சாத்தையாறு - பண்பாட்டுச் சூழல் நடை

 பண்பாட்டுச் சூழல் நடை - சாத்தையாறு


மதுரை இயற்கை பண்பாட்டு பேரவையின் 10வது பண்பாட்டுச் சூழல் நடை மதுரை பாலமேடு பகுதியில் அமைந்துள்ள சாத்தையாறு அணையில் (19.11.2023) நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு 60 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் ஏறக்குறைய 70 பேருக்கு மேல் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.




அதிகாலை மிதமான சாரலோடு நான்கு பக்கமும் பசுமையான மலைகள் சூழ தண்ணீர் நிரம்பி, மதகுகளில் வெளியேறி கொண்டிருக்கும் சாத்தையாறு அணையின் காட்சியை பார்க்க ரம்மியமாக இருந்தது. பறவை ஆர்வலர் திரு. மாரிமுத்து அவர்கள் பங்கேற்ப்பாளர்களுக்கு அங்குள்ள ஒவ்வொரு பறவையை காண்பித்து அதன் தோற்றம், நடவடிக்கைகள் பற்றி எடுத்து கூறினார். அப்படியே நடந்து சாத்தையாறு அணையின் கரைகளுக்கு சென்றுவிட்டோம். அதன் பின் சாத்தையாறு அணையின் கொள்ளளவு, பாசன பரப்பு, பயன்பெறும் கண்மாய்கள், உற்பத்தியாகும் இடம் குறித்து சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் பேசினார். சாத்தையாறு அணை பகுதியில் உள்ள தாவரங்கள் குறித்து தமிழிலக்கிய தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் பார்கவிதை பேசினார். சாத்தையாறு கரையில் அமைந்துள்ள கல்லுமலை கந்தன் கோவில் பற்றியும், கந்து வழிபாடு பற்றியும் பேரா. ப. தேவி அறிவு செல்வம் பேசினார். தேவாங்கு, புள்ளிமான்கள், கேளையாடு, சருகுமான், காட்டுமாடு, நரி உள்ளிட்ட பாலூட்டிகளை இங்கு பதிவு செய்துள்ளோம். இன்றைய நகரமயமாக்கல் மற்றும் நுகர்வு கலாச்சாரத்தால் காட்டுயிர்கள், பறவைகள் சந்திக்கும் இடர்பாடுகளை, அதனால் எதிர்கால தலைமுறைகள் சந்திக்க போகும் சவால்களையும் பற்றி காட்டுயிர் ஆர்வலர் திரு இரவீந்திரன் பேசினார். பின் சாத்தையாறு அணையில் இருந்து இறங்கி கல்லுமலை முருகன் கோயில் வரை நடந்து சென்றோம். அங்கு காலை உணவை எல்லோருக்கும் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு நிகழ்வை நிறைவு செய்தோம். சாத்தையாறு, கல்லுமலை முருகன் கோயில், இன்றைய நடையில் பார்த்து பதிவு செய்த பறவைகளின் பெயர் பட்டியல் உள்ளிட்ட விபரங்களை கீழே விரிவாக கொடுத்துள்ளோம்.

சாத்தையாறு:

வைகை மற்றும் குடகனாற்றின் துணையாறுகளான சாத்தையாறு, மஞ்சமலையாறு, பாம்பாறு, மூலக்குறிச்சி ஓடை, மாவூற்று ஓடை, சிறுமலையாறு, யானைவிழுந்தான் ஓடை, ராமக்கால் ஓடை, சந்தனவர்தினி ஆறு, கன்னிமார் ஓடை, சங்கிலியான் ஓடை உள்ளிட்ட பல்வேறு அறுகளுக்கும் ஓடைகளுக்கு பிறப்பிடமாக சிறுமலை விளங்குகிறது. சிறுமலையின் கிழக்கு சரிவில் பல்வேறு ஓடைகள் ஒன்று சேர்ந்து சாத்தையாறு உற்பத்தியாகிறது. அரசு ஆவணங்களில் சாத்தியாறு என்று மக்கள் வழக்கில் சாத்தையாறு என்றும் இந்த ஆறு அழைக்கப்படுகிறது. சிறுமலையில் உற்பத்தியாகும் ஓடைகள், சாத்தையாறு அணையில் தேக்கப்பட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கு பாசனநீர் கொண்ட செல்லும் வகையில் சாத்தையாறு அணை கட்டப்பட்டுள்ளது. சாத்தையாறு அணையில் இருந்து அலங்கநல்லூர், வலசை, அம்பலத்தடி, பொதும்பு, கோயில்பாப்பாகுடி, கரிசல்குளம், செல்லுர் கண்மாய் நிறைத்து மறுகால் வழியாக எ.வி பாலம் அருகே வைகை ஆற்றில் கலக்கிறது. மற்றொரு சாத்தையாறு கால்வாய் பொதும்பு, குலமங்கலம், வீரபாண்டி, திருப்பாலை, சிறுதூர் பெரிய கண்மாய், கண்ணனேந்தல் கண்மாய், சம்பக்குளம், கொடிக்குளம் ஆகிய சங்கிலி தொடர் கண்மாய்கள் நிரம்பிய பின் கடைசி கண்மாயான வண்டியூர் கண்மாய் நிரம்பி மறுகால் வழியாக இறுதியாக வைகையாற்றில் கலக்கிறது.

பாலமேடு சாத்தையாறு அணை அருகே வைகாசிபட்டி கல்லுமலை கந்தன் கோயிலில் சித்திரை மாத திருவிழா புகழ் பெற்றது. அங்குள்ள கந்தன், ராமலிங்கசுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடக்கிறது. விவசாய பெருங்குடி மக்கள், பக்தர்கள் உப்பு, மிளகு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செய்து, தங்கள் நிலத்தில் விளையும் கொய்யா, மா, புளி உள்ளிட்ட விளைபொருட்களை சாமிக்கு காணிக்கையாக கொடுத்து மழை வேண்டியும் வளம் பெருகவும் வேண்டி வழிபடுகின்றனர்.
- தகவல் தமிழ்தாசன்

கந்து வழிபாடு:
தமிழகத்தில் இறை வழிபாடு இயற்கையை வழிபடத் தொடங்கியதில் இருந்து ஆரம்பமாகிறது. அதில் தொல் பழங்காலத்தில் இருந்த மர வழிபாடே சங்ககாலத்தில் கந்து என்று மரத் தூணை வைத்து வழிபாடு செய்யப்பட்டு இருந்ததை கலி கெழு கடவுள் கந்தன் கைவிட என புறநானூறு காட்டுகிறது.
இன்றும் மரத்தாலான அத்திவரதர் , கோழிக்கொத்தி இன்று ஊரில் அத்தி மரத்தால் ஆன வானமுட்டி பெருமாள், வீரபாண்டி கந்து வழிபாடு போன்றவை மரவழிபாட்டின் தொடர்ச்சியாக இருக்கிறது. இப்பொழுதும் மரத்தினை மஞ்சள் துணி சுற்றி வழிபாடு செய்து கொண்டிருப்பதை பார்க்கலாம். இப் பகுதி குறிஞ்சி நிலமாக இருப்பதால் கந்தன் வழிபாடு இருந்துள்ளது. இப்பொழுதும் இங்கு கல்லுமலை கந்தன் என்ற பெயரில் கோயிலும் அங்கு வழிபாடும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இங்கே இப்பகுதியில் ராமலிங்கம் என்ற விஷக்கடியை சரி செய்யும் நாட்டு மருத்துவர் இப்பகுதியில் இருந்து மருத்துவம் பார்த்ததை அடுத்து ராமலிங்க சுவாமி கோயில் என்று கோயிலும் அவர் நினைவாக இருக்கிறது. கோயிலுக்கு சேவல் ,விவசாய பொருட்கள், உப்பு போன்றவற்றை மக்கள் நேர்த்தி கடனாக செலுத்தி வழிபாடு செய்கின்றனர்.

தகவல் - பேரா.தேவி அறிவு செல்வம்

இன்றைய நிகழ்வில், மதுரை நண்பர்களுக்கு சிறிய மீன்கொத்தி (Common Kingfisher), கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher), பச்சை பஞ்சுருட்டான் (Green Bee-eater), பச்சைக் கொக்கு (Striated heron), இராகொக்கு (Night Heron), நீர்காகம் (Cormorant), சாம்பல் நாரை (Grey Heron)... போன்ற பறவைகள் உட்பட மொத்தம் 41 பறவைகளை பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

இதோ அந்த பறவைகள் பட்டியல்,

Sathaiar Dam
Nov 19, 2023
7:10 AM | 3.17 km
203 minutes | 41 Birds

Bird Count & Bird Name given below

1 Laughing Dove
2 Asian Koel
10 Asian Palm Swift
2 Little Cormorant
1 Black Bittern
1 Black-crowned Night Heron
3 Little Egret
1 Striated Heron
3 Indian Pond-Heron
1 Medium Egret
1 Gray Heron
1 Black Kite
1 Common Kingfisher
1 Pied Kingfisher
5 Asian Green Bee-eater
1 Indian Roller
2 Coppersmith Barbet
1 Black-rumped Flameback
5 Rose-ringed Parakeet
2 Black Drongo
1 Brown Shrike
1 Rufous Treepie
2 Jungle Prinia
25 Barn Swallow
2 White-browed Bulbul
1 Red-vented Bulbul
3 Yellow-billed Babbler
25 Common Myna
1 Pied Bushchat
2 Pale-billed Flowerpecker
2 Purple-rumped Sunbird
1 Purple Sunbird
2 White-browed Wagtail
4 Red rumped swallow
3 Dusky crag martin
1Plain prinia
1 Tailor bird
3 House sparrow
1 Black rumped woodpecker
1 Hawk cuckoo
1 Call, Ashy Drongo
- பறவைகள் பட்டியல் தொகுப்பு திரு. மாரிமுத்து

ஒருங்கிணைப்பு குழு
மதுரை இயற்கை பண்பாட்டு பேரவை
19.11.2023

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை