சோமகிரி மலை & பறம்புக் கண்மாய் - பண்பாட்டுச் சூழல் நடை
சோமகிரி மலையும் பறம்புக் கண்மாயும்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட சோமகிரி மலைக்கு 09.02.2025 அன்று காலை பண்பாட்டு சூழல் நடையின் 28வது பயணமாக சென்று இருந்தோம். இந்நிகழ்வில் ஏறக்குறைய 50 பேர் வரை பங்கெடுத்தனர்.
இந்த நடையில் பெருங்கற்கால சின்னங்கள், பறம்பு கண்மாய் பாறைக் கல்வெட்டுகள், சோமகிரி மலைக் கல்வெட்டு, மலையில் கோட்டைச் சுவர்கள், கற்கோயில்கள், மலையுச்சி தீபத்தூண் கல்வெட்டு ஆகியவற்றை ஆவணம் செய்தோம். கார்த்திகை தீபத்திருவிழா, கருப்பு கோயில் மாசி திருவிழா, பங்குனி மாதம் மஞ்சுவிரட்டு, நவ்வா கந்தூரி விழா என பல்வேறு கிராமத் திருவிழாக்கள் குறித்து கேட்டறிந்து ஆவணம் செய்தோம்.
பல்லுயிரியங்கள் அடிப்படையில் 100க்கும் மேற்பட்ட தாவரங்கள், 80க்கும் மேற்பட்ட பறவைகள், 30க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சிகள், 25க்கும் மேற்பட்ட பாலூட்டி விலங்குகள் என சோமகிரி மலையின் பல்லுயிரிய வளத்தை ஆவணம் செய்தோம்.
சோமகிரி மலை:
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியில் அமைந்துள்ளது சோமகிரி மலை. மலையின் வடக்கு பகுதி பாறை குன்றாகவும், தெற்கு பகுதி மரங்கள், புதர்கள் நிறைந்த பசுமை பரப்பாகவும் விளங்குகிறது. மலையின் உச்சிக்கு செல்லும் பாதை கரடுமுரடாக இருக்கிறது. உச்சி மலையில் ஒரு சிறிய பாறைக்கு அடியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த வெள்ளை பாறை ஓவியங்கள் காணப்படுகிறது. மலையின் உச்சியில் கோட்டை சுவர்களும், கோட்டை கடந்து செல்லும் வழியில் இயற்கையான சுனையும், சுனைக்கு மேலே சன்னதியில் முருகன் கோயில், பள்ளிக்கூடம் என்று அழைக்கப்படும் பகுதியும் உள்ளது. முருகன் கோயிலுக்கு ஏறிச் செல்ல இராஜராஜ சோழன் காலத்தில் மலையப்ப சம்பு என்பவன் பாறையில் படிக்கட்டுகள் வெட்டிக் கொடுத்திருக்கிறார். ஆயிரமாண்டுகள் பழமையான அந்த படிக்கட்டுகள் அருகே அதற்க்கான தமிழ் கல்வெட்டும் காணப்படுகிறது.
மலையின் அடிவாரத்தில் வடமேற்கு பகுதியில் ஆயிரமாண்டுகள் பழமையான பறம்பு கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கிபி 1238) கலிங்கு அமைந்து கொடுத்த செய்தியை கூறும் கல்வெட்டு கண்மாயின் கலிங்கு பாறையில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் அருகே விஜயநகர மன்னர் ஆட்சி செய்த கிபி 1415 ஆம் ஆண்டில் கண்மாயின் பராமரிப்பிற்க்காக கொடுக்கப்பட்ட நிலத்தானம் பற்றிய செய்தியை கூறும் மற்றொரு கல்வெட்டு காணப்படுகிறது. மேலும் மலையின் வடமேற்கு சரிவில் கருப்பு கோயில், சிவன் கோயில் உள்ளது. மலையின் வடகிழக்கு பகுதியில் மலையப்பீர் (கந்தூரி நவ்வா) உள்ளது. தெற்குதிசையில் அழகுநாச்சியம்மன், பட்டத்தரசி அம்மன் கோயில், தம்மம் (தம்மத்து கந்தூரி), செங்கையா கோயில் உள்ளது.
சோமகிரி மலை நிலவியல் விவரம்:
- பரப்பளவு: 210 ஏக்கர்
- சுற்றளவு: 4,044 மீட்டர்
- உயரம்: சுமார் 1000 அடி
- அட்சய & தீர்க்க ரேகை: 10.098976, 78.302565
- புல எண்: 586
மலையாண்டியும் முருகனும்:
முருகன், குமரன், வேலன் என பல பெயர்கள் முருகனுக்கு உண்டு. குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பது தமிழ் வழக்கு. முருகன், ஆண்டிச்சாமி, மலையாண்டி, வெள்ளிமலையாண்டி என்ற பெயர்களில் மேலூரை சுற்றியுள்ள மலைக்குன்றுகளின் உச்சியில் கோயில் இருக்கிறது. கோயில் என்பது வெட்டவெளியாகவோ, மரத்தடியாகவோ இருக்கிறது. சில இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அவ்விடத்தில் வேல் நட்டு வைத்து வழிபடும் வழக்கமுள்ளது. அவ்வாறு உள்ள எல்லா மலைக்குன்றுகளிலும் தீபமேற்றும் விளக்குத் தூணும், கார்த்திகை மாதம் தீபம் ஏற்றும் திருவிழாவும் நடைபெறுகிறது. சுக்காம்பட்டி கோட்டைமலை, நாவினிபட்டி மூக்காண்டிமலை, பால்குடி அருவிமலை, சேக்கிபட்டி பனிமலைக்குட்டு, தேனக்குடிபட்டி மலை, நரசிங்கம்பட்டி முன்னமலை, குறிச்சிபட்டி வெள்ளைமலை, இடையப்பட்டி வெள்ளிமலை, குன்னக்குடிபட்டி மலை, பொட்டப்பட்டி வெள்ளிமலை என மேலூரை சுற்றியுள்ள பல குன்றுகளில் முருகன் மற்றும் ஆண்டிச்சாமி என்ற பெயரில் வேல் வழிபாடும் கார்த்திகை மாதம் தீப ஏற்றும் திருவிழாவும் நிகழ்வதை காணலாம்.
| நாவினிபட்டி மூக்காண்டிமலை |
| பால்குடி அருவிமலை |
சோமகிரி முருகன் கோயில்:
- அட்சய & தீர்க்க ரேகை: 10.103977, 78.302200
- கொள்ளளவு (Capacity): 0.014 MCM
- முழுக் கொள்ளளவு (FTL): 151.48 M
- அதிகபட்ச நீர்க்கொள்ளளவு (MWL): 152.09 M
- கரையின் மட்டம் (TBL): 152.85 M
- ஆழம் (Storage Depth): 2.49 M
- பாசனம் பெரும் பகுதி (Ayacut): 14.91 ஹெக்டேர்
- நீர்ப்பிடிப்பு பகுதி (Catchment in Sq Km): 0.20 சதுர கிமீ (49 ஏக்கர்)
- நீரின் பரவல் (Water Spread Area ): 1.20 ஹெக்டேர்
- கலிங்கு (No of Weir): 1.0
- கலிங்கு நீளம் (Weir Length): 3.04 M
- மடை (No of Sluice): 2.0
- கரையின் நீளம் (Bund Length): 97.5 M
- நீர் வெளியேறும் திறன் (Discharge): 59.0 Cusec
மேமலை கருப்புச்சாமி:
சோமகிரி கருப்பு என்று அழைக்கப்படும் கருப்பசாமியை மேமலை கருப்பு என்றே உள்ளூர் மக்கள் பேச்சு வழக்கில் அழைக்கிறார்கள். மேமலைக்கு சோமகிரி என்று பெயர் மாறிய பிறகு, மேமலை கருப்பு, சோமகிரி கருப்பு என்று மாறியிருக்கலாம். பெரிய கருப்பு, சின்ன கருப்பு, முத்து கருப்பு என மூன்று கருப்பசாமி திருவுருவங்கள் இக்கோயிலில் உள்ளன. அதில் முத்துகருப்புக்கு தான் கிடா, சேவல் உள்ளிட்ட இரத்த பலி கொடுக்கப்படுகிறது. பெரிய கருப்புக்கும், சின்ன கருப்புக்கும் பொங்கல் படையலாக வைக்கப்படுகிறது.
சிவன் கோயில்:
மலையபீர் (கந்தூரி நவ்வா):
சோமகிரி மலையின் கிழக்கு அடிவாரத்தில் கத்திரி நவ்வா என்றழைக்கப்படும் மலையப்பீர் இசுலாமிய வழிபாட்டு தளம் உள்ளது. கட்டுமானங்கள் ஏதுமின்றி மரங்கள் சூழ்ந்த வெட்டவெளி தர்காவாக காட்சியளிக்கிறது. இத்தளத்தில் முன்பு பெரிய நாவல் மரம் இருந்ததுள்ளது, அது வீழ்த்த பின் இன்னொரு நாவல் மரம் வைக்கப்பட்டுள்ளது. நாவல் மரத்தடியில் கந்தூரி கொடுக்கும் வழக்கமுள்ளதால், இவ்விடத்திற்கு பெயர் கந்தூரி நவ்வா என்று பெயர் வந்தது. கொடியேற்றத்துடன் கந்தூரி விழா துவங்குகிறது. சோமகிரி கருப்பு கோயில் மற்றும் மேலவளவு ஊர் திருவிழாவில் அனைத்து சமூக மக்களுடன் சேர்ந்து இந்த தர்கா மற்றும் இசுலாமியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தர்காவில் காணப்படும் நாவல் மரத்தின் அடியில் கிபி 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுல்தானின் காசு ஒன்றும் கிடைத்துள்ளது. இசுலாமியர்கள் குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிக்கும் நிகழ்வு இவ்விடத்தில் நிகழுகிறது.
தம்மம்:
சோமகிரி மலையின் தெற்கு அடிவாரத்தில் இருளாண்டி கண்மாய் கரையில் தம்பத்து (தம்மம்) என்றழைக்கப்படும் இசுலாமிய வழிபாட்டு தளம் அமைந்துள்ளது. ஆலமரத்தில் பச்சை கொடி, பீடத்தின் மீது விளக்கு ஏற்றும் தூண் என இசுலாமிய பெரியவரின் அடக்கத்தலம் (தர்கா) போன்றே காட்சியளிக்கிறது. இசுலாமியர்கள் குழந்தைகளுக்கு முதல் மொட்டை அடிக்கும் நிகழ்வு இவ்விடத்தில் நிகழுகிறது.
https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/worship-of-neolithic-symbols-in-the-upper-reaches-/3829729
| https://www.thehindu.com/news/cities/Madurai/new-chola-inscription-discovered-near-melavalavu/article69409598.ece |
https://ebird.org/checklist/S213153754
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியில் அமைந்துள்ள சோமகிரி மலையும் இந்த மலையின் அடிவாரத்தில் உள்ள பறம்பு கண்மாயும் (புல எண் 586) வரலாற்று அடிப்படையிலும், பல்லுயிரிய வகைமை அடிப்படையிலும் பல்லுயிரிய மரபு தலமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க தகுதி வாய்ந்த பகுதியாகும். அதனை கருத்தில் கொண்டு சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாய் பகுதியை பல்லுயிரிய வகைமை சட்டம் 2002இன் கீழ் (Biological Diversity Act, 2002, Section 37) பல்லுயிரிய மரபு தளமாக அறிவித்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF) சார்பாக 21.04.2025 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவின் விவரம்
பொருள்: சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாய் பகுதியை பல்லுயிரிய மரபு தளமாக அறிவித்து பாதுகாப்பது தொடர்பாக
மனு ரசிது எண்: 34977
மனு நாள்: 21.04.2025
இடம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை
சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாய் பகுதியை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க கோரி மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையால் கொடுக்கப்பட்ட மனுவின் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மனு எண்: 34977
மனு நாள்: 21.04.2025
இடம்: மதுரை ஆட்சியர் அலுவலகம்
மேலவளவு கிராமசபை தீர்மானம்:
மேலவளவு ஊராட்சியில் 01.05.2025 அன்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மேலவளவு சோமகிரி மலை மற்றும் பறம்பு கண்மாய் பகுதியை பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க வேண்டுமெனவும், சோமகிரி மலையில் உள்ள இராஜராஜ சோழன் காலத்து (கிபி 10) கல்வட்டும், பறம்பு கண்மாய் கலிங்கு பகுதியில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும் (கிபி 13), விருப்பாச்சிராயர் காலத்தும் கல்வெட்டும் (கிபி 15) காணப்படுகிறது. அதனை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரை சோமகிரிமலை - பறம்பு கண்மாய், மாலையம்மன் கோயில்காடு, வெள்ளமலை கோயில்காடு ஆகிய மூன்று பகுதிகளை ''பல்லுயிரிய வகைமை சட்டம் 2002இன் கீழ் (BIOLOGICAL DIVERSITY ACT, 2002)'' பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க வேண்டுமென மேலவளவு ஊராட்சியில் கடந்த 10.10.2025 அன்று நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)


.jpg)
.jpg)




.jpg)


Comments
Post a Comment