கிழவிகுளம் மலை பாறை ஓவியங்கள்

ஐந்தாயிரம் வருடங்களுக்கும் மேல் தொன்மை வாய்ந்த கிழவிகுளம் மலை பாறை ஓவியங்கள் குகைத்தளம் - தூய்மை பணி     

    பண்பாட்டு மரபின் பல்வகைமையை வெளிப்படுத்தும் தொல்லியல், வரலாற்று நினைவுச் சின்னங்களை பாதுகாக்கும் நோக்கிலும், அதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் உலக மரபுச் சின்னங்கள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  





    மூவாயிரமாண்டுகளாக இயங்கி வரும் உலகின் தொன்மையான நகரமான மதுரையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்லியல் வரலாற்று சின்னங்கள் இருக்கின்றன. உலகமயம், நகர விரிவாக்கம், பாசன விரிவாக்கம், காரணமாக பல வரலாற்று சின்னங்கள் சிதைந்தும் அழிந்தும் வருகின்றன. மதுரை மாவட்டத்தில் காணப்படும் தமிழிக் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், குடைவரைக் கோயில்கள், நாயக்கர் மகால் உள்ளிட்ட 26 இடங்களை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து, இந்திய மற்றும் தமிழ்நாடு தொல்லியல்துறை பாதுகாத்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட தொல்லியல் தளங்களை மேம்படுத்தும் வகையில் படிக்கட்டுகள், பயணிகள் அமர கல் பலகை, பூங்கா, இருமொழியில் அறிவிப்பு & தகவல் பதாகை, தொல்லியல் சின்னங்களை சுற்றி வேலி, அவ்விடத்தை பாதுகாக்க பாதுகாவலர் நியமனம் என சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொல்லியல்துறையின் பணிகள் பாராட்டுக்குரியவை. வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில் தொல்லியல் சின்னங்கள் பாதுகாப்பில் நாம் செல்ல வேண்டிய தூரம் நீண்டு கிடக்கிறது. வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்கும் முயற்சியானது அறிஞர்களின் துணையோடு உள்ளூர் மக்களின் பங்கேற்பை உள்ளடக்கிய மக்கள் இயக்கமாக உருப்பெற வேண்டும்.  


    பெருங்கற்கால சின்னங்கள், பாறை ஓவியங்கள், தொல்லியல் மேடுகள், கல்வெட்டுகள், கோயில்கள், வழிபாட்டு தளங்கள், கோட்டைகள், மண்டபங்கள், நடுகற்கள்,   ஆற்று படித்துறைகள், கைவினை பொருட்கள் என பல வரலாற்று சிறப்பு மிக்க தொன்மைச் சின்னங்கள் மதுரையில் பராமரிப்பும் பாதுகாப்பும் இன்றி கிடக்கிறது. இவை அனைத்தும் நாம் மீட்டுருவாக்கம் செய்ய முடியாத வரலாற்று பொக்கிசங்கள் ஆகும். அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.  


    கற்பதுக்கை, கற்திட்டை, கல்வட்டம், நெடுங்கல் என பெருங்கற்காலத்தை சேர்ந்த சின்னங்கள் மதுரையில் பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவ்வாறான பெருங்கற்கால சின்னங்கள் காணப்படும் இடங்கள் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக எதுவும் இதுவரை மதுரையில் அறிவிக்கப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் பழங்கால பாறை ஓவியங்கள் காணப்படும் 16 மலைக்குன்றுகளில் 9 மலைக்குன்றுகள் தொல்லியல்துறையின் கீழ் பாதுகாப்படுகிறது. அவ்வாறு இருந்தும் அரசின் சார்பில் இவ்விடங்களில் வைக்கப்பட்டுள்ள அறிவுப்பு & தகவல் பதாகையில் பாறை ஓவியங்கள் குறித்த விவரம் ஒரு இடத்தில் கூட மதுரையில் காணப்படுவதில்லை. அதில் சில பாறை ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளது. இவை போக மீதமுள்ள 5 மலைக்குன்றுகளில் காணப்படும் பாறை ஓவியங்கள் எவ்வித பாதுகாப்புமின்றி சிதையும் நிலையில் உள்ளது. இன்னும் 2 மலைக்குன்றுகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் இருக்கிறது.  

கடந்த 13.04.25 அன்று பூசாரிபட்டி ஊர் இளைஞர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டம்.




    இந்நிலையில் உலக மரபுச் சின்னங்கள் நாளை முன்னிட்டு, பூசாரிபட்டி - நரசிங்கம்பட்டி பொதுமக்கள் சார்பாக இன்று (19.04.2025) காலை கிழவிக்குளம் மலையின் பாறை ஓவியங்கள் குகைத்தளம் தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நரசிங்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட பூசாரிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கிழவிகுளம் மலை. இந்நிகழ்வில் திருநகர் பக்கம், யானைமலை கிரின் பவுண்டேசன் தன்னார்வலர்கள், ஊர்மக்கள் என 60க்கும் மேற்பட்டோர் தன்னார்வமாக பங்கெடுத்தனர். 





















    மதுரையில் கல்குவாரிகள் விழுங்கிய மலைகளில் ஒன்றுதான் கிழவிக்குளம் மலை. மொட்டை பாறையாக எஞ்சி நிற்கும் இம்மலையின் இயற்கையான குகைத்தளத்தில் 5000 முதல் 3000 ஆண்டுகள் தொன்மையான சிகப்பு மற்றும் வெள்ளைநிற பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. அவை முற்றிலும் அழியும் நிலையில் உள்ளது. 

    இந்நிகழ்வுக்கு முன்னதாக கடந்த ஆறு மாத காலமாக இம்மலையில் காணப்படும் பாறை ஓவியங்களின் தொன்மை, சிறப்பு குறித்து அவ்வூர் இளைஞர்களிடம் உரையாடினோம். இருக்கும் பாறை ஓவியங்களை பாதுகாக்கும் முனைப்போடு அவ்வூர் இளைஞர்களோடு இணைந்து செயல்பட்டோம். நரசிங்கம்பட்டியில் 02.10.24 அன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் கிழவிகுளம் பாறை ஓவியங்களை பாதுகாக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் மதுரை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு மனுவாக அதே மாதம் அனுப்பி வைத்தோம்.

    இன்றைய நிகழ்வில் கிழவிக்குளம் மலை பாறை ஓவியங்கள் குறித்து கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை பேரா. தேவி அறிவு செல்வம் அவர்களும் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தலைவர் இரவீந்திரன், விஸ்வா, தமிழ்தாசன் அவர்களும் உரையாற்றினார்கள். 



    கிழவிகுளம் மலை பாறை ஓவியங்களின் சிறப்பை விளக்கும் தகவல் பதாகை ஒன்று ஊர் சார்பாக இன்று குகைத்தளத்தில் முன்பாக வைக்கப்பட்டது. இரும்பினால் செய்யப்பட்ட அந்த தகவல்  பலகையை எல்.கே.டி நகர் அரசு பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு. தென்னவன் அவர்களும், தோப்பூர் அரசு பள்ளியின் தலைமையாசிரியர் திருமிகு. லிங்கேஸ்வரி அவர்களும் திறந்து வைத்தனர். பொறியாளர் அரிசிவசோழபாண்டியன் அறிவிப்பு பலகையை நன்கொடையாக வழங்கினார். Dr. கௌதமன் (AGS Prime Petrol Pump and AGS Cafe) அவர்கள் பங்கேற்பாளர்களுக்கு தேநீர், ரொட்டி, தண்ணீர் ஏற்பாடு செய்திருந்தார். நரசிங்கம்பட்டி காராளன், பூசாரிபட்டி ஜெகன், தினேஷ் ஆகியோர் இந்நிகழ்விற்கு முக்கிய பங்காற்றினார்கள். பூசாரிபட்டி  சோலைராஜா, மச்சக்காளை, வீரா, சூர்யா, பாண்டியராஜன், மயில்சோனை, மேலவளவு கோபால், விளாச்சேரி சதிஷ்குமார், ஒத்தக்கடை லட்சுமி, ஓவியர் நிலா பாண்டியன், சங்கர், ஜெயபாலகணேஷ் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர். கிழவிகுளம் மலை பாறை ஓவியங்களை பாதுகாக்க முன்வந்த பூசாரிபட்டி இளைஞர்களின் பொறுப்புணர்வை பாராட்டி அவர்களுக்கு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக அரிட்டாபட்டி பல்லுயிரிய மரபு தளம் நூலும், வைகையின் பல்லுயிரியச் சூழல் நூலும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 











    


கீழ் காணும் மூன்று காரணிகளால் இத்தலம் முக்கியத்துவம் பெறுகிறது:  
  • வேட்டை மற்றும் கால்நடை சமூகத்தின் வாழ்வியலை வெளிப்படுத்தும் சிகப்பு மற்றும் வெள்ளை நிற பாறை ஓவியங்கள் ஒரே இடத்தில் காணப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும். 
  • இது மதுரை நகரத்திற்கு மிக அருகில் உள்ள பாறை ஓவியங்கள் குகைத்தளமாகும்.
  • இந்த குகைத்தளம் தரைமட்டத்திலேயே அமைந்து இருப்பதால் இதனை பள்ளி மாணவர்கள், முதியவர்கள், பொதுமக்கள் எளிதில் பார்வையிட முடியும் 
அழிவின் நிலையில் உள்ள கிழவிகுளம் மலை பாறை ஓவியங்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 
  





மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தமிழக சூழலில் நிகழும் பாறை ஓவியங்கள் குறித்த உரையாடலுக்கு இந்நிகழ்வு வலு சேர்க்கும் என்று நம்புகிறோம். 




பாறை ஓவியங்கள்:

       தொல் மனித சமூகம் செய்திகளை பரிமாறிக் கொள்வதற்காக உருவாக்கிய முதல் கலை வடிவம்தான் பாறை ஓவியம். எழுத்துக்கள் உருவாகுவதற்கு முன்பே உருவான காட்சி மொழி தான் பாறை ஓவியங்கள். பழங்கால மக்கள் தங்களின் வாழ்வியல் நிகழ்வுகள், சிந்தனை, கற்பனை, நம்பிக்கை, ஆய்வுக் குறிப்புகள் ஆகியவற்றை குகையின் பாறைகளில் ஓவியங்களாக வரைந்து வைத்துள்ளனர். அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்து கொள்ளும் வரலாற்று ஆதாரமாக பாறை ஓவியங்கள் விளங்குகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம் துவங்கி அண்மை காலம் வரையிலான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளனஉலகின் பல்வேறு பகுதிகளில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் பொதுவாக சிகப்பு, வெள்ளை, கருப்பு, மஞ்சள் உள்ளிட்ட நிறங்களில் பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. வட இந்தியாவில் பச்சை நிறத்திலும் கூட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

     பாறை ஓவியங்களின் காலம் சுமார் 40,000 ஆண்டுகள் துவங்கி அண்மைக்காலம் மிக நீண்டதொரு காலக்கட்டத்தை கொண்டதாகும். பாறை ஓவியங்கள் வரையப்பட்ட காலத்தை சரியாக கணிக்க கார்பன் டேட்டிங் உள்ளிட்ட அறிவியல் முறையே சிறந்ததுதற்போது கால கணிப்பு செய்யும் முறையானது, ஓவியத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்சியை, இது போல மற்ற இடங்களில் கண்டறியப்பட்ட ஓவியங்களுடன் ஒப்பிட்டும், அங்கே கிடைக்கும் தொல்லியல் சான்றுகளைக் கருத்தில் கொண்டும் தோராயமாக ஒரு காலகட்டத்தைக் குறிப்பிடும் ஒப்பீட்டு முறையே தமிழ்நாட்டில் வழக்கில் உள்ளது.

கிழவிகுளம் பாறை ஓவியம்

மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நரசிங்கம்பட்டி ஊராட்சி, பூசாரிபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது கிழவிக்குளம் மலை. கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு குவாரி பணிக்காக இந்த மலை உடைக்கப்பட்டது. அதன் பின் எஞ்சியிருக்கும் மலையை 'பாறை பள்ளம்' என்றே மக்கள் அழைத்து வருகின்றனர். 

    கிழவிக்குளம் மலையில் காணப்படும் இயற்கையான குகைத்தளத்தில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான  சிகப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் புதிய கற்கால இறுதிப் பகுதி அல்லது பெருங்கற்காலத் துவக்கத்திலும் வரைந்திருக்கக்கூடும். இங்குள்ள ஓவியங்களில் நான்கு ஓவியங்கள் மட்டுமே தெளிவான நிலையில் காணப்படுகிறது. வேட்டை மற்றும் கால்நடை சமூகத்தின் வாழ்வியலை வெளிப்படுத்தும் வகையில் மனித உருவம், யானை, மாடு போன்ற உருவங்கள் இங்கே வரையப்பட்டுள்ளன.   

    சிகப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ள மனித உருவங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நடனம் போன்ற அசைவுகளை ஒத்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. மற்றொரு ஓவியத்தில் இரண்டு விலங்குகள் போன்ற உருவமும் அதன் முன்னும் பின்னும் மனித உருவம் காட்டப்பட்டுள்ளது.  

    வெள்ளைநிறத்தில் உள்ள ஓவியங்களில் ஒன்று மனிதர்கள் யானை வேட்டையைக் காட்டுவது போல அமைந்துள்ளது. மற்றொன்று காட்டு மாட்டினை மனிதன் ஒருவன் வளர்ப்பு மாடாக மாற்றும் சூழலை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.  

கிழவிக்குளம் மலை பாறை ஓவியங்களை வரலாற்று ஆய்வாளர்கள் மாங்குளம் பாண்டித்துரை, திருச்சி பாலா பாரதி, வெ. பாலமுரளி ஆகியோர் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கண்டறிந்து வெளிப்படுத்தினர். பாறை ஓவியங்கள் ஆய்வாளர் காந்திராஜன் அவர்கள் கிழவிகுளம் மலை பாறை ஓவியங்கள் மாதிரிகளை வரைந்து அதன் சிறப்புகளை அறிய உதவினார்.














மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நரசிங்கம்பட்டி ஊராட்சி, பூசாரிபட்டி கிராமம் கிழவிக்குளம் மலையின் (பாறைப்பள்ளம்) இயற்கையான குகைத்தளத்தில் அழியும் நிலையில் உள்ள 5000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்களை தொல்லியல் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF) சார்பாக 21.04.2025 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. அதே மனுவினை தொல்லியல்துறையின் ஆணையர் திரு உதயச்சத்திரன் இ.ஆ.ப அவர்களுக்கு பதிவு அஞ்சல் வழியாக அன்றைய தினமே அனுப்பட்டது. 

மனுவின் விவரம்

பொருள்: பூசாரிபட்டி கிழவிக்குளம் மலை பாறை ஓவியங்கள் பாதுகாப்பது தொடர்பாக 
மனு ரசிது எண்: 32049 
மனு நாள்: 21.04.2025 
இடம்: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மதுரை





ஒளிப்படங்கள்: 
திரு. சேவியர், அருண் பிரபு, விஸ்வா, நிலா பாண்டியன், தமிழ்தாசன்


நிகழ்வு ஒருங்கிணைப்பு

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)


  • https://timesofindia.indiatimes.com/city/madurai/villagers-ngos-join-hands-to-protect-rock-art-site-in-poosaripatti/articleshow/120440392.cms
  • https://www.timesoftamilnadu.com/?p=93593
  • https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/rock-painting-cleaning-work/3903776

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வைகையாறு உயிர்ச்சூழல் - பண்பாட்டுச் சூழலியல் நோக்கில் ஆய்வு

வறல் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை