கேசம்பட்டி - பண்பாட்டுச் சூழல் நடை

 கேசம்பட்டி - பண்பாட்டுச் சூழல் நடை


பண்பாட்டுச் சூழல் நடையின் 21 வது பயணமாக மேலூர் வட்டம், கேசம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ள கொம்பு தூக்கி அய்யனார் கோயில்காடு, பெரிய அருவி நீர்த்தேக்கம், மூங்கில் பாறைக்குட்டு கருப்பு கோயில்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 14.07.2024, ஞாயிறு அன்று சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 70 பேர் பங்கெடுத்தனர். இந்த பயணத்தின் குறிப்பான ஐந்து செய்திகளை கீழே கொடுத்துளோம். விரிவான செய்தியை ஆர்வம் உள்ளவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.



1. அழகர்மலை அடிவார ஊர்களில் 50க்கும் மேற்பட்ட கோயில்காடுகள் இருக்கின்றன. பல்லுயிரிய மற்றும் பண்பாட்டு நோக்கில் இக்கோயில்காடுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த கோயில்காடுகள் பல்லுயிரிய மரபு தலமாக அறிவிக்கபட வேண்டும். அனைத்து கோயில்காடுகளும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும்.
2. தமிழ்நாடு பல்லுயிரிய வகைமை வாரியத்தில் கோயில்காடுகள் பாதுகாப்பிற்கென்று தனியான துறைகள், அலுவலர்கள், பொறுப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.
3. பெரிய அருவி நீர்த்தேக்கம் தூர்வாரப் பட வேண்டும். வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க அழகர்மலை பெரிய அருவி பள்ளத்தாக்குப் பகுதி தகுந்த இடமாகும்.
4. கேசம்பட்டி பகுதியில் ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 40கும் மேற்பட்ட பறவையினங்கள், 30 மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்கள் கேசம்பட்டி பண்பாட்டுச் சூழல் நடையில் ஆவணம் செய்யப்பட்டது.
5. கொம்பு தூக்கி அய்யனார் கோயில்காட்டிலும், மூங்கில் பாறை கருப்பு கோயில்காட்டிலும் சிறு நெகிழி துகள் கூட காண முடியவில்லை. அத்தனை பயபக்தியுடன் கோயில்காடுகளை மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.


கேசம்பட்டி:

கேசம்பட்டி ஊர் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர்மலையின் வடகிழக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. சாணிப்பட்டி, அருக்கம்பட்டி, கடுமீட்டான்பட்டி, வெள்ளிமலைப்பட்டி, அழகுநாச்சியார்புரம், அய்யனார்புரம் உள்ளிட்ட ஊர்கள் கேசம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டவையாக விளங்குகின்றன.

கேசம்பட்டி அழகர்மலை அடிவாரத்தில் வெள்ளகோடான் பாறையில் தான் அழகர் முதலில் இருந்ததாகவும், அங்கிருந்து கேசம்பட்டி அழகர்மலை அடிவாரம் பெரிய தோப்பு பகுதியில் சில காலம் இருந்ததாகவும், பின் அங்கிருந்து சிலம்பாறு பாயும் மலைக்கு சென்றதாக ஊர் மக்களிடம் கதைகளாக நீடிக்கிறது.

பெரியதோப்பு பகுதியில் தோன்றும் ஊற்றுக்கு பெரியதோப்பு தண்ணி என்று பெயர். அதனை அருள் (புனித) நீராக கருதி மக்கள் வழிபடுகின்றனர். திருமணமானவர்கள் இங்கு வந்து நீராடிவிட்டு செல்வது வழக்கம். அவர்கள் மேல் இந்த நீரை தெளித்து சடங்கு செய்யப்படுகிறது. அதற்கு சுத்தத்தண்ணி போடுதல் என்று பெயர். நீத்தார் சடங்காக செய்யப்படும் பிடியானம் (திதி) நிகழ்வுக்கும் பெரிய தோப்பு தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. அழகர்மலை ராக்காயி தீர்த்தம் போல இந்த ஊற்று நீரும் சுற்று வட்டார ஊர்களின் தீர்த்தமாக கருதப்பட்டு எடுத்து செல்லப்படுகிறது. ராக்காச்சி தீர்த்தம் சிலம்பாறாக வருவது போல, பெரிய தோப்பு தீர்த்தம் வீராறு என்ற பெயரில் ஓடி வருகிறது. இங்கே நாகம்மாள் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது.


பெயர் காரணம்:

கேசம் என்பது வடமொழிச் சொல். கேசம் என்றால் முடி, கூந்தல், சிகை என்று பொருள். முடிதிருத்தும் சமூக மக்கள் தான் பாலைக் கொப்பு ஊண்றி இப்பகுதியில் முதலில் குடியேறினார்கள். அதன் காரணமாக இவ்வூர் கேசம்பட்டி என்று பெயர் பெற்றதாக கூறுகிறார்கள். நாவிதர் சமூக மக்கள் இப்பகுதியில் நிலவுடமை சமூகமாக திகழ்கின்றனர். நாவிதர் குளம் என்ற கண்மாயும், அதன் மூலம் பாசனம் பெரும் நிலங்கள் நாவிதர் சமூக மக்களுடையதாக இன்றும் இருக்கிறது.


கொம்பு தூக்கி அய்யனார் கோயில்:









கேசம்பட்டி ஊராட்சியில் அமைந்துள்ளது கொம்பு தூக்கி அய்யனார் கோயில். கேசம்பட்டி - சாணிப்பட்டி இரண்டு ஊர்களுக்கும் பாத்தியப்பட்ட கோயில் ஆகும். சுற்றுவட்டார ஊர்களில் உள்ள அனைத்து சமூக மக்களும் வந்து வழிபடக்கூடிய பொது கோயிலாகும். இக்கோயில் ஏறக்குறைய 40 ஏக்கர் பரப்பளவுள்ள இயற்கையான காட்டில் அமைந்துள்ளது. மாசி களரி அன்று வழிபாடு நடைபெறுகிறது. கோயிலின் முன்புறமுள்ள இரு குதிரைகளில் ஒன்று கேசம்பட்டிக்கும் மற்றோன்று சாணிப்பட்டிக்கும் உரித்தானது. மாந்தலை அய்யனார், பெரிய அய்யனார், சின்ன அய்யனார் பல்வேறு அய்யனார் கோயில்காடுகள் இப்பகுதியை சுற்றிலும் அமைந்துள்ளது. மாட்டின் தலை கிடந்த அய்யனார் கோயிலை மாந்தலை அய்யனார் கோயில் (கடுமீட்டான்பட்டி) என்றும், அந்த மாட்டின் கொம்பு தூக்கி வீசப்பட்ட அய்யனார் கோயிலை கொம்பு தூக்கி அய்யனார் கோயில் (கேசம்பட்டி) என்றும் சில காலம் முன்பு நடத்த நிகழ்வின் காரணமாக இரு கோயில்களையும் வேறுபடுத்தி அழைக்க துவங்கியதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.

புரவி எடுப்பு திருவிழா:

கேசம்பட்டி - சாணிப்பட்டி என இரு ஊர் பஞ்சாயத்தும் ஒன்றுகூடி தான் கொம்பு தூக்கி அய்யனார் புரவி எடுப்பு திருவிழா நடத்த முடிவெடுக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை என்கிற சுழற்சியில் கொம்பு தூக்கி அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெறுகிறது.

திருவிழாவின் முன்னேற்பாடு முதல் நிகழ்வாக ஆடி மாசம் பழம் போடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பின் புரட்டாசி மாதம் பிடிமண் கொடுத்து திருவிழா கேட்கும் நிகழ்வு நடைபெறுகிறது. புரவி எடுப்பு மண்குதிரைகள் கண்மாய்பபட்டியில் செய்யப்படுகிறது. அதன் பிறகு கார்த்திகை மாதம் துவங்கும் திருவிழா மூன்று நாட்கள் நடக்கிறது.

திருவிழாவின் முதல்நாள் கண்மாய்பட்டியில் செய்த மண்குதிரைகள் கண்திறக்கப்பட்டு பாப்பனகுளப்பட்டி, முத்துக்கருப்பன்பட்டி, பட்டூர், சின்னக் கற்பூரம்பட்டி வழியாக முரசுகுளம் கொண்டு வரப்படுகின்றன. முரசுகுளத்தில் ஆட்டம் பாட்டம் கச்சேரி நடக்கிறது. அங்கிருந்து மாலை சாணிப்பட்டி மந்தைக்கு கொண்டு வரப்பட்டு மண்குதிரைகள் இரவு சாணிப்பட்டியில் தங்க வைக்கப்படுகிறது. முதல்நாள் இரவு சாணிப்பட்டியில் ஆடல், பாடல், நாடகம் என திருவிழா களைகட்டுகிறது.

இரண்டாம்நாள் நாள் பிற்பகல் மண்குதிரைகள் சாணிப்பட்டியில் இருந்து கேசம்பட்டி மந்தைக்கு கொண்டு வந்து வைக்கப்படுகிறது. பின் மந்தையிலிருந்து கொம்பு தூக்கி அய்யனார் கோயிலுக்கு கொண்டு வரப்படுகிறது. இரண்டாம் நாள் இரவு சாமியாடிகள் மற்றும் பூசாரி வகையறாக்கள் மட்டுமே சாமிக்கு சடங்கு மற்றும் படையல் வைக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார்கள். மற்றவர்கள் யாரும் இரவு வழிபாட்டில் பங்கேற்பதில்லை.

திருவிழா அன்று சாணிபட்டியில் ஆடல்பாடல், நாடகம், பட்டிமன்றம் நடப்பது போல கேசம்பட்டி திருவிழாவில் நாடகம், பட்டிமன்றம் உள்ளிட்ட மேடை நிகழ்வுகள் வைப்பதில்லை. கரகாட்டம், ஆடல் பாடல் வைப்பதற்கு மட்டும்தான் சாமி அருள்வாக்கு வழங்கியுள்ளதாக கேசம்பட்டி மக்கள் கூறுகிறார்கள். மூன்றாம் நாள் கிடா வெட்டு நடைபெறும்.

கோயில்காடு கட்டுப்பாடுகள்:


கொம்பு தூக்கி அய்யனார் கோயில் காட்டிருக்குள் யாரும் செருப்பணிந்து செல்லக் கூடாது. கோயில்காட்டில் உள்ள மரங்கள் யாரும்வெட்டக் கூடாது. கோயில்காடுக்குள்ளும் மேற்க்கேயும் நெருப்பு மூட்டகூடாது. சமையல் செய்வதாக இருந்தாலும் நெருப்பு மூட்டக் கூடாது. காட்டில் உள்ள விலங்குகள் நோகும் வண்ணம் எதுவும் தீங்கு செய்ய கூடாது. பெண்களுக்கு தெய்வம் அருகில் செல்ல அனுமதியில்லை. நிலமும் நீரும் காடும் பாழ்படும் என்பதால் ஊரில் கழிவறை கட்டவதற்கும் கூட கட்டுப்பாடுகள் உள்ளது. கொம்பு தூக்கி அய்யனார் கோயில்காட்டில் ஒரு நெகிழி பிசிறைக் காண முடியவில்லை. அந்தளவுக்கு கோயில்காடு மக்களால் போற்றி பாதுகாக்கப்படுகிறது.

செகுட்டு கருப்பு:
கொம்பு தூக்கி அய்யனார் கோயில்காட்டின் மேற்கில் செகுட்டு கருப்பு தெய்வம் குடிக் கொண்டு இருக்கிறது. மிகவும் துடியான தெய்வம் என்பது ஊர்மக்கள் நம்பிக்கை. செகுட்டு கருப்பு என்கிற தங்கள் தெய்வத்தின் பெயரை வாயால் சொல்வதற்கு கூட அஞ்சி தயங்கினார்கள். செகுட்டு கருப்பு கோயில் பூசாரி தவிர யாரும் செல்வதில்லை. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கருப்பு கோயில் சுற்றிலும் முள்வேலியிட்டு அடைக்கப்படுகிறது. அப்படி அடைத்தால் அன்று மழை பெய்யும் என்பது நம்பிக்கை. திருவிழா காலம் தான் அடைப்பு திறக்கப்படும். மற்ற காலம் அடைத்தே வைக்கப்படுகிறது.

நீர்நிலைகள்:
============
செட்டியா ஊரணி:





கேசம்பட்டியில் உள்ள செட்டியா ஊரணியில் இருந்து எடுத்துவரப்படும் தண்ணீர் தான் இன்றும் ஊர் மக்கள் குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். மழைநீரும், பாறை ஊற்றுகளும் தான் ஊரணியில் நீராதாரமாக விளங்குகிறது. பங்குனி மாதம் நடைபெறும் பட்டத்தரசி அம்மன் கோயில் திருவிழாவில் செட்டியா ஊரணியில் இருந்து நீரெடுத்து பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். அந்த ஊரணியில் கன்னிமார் தெய்வம் வீற்றுயிருக்கிறது. அந்த ஊரணியில் செருப்பணிந்து செல்ல அனுமதி இல்லை. ஊரணியை களங்கப்படுத்தும் சிறு நடவடிக்கையை கூட மக்கள் செய்வதில்லை. ஊரணியை களங்கப்படுத்தும் நடவடிக்கையை தெய்வக் குத்தமாக கருதி, ஊரணி நீரின் தூய்மையை காலம் காலமாக பாதுகாத்து, பயன்படுத்தி வருகின்றனர்.
கோயில் குளம் & பாசனக் குளம்:

கொம்பு தூக்கி அய்யனார் கோயில்காட்டினுள் நரியன் அம்பலம் குளம் அமைந்துள்ளது. இக்குளம் கோயில் குளமாக கருதப்படுகிறது. அழகர்மலையில் இருந்து வரும் மலையோடைகள் நரியன் அம்பலம் குளத்திற்கும், பிடாரிக்குளத்திற்கும் வரத்து ஓடைகளாக விளங்குகின்றன. இந்த ஓடைகள் பிடாரிக் குளம் ஓடை என்று அழைக்கப்படுகிறது. பிடாரிக் குளம் மறுகால்நீர் நாவிதர் குளம், ஆலங்குளம், மாங்குளம் என தொடர் நீர்நிலைகளுக்கு பாய்கிறது. கிழக்கிகுளம் என்றும் கேசவன் அம்பலம் குளமும், முரசுக்குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் பெரிய அருவி அணையில் இருந்து நீரவரத்தை பெறுகின்றன.

வேளாண்மை:


அழகர்மலை ஓடைகள் மூலமும், பெரிய அருவி அணை மூலமும் பாசனம் பெரும் கண்மாய்கள் வழியாகவும், கிணற்று பாசனம் மூலமும் இப்பகுதியில் வேளாண்மை நடைபெறுகிறது. கேசம்பட்டி ஊரில் பெரும்பான்மையாக மல்லிகைப்பூ விவசாயம் தான் நடக்கிறது. இவை போக அறைக்கீரை, மிளகு தக்காளி கீரை பயிரிடப்படுகிறது. காய்கறிகளில் புடலை, பீர்க்கை, கொத்தவரங்காய், கத்திரிக்காய், வெண்டி பயிரிடப்படுகிறது. நெற்பயிர்களும் பரவலாக பயிரடப்படுகிறது. மாந்தோப்பும், தென்னந்தோப்பும் கேசம்பட்டியில் காண முடிந்தது. காட்டுமாடு வேளாண் தோட்டங்களுக்கு தோப்புகளும் இறங்கி வருவது வாடிக்கையான நிகழ்வாக இருக்கிறது.

கால்நடை வளர்ப்பு:



கால்நடை வளர்ப்பும் கேசம்பட்டி மக்களின் முக்கிய தொழிலாக விளங்குகிறது. வெள்ளாடு வளர்ப்பு பரவலாக காண முடிந்தது. புலிக்குளம் மாடு, வடக்கத்தி மாடு உள்ளிட்ட நாட்டு மாடுகள் வளர்ப்பும், கோழி வளர்ப்பும் கேசம்பட்டியில் காண முடிந்தது.

புற்றீசல் அறுவடை:

கோயில்காட்டில் பல இடங்களில் கரையான் புற்று இருப்பதை காண முடிந்தது. கரையான்கள் வளர்ந்து ஈசல்களாக பரியும் நாளில் அதனை அறுவடை செய்கிறார்கள். சந்தையில் ஒரு படி ஈசலின் விலை ரூ 200 வரை விற்கப்படுவதாக தெரிவித்தார்கள். புற்றீசல்களில் பல வகைகள் உண்டு. அவை காப்புற்றீசல், கரும்புற்றீசல், கவரம்புற்றீசல், குமுட்டீசல், சிறுப்புற்றீசல், செங்கன்சிறுப்புற்றீசல், பெரும்புற்றீசல், பிராணீசல், மாக்கம்ப்புற்றீசல் உள்ளிட்ட ஈசல்கள் இங்குள்ள புற்றுகளில் பரியும்.

காப்புற்றீசல் சித்திரை மாதம் பரியும். கரும்புற்றீசல் துவங்கி இதர ஈசல்கள் அனைத்தும் ஆடி - ஆவணி மாசம் பரியும். ஆண்டின் இதர காலங்களில் ஈசல்கள் பரியாது. மாக்கம் புற்றீசல் தவிர இதர புற்றீசல் அனைத்தும் உண்ண தகுந்தவை. புற்றில் ஈசல்கள் பரியும் நாள் இரவில் காத்திருந்து ஊரில் உள்ளவர்கள் பிடித்து செல்வார்கள். காட்டிலுள்ள ஒவ்வொரு புற்றுக்கும் ஒவ்வொருவர் உரிமை கொண்டுள்ளனர். அவரவர் புற்றில் அவரவர் ஈசல்களை பிடித்து கொள்கின்றனர்.

சித்திரை மாதம் அழகர் ஆற்றில் இறங்கும் நாளில் பறக்கும் ஈசல் காப்புற்றீசல் எனவும், ஆடி மாதம் அழர்கோயில் தேரோட்டம் நிகழ்வில் பறக்கும் ஈசல் கரும்புற்றீசல் எனவும், ஒருவேளை ஆடிமாதம் மழை இல்லையென்றால் மரத்தில் கூடு வைத்து பரியும் மொய்த்தீசல்கள் ஆடித் தேரில் பரியும் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்.

கவரம்புற்றீசல் மாவு:
கவரம்புற்றீசலை வருத்து, கம்பரிசி மாவு, சுக்கு, ஏலக்காய் சேர்த்து மண்புட்டியில் வைத்து 6 மாதம் வரை சாப்பிடலாம். ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் மட்டுமே இது கிடைக்கும். ஆண்டுக்கு ஒருநாள் அதுவும் நிறைமதி நாள் இரவில் மட்டும்தான் ஈசல்கள் பரியும். காற்றடித்தால் ஈசல் வெளியே வராது. ஈசலை பிடிக்க இறுக்கமான சூழல் வேண்டும். இரவு 10 மணிக்கு மேல்தான் ஈசலை பிடிக்க புறப்படுகின்றனர். ஈசலை பிடிக்க பயன்படுத்தும் பொடியில் வெடிக்கிழஞ்சான், பசம்பக்கிழங்கு, வெந்தயம் உள்ளிட்ட பொருட்களை சேர்க்கின்றனர். கொம்பு தூக்கி அய்யனார் கோவிலை சுற்றிலும் இந்த கவரம்புற்றீசல் புற்றுகள் மட்டுமே உள்ளது.

காப்புற்று ஈசல்
கவரை ஈசல் 

கொழுஞ்சி ஈசல்

கரும்புற்று ஈசல்

பிராணி ஈசல்

சிறுபுற்று ஈசல்

குமுடு ஈசல்

தெளனி ஈசல்

முயிறு எறும்பு 







பல்லுயிரிய வகைமை:

அழகர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ளதால் கேசம்பட்டியில் காட்டு மாடு, காட்டுப்பூனை, புனுகு பூனை, சாம்பல் நிற தேவாங்கு, அலங்கு, குல்லாய் குரங்கு, காட்டுப்பன்றி, சாம்பல் நிற கீரி, மரநாய், புள்ளிமான், கடாமான் உள்ளிட்ட பாலூட்டி வகை உயிரினங்கள் இப்பகுதியில் காண முடிகிறது என மக்கள் தெரிவித்தனர். தேவாங்குகள் இப்பகுதியில் சாலையில் வாகனம் மோதி அடிப்பட்டு இறக்கும் நிகழ்வு தொடர்கதையாக உள்ளது.

சாம்பல் நிற தேவாங்கு:
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் அழகர்மலை அடிவாரமான கேசம்பட்டி, கம்பூர், சேக்கிபட்டி ஊராட்சிகளில் காணப்படும் சாம்பல் நிற தேவாங்குகள் குறித்தும் அவைகள் எதிர்கொள்ளும் வாழ்விட சவால்கள் குறித்தும் அமெரிக்கன் கல்லூரியைச் சேர்ந்த முதுகலை விலங்கியல் மாணவர் திரு. ஆ. ஜஸ்வின் மேஷாக் ஸ்மைல் அவர்கள் நான்கு மாதம் கள-ஆய்வை மேற்கொண்டார். மதுரை மாவட்டத்தில் தேவாங்குகளின் பரவல், அவைகளின் வெவ்வேறு வாழ்விட நடவடிக்கை மற்றும் தேவாங்குகளின் பாதுகாப்பை வலியுறுத்துதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்டு, விலங்கியல்துறை இணை பேராசிரியர் திரு. ராஜேஷ் அவர்கள் வழிகாட்டுதலில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆ. ஜஸ்வின் மேஷாக் ஸ்மைல்

தேவாங்கு (Lorisidae) குடும்பத்தில் சாம்பல் நிற தேவாங்கு (Loris lydekkerianus) மற்றும் வங்காள தேவாங்கு (Nycticebus bengalensis) என இரு சிற்றினங்கள் இந்தியாவில் காணப்படுகிறது. அதில் சாம்பல் நிற தேவாங்கு உலகில் இலங்கை மற்றும் தென்னிந்திய பகுதியில் மட்டுமே காணப்படுகிற அரிய உயிரினமாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) சாம்பல் நிற தேவாங்கை அச்சுறுத்தலை (NT) சந்திக்கும் விலங்கென ஆய்வறிந்து சிகப்பு பட்டியலில் இணைத்துள்ளது. மதுரை மாவட்டம் அழகர்மலை அடிவாரமான கேசம்பட்டி, கம்பூர், சேக்கிபட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமங்களை சாம்பல் நிற தேவாங்குகள் (Loris lydekkerianus lydekkerianus) குறித்து ஆய்வு செய்ய தேர்ந்தெடுத்தேன். இப்பகுதிகளில் காணப்படும் கோயில்காடுகள், நீர்நிலை கரையோர காடுகள், மலைக்குன்றுகள், வேளாண் பகுதிகள் என பல பகுதியில் ஆய்வை மேற்கொண்டேன். இந்த ஆய்வு கடந்த டிசம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை என மொத்தம் நான்கு மாதங்கள் நடைபெற்றது. ஆய்வின் போது எண்ணிக்கையின் அடிப்படையில் மொத்தமாக 194 சாம்பல் நிற தேவாங்குகளை பதிவு செய்தேன். கேசம்பட்டி கிராமத்தில் அதிகபட்சமாக 111 தேவாங்குகள் காணப்பட்டன. மற்ற இரு ஊராட்சிகளான கம்பூர் மற்றும் சேக்கிபட்டியில் முறையே 55 மற்றும் 28 தேவாங்குகள் பதிவாகியிருந்தன. ஆய்வு மேற்கொண்ட காலத்தில் அதிக எண்ணிக்கையிலான தேவாங்குகள் (91) டிசம்பர் மாதத்திலும், குறைந்த எண்ணிக்கையிலான தேவாங்குகள் (17) மார்ச் மாதத்திலும் பதிவானது. மார்ச் மாதத்தில் தேவாங்குகள் குறைவாகக் காணப்படுவதற்கான ஒரு காரணமாக, மாம்பழ தோட்டங்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருக்கக்கூடும். இது அவற்றின் இயல்பான நடத்தை மற்றும் வாழிடப் பயன்பாட்டை பாதிக்கக்கூடியதாக இருக்கலாம்.




மதுரை மாவட்டத்தில் சாலை விபத்துகள் தேவாங்குகளுக்கு வளர்ந்துவரும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சாலைகள் விரிவடைவதால் அவற்றின் வாழ்விடம் துண்டிக்கப்படுகிறது. மரங்களில் வாழும் இவை சாலைகளை கடக்க வேண்டிய சூழ்நிலையில் பலி ஆகும் வாய்ப்பு அதிகம், மேலும் பல மரணங்கள் இப்பகுதியில் பதிவாகியுள்ளன. தேவாங்குகள் சாலை விபத்தில் பலியாவதை தடுக்க, சாலையின் இருபக்கம் உள்ள மரங்களை இணைக்கும் ஏணிவடிவிலான பாலம் அமைக்கலாம். சாலை அருகே தேவாங்குகள் சாலையை கடக்கும் பகுதி என்கிற வகையிலான எச்சரிக்கை பலகை, சின்னங்கள் தேவாங்குகள் சாலையை கடக்கும் முக்கியமான இடங்களில் சாலையின் இருபக்கமும் அமைக்கப்பட வேண்டும். தேவாங்குகள் அடர்த்தியாக வாழும் பகுதிகள் கண்டறிந்து அதனை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அல்லது பல்லுயிரிய மண்டலமாக அறிவித்து பாதுகாக்கலாம் என்று
ன் ஆய்வில் ஜஸ்வின் குறிப்பிட்டுள்ளளார்.


கொம்புதூக்கி அய்யனார் கோயில் காடு பறவைகள்:




புள்ளிப் புறா, செண்பகம், அக்கா குயில், பனை உழவரான், வல்லூறு, புள்ளி ஆந்தை, வெண்மார்பு மீன்கொத்தி, பனங்காடை, பச்சை குக்குறுவான், பொன்முதுகு மரங்கொத்தி, செந்தார் பைங்கிளி, கரிச்சான், வால் காக்கை, அண்டங்காக்கை, தையல் சிட்டு, கதிர் குருவி, செங்குத கொண்டைக்குருவி, நாகணவாய், கருவெள்ளை குருவி, பூங்கொத்தி குருவி, ஊதாப்பிட்டு தேன்சிட்டு, ஊதாத்தேன்சிட்டு, வளை அலகு தேன்சிட்டு, புள்ளிச் சில்லை, தேன்பருந்து, ஓணான் கொத்தி கழுகு, கானாங்கோழி, காட்டுக் கீச்சான், புதர் சிட்டு, காகம், மயில், வெண்புருவ கொண்டாலத்தி உள்ளிட்ட 32 வகை பறவைகள் 2 மணி நேரத்தில் ஆவணம் செய்யப்பட்டது.



கொம்புதூக்கி அய்யனார் கோயில் காடு ஊர்வனங்கள்:



உடும்பு Bengal Monitor Lizard, பச்சோந்தி Indian Chameleon, ஓணான் Garden Lizard, பச்சை ஓணான் Green Forest Lizard, பாறை ஓணான் Peninsular Rock Agama, விசிறி தொண்டை ஓணான் Fan Throated Lizard, அரணை Keeled Indian Mabuya, பிப்பிரான் அரணை Bibrons's Skink, பாம்புகண் அரணை Snake Eyed Lizard, நாகம் / நல்ல பாம்பு Spectacled Cobra, கண்ணாடி விரியன் Russell’s Viper, சுருட்டை விரியன் Saw Scaled Viper, கட்டு வரியன் Common Krait, நாணல் குச்சி பவளப்பாம்பு Slender Coral Snake, புழுப் பாம்பு Blind Worm Snake, ஊசி புழு பாம்பு Beaked Worm Snake, பச்சை பாம்பு Long Nosed Vine Snake, பூனைக்கண் பாம்பு Common Cat Snake, சிவப்பு மண்ணுளிப் பாம்பு Red Sand Boa, மண்ணுளிப் பாம்பு Common Sand Boa, தண்ணீர் பாம்பு Checkered Keelback , சதுரங்க பாம்பு Olive Keelback, வெள்ளிக் கோல் வரையன் Common Wolf Snake, பட்டைக் கோல் வரையன் Barred Wolf Snake, தென்னக வரையன் Southern Wolf Snake, கொம்பேறிமூக்கன் Common Bronzeback Tree Snake, அலங்கார பாம்பு Common Bridle Snake, எண்ணெய் பனையன் Common Kukri, ஓலைப் பாம்பு Streaked Kukri / Banded Kukri, மோதிர வளையன் Common Trinket Snake, கருந்தலைப் பாம்பு Dumerill’s Black Headed Snake, மலைப் பாம்பு Indian Rock Python, ஓடுகாலி பாம்பு Joseph’s Racer, சாரைப் பாம்பு Indian Rat Snake , புல்லுருவி பாம்பு Striped Keelback, வீட்டுப் பல்லி House Gecko, வீட்டு புள்ளிப் பல்லி Spotted House Gecko, மரப் பல்லி Leshenault's Leaf Toed Gecko, புற்றுப் பல்லி Termite Hill Gecko, செதில் பல்லி Scaly Gecko, வளையிலை விரல் பள்ளி Reticulated Leaf Toed Gecko, உடுதிரள் ஆமை Indian Star Tortoise, குளத்து ஆமை Indian Black Turtle, வழுக்கோடு ஆமை Flapshell Turtle உள்ளிட்ட ஊர்வன வகைப்பட்ட உயிரினங்கள் இக்காட்டில் காணப்படுகின்றன.

கொம்புதூக்கி அய்யனார் கோயில் காடு பாலூட்டி வகை விலங்குகள்:

காட்டு மாடு Indian Gaur, காட்டுப் பூனை Jungle Cat, புனுகு பூனை Small Indian Civet, மரநாய் Common Palm Civet, அலங்கு / எறும்புத்தின்னி Indian pangolin, முள்ளம்பன்றி Indian crested porcupine, காட்டுப் பன்றி Indian Wild Boar, புள்ளி மான் Spotted Deer, மிளா / கடா மான் Sambar Deer, காட்டு முயல் Indian Hare, குல்லாய் குரங்கு Bonnet Macaque, சாம்பல் நிறக் கீரி Indian Grey Mongoose, சாம்பல் நிற தேவாங்கு Grey Slender Loris,  இந்திய அணில் Three Striped palm squirrel, தென்னிந்திய முள்ளெலி Bare bellied Hedgehog,, மூஞ்சூறு House shrew, இந்திய வெள்ளெலி Indian Gerbil, வீட்டு எலி House Mouse, வயக்காட்டு எலி Little Indian Field Mouse, பாறை எலி Cutch Rock Rat, புதர் எலி Indian Bush Rat, பெருச்சாளி Greater Bandicoot Rat, கருப்பெலி House Rat / Black Rat, பழுப்பு நிற எலி Brown Rat உள்ளிட்ட 25 பாலூட்டி வகை காட்டு விலங்குகள் அழகர்மலை அடிவாரமான கொம்புத்தூக்கி அய்யனார் கோயில்காட்டு பகுதியில்  காணப்படுகின்றன. உயிரினங்ககளின் இருப்பை அக்காட்டு விலங்குகளின் ஒளிப்படங்களை காண்பித்து மக்களிடம் கலந்து பேசி ஆவணம் செய்தோம். 

கேசம்பட்டி வண்ணத்துப்பூச்சிகள்:

















வெண்புள்ளிக் கருப்பன் - Common crow, வெந்தய வரியன் - Plain tiger, நீல வேங்கை - Blue tiger, கருநீல வேங்கை - Dark Blue tiger, மஞ்சளாத்தி - Common grass yellow, கொள்ளை வெள்ளையன் - Common emigrant, கருஞ்சிவப்பு நுனிச்சிறகன் - Crimson tip, மஞ்சள் காவிக்கடவி - Yellow orange tip, வரி ஆமணக்கு சிறகன் - Angled castor, தமிழ்தவிடன் - Tamil bushbrown, கறிவேப்பிலை அழகன் - Common mormon, கருநீல வண்ணன் - Blue Mormon, மஞ்சாடை - Common gull, வரி வேங்கை - Striped tiger, செந்தட்டி சிறகன் - Joker, கருநீல மின்னி - Indigo flash, பருபலா வெள்ளையன் - Common albatross, வெண்மதி - Pschye, புங்க நீலன் - Common cerulean, அந்தி சிறகன் - Common evening brown, Common Silver Line- வெள்ளிவரையன், வெளிர்சிவப்பு வெள்ளையன் - Small salmon arab, பெரிய சந்தன அரபு - Large salmon arab, எலுமிச்சை வசீகரன் - Lemon pansy, பழுப்புநிற வசீகரன் - Chocolate pansy, சிவப்புடல் அழகி - Crimson rose, கொக்கிக்குறி வெள்ளையன் - Pioneer, நீல மயில் அழகன் - Common Banded Peacock உள்ளிட்ட 27 வகை வண்ணத்துப்பூச்சிகள் இப்பகுதியில் ஆவணம் செய்யப்பட்டது. ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கும் வலசை போகும் சுழற்சியை கொண்டுள்ள தேசாந்திரி தட்டான்கள் (Wandering glider dragonfly) பரவலாக இப்பகுதியில் காண முடிந்தது.


கொம்புதூக்கி அய்யனார் கோயில் காடு தாவரங்கள்:











கடம்பு, எட்டி, ஆலம், அழிஞ்சில், ஆவி, வெப்பாலை, உசிலை, வாகை, வக்கணை, விளா, மஞ்சநத்தி, பனை, தென்னை, வெள்வேலம், புங்கை, வேம்பு, மா, பராய், தாழை, பிடவம், ஆவாரை, தேக்கு, மாவிலங்கை, பனி வாகை, ஆத்தி, நாட்டுக் கருவேலம், முருங்கை, சிறு நெல்லி, இலந்தை, உசிலை, பீநாறி, திருகு கள்ளி, புளி, சீதா, சிங்கப்பூர் செர்ரி உள்ளிட்ட மரங்களும்;

காரை, குருவிச்சி, கள்ளி, பாவட்டை, அதிரல், விஷ்ணு கிராந்தி, குப்பை மேனி, கீழா நெல்லி, கானா வாழை, வெடிக்காய், காட்டு துளசி, ஓடங்கொடி, கண்பீளை, சிற்றாமுட்டி, கோவைக்காய், புண்ணாக்கு பூண்டு, நிலக்கடம்பு, பற்படாகம், இண்டு, எருக்கு, துத்தி, சப்பாத்தி கள்ளி, அம்மான் பச்சரிசி, வெண் பூலா, உசிலை, புல்லுருவி, முடக்கத்தான், கரும்பூலா, சாரணை, நெருஞ்சி, ஆமணக்கு, தாத்தா பூ, பெருங்குறிஞ்சான், நாயுருவி, சென்னி, வெள்ளருகு, குமட்டி கீரை, மூவிலைக் கொடி, நேத்ரம் பூண்டு, தவசிக் கீரை, புலிச்சுவடி, யானை கற்றாழை, ஆதாளை, மூக்கிரட்டை, வெண் வாடாமல்லி, இரயிலடி பூண்டு, ஊனாங்கொடி, செம்பூண்டு, யானை நெருஞ்சி, தலைச்சுருளி, கீழாநெல்லி, நாய் கடுகு, இரயில் கற்றாழை, சிறு குறிஞ்சான், உன்னி, Chromolaena odorata, சிறுபூனைக்காலி, சங்கு முள், செப்பு நெருஞ்சி, இம்பூரல், முதியோர் கூந்தல், கத்திரி, பால் பெருக்கி, கவிழ் துத்தி Hibiscus sp., கொழுஞ்சி, காசுக்கட்டி, தும்பை உள்ளிட்ட மூலிகை, செடி, கொடி வகைகள் என 100க்கும் மேற்பட்ட தாவரங்களை கொம்பு தூக்கி அய்யனார் கோயில் காட்டில் ஆவணம் செய்தோம்.





மூங்கில்பாறை கருப்பு கோயில்காடு:

கேசம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மூங்கில் பாறைக் குட்டு என்னும் பாறைக்குன்றில் அமைந்துள்ளது கருப்பு கோயில். இந்த பாறை குன்றில் உள்ள பாறை இடுக்கு பள்ளத்தில் ஓங்கி வளர்ந்த பலநூறு மூங்கில் மரக்காட்டில் கருப்பு தெய்வம் வீற்று இருக்கிறது. எனவே இத்தெய்வம் மூங்கில் பாறை கருப்பு என்று அழைக்கப்படுகிறது. மூங்கில் பாறைக்குட்டில் மூங்கில் பாறை குளம் அமைந்துள்ளது. மூங்கில் பாறைக்குட்டு மலை மீது யாரும் செருப்பணிந்து செல்லக் கூடாது. நெருப்பு மூட்ட கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன. இந்த கோயில்க்காட்டிலும் ஒரு துளி நெகிழி குப்பைகளைக் கூட நாங்கள் காணவில்லை.


பட்டூரில் உள்ள பெரிய அய்யனார், சின்ன அய்யனார், நொண்டிச் சாமி, பாரி கருப்பு, மூங்கில்பாறை கருப்பு உள்ளிட்ட தெய்வங்கள் பட்டூர் பட்டத்தரசிம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழாவோடு தொடர்புடைய தெய்வங்களாக விளங்குகின்றன. காணிக்கையாக பழம் மாற்றும் சடங்கு மூங்கில் பாறை கருப்பு கோயிலில் நிகழ்கிறது. மூங்கில் பாறை கருப்பு கோயிலில் சாமியாடியும், பூசாரியும் வேறு வேறு சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்து இக்கோயிலை வழிநடத்தி வருகின்றனர்.








பெரிய அருவி நீர்த்தேக்கம்:




மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அருக்கம்பட்டி அடுத்துள்ள கடுமீட்டான்பட்டியில் அமைந்துள்ளது பெரிய அருவி அணை. அணை அமைந்துள்ள பகுதி பெரிய அருவி பள்ளத்தாக்கு ஆகும். அணையின் தெற்கில் துவரை மலை, மேற்கில் அழகர்மலை வடக்கில் முண்டாமலை, கிழக்கில் அணைக் கரை மற்றும் மதகு சூழ அமைந்துள்ளது பெரிய அருவி அணை. அழகர்மலையில் இருந்து வரும் பெரிய அருவி ஓடையின் குறுக்கே கட்டப்பட்டதால் பெரிய அருவி நீர்த்தேக்கம் என பெயர் பெற்றது. அன்றைய வேளாண்துறை அமைச்சர் கக்கன் அவர்களின் முயற்சியால் அணை கட்டப்பட்டு 1962 ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது. இந்த அணையின் சங்கிலித்தொடரில் 4 ஊராட்சிக்கு உட்பட்ட 26 கண்மாய்கள் (சேக்கிப்பட்டி-1, பட்டூர்-2, கம்பூர் – 9, கேசம்பட்டி – 14) பயன்பெறுகின்றன. பெரிய அருவி அணையின் மூலம் நேரடியாக 161 ஏக்கர் நிலமும், பாசனம் பெரும் 26 கண்மாய்கள் மூலமாக சுமார் 678.60 ஏக்கர் நிலமும் என மொத்தம் 839.6 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அழகர்மலையில் கடுமீட்டான்பட்டியில் பெரிய அருவி ஓடை உள்ளது போல அழகர்மலை சாம்பிராணிப்பட்டியில் சிற்றருவி என்ற ஒரு நீரோடையும் உள்ளது.

அழகர்மலையில் இருந்து வரும் பெரிய அருவி நீர், துவரைமலையில் இருந்து வரும் பண்ணைக்குளம் ஓடை, பாலூத்து ஓடை; முண்டாமலையில் இருந்து வரும் மழைநீர் இந்த அணைக்கு உள்ள இயற்கையான நீர் வரத்து ஆகும். அணை கட்டப்படும் முன் துவரை மலை ஓரமாக அருக்கம்பட்டி செல்லும் ஓடையை தெற்காறு என்று மக்கள் அழைத்தனர்.

பெரிய அருவி நீர்த்தேக்கத்தில் அருகில் உள்ள முதல் குளமான கடுமீட்டான்பட்டி பால் குளமும், அதற்கடுத்துள்ள அருக்கம்பட்டி நல்ல தண்ணீர்குளம் மற்றும் ஓட்ட குளம், பட்டூர் நெடுங்குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் பாசன கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வரத்து தடைபட்டுள்ளது. அணை தூர்வாரப்பப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு மதுரை மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோருக்கு கொட்டமபட்டி வட்டார வயலாக கூட்டமைப்பு சார்பாக 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

பெரிய அருவி அணை பகுதியில் 1 மணி நேரம் மேற்கொண்ட பயணத்தில் 15 வகை பறவைகளும் 24 வகை வண்ணத்துப்பூச்சிகளும் ஆவணம் செய்யப்பட்டது. பலநூறு வண்ணத்துப்பூச்சிகள் பெரிய அருவி பள்ளத்தாக்குகளில் காண முடிந்தது. இந்த அணை இயல்தாவர - வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க தகுந்த இடம் என்று பரிந்துரை செய்கிறோம். விரிவான தொடர் ஆய்வுகள் பல்லுயிரிய வகைமை எண்ணிக்கையை உயர்த்த கூடும்.

வருவாய்த்துறை பதிவேடு விவரம்:

கேசம்பட்டி ஊராட்சி, கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்.
- முறிமலை சர்வே எண் 713 - மூங்கில்பாறை குட்டு சர்வே எண் 141 - கொம்புத்தூக்கி அய்யனார் கோயில் சர்வே எண் 525 - மான்தலை அய்யனார் கோயில் 170, 171

குறிப்பு:
கேசம்பட்டி ஊர் இளைஞர்கள் எங்களுக்கு காலை உணவாக வெண்பொங்கலும், உளுந்த வடையும் ஏற்பாடு செய்திருந்தனர். உணவின் போது குடிநீராக செட்டியா ஊரணி தண்ணீர்தான் எங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது. நீர் மிகுந்த சுவையுடன் இருந்தது. எங்கள் அனைவருக்கும் முன் கேசம்பட்டியை சேர்ந்த செல்வி. துர்கா அவர்கள் காமராஜர் குறித்த உரை நிகழ்த்தி பாராட்டுகளைப் பெற்றார். கேசம்பட்டி ஊர் மக்கள் மிகுந்த அன்புடன் எங்களை உபசரித்து வழியனுப்பினர். இந்நிகழ்வுக்கு காரணமாக அமைந்த தோழர் ஜீவா, ஊரின் வழக்கங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்த அய்யப்பன் அண்ணன் மற்றும் கேசம்பட்டி ஊர் மக்களுக்கும் அவர்களின் அன்புக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். பண்பாட்டு மற்றும் பல்லுயிரிய நோக்கிலும் விரிவான ஆய்வுக்குரிய பகுதியாக கேசம்பட்டி விளங்குகிறது.

வழித்துணையாக இருந்தவர்கள்:
-------------------
- திரு. ஜீவா, கேசம்பட்டி
- திரு. ஐயப்பன் (எ) பெரியடைக்கண்
-- திரு. கல்லணை சுந்தரம் (கச்சிராயன்பட்டி)
- திரு. சந்தோஷ், கட்டுமீட்டான்பட்டி
- திரு. சின்னு
- திரு. அம்மாசி (எ) பிரவணடைக்கன்
- திரு. பாலமுருகன்
- திரு. பிரபாகரன்

---- ஆய்வுக்குழு ----
- மருத்துவர் திரு. தி. பத்ரி நாராயணன் (பறவையிலாளர்)
- பேரா. ப. தேவி அறிவு செல்வம் (கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)
- மரு. ஹீமோக்ளோபின் (பறவையிலாளர்)
- திரு. ச. ஜோதிமணி (காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்)
- திரு. பு. இரா. விஸ்வநாத் (காட்டுயிர் ஆய்வாளர்)
- திரு. நே. கார்த்திகேயன் பார்கவிதை (தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர்)
- திருமிகு. யாஷிகா (ஆய்வு மாணவர்)
- திரு. பரணி வெங்கட் (ஒளிப்பட கலைஞர்)
- திரு. பால கிருஷ்ணா (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் )
- திரு. கம்பூர் செல்வராஜ் (சூழலியல் செயற்பாட்டாளர்)
- திரு. ம. அழகப்பன் (வண்ணத்துப்பூச்சி ஆய்வாளர்)
- திருமிகு லெட்சுமி ஜெயபிரகாஷ் (சூழல் ஆர்வலர்)
- திரு. க. சக்திவேல் (பறவையிலாளர்)
- திரு. சி. சதிஷ்குமார் (பசுமை செயல்பாட்டாளர்)
- திரு. சதிஸ்குமார் (காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்)
- திரு. ஆறுமுகம் (காட்டுயிர் ஆர்வலர்)
- திரு. வெ. ராஜன் (வரலாற்று ஆர்வலர்)
- திரு. வித்யாசாகர் (சூழல் ஆர்வலர்)
- திரு. தமிழ்தாசன் (சூழலியல் ஆய்வாளர்)

ஒளிப்படங்கள்: திரு. ஜோதிமணி, பால கிருஷ்ணா, பரணி வெங்கட், வித்யாசாகர், விஸ்வா, சதிஷ்குமார், & தமிழ்தாசன்

இந்நடையின் கால நேரம்:
14.07.2024 அன்று காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை கொம்பு தூக்கி அய்யனார் கோயில்காட்டிலும், பின் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை பெரிய அருவி அணை பகுதியிலும், நண்பகல் 12.00 மணி முதல் 2 மணி வரை மூங்கில் பாறை குட்டு கருப்பு கோயில்காட்டிலும் குழுவாக ஆவணம் செய்தோம்.

Kombu thooki Ayyanar Sacred Grove Birds list: https://ebird.org/checklist/S186900017

Periya Aruvi Dam Birds list:

Moongil Rock Karuppu Sacred Grove Birds list
நன்கொடை:
திரு. பிரவீன் டேனி விக்டர், அன்பு சூழ் உலகு அறக்கட்டளை - 1000 ரூ

செலவு: இந்நிகழ்வில் செலவு ஏதும் செய்யப்படவில்லை.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
24.07.2024
































ஊடக செய்தி:
 















Sathiyam Tv: https://www.youtube.com/watch?v=qiB0HcfHISE

நிகழ்வு அழைப்பிதழ்: 

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை