வெள்ளிமலை கோவில்காடு & திருவாதவூர் - பண்பாட்டுச் சூழல் நடை
திருவாதவூர் - இடையபட்டி பண்பாட்டுச் சூழல் நடை
கடந்த 14.05.2023, ஞாயிறு அன்று பண்பாட்டுச் சூழல் நடையாக திருவாதவூர் மற்றும் இடையபட்டி ஊர்களுக்கு சென்று இருந்தோம். நிகழ்வுக்கு முன்பதிவு செய்த 50 பேர் இந்த நடையில் கலந்து கொண்டனர். அதே நேரம் ஒத்தக்கடை - திருவாதவூர் சாலையில் ரேக்ளா பந்தயம் நடை பெறுவதாக இருந்ததால், முதலில் இடையபட்டிக்கு வெள்ளிமலை கோவில்காட்டுக்கு சென்றுவிட்டு, பின் திருவாதவூர் கோவிலுக்கு சென்றோம்.
காலை 7 மணிக்கு வெள்ளிமலை கோவில்காட்டுக்குள் நடக்க துவங்கினோம். சமீபத்தில் பெய்த மழையில் காடு பசுமையாக இருந்தது. பின் வெள்ளிமலை காட்டினுள் உள்ள உடும்புபாறையில் வந்து அமர்ந்தோம். வந்திருந்த அனைவரும் தங்கள் சுயஅறிமுகம் செய்து முடித்த பின், கார்த்திகேயன் பார்கவிதை அவர்கள் எழுதிய நறுங்கடம்பு நூல் அறிமுக கூட்டம் நடந்தது. நறுங்கடம்பு நூல் குறித்து பேராசிரியர் தேவி அறிவுச்செல்வம் மற்றும் தமிழ்தாசன் அவர்கள் அறிமுக உரை வழங்கினார்கள். நூலாசிரியர் கார்த்திகேயன் நூல் குறித்த தனது அனுவங்களை பகிர்ந்து கொண்டார். அதன் பின் வெள்ளிமலை காட்டினுள் உள்ள கடம்ப மரங்கள் அடர்ந்த தண்ணித்தாவு தேக்கத்திற்கு சென்றோம். மதுரைக்கே உரித்தான கடம்ப மரங்கள் கொத்து கொத்தாக பூத்து இருந்தது. வெள்ளிமலைகோவில்காடு அதன் தாவரங்கள் மற்றும் பறவைகள் குறித்து மருத்துவரும் பறவையிலாளருமான பத்ரி நாராயணன் அவர்கள் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். வெள்ளிமலை காட்டில் உள்ள தாவரங்களை அடையாளப்படுத்தி, பயன், சங்க இலக்கிய குறிப்புகள் பற்றி கார்த்திகேயன் விளக்சி பேசினார். வெள்ளிமலை காட்டில் உள்ள தாவரங்களை பாரம்பரிய மூலிகையாக உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் விதம் பற்றி தெற்காமூரை சேர்ந்த கார்த்தியும் அரசப்பன்னும் விவரித்தனர். சாம்பல் நிற தேவாங்கு, தென்னிந்திய முள்ளெலி ஆவணம் செய்த அனுபவம் பற்றி விஸ்வா மற்றும் வீரேஷ் பகிர்ந்து கொண்டனர். மேலும் 13ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியரான மாறவர்மன் குலசேகர பாண்டியனின் கல்வெட்டு ஒன்று இடையபட்டி - தெற்காமூர் பேருந்து நிறுத்தத்தில் கவனிப்பாரற்று கிடப்பதை ஆவணம் செய்தோம்.
வெள்ளிமலை கோவில் முன்பு காலை உணவை முடித்துவிட்டு, அங்கிருந்து திருவாதவூர் திருமறைநாதர் கோவிலுக்கு சென்றோம். மாணிக்கவாசகர், திருவாதவூர் கோயில், இசுலாமிய தொடர்பு உள்ளிட்ட கோவில் தொடர்பான கல்வெட்டு & வரலாற்று செய்திகளை பேராசிரியர் மற்றும் சிற்பசாஸ்திர பயிற்றுனர் தேவி அறிவுச் செல்வம் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார். திருவாதவூர் கோவிலையும் அதன் கண்மாயில் உள்ள புருஷமிருக சிலையும் கண்டுவிட்டு நிகழ்வை நிறைவு செய்தோம். வெள்ளிமலை காட்டில் ஆவணம் செய்த பல்லுயிர் பற்றிய விபரங்களை விரைவில் வெளியிடுவோம். அழிவின் விளிம்பில் உள்ள இடையபட்டி வெள்ளிமலை கோவில்காட்டை பாரம்பரிய பல்லுயிர் தலமாக அறிவிக்க கோரி தமிழ்நாடு அரசை மதுரை பண்பாட்டுச் சூழல் பேரவை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
மதநல்லிணக்கம் போற்றும் திருவாதவூர்:
திருவாதவூர் - பூவந்தி - ஒத்தக்கடை சாலை சந்திப்பில் திருவாதவூர் தொழுகை பள்ளிவாசல் உள்ளது. அது கடந்த நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆனால் அதைவிட பழமையான கல்லுப்பள்ளி ஒன்று திரௌபதி அம்மன் கோயிலுக்கு தெற்கு பக்கமாக ஊரின் நடுவில் உள்ளது. அக்கல்லுப்பள்ளி இடிக்கப்பட்டு இப்போது புதிய மகளிர் தொழுகை பள்ளியும் மதரஸாவும் கட்டப்பட்டுள்ளது. சித்திரை முதல் வாரம் திரௌபதி அம்மன் கோயிலில் ஏர் வைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. அந்நாளில் திருவாதவூர் கள்ளர்கள், பிள்ளைமார்கள், செட்டியார், இசுலாமியர் உள்ளிட்ட கரையாளிகள், முக்கியஸ்தர்கள் அழைத்து வெற்றிலை, பூ, பழம் வைத்து மரியாதை செய்கிறார்கள். அவ்வாறு திருவாதவூர் திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெறும் ஏர் வைக்கும் நிகழ்வில் மரியாதை பெரும் பல்வேறு சமூகத்தில் ஒரு பிரிவினராக திருவாதவூர் இசுலாமியர்கள் இருக்கிறார்கள்.
அதே போல புரட்டாசி மாதம் இரண்டாவது வாரம் கரைப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று திருவாதவூர் ஊர் மக்கள் பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அன்று 100க்கும் மேற்பட்ட தேங்காயை தீயிலிட்டு கருக்கி, அதில் இருந்து மையை எடுத்து திருவாதவூர் பெரிய கண்மாய் மடையில் உள்ள புருஷாமிருகத்தின் மீது பூசுகிறார்கள். அதனை கருப்பு சாத்து என்று அழைக்கிறார்கள். அதற்கு அடுத்த நாள் பள்ளிவாசலில் இருந்து கூட்டமாக புறப்பட்டு திரௌபதி அம்மன் கோயிலுக்கு பாடல்களை பாடி கொண்டே இசுலாமியர்கள் வருகிறார்கள். திரௌபதி அம்மன் கோயில் பூசாரி இசுலாமியர்களின் நெற்றியில் மஞ்சள் காப்பு பூசகிறார். பின் அக்கோயிலின் வடக்குப்புற வெளிச்சுவர் ஓரமாக அமைந்துள்ள இசுலாமிய துறவியின் அடக்கத்தலம் முன்பு பிறை பொறிக்கப்பட்ட பச்சை கொடி ஏற்றப்படுகிறது. முன்பு இசுலாமிய துறவியின் அடக்கத்தலம் அருகே கொடிக்கம்பம் இருந்தது. அதில் கொடி ஏற்றப்பட்டது. கோயில் சுற்றி மேற்கூரை அமைக்கும் போது கம்பம் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்றுமுதல் கோயில் சுவரில் இசுலாமியர்கள் கொடி ஏற்ற இடம் தரப்பட்டது. கொடி ஏற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு திருவாதவூர் பெரிய கண்மாயில் உள்ள சின்ன மடையில் சேவல், கிடா பலியிட்டு கந்தூரி கொடுக்கிறார்கள். அப்போது இரண்டாவது பச்சை கொடியை சின்ன மடையின் வடக்கு தூணில் இசுலாமியர்கள் ஏற்றுகிறார்கள். புரட்டாசி மாத கந்தூரி நடத்த ரூபாய் 5000 ஊர் சார்பாக இசுலாமியர்களுக்கு வழங்கப்படுகிறது. கந்தூரி விழாவில் அனைத்து சமூக மக்களும் கலந்து கொள்கிறார்கள். ஊரில் உள்ள அனைத்து சமூக மக்களும் இணைந்து காலம் காலமாக சித்திரை மாதம் ஏர் வைக்கும் நிகழ்வையும், புரட்டாசி மாதம் பொங்கல் வைக்கும் நிகழ்வையும் செய்து வருகிறார்கள்.
https://www.facebook.com/share/p/17C2g4KWsP/
https://www.facebook.com/share/p/1CfYybPrZD/
ஒளிப்படங்கள்: அழகப்பன் (25.05.2025)
ஒளிப்படங்கள்: அழகப்பன் (25.05.2025)
ஒருங்கிணைப்பு குழு
மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை
16.05.2023
Comments
Post a Comment