திருநங்கையர் & திருநம்பிகளுக்கான பண்பாட்டுச் சூழல் நடை -யானைமலை
திருநங்கையர் & திருநம்பிகளுக்கான பண்பாட்டுச் சூழல் நடை
=====================================திருநங்கையர் & திருநம்பிகளுக்கான பண்பாட்டுச் சூழல் நடை இன்று (25.02.2024) யானைமலை பகுதியில் நடைபெற்றது. ஏறக்குறைய 30 திருநங்கைகள், 3 திருநம்பிகள், 4 தன்பாலின ஈர்ப்பாளர்கள், 10க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். காலை 6.30 மணிக்கு மதுரை உத்தங்குடியில் உள்ள நாகர் கோயில் என்றழைப்படும் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் நுழைவாயில் முன்பு இருந்த நடுகற்களை பார்வையிட்டோம்.
மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தின் அறங்காவலர் மற்றும் கோயில் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளருமான பேரா. ப. தேவி அறிவு செல்வம் Devi Arivu Selvam அவர்கள் கூறுகையில் ''ஆண் - பெண் உருவமுள்ள இந்த இரண்டு நடுக்கற்களும் 16ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. நடுகல்லில் உள்ள பெண் உடன்கட்டை ஏறிய செய்தியினை காட்டும் விதமாக இந்த நடுகற்கள் உள்ளது. இந்த நடுகற்கள் முதலில் அம்மாபட்டியில் இருந்தது, பின் வீட்டுமனைகள் பெருகிவரும் நிலையில் நாகம் போன்ற முகப்பை உடைய நடுகல் என்பதால் உத்தங்குடியில் உள்ள நாகர் கோயிலுக்கு கொண்டு வந்து இந்த நடுகற்களை வைத்துவிட்டதாக தெரிகிறது'' என்றார்.
பின் உத்தங்குடியில் இருந்து ஒத்தக்கடை கருப்பு கோயில் அடிவாரம் வந்தடைந்தோம். அங்கிருந்து காலை 7 மணிக்கு யானைமலைக்கு மேலே ஏறத் துவங்கி யானைமலையின் முகப்பில் துதிக்கை போன்ற பகுதிக்கு வந்தடைந்தோம். தமிழி கல்வெட்டு அமைந்துள்ள பகுதியில் வந்து அமர்ந்தோம்.
பின் உத்தங்குடியில் இருந்து ஒத்தக்கடை கருப்பு கோயில் அடிவாரம் வந்தடைந்தோம். அங்கிருந்து காலை 7 மணிக்கு யானைமலைக்கு மேலே ஏறத் துவங்கி யானைமலையின் முகப்பில் துதிக்கை போன்ற பகுதிக்கு வந்தடைந்தோம். தமிழி கல்வெட்டு அமைந்துள்ள பகுதியில் வந்து அமர்ந்தோம்.
யானைமலையின் வரலாற்று செய்திகளை பசுமைநடையின் தோழர்கள் திரு. ரகுநாத் Ragunath மற்றும் சித்திரவீதிக்காரன் சித்திரவீதிக்காரன் மதுரை வந்திருந்தவர்களுடன் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் பேசியதாவது 'இங்கே இயற்கையாக அமைந்த குகைத்தளத்தில் சமணத்துறவியர்கள் தங்குவதற்கு செய்து கொடுத்த படுக்கைகளும், தமிழி கல்வெட்டும் காணப்படுகிறது. இக்கல்வெட்டு கி.பி இரண்டாம் ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. ''இவகுன்றத்து உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரட்டகாயிபன்'' என்று எழுதப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு இம்மலையை 'இவகுன்றம்' என அடையாளப்படுத்துகிறது. 'இவம்' என்றால் வடமொழியில் யானையை என்று பொருள். ஏரி ஆரிதன், அத்துவாயி அரட்டகாயிபன் என்ற இரண்டு துறவிகளுக்காக இக்கற்படுகை அமைக்கப்பட்டது. சமணர்களின் எண்பெருங்குன்றகளுள் ஒன்றாக யானைமலை அக்காலத்தில் திகழ்ந்தது. இதே மலையின் இந்த (வடக்கு) சரிவில் சமண சிற்பங்களும், வட்டெழுத்து கல்வெட்டும் காணப்படுகிறது'' என்றனர்.
அதன் பின்னர் திருநங்கையர் ஆவண மையத்தின் இயக்குனர் ப்ரியாபாபு அவர்கள் பேசியதாவது மூவாயிரமாண்டு இயங்கும் மதுரை மாநகரில் திருநங்கைகளின் வரலாற்று பதிவு எங்கே என்று பத்து வருடங்கள் முன்பு துவங்கிய தேடலின் விளைவாக இந்நிகழ்வு இன்று அமைந்திருப்தாக நான் கருதுகிறேன். மீனாட்சியம்மன் கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் இருக்கும் முதல் சிற்பமே அர்ஜுனன் பெண்ணாக காட்சி தரும் 'பிருகன்னளை' சிலை சிற்பம்தான். ஆனால் அதை யாரும் கவனித்து பேசுவதில்லை. தேனி மாவட்டத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்றில் 'பேடு' என்கிற சொல் காணப்படுகிறது. மதுரையில் மூன்று இடங்களில் அரவான் வழிபாடு இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன். தெற்குமாரட் வீதி, தெற்குமாசி வீதி, தேர்முட்டி ஆகிய பகுதிகளில் அரவான் வழிபாட்டை பிற சமூக மக்கள் இன்றும் நிகழ்த்தி வருகிறார்கள். மதுரை மேலூரிலும் அரவான் வழிபாடு நடைபெறும் கோயில் ஒன்று உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மதுரையில் ஐந்து ஆறு தலைமுறைகளாக நாட்டுப்புற கலைஞர்களாக, நடன மங்கைகளாக திருநங்கைகள் இருக்கிறார்கள். மதுரை கிராம திருவிழாக்களில் அவர்கள் நாட்டுப்புற கலைகளை அரங்கேற்றுகிறார்கள். போரில் இறந்த திருநங்கைகளை தங்கள் தெய்வமாக சோழர்கள் வழிபட்ட செய்திகளை வரலாற்றில் நாம் பார்க்கிறோம். மதுரைக்கும் சமணத்திற்கு எப்படி நெடுங்கால உறவு இருக்கிறதோ, அதே போல திருநங்கைகளுக்கும் மதுரைக்குமான வரலாற்று உறவு இங்கே நெடுங்கலாக இருந்து வருகிறது' என்று அவர் பேசினார்.
பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் பேசியதாவது கோயில் சிலை செய்வதற்கு தேர்வு செய்யப்படும் கல் எவ்வாறு ஆண் கல், பெண் கல், அலி கல் என மூன்றாக பகுக்கப்படுகிறது. கோயில் கட்டவதற்கு மலைகளை உடைத்து வெட்டப்படும் பாறைக்கல்லில் மையத்தில் உள்ள கல்லை மூலவர் சிற்பம் செய்வதற்கும் அதற்கு அடுத்து இடையில் உள்ள பாறையை பெண் தெய்வ சிலை செய்வதற்க்கும், கோவிலின் படிக்கட்டு, தூண், பாவு கல் உள்ளிட்டவைகளை செய்ய வெளிப்புற பாறைக்கல்லையும் பயன்படுத்துவர். கோயில் படிக்கட்டு, தூண் உள்ளிட்டவைகளை செய்ய பயன்படும் கல்லை அலி கல் என்று அழைப்பது வழக்கம் என்றார்.
மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தின் உறுப்பினர் தமிழ்தாசன் பேசியதாவது - மதுரை மாவட்டத்தில் உள்ள வரலாற்று மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ஆவணம் செய்யும் நோக்கில் பண்பாட்டு சூழல் நடை தொடர்ந்து மாதந்தோறும் நடைபெறுகிறது. அதில் திருநர்களும் பங்கெடுக்க வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறோம். பல தடைகளை கடந்து திருநங்கையர் சமூகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். அதே போல சூழலியல் ஆய்வாளர், எழுத்தாளர், காட்டுயிர் ஒளிப்பட கலைஞர், வரலாற்று ஆய்வாளர், பண்பாட்டு ஆய்வாளர் என திருநர் சமூகத்தில் இருந்து வர வேண்டும். அதற்கு இந்த மாதிரியான பண்பாட்டுச் சூழல் நடை உதவும் என்றும் நம்புகிறோம். வரலாறு, சூழலியல் போன்ற தளங்களில் ஆர்வம் இருப்பவர்கள் எங்களுடன் இணைந்து பயணிக்க வேண்டுமென அழைக்கிறோம். அதனை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாகவே இந்நிகழ்வை கருதுகிறோம் என்றார்.
மதுரை இயற்கை பண்பாட்டு மையத்தை சேர்ந்த கண் மருத்துவரும் பறவையிலாளருமான ஹீமோக்ளோபின் அவர்கள் - ''இன்றைய நடையில் ஓணான் கொத்தி கழுகு, நாட்டு உழவரன் குருவி, நீளவால் இலைக் கோழி, வல்லூறு, அன்றில் உள்ளிட்ட பறவைகளை பதிவு செய்துள்ளோம் என்றார். ஏற்கனவே யானைமலையில் பொரி வல்லூறு, கொம்பன் ஆந்தை உள்ளிட்ட பறவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாம்பல் நிற தேவாங்கு இப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யானைமலையின் உயிர்ச்சூலை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்'' என்று பேசினார்.
யானைமலையின் மேலே குழுவாகவும் தனியாகவும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினோம். காலை உணவை முடித்துவிட்டு, நரசிங்கம் பகுதியில் உள்ள பாறை முருகன் கோவில், நரசிங்கம் பெருமாள் கோயில், லாடன் குடைவரை கோயில் ஆகியவற்றை பார்வையிட்டோம். லாடன் கோயிலில் அமர்ந்து யானைமலை தமிழ் சங்கத்தின் தலைவர் திரு. இளங்குமரன் அவர்கள் யானைமலை சந்தித்த நெருக்கடிகள், யானைமலையை காக்க மக்கள் செய்த போராட்டங்களை பற்றி எடுத்துரைத்தார். பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் லாடன் கோயில் பற்றியும், அக்கோவிலின் கிழக்கு பகுதியில் உள்ள கல்வெட்டு பற்றியும் எடுத்து கூறினார். ஒத்தக்கடை பகுதியில் யானைமலை கிரீன் பவுண்டேசன் நண்பர்கள் செய்யும் பசுமை பணியை தமிழ்தாசன் குறிப்பிட்டு பாராட்டினார். அனைவர்க்கும் நெல்லிக்காய், காலை உணவு என எல்லா ஏற்பாடுகளையும் நண்பர் மு.ரா. பாரதி அவர்கள் சிறப்பாக கவனித்து கொண்டார். நிகழ்வில் எல்.கே.பி. நகர் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளியின் தலைமை ஆசிரியர் தென்னவன், சமூக ஆர்வலர் திருமதி செல்வி, தோழர் ஆறுமுகம், ஸ்டீபன், மகேந்திரன், சிலம்ப ஆசான் பாண்டியன், யானைமலை கிரீன் பவுண்டேசன் அமைப்பை சேர்ந்த பிரபு, கார்த்திகேயன், பறவையிலாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள்.
செலவு விவரம்:
காலை உணவு 40 பேர் - ₹ 1600 /-
ம.இ. ப. மையம் உறுப்பினர்களால் ரூ. 1600 பகிர்ந்து கொள்ளப்பட்டது. போக்குவரத்து & காலை தேநீர் உள்ளிட்ட செலவுகள் திருநங்கையர் ஆவண மையம் ஏற்றுக் கொண்டது.
ஒருங்கிணைப்பு:
மதுரை இயற்கை பண்பாட்டு மையம் (MNCF) &
திருநங்கையர் & திருநம்பிகள் ஆவண மையம்
8903241263
நிகழ்வின் காணொளிகள்:
மதுரை மண்ணுக்கும் திருநங்கைகளுக்கும் உள்ள உறவு பற்றிய அக்கா ப்ரியாபாபு அவர்கள் உரையின் நேரலை காணொளி: https://www.facebook.com/devipharm/videos/1343859252981235
மதுரை உத்தங்குடி நாகர் கோயில் நுழைவுவாயிலில் உள்ள 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் குறித்து பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் உரையின் நேரலை காணொளி: https://fb.watch/qqP6sT3pLU
யானைமலை தமிழி கல்வெட்டு, சமணர் படுகை குறித்து நண்பர் சித்திரவீதிக்காரன் அவர்கள் உரையின் நேரலை காணொளி: https://fb.watch/qqPaKwHBJF
பண்பாட்டு சூழல் நடை குறித்து அக்கா ப்ரியாபாபு அவர்களின் உரை: https://fb.watch/qqPeg6tu-u
#transgenderawareness
#maduraitransgender
#MaduraiHeritage
Comments
Post a Comment