ஊர் பெயருக்கேற்ற மரக்கன்று நடுவிழா

மதுரை மாவட்டத்தில் மரக்கன்று நடவு செய்யும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், சூழல் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பசுமையாளர்கள் குழுமம் என்ற கூரையின் கீழ் இணைந்து பணியாற்றுகிறோம். அதன் ஒரு பகுதியாகவே ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 25.08.2024 அன்று மதுரையில் நடைபெற்றது.

பசுமையாளர்கள் குழுமத்தின் நோக்கம்:
1. பல்லுயிரிய சூழலுக்கு உகந்த இயல் தாவரங்களைக் கொண்டு பசுமை பரப்பை அதிகரித்தல்
2. அயல் தாவரங்களை பசுமை பணியில் தவிர்க்கும் விழிப்புணரவை ஏற்படுத்துதல்
3. தமிழக சூழலில் மரக்கன்று நடும் பணியை அனைத்து சமூக மக்கள் பங்கேற்கும் ஒரு பண்பாட்டு இயக்கமாக கொண்டு செல்லுதல்
4. காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர்ந்து மரக்கன்று நடவு செய்யும் பணியை முன்னெடுத்து செல்லுதல்
5. இருக்கும் பசுமை பரப்பை பாதுகாத்தல்
6. இழந்த பல்லுயிரிய பசுமை பரப்பை மீட்டுருவாக்கம் செய்தல்
7. மரக்கன்று நடுவோர் வழிகாட்டும் குழுவாக செயல்படுவது
8. இயல் தாவரம் குறித்த விழிப்புணர்வை பரப்புவது




நகரம் விரிவடையும் போது பாரம்பரியமான பசுமை பல்லுயிரிய பரப்பை நாம் இழக்கிறோம். இழந்த பசுமையை உருவாக்கும் நோக்கில் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் வாயிலாக பல்வேறு மரக்கன்றுகள் நம்மை சுற்றி நட்டு வளர்க்கபடுகிறது. எல்லா மரங்களும் நிழல் தரும், எல்லா மரங்களும் காற்று தரும் என்கிற பொதுச் சிந்தனையில் இருந்தே நகரத்தை பசுமையாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. அவ்வாறு மரக்கன்றுகள் நடும் போது நம் மண்ணிற்குரிய இயல் தாவரம் எது? நம் மண்ணிற்கு பொருத்தாத அயல் தாவரம் எது? என்கிற புரிதல் பெரும்பாலானோருக்கு இருப்பதில்லை. வேளாண் பண்ணையில் அல்லது தோட்டத்தில் உணவு, மூலிகை, பணப்பயிர் உள்ளிட்ட மனித சமூகத்தின் தேவைக்கேற்ப நடவு செய்யப்படும் அயல் தாவரங்கள் பற்றி நாம் இங்கு குறிப்பிடவில்லை. நாம் வாழும் நிலத்தின் பசுமை பரப்பை அதிகரிக்க பொதுநோக்கோடு மேற்கொள்ளப்படும் மரக்கன்று நடும் செயல்பாடுகள் குறித்தே பசுமையாளர்கள் குழுமம் விழிப்புணர்வு ஏற்படுத்த முனைகிறது.



நம்முடைய இயற்கையான பாரம்பரிய பல்லுயிரிய சூழலுக்கு அயல் தாவரங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மரக்கன்று நடுவோர் அறிந்து கொள்வது அவசியமாகும். ஆய்வுகள் ஏதுமின்றி உணவு, தீவனம், விறகு, அழகு உள்ளிட்ட காரணங்களுக்காக நம் மண்ணில் அறிமுகப்படுத்தப்பட்ட சீமை கருவேலம், கோனகார்ப்பஸ், சுபா புல், பார்த்தீனியம், உண்ணிச்செடி, ஆகாயத்தாமரை உள்ளிட்ட தாவரங்கள் நம்முடைய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கூட ஊடுருவி நம் பல்லுயிரிய சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக குஜராத் அரசு கோனகார்ப்பஸ் மரங்களை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தடை செய்துள்ளது. எனினும் கோனகர்ப்பஸ் மரங்கள் தமிழ்நாட்டில் பரவலாக நடப்பட்டு வருகிறது. மேலும் தூங்குமூஞ்சி மரம், குல்முகர், சிங்கப்பூர் சேரி, நாகலிங்கம், தைலம், சீமை கொன்றை, சீமை அத்தி, கியூபா பனை, சொர்க்கம், மயில் கொன்றை உள்ளிட்ட அயல் தாவரங்கள் பரவலாக தமிழ்நாட்டில் நடப்படுகிறது.

பசுமை பரப்பை அதிகரிக்க எந்த வகை மரக்கன்றுகளாக இருந்தால் என்ன? அதனால் என்ன கேடு வந்துவிடப் போகிறது? இயல் தாவரமா அயல் தாவரமா என்கிற வேறுபாடு அறிந்து மரக்கன்றுகள் தேர்வு செய்து நட வேண்டிய அவசியமென்ன என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள்.

ஒவ்வொரு நிலப்பரப்பிலும் அல்லது திணை மண்டலத்திலும் பல்வேறு தட்பவெட்ப பருவநிலைகளை கடந்து, இயற்கையின் நெருக்கடிகளின் ஊடே தாவரங்களும் - இதர பல்லுயிரிகளும் ஒன்றை ஒன்று சார்ந்தே பலகோடி ஆண்டுகளாக பரிணாமம் அடைந்து வந்து இருக்கின்றன. அதன் காரணமாகவே ஒவ்வொரு நிலப்பகுதிக்கும் அதன் பருவநிலைக்கும் ஏற்ற தனித்துவமான பல்லுயிரிய திணை மண்டலம் அமைந்து இருக்கிறது.



நம் மதுரைக்குரிய மரம் நீர்க்கடம்பு மரம் (Mitragyna parvifolia). மீனாட்சியம்மன் கோயில் தலமரமும் நீர்க்கடம்பு தான். கடம்பவனமாக இருந்த பகுதியை அழித்தே பாண்டிய மன்னனால் மதுரை நகரம் உருவாக்கப்பட்டதாக திருவிளையாடற்புராணம் கூறுகிறது. இன்றும் நம்முடைய பாரம்பரிய பல்லுயிரிய பசுமைப் பரப்பை அழித்தே நகரங்கள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. உதாரணமாக 'தளபதி' (Moduza procris) என்கிற ஒரு வகை பட்டாம்பூச்சி நீர்க்கடம்ப மரங்களில் தான் இனப்பெருக்கம் செய்கிறது. கடம்ப மரத்தின் அழிவு என்பது அதனோடு தொடர்புடைய பல்லுயிரியச் சூழலின் அழிவாகும். நகர விரிவாக்கத்திற்காக கடம்ப மரத்தை அகற்றிவிட்டு, அழகான பூக்கள், உன்ன பழங்கள், வேகமான வளர்ச்சி என்கிற மனிதனின் கண்ணோட்டத்தில் அயல் மரங்களை வைத்துவிடுகிறோம். மனிதனை பொறுத்தவரை அதுவும் பசுமை பரப்பு தான். ஆனால் பல்லுயிரிய நோக்கில் பார்த்தல் அது அழகிய பூக்கள் நிறைந்த கல்லறையாகதான் இருக்கிறது. நீர்கடம்பு மட்டுமல்ல நம் மண்ணில் உள்ள ஒவ்வொரு இயல் தாவரத்திற்கும் ஒரு பல்லுயிரிய சூழல் உண்டு. நாம் இழந்திருப்பது வெறும் பசுமை பரப்பு அல்ல, பாரம்பரிய பல்லுயிரியச் சூழல் என்பதை முதலில் நாம் உணர வேண்டும். அதனை மீட்டுருவாக்க நம் மண்ணிற்குரிய மரங்கள் எது என்கிற புரிதல் நம்மிடையே வளர வேண்டும்.

மரக்கன்று நடவு செய்யும் பலரும் 10 - 15 வகை மரக்கன்றுகளைத் தான் தொடர்ந்து நடவு செய்து வருகிறார்கள். அப்படி நடும் மரக்கன்றுகள் நம் மண்ணிற்குரிய இயல் தாவரமா? அயல் தாவரமா? என்பதை பற்றி அவர்கள் அறிந்திருப்பதில்லை. ஒவ்வொரு ஊருக்கும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் பாரம்பரியமான பல்லுயிரிய பசுமைச் சூழல் உண்டு. அதனை அவ்வூரின் பெயரில், கோயில் காட்டில், கோயில் தலமரத்தில், குளக்கரையில், பொட்டல் காட்டில், ஊர்புறத்தில் நாம் கண்டறிய முடியும்.

மரப்பெயர்கள் கொண்ட பல ஊர்களுக்கு நாங்கள் பயணம் மேற்கொண்டோம். அங்குள்ள மக்களிடம் உரையாடும் போது தங்கள் ஊர் பெயரில் இருப்பது ஒரு மரத்தின் பெயர் என்பது பலரும் அறிந்திருக்கவில்லை. 50 வயதை கடந்த பெரியவர்களுக்கு தெரிகிறது. மற்ற யாருக்கும் ஊர் பெயரில் உள்ள மரங்கள் குறித்து தெரியவில்லை. அப்பகுதியில் பசுமை பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கும் தெரியவில்லை. இன்னும் சில ஊர்களில் தங்கள் ஊர் பெயரில் உள்ள மரத்தின் பெயரை இதுவரை கேள்விபட்டதில்லை, பார்த்ததுமில்லை என்றே தெரிவித்தனர். உதாரணமாக குராயூர் என்ற ஊர் மதுரையில் உள்ளது. குரா என்கிற மரம் பற்றி அவ்வூரில் உள்ள பலருக்கு தெரியவில்லை. குரா மரம் குறித்து சங்க இலக்கியம் பாடுகிறது.



நாங்கள் பயணித்த பல ஊர்களில் அவ்வூரின் பெயருக்கு காரணமான மரங்களே இன்று இல்லை என்பது வேதனையாகும். ஆத்திகுளத்தில் ஆத்தி மரங்கள் இல்லை. இலுப்பங்குடியில் இலுப்பை மரங்கள் இல்லை. விடத்தகுளத்தில் விடத்தலை மரங்கள் இல்லை. இத்தனைக்கும் இவ்வூர்களில் எல்லாம் அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் வாயிலாக பசுமை பரப்பை அதிகரிக்க மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இருந்தும் அவ்வூர்களின் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் இதுநாள் வரை நடவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கும் மரங்களுக்கும் உள்ள பன்னெடுங்கால பாரம்பரிய உறவு அறுபடுவதை பார்க்கிறோம். இந்த பின்னணியில் இருந்தே பசுமையாளர்கள் குழுமம் மேற்சொன்ன நோக்கங்களை கொண்டு மரக்கன்று நடும் பணியை முன்னெடுத்து வருகிறோம்.

அதன் முதல் கட்டமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட மரப்பெயர்கள் கொண்ட ஊர்களை பட்டியலிட்டுள்ளோம். அதில் ஒரே நாளில் 30 ஊர்களில் ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகள் நடும் விழாவை 25.08.2024 அன்று நிகழ்த்தினோம். அத்திபட்டியில் அத்தி மரம், ஆத்திக்குளத்தில் ஆத்தி மரம், ஆலம்பட்டியில் ஆலம் மரம், இலவங்குளத்தில், ஈச்சனேரியில் ஈச்சமரம், காஞ்சிரம்பேட்டையில் காஞ்சிரம் மரம், கிளாக்குளத்தில் கிளா மரம், குராயூரில் குரா மரம், திருப்பாலையில் பாலை மரம், திருவாதவூரில் வாத மரம், தேத்தாங்குளத்தில் தேத்தா மரம், நெல்லியேந்தல்பட்டியில் நெல்லி மரம், பனையூரில் பனை விதை, புங்கங்குளத்தில் புங்க மரம், புளியங்குளத்தில் புளிய மரம், பூலாம்பட்டியில் கரும்பூலா மரம், மருதங்குளத்தில் மருத மரம், வன்னிவேலம்பட்டியில் வன்னி மரம், வாகைகுளத்தில் வாகை மரம், விளாச்சேரி - விளாங்குடியில் விளா மரம் என்று தன்னார்வலர்கள் பலர் இணைந்து நட்டு வைத்தோம். பள்ளி, கல்லூரி, கோயில், அலுவலகம் என வளாகங்களை தேர்வு செய்து மரங்களை பாதுகாப்பான இடத்தில் நட்டு மரங்களை வளர்க்கும் பொறுப்பை அவ்வளாக உறுப்பினர்களிடம் ஒப்படைத்தோம்.

ஒவ்வொரு மரக்கன்றுகளையும் தேடி அலைந்து வாங்கி வந்தோம். குறிச்சி, விடத்தலை, காயா உள்ளிட்ட சில நாட்டு வகை மரக்கன்றுகள் எங்கு தேடியும் நாற்று பண்ணைகளில் கிடைக்கவில்லை. நம் நாட்டு இயல் தாவரங்களை எல்லாம் பட்டியலெடுத்து, அதிலிருந்து விதைகளை சேகரித்து விற்பனை செய்யும் நாற்று பண்ணைகள் நம்மிடம் இல்லை. தமிழ்நாடு பசுமை இயக்கம் என்கிற செயல்பாடுகளின் வழியே தமிழ்நாடு அரசு நம் நாட்டு வகை இயல் தாவரங்களை பரவலாக்கும் முயற்சியை பாராட்டுகிறோம். அதே போல நாற்று பண்ணைகளில் அரிய வகை இயல் தாவரங்கள் உள்ளிட்ட நம் மண்ணிற்குரிய தாவரங்கள் அனைத்தும் மாவட்டந்தோறும் அரசு மற்றும் அரசு சாரா நாற்று பண்ணைகளில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.



ஊர் பெயருக்கேற்ற மரக்கன்று நடும் நிகழ்வில் மரக்கன்றுகளை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தினோம். அத்தி மரம் என்றால் சீமை அத்தியும் உள்ளது, நம் நாட்டு அத்தியும் உள்ளது. இதே போல இலவம், நறுவிழி, நெல்லி, பனை, புளி, வாகை உள்ளிட்ட பெயர்களை கொண்ட அயல் தாவரங்களும் நாற்று பண்ணைகளில் கிடைக்கின்றன. நம் நாட்டு வகை மரக்கன்றுகளை தாவரவியல் அறிஞர்களின் உதவியோடு நாற்று பண்ணைகளில் தேர்வு செய்தோம். ஒவ்வொரு இடத்திலும் ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகளில் மகரந்த சேர்க்கை நிகழும் வண்ணம் இரண்டுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தோம். ஊர் பெயருக்கேற்ற மரக்கன்றுகளோடு சேர்த்து, அவ்வூரின் மண்ணிற்கேற்ப இதர இயல் தாவர மரக்கன்றுகளை நட்டு வைத்தோம். பல வகை இயல் தாவரங்கள் கொண்டே நாம் இழந்த பல்லுயிரியக் காட்டை உருவாக்க முடியும். ஒரே வகை மரங்கள் தோப்பாகுமே தவிர காடாகது.

இந்நிகழ்வை மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் திருப்பாலையில் பாலை, வெப்பாலை மரங்களை நட்டு வைத்து துவங்கி வைத்தார். வரும்காலத்தில் ஊர் பெயரில் உள்ள மரக்கன்றுகளை நடுதல், சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட மரங்கள் நடுதல், இலக்கியங்கள் காட்டும் வைகை கரையோர மரங்கள் நடுதல், கோயில் தல மரங்களை அடையாளம் கண்டு நடுதல், வழிபாட்டில் உள்ள பழமையான மரங்களை பாதுகாத்தல், கோயில்காடுகளை அடையாளம் காணுதல் என்று மரக்கன்று நடும் இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல திட்டமிட்டுள்ளோம்.

-- பசுமையாளர்கள் குழுமம்
9543663443











Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை