கோட்டைமலை - பண்பாட்டுச் சூழல் நடை
கோட்டைமலை - பண்பாட்டுச் சூழல் நடை
======================================
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பதினெட்டு சுக்காம்பட்டி ஊராட்சியில் உள்ள கோட்டைமலை குன்றுக்கு இன்று (20.10.24) காலை பண்பாட்டு சூழல் நடையின் 24வது பயணமாக சென்று இருந்தோம்.
குழுப் புகைப்படம் |
கோட்டமலையில் பழமையான கோட்டை மதில்கள் சிதைந்த நிலையில் பல இடங்களில் காணப்படுகிறது. கோட்டை மதில்கள் உள்ளதனால் இம்மலை கோட்டைமலை என்று அழைக்கப்படுகிறது. மலைகளை சுற்றிலும் இது போன்ற கோட்டைச் சுவர்கள் காணப்படுகின்றன. மலையின் 150 அடி உயரத்தில் மலையாண்டி கோயில் அமைந்திருக்கும் உயரத்தில் சுற்றிலும் ஓர் அடுக்கும், மலையாண்டி கோயிலுக்கு மேலே கார்த்திகை தீபம் ஏற்றும் மலையுச்சியில் ஓர் அடுக்கும் என முற்றுப்பெறாத கோட்டை மதில்கள் மலையைச் சுற்றி காணப்படுகின்றன.
கோட்டை மதில்களுடன் கோட்டைமலை |
திருச்சி, திண்டுக்கல், திருமயம், செஞ்சி, சங்ககிரி, நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மலைக்குன்றுகள் மீது கட்டப்பட்ட மலைக்கோட்டைகள் புகழ் பெற்ற வரலாற்று மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. மதுரை கொட்டாம்பட்டி அருகேயுள்ள சுக்காம்பட்டியிலும் ஓர் மலைக்கோட்டை உள்ளது. மற்ற இடங்களில் உள்ளது போன்ற பெருங்கட்டுமான அமைப்பு கொண்டதல்ல எனினும், இம்மலை வரலாற்று மற்றும் பல்லுயிரிய சூழல் அடிப்படையில் முக்கியமான மலையாகும். மதுரைக்கென்று உள்ள ஓர் மலைக்கோட்டையாக கோட்டைமலை விளங்குகிறது.
பாரி மன்னன் ஆட்சி செய்த பறம்பு நாட்டில் பாறைகளும் பாறைக்குன்றுகளும் நிறைந்து இருந்தன என்று சங்க கால இலக்கியமான அகநானூறு பாடல் குறிப்பிடுகிறது. பறம்பு நாட்டின் ஒரு பகுதியாக கோட்டைமலையை கருதலாம். பறம்புமலை என்பது பிரான்மலை என்று இன்று அழைக்கப்படுகிறது. பிரான்மலையில் இருந்து 10 கிமீ தொலைவில் கோட்டைமலை அமைந்துள்ளது.
மலையாண்டி
கோயில்:
கோட்டமலையின் உச்சியில் உள்ள மலையாண்டி கோயில் ஓர் கோயில்காடு ஆகும். உசில், அழிச்சில், ஆலம் உள்ளிட்ட மரங்கள் சூழ அடர்ந்த சிறிய காட்டுப் பகுதியில் மலையாண்டி முருகன் கோயில் அமைந்துள்ளது. கோட்டைமலையில் செருப்பணிந்து ஏறக்கூடாது, மலையில் உள்ள மரங்களை வெட்டக் கூடாது போன்ற கோயில்காடுகளுக்கே உரித்தான கட்டுப்பாடுகளை ஊர் மக்கள் கடைபிடிக்கின்றனர்.
மலையாண்டி கோயில் |
மலையாண்டி கோயிலில் உருவமில்லாது வேலும், அரிவாளும் மட்டுமே தெய்வமாக வழிப்படப்படுகிறது. தமிழர்களின் தொல்வழிபடான வேல் வழிபாடு இக்கோயிலின் சிறப்பாகும். ஆடிமாதம் கோட்டை மலையாண்டி கோயில் திருவிழா நடைபெறுகிறது. திருவிழாவின் போது அலங்கார, அபிஷேகம் நடத்தி பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். திருவிழாவில் இரண்டாயிரம் பேர் வரை பங்குபெறும் அன்னதானம் நிகழ்வு நடைபெறுகிறது.
இப்பகுதியில் உள்ள பனைமலை, குன்னங்குடிமலை, மேன்மலை, மூக்காண்டி மலை உள்ளிட்ட மலைக்குன்றுகளில் எல்லாம் மலையாண்டி கோயில் உள்ளது ஆய்வுக்குரியதாகும். கோட்டைமலையின் கிழக்கு சரிவில் சித்தர் வாழ்த்த குகை ஒன்றுமுள்ளது.
மலையாண்டி கோயில் கடந்து கோட்டைமலை உச்சிக்கு செல்லும் மலையின் சரிவு செங்குத்தாக இருப்பதால், மலையின் மேலே ஏறிச் செல்ல தொங்கும் சங்கிலி ஒன்று பொருத்தி இருக்கிறார்கள். கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு ஊர் மக்கள் இச்சங்கிலியை பிடித்து மலையின் உச்சிக்கு செல்வார்களாம்.
சித்தர் வாழ்ந்த குகை |
மதுரை ஆட்சியாளர்கள் வரி கேட்டு வந்தபோது, சிவகங்கை சமஸ்தானத்திற்கு வரி செலுத்திவிட்டோம் என்றும், சிவகங்கை ஆட்சியாளர்கள் வரி கேட்டு வரும் போது மதுரை ஆட்சியாளர்கள் வரி செலுத்திவிட்டோம் என்றும் கூறி இரு ஆட்சியாளர்களுக்கும் 18 ஆண்டுகள் வரி கட்டாமல் போக்கு காட்டியதால், இந்த ஊருக்கு பதினெட்டு சுக்காம்பட்டி என்று பெயர் வந்தாக ஊர் பெரியவர்கள் தெரிவித்தார்கள்.
பல்லுயிரிகள்:
தேவாங்கு, குரங்கு, உடும்பு, காட்டுப்பூனை, மரநாய், கீரி, அணில் உள்ளிட்ட காட்டுயிர்களின் வாழிடமாகவும் கோட்டைமலை விளங்குகிறது. கோட்டைமலை பகுதியில் புள்ளி புறா (Spotted Dove), பட்டை கழுத்து கள்ளிப்புறா (Eurasian Collared-Dove), செண்டு வாத்து (Knob-billed Duck), புள்ளி மூக்கு வாத்து (Indian Spot-billed Duck), செண்பகம் (Greater Coucal), ஆசியக்குயில் (Asian Koel), மலை உழவரன் (Alpine Swift), நாட்டு உழவரன் (Little Swift), பனை உழவரன் (Asian Palm Swift), நீர்க்கோழி (White-breasted Waterhen), செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing), நீர்காகம் (Indian Cormorant), சின்ன கொக்கு (Little Egret), குளத்து கொக்கு (Indian Pond-Heron), உன்னிக்கொக்கு (Eastern Cattle-Egret), நடுத்தர கொக்கு (Medium Egret), பெரிய கொக்கு (Great Egret), வல்லூறு (Shikra), செம்பருந்து (Brahminy Kite), புள்ளி ஆந்தை (Spotted Owlet), கொண்டலாத்தி (Eurasian Hoopoe), சிறிய மீன் கொத்தி (Common Kingfisher), வெண்மார்பு மீன்கொத்தி (White-throated Kingfisher), கருவெள்ளை மீன் கொத்தி (Pied Kingfisher), பனங்காடை (Indian Roller), செம்மார்பு குக்குறுவான் (Coppersmith Barbet), பொன்முதுகு மரங்கொத்தி (Black-rumped Flameback), செந்தார் பைங்கிளி (Rose-ringed Parakeet), காட்டுக் கீச்சான் (Common Woodshrike), கரிச்சான் (Black Drongo), வேதிவால் குருவி (Indian Paradise-Flycatcher), வால்காக்கை (Rufous Treepie), காகம் (House Crow), காட்டு கதிர்குருவி (Jungle Prinia), சாம்பல் கதிர்குருவி (Ashy Prinia), தகைவிலான் (Barn Swallow), செம்பிட்ட தகைவிலான் (Eastern Red-rumped Swallow), வெண்புருவ சின்னான் (White-browed Bulbul), செங்குத கொண்டைக்குருவி (Red-vented Bulbul), வெண்தலை சிலம்பன் (Yellow-billed Babbler), நாகணவாய் (Common Myna), பழுப்பு நிற ஈப்பிடிப்பான் (Asian Brown Flycatcher), கருஞ்சிட்டு (Indian Robin), நீல பூங்குருவி (Blue Rock-Thrush), வெளிர் அலகு பூங்கொத்தி (Pale-billed Flowerpecker), ஊதா பிட்ட தேனிசிட்டு (Purple-rumped Sunbird) ஊதா தேன்சிட்டு (Purple Sunbird) நீண்ட அலகு தேன்சிட்டு (Loten's Sunbird), வெண்புருவ வாலாட்டி (White-browed Wagtail), அக்கா குயில் (Common Hawk-Cuckoo), பெரும்புள்ளி கழுகு (Greater Spotted Eagle), ராஜாளி பருந்து (Bonelli's Eagle), நீல வாழ் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater), மயில் (Indian peafowl), கவுதாரி (Grey francolin), புதர்காடை (Jungle bush quail) உள்ளிட்ட சுமார் 50 வகை பறவைகள் இன்று ஆவணம் செய்யப்பட்டது. (https://ebird.org/checklist/S199569014)
![]() |
மஞ்சக்கால் பச்சைப்புறா (ஒளிப்படம்: பறவையிலாளர் மரு. தி. பத்ரி நாராயணன் ) |
மதுரை மாவட்டத்தில் முதல் முறையாக மஞ்சக்கால் பச்சைப்புறா (Yellow footed Green Pigeon -Treron phoenicopterus) என்ற பறவை பறவையிலாளர்கள் மரு. தி. பத்ரி நாராயணன், மரு. ஹீமோகுளோபின், ச.ஜோதிமணி, ரெ.வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களால் கோட்டைமலை அடிவாரத்தில் ஆவணம் செய்யப்பட்டது. இது மகாராஷ்ட்ராவின் மாநில பறவையாகும். பெரும்பாலும் அடர்ந்த காட்டுப்பகுதியில் காணப்படும் இப்பறவைகள் கோட்டைமலை அடிவாரத்தில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். தண்ணீர் பாம்பு, சதுரங்க பாம்பு, சாரை, பச்சை ஓணான், பாறை பள்ளி, கல்த்தேரை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஊர்வனங்கள், ஈரிடவாழ்விகள் காட்டுயிர் ஆய்வாளர் திரு.விஷ்வா அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது.
கொள்ளை வெள்ளையன் (Common Emigrant), வெண்புள்ளிக் கருப்பன் (Common Crow), உரோசா அழகி (Common rose), சிவப்புடல் அழகி (சிவப்புடல் அழகி), கறிவேப்பிலை அழகன் (Common Mormon), சிறிய காவிக்கடவி (Little Orange Tip), எலுமிச்சை அழகி (Lime Butterfly), இச்சைமஞ்சள் அழகி (Common Jezebel), முட்டைக்கோசு வெள்ளையன் (Indian Cabbage White), புங்க நீலன் (Common Cerulean), சிறுபுல் நீலன் (Tiny Grass Blue), மங்கிய வெள்ளையன் (Lesser Albatross), கொக்கிக்குறி வெள்ளையன் (Pioneer), பசலை சிறகன் (Danaid Eggfly) உள்ளிட்ட14 வகை வண்ணத்துப்பூச்சிகளும் Coffee Bee Hawk Moth என்ற ஒரு வகை அந்துப்பூச்சியையும் டொக் பெருமாட்டி கல்லூரி மாணவி திருமிகு சந்தியா அவர்கள் ஆவணம் செய்தார். நாடுகள் கடந்து வலசை வரும் தேசாந்திரி (Wandering glider) என்கிற தட்டான் அதிக அளவில் இப்பகுதியில் காண முடிந்தது.
தாவரங்கள்:
ஆலம், அரசம், பராய், கருக்குவாச்சி, வெப்பாலை, காஞ்சரை, உசிலை, வாகை, குருந்தம், மயிலடி, நொச்சி, மஞ்சநத்தி, வேம்பு, வெருவெட்டான், சிறு கிளுவை, மகிழம், பனை, சிற்றீச்சம், திருகு கள்ளி,கரும்பூலா, பேய் மிரட்டி, சேத்துக்கு ராஜா, சிறு காரை, சிறு பீளை, விஷ்ணு கிராந்தி, இம்பூரல், முதியோர் கூந்தல், பல்லி பூண்டு, செம்பூண்டு, வெடிக்காய் செடி, ஓரிதழ் தாமரை (Sophubia delphinifolia), சிட்டி புல் (Heliotropium strigosum), திருக்கள்ளி, சப்பாத்தி கள்ளி, கோவைக் காய், நரந்தம் புல் உள்ளிட்ட தாவரங்கள் ஆய்வாளர் திரு. நே.கார்த்திகேயன் பார்கவிதை அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது.
மலையாண்டி கோயில்காடு |
நீர்நிலைகள்:
கோட்டமலையின் அடிவாரத்தில் உள்ள கருணன்செட்டி ஊருணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் தினசரி குடங்களுடன் வந்து குடிநீர் எடுத்து செல்கின்றனர். மலையின் உச்சியில் இருந்து பார்க்கிற போது இந்த் ஊருணி அரைவட்ட வடிவில் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கிறது. மலையாண்டி கோயில் அருகே ஒரு சுனை உள்ளது.
பெரிய அகத்து கண்மாய் |
பெரிய அகத்து கண்மாயும் கோட்டைமலையும் |
பாவஞ்சுசுனை, சின்ன அகத்து கண்மாய், பெரிய அகத்து கண்மாய், கருணன் செட்டி ஊருணி,
சின்ன அகத்து கண்மாய் |
தமிழ் மக்கள் தங்களின் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒவ்வொரு நீர்நிலைகளை அமைந்து பராமரித்து வந்தனர். குளிப்பதற்கு குளம், ஏர் வைத்து நடைபெறும் வேளாண்மை பாசனத்திற்கு ஏரி, உண்ணும் நீருக்கு ஊருணி, கண்(கலிங்குகள்)வாய் கொண்ட பாசன அமைப்பு கண்மாய். ஊர் என்று ஒன்று இருந்தால் அதற்கென்று தனியான குளம், ஊருணி, ஏரி அல்லது கண்மாய்கள் இருக்கும். ஒவ்வொரு நீர்நிலைக்கு ஒவ்வொரு பயன்பாடு உண்டு. அதனை நாம் சுக்காம்பட்டி கோட்டைமலை அடிவாரத்தில் பார்க்க முடிந்தது.
கருணன்செட்டி ஊருணியில் குடிநீருக்கு தண்ணீர் எடுத்து செல்லும் பெரியவர் |
பெரிய அகத்து கண்மாயில் குளித்துவிட்டு வரும் ஊர் பெரியவர் |
கருணன் செட்டி ஊருணி நீர் குடிப்பதற்கும் சமைப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். பெரிய அகத்து கண்மாய் பாசனத்திற்கு பயன்படுத்துகிறார்கள். சின்ன அகத்து கண்மாய் குளிப்பதற்கும் துணி துவைப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இவ்வாறாக ஒவ்வொரு நீர்நிலையும் அதன் பயன்பாட்டு ஏற்ப மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர். நீர்நிலைகள் எந்த வடிவத்தில் இருந்தன என்பது பற்றியும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
அறையும் பொறையும் மணந்த தலைய,
எண் நாள் திங்கள் அனைய கொடும் கரைத்
தெண்ணீர்ச் சிறுகுளம் கீள்வது மாதோ
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே! (அகம் 118: 1-3)
பாரி மன்னன் ஆட்சி செய்த பறம்பு நாட்டில் பாறைகளும் பாறைக் குன்றுகளும் நிறைந்த இருந்தன. அதில் தெளிந்த நீரை உடைய குளம் ஒன்று இருந்தது. அதனைச் ‘சிறுகுளம்’ என வழங்கிவந்தனர். எட்டுநாள் வளர்ந்த பிறைநிலாவின் அரைவட்ட வடிவில் அக்குளம் காணப்படுவது போல அதன் தோற்றம் இருந்தது. பாரி இறந்த நிகழ்வானது அந்தக் குளம் உடைந்தது போல் ஆயிற்று என்று புலவர் கபிலர் பாடுகிறார். கருணன்செட்டி ஊருணியை கோட்டைமலையில் இருந்து பார்க்கிற போது, கபிலர் பாடும் எட்டாம் நாள் நிலவை போல அரைவட்ட வடிவில் உள்ள சிறுகுளமாகவே கருணன்செட்டி ஊருணி காட்சியளித்தது.
எட்டாம் நாள் பிறையை போல அரைவட்ட வடிவில் இருக்கும் கருணன் செட்டி ஊருணி |
இப்பகுதியில் பெரும்பாலும் நெல்வயல்களே அதிகம் இருக்கின்றன. நெல்லு தவிர அவ்வப்போது கடலை பயிரிடுகிறார்கள். டிராக்டர் போன்ற எந்திரங்கள் வந்த பிறகும், மாடுகளை ஏர்பூட்டி உழவு செய்யும் விவசாயிகளை பார்ப்பதற்கு இனிமையாக இருந்தது.
மாடுகளை ஏர்பூட்டி உழவு செய்யும் ஆண்களும், வயலில் நாற்று நடும் பெண்களும் |
கோட்டைமலைக்கு பிறகு வயலிக்கண்மாய், அழகுநாச்சியம்மன் கோயில்காடு, பெருங்காட்டு கருப்பு கோயில், குன்னங்குடிபட்டி பெருங்கற்கால சின்னங்கள் கொண்ட குரங்குபட்டறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆவணம் செய்தோம். அது தொடர்பான விபரங்களை அடுத்த அடுத்த கட்டுரைகளில் விரிவாக எழுத முயலுகிறோம்.
கோட்டமலையின் அருகில் உள்ள கோணமலையும், பனைமலையும், முல்லாமலையும் ஆவணம் செய்யப்பட வேண்டிய பகுதியாகும்.
வரவு செலவு:
உணவுக்கான செலவு தொகையை திருமிகு சரஸ்வதி பத்ரி நாராயணன் அவர்கள் ஏற்றுக் கொண்டு 50 பேருக்கான கேப்பை கூழும், வடையும் உணவாக ஏற்பாடு செய்து இருந்தார். இந்நிகழ்வுக்கு வேறு யாரிடமும் நன்கொடைகள் பெறவில்லை.
கட்டுரை தொகுப்பு:
தமிழ்தாசன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
20.10.24
நாளிதழ் செய்தி:
நிகழ்வு அழைப்பிதழ்:
SVN கல்லூரி - விலங்கியல்துறை மாணவிகள் |
சிறப்பான பயண கட்டுரை தொகுப்பு
ReplyDelete