கூலானிபட்டி கன்னிமார் கோயில்

கன்னிமார் கோயில் 

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், . வல்லாளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கூலானிபட்டியில் (அட்ச ரேகை தீர்க்க ரேகை 10.046880, 78.262311)  சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கருத்தமலைகிட்டத்தட்ட 100 அடி உயரமுள்ள இம்மலையின் தெற்கு பகுதியான கன்னிமார் பாறை உச்சியில் கன்னிமார் கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலில் 1300 ஆண்டுகள் பழமையான தவ்வை சிலையும், கொற்றவை சிலையும்; 700 ஆண்டுகள் பழமையான வட்ட வடிவ ஆவுடையார், நந்தி, சப்த மாதர்கள் உள்ளிட்ட சிற்பங்கள் 'மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை' குழுவினரால் 22.11.2024 கண்டறியப்பட்டுள்ளது. அரிட்டாபட்டி மலையில் இருந்து ஒரு கி.மீ இடைவெளியில் உள்ள கூலானிப்பட்டி கருத்தமலையில் இந்த பழமையான சிற்பங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 3000 வருடங்கள் தொன்மையான தாய் தெய்வ வழிபாட்டின் தொடர்ச்சியாக கொற்றவை, தவ்வை, சப்த மாதர்கள் ஒரே வளாகத்தில் இருப்பதும், பழமையான செங்கல் கட்டுமான அடித்தளமும் இருப்பதும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். இவ்விடத்தை தொல்லியல்துறை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும் 


கிடாரிபட்டி ஊராட்சி சர்வே எண் 175 (கூலானிபட்டி கிராமம் கருத்தமலை) 



சிதைந்த நிலையில் உள்ள தவ்வை சிலை - கிபி ஏழாம் நூற்றாண்டு


தமிழகத்தில் கிபி ஏழு முதல் கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரை வழிபாட்டில் இருந்த தாய் தெய்வங்களில் ஒன்றான தவ்வை என்னும்  மூதேவிக்கான கோயில் மதுரையில் திருப்பரங்குன்றம் முருகன் குடைவரைக் கோயிலில் தனி குடைவரையில் சன்னதியாக இருக்கிறது. மேலும் மதுரை சுற்று வட்டாரங்களில் ஆனையூர், செல்லப்பநேந்தல் போன்ற இடங்களிலும் சிறப்பான வழிபாட்டில்  உள்ளது. அவ்வாறான கிபி ஒன்பதாம் நூற்றாண்டை சேர்ந்த தவ்வை சிற்பம்  கூலானிபட்டி கன்னிமார் கோயில் வளாகத்தில் தலை இல்லாமல் அமர்ந்த நிலையில் மாந்தன் மாந்தியுடன் இருக்கிறார். 


திருக்குறளில் தவ்வை பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரத்தின் மதுரைக் காண்டத்தில் காடுகாண் காதையில் கொற்றவைக்குக் கோயில் இருந்தது என்று குறிப்பிடப்படுகிறது. ''பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு'' என்று கலித்தொகை. மதுரை மாவட்டம் கூலானிபட்டி கன்னிமார் பாறை கோயிலில் கொற்றவை சிற்பம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.  

கருங்கல்லில் செதுக்கப்பட்ட கூம்பு வடிவில் மூன்றரை அடி உயரம் இரண்டடி நீளம் உள்ள பலகை கல்லில் நின்ற நிலையிலான கொற்றவை சிற்பம் புடைப்புச் சிற்பமாக உள்ளது. சிற்பத்தின் கால் பகுதியானது தனியாக எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இதனை சுற்றி தற்போது சிமெண்ட் போட்டு பூசி உள்ளார்கள். நான்கு கரங்கள் கொண்ட இச்சிற்பத்தின் மேல் இரு கைகளில் சங்கு, சக்கரமும், கீழ் இடது கை தொடையில் வைத்தும், கீழ் வலது கை மற்றும் இதர  பாகங்கள் முழுவதும் சிதைந்து உள்ளதால் ஆடை ஆபரணங்கள், கை அமைதிகளின் விவரங்கள் அறிய முடியவில்லை. 

 கிபி ஒன்பதாம் நூற்றாண்டு வரை வழிபாட்டில் இருந்த தாய் தெய்வங்களான கொற்றவை, சப்த மாதர்கள் மற்றும் தவ்வை சிற்பங்கள் ஒரே இடத்தில் அதுவும் வரலாற்று புகழ்மிக்க அரிட்டாபட்டி மலையின் அருகில் கிடைத்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மேலும் அதே இடத்தில் பிற்கால பாண்டியர்களின் ஆவுடையார் பாகம், நந்தி, ஏழு மாதர்கள் சிலைகள் கிடைத்திருப்பது வழிபாட்டின் தொடர்ச்சியை காட்டுகிறது. முற்கால பாண்டியர் துவங்கி பிற்கால பாண்டியர் ஆட்சி காலம் வரையிலான வழிபாட்டின் நீட்சியை இவ்விடத்தில் காண முடிகிறது. மேலும் இவ்விடத்தில் தொன்மையான கோயில் இருந்ததற்கானசெங்கல் கட்டுமானத்தின் அடித்தளமும் காணப்படுகிறது. 

இக் குன்றில் காலடி நீளம், அகலம், ஆழம் கொண்ட மருந்து குழி என்று சொல்லப்படும் சிறிய பள்ளமும் உள்ளது. பிற்கால பாண்டியர்கள் கால வட்ட வடிவ ஆவுடையார் பாகம் மட்டும் மண்ணில் புதைந்த நிலையில் இருக்கிறது. இங்கே 7 ஆம் நூற்றாண்டில் இருந்து 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள் இருப்பதை அடிப்படையாக கொண்டு  இப்பகுதியில் தொன்மையான கோயில் ஒன்று வழிபாட்டில் சிறப்புடன் இருந்ததை தெரிந்து கொள்ள முடிகிறது.

அ.வல்லாளப்பட்டி பெரிய அய்யனார் - சின்ன அய்யனார் கோயில் திருவிழாவில் மண் குதிரைகள் (புரவி) கூலானிபட்டி கன்னிமார் கோயிலுக்கு எடுத்து வரப்படுகிறது. பாறை அடிவாரத்தில் இருக்கும் நொண்டிச்சாமி கோயில் மற்றும் அய்யனார் கோயில் என மூன்று கோயில்களும் இணைந்து பத்திலிருந்து 20 வருடங்களுக்கு ஒரு முறை ஆடு பலி கொடுத்து திருவிழா நடத்துகிறார்கள். திருவிழாவானது இத் திருவிழாவில் அப்பகுதியில் இருக்கும் 80 இசுலாமிய குடும்பங்களும் கலந்து கொள்கிறார்கள.1300 ஆண்டுகள் பழமையான இக்கோயில் தெய்வங்கள் இன்றும் வழிபாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.  கருத்தமலையில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.  


தென் இந்தியாவை பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான தொல்லியல் எச்சங்களை தமிழ்நாடு கொண்டுள்ளது . மதுரை மாவட்டத்தில் கொற்றவை சிற்பங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. செக்கானூரணி மற்றும் கன்னிமார் பாறையில் கொற்றவை சிற்பங்கள் இருக்கும் பகுதியினை தொல்லியல்துறை  தொல்லியல் சின்னமாக அறிவிக்க வேண்டும்.

ஆய்வில் தேவி அறிவு செல்வம், சிற்பத்துறை ஆய்வாளர், தமிழ்தாசன், சூழலியல் செயல்பாட்டாளர், மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை. 

- பேரா ப. தேவி அறிவு செல்வம் 

சிதைந்த நிலையில் உள்ள கொற்றவை சிலை - கிபி ஏழாம் நூற்றாண்டு 


சிதைந்த நிலையில் உள்ள கொற்றவை சிலை - கிபி ஏழாம் நூற்றாண்டு








வட்டவடிவிலான ஆவுடையார் - 13ஆம் நூற்றாண்டு 

நந்தி சிலை - 13ஆம் நூற்றாண்டு 









https://www.hindutamil.in/news/life-style/1340810-archaeological-department-expects-to-conduct-survey-of-old-temple-in-nadumalai-near-madurai-1.html




மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை

23.11.2024

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை