தாழையூத்து கருப்பசாமி கோயில்காடு

 தாழையூத்து கருப்பசாமி கோயில்காடு

----------------------------------

மதுரை மாவட்ட வனத்துறை சார்பாக ஏற்பாடு செய்திருந்த நிலம்சார் பறவைகள் கணக்கெடுப்பில் நண்பர் விஸ்வா, திரு. நிலா பாண்டியன், நான் கடந்த 03.03.2024 அன்று பங்கெடுத்தோம். எங்களுக்கு மதுரை எழுமலை வனப்பகுதியில் உள்ள தாழையூத்து கருப்பு கோயில் பகுதியை கணக்கெடுக்க சொல்லி வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டார்கள். காலை 6.30 மணிக்கு மலையின் அடிவாரத்தில் இருந்து வனத்துறை சரக அலுவலர், வனவர், வனக்காவலர் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகளுடன் மலையேற துவங்கினோம். காலை 8 மணிக்கு தாழையூத்து கருப்பசாமி கோயிலை அடைந்தோம். கருப்பசாமி கோயில் அருகே காட்டு யானைகள் வந்து சென்ற தடங்களை காண முடிந்தது. காட்டுயானைகள் சாணம், முள்ளம்பன்றி, காட்டுப்பூனை எச்சம் இக்கணக்கெடுப்பின் போது ஆவணம் செய்தோம். பின் அங்கிருந்து மீண்டும் கீழே இறங்கி 9.30 மணிக்கு மலையடிவாரத்தை வந்தடைந்தோம்.





தாழையூத்து மலை:
தாழையூத்து மலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வனச்சரகதிற்கு உட்பட்ட ஏழுமலை வனப்பகுதியில் அமைந்துள்ளது. தாழையூத்து மலையின் தெற்கே சின்னகரடு மலையும், மேற்கே மொட்டூத்து மலையும் வடக்கே மீனாட்சி மலையும், கிழக்கில் வீரன் கரடு மலையும் அமைந்துள்ளது. தாழையூத்து மலை அடிவாரத்தில் இருந்து 2.5 கி.மீ மலைமேல் ஏறி நடத்தால் தாழையூத்து கருப்பசாமி கோயிலை அடைந்துவிடலாம். முன்பு மழைக்காலங்களில் கருப்பசாமி கோயில் அருகேயுள்ள வழுக்குப்பாறையில் அருவிபோல் வழிந்தோடும் நீரூற்றில் பக்தர்கள் குளித்து செல்வது வழக்கம். இக்கோயில் அமைந்திருக்கும் பகுதி கரடி, காட்டு யானைகள், சிறுத்தை நடமாட்டம் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் யாரும் இப்போது மேலே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மீறிச் செல்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உத்தப்புரம் தீண்டாமை சுவர் இடிப்பு நிகழ்வையொட்டி ஊரில் உள்ள ஆதிக்க வகுப்பினர் அரசின் சமத்துவ நடவடிக்கைகளுக்கு எதிரிப்பை தெரிவிக்கும் வண்ணம் ஊரை விட்டு காலி செய்து தாழையூத்து மலையில் வந்து தங்கி ஒருவாரம் குடியிருந்தனர். தாழையூத்து நீர்வற்றாத வளமான பகுதி. தாழையூத்து மலைக்கும் மீனாட்சி மலைக்கும் இடையே அடர்ந்த ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. இப்பகுதியில் ஊர் மக்கள் வேளாண்மை செய்து வந்ததாக தெரிவித்தனர்.

நீரோடை:
தாழையூத்துமலை ஓடை, சின்னக்கரடு மலை ஓடை, மொட்டூத்து மலையில் வரும் மணலூத்து ஓடையுடன் இணைந்து எழுமலை கண்மாயில் சென்று கலக்கிறது. எழுமலை கண்மாய் நிறைந்து ஆத்தங்கரை ஊர் அருகே ம.கல்லுப்பட்டியில் இருந்து வரும் அய்யனார் கோயில் ஓடையுடன் கலந்து கௌண்டா நதி என்ற பெயர் பெற்று சிவரக்கோட்டை, சென்னம்பட்டி கடந்து குண்டாறு என்ற பெயருடன் சாயல்குடி அருகே மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது.

தாழையூத்து மலையின் கிழக்கில் உள்ள வீரன் கரடு மலையில் இருந்து இருந்து வரும் மொட்டனூத்து ஓடை கிழக்கு ஓடை மேற்கு ஓடையாக பிரிந்து தச்சப்பட்டி , கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம் கடந்து மேல திருமாணிக்கம் அருகே கௌண்டா நதியில் கலக்கிறது.

தாழையூத்து கருப்பசாமி கோயில்:
தாழைமரத்தின் அருகே மூணு அடி உயரமுள்ள கருப்பசாமி நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார் வலது கையில் ஓங்கிய அருவாளும், இடது கையில் மாந்தடியும் தரையில் குத்திட்டும் காட்டப்பட்டுள்ளார். இடது பக்கவாட்டு கொண்டையுடன் தொங்கும் காதுகளில், கழுத்த அணிகள், முத்துச்சர கை அணிகளுடன் உருட்டும் விழிகள் முரட்டு மீசையுடன் அருள் பாலிக்கும் விதமாக உள்ள கருப்பசாமி ஆனவர் வழிபாட்டில் இருக்கிறார். வழிபாட்டு ஆடைகள் அணிந்து இருப்பதால் சிற்பத்தின் ஆடை விவரங்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. (தகவல்: பேரா. ப. தேவி அறிவு செல்வம் அவர்கள்)

கருப்பசாமியின் இடது பக்கத்தில் கன்னிமார் தெய்வங்கள் சிறு கற்களால் காட்டப்பட்துள்ளது. தாழையூத்து வடிந்தோடும் பாறை இடுக்குகளில் வீரசின்னம்மாள் தெய்வம் இருப்பதாகவும், சாமி ஆடுவார்கள் ஆடிக்கொண்டே அப்பாறையின் குகைக்குள் சென்று வருவார்கள் என்றும் அதற்கு பின்னே ஒரு கதையாடல் இருப்பதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். கிடா, சேவல் உள்ளிட்ட விலங்குகளை பலியிட்டு தங்கள் வேண்டுதலை கேட்டு மக்கள் வழிபடுகின்றனர்.

கோயில்காடு:
மதுரை மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதியில் தாழையூத்து கருப்பசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் தமிழ்நாட்டின் நாட்டார் தெய்வ வழிபாட்டு தொன்மங்களில் ஒன்றாக கருதப்படும் கோயில்காடு என்ற அமைப்பை சேர்ந்ததாகும். கிராம மக்களின் வழிபாட்டிலும் வாழ்விலும் இரண்டற கலந்திருக்கும் நாட்டார் தெய்வங்கள் உறைந்திருக்கும் எல்கைக்குள் உள்ள இயற்கையான காட்டை கோயில்காடு என்பர். 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனத்துறை மற்றும் C.P.R சுற்றுச்சூழல் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 1262 கோயில்காடுகள் கண்டறியப்பட்டள்ளது. மதுரை மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட கோயில்காடுகளை பறவையிலாளர் மரு. பத்ரி நாராயணன் அவர்கள் ஆவணம் செய்துள்ளார். எங்கள் குழுவின் ஆய்வில் மதுரை மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட கோயில்காடுகள் இருக்கும் என்று கணக்கிட்டுள்ளோம். இதில் ஏறக்குறைய 50% கோயில்காடுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது. மீதமுள்ள கோயில்காடுகளின் நிலையை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

இப்பயணத்தின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இக்கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட பறவைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கொம்பன் ஆந்தை - Eurasian Eagle Owl, பச்சை பஞ்சுருட்டான் - Green Bee-eater, ஊதா தேன்சிட்டு - Purple sunbird, நீளமூக்கு தேஞ்சிட்டு - Loten's sunbird, பனை உழவாரன் - Asian Palm Swift, செம்மீசை கொண்டைக்குருவி - Red-whiskered bulbul, வெண்புருவ கொண்டைக்குருவி - White browed bulbul, மாங்குயில் - Golden oriole, தேன் பருந்து - Oriental honey buzzard, ஓணான் கொத்தி கழுகு - short-toed snake eagle, செம்மார்புக் குக்குறுவான் - Coppersmith Barbet, மாம்பழச் சிட்டு - Common iora, நாகணவாய் - Common myna, வெண்மார்பு மீன்கொத்தி - White throated kingfisher, நீல முக பூங்குயில் - Blue faced malkoha, குயில் - Asian koel, சுடலைக் குயில் - Pied cuckoo, வெள்ளைக் கானாங்கோழி - Grey Junglefowl, பொன்முதுகு மரங்கொத்தி - Black rumped flameback, கழுத்துப்பட்டை கள்ளிப்புறா - Laughing dove, காட்டுக் கீச்சான் - Common woodshrike, புதர்சிட்டு - Pied bush chat, கரிச்சான் - Black drango, வெண்வயிற்று கரிச்சான் - White-bellied drongo, உண்ணிக் கொக்கு - Cattle Egret, வல்லூறு - Shikra, பச்சைக்கிளி - Rose-ringed Parakeet, சுடலைக் குயில் - Jacobin Cuckoo, அக்கா குயில் - Common hawk-cuckoo, செம்போத்து - Greater Coucal, பனங்காடை - Indian Roller, சிலம்பன் - Common Babbler, காட்டுக் கதிர்க்குருவி - Jungle Prinia, கதிர்க்குருவி - Plain Prinia, புள்ளிச் சில்லை - Spotted Munia, இந்திய வெண்தொண்டைச் சில்லை- White-throated Munia, சூரக்குருவி - Rosy Starling, வால் காக்கை - Indian Treepie, காட்டுக் காகம் - Jungle Crow, காகம் - House Crow

- தமிழ்தாசன்


Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை