வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு



ஆய்வின் நோக்கம்:

  • வைகையாற்றின் தாவர மற்றும் பல்லுயிரிய சூழலின் நிலை குறித்து அறிந்து கொள்ளுதல்
  • வைகையாற்றின் மீது மக்கள் கொண்டுள்ள பண்பாட்டு உறவு குறித்து அறிந்து கொள்ளுதல் 
  • நகரமய விரிவாக்கம் வைகையாற்றின் மீது ஏற்படுத்திய தாக்கம் குறித்து அறிந்து கொள்ளுதல்
  • வைகையாற்றில் மணல் பரப்பின் நிலை குறித்து அறிந்து கொள்ளுதல்
  • வைகையாற்றில் நேரடியாக கழிவு நீர் கலக்கும் இடங்களை அறிந்து கொள்ளுதல்
  • வைகையாற்று நீரின் தன்மை மற்றும் தரம் குறித்து அறிந்து கொள்ளுதல்
  • வைகையாற்றின் உயிரிச்சூழலை மேம்படுத்தி, பாதுகாக்கும் நோக்கோடு தன்னார்வமாக ஆய்வு மேற்கொள்ளுதல்
ஆய்வுக்காலம் & பின்னணி:
  • தேனி மாவட்டம் மூலவைகை பகுதியான வாலிப்பாறை என்னும் மலைக்கிராமம் துவங்கி வைகையாறு கடலில் கலக்கும் கழிமுக பகுதியான ராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை ஊராட்சி வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • தென்மேற்கு பருவமழையின் முடிவில் அணைகள் நிரம்பி வைகையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்  காலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 
  • 28.08.2024 துவங்கி 06.09.2024 வரை தொடர்ந்து பத்து நாட்கள் வைகையாற்றில் நேரடி களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் வைகையாற்றங்கரையில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள 200 ஊர்களை பட்டியலெடுத்து, அதில் 134 ஊர்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு செய்தோம்.
  • பல்லுயிரிய கணக்கெடுப்பு பதிவேடு வாயிலாக வைகையில் காணப்பட்ட உயிரினங்களை குறித்துக் கொண்டோம்.  
  • வைகையாற்றில் மணல் பரப்பின் நிலை, வைகையாற்றில் கழிவு நீர் கலக்குமிடங்கள், குப்பை கொட்டப்படும் இடங்கள் என அனைத்தையும் GPS கேமரா கொண்ட ஒளிப்பட கருவிகள் வாயிலாக ஆவணம் செய்தோம். 
  • ஐந்து மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் என மொத்தம் 36 இடங்களில் வைகை ஆற்றில் நீரின் மாதிரிகளை குவளைகளில் சேகரித்தோம். வைகையாற்றின் நடுவில் ஓடும் நீரில்தான் நீர் மாதிரிகளை சேகரித்தோம். தேங்கிக்கிடக்கும் நீரிலிருந்து நீர் மாதிரிகளை ஆய்வுக்காக எடுக்கவே இல்லை. நீருக்குள் வைத்தே நீர் மாதிரிகளை குவளைகளுக்குள் நிறைத்து, நீருக்குள்ளேயே குவளைகளை காற்று புகாத வண்ணம் நன்கு மூடிவிட்டோம். 
  • சேகரித்த நீர்மாதிரிகளை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் 'தானம் அறக்கட்டளையின்' பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தோம்.   உடனடியாக அன்றைய தினமே நீரின் தரமதிப்பீடு தொடர்பான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 


ஆய்வுக்குழு உறுப்பினர்கள்:

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் நிர்வாகிகள் நால்வர் இந்த ஆய்வுக்கு குழுவில் அங்கம் வகித்தோம்


 

இடது பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக படத்தில் இருப்பவர்கள் திரு. இரவீந்திரன், திரு. விஸ்வநாத், திரு. கார்த்திகேயன், திரு. தமிழ்தாசன் மற்றும் வாலிப்பாறை ஊர் மக்கள்.


வைகையாற்று படுகையில் உள்ள அணைகள்:

பெரியாறு அணை, வைகை அணை, சண்முகா நதி அணை, மஞ்சளாறு அணை, மருதா நதி அணை, வராக நதி சோத்துப்பாறை அணை, சாத்தையாறு அணை, சிறுமலையாறு அணை என வைகையாற்று படுகையில் எட்டு நீர்த்தேக்க அணைகள் உள்ளன. நாங்கள் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் ஒவ்வொரு அணையின் மொத்த  கொள்ளளவு,  அன்றைய வெள்ளநீரின் அளவு உள்ளிட்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


வைகை அணை: 

 தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் துரைசாமிபுரம் - மேல்மங்கலம் அருகில் பாயும் வைகை ஆற்றிற்குக் குறுக்கே 1959ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஐயா காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இவ்வணைக்கட்டு மதுரை மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு தேவையான பாசன நீரையும் ஆண்டிப்பட்டி, மற்றும் மதுரை நகரங்களுக்குத் தேவையான குடிநீரையும் வழங்கி வருகிறது. வைகை அணையின் கீழ் பகுதியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் விசை மூலம் மின் உற்பத்தி செய்யும் வைகை நீர்மின் சக்தி திட்டம் ஒன்று இயங்கி வருகிறது. இது மொத்தம் ஆறு மெகாவாட் திறன் கொண்டது. 

நாங்கள் ஆய்வு மேற்கொண்ட காலத்தில் வைகை அணையின் கொள்ளளவு, வெளியேற்றப்பட்ட வெள்ளநீரின் அளவு உள்ளிட்ட விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். 


அடிக்குறிப்பு:

  • Reservoir Drainage System of Vaigai Basin - வைகை வடிநில கோட்டத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள்
  • Current Year Storage (M.Cft.) - இந்த ஆண்டின் கொள்ளளவு
  • Full Capacity (M.Cft.) - அணையின் முழுக் கொள்ளளவு 
  • Current Year Storage % - இந்த ஆண்டின் கொள்ளளவு விகிதம்
  • 1 Million Cubic Feet (M.Cft) -  பத்து லட்சம் கன அடி
  • Current Year Level (Feet) இந்த ஆண்டு அணையின் நீர்மட்டம்  
  • Current Year Inflow (CuSecs) - இந்த ஆண்டு அணையின் நீர் வரத்து 
  • Current Year Outflow (CuSecs) - இந்த ஆண்டு அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட வெள்ளநீர் 
  • Full Depth in Feet  - முழு ஆழம் 
  • Full Capacity (M.Cft.) - முழுக் கொள்ளளவு  
  • Last Year Level (Feet) - கடந்தாண்டு அணையின் நீர்மட்டம் 
  • Last Year Storage (M.Cft.) - கடந்தாண்டு அணையின் கொள்ளளவு 
  • Feet - அடி
  • One cubic foot of water flowing per second (CuSecs) - வினாடிக்கு ஒரு கன அடி நீர் வெளியேறும் அளவை குறிக்கும்.

முல்லைப்பெரியாறு:

வைகையை பற்றி பேசுகிற போது முல்லைப்பெரியாறு குறித்து பேசாமல் விட்டால் அது முழுமையாகாது. 

கேரளா - தமிழ்நாடு எல்லையில் உள்ள இடுக்கி மாவட்டம் தேனி மாவட்ட மலைகளில் தோன்றுகிறது பெரியாறு. தேனி மாவட்ட மக்களால் தங்கள் குலத்தெய்வமாகவே மதிக்கக்கூடிய ஆங்கிலேயே பொறியியல் அறிஞர் பென்னி குவிக் அவர்களால் 1893ஆம் ஆண்டில் இந்த அணை கட்டப்பட்டது. இவ்வணை, முல்லையாறு மற்றும் பெரியாறு இரண்டும் சேருமிடத்தின்கீழ் அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து ’முல்லைப் பெரியாறு அணை’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. 

பெரியாறு அணை கட்டிய பிறகு தேக்கடியில் உருவான நீர்த் தேக்கத்திலிருந்து தண்ணீர் கிழக்கு நோக்கி சுரங்கம் மற்றும் இராட்சச குழாய்கள் வழியாக குமுளிக்கு அருகிலுள்ள ஃபோர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடப்பட்டு அங்கிருந்து கீழ் பெரியாறிலுள்ள பெரியாறு மின்சக்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து வைரவனாறு வழியாக சுருளியாற்றுக்கும், அதிலிருந்து வைகையாற்றுக்கும் தண்ணீர் வந்தடைகிறது. 


வைகையாறு: 
தமிழ்நாட்டில் 34 ஆற்றுப்படுகைகள் (Basin) உள்ளன. அதனை நீரியல் நிர்வாக  பகுப்பாய்வின் அடிப்படையில் 17 வடிநில கோட்டங்களாக (River Basin System) வகைப்படுத்துகின்றனர். அக்னியாறு, காவிரி, சென்னை வடிநில கோட்டம், குண்டாறு, கல்லாறு, கோதையாறு, நம்பியாறு, பாலாறு, பாம்பாறு - கோட்டக்கரையாறு, பரம்பிக்குளம் - ஆழியாறு, பரவனாறு, பெண்ணையாறு, தாமிரபரணி, வைகை, வைப்பாறு, வராக நதி, வெள்ளாறு என 17 வடிநில கோட்டங்கள் உள்ளன. சுருளியாறு (முல்லைப்பெரியாறு), சண்முகாநதி, வைகை, மஞ்சளாறு, மருதாநதி, வராக நதி, சாத்தையாறு, சிறுமலையாறு என எட்டு ஆற்றுப்படுகைகளை உள்ளடக்கிய கோட்டமாக வைகையாறு வடிநில கோட்டம் உள்ளது. 

வைகையாற்றுக்கு பெரியாறு வெள்ளம் திருப்பப்பட்டது வைகையாற்று வடிநில கோட்டத்தில் மிகப் பெரிய திருப்புனையாக அமைந்தது.  வைகை வடிநிலம் சுமார் 7009.13 சதுர கி.மீ பரப்பளவை கொண்டது. அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மலைப்பகுதிகள் சுமார் 2,101.68 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வனப்பகுதி என்பது சுமார் 53,736.30 சதுர கி.மீ பரப்பளவை கொண்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைகளான மேகமலை, வெள்ளிமலை, வருசநாடுமலை உள்ளிட்ட மலைகளில் தோன்றுகிறது வைகையாறு. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் ஊடக பாய்ந்து வங்க கடல் பாக் நீரிணையில் கலக்கிறது. வைகை உற்பத்தியாகும் வெள்ளிமலை முதல் இராமநாதபுரம் பெரியக் கண்மாய் வரை 266.71 கி.மீ நீளமும், இராமநாதபுரம் பெரியக் கண்மாயில் இருந்து கடலில் கலக்கும் கழிமுகப்பகுதி வரை 28.40 கி.மீ நீளமும் என மொத்தம் 295.11  கி.மீ நீளமுடையதாக வைகையாறு விளங்குகிறது. 

கூடலூர், கம்பம், உத்தமபாளையம், தேனி, பெரியகுளம், வத்தலகுண்டு, ஆண்டிபட்டி, சோழவந்தான், மதுரை, திருப்புவனம், மானாமதுரை, பரமக்குடி, இராமநாதாபுரம் உள்ளிட்ட பேரூர்களும், பெருநகரங்களும் வைகை வடிநில பகுதியில் அமைந்துள்ளது. 

சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், முத்தொள்ளாயிரம், பக்தி இலக்கியம் உள்ளிட்ட தமிழ் மொழியின் பழமையான இலக்கியங்களில் புகழ்ந்து பாடப்பட்ட ஒரே ஆறு வைகையாறு தான். பழங்கால இலக்கியங்கள் வையை  என்றே வைகையை அழைக்கின்றன

வைகையாறு வடிநில கோட்டம் அட்சரேகை 9° 15’ – 10° 20’ N and தீர்க்கரேகை 77° 10’ - 79° 15’ என்கிற புவியியல் அச்சுதூரங்களில் அமைந்துள்ளது. வடக்கில் காவேரி, பாம்பாறு - கோட்டக்கரையாறு வடிநிலகோட்டம், தெற்கில் குண்டாறு வடிநில கோட்டம், மேற்கில் பெரியாறு வடிநில கோட்டம் சூழ வைகை வடிநில கோட்டம் அமைந்துள்ளது.  

இலக்கியத்தில் வைகை: 
ஏறக்குறைய 2500 ஆண்டுகள் தொன்மையான தமிழர்களின் சங்க இலக்கிய நூல்களான மதுரைக்காஞ்சி, பரிபாடல், கலித்தொகை, அகநானுறு, புறநானுறு உள்ளிட்ட சங்கப்பாடல்களில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் வையை என்ற பெயரால் வைகை குறிக்கப்படுகிறது. ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் வைகையின் புகழ் பாடுகிறது. முத்தொள்ளாயிரம், பக்தி இலக்கியங்கள் என தமிழர்களின் தொன்மையான நூல்கள் வைகை பாடுகின்றன. பக்தி இலக்கிய நூல்களான திருமுறை, பெரியபுராணம், திருப்புகழ், கல்லாடம் உள்ளிட்ட  இலக்கியங்கள் வைகையை பாடுகின்றன. 

வைகையாற்று வெள்ளத்தில் கரையோர மரங்கள் சொரிந்த பூக்களை தாங்கி வரும் அழகை ''புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு'' என்று இளங்கோவடிகள் பாடுகிறார். வையை என்னும் பொய்யா குலக்கொடி என்று வளங்குன்றா வையையை புகழ்ந்து பாடுகிறார். கண்ணகியும் கோவலனும்  மரப்புணை வாயிலாக வையையாற்றை கடந்து சென்றதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. புணை என்றால் படகு, தெப்பம் என்று கூறுவார். அதனை மரத்திலான பாலம் என்றும் பொருள் கொள்வர். 

வைகையாற்றின் கரைகளில் இருந்த மரங்கள் குறித்து பரிபாடல், அகநானூறு, சிலப்பதிகாரம், திருவிசைப்பா உள்ளிட்ட நூல்கள் விவரிக்கின்றன. வைகையாற்று மரங்கள் குறித்து வைகையாற்று தாவரங்கள் பகுதியில் காண்போம். 

வைகை பெயர் காரணம் புராணங்களில் இருந்து புனைந்து கூறப்படுகிறது. 
திருமாலின் இருப்பிடமான வைகுண்டத்தின் 'வை'யும் சிவபெருமானின் இருப்பிடமான கைலாயத்தின் 'கை'யும் இணைந்து சங்கரநாராயணர்களின் இருப்பிடமான தீர்த்தமாக 'வைகை' அமைந்திருக்கிறது என்று கூறுவார்கள். சிவபெருமானின் பூத கணங்களில் ஒருவரான குண்டோதரனுக்கு விருந்து படைத்த போது அவரது தாகம் தீர்க்க  'குண்டோதரா; உன் கையை வை; வை கை' என்ற சிவபெருமானின் ஆணைப்படி குண்டோதரன் கை வைத்த இடத்திலிருந்து பெருகிய ஆறு என்பதால் 'வைகை' என்று திருவிளையாடற்புராணம் விளக்குகிறது. 

கிமு 6 முதல் கிபி 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்க நூல்கள் 80 இடங்களில் வையை என்றே குறிப்பிடுகிறது. கிபி 2-3 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிலப்பதிகாரம் (11), கிபி 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முத்தொள்ளாயிரம் (2) ஆகிய நூல்களும் வையை என்றே குறிப்பிடுகிறது. பரிபாடல் ஓரிடத்தில் வைகை என்று குறிப்பிடுகிறது. 

கிபி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் கிபி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்த  அப்பர் பாடிய தேவாரத்தில் (9) முதல்முறையாக வைகை என்று குறிப்பிடுவதை பார்க்கிறோம். 

ஆனால் கிபி 10-11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கருவூர்த் தேவர் பாடிய திருவிசைப்பா(1),  கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லாடர் பாடிய கல்லாடம் (11), ஆகிய நூல்கள் வையை என்று குறிப்பிடுகிறது. கிபி 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியபுராணம் (7) வைகை என்றே  குறிப்பிடுகிறது. அதன் பிறகு வந்த இலக்கியங்கள் அனைத்தும் வைகை என்றே குறிப்பிடுவதை பார்க்கிறோம். கடந்த நூற்றாண்டில் வாழ்த்த பாரதி தமிழ் கண்டதோர் வையை நதி என்றே குறிப்பிடுகிறார். 

வையை என்னும் ஆதிப்பெயர் வைகை என்று பக்தி இலக்கிய காலங்களில் மாற்றப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 

கல்வெட்டில் வைகை:

சேந்தன் மாறன் என்ற பாண்டிய மன்னன் ஜம்பதாவது ஆட்சியாண்டில் அரிகேசன் என்ற தன் பெயரால் கிபி 6ஆம் நூற்றாண்டில் வைகை ஆற்றில் மதகு அமைத்து பாசன வசதி செய்துள்ளது குறித்த கல்வெட்டு 1961 ஆம் ஆண்டு வைகைக்கரையில் கண்டறியப்பட்டது. அக்கல்வெட்டு மீனாட்சியம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சங்க காலம் முதல் கிபி 3ஆம் நூற்றாண்டு வரை வையை என்று அழைக்கப்பட்டதை முந்தைய பகுதியில் பார்த்தோம். சேந்தன் மாறனின் கல்வெட்டு கிபி 6ஆம் நூற்றாண்டில் வைகை என்று அழைக்கப்பட்டதை தெளிவுபடுத்துகிறது. வையை என்ற சொல் பேச்சு வழக்கில் வைகை என்று தன்னியல்பாக மக்களால் அழைக்கப்பட்டிருக்கலாம்.  

வைகைக்கரையில் கட்டப்பட்டுள்ள மதுரை மீனாட்சியாம்மன் கோயில் கல்வெட்டுகளை படித்த தொல்லியல் அறிஞர் திரு. சாந்தலிங்கம் அவர்களிடம் உரையாடிய போது வைகை பற்றிய குறிப்புகள் மீனாட்சியம்மன் கோயில் கல்வெட்டுகளில் இடம்பெறவில்லை என்று எங்களிடம் தெரிவித்தார். 

மதுரை மாவட்டம் அழகர் கோயில் முதல் திருச்சுற்றுச் சுவர் வடப்பக்கம் வெளிப்பகுதியில் பூவின் கிழத்தி எனத் தொடங்கும் சடையவர்மன் குலசேகரனின் கல்வெட்டு காணப்படுகிறது. கிபி 1203ஆம் ஆண்டைச் சேர்ந்த அக்கல்வெட்டில் ''வைகையான சிவல்லபப் பேராறு'' என்று குறிப்பிடப்படுகிறது. 

அழகர் கோயில் மடைப்பள்ளி மேற்குச் சுவர் வெளிப்புறத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விசுவநாத நாயக்கரின் கல்வெட்டு காணப்படுகிறது. அக்கல்வெட்டில் ''பாண்டிய மண்டலத்து வைகைக் கரை'' என்று குறிப்பிடப்படுகிறது. 

அழகர் கோயில் பதினெட்டாம்படிக் கோபுரம் உட்புறம் தெற்கு மற்றும் வடக்குச்சுவரில் விஜயநகர பேரரசு காலத்திற்குரிய இரு கல்வெட்டுகள் காணப்படுகிறது. கிருஷ்ண தேவராயர் ஆட்சிக்கு காலமான கிபி 1513ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் ''வைகைக்கரையில் சமையநல்லூர்'' என்றும், கிபி 1535ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் ''வைகைக்கரை காரிசேரி'' என்றும், அச்சுததேவமகராயர் ஆட்சிக்கு காலமான கிபி 1532ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் ''வைய்கைக்கரை பற்று வடகரை குன்றத்தூர்'' என்றும் குறிப்பிடப்படுகிறது. 


செப்பேட்டில் வைகை: 
தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்  சுருளியாற்றங்கரையில் அமைந்துள்ளது. விசுவநாயக்கர் (கிபி 1529-64) ஆட்சிக் காலத்தில் கோயிலுக்கு மானியம் கொடுக்கப்பட்ட செப்பு பட்டயம் படித்தறியப்பட்டது. வீரபாண்டியை புல்லை நல்லூர் என்று அச்செப்பேடு குறிப்பிடுகிறது. வள்ளல் நதி என்ற சுருளி நதி, வைகை ஆகிய இரு நதிகளின் பெயரும் அச்செப்பேட்டில் குறிப்பிடப்படுகிறது.  

வைகை குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள்: 
தேனி மாவட்டம் துவங்கி இராமநாதபுரம் வரை பெரிய அணைகள், மதகணைகள், தடுப்பணைகள் என 33 அணைகள் கட்டப்பட்டு இருப்பதை இந்த ஆய்வு பயணத்தில் நாங்கள் ஆவணம் செய்தோம். 

வைகையாற்றில் கட்டப்பட்ட அணைகளில் பழமையானது திண்டுக்கல் மாவட்டம் சித்தர்மலை அடிவாரமான அணைப்பட்டியில் கட்டப்பட்ட பேரணை மற்றும் மதுரை மாவட்டம் குருவித்துறையில் கட்டப்பட்ட சிற்றன்னை ஆகிய இரு அணைகள் ஆகும். 

வைகையாற்றின் குறுக்கே சிற்றணை கட்டுவதற்கு தேவைப்பட்ட கற்களை உடைத்த இடத்தைக் 'கற்களம்' என்று பெயரிட்டு அழைத்ததாக குருவித்துறை பெருமாள் கோயில் கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சிற்றணை கி.பி. 12ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ வல்லபபாண்டியன் என்ற பராக்கிரமபாண்டியனால் கட்டப்பட்டது. பேரணை கட்டப்பட்டது தொடர்பாக நமக்கு கல்வெட்டு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட பேரணை மற்றும் சிற்றணை ஆகிய இரு அணைகள் மீது இன்று பொதுப்பணித்துறையால் புதிய அணை கட்டப்பட்டுள்ளது. (Feasibility Report National Waterway-107,Region VI - Vaigai River Viragnoor Dam to Anai Patti prepared for Inland Waterways Authority of India)

பேரணையில் 1882 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மதகணை  (Regulator Dam) கட்டடப்பட்டது. வைகையாறு மதுரை மாவட்ட எல்லைக்குள் நுழைகிற இடத்தில் பேரணை (Great Dam) கட்டப்பட்டுள்ளது. பேரணையின் இடதுகரையில் இருந்து கால்வாய் வழியாக தண்ணீர் திருப்படுகிறது. பேரணையில் இருந்து மூன்று மைல் கீழே சிற்றணை கட்டப்பட்டுள்ளது. சிற்றணையில் இருந்து வலதுபக்க கால்வாய் வழியாக தண்ணீர் திருப்பப்படுகிறது என 1868ஆம் ஆண்டு நெல்சன் எழுதிய மதுரை மாவட்ட குறிப்புகளில் (பக்17) இருந்து தெரிந்து கொள்ளலாம். இதன் வாயிலாக பேரணையும் சிற்றணையும் பாண்டியர் காலத்தில் ஒரே சமயத்தில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதலாம். 

இராமநாதபுரம் பெரியக் கண்மாய் வெட்டப்பட்ட காலத்தில் வைகையில் இருந்து கால்வாய் வெட்டப்பட்டிருக்க வேண்டும். வைகை நீரை பெரிய கண்மாய்க்கு திருப்பிவிடும் வண்ணம் காவனூர் அருகே வைகையின் குறுக்கே அணை ஒன்று பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதன் மீது இப்போது பொதுப்பணித்துறை புதிய அணை கட்டியுள்ளது. பார்த்திபனூர் அணை மற்றும் விரகனூர் அணை 1975ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பாண்டியர் கால கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் ஊர் விரகனூர். இங்கேயும் பழைய அணை மீது புதிய அணை கட்டப்பட்டதா என ஆய்வு செய்ய வேண்டும். 

முல்லைப்பெரியாறு குறுக்கே பென்னிகுயிக் அவர்களால் 1895 ஆம் ஆண்டு அணை கட்டப்பட்டது.   காமராஜர் ஆட்சிக் காலத்தில் 1959ஆம் ஆண்டு ஆண்டிபட்டி அருகே வைகை அணை கட்டப்பட்டது. இவை போக வைகையாற்றில் பல கால்வாய்கள் வெட்டி பாசனத்திற்கு நீர் திருப்பிவிடப்படுகின்றன. அப்பாசன கால்வாய்களில் பாண்டியர் காலத்து முதல் இன்றைய காலத்து கால்வாய்கள் வரை உள்ளன.   

வைகையாற்றில் சோழவந்தான் பகுதியில் இருந்து பிரியும் கால்வாய் அரிகேசரி ஆறு என்று என்று அழைக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் - சிறுகுடி அருகே வைகையில் வெட்டப்பட்ட கால்வாய் சிவல்லபப் பேராறு என்று அழைக்கப்பட்டது என்று அழகர் கோயில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.  

வைகைக்கரை அகழாய்வுகள்: 
வைகைக்கரையில் உள்ள அனுப்பானடி, துவரிமான், பரவை பகுதிகளில் 1887ஆம் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது. கோவலன் பொட்டல் பகுதியில் 1980ஆம் ஆண்டு அகழாய்வு நடைபெற்றது. பழமையான மனித எலும்புக்கூடுகள், சங்க காலச் செப்புக்காசுகள், பானை ஓடுகள் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டது. இதே 1980 ஆம் ஆண்டில் அழகன்குளத்தில் சிறிய அளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. பின் மீண்டும் 2016 ஆம் ஆண்டு அழகன்குளம் பகுதியில் விரிவாக அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குடியிருப்புகள், தமிழி எழுத்துக்களில் எழுதப்பட்ட சிவப்பு நிற ஓடுகள், மணிகள், துளையிடப்பட்ட ஓடுகள், ரோமானிய நாட்டு நாணயங்கள் இந்த அழகன்குளம் பகுதியில் கண்டறியப்பட்டது. 

இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளர் கி. அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையிலான குழு முதல் கட்ட அகழ்வாய்வை 2015 ஆம் ஆண்டு வைகையாற்றங்கரையில் உள்ள சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொடங்கியது. வைகைநதிக்கரை நாகரீகத்தின் தொன்மையும், சிறப்பும் ஆதாரப்பூர்வமாக உலகத்தின் கவனத்திற்கு வந்தது. 

கீழடியில் 10 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள், செங்கற்சுவர்கள்  கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வளர்ச்சியடைந்த நகரமாக இது திகழ்ந்ததற்கு இது வலுவான சான்றாக உள்ளது. சுடுமண் குழாய், கழிவுநீர் தொகுதிகள், உறை கிணறுகள் அகழாய்வில் கிடைத்துள்ளன. சங்க காலத்தில் கட்டிடங்களே இல்லை என்ற கூற்றை இந்த அகழ்வாய்வு மாற்றியமைத்துள்ளது. ரோமப் பேரரசுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பை மெய்ப்பிக்கும்படியான, வணிகர்களால் கொண்டுவரப்பட்ட ரௌலட் (rouletted), அரிட்டைன் (arretine) வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. ஆதன்', 'உதிரன்', 'திசன்' போன்ற தனிநபர்களின் பெயர்களைக் குறிப்பிடும் தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன. சூது பவளம், பளிங்கு, அகேட் மணிகள், பச்சை, மஞ்சள், நீல நிறக் கண்ணாடி மணிகள் இரும்பாலான அம்பு முனைகள், எழுத்தாணி, சுடுமண் முத்திரை கட்டைகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், சுடுமண் பொம்மைகள் உட்பட்ட பல்வேறு அரிய தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் தொல்லியல் களம் சுமார் கிமு 6 ஆம் நூற்றாண்டிற்கும், கிமு 5 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்திற்குரியது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

இப்போது தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் பகுதியில் விரிவான அகழாய்வு பணியை மேற்கொள்ளகின்றன. 

வைகைக்கரை வழிபாட்டு தளங்கள்:
வைகை மதுரை மாவட்டத்திற்குள் நுழையுமிடத்தில் சித்தர்மலை உள்ளது. இம்மலை நாகமலையின் தொடர்ச்சியாகும். சித்தர்மலையில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டுகளும் சமணர் குகைத்தளமும் காணப்படுகிறது. மதிரை, அமணன் என்ற தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சித்தர்மலையின் மேல்சுனை பாறையில் பழமையான வெள்ளைநிற பாறை ஓவியங்கள் காணப்படுகிறது.  

தேனி மாவட்டம் தொடங்கி இராமநாதபுரம் வரை வைகைக்கரையில் பழமையான கோயில்கள், அக்கோயில்களின் படித்துறை மண்டபங்கள் வைகைக்கரையில் அமைந்துள்ளன. வைகைக்கரை கோயில்கள் பற்றி தனியாக ஒரு நூல் எழுதலாம். அதனை கோயில்கள் உள்ளன. வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில், வண்டியூர் மாரியம்மன் கோயில், மடப்புரம் காளிக்கோயில் என புகழ்பெற்ற பழமையான நாட்டார் கோயில்களும் வைகைக்கரையில் அமைந்துள்ளது. இவை போக கம்பம் வாவேர் பள்ளிவாசல், உத்தமபாளையம் நயினார் முகமது பள்ளிவாசல், மதுரை சுங்கம் பள்ளிவாசல், சிலைமான் பள்ளிவாசல், இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் கிருத்தவ திருத்தலம், பீசர்பட்டினம் புனித மேரியன்னை ஆலயம் என இசுலாமிய, கிருத்துவ வழிபாட்டு தளங்களும் வைகைக்கரையில் அமைந்துள்ளது. 

வைகைக்கரை சுங்கச்சாவடி: 
மதுரை மாநகர் பகுதியில் நெல்பேட்டை அருகே வைகையின் தென்கரையில் சுங்கம் பள்ளிவாசல் உள்ளது. 1850 வரை இப்பகுதியில் சுங்கச்சாவடி செயல்பட்டு வந்ததாகவும், பின் சுங்கச்சாவடி நடைமுறைகள் ஆங்கிலேயர் நின்று போனதாகவும், இப்பகுதியில் இயங்கி வந்த கொல்லம்பட்டறையில் பணிபுரிந்த இசுலாமிய தொழிலார்கள் சேர்ந்து அரசிடம் இருந்து நிலம் வாங்கி பள்ளிவாசல் கட்டியதாகவும், அதனால் இப்பள்ளிவாசலுக்கு சுங்கம் பள்ளிவாசல் என்று பெயர் வந்ததாகவும் சுங்கம் பள்ளிவாசல் தலைவர் திரு. காஜா மொய்தீன் அவர்கள் எங்களிடம் தெரிவித்தார். சுங்கம் பள்ளிவாசல் வாயில் முன்பு சுங்கச்சாடி என்று எழுத்து பொறித்த கல்வெட்டு ஒன்றும் காண முடிகிறது. சுங்கம் பள்ளிவாசல் முன்பு வைகையாற்றின் வடகரையில் கள்ளழகர் வந்திறங்கும் பகுதிக்கு நேரே தென்கரையில் உள்ளது. வடகரையில் இருந்து தென்கரையில் உள்ள மதுரை நகருக்குள் நுழையும் வாயிலாக சுங்கம் பகுதி இருந்திருக்கலாம். 

இதே போல திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டத்தில் வைகையாற்றின் வடகரையிலுள்ள குன்னுவாரன்கோட்டையில் சிதைந்த நிலையில் 12-13ஆம் நூற்றாண்டு சிவன்கோயில் ஒன்று அண்மையில் கண்டறியப்பட்டது. கேரளா, கொடைக்கானல் பகுதியிலிருந்து குன்றுவராயன்கோட்டை, குருவித்துறை, விக்கிரமங்கலம் வழியாக, மதுரை மாநகருக்குச் செல்லும் பெருவழியில் அமைந்துள்ள இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் சுங்க வரி குறித்தும், அதை வசூலிக்கும் சாவடியும் பற்றியும் குறிப்பிடுகிறது. வைகை பெருவழியில் ஆற்றங்கரையில் அமைந்த பண்டைய சுங்கச்சாவடிகள் இருந்திருக்கிறது என்பதை அறிய முடிகிறது. 

இவை போக வைகைக்கரையில் உள்ள வழிபாட்டு தளங்கள், மடங்கள், சத்திரங்கள் இருந்துள்ளன. வைகையாற்றங்கரையில் படித்துறைகள், படித்துறை மண்டபங்கள், தோப்புகள் இருந்துள்ளன. இவற்றில் நகர் பகுதியில் இருந்த பல்வேறு படித்துறைகள், மண்டபங்கள், தோப்புகள் அழிக்கப்பட்டுவிட்டன. இந்த ஆய்வு பயணத்தில் மதுரை மாநகர் பகுதியில் வைகை ஆற்றங்கரையில் இருந்த படித்துறைகள், படித்துறை மண்டபங்கள், தோப்புகள் குறித்தும் ஆவணம் செய்தோம்.  


வைகையின் கடந்த காலம்: 

இருபது ஆயிரமாண்டுகளுக்கு முன்பு வைகையாறு இன்றைய இலங்கையின் நாட்டின் தென்கோடியில் உள்ள காலி (Galle) பகுதி வரை பாய்ந்தோடிய ஒரு மிகப்பெரிய ஆறாக இருந்துள்ளது எனவும், தாமிரபரணி ஆறு வைகையின் துணையாறாக இருந்துள்ளது எனவும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ரிமோட் சென்சிங் துறையின் பேராசிரியர்கள் சோமசுந்தரம் இராமசாமி மற்றும் சரணவேல் அவர்கள் மேற்கொண்ட செயற்கைக்கோள் ஆய்வு வெளிப்படுத்துகிறது. இன்று வைகையாறு கடலில் கலக்கும் இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கிராமத்திற்கும், இலங்கை நாட்டின் காலி நகராட்சிக்கு இடையில் சுமார் 400 கி.மீ தூரம் இடைவெளி உள்ளது. தமிழ்நாட்டின் நிலப்பரப்பிற்கும் இலங்கை நிலப்பரப்பிற்கும் இடையில் கடல் நீரால் சூழ்ந்துள்ள மன்னார் வளைகுடா பகுதி ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்தது. அதன் ஊடே தாமிரபரணி ஆறும்  வைகையாறும் பாய்ந்தோடியது. மன்னர் வளைகுடா பகுதியில் கடலுக்கடியில் ஒரு பெரிய ஆற்றின் வழித்தடம் அல்லது ஆற்றின் பள்ளத்தாக்கு இருப்பதை செயற்கைகோள் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. (https://www.nature.com/articles/nindia.2019.91)

கிமு 350 - கிமு 290 காலகட்டத்தை சேர்ந்த  கிரேக்கப் பயணியும், புவியியலாளருமான மெகஸ்தனிஸ் பண்டைய இந்தியாவிற்கும், பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தார். இந்தியாவை பற்றி அவர் எழுதிய குறிப்புகள் நம் நிலப்பரப்பின் கடந்த காலத்தை புரிந்து கொள்ள உதவுகின்றன. இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் ஒரு மிகப்பெரிய நதி ஒன்று ஓடியதாக குறிப்பிடுகிறார். பல தமிழறிஞர்கள் தாமிரபரணி இலங்கை வரை பாய்ந்தது என்று கூறுவார். ஆனால் அது தாமிரபரணியல்ல, வைகை என்று செயற்கைகோள் ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன என்கிறார் பேரா. சோமசுந்தரம் ராமசாமி அவர்கள். (https://www.researchgate.net/publication/334056828_Drowned_valleys_of_Vaigai_and_Tamiraparani_rivers_in_the_Gulf_of_Mannar_region_India)

கடந்த காலத்தில் தாமிரபரணி வைகையின் துணையாறு என்றால், தாமிரபரணிக்கும், வைகைக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பில் ஓடும் வைப்பாறும், குண்டாறும் தாமிரபணியின் துணையாறுகளாக இருந்தனவா  என்கிற கேள்வி எழுகிறது. 

வைகை பேராறு:
வெள்ளிமலை, மேகமலை, வருசநாடு மலைச் சரிவுகளில் தோன்றி ஒரு சின்னஞ்சிறு மலையோடையை போல காட்சி தரும் வைகையாறு, வருசநாடு மலையின் அடிவார பகுதியான தேனி மாவட்டம் முறுக்கோடையில் (ஆற்றுப்பாலம்) வைகையாற்றின் நீளம் 105 மீட்டர். தேனி மாவட்டம் கோட்டைப்பட்டி என்னும் ஊரின் அருகே சுருளியாறு, வைகையாற்றோடு கலக்கிறது. அதனை கடந்து தேனி மாவட்டம் குன்னுர் பகுதியில் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ரயில்பாலத்தின் அருகே ஓடும் வைகையாற்றின் நீளம் 153 மீட்டர் ஆகும். மஞ்சளாறு குன்னுவரன்கோட்டை அருகே வைகையாற்றோடு கலக்கிறது. அதன் பின் வரும் சோழவந்தான் - தென்கரை ஆற்றுப்பாலத்தின் அருகே ஓடும் வைகையாற்றின் நீளம் மீட்டர் 340 ஆகும். சாத்தையாறு விரகனூர் அருகே வைகையாற்றில் கலக்கிறது. அதன் பிறகு வரும்  சிலைமான் - கார்சேரி ஆற்றுப்பாலத்தின் அருகே ஓடும் வைகையாற்றின் நீளம் 423 மீட்டர் ஆகும். மானாமதுரை அருகே உப்பாறு (சிலம்பாறு) வைகையாற்றோடு கலக்கிறது. அதன் பிறகு வரும் பார்திபனூர் அணையின் அருகே ஓடும் வைகையாற்றின் நீளம் 526 மீட்டர் ஆகும். 

நகரமயமாக்கல் எவ்வாறு ஆறுகளை விழுங்குகின்றன என்பதற்கு மதுரை மாநகர் பகுதியில் ஓடும் வைகை ஒரு சான்றாகும். சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை அருகே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அங்கே வைகையாற்றின் நீளம் வெறும் 197 மீட்டர் தான்.  





வைகையின் துணையாறுகளும் அதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளும்:  
தேனி மாவட்டம் மேகமலையின் கிழக்குச் சரிவு, வெள்ளிமலை, வருசநாடு மலைப்பகுதியில் தோன்றுகிறது வைகையாறு. மேகமலை, வெள்ளிமலை, வருசநாடு மலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர், சின்ன சின்ன நீரூற்றுகள், மலையோடைகள், அருவிகள், காட்டாறுகள்  வைகையாற்றுக்கு நீரை வழங்குகின்றன. வெள்ளிமலையாறு, கூட்டாறு, பாலாறு, அம்மாகஜம், ஓடங்கலாறு, வட்டக்கேனியாறு உள்ளிட்ட சிற்றாறுகள் வைகை உற்பத்தியாகும் வருசநாடு மலைப்பகுதியில் வைகையோடு கலந்துவிடுகிறது.  

இந்த மலைக்காடுகள் மட்டுமல்ல பல்வேறு மலைப்பகுதிகளும், அதில் உற்பத்தியாகும் சிற்றாறுகள், காட்டாறுகள், துணையாறுகள் வைகைக்கு நீரை வழங்குகின்றன. அவை குறித்து கீழே விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

வருசநாடு மலையின் அடிவாரமான தேனி மாவட்டம் முறுக்கோடை பகுதியில் உருண்டோடி வரும் வைகையாற்றின் அகலம் 105 மீட்டர். ஆனால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே  ஓடும் வைகை ஆற்றின் அகலம் 526 மீட்டர். சிறிய ஓடையாக பிறப்பெடுக்கும் வைகையை, ஒரு பேராறாக மாற்றுவது அதன் துணையாறுகளும், அந்த துணையாறுகள் உற்பத்தியாகிற மலைகளும் தாம். 

தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மலைகள், கம்பம் மெட்டு, தேவாரம், போடிமெட்டு, அகமலை, கும்பக்கரை; திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் தெற்கு, சிறுமலை தெற்கு, அழகர்மலை; மதுரை மாவட்டத்தில் உள்ள சதுரகிரி, வாசிமலை, நாகமலை ஆகிய மலைத்தொடர்கள் வைகையாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்குகின்றன. இம்மலைகளில் தோன்றும் வைரவனாறு, சுருளியாறு, சின்ன சுருளியாறு, சண்முகாநதி, கொட்டக்குடி ஆறு, மூங்கிலாறு, வரட்டாறு, நாகலாறு, வராகநதி, மருதாநதி, மஞ்சளாறு, சிறுமலையாறு, சாத்தையாறு, உப்பாறு (சிலம்பாறு) உள்ளிட்ட ஆறுகள் வைகையாற்றின் துணையாறுகளாகும். மேற்சொன்ன ஆறுகள் சேர்ந்துதான் வைகையாற்றை ஒரு பேராறாக மாற்றுகின்றன. வைகையாற்றை மீட்க வேண்டுமென்றால் வைகை மற்றும் அதன் துணையாறுகள் உற்பத்தியாகும் மலைப்பகுதிளின் இயல்பு நிலை பாதுகாக்கப்பட வேண்டும். ஆக்கிரமிப்பு, கழிவு நீர் கலப்பு, ஆற்று மணல் கொள்ளை உள்ளிட்ட சீர்கேடுகளில் இருந்து வைகையும் அதன் துணையாறுகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே வைகையாற்றின் உண்மையான மீட்பு நடவடிக்கையாக அமையும். நீர்த்தேக்க பேரணைகள் அகற்றப்பட்டு, பாசன மற்றும் குடிநீர் தேவைக்காக கட்டப்படும் தடுப்பணைகள்தான் வைகையின் உயிர்ச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.




வைகையின் அணைகளும் பாசன பரப்பும்:
முல்லை பெரியாறு அணை, வைகை அணை, மஞ்சளாறு அணை, மருதாநதி அணை, சாத்தையாறு அணை, சோத்துப்பாறை (வராக நதி) அணை, சண்முகாநதி அணை, சிறுமலையாறு அணை உள்ளிட்ட எட்டு நீர்த்தேக்க அணைகள் வைகையாறு வடிநில கோட்டத்தில் அமைந்துள்ளது. வைகையாறு வடிநில கோட்டம் வாயிலாக சுமார் 1,411 நீர்நிலைகள் நேரடியாக பாசனம் பெறுகிறது. இதன்படி சுமார் 1,86,866.17 ஏக்கர் பாசனம் பெறுகிறது. மேலும் குண்டாறு மற்றும் பாம்பாறு கோட்டக்கரையாறு வடிநில கோட்டங்களில் உள்ள 994 நீர்நிலைகள் வைகை வடிநில கோட்டத்தின் வழியாக பயன்பெறுகிறது. இதன்படி வாயிலாக சுமார் 98,390.12 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. நேரடியாகவும் சங்கிலித் தொடர் கண்மாய்கள் வழியாகவும் சுமார் 2,85,257.71 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெறுகின்றன. 

முல்லைப்பெரியாறு - வைகை வழியாக பாசனம் பெறுகிற சுமார் 2.85 இலட்சம் ஏக்கர் பாசன பரப்பை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டுமென்கிற ஐந்து மாவட்ட மக்களின் கோரிக்கையை இந்நேரத்தில் நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். 
அடிக்குறிப்புகள்:
  • Sub Basin - உப (துணை) ஆற்றுப்படுகை 
  • System Tanks - ஆறு அல்லது அதன் கால்வாய் வழியாக நேரடியாக பாசனம் பெறும் நீர்நிலைகள் முறைப்படுத்தப்பட்ட நீர்நிலைகள் ஆகும். 
  • Non System Tanks - முறைசாரா நீர்நிலைகள். ஆற்றின் நேரடி பாசனமின்றி, சங்கிலித் தொடர் வழியாக அல்லது மறைமுகமாக பாசனம் பெறும் நீர்நிலைகள். எவ்வித பாசன கால்வாய்களின்றி தனித்து நிற்கும் நீர்நிலைகள் இதில் அடங்கும்.  
  • Capacity - கொள்ளளவு 
  • Registered Ayacut - பதிவு செய்யப்பட்ட பாசன பரப்பு 
  • No. - எண்ணிக்கை 
  • Hectare (Ha) - ஹெக்டேர்
பாசனம் பெறும் நீர்நிலைகள்: 
வைகையாற்று வடிநில கோட்டம் வாயிலாக சுமார் 1,411 கண்மாய்கள் பாசனம் பெறுகின்றன. அதில் 1049 நீர்நிலைகள் நேரடியாகவும், 369 நீர்நிலைகள் மறைமுகமாகவும் பாசனம் பெறுகிறது. பாசனம் பெறும் இந்த நீர்நிலைகளின் மொத்த கொள்ளளவு 514.37 (Mcum) மில்லியன் கன மீட்டர் ஆகும். இதன் வழியாக 75622.64 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. 

மேலும் குண்டாறு, பாம்பாறு - கோட்டக்கரையாறு வடிநில கோட்டத்தில் உள்ள சுமார் 994 நீர்நிலைகள் வைகை வடிநில கோட்டத்தால் பாசனம் பெறுகின்றன. இந்த நீர்நிலைகளின் மொத்த கொள்ளளவு 224.30 (Mcm) மில்லியன் கன மீட்டர் ஆகும். இதன் வழியாக 39817.07 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. 

இராமநாதபுரம் பெரியக் கண்மாய் அதன் சங்கிலி தொடர் கண்மாய்கள் நிறைந்த பிறகு, வைகை வடிநில கோட்டத்தின் பாசனம் தேவைகள் போக எஞ்சிய வெள்ளநீர் கடலில் சென்று கலக்கிறது. 

வைகையின் கழிமுகம்: 
ஆறும் கடலும் சேருமிடத்தில் உள்ள உவர்நீர் காயல் பகுதியை கழிமுகம் என்பர். பொழி, கயவாய் என்றும் அதனை அழைப்பர். ஆறு கடலோடு சேருவது ஆற்று நீரின் உரிமையாகும். அது இயற்கை விதி. நகரமயம், உலகமய போக்கினால் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் மண்டலமாக கழிமுகங்கள் உள்ளன. ஆறு கடலில் வீணாய் போய் கலக்கிறது என்பது உயிர்ச்சூழல், உணவுச்சங்கிலி பற்றி புரிதலாற்றோரின் கருத்தாகும். இந்த நிலைப்பாட்டில் நின்று வைகையாறு கடலில் கலக்கிறதா என்பதை அறிந்துக் கொள்வோம். 

வைகையாறு கடலில் கலக்கும் ஆறுதான். இராமநாதபுரம் மாவட்டம் காவனூர் கிராமம் அருகே பொதுப்பணிதுறையால்  வைகையாற்றின் குறுக்கே மதகணை (Regulator Dam) கட்டப்பட்டுள்ளது. முன்னாளில் இந்த அணை பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டிருக்க வேண்டும். இங்கிருந்து வைகையாற்றின் தண்ணீர் இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு கால்வாய் வழியாக திருப்பி விடப்படுகிறது. பெரியக்கண்மாய் மற்றும் அதன் சங்கிலித் தொடர் கண்மாய்கள் நிறைந்துவிட்டால் காவனூர் அருகேயுள்ள மதகணை வாயிலாக மீண்டும் வைகை ஆற்றின் இயல்பான ஆற்றுப்பாதையில் நீர் திருப்பிவிடப்படுகிறது. அந்த நீர் இராமநாதபுரம் ஆற்றங்கரை என்னும் கிராமத்தின் அருகே வங்கக்கடலில் (பாக்நீரிணை) கலக்கிறது. 

வைகையாறு வங்கக்கடலில்  கலக்குமிடத்தில் உள்ள கழிமுக பகுதியில் 60க்கும் மேற்பட்ட உவர்நீர் மீன் இனங்களை நாங்கள் இந்த ஆய்வு பயணத்தில் ஆவணம் செய்து இருக்கிறோம்.  கடந்த 33 ஆண்டுகளில் வைகையாறு கடலில் கலக்கும் நீரின் சராசரி அளவு 88.38 மில்லியன் கியூபிக் மீட்டர் என அரசின் ஆவணங்கள் (Vaigai River Basin Report 2017 by NWM) சொல்கிறது. 

காவேரி ஆறு கடலில் கலக்குமிடத்தில் பூம்புகார் துறைமுக நகரம் உள்ளது போல, தாமிரபரணி ஆறு கடலில் கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுக நகரம் இருந்தது போல, வைகையாறு கடலில் கலக்கும் இடத்தில் அழகன்குளம் என்று துறைமுக நகரம் இருந்துள்ளது. இதனை அழகன்குளம் பகுதியில் நடைபெற்ற அகழாய்வுகளும் உறுதி செய்கின்றன. அழகன்குளம் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த நாணயங்களின் முன்புறத்தில் உரோமானிய மன்னரின் முகமும், பின்புறத்தில் உரோமானியர்களின் வெற்றிக்கான தேவதையின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நாணயங்களை, கிமு 375ல் உரோமைப் பேரரசை கிமு 375 – 392 முடிய ஆண்ட இரண்டாம் வாலெண்டைன் (Valentinian II) வெளியிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இதன் மூலம் பாண்டியர்களுக்கும், உரோமானியர்களுக்கு இடையே நடந்த கடல் வணிகம் அறியப்படுகிறது. (New IndianExpress 10.05.2017). அழகன்குளத்தை கடந்து ஆற்றங்கரை என்னும் கிராமத்தின் அருகே இன்றும் வைகை கடலில் கலக்கிறது. அதில் யாருக்கும் ஐயம் வேண்டாம்.

ஆனாலும் கடலில் கலக்காத ஒரே நதி வைகை என்ற கருத்து மதுரை மக்களிடம் உண்டு. மேடை பேச்சாளர்கள் பலரும் இக்கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். சிவனுக்கு நஞ்சளித்த பாற்கடலில் நான் போய் கலக்க மாட்டேன் என்ற கொள்கையோடு வைகை இருப்பதாக சைவ மதம் அதற்கு கற்பனை நயத்தோடு விளக்கமளிக்கப்பதாக பழந்தமிழ் பாடலை குறிப்பிடுகிறார்கள். 

இதன் வழியாக நாம் புரிந்து கொள்ளக் கூடிய செய்தி யாதெனில் பல நூற்றாண்டுகளாக வைகை ஒரு பருவகால (Non Perennial) நதியாகவே இருக்கிறது. கடலில் போய் சேருமளவுக்கு வெள்ள பெருக்கு அரிதாகவே ஏற்படுகிறது. அதே சமயம் ஒரு பேரரசை நிறுவுவதற்கு காட்டைத் திருத்தி வேளாண்மையை பெருக்க வேண்டிய தேவை பாண்டியர் மன்னர்களுக்கு இருந்தது. பாண்டிய மண்டலத்தில் காணப்படும் சங்கிலித் தொடர் நீர்நிலைகள் போல வேறெந்த வேந்தர்கள் மண்டலத்திலும் அடுக்கடுக்கான தொடர் நீர்நிலைகளை நாம் காண முடியாது. பாண்டிய மன்னர்கள் பருவ காலங்களில் வைகையில் கரைபுரண்டோடி வரும் வெள்ளத்தை பாசன ஏரிகளுக்கு  திருப்பி வேளாண்மையை விரிவாக்கம் செய்தார்கள். வரலாற்றில் காலநிலை மாற்றத்தால் பஞ்சங்கள் ஏற்பட்டதாக அறிய முடிகிறது. கிபி 12ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட பெரியபுராணத்தில் மழை பெய்யாததால் பஞ்சம் ஏற்பட்டதாக குறிப்புகள் உள்ளன.  

மண்ணின் மிசை வான் பொய்த்து நதிகள் தப்பி மன் உயிர்கள் கண் சாம்பி உணவு மாறி
விண்ணவர்க்கும் சிறப்பில் வரும் பூசை ஆற்ற மிக்க பெரும் பசி உலகில் விரவ கண்டு (பெரிய புராணம் - வம்பறா:1 562/1)

1579 இல் திருநெல்வேலி பகுதியில், 1648 இல் கோவையில் பஞ்சம், 17ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டையில் பஞ்சம் ஏற்பட்டது குறித்த விவரங்கள் அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1876 - 1878 வரை நீடித்த தாது வருட பஞ்சம் அன்றைய சென்னை மாகாணப் பகுதியை பெருமளவில் பாதித்தது. மதுரை, இராமநாதபுரம் பகுதிகள் பஞ்சத்தில் தவித்தன. காலநிலை மாற்றமும், அன்றைய ஆட்சியாளர்களின் கொள்கையும், கிழக்கிந்திய கம்பெனியின் கொட்டமும் பஞ்சம் ஏற்பட காரணமென்றும் சொல்லப்படுகிறது. 

அக்காலட்டத்தில் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் வேளாண்மையை விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகிறது. பருவகால நதியான வைகையாற்றுக்கு நீர்வரத்தை அதிகரிக்கும் முயற்சிகள் 300 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டன. 1798ல் இராமநாதபுரம் மன்னர் சேதுபதி அவர்கள் கேரளா மாநிலத்தில் பாயும் பெரியாற்றின் குறுக்கே அணைக் கட்டி அந்த நீரை வைகைக்கு திருப்ப எண்ணினார். தன்னுடைய தளபதி முத்து இருளப்பபிள்ளை தலைமையில் ஒரு குழுவை மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பினார். பெரியாறு அணை திட்டத்தை நிறைவேற்ற நிதி வசதியின்றி கைவிட்டனர். (நீதியரசர் கே.டி. தாமஸ் - முல்லைப்பெரியாறு அணை சில வெளிப்பாடுகள் 2013 / பக் 35) 

பெரியாறு வெள்ளத்தை வைகைக்கு திருப்பும் வகையில், அணைக் கட்டும் முயற்சியில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டு பொறியியல் அறிஞர் பென்னி குயிக் வெற்றிக்கண்டார். 1893 ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணை பென்னிகுயிக் அவர்கள் பெரும் முயற்சியில் கட்டிமுடிக்கப்பட்டது.   


புதிதாக கிடைக்க பெற்ற முல்லைப் பெரியாறு வெள்ளம், வைகையாற்று படுகையில் வேளாண்மையை விரிவாக்கம் செய்தது. இவ்வாறு பாண்டியர் மன்னர் காலந்தொட்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலம் கடந்து இன்றைய ஆட்சி வரை, வைகையில் பாய்ந்து வரும் வெள்ளம் முழுவதும் வேளாண்மைக்கே பயன்படுத்தும் வண்ணம் பாசன பரப்புகளும், பாசன ஏரிகளையும், பாசன கால்வாய்களையும் விரிவாக்கம் செய்து பயன்படுத்தினர். 

கடலில் சென்று சேருமளவிற்கு வெள்ளம் வைகையாற்றில் எஞ்சியதில்லை என்கிற பொருளில் தான் கடலில் கலக்காத ஒரே நதி என்கிற பெயரை வைகை வரலாற்றில் பெற்றிருக்க வேண்டும். ஆறும் கடலும் சேரும் கழிமுகப்பகுதியில் அலையாத்திக் காடுகள் காணப்படுகின்றன. ஆனால் வைகையும் கடலும் சேரும் கழிமுக பகுதியில் அலையாத்தி காடுகள் இல்லை. ஆனால் அலையத்திக் காடுகளில் காணப்படும் உமரி (Suaeda maritima) ஆற்று அலரி (Homonoia riparia) ஆற்று குமட்டி (Cittrullus colocynthus) உள்ளிட்ட தாவரங்கள் ஆங்காங்கே காண முடிகிறது. ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக வைகையாறு கடலில் சென்று சேருவது தடுக்கப்பட்டதால், வைகையின் கழிமுகப்பகுதியில் அலையாத்தி காடுகள் உருவாகாமல் போய்விட்டதோ என்கிற ஐயப்பாட்டை முன்வைக்கிறோம்.  

வைகையாற்று ஆய்வில் கண்டறிந்த விடயங்கள்

பல்லுயிரிய நோக்கில் சில கண்டறிதல்கள்

 

பாலூட்டி வகை காட்டுயிர்கள்:

மூலவைகையின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள வைகையாற்றில் ஆற்று நீர்நாய்கள் (Lutrogale perspicillata)  வாழுகின்றன. காவிரியில் காணப்படும் நீர்நாய்கள் வைகையாற்று நீரில் காணப்படுகிறது. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) அழியவாய்ப்புள்ள இனமாக (Vulnerable) ஆற்று நீர்நாய்களை வரையறை செய்துள்ளது. வைகையாற்றின் நீர்நாய்களின் வாழிடங்களை  பாதுகாக்க உரிய முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

 

நீர்நாய்கள், மான்கள், கீரிகள் உள்ளிட்ட 35 வகையான பாலூட்டி வகை காட்டு விலங்குகள் வைகையாற்றை வாழிடமாகவோ, நீராதாரமாகவோ கொண்டு வாழ்வதை ஆவணம் செய்துள்ளோம். சிலைமான் துவங்கி மானாமதுரை வரை அடர்ந்து காணப்படும் நாணற்புற்கள் நிறைந்த வைகையாற்றில் புள்ளிமான்கள் வாழுகின்றன. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) அழிவை சந்திக்கும் செம்பட்டியலில் (Redlist) வகைப்படுத்தப்பட்டுள்ள 18 வகை காட்டுயிர்கள் அதில் அடங்கும். 

 

வைகையும் மரங்களும்: 

வையைக்கரையில் இருந்த மரங்கள், செடி கொடிகள் பற்றி சங்க இலக்கியம் நூல்கள் பாடுகின்றன. வையைக்கரை மருத மரங்கள் நிறைந்து காணப்பட்டன. அதனை திருமருத நீர்ப்பூந்துறை, திருமருத முன்துறை, மருதோங்கு முன்துறை என்று பரிபாடலும், சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது. 

புன்னாகம், சுரபுன்னை, சண்பகம், மனை, மாமரம், வாள்வீரம், வேங்கை, கணவிரி காந்தள், மூங்கில் உள்ளிட்ட தாவரங்கள் வையைக்கரையில் இருந்ததாக ஆசிரியன் நல்லந்துவனார் பரிபாடல் 11ஆம் பாடல் குறிப்பிடுகிறது. திருமருத நீர்ப்பூந்துறை என்றே வையை கரையை அவர் அப்பாடலில் குறிப்பிடுகிறார். 

நாகமரம், அகரும், ஞெமை, ஆரம், தகரம், ஞாழல், தாரம் உள்ளிட்ட தாவரங்கள் வையைக்கரையில் இருந்ததாகவும், மல்லிகை, மௌவல், சண்பகம், அல்லி, கழுநீர், அரவிந்தம், ஆம்பல், குல்லாய், வகுளம், குருக்கத்தி, பாதிரி, நாகம், நறவம், சுரபுன்னை போன்ற தாவரங்களின் பூக்கள் வைகையின் இருக்கரைகளிலும் வந்து மனம் சேர்த்தது என்றும்   நல்வழுதியார் பரிபாடல் 12ஆம் பாடல் குறிப்பிடுகிறது. 

கண்ணகியும் கோவலனும் வைகையின் வடகரையில் இருந்து மரப்புணை வாயிலாக தென்கரையை அடைந்தனர். நறுமணம் மிக்க மலர்கள் தென்கரையில் நிறைந்து இருந்தன என்பதனை ''தேமலர் நாறும் பொழில் தென்கரை'' என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். 

குரவம், வகுளம், கோங்கம், வேங்கை, மரவம், நாகம், திலகம், மருதம், செடல், செருந்தி, செண்பகம் உள்ளிட்ட மரங்களும், முசுண்டை கொடி, விரிமலர் அதிரல், கூதாளம், குடசு, வெதிரம், பகன்றை கொடி, பிடவம், மயிலை, பிணங்கு உள்ளிட்ட தாவரங்களும் வைகையாற்றங்கரையில் அடர்ந்து காணப்பட்டன என சிலப்பதிகாரம் பாடுகிறது. (சிலம்பு - புறஞ்சேரி இறுத்த காதை /மது:13/151-170)

மருதம், அரசு, இரும் கோங்கு, அகில் மரம் திருப்பூவணம் பகுதி வையைக் கரையில் இருந்தது பற்றி ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள கருவூர்த் தேவர் இயற்றிய திருவிசைப்பா பாடல் குறிப்பிடுகிறது. 

இன்றைய வைகையாற்றங்கரையில் மரங்கள் குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆய்வு பயணத்தில் வைகையாற்றங்கரையில் 67 வகையான தாவரங்களை ஆவணம் செய்தோம். அதில் 45 வகை மரங்கள், 6 வகை செடிகள், 3 வகை கொடிகள், 4 வகை புற்கள், 2 வகை நீர்தாவரங்கள், 4 வகை அலையாத்தி காட்டு தாவரங்கள் அடங்கும்.

மரங்கள் சூழ்ந்திருந்த வைகையாற்றங்கரை இன்று வெட்டவெளியாக, குடியிருப்புகளாக, பாசன பரப்புகளாக மாறிவிட்டன. மதுரை மாநகரில் வைகையின் இருக்கரையில் 8 கி.மீ தொலைவிற்குள் ஆற்றங்கரையில் மரங்களே இல்லை. ஆற்று நன்னீரில் மட்டுமே காணப்படும் காஞ்சி மரங்கள் துவரிமான் பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. ஆற்றின் கரைகளில் அடர்ந்து இருந்த பழமையான மருதம், கடம்பம், நாவல், புங்கை உள்ளிட்ட மரங்கள் அகற்றப்பட்டுவிட்டன. 

வெண்மணல் நிறைந்த நன்னீரில் வளரும் நாணல் புற்கள், பேய்க்கரும்பு புற்கள் மதுரை நகரில் காணப்படவில்லை. தேனி முதல் துவரிமான் பகுதி வரையும், திருப்புவனம் துவங்கி மந்தி வலசை வரையும் நாணற்புற்கள் காணப்படுகின்றன. 

மாசுபட்ட நீரில் வளரக்கூடிய சம்பை புல்லும், ஆகாயத்தாமரை செடியும் பரவலாக மதுரை நகரில் காணப்படுகிறது. இத்தாவரங்களின் பரவல் மதுரை நகரில் நீர் மாசுபாடு அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறிகளாக விளங்குகின்றன.

 

பறவைகள்:

வைகையாற்றில் 175 வகை பறவைகளை ஆவணம் செய்தோம். அதில் 125 வகை பறவைகள் வாழிட பறவைகள் ஆகும். ஆற்றையும் ஆற்றின் பரப்பையும் சார்ந்து வாழக்கூடிய பறவையினங்களாகும். மேலும் 50 வகை  வலசை பறவைகளும் வைகையாற்றில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.  ஆவணம் செய்யப்பட்ட 175 வகை பறவைகளில் 12 வகை பறவைகள் அழிவை சந்திக்கும் செம்பட்டியலில் (Red List) வகைப்படுத்தப்பட்ட பறவைகளாக உள்ளன.

நன்னீரில் காணப்படும் வெண்கொக்குகள், செந்நாரைகள் உள்ளிட்ட பறவைகளின் எண்ணிக்கை வைகையில் வெகுவாக குறைந்து விட்டன. கழிவு நீரில் உள்ள தாவரங்களை, புழுக்களை, பட்சிகளை உண்டும் வாழும் இயல்புடைய நாமக்கோழி, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவைகளின் எண்ணிக்கை மதுரை மாநகரில் பாயும் வைகையாற்றில் அதிகரித்து வருகின்றன. இவை ஆற்றின் நீரின் மாசுபாடு அதிகரிப்பதற்கான மற்றுமொரு அறிகுறியாகும்.

 

நன்னீர் மற்றும் உவர்நீர் மீன்கள்:

வைகையாற்றில் 58 வகையான நன்னீர் மீன்கள் ஆவணம் செய்யப்பட்டன. அதில் 11 வகை மீன்கள் அயல் வகை மீன்கள் ஆகும். ஆவணம் செய்யப்பட்ட 58 வகை மீன்களில் 11 வகை மீன்கள் அழிவை சந்திக்கும் உயிரிகளாக செம்பட்டியலில் (IUCN - Redlist) வகைப்படுத்தப்பட்டுள்ளன. 1989 ஆம் ஆண்டு திருமிகு இந்திரா அவர்களால் ஆவணம் செய்யப்பட்ட வைகை மீன்கள் பட்டியலில் உள்ள 19 வகை நன்னீர் மீன்கள் எங்கள் ஆவணத்தில் கண்டறிய முடியவில்லை. அவை அழிந்துவிட்டனவா அல்லது அருகிவிட்டதா என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.

 

பாக் நீரிணைப் பகுதியில் வங்க கடலும் வைகையும் ஒன்று சேரும் வைகையாற்று கழிமுகப் பகுதியில் மீன்கள், இறால்கள், திருக்கை உள்ளிட்ட 86 வகை கழிமுக உவர்நீர் உயிரினங்களை ஆவணம் செய்தோம்.

 

ராம்நாடு மாவட்டம் ஆற்றங்கரை பகுதியில் இயங்கும் இறால்பண்ணைகளின் கழிவுநீர் எந்த வித சுத்திகரிப்பு செய்யப்படாமல் நேரடியாக வைகையாற்றில் விடப்படுகிறது. இதனால் கழிமுக உயிர்ச் சூழல் பாதிக்கப்படுகிறது. கழிமுகத்தில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு அழற்சி, செரிமான கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகுகின்றனர். இராம்நாடு மாவட்ட நிர்வாகம் இறால் பண்ணைகளின் கழிவுநீர் ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஆற்றின் மணல் பரப்பு:

வைகையாற்றின் மொத்தம் நீளம் சுமார் 295 கி.மீ ஆகும். அதில் தேனி மாவட்டம் வாலிப்பாறை கிராமம் துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கிராமம் வரை சுமார் 272 கி.மீ நீளம் வரை வைகையாற்றின் மணல்பரப்பு குறித்து நாங்கள் நேரடியாக ஆய்வு செய்தோம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் வாலிப்பாறை கிராமம் மூல வைகை அழைக்கப்படும் பகுதியில் இருந்து தேனி மாவட்டம் கோபாலபுரம் கிராமம் அருகே வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வரை சுமார் 47 கி.மீ தூரம் ஆற்றில் மணல் காணப்படுகிறது. 

தேனி மாவட்டம் கோபாலபுரம் வைகையாற்று தடுப்பணை பகுதியில் இருந்து  தேனி மாவட்டம் குல்லிச்செட்டிபட்டி பகுதியில் வரை சுமார் 49 கி.மீ  வைகையாற்றில் ஆற்று மணல் காணவில்லை. 

தேனி மாவட்டம் குல்லிச்செட்டி பகுதியில் இருந்து மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள துவரிமான் - பரவை பாலம் வரை சுமார் 34 கிமீ தூரம் ஆற்றில் மணல் காணப்படுகிறது. 

மதுரை மாவட்டம் துவரிமான் - பரவை பாலம் துவங்கி மதுரை மாவட்டம் சக்குடி வைகையாற்று பாலம் வரையுள்ள சுமார் 21 கி.மீ தூரம்  வைகையாற்றில் ஆற்று மணல் காணவில்லை. 

மதுரை மாவட்டம் சக்குடி வைகையாற்று பாலம் துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் மெய்யனேந்தல் - சின்ன அக்கிரமேசி வைகையாற்று பாலம் வரையில் சுமார் 75 கிமீ தூரம் ஆற்றில் மணல் காணப்படுகிறது. 

இராமநாதபுரம் மாவட்டம் மெய்யனேந்தல் - சின்ன அக்கிரமேசி வைகையாற்று பாலம் துவங்கி இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை கிராமம் வரை சுமார் 46 கிமீ தூரம் வைகையாற்றில் ஆற்று மணல் காணவில்லை.

வைகையாற்றில் சுமார் 272 கி.மீ நீளம் கொண்ட பகுதியில் சுமார் 116 கி.மீ தூரத்திற்கு  மணல் பரப்பு இல்லை என்பதை இந்த ஆய்வில் நேரடியாக கண்டறிந்தோம். பரல் கற்களும், சரளை கற்களும், பாறைகளும் மட்டுமே இப்பகுதியில் காண முடிந்தது. சில பத்து ஆண்டுகளுக்கு முன்பே வைகையாற்றில் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரிகள் அமைத்து ஆற்று மணல் எடுக்கப்பட்டுள்ளது. அதில் சட்டவிரோதமாக இயங்கிய குவாரிகளும் அடக்கம். மதுரை மாநகராட்சி பகுதி எங்கும் வைகையாற்றில் வெண்மணல் பரப்பு காண முடியவில்லை. 30 வருடங்களுக்கு முன்பு மணல் குவாரிகள் மூலம் ஆற்று மணல் எடுக்கப்பட்டுவிட்டது.



ஆற்றங்கரை:

வைகை ஆற்றங்கரையில் காணப்பட்ட பழமையான மரங்கள், படித்துறைகள் அகற்றப்பட்டுவிட்டன. மதுரை மாநகரில் வைகையாற்றின் இருக்கரைகளிலும் சாலைகள் விரிவாக்கப்பட்டு ஆற்றின் இயல்பான அகலம் சுருக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் வெள்ள காலங்களில் கரைகளை கடந்து வெள்ளநீர் குடியிருப்புகளுக்கு புகும் நிலை ஏற்படலாம்.

நகரமயமாக்கல் காரணமாக மதுரை நகரில் வைகையாற்றின் இருகரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு சாலை விரிவாக்கம் செய்து வைகையை சுறுக்கிவிட்டனர். மதுரை நகரில் வைகையாற்றின் தென்கரையில் பெத்தானியாபுரம் முதல் புட்டுத்தோப்பு வரை 1.6 கி.மீ நீளம். அண்ணாதோப்பு முதல் விரகனூர் வரை 6.4 கி.மீ நீளம். மொத்தம் 8 கி.மீ நீளம், சுமார் 30 மீட்டர் (100 அடி) அகலத்தில்  வைகையாற்றின் தென்கரையில் சாலைகள் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளன. 

வைகையின் வடகரையில் தீக்கதிர் முதல் அரவிந்த் மருத்துவமனை வரை சுமார் 5 கி.மீ நீளம். அண்ணாநகர் முதல் வண்டியூர் வரை 2.5 கி.மீ நீளம். மொத்தம் 7.5 கி.மீ நீளம், சுமார் 30 மீட்டர் (100 அடி) அகலத்தில் வைகையாற்றின் வடகரையில் சாலைகள் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ளன.  

மதுரை நகரிலிருந்து 25 கி.மீ தொலைவில் மேற்கு திசையில் உள்ள சோழவந்தான் பகுதியில் ஆற்றின் அகலம் 340 மீட்டர். மதுரை நகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் கிழக்குத் திசையில் உள்ள சிலைமான் பகுதியில் ஆற்றின் அகலம் 423 மீட்டர். மதுரை நகரின் நடுவில் உள்ள சிம்மக்கல் திருமலைராயர் படித்துறை அருகே ஓடும் ஆற்றின் அகலம் வெறும் 200 மீட்டர்தான். நகரமயமாக்கல் வைகையாற்றை விழுங்கி வருகிறது என்பதை இதன் வழியாக உணர முடிகிறது. 

மேலும் மதுரை மாநகரின் இருகரைகளும் சிமிண்ட் மூலம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆற்றின் பக்கவாட்டு நீர் ஊடுபரவலை தடுக்கும். 

 

கழிவு கலக்குமிடங்கள்:

தேனி நகராட்சி, மதுரை மாநகராட்சி, இராம்நாடு நகராட்சி தவிர வைகையாற்றங்கரையில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் எங்குமே பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அதன் காரணமாக வைகையாற்றங்கரையில் உள்ள இதர நகர, ஊரக நிர்வாகங்கள் கழிவுநீரை ஆற்றுக்குள் நேரடியாக திறந்து விடும் அவலம் நீடிக்கிறது.  



தேனி மாவட்டம் வாலிப்பாறை முதல் இராம்நாடு மாவட்டம் ஆற்றங்கரை வரை சுமார் 177 இடங்களில் 197 குழாய்கள் மூலம் வைகையாற்றுக்குள் கழிவுநீர் நேரடியாக கலப்பதை ஆவணம் செய்துள்ளோம். தேனியில் 18 இடங்கள், திண்டுக்கல்லில் 2 இடங்கள், மதுரையில் 64 இடங்கள், சிவகங்கையில் 29 இடங்கள், இராமநாதபுரத்தில் 64 இடங்கள் என மொத்தம் 177 இடங்களில் வைகையாற்றில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது.

வைகையாற்றங்கரை நோக்கி வந்து முற்றுப்பெறும் ஒவ்வொரு தெருவில் வாழும் மக்களும் ஆற்றை குப்பை கொட்டும் இடமாகவே பயன்படுத்துகின்றனர். கட்டட கழிவுகள், நகராட்சி, ஊராட்சி குப்பைகள், தொழிற்சாலை கழிவுகள் உள்ளிட்ட பல கழிவுகள் வைகையாற்றில் கொட்டப்படுகின்றன. இவ்வாறு ஆற்றை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீதோ, தனி நபர் மீதோ எந்த ஒழுங்கு நடவடிக்கையும் அரசுகள் எடுப்பதில்லை.  குப்பைகளை முறையாக கையாளும் வசதிகள் ஊர் மற்றும் நகர் பகுதி நிர்வாகங்களுக்கே இன்னும் ஏற்படுத்தி தரப்படவில்லை. ஆற்றில் அல்லது பொதுவில் குப்பை கொட்டுவது ஒரு ஒழுங்கற்ற செயல் என்கிற மனநிலை அல்லது புரிதல் கல்வி வழியாக பொது மக்களுக்கு ஏற்படுத்த அரசுகள் முனைப்பு காட்ட வேண்டும்.

தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள வாலிப்பாறை கிராமத்தில் வீடு வீடாக சென்று குப்பைகளை  தூய்மை பணியாளர்கள் சேகரிக்கிறார்கள். குப்பைகளை மறுசுழற்சி செய்யும் வசதியோ, குப்பைகளை கொட்டும் கிடங்கோ இல்லாததால் வேறுவழியின்றி துப்புரவு பணியாளர்கள் தாங்கள் சேகரித்த குப்பைகளை மூலவைகை ஆற்றங்கரையில் கொட்டி விடுகின்றனர். குப்பைகளை மூல வைகையாற்றிலேயே கொட்டிவிடுகின்றனர். குப்பைகளை மறுசுழற்சி செய்யவோ, குப்பைகளை கையளவோ, நெகிழி உற்பத்தியை குறைக்கவோ தொலைநோக்கில் திட்டவட்டமான நடவடிக்கை நம்மிடம் உருவாகும் வரை வைகையாறு குப்பை கிடங்காக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது.

 

வைகையாற்றின் நீர் தரமதிப்பீடு:

இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நீரின் தரத்தை A,B,C,D,E என்று ஐந்து வகைகளாக தரம் பிரித்துள்ளது. அதில் A வகை நீர் காய்ச்சிவிட்டு, நேரடியாக குடிக்கும் நீராக வகைப்படுத்தப்பட்டுள்ளது. B வகை நீர் குளிக்க பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. C வகை நீர் சுத்திகரிப்பு செய்து குடிக்க பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. D வகை நீர் கால்நடைகளுக்கும், மீன்கள் வளர்ப்பிற்கும் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது. E வகை நீர் வேளாண்மை, தொழிற்சாலை உற்பத்திக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்று குறிப்பிடுகிறது.  

தேனி மாவட்டம் துவங்கி இராம்நாடு மாவட்டம் வரை வைகையாற்றில் 36 இடங்களில் (ஓடும் நீரில்) நீர் மாதிரிகளை சேகரித்தோம். உரியமுறையில் சேகரித்த நீர் மாதிரிகளை பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி பரிசோதனை செய்தோம். நாங்கள் சேகரித்த 36 மாதிரிகளில் ஒன்றுக்கூட A,B,C வகை நீர் தரத்தில் இல்லை. இதில் குடியிருப்பு பகுதிகள் இல்லாத மூலவைகை நீரின் மாதிரியும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சேகரித்த 36 நீர் மாதிரிகளில் 8 நீர்மாதிரிகள் D  வகை தரத்திலும், 23 E வகை தரத்திலும் இருந்தன. அதிர்ச்சியூட்டம் விதமாக 5 நீர்மாதிரிகள் E வகை நீர் தரத்திற்கும் கீழான தரத்தில் இருந்தன. ஒவ்வொரு பருவத்திலும் வைகையாறு நீர் மாதிரிகள் எடுத்து சோதித்து பார்க்க வேண்டும். 

குடிநீர், குளியல் நீர், கால்நடைக்கான குடிநீர், பல்லுயிரிகளுக்கான வாழ்வாதார நீர், சலவை நீர், பாசன நீர், சடங்குகளுக்கான புனித நீர், நன்னீர் உயிரினங்களின் வாழிட பகுதி என மனிதர்களோடும் இதர உயிரிங்களோடும் நேரடியாக பல பயன்பாடுகளை கொண்ட வைகையாற்று நீரின் தரம் மேம்படுத்தப்பட வேண்டும்.  

 

பண்பாட்டு நோக்கில் சில கண்டறிதல்கள்

 

ஆற்றங்கரை பழமையான கோயில்கள்:

ஆற்றங்கரையில் முன்பு என்ன மரங்கள் இருந்து இருக்கும் என்ற தேடலில் கோயில் தல மரங்கள், கோயில் வளாகத்தில் காணப்படும் பழமையான மரங்களை ஆவண செய்தோம். அதன் விளைவாக வைகை மற்றும் அதன் துணையாறுகளின் கரைகளில் (ஒரு கி.மீ எல்லைக்குள்) உள்ள 78 பழமையான கோயில்களை ஆவணம் செய்துள்ளோம். அக்கோயில்களில் தல மரங்கள், பழமையான மரங்கள் என 24 வகை மரங்களை ஆவணம் செய்தோம்.

 வைகை மற்றும் அதன் துணையாறுகளில் (ஒரு கி.மீ எல்லைக்குள்) காணப்படும் ஆற்று மண்டபங்கள், படித்துறைகள் உள்ளிட்ட பழமையான கட்டங்களை ஆவணம் செய்தோம். அந்த வகையில் 30+ படித்துறைகள், 15+ மண்டபங்கள், 3 அணைகள், 2 சத்திரங்கள், 1 தெப்பக்குளம் உள்ளிட்ட பழைய கட்டுமானங்களை ஆவணம் செய்தோம். இதில் படித்துறைகள் பல நகரமயத்தால் காணாமல் போய்விட்டன. ஆற்றின் கரைகளில் பல இடங்களில் படித்துறை வீதிகள் இருக்கின்றன.  ஆனால் படித்துறைகளை காணவில்லை. மதுரை மாவட்டத்தில் திருவேடகம், தேனி மாவட்டத்தில் சின்னமனூர் மற்றும் வீரபாண்டி பகுதியில் மட்டுமே படித்துறைகள் காணப்படுகின்றன. வரலாற்று சிறப்புமிக்க மதுரையில் பழமையான படித்துறைகள் இடிக்கப்பட்டு சிமிண்ட் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளது.


வைகையாற்றின் தென்கரை படித்துறைகளும் மண்டபங்களும்:

வைகை தென்கரை: 

ஆரப்பாளையம் பிள்ளைமார்த் தெரு படித்துறை, ஆரப்பாளையம் வல்லப ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் படித்துறை, சோணையா கோயில் படித்துறை, புட்டுத்தோப்பு படித்துறை, பேச்சியம்மன் கோயில் படித்துறை, அனுமார் கோவில் படித்துறை, திருமலை ராயர் படித்துறை, உமறு புலவர் பள்ளி படித்துறை, சுங்கம் பள்ளிவாசல் படித்துறை, பட்டரைக்காரத் தெரு படித்துறை, ஓபுளா படித்துறை, கள்ளுக்கடை படித்துறை, பட்சி கொண்டான் படித்துறை, வெங்கடபதி ஐயங்கார் படித்துறை, தூமாட்டி ரெங்கசாமி ஐயர் படித்துறை, சுடலை முத்து பிள்ளை படித்துறை, தெப்பக்குளம் படித்துறை


வைகை வடகரை: 

தத்தனேரி படித்துறை, செல்லூர் சின்ன படித்துறை; நந்தவன படித்துறை, மேலத்தோப்பு பாரதியார் படித்துறை, முத்தையா செட்டியார் படித்துறை, (3 படித்துறைகள் இருந்தன), ஆழ்வார்புரம்  கள்ளழகர் படித்துறை, ஓபுளா படித்துறை (வடகரை), ராமராயர் படித்துறை, சாத்தமங்கலம் படித்துறை, தேனூர் மண்டப படித்துறை, ஆஞ்சிநேயர் கோயில் படித்துறை, வண்டியூர் படித்துறை, பள்ளிவாசல் படித்துறை.


மண்டபங்கள்: 

தென்கரை 

பிள்ளைமார் தெரு எட்டுக்கால் மண்டபம், புட்டுத்தோப்பு மண்டபம், பரிபூரண விநாயகர் கோயில் மண்டபம், கிருஷ்ணன் கோயில் மண்டபம் (பேச்சியம்மன் படித்துறை), அனுமார் கோயில் மண்டபம், காசி விசுவநாதர் கோயில் மண்டபம் (திருமலைராயர் படித்துறை), செல்வ பெருமாள் மண்டபம், ஓபுளா படித்துறை மண்டபம்


வடகரை 

சூட்டுக்கோல் ராமலிங்கம் சுவாமிகள் மண்டபம், ராஜமன்னர் நாயுடு மண்டபம், ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் மண்டபம், கந்தசாமி விசாலாட்சி மண்டபம், ஏகாந்த ராமஸ்வாமி தெரஸர் நாயுடு மண்டபம், சாயக்கார துளுவ வெள்ளாளர் மண்டபம், கருங்காலக்குடி சதாசிவம் - ராஜேந்திரன் மண்டபம், வெங்கு நாயக்கர் மண்டபம், ஐயர் மண்டபம் , MAVMM முத்தாலம்மன் கோயில் மண்டபம், கன்னிவாடி டிரஸ்ட் மண்டபம், ராமியா மூன்று பேர்கள் வகையறா மண்டபம், மதுரை குன்னியா வகையறா மண்டபம், கோபால் செட்டியார் ரேணுகா தேவி குடும்பத்தார் மண்டபம், அழகர்சாமி நாயுடு மண்டபம், பாலு வகையறா  மண்டபம், அழகுப்பிள்ளை மண்டபம், பரசு மன்னா மண்டபம், பெரியசாமி நாடார் மண்டபம், சதானந்தா மண்டபம், பாண்டியன் அம்பலம் மண்டபம், ராணி வகையறா மண்டபம், பெரியண்ணன் பூசாரி மண்டபம், நாயுடு உறவின் முறை பொது மண்டபம், நாட்டமைக்காரர் மண்டபம், நச்சரம்மாள் கோயில் மண்டபம், ஐயர் மண்டபம், வெள்ள அப்புச்சி கோனார் மண்டபம், பெரியசாமி பிள்ளை மண்டபம், ரத்தினம் செட்டியார் மண்டபம், ராம்நாடு யாதவர் மண்டபம், அப்பாவு செட்டியார் மண்டபம்.

தேனூர் மண்டபம்: 

மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியில் உள்ள வண்டியூர் பகுதியில் ஆற்றுக்குள் அமைந்துள்ளது தேனூர் மண்டபம். தேனூருக்கும் திருவேங்கடத்திற்கும் இடையே மேலக்கால் புதுப்பாலம் அருகில் வைகையாற்றின் நடுவே அமைந்த பாறைத்திட்டில் முன்பு ஒரு மண்டபம் இருந்துள்ளது. திருமலை நாயக்கர் காலத்திலும் அதற்கு முன்பும் அந்த மண்டபத்திலேயே அழகர் சித்திரை திருவிழாவின் போது எழுந்தருளினார் என தேனூர் குறித்து ஆய்வு செய்து வரும் பி. ஆறுமுகம் என்ற ஆய்வாளர் கூறுகிறார். 


திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் சித்திரை திருவிழா மதுரை நகருக்கு மாற்றப்பட்டது. அதே சமயம் சித்திரை திருவிழாவில் தேனூர் மக்களின் உரிமையை நிலைநாட்டும் விதமாக திருமலை நாயக்கர் மன்னரால் கிபி 1650ஆம் ஆண்டு வண்டியூர் செல்லும் வழியில் வைகையாற்றுக்குள் தேனூர் மண்டபம் கட்டப்பட்டது. தேனூர் மண்டபம், கதிர்கால் மண்டபம் என்ற பெயராலும் இம்மண்டபம் அழைக்கப்பட்டிருக்கிறது. மற்ற திருக்கண் மண்டபங்களில் அழகர் எழுந்தருளுவதற்கு அழகர் கோயிலுக்கு வரி கட்ட வேண்டும். ஆனால் தேனூர் மண்டபத்திற்கு வரிக்கட்டி அழகர் எழுந்தருளுகிறார். 


சித்திரைதிருவிழா அன்று தேனூர் மண்டபத்திற்கு எதிரில் சிறு குளம் போல வெட்டப்பட்டிருப்பதில் ஒரு நாரையும், வாழைக்கன்றுகளும் உள்ளது. கரையோரத்தில் மண்டூக முனிவரது சிலை உள்ளது. ஆண்டவர் மண்டூக புராணம் படிக்கும் நிகழ்வு முடிந்ததும் அழகர் கருடவாகனத்தில் எழுந்தருளி, முனிவருக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது. தேனூர் மண்டபத்தை வலம் வந்து அழகர் கிளம்புகிறார். 


தேனூர் மண்டபம் கடந்த அறுபது ஆண்டுகளாக மிகவும் சிதைவடைந்து இடிந்த நிலையில் இருந்தது. தேனூர் கிராமத்தினரின் பெருமுயற்சியால் இம்மண்டபம் 2017இல் புதுப்பித்து கட்டப்பட்டது. முன்பு இம்மண்டபம் இடிந்த நிலையில் இருந்ததால், மண்டபத்தின் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கொட்டகையில் தங்கிச் சென்ற அழகர் தற்போது மண்டபத்தின் மேலே எழுந்தருளுகிறார். மீனாட்சியம்மன் கோயில் சித்திரத் திருவிழா அழைப்பிதழையும், அழகர் கோயில் சித்திரைத் திருவிழா அழைப்பிதழையும் தேனூர் மண்டபத்தில் வைத்து இருக்கோயில் தரப்பினரும் மாற்றிக் கொள்ளும் நிகழ்வு நடைப்பெறுகிறது. 


வைகை தென்கரை தோப்புகள்: 


  • எஸ்எம்ஆர் தோப்பு 
  • சோணையா கோயில் தோப்பு 
  • புட்டுத் தோப்பு 
  • மேல அண்ணாத்தோப்பு 
  • கீழ அண்ணாத்தோப்பு
  • சுப்பையா பிள்ளைத் தோப்பு 
  • பூந்தோட்டம் 
  • காதுக்கொண்டான் தோப்பு 9.92532556137624, 78.11763407463043
  • கமலா தோப்பு 9.925656106369928, 78.11607680019488
  • வைகைத் தோப்பு 
  • லண்டன் பாய் தோப்பு (இஸ்மாயில்புரம் 12வது வீதி)
  • கிருஷ்ணன் அய்யங்கார் தோப்பு 
  • வெங்கடபதி அய்யங்கார் தோப்பு 



வைகை வடகரை தோப்புகள் 

  • மேலத்தோப்பு 
  • கீழத்தோப்பு 
  • முந்திரி தோப்பு 


மடம் 

  • பழனி நாச்சிமுத்து மடம் 9.931863254867777, 78.11143599932119 
  • துளசி ராமர் ராயர் சத்திரம் 9.92548571776663, 78.12356199255116


இறங்குதுறைகள்: 

வைகையாற்றை கடக்க மதுரை நகருக்குள் பல இடங்களில் இறங்குதுறைகள் இறந்தன. ஆரப்பாளையம் - தத்தனேரி இறங்குதுறை, யானைக்கால் - கோரிப்பாளையம் இறங்குதுறை, வாழக்காப்பேட்டை - ஆழ்வார்புரம் இறங்குதுறை, குருவிக்காரன் சாலை இறங்குதுறை, வண்டியூர் தெப்பக்குளம் இறங்குதுறை என ஐந்துக்கும் மேற்பட்ட இறங்குதுறைகள் இருந்தன. இறங்குதுறைகள் அனைத்தும் இன்றும் ஆற்று பாலமாக மாறிவிட்டது. 

 

திருவிழாக்கள்:

சித்திரை திருவிழா, புட்டு திருவிழா, திருமஞ்சம் நீராட்டு, ஆடிப்பெருக்கு நீராடல், ஜனகை மாரியம்மன் அம்பு போடுதல் திருவிழா, மாரியம்மன் தெப்ப திருவிழா, முளைப்பாரி கொட்டுதல், புரவி எடுத்தல், நீர்மாலை எடுத்தல், திதி கொடுத்தல் உள்ளிட்ட திருவிழாக்கள், சடங்குகள் வைகையாற்று நீரை சார்ந்து இன்றும் நிகழுகின்றன.

 

சித்திரை திருவிழா:

வைகையாற்றில் நிகழும் திருவிழாக்களில் அழகர்மலை கோயில் சுந்தராஜா பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா நிகழ்வு வைகையாற்றின் இதர பகுதியிலும் நிகழுகிறது. அவ்வாறாக வைகை மற்றும் அதன் துணையாறுகளில் நிகழும் சித்திரை திருவிழா 16 இடங்களில் நிகழுவதை ஆவணம் செய்தோம்.

 

காலநிலை மாற்றத்தின் தாக்கம்:

கடந்த ஜூலை மாதம் வயநாடு நிலச்சரிவில் சுமார் 420 பேர் கொல்லப்பட்டனர். அதே போல வைகையாற்றின் உற்பத்தி பகுதியான மேகமலையில் 1992 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிலச்சரிவு ஏற்பட்டு சுமார் 35 பேர் வரை இறந்து போன துயரமான நிகழ்வு நடைபெற்றதாக அரசு குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. வாலிப்பாறையில் உள்ள மக்கள் மேகமலை நிலச்சரிவில் கிருசக்காடு என்கிற மலைக்கிராமமும், அதில் வசித்த 160 மக்களும் இறந்து போனார்கள் என்று தெரிவித்தனர்.

 

1993 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் வைகையாறும் சாத்தையாறும் பெருகி பல்வேறு குடியிருப்புக்குள் நீர் சூழ்ந்த கொண்டன. 1993 ஆம் ஆண்டு இருந்த வைகையாற்றின் அகலத்தில் கால்வாசியை சாலை விரிவாக்கத்திற்கு பறிகொடுத்துவிட்டோம். மீண்டும் பேரிடர் வெள்ளம் ஏற்பட்டால் வைகையாறு தாங்குமா என்று மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சிந்தித்து அதற்க்கான நகரமைப்பை வடிவமைக்க வேண்டும். வைகையாற்றை ஆக்கிரமிப்பு, கழிவு நீர் கலப்பு உள்ளிட்ட சிக்கல்களில் இருந்து தடுத்து , மேம்படுத்த தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரிந்துரைகள்:

  • இந்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வரையறை செய்துள்ள நீரின் தரமதிப்பீட்டின் அடிப்படையில் வைகையாற்றில் ஓடும் ஆற்றின் நீர் முதற்தரமிக்க (A - Grade) நீராக ஓடுவதை உறுதி செய்ய வேண்டும். ஆற்றுநீரின் பல்லுயிரியச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை இலக்காக கொண்டு ஆற்று நீர் கொள்கைகளும் சட்டங்களும் வகுக்கப்பட வேண்டும்.  
  • மலைவாழ் மக்கள், உழவர்கள், கால்நடை மேய்ச்சல்காரர்கள், கழிமுக கடற்கரை மீனவ மக்கள், ஆற்று மீன்பிடி சமூகங்கள், சலவைத் தொழிலாளர்கள், ஆற்றங்கரை உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி  நிர்வாகங்கள், குடியிருப்போர் சங்கங்கள், கல்விக்கூடங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரையும் கொண்டு ஆற்று மேலாண்மை குழுவை (River Management Committee) ஒவ்வொரு ஆற்றங்கரை வார்டுகளிலும் அமைக்க வேண்டும். தமிழ்நாடு நீர்வளத்துறையும், பல்லுயிரிய வகைமை வாரியமும் இதனை முன்னெடுக்க வேண்டும். ஆற்று மேலாண்மை குழுவின் நோக்கம், செயல்திட்டம், பொறுப்புகள் என சட்ட வடிவம் கொடுத்திட வேண்டும். 
  • வைகையாறு மற்றும் அதன் துணையாறுககளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக விளங்குகிற மலைக்காடுகள், அதன் இயற்கையான பசுமை பரப்பு பாதுகாக்கப்பட வேண்டும். துறைசார் அறிஞர்களின் பரிந்துரை பெற்று அயல் தாவரங்கள் அகற்றப்பட்டு, அவ்விடத்தில் இருந்து இயல்தாவரங்கள், புல்வெளிகள் மீட்டுருவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • வைகையாற்றுக்கும் அதன் துணையாறுகளுக்கும் நீராதாரமாக விளங்குகிற மலையோடைகள், நீரூற்றுக்கள், காட்டாறுகள் கணக்கெடுக்கப்பட்டு, ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். 
  • ஆற்றின் அங்கமான மலைக்காடுகள், மலையோடைகள், நீரூற்றுகள், நீர்வழிப்பாதைகள், ஆற்றங்கரை மரங்கள், ஆற்றின் பல்லுயிரியச் சூழல் என ஆறு உற்பத்தியாகும் பகுதி துவங்கி ஆற்று நீர்வழிப்பாதை முற்றுப்பெறும் எல்லை வரை பாதுகாக்கப்பட வேண்டும். ஆற்றில் அயல் தாவரங்கள், அயல் உயிரினங்கள் வளர்ப்பதை தடைச் செய்ய வேண்டும். 
  • ஆறும், அதன் கரைகளும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட வேண்டும். ஆறு மற்றும் அதன் கரைகள் மீது பாரம்பரிய உரிமை கொண்டுள்ள மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும். 
  • திட மற்றும் திரவ கழிவுகள் ஆற்றில் கலப்பதை தடுக்கும் விதமாக ஆற்றங்கரை குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் மேலாண்மை விரிவாக்கம் செய்திட வேண்டும். 
  • பெரிய பெரிய அணைகள் கட்டுவதை தவிர்த்து, தேவைக்கேற்ப தடுப்பணைகள் கட்டலாம். காலாவதியாகும் நிலையை எட்டிய பெரிய அணைகள் முறையாகவும், பாதுகாப்பாகவும் அகற்றப்பட வேண்டும். 
  • வைகையாறு உற்பத்தியாகும் இடங்களில் வாழும் நீர்நாய்கள் குறித்து  கணக்கெடுப்பு நடத்தி நீர்நாய்கள் வனக்காப்பகம் அறிவித்து பாதுகாக்கப்பட வேண்டும். 
  • சங்க இலக்கியங்கள் கூறும் தாவரங்கள், ஆற்றங்கரை கோயிலில் உள்ள தல மரங்கள் ஆய்வு செய்து மீண்டும் ஆற்றங்கரையில் இயல்வகை மரக்கன்றுகளை நடவு செய்து ஆற்றங்கரை மரங்களை மீட்ருவாக்கம் வேண்டும். அயல் தாவர மரங்கள் நடுவதை தடைச் பெரிய வேண்டும். 
  • வைகையாறும் கடலும் சேருமிடத்தில் உள்ள கழிமுகப் பகுதியில் அலையாத்திக் காடுகள் வளர்க்க வேண்டும். அலையாத்திக் காடுகளில் காணப்படும் தாவரங்கள் அக்கழிமுக பகுதியில் இயற்கையாக காணப்படுகின்றன. அதனை அலையாத்திக் காடாக மாற்றும் முனைப்போடு தமிழ்நாடு வனத்துறை செயல்திட்டங்கள் வகுத்து செயலாற்ற வேண்டும். 
  • முல்லைப்பெரியாறு, வைகையாறு,  குண்டாறு, பாம்பாறு - கோட்டக்கரையாறு வழியாக பாசனம் பெரும் சுமார் 2.85 ஏக்கர் பாசன பரப்பை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க வேண்டும். இப்பகுதியில் ஆற்றையும், ஆற்றின் பாசன கால்வாய்களையும், பாசன நிலங்களையும் பாதிக்கும் எவ்வித தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்க கூடாது. 
  • ஆற்றோடும், ஆற்றின் கால்வாய்களோடு கலக்கும் மழைநீர் வடிகால்கள், நீர்நிலைகளின் மறுகால் ஓடைகள், வரத்துக்கால் ஓடைகள் உள்ளிட்ட நீர்வழி பாதைகள், திட & திரவ கழிவுகள் கூடமாக மாறுவதை தடுக்க வேண்டும். நகர திட்ட வாரியம் ஆறுகளையும், அதன் கால்வாய்களையும், பாசன நீர்நிலைகளையும் கழிவுநீர் கலக்காமல் பாதுகாக்கும் வகையில் நகரங்களை, கிராமங்களை வடிவமைக்க வேண்டும்.
  • ஆற்றுப்பகுதி ஆக்கிரமிப்பு, ஆற்றுமணல் கொள்ளை, கழிவுநீர் கலப்பு, ஆற்று மற்றும் நிலத்தடிநீர் கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தடுக்க ஆறுகள் பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். 

மேற்சொன்ன கண்டறிதல்களை அறிக்கையாக மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு. சங்கீதா இ.ஆ.ப அவர்களிடம் இன்று (11.11.2024) ஒப்படைத்து வைகையாற்றின் உயிர்ச்சூழலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக கோரிக்கை வைத்தோம்.

 

வைகையாறு குறுக்கும் நெடுக்குமாக அலைந்து நாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து அறக்கலகம் வலையொளி ஊடகத்திற்கு நாங்கள் அளித்த நேர்காணல் இது: https://youtu.be/MTbsG4pgo98?si=wS8S8sTiY_JCvymH

வைகையாறு ஆய்வு குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு நாங்கள் அளித்த நேர்காணல் https://youtu.be/mWx9FI43UbA?si=o7A4KcmtN2ibftGi 








மனு இரசீது: 21088

மனு எண்: TN/TOURCUL/MDU/P/COLLMGDP/04NOV24/10428032

மனு நாள்: 11.11.2024


நன்றிக்குரியவர்கள்: 

  • திரு. இளமுகில் அவர்கள் - தானம் அறக்கட்டளை 
  • திரு. வைகை ராஜன் அவர்கள் - வைகை நதி மக்கள் இயக்கம் 
  • மருத்துவர் திரு. தி. பத்ரி நாராயணன் அவர்கள் - பறவையியலாளர்
  • திரு. அண்ணாதுரை அவர்கள் - தமிழக நதிகள் பாதுகாப்பு கூட்டமைப்பு (வைகை) 
  • திரு. முகமது அலி ஜின்னா அவர்கள் - ஆற்றங்கரை ஊராட்சிமன்ற தலைவர்
  • திரு. பேரா. ஜெயக்குமார் அவர்கள் - தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் 
  • எழுத்தாளர் திரு. முத்து நாகு அவர்கள்
  • தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்கள்
  • தொல்லியல் அறிஞர் வேதாச்சலம் அவர்கள் 
  • தொல்லியல் அறிஞர் திரு. அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள்
  • பேரா. ப. தேவி அறிவு செல்வம் அவர்கள் - கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்
  • பத்திரிக்கையாளர் திரு. இரா. சிவக்குமார் அவர்கள்
  • திரு. மோகன்ராஜ் அவர்கள் - திஷா- டிசம்பர் 3 இயக்கம் 
  • வழக்கறிஞர் அழகுமணி அவர்கள்
  • ஆசிரியர் திரு. மு. செல்வம் அவர்கள், கடமலைக்குண்டு 
  • எழுத்தாளர் திரு. பாவெல் பாரதி அவர்கள் 
  • திரு. க. அரவிந்த் அவர்கள் - நன்னீர் மீன்கள் ஆய்வாளர்
  • திரு. இரா. பிரபாகரன் அவர்கள் - அவேதா ஒளிப்படக்கூடம்
  • திரு. மருதுபாண்டி அவர்கள் - செயற்பாட்டாளர், எழில்மிகு வைகை 
  • தவமணி, அறக்கலகம் சமூக ஊடகம்
  • அணைத்து அச்சு ஊடக, காட்சி மற்றும் சமூக ஊடக நிறுவனத்தின் ஊழியர்கள் 

 

ஊடக செய்தி:



மாலைமுரசு 11.11.2024


News7 Tamil Video Link: https://youtu.be/mWx9FI43UbA?si=o7A4KcmtN2ibftGi 
News7 Tamil Video Liink: https://youtu.be/3ipkypoBXvk?si=yuEwYlioS3IeN0I9






https://youtu.be/tqAn-3hO5Pw?si=NygEPJCq7_Lvntk9







Dinamalar 2024



வருசநாடு முதல் ராமநாடு வரை வைகையாற்றில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினர் மேற்கொண்ட ஆய்வு குறித்து பல்வேறு நாளிதழ்கள், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டனர்.
  1. மாலைமலர் - 11.11.2024
  2. தினமணி - 12.11.2024
  3. NEWS 7 செய்தி தொலைக்காட்சி - 12.11.2024 (https://youtu.be/mWx9FI43UbA?si=o7A4KcmtN2ibftGi)
  4. தினகரன் - 13.11.2024 (https://m.dinakaran.com/article/News_Detail/1477815)
  5. இந்து தமிழ் - 13.11.2024 (https://www.hindutamil.in/news/environment/1339037-effluent-mixed-directly-into-vaigai-river-submission-of-study-report-to-madurai-collector.html)
  6. தினமலர் - 13.11.2024 (https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/a-trip-to-vaigayaar-no-water-no-sand-no-wood-/3778664)
  7. Times of India - 13.11.2024 (https://timesofindia.indiatimes.com/city/madurai/shocking-pollution-levels-in-vaigai-river-from-five-districts-linked-to-domestic-and-industrial-waste/articleshow/115229446.cms)
  8. Indian Express - 13.11.2024 (https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Nov/13/vaigai-water-contaminated-unfit-for-human-consumption-study)
  9. புதியதலைமுறை செய்தி தொலைகாட்சி - 13.11.2024 (https://youtu.be/tqAn-3hO5Pw?si=NygEPJCq7_Lvntk9)
  10. தினதரணி - 13.11.24
  11. டைம்ஸ் ஆப் தமிழ்நாடு - 13.11.2024 (https://www.timesoftamilnadu.com/?p=76298)
  12. மாலைமுரசு - 14.11.2024
  13. தினமலர் -15.11.2024 (https://www.dinamalar.com/news/premium-news/5-districts-177-places-vaigai-is-devastated-by-sewage-/3780713)
  14. விகடன் இணையதளம் - 16.11.2024 (https://www.vikatan.com/environment/policy/increasing-water-pollution-in-vaigai-river-report?fbclid=IwY2xjawGlrS5leHRuA2FlbQIxMAABHSE2W7lwRJakePoL6VLSarZwCrh7RUGspRb2oPFdbTzXJCuo26TPwsX1Ig_aem_KgT_WUu5yA0iKi5M7WVweg)
  15. https://timesofindia.indiatimes.com/city/madurai/hc-initiates-suo-motu-proceedings-into-vaigai-pollution/articleshow/116300197.cms
  16. அறக்கலகம் சேனல் - https://youtu.be/MTbsG4pgo98?si=W76k0iCkvslQBvyz
  17. புதியதலைமுறை செய்தி தொலைகாட்சி - 12.05.2025 (https://youtu.be/YcGRZ97jIek?si=VOZ7dh_H-wC9nBpv)
  18.  நாட்டுநடப்பு சேனல் - 12.05.2025 (https://www.facebook.com/share/v/17qGANX5uT/)
  19. அஞ்சனா தமிழ் வாய்ஸ் சேனல் பகுதி 1,2&3  (https://youtu.be/Pgu8LQKW81A & https://youtu.be/5T1SNCgpHVY & https://youtu.be/YlpG9F3bdAw)
  20. News 7 Tamil - https://youtu.be/qw048c0nC8g?si=f7Q1A1ak9-_iUnzQ


மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை