சிறப்புக் குழந்தைகள் & பெற்றோர்களுக்கான பண்பாட்டுச் சூழல் நடை
சிறப்புக் குழந்தைகள் & பெற்றோர்களுக்கான பண்பாட்டுச் சூழல் நடை
=========================சிறப்புக் குழந்தைகள் & பெற்றோர்களுக்கான பண்பாட்டுச் சூழல் நடை இன்று (28.01.2024) சாத்தியாறு அணையில் நடைபெற்றது. சுமார் 10 சிறப்பு குழந்தைகளும் அவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.
காலை 7 மணிக்கு கோ.புதூர் அருகே உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான மாநகராட்சி பூங்காவில் அனைவரும் சந்தித்து கொண்டோம். ஏற்பாடு செய்திருந்த தனியார் பேருந்தில் ஏறி சாத்தியாறு அணைக்கு புறப்பட்டோம். காலை 8 மணி அளவில் அணையை அடைந்தோம். அணையின் மேற்கில் சிறுமலை சரிவும், தெற்கில் வகுத்தமலை சரிவும், வடக்கில் செம்பட்டி மலைச்சரிவும் என முப்புறமும் மலைகள் சூழ்ந்த அழகிய பசுமை பரப்பாக சாத்தையாறு அணை விளங்குகிறது. சாத்தியாறு அணையின் மிகைநீர் மதகு அருகேயுள்ள படிக்கட்டுகள் வழியாக அணையின் மேற்பரப்பு கரைகளுக்கு ஏறினோம். முப்புறமும் மலைகள் நடுவில் நீர்நிறைந்து கிடக்கும் சாத்தியாறு அணையின் நீர்ப்பரப்பு வந்திருந்த குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்தது. அங்குள்ள நீர்ப் பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் கண்டு மகிழ்ந்தனர். தொலைநோக்கி கொடுத்து பறவைகள் பார்ப்பதை அறிமுகம் செய்தோம். குழு புகைப்படம் எடுத்துவிட்டு கீழிறங்கினோம். மதுரை கூடிவாழ்வோர் அறக்கட்டளையின் (Madurai Group Living Foundation - MGLF) நிறுவனர் சந்திரசேகர் வந்திருந்த அனைவரிடமும் இந்நிகழ்வின் நோக்கம் குறித்து உரையாடினார். மதுரை பண்பாட்டு மையத்தை சேர்ந்த தமிழ்தாசன் "பொதுவாக நாம் நடத்துகிற பண்பாட்டுச் சூழல் நடையில் சிறப்பு குழந்தைகள் & பெற்றோர்கள் இணைந்து வரலாம் என்று சொல்வதற்கு தான் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. வாய்ப்பு அமைந்தால் சிறப்பு குழந்தைகளுக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகம் செய்யும், அவரின் பெற்றோருக்கு ஒரு இளைப்பாறுதலை தரும் இது மாதிரியான நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்று பேசினார். மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தை சேர்ந்த விஸ்வா சிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டுகளை ஒருங்கிணைத்தார். திரு. நிலா பாண்டியன் அவர்கள் சாத்தியார் அணை குறித்த விபரங்களை பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார்.
காலை உணவுக்கு பின், குழந்தைகளை இயற்கை உணர்தல் விளையாட்டினை MNCF விஸ்வா அவர்கள் இலைகளை தொட்டு உணர்தல், பூக்களை உணர்தல், சுற்றியுள்ள பறவைகள், பூச்சிகள், தாவரங்கள், கண்டுணர்தல், பறவைகளின் இன்னிசை குரல் ஒலியை கேட்டு ரசித்தல், மரத்தை ஆரத்தழுவி மரத்தோடு உரையாடல் போன்ற நிகழ்வுகள் மூலம் இயற்கையை அவதானிக்கும் முதல் படியினை சிறப்பு குழந்தைகள் செயல்வழி உணர்ந்தனர். இந்நிகழ்வில் தங்கள் குழந்தைகளை ஆர்வமுடன் கலந்துகொள்ள செய்த குழந்தைகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் நன்றி.
காலை 9.30 மணிக்கு அணையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்து சேர்ந்தோம். இந்நிகழ்வில் 45 வகையான பறவைகள் ஆவணம் செய்யப்பட்டது.
மதுரை இயற்கை பண்பாட்டு மையம் (MNCF)
28.01.2024
Comments
Post a Comment