள தெற்குமலை சுமார் 12 கி.மீ கொண்டதாக உள்ளது. வடக்குமலை, தெற்குமலை, சித்தர்மலை, பரமசிவன் கரடு, மாலைக்கரடு, வெள்ளக்கரடு, மந்திக்கரடு, கரட்டு மலை, மொண்டிக்கரடு, பள்ளன்கரடு உள்ளிட்ட மலைகள் நாகமலையின் அங்கமாகும். பல்வேறு ஊற்றுகள், ஓடைகள் நாகமலையில் தோன்றுகின்றன. நாகமலையின் வடக்குமலையும், தெற்குமலையும், சித்தர்மலையும், பரமசிவன் கரடும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. நாகமலையை ஒட்டியுள்ள இதர மலைகளும் கரடுகளும் ஆய்வு செய்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சேர்க்கப்பட வேண்டும்.

நாகமலை தொடரின் தெற்குமலைச் சரிவில் கரையம்பட்டி ஊரின் அருகே தோன்றும் மலைப்பெருமாள் கோயில் ஓடையும், பேயம்பட்டி ஊரின் அருகே தோன்றும் கன்னிமார்பள்ளம் ஓடையும், மின்னாம்பட்டி மலைப்பெருமாள் கோயில் அருகே ஒன்றிணைந்து மலைப்பெருமாள் கோயில் ஓடை என்ற பெயரில் மின்னாம்பட்டி கடந்து அய்யனார்குளம் கண்மாயில் கலக்கிறது.

அய்யானர்குளம் ஊரின் அருகே தெற்குமலை சரிவில் தோன்றுகிறது தம்மத்தாள் ஓடை. மலைப்பெருமாள் கோயில் ஓடையும் தம்மத்தாள் ஓடையும் இணைந்து அய்யனார்குளம் கண்மாயில் கலக்கிறது. அய்யனார்குளம் மறுகால்நீர் வின்னக்குடி கண்மாய்க்கு பாய்கிறது. நாகமலையின் இயற்கையான நீரோடைகளின் வரத்து உள்ளதால் அய்யனார்குளம் கண்மாயும் வின்னக்குடி கண்மாயும் ஆண்டு முழுதும் நீர் வற்றாத கண்மாய்களாக விளங்குகினறன. அய்யனார்குளம் கண்மாய் 138.5 ஏக்கர், வின்னக்குடி 44.5 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

குறவக்குடி கண்மாய்:
நாகமலையின் தெற்குமலையில் திம்மநத்தம் அருகே தோன்றும் சின்ன ஓடை, பெரிய கருப்பு ஓடை, திம்மநத்தம் ஓடை, மொண்டிக்கரட்டு ஓடை உள்ளிட்ட மலையோடைகள் திம்மநத்தம் கண்மாயில் கலக்கிறது. திம்மந்ததம் கண்மாய் மறுகால்நீர் குறவக்குடி கண்மாய்க்கும் சின்னக்குறவக்குடி கண்மாய்க்கும் பாய்கிறது. மலையோடைகளின் வரத்துநீர் கிடைக்கப்பெறுவதால் திம்மநத்தம் கண்மாயிலும், குறவக்குடி கண்மாயிலும் ஆண்டுமுழுதும் நீர் வற்றுவதில்லை. குறவக்குடி கண்மாயும் சடச்சிப்பட்டி கண்மாயும் ஒரே நிலப்பரப்பை கொண்ட இருவேறு கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட நீர்நிலைகளாகும். சின்னக்குறவக்குடி கண்மாய் சுமார் 40 ஏக்கர், குறவக்குடி கண்மாய் சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட நீர்நிலைகளாகும். வாலந்தூர் கண்மாயில் 25 வகை பறவையினங்கள் ஆவணம் செய்யப்பட்டது.

இயற்கையான நீரோடைகள் மட்டுமல்லாமல் வைகை - பெரியார் முதன்மை கால்வாய்களின் நீர்வரத்தும் இக்கண்மாய்களுக்கு கிடைக்கிறது. எனவே ஆண்டு முழுதும் நீர்வற்றாத கண்மாய்களாக விளங்கும் இந்த நீர்நிலைகள் பறவைகள், நன்னீர் மீன்கள், நீர்வாழ் உயிரிகள், நீர்வாழ் தாவரங்கள், நாட்டு கருவேல மரங்கள் உள்ளிட்ட பல்லுயிரிகளின் புகழிடமாகவும் விளங்குகின்றன. எண்ணிக்கையின் அடிப்படையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இக்கண்மாய்களில் எப்போதும் காணப்படுகின்றன. இந்நடையில் 25க்கும் மேற்பட்ட பறவையினங்கள் இக்கண்மாய்களில் ஆவணம் செய்யப்பட்டது. திம்மநத்தம் கண்மாயிக்கு செல்ல இயலவில்லை. அதன் பல்லுயிரிய சூழல் ஆவணம் செய்யப்பட்ட வேண்டும்.

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் (அரசாணை 59. தேதி 25.03.2023) கீழ் மேல்குறிப்பிடப்பட்டுள்ள நீர்நிலைகளை இணைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே வண்டியூர் கண்மாய், தி. குன்னத்தூர் கண்மாய், தேனூர் பெரியகுளம் கண்மாய், உரப்பனூர் பெரிய கண்மாய் உள்ளிட்ட நான்கு நீர்நிலைகள் தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம் (Tamil Nadu Wetlands Mission) கீழ் சேர்க்கப்பட்டுள்ள நீர்நிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண்மை:
வற்றாத நீர்வளம் மிக்க கண்மாய்களையும் வைகை - பெரியார் முதன்மை கால்வாய் பாசனநீரும் கிடைப்பதால் இப்பகுதியில் நெல் விளையும் வயல்கள் பரவலாக காண முடிகிறது. சிலப் பகுதிகளில் வேர்க்கடலை, கம்பு, சோளம், கானப்பயிறு, பூக்கள், காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.

---- ஓந்திமலை ----
''சங்க நூல்களில் ஒந்தியை ஓதி என்றழைத்தனர். கன்னடத்தில் 'வோதி' என்றழைப்பது இதுசார்பாகக்
கவனிக்கத்தக்கதாகும். தற்காலத்தில் ஓணான் என்றழைக்கின்றனர். நற்றிணையில் இரு பாடல்களில் 'வேனில் ஒதி' என்றே அழைக்கப்படுகின்றது'' என்கிறார் தமிழறிஞர் பி.எல். சாமி அவர்கள். (பச்சை + ஓந்தி = பச்சோந்தி)

உயிரினங்களின் பெயரை மலைகளுக்கு சூட்டுவது தமிழர் வழக்கம். யானைமலை, நாகமலை, பசுமலை, புலிமலை, கரடிக்கல், கழுகுமலை உள்ளிட்ட மலைகள் மதுரையின் அடையாளங்களாகும். அவ்வகையில் ஓந்திமலையும் மதுரையின் பெயர் சொல்லும் அடையாளங்களில் ஒன்றாகும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் எதிரில் உள்ள பில்லர் சாலையில் சென்றால் ஓந்தி மலைக்குன்றை காணலாம். ஓந்தி மலையின் கிழக்கில் கீழக்குயில்குடி சமணர்மலையும், வடக்கில் நாகமலையும், மேற்கில் பெருமாள்மலையும், தெற்கில் பறம்புமலையும் அமைந்துள்ளது. ஓந்திமலை தென்கிழக்கு முனையில் தொட்டிச்சியம்மன் வழிபாடு நடைபெறுகிறது. குவாரிகளால் மலையின் கிழக்கு பகுதி வெட்டி அழிக்கப்பட்டுள்ளது. இந்நடையில் 16கும் மேற்பட்ட பறவையினங்களை ஓந்திமலை பகுதியில் ஆவணம் செய்தோம்.

நாகமலை முதல் திருப்பரங்குன்றம் வரை:

நாகமலை, வடக்கு மலை, தெற்குமலை, சித்தர்மலை, பரமசிவன் கரடு, மொண்டிக்கரடு, பள்ளன்கரடு, மந்திக்கரடு, மாலைக் கரடு, வெள்ளக்கரடு, சமணர் மலை, பெருமாள்மலை, பஞ்சபாண்டவர்மலை, சாமி மலை, மொட்டப்பாறை, ஓந்திமலை, பறம்பு மலை, திடியன் மலை, புத்தூர் மலை, மூன்று மலை, திருப்பரங்குன்றம், திருக்கூடல் மலை, கபாலி மலை, பசுமலை, மொட்டைமலை, உண்டாங்கல், கரடிக்கல், குன்னனம்பட்டி மலை, குடுவண்டான் பாறை என மலைகளும், குன்றுகளும், பாறைகளும், கரடுகளும் சூழ்ந்த பகுதியாக நாகமலை - திருப்பரங்குன்றம் பகுதி விளங்குகிறது. இப்பகுதியின் பல்லுயிரிய சூழல் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும். கிண்ணிமங்கலம் துவங்கி திருநகர் வரை 7 கி.மீ நீண்டு கிடக்கும் பறம்பு மலைக்கரடு விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.

--- நாகமலை ஊர்வனங்களின் சரணாலயம் ---
சமூக மூடநம்பிக்கை அல்லது பழவழக்கத்தின் காரணமாக அழித்தொழிக்கப்படும் இனங்களாக பாம்புகள், ஓணான்கள், பல்லிகள் இருக்கின்றன. அவைகளின் வாழிடங்களும் நகர வளர்ச்சியின் காரணமாக அழிக்கப்படுகிறது. இப்போக்கு ஊர்வன வகைகளில் உள்ள பாம்புகள், ஓணான்கள், அரணைகள், பல்லிகள் உள்ளிட்ட இனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் காரணமாக அமைகின்றன. நாகமலை, ஓந்திமலை என்பது ஊர்வன வகைப்பட்ட உயிரினங்கள் பெருக்கமுள்ள பகுதி இவை என்பதை நமக்கு உணர்த்துகின்றன. நாகமலை அடிவார பகுதியில் 40க்கும் மேற்பட்ட ஊர்வன இனங்களை நாம் ஆவணம் செய்துள்ளோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாகமலை வனப்பகுதியை ஊர்வனங்களின் சரணாலயமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம். இதனால் ஊர்வனங்கள் உயிர்சங்கலியில் வகிக்கும் பங்கு, சுற்றுச்சூழலில் அதன் முக்கியத்துவம், பாதுகாக்க வேண்டிய தேவை, மீட்பு நடவடிக்கை பற்றிய விழிப்புணர்வு பரவலாக அனைத்து மக்களிடம் சென்று சேர்வதற்கு நாகமலை வனப்பகுதி ஊர்வனங்களின் சரணாலயமாக அறிவித்து பாதுகாப்பது பெரிதும் உதவும் என்று நம்புகிறோம்.

இந்நடையில் ஆவணம் செய்யப்பட்ட பறவைகள் விவரம் கீழே இணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.

1. மாலைக் கோயில்காடு பறவைகள் பட்டியல்: https://ebird.org/checklist/S174005775
2. வின்னக்குடி கண்மாய் பறவைகள் பட்டியல்: https://ebird.org/checklist/S174005708
3. வாலாந்தூர் கண்மாய் பறவைகள் பட்டியல்: https://ebird.org/checklist/S174020310
4. ஓந்திமலை பறவைகள் பட்டியல்: https://ebird.org/checklist/S174005688
5. குறவக்குடி கண்மாய் பறவைகள் பட்டியல்: https://ebird.org/checklist/S170688455

---------------------------------------------------

வருவாய்த்துறை பதிவேடு: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், போடுவார்பட்டி கிராமம் வரைப்படத்தில் சர்வே எண் 96இல் மாலைக் கோயில்காடு காட்டப்பட்டுள்ளது.

இந்நடையின் செலவு:
உணவு 60 பேர் : ரூ. 2100

நன்கொடை:
PSU ASN பள்ளி உரிமையாளர் திரு இசையமுதன் - ரூ. 2100
---- ஆய்வுக்குழு & கட்டுரை தொகுப்பு ----

- திரு. ந. இரவீந்திரன் (பறவையிலாளர்)
- பேரா. ப. தேவி அறிவு செல்வம் (கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)
- மரு. ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)
- திரு. ச. ஜோதிமணி (காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்)
- திரு. ச. ஜோதிகண்ணன் (காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்)
- பேரா. வீ. செந்தில் (பறவை ஆர்வலர்)
- திரு. பு. இரா. விஸ்வநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)
- திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)
- திரு. க. சக்திவேல் (பறவையிலாளர்)
- திரு. மு. கமலேஷ் (பறவையிலாளர்)
- திரு. தமிழ்தாசன் (சூழலியல் ஆய்வாளர்)

ஒளிப்படங்கள்:
திரு. இரவீந்திரன், திரு. ஜோதிமணி, திரு. ஜோதிகண்ணன், திரு. விஸ்வா & தமிழ்தாசன்

வழித்துணையாக இருந்தவர்கள்
திரு. முருகபாண்டி, சின்னக்குறவக்குடி
திரு. சிலையரசன், சின்னக்குறவக்குடி
திரு. சிங்கப்பூர் சின்னன், சின்னக்குறவக்குடி
திரு. பத்ரி பாண்டி, சின்னக்குறவக்குடி
திரு. சேகர், சின்னக்குறவக்குடி

நன்றி:
திரு. ஜீவராஜ், மாலைக் கோயில் பூசாரி, மின்னாம்பட்டி
திரு. பிரம்மதேவன், சின்ன குறவக்குடி
சங்கரநாரயணன் மெட்ரிக்குலேசன் பள்ளி &
புதுயுகம் தொலைகாட்சி ஊழியர்கள்.

இந்நடையின் கால நேரம்:
காலை 6.30 மணி முதல் 7 மணி வரை வாலாந்தூர் கண்மாயில் துவங்கிய நடை, பின் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மாலைக் கோயில் காட்டிலும், பின் தனித்தனி குழுவாக பிரிந்து 10 மணி முதல் 10.30 மணி வரை வின்னக்குடி கண்மாய், அய்யனார்குளம் கண்மாய், குறவக்குடி கண்மாய் ஆய்வு செய்தோம். அதன் பின் 11.30 மணி முதல் 12.30 மணி வரை ஓந்திமலை பகுதியில் அனைவரும் கூடி பண்பாட்டுச் சூழல் நடையை நிறைவு செய்தோம்.

உணவு ஏற்பாடு:
ஹோட்டல் சஸ்வின், நாட்டாப்பட்டி - 9344305720. மாலைக்கோயில் அருகில் சடச்சிபட்டியில் உணவகம் இருக்கிறது. ஆனால் ஞாயிறுக்கிழமை இயங்குவதில்லை.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
8903241263
https://www.facebook.com/manacufo



Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை