புல்லூத்து - பண்பாட்டுச் சூழல் நடை

 கிருதுமால் நதி - புல்லூத்து நடை


பண்பாடு மற்றும் சூழலியல் தளங்களை ஆய்வு நோக்கில் ஆவணம் செய்யவும், அது தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் பண்பாட்டுச் சூழல் நடை மாதம் ஒரு ஞாயிறு அன்று நடைபெறுகிறது.




கடந்த 11.06.2023, ஞாயிறு அன்று பண்பாட்டுச் சூழல் நடை கோச்சடை வில்லாயுதமுடைய அய்யனார் - முத்தையா கோவிலில் இருந்து காலை 6.30 மணிக்கு துவங்கியது. அக்கோயில் பற்றிய பேசிய கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் பேரா ப.தேவி அறிவு செல்வம் "எல்லையில் நின்று மதுரையைக் காக்கும் பழமையான காவல்தெய்வமான வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் வீற்றிருக்கும் கோயில் இது. ஆயிரமாண்டு பழமையான இக்கோவிலில் தலமரமாகப் புளியமரம் உள்ளது. இக்கோவிலில் ஆண் மற்றும் பெண் நடுகற்கள் உள்ளன. புராணங்களில் சொல்லப்படும் பிட்டுக்கு மண் சுமந்த கதையில் சிவபெருமான் பிரம்படி வாங்கிய இடம் கோச்சடை ஆற்றங்கரைப் பகுதி என்று கூறுவார். கோ(மன்னன்) அடி கொடுத்த இடம், என்பது பின்னாளில் மருவி கோச்சடை ஆனது என்ற கதையும் கோச்சடைக்கு உண்டு. பிற்காலத்தில் அய்யனாருடன் காவல் தெய்வமாக முத்தையாவும் இணைந்து கொண்டார். கோச்சடை அய்யனார் கோவிலின் தல விருட்சமான புளியமரத்தின் அடியில் தங்களது படை வீரர்களுடன் மருதிருவர் மற்றும் வேலுநாட்சியார் ஒரு இரவு தங்கி இங்குள்ள இறைவனை வணங்கி வெள்ளை ஏகாதிபத்திய படையை எதிர்க்க புறப்பட்டனர் என்கிற வரலாற்றை இக்கோவில் தாங்கி நிற்கிறது. நாகமலையைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் காவல் தெய்வமான அய்யனார் கோயில்கள் இருக்கிறது. கோச்சடைக்கு அடுத்து கீழமாத்தூரில் கி.பி 9 ஆம் நூற்றாண்டில் சோழன் தலை கொண்ட வீரபாண்டிய மன்னன் கட்டிய மணிகண்டேஸ்வரர் கோயில் ஒன்று உள்ளது. இக்கோவிலில் கல்வெட்டுகளும் உள்ளன" என்று கூறினார்.

பின் அங்கிருந்து கிருதுமால் நதி நீர்ப்பிடிப்பு பகுதியான நாகமலைக்குச் சென்றோம். நாகமலை புல்லூத்துப் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தாவரங்களைக் கார்த்திகேயன் எல்லோருக்கும் விளக்கி கொண்டே வந்தார். நாகமலையின் ஊடே சுக்குநாறிப் புற்களை தழுவி ஓடி வருவதால் இந்த ஊற்றுக்குப் புல்லூத்து என்று பெயர் வந்திருக்க வேண்டும் என்றார். புனிவரசு, நீர்கடம்பு, பராய், குருந்தம், நெய் குருந்தும், மரவிழுதி, காட்டு மாமரம், அமலை, சுக்குநாறி புல் உள்ளிட்ட குறிப்பிடத் தகுந்த அரிய வகை தாவரங்களையும் அதன் இலக்கிய தரவுகளையும் பற்றி பங்கேற்பாளர்களுக்குத் தமிழிலக்கியத் தாவரவியல் ஆய்வாளர் கார்த்திகேயன் பார்கவிதை அடையாளம் காண்பித்து உரையாற்றினார். நண்பர் சபரி ராஜா அவர்கள் நாகமலைப் பகுதி மாங்காய்களையும் தமிழகத்தில் தான் ஆவணம் செய்த பல்வகை மாங்காய்களையும் பற்றி பேசினார்.

அதன் பின் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பசுமை முதன்மையாளர் விருது பெற்ற நண்பர் கார்த்திகேயன் பார்கவிதை மற்றும் விஸ்வா அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாகக் கூடியிருந்த கூட்டத்தின் கரவோசைகளோடு நண்பர் சசிக்குமார் விருது பெற்ற இருவருக்கும் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார். வைகை தடம் தேடி நூலாசிரியர் சிவக்குமார் அவர்கள் இருவருக்கும் நூல்களைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்.

அதன் பின் விஸ்வா எழுதிய ''ஐ பாம்பு'' நூல் அறிமுக கூட்டம் நடைபெற்றது. ஐ பாம்பு நூல் எழுதும் தேவை ஏன் எழுந்தது, அதன் நோக்கம் பற்றி காட்டுயிர் ஆய்வாளர் விஸ்வா பேசினர். மேலும் பேசிய விஸ்வா ''நாகமலையில் மோதிர வளையன், அலங்கார பாம்பு, மலைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், வெள்ளிக்கோல் வரையான், பச்சை பாம்பு, சுருட்டை விரியன், கட்டு வரியன், கண்ணாடி விரியன், சாரை பாம்பு, நாக பாம்பு, தண்ணி பாம்பு உள்ளிட்ட பாம்பு வகைகளை நாகமலையில் பதிவு செய்துள்ளோம். இரவாடிகளான பாறை எலி, கொம்பன் ஆந்தை உள்ளிட்ட உயிரினங்களையும் இப்பகுதியில் பதிவு செய்துள்ளோம்'' என்றார். அப்படியே புல்லூத்தில் இருந்து இறங்கி அருகில் உள்ள தபோ வனத்திற்குச் சென்றோம்.

"பல்லுயிர் சூழல் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் அனைவரும் காட்டு பகுதிக்குள் நுழையும்போது தங்கள் ஐம்புலன்களையும் கூர்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கண் கொண்டு பார்ப்பதோடு மட்டுமல்லாமல் நாம் நிற்கும் காட்டுப்பகுதியில் வரும் ஓசையை, வாடையை கவனிக்க வேண்டும். புல்லூத்துப் பகுதி இன்று நெகிழி, மதுகுப்பிகள் மற்றும் பல்வேறு குப்பைகளால் மாசடைந்துள்ளது. காட்டு பகுதியின் சூழல் பாதுக்காக்கப்படும் அதே வேளையில் அந்த பகுதி மக்களின் வாழ்வுரிமை மற்றும் பொழுதுபோக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். வனத்துறையும், ஊர் பஞ்சாயத்தும், அப்பகுதி மக்களும் இணைந்து காட்டுப் பகுதியின் சூழலை மாசுபடுத்தும் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கண் மருத்துவரும் பறவை ஆர்வலருமான பத்ரி நாராயணன் பேசினார். இணையோடு வானில் வட்டமடித்துக் கொண்டிருந்த தேன்பருந்து, ஓணான் கொத்திக் கழுகு உள்ளிட்ட பறவைகளை பத்ரி நாராயணன் அவர்களும், இரவீந்திரன் அவர்களும் பங்கேற்பாளர்களுக்கு இன்று அடையாளம் காட்டினார்.

''புள்ளிமான், கடமான், காட்டு பன்றி, கரடி, மரநாய், புனுகுப்பூனை, காட்டு பூனை, முள்ளம்பன்றி, உடும்பு உள்ளிட்ட காட்டுயிர்கள் நாகமலையில் பதிவு செய்துள்ளோம். ஊர்வன மற்றும் பூச்சியினங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் அதை வேட்டையாடும் பறவையினங்கள் இப்பகுதியில் நிறையவே உள்ளன. தேன் பருந்து, இராசாளி பருந்து, கரும்பருந்து, ஓணான் கொத்தி கழுகு உள்ளிட்ட பெருங்கழுகினங்கள் நாகமலையில் பதிவு செய்துள்ளோம். பரந்து விரிந்து கிடக்கும் நாகமலையின் பல்லுயிர்ச் சூழல் பற்றி ஒரு விரிவான காட்டுயிர்க் கணக்கெடுப்பை வனத்துறை நடத்த முன்வர வேண்டும். மேலும் நாகமலையின் பசுமைப் பரப்பை மாசுபாடுகளில் இருந்து பாதுகாக்காவும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என காட்டுயிர் ஆய்வாளர் இரவீந்திரன் பேசினார்.

நீர் வடியும் தூம்பு (பிரநாளம்) வழியாக புல்லூத்து நீர் வழிந்தோடுகிறது. சிங்க முகம் அமைப்பு கொண்ட புல்லூத்து தூம்பு மன்னர்களால் கட்டப்பட்டு இருக்கலாம். அது 400 ஆண்டுகள் பழமையானது என்றார் பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள். இந்த நடையில் நாகமலை குரங்குகள் மற்றும் நிறைய வண்ணத்துப்பூச்சிகளின் நடவடிக்கைகளை ஆவணம் செய்தோம். புல்லூத்து போல நாகமலையில் பல ஊற்றுகள் உள்ளன. இவை அனைத்தின் சூழலும் பாதுகாக்கப்பட வேண்டும் என காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் வீரேஷ் பேசினார்.

''நாகமலையை வாழ்வாதாரமாக கொண்டு மலைவேடர், குறவர் உள்ளிட்ட பழங்குடி மக்கள் துவரிமான் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இன்றும் வாழ்கின்றனர். நாட்டுப்புற பாடகர் பரவை முனியம்மா அவர்கள் நாகமலைக் குறவர்கள் பற்றி தெம்மாங்குப் பாடல் பாடியுள்ளார். தமிழர்களின் தொன்மையான நாக வழிபாடு இன்றும் இப்பகுதியில் வழக்கில் உள்ளது. இம்மலையில் உள்ள முக்கிய ஊற்று ஒன்றுக்கு நாகதீர்த்தம் என பெயர் சூட்டி உள்ளனர். தங்கள் பிள்ளைகளுக்கு நாகமலை, நாகமணி, நாகராஜ், நாகஜோதி என இப்பகுதி மக்கள் பெயர்சூட்டுகின்றனர்'' என்கிறார் முனைவர் பேரா. ச.தமிழரசன்

புல்லூத்து வரை இன்று நடந்த சென்ற ஒரு அரை கி.மீ தூரத்தில் பயணத்தில் மட்டும் சுமார் 50 வகை வண்ணத்துப்பூச்சிகளை ஆவணம் செய்தோம். நாகமலையை இன்னும் விரிவாக ஆய்வு செய்தால் வண்ணத்துப்பூச்சிகள் பட்டியல் இன்னும் நீளக்கூடும். அழகர்மலை, மஞ்சமலை போல நாகமலையும் வண்ணத்துப்பூச்சிகளின் முக்கியத் தலமாக நாகமலை அமையக்கூடும். வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் தாவரங்கள் இங்கே உயிர்ப்போடு இருப்பது காரணமாக இத்தனை வண்ணத்துப்பூச்சி வகைகளை இங்கே பார்க்க முடிகிறது. இந்தப் பல்லுயிர் சூழல் பாதுகாக்கப்பட வேண்டுமென வண்ணத்துப்பூச்சி ஆர்வலர்கள் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

''15 கி.மீ நீளம் கொண்ட நாகமலையில் புல்லூத்து, காக்கா ஊத்து, பாலூத்து, கல்லூத்து, தாழையூத்து, ஏழூத்து, நாகதீர்த்தம், நாராயண தீர்த்தம், நாகமம்மன் ஊத்து, பெரிய ஊத்து, சின்ன ஊத்து உள்ளிட்ட பல ஊற்றுகள், ஓடைகள் உற்பத்தியாகின்றன. நாகமலையில் உற்பத்தியாகும் ஓடைகள், ஊற்றுகள் மலையடிவாரத்தின் வடகிழக்கு முனையில் உள்ள துவரிமான் கண்மாயில் விழுந்து விராட்டிபத்து, பொன்மேனி, எல்லீஸ்நகர், தெற்குவாசல், கீரைத்துறை, சிந்தாமணி வழியாக மதுரை மாநகரைக் கடக்கிறது. மாடக்குளம் கண்மாய், அவனியாபுரம் கண்மாய், சிந்தாமணி கண்மாய் உபரி நீர் கிருதுமால் நதிக்கு வந்து சேர்கிறது. வைகை ஆற்றின் குறுக்கே விரகனூரில் கட்டப்பட்டுள்ள மதகணையில் இருந்து வெள்ள உபரி நீர் கால்வாய் வழியாக கிருதுமால் நதிக்குத் திருப்பிவிடப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தின் கொந்தகைக் கண்மாய் உபரி நீரும் கிருதுமால் நதிக்கு வந்து சேர்க்கிறது. அங்கிருந்து கிருதுமால் நதி கொந்தகை, அம்பலத்தடி, ஒடத்தூர், காட்டனூர், ஆத்திக்குளம், நல்லுக்குறிச்சி, அபிராமம் வழியாக சென்று பரளையாறு கால்வாய் மற்றும் ரெகுநாத காவேரி கால்வாய்களின் உபரி நீரை பெற்றுக் கொண்டு கமுதி அருகே மலட்டாறு என்னும் குண்டாற்றில் கலக்கிறது. கிருதுமால் நதி பயணிக்கும் 86 கீ.மீ நீள பயணத்தில், 73 சங்கிலித் தொடர் கண்மாய்கள் நீர் பெறுகின்றன.

பெரியார் பேருந்து நிலையமாக மாறிப் போயிருக்கும் வலைவீசி தெப்பத்திற்கும் கூடலழகர் தெப்பத்திற்கும் கிருதுமால் நதிதான் நீர் கொண்டுவந்தது. கூடற்புராணம் கூடலழகர் கிருதுமால் நதியைத் தன் கழுத்தில் மாலையாக அணிந்திருந்தார் என்று போற்றுகிறது. தைபுசத்துக்கு முதல் அறுப்பு திருவிழா. சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மனும் புறபட்டு சிந்தாமணி அருகே கிருதுமால் நதிகரைக்கு வருவார்கள். மீனட்சியம்மனே நெல் அறுவடை செய்கிறாள் என்பதை வெளிப்படுத்தும் சடங்கு இது.

வைகையாற்றில் இருந்து ஒரு நீர்கால் பிரிக்கப்பட்டு 'கிருதுமாலை' என்னும் பெயரோடு கோட்டையின் மேற்கு, தெற்குச் சுவர்களை ஒட்டி ஓடிக்கொண்டு இருந்தது. கோட்டையின் மழைநீர் வடிகாலாக கிருதுமாலை நதியும் வைகை ஆறும் பயன்பட்டிருகின்றன என்கிறார் தொ.ப. (நாள் மலர்கள்: 2000).
நகரின் மையப்பகுதிகளில் சிந்தாமணி, அவனியாபுரம் வாய்க்கால்களின் உபரி நீரும், கிருதுமால் நதியோடு கலந்து செல்லும் வகையில் நீர் வழிகள் இருந்தன. சில இடங்களில் குறுகியும்,பல இடங்களில் நாற்பது அடிக்கு மேல் அகலமாகவும் கிருதுமால் ஆறு இருந்துள்ளது. இன்று இந்த நதி சிமெண்ட் தளம் அமைத்து, கழிவுநீர் பாயும் சாக்கடையாக ஓடிக் கொண்டு இருக்கிறது. மதுரை நகருக்குள் முற்றிலும் அழிந்து போன நிலையில் உள்ளது கிருதுமால். 1975க்கு பிறகு மதுரைக்கு கிழக்கில் வைகையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள விரகனூர் மதகணையின் உபரிநீர், கால்வாய் வழியாக கிருதுமால் நதிக்கு கொண்டு செல்லப்பட்டு, கிருதுமால் நதி பாசனத்திற்கு உபயோகபடுத்தபட்டு வருகிறது. முறையாகக் கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்துவிடாததால் கிருதுமால் நதி பாசன உழவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர். மலை, மலைக்காட்டு தாவரங்கள், ஊற்றுகள், ஓடைகள் இவைகளை மீட்டெடுப்பதே ஆற்றை பாதுகாக்கும் முதல் நடவடிக்கையாக இருக்க முடியும்'' என கிருதுமால் நதி குறித்து வைகை தடம் தேடி நூலாசிரியர் சிவக்குமார் மற்றும் தமிழக ஆறுகளின் ஆய்வாளர் தமிழ்தாசன் பேசினார்கள்.

பின் அங்கிருந்து நாகமலை அடிவாரத்தில் உள்ள திரு. பாலகுரு அவர்களின் பண்ணைத் தோப்பிற்கு சென்று காலை உணவை முடித்துவிட்டு, நிகழ்வை நிறைவு செய்தோம். இந்நிகழ்வில் சுமார் 80க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இந்நடையில் சுமார் 50 வகையான வண்ணத்துப்பூச்சிகளையும் 38 வகையான பறவைகளையும் ஆவணம் செய்தோம். நாம் ஆவணம் செய்த பல்லுயிர்களின் பட்டியலை இத்தோடு இணைத்துள்ளோம். இந்தப் பட்டியல் சுமார் புல்லூத்து பகுதியில் இரண்டு மணி நேர நடையில் கண்டறிந்தவையாகும். ஒரு முறையான ஆவணம் இந்த பட்டியலில் இருப்பதை விட 100 மடங்கு பல்லுயிர்களின் இருப்பை நமக்கு உணர்த்தலாம். இந்த அவணங்களை மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும் வனத்துறைக்கும் சமர்ப்பித்து நாகமலையின் இயற்கைச் சூழல் பாதுகாப்பை தமிழ்நாடு அரசிடம் கோருவோம்.

நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களை விரிவாகப் பார்க்க நண்பர் விஸ்வா அவர்களின் பதிவைக் காண்க. இணைப்பு கீழே உள்ளது.
[https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0sebNHL1KMhFjSdLnfr2w2sruZ6pvfi753ejx76cjkjUD1ZpxELzMEhzPVzRLiabrl&id=1647242393&mibextid=Nif5oz](https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0sebNHL1KMhFjSdLnfr2w2sruZ6pvfi753ejx76cjkjUD1ZpxELzMEhzPVzRLiabrl&id=1647242393&mibextid=Nif5oz)

ஒருங்கிணைப்புக் குழு
மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை
https://www.facebook.com/macunafo

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை