பனங்காடி - பண்பாட்டுச் சூழல் நடை
பனங்காடி - பண்பாட்டுச் சூழல் நடை
பண்பாட்டுச்
சூழல் நடையின் 22 வது பயணமாக மேலூர் வட்டத்தில் உள்ள பனங்காடி ஊருக்கு 18.08.2024, ஞாயிறு சென்று
இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 80 பேர் வரை பங்கெடுத்தனர். காலை 6.30 மணிக்கு மேலூர் வெள்ளலூர் பகுதியில் உள்ள வெள்ளமலை காட்டிற்குள் ஒரு உலா போய்விட்டு, காலை உணவை முடித்துவிட்டு காலை 10.30 மணிக்கு பனங்காடி ஊருக்கு சென்றோம்.
அரசிடம் கோரிக்கை:
பனங்காடியில் 800 ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டிய மன்னன் கல்வெட்டுகளுடன் கூடிய சிவன் கோயில் ஒன்று பராமரிப்பின்றி இருக்கிறது. இக்கோயிலை இந்து அறநிலையத்துறை அல்லது தொல்லியல்துறையின் கீழ் பராமரித்து பாதுகாக்க வேண்டும்.
பனங்காடி:
மதுரை
மாவட்டம் மேலூர் வட்டத்தில் கொட்டக்குடி அருகே அமைந்துள்ளது பனங்காடி ஊர். திருவாதவூர் ஓவாமலையில் அமைந்துள்ள சமணர் குகைத்தளத்தில் காணப்படும் கி.மு இரண்டாம்
நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டு "பாங்காட அர்இதன் கொடுபிதோன்" ஈன்று குறிப்பிடுகிறது. பாங்காடு என்ற ஊரைச் சேர்ந்த அரிதன் என்பவரால் இக்குகைத்தளம் அமைத்து கொடுக்கப்பட்டது என்பது கல்வெட்டு தரும் பொருள். ஈராயிரம் ஆண்டுக்கு முந்திய தமிழிக் கல்வெட்டு குறிப்பிடும் பாங்காடு என்பது பனங்காடியாக இருக்கலாம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். பனங்குளம் என்றும் பனங்காடு என்றும் பனங்காடியில் உள்ள 800 ஆண்டுகள் பழமையான பெருமாள் மற்றும் சிவன் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு பார்த்தல் பனங்காடி என்கிற இவ்வூர் ஈராயிரமாண்டுகளாக இயங்கி வருகிறது என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. பனங்காடியில் கி.பி 11 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த சோழ மன்னர் கட்டிய பெருமாள் கோயிலும், கி.பி 13 ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கட்டிய சிவன் கோயிலும் நிலத்தானம் கொடுத்ததை காட்டும் ஆழிக்கல்லும், பழமையான கன்னிமார் கோயிலும், கண்மாயும், அய்யனார் கோயிலும், 300 ஆண்டுகள் பழமையான காதர் அவுலியா தர்காவும் உள்ளது.
வீற்றிருந்த
பெருமாள் கோயில்:
வீற்றிருந்த பெருமாள் கோயில்- கிபி 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சோழர்கால கோயில். கல்ஹாரம், செங்கல் சுதையால் கட்டுப்பட்ட இருதள விமானம் கொண்ட இக்கோயிலின் மூலவரான பெருமாள் பிரயோக சக்கரத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.
மூலவரை
சுற்றி வரும் உட்சவர் புறச்சுவர் இவர்களுக்கிடையே சாந்தாரம் என்னும் சுற்று அறை கொண்ட கோயில் அமைப்பு இது. இவ்வமைப்பு தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஒரு சில கோயில்களில் மட்டுமே உள்ளது. அர்த்தமண்டபத்தில் விஷ்ணு, ஆஞ்சநேயர் சிற்பங்கள் தரையில் சிறு பீடத்தின் மீது வைக்கப்பட்டுள்ளன.
சிவன்
கோயில் :
அதிஷ்டான பகுதியில் தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டுகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்த சிதைந்த கோயிலின் தூண்கள், கட்டுமானங்கள், முருகன் சிற்பங்கள் போன்றவை கோயிலின் முன்புறமும் ஊரின் பல பகுதியில் சிதறி கிடக்கின்றன. மேலும் இவ்வூரில் சப்த கன்னியர் கோயில் மற்றும் சிதைந்த நிலையில் பழமையான அவுலியா போன்ற வரலாற்று சுவடுகளும் காணப்படுகின்றன.
பனங்காடி
கண்மாய்:
இவ்வூரில்
உள்ள கல்வெட்டுகளில் இது பெருங்குளம் என்றும் இதில் உள்ள மடை ஒன்று உய்யக்கொண்டான் மடை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருங்குளம் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டது போல பெரிய கண்மாயாக உள்ளது. ஏறக்குறைய 1000 ஆண்டுகள் கடந்தும் இன்றும் பயன்பாட்டில் உள்ளது. இக்கண்மாயில் கொக்கு, நீர்காகம், தாழை இல்லை கோழி, முக்குளிப்பான், பாம்புத்தாரா, நத்தைக்கொத்தி நாரை, குருகு உள்ளிட்ட பறவைகளின் வாழிடமாக விளங்குகின்றன.
பனங்காடி கண்மாய் கரையில் பழமையான கன்னிமார் கோயில் உள்ளது. ஏழுவீட்டுக்காரி அம்மன் கோயில் என்று மக்கள் அழைக்கின்றனர். அக்கோயில் பின்புறம் 1930 ஆம் ஆண்டு கல்வெட்டுடன் கூடிய விளக்குதூண் ஒன்று உள்ளது.
கம்மாள் கண்மாய்,
கொட்டக்குடி:
வெண்கலமடை அய்யனார் கோயிலும் கம்மாள கண்மாய் கல்வெட்டும் |
பனங்காடி
அருகேயுள்ள கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கம்மாள
கண்மாயில் கிபி 1297-ல் பிற்கால பாண்டியர்
குலசேகர பாண்டிய மன்னரின் 29 ஆவது ஆட்சி ஆண்டில் ஏரிக்கு மடை செய்வித்ததை கல்வெட்டாக வெட்டி உள்ளனர். அந்த மடையை இப்போது வெண்கலமடை என்று அழைக்கின்றனர். அருகே வெண்கலமடை அய்யனார் கோயில் உள்ளது.
கருப்பு கோயில்காடு:
கொட்டக்குடி வெண்கலமடை அய்யனார் கோயில் அருகில் கருப்பு கோயில்காடு உள்ளது. இக்கோயில் தெய்வம் அடர்ந்த புதர்காட்டு பகுதியில் அமைந்துள்ளது.
பனங்காடி
பறவைகள்:
மயில்
Indian Peafowl, புள்ளிப்புறா
Spotted Dove, ஆசியக்
குயில் Asian Koel, அக்கா குயில் Common Hawk-Cuckoo,
பனை உழவாரன் Asian Palm Swift, செந்தலை அன்றில் Red-naped Ibis, புள்ளி ஆந்தை
Spotted Owlet, பனங்காடை
Indian Roller, கருந்தலை
மாங்குயில்
Black-hooded oriole, கரிச்சான்
Black Drongo, வால்காக்கை
Rufous Treepie, காகம்
House Crow, தையல்சிட்டு
Common Tailorbird, செங்குத
கொண்டைக்குருவி
Red-vented Bulbul, வெண்தலை
சிலம்பன்
Yellow-billed Babbler, கருந்தலை
நாகணவாய் Brahminy
Starling, நாகணவாய்
Common Myna, புதர்சிட்டு
Indian Robin, வெளிர்
அலகுபூங்கொத்தி, ஊதா ப்பிட்ட தேன்சிட்டு Purple-rumped
Sunbird, ஊதா தேன்சிட்டு Purple Sunbird,
தேன்சிட்டு Loten's
Sunbird, தூக்கணாங்குருவி
Baya Weaver, புள்ளிச்
சில்லை
Scaly-breasted Munia, சிட்டுக்குருவி
House Sparrow, மாங்குயில்
Indian Golden Oriole, மூவண்ண
சில்லை Tricolored Munia உள்ளிட்ட 25 வகை
பறவைகள் பனங்காடி பகுதியில் மருத்துவர் ஹீமோக்ளோபின், வெங்கட்ராமன், சக்திவேல், கமலேஷ் உள்ளிட்டோர்களால் ஆவணம் செய்யப்பட்டது.
குறிப்பு:
பனங்காடி ஊர் மக்களின் மக்களின் வழக்கங்கள், வரலாறுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்த தமிழாசிரியர் (ஓய்வு) ஐயா ராமசாமி மற்றும் ஊர் மக்களுக்கும் அவர்களின் அன்புக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வரலாற்று நோக்கில் விரிவான ஆய்வுக்குரிய பகுதியாக பனங்காடி விளங்குகிறது.
---- ஆய்வுக்குழு
----
- பேரா.
ப. தேவி அறிவு செல்வம் (கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)
- மரு.
ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)
- திருமிகு.
சரஸ்வதி பத்ரி நாராயணன்
- திரு.
பு. இரா. விஸ்வநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)
- திரு.
நே. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)
- திரு. ர. கிஷோர் (சூழல் & காட்டுயிர் ஆய்வாளர்)
- திருமிகு.
யாஷிகா (ஆய்வு மாணவர்)
- திரு.
பரணி வெங்கட் (ஒளிப்பட கலைஞர்)
- திரு.
ம. அழகப்பன் (வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்)
- திருமிகு
லெட்சுமி ஜெயபிரகாஷ் (சூழல் ஆர்வலர்)
- திரு.
க. சக்திவேல் (பறவையிலாளர்)
- திரு. கமலேஷ் (பறவை ஆர்வலர்)
- திரு.
வெ. ராஜன் (வரலாற்று ஆர்வலர்)
- திரு.
தமிழ்தாசன் (சூழலியல் ஆய்வாளர்)
ஒளிப்படங்கள்:
பரணி வெங்கட், விஸ்வா, & தமிழ்தாசன்
இந்நடையின்
கால நேரம்:
18.08.2024 அன்று காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை பனங்காடி ஊரில் நிகழ்ந்தது.
வரவு
- செலவு:
இந்நிகழ்வுக்கு நன்கொடைகள் யாரிடமும் பெறப்படவில்லை. காலை உணவுக்கு ஏற்பட்ட செலவை நண்பர் கோ.பிரபாகரன், மக்கள் சேவை மன்றம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்.
மதுரை
இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
13.09.2024
Comments
Post a Comment