சாமநத்தம் நீர்நிலை பறவைகள் கருத்தரங்கம்
-----------------------------------------
சாமநத்தம் பல்லுயிரிய மேலாண்மை குழுவும், மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையும் இணைந்து மதுரை சாமநத்தம் கண்மாயில் காணப்படும் பறவைகள் குறித்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு கருத்தரங்கம் சாமநத்தம் நூலக அரங்கத்தில் இன்று (21.06.2025) நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக குண்டாறு உபவடிநில கோட்டம் உதவி செயற்பொறியாளர் திரு. வீ. சௌந்திர பாண்டியன், மதுரை வனச்சரக வனவர் திரு. ஞா. ரமேஷ் பாபு, பாஸ்கர் பாண்டியன், சாமநத்தம் ஊராட்சி செயலர் பா. கண்ணன், மதுரை மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர்கள் மரு. தி.பத்ரி நாராயண், நே. கார்த்திகேயன், இறகுகள் இரவீந்திரன், ஊர்வனம் அமைப்பின் தலைவர் பு.இரா. விஸ்வநாத் கலந்து கொண்டனர். மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தமிழ்தாசன், சாமநத்தம் ஊராட்சி பல்லுயிரிய மேலாண்மை குழு உறுப்பினர்கள் முருகானந்தம், சித்ரு, செல்வம், பாலசுப்பிரமணியன் ஆகியோரும், 20க்கும் மேற்பட்ட சாமநத்தம் பொதுமக்களும், டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் விவேகானந்தர் கல்லூரி மாணவர்களும் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.


சாமநத்தம் கண்மாயை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டுமெனவும், வைகையில் இருந்து ஆண்டுதோறும் சாமநத்தம் கண்மாய் நேரடி பாசனம் பெறும் வகையிலும் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிகழ்வில் சிறப்புரை நிகழ்த்திய பறவையியலாளர் திரு. இரவீந்திரன் அவர்கள் கூறியதாவது:
''சாமநத்தம், ம.குன்னத்தூர், உறப்பனூர், கரிசல்குளம் ஆகிய நீர்நிலைகள் மதுரை மாவட்டத்தில் பறவைகள் பெருக்கம் நிறைந்த பகுதியாகும். இருந்தும் இதுவரை மதுரை மாவட்டத்தில் ஒரு பறவைகள் சரணாலயம் அல்லது பல்லுயிரிய காப்பகங்கள் அறிவிக்கப்படவில்லை. மாணவர்களோ, பொது மக்களோ பறவைகள், பல்லுயிரிகள் குறித்து நேரடியாக அறிந்துக் கொள்ள வாய்ப்பற்ற நிலையே இன்றுவரை மதுரையில் நீடிக்கிறது.
சாமநத்தம் கண்மாய் மதுரை மாவட்டத்தில் பறவைகளின் மிக முக்கிய வாழிடமாகும். சுமார் 203 ஏக்கர் பரப்பளவு கொண்ட சாமநத்தம் கண்மாய் குண்டாறு வடிநில கோட்டத்தின் கீழ் உள்ளது. மதுரை மாவட்டத்தில் சாமநத்தம் கண்மாயில் தான் அதிக வகையிலான பறவைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நான் மேற்கொண்ட ஆய்வில் சுமார் 155 பறவையினங்கள் சாமநத்தம் கண்மாயை வாழிடமாகவும், தங்கி செல்லுமிடமாகவும் கொண்டுள்ளதை ஆய்வின் மூலம் பதிவு செய்துள்ளேன். என் ஆய்வு மற்றும் பிறரின் கணக்கெடுப்பின் மூலம் சாமநத்தம் கண்மாயில் இதுவரை மொத்தம் 166 வகை பறவை இனங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன.
 |
Photo Clicked by Dr Kala at July 2025 |
சாமநத்தம் கண்மாயின் சிறப்புகள்:
- ஆண்டும் முழுதும் எண்ணிக்கையில் இரண்டாயிரம் முதல் மூவாயிரம் பறவகைகள் சாமநத்தம் கண்மாயில் இருக்கும்.
- பறவைகள் வலசை வரக்கூடிய குளிர்காலத்தில் ஒரே நேரத்தில் 12,000 எண்ணிக்கையிலான பறவைகளை கூட்டமாக சாமநத்தம் கண்மாயில் காண முடியும்.
- 155 பறவையினங்களில் 37 (25%) பறவையினங்கள் உணவுக்காக வெளிநாடு மட்டும் இமாலய பகுதிகளில் இருந்து குளிர்காலத்தில் சாமநத்தம் கண்மாய்க்கு வலசை வரக்கூடிய பறவையினங்கள் ஆகும்.
- குறிப்பிடத்தக்க வகையில் அரிதான பறவைகளாக 23 (15.4%) வகை பறவையினங்கள் சாமநத்தம் கண்மாயில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
- அதில் 10 வகை பறவையினங்கள் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) உலகளவில் அழிவை சந்தித்து வரும் உயரினங்களாக செம்பட்டியலில் (Red list) வகைப்படுத்தபட்ட பறவையினங்கள் ஆகும்.
- மேலும் 84 (56%) பறவையினங்கள் சாமநத்தம் கண்மாயை வாழிடமாக கொண்டு இங்கேயே கூடுகட்டி வாழக்கூடிய பறவைகள் ஆகும்.
- பெரும்பான்மையாக நெய்தல் சூழல் மண்டலங்களில் மட்டுமே காணப்படும் பூநாரைகள் ஆண்டு தோறும் சாமநத்தம் கண்மாய்க்கு வலசை வருவது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
- சாமநத்தம் கண்மாய் பறவைகள் சரணாலயமாக அல்லது பல்லுயிரிய காப்பகமாக (Conservation Reserve) அறிவிக்கப்பட்டால் மதுரையில் முதல் பறவைகள் காப்பகமாக இது அமையும்.
சாம்பல் நாரை, அரிவாள் மூக்கன், முக்குளிப்பான், நாமக்கோழி, மயில் கோழி, நீர்கோழி, சின்ன கொக்கு, குருட்டுக் கொக்கு, நெடுங்கால உள்ளான், புள்ளி மூக்கு வாத்து, செம்மூக்கு ஆள்காட்டி உள்ளிட்ட பறவைகள் சாமநத்தம் கண்மாயில் காணப்படும் வாழிட பறவைகளாகும்.
பூநாரை, கிளுவை, நீலச்சிறகி, ஊசிவால் வாத்து, பட்டாணி உப்புக்கொத்தி, மீசை ஆலா, விரால் அடிப்பான், உள்ளான் உள்ளிட்ட பறவைகள் சாமநத்தம் கண்மாய்க்கு வலசை வரக்கூடிய பறவைகளாகும்.
 |
Photo Clicked by Mr. Raveendran at 2014 |
உலகளவில் அழிவையும் அச்சுறுத்தலையும் சந்திக்கும் பறவையினங்களை செம்பட்டியலில் (Red List) பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் (IUCN) வகைப்படுத்துகிறது. அவ்வாறு செம்பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ள பறவையினங்கள் சில சாமநத்தம் கண்மாயில் காணப்பட்டுள்ளது. அவை
அச்சுறு நிலையை அடைந்த உயிரினங்கள் பட்டியலில் உள்ள பறவைகள் (NT):
1. பாம்புத்தாரா (Anhinga melanogaster)
2. மஞ்சள் மூக்கு நாரை (Mycteria leucocephala)
3. கருந்தலை அன்றில் (Threskiornis melanocephalus)
4. கூழைக்கடா (Pelecanus philippensis)
5. கருவால் மூக்கன் (Limosa limosa)
6. பட்டைவால் மூக்கன் (Limosa lapponica)
7. ஆற்று ஆலா (Sterna aurantia)
8. விரால் அடிப்பான் (Pandion haliaetus)
அழியும் வாய்ப்புள்ள உயிரினங்கள் பட்டியலில் உள்ள பறவைகள்(Vulnerable):
1. இந்திய புள்ளிக் கழுகு (Clanga hastata)
2. பெரும்புள்ளி கழுகு (Clanga clanga)
மேற்சொன்ன பறவையினங்கள் எண்ணிக்கை மற்றும் வாழிடங்கள் உலகளவில் அச்சுறுத்தலை சந்தித்து வருகிறது. இப்பறவைகளுக்கு சாமநத்தம் கண்மாய் வாழிடமாக அல்லது வாழ்வாதாரமாக உள்ளதால், சாமநத்தம் கண்மாயை பாதுக்காக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்'' என இரவீந்திரன் கூறினார்.
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
சாமநத்தம் கண்மாய் பொதுப்பணித்துறை வரைப்படத்தில் புல எண் 78இல் 80 ஹெக்டீர் 61.5 ஏர்ஸ், புல எண் 84இல் 02 ஹெக்டேர் 78 ஏர்ஸ் பரப்பளவும் காட்டப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியான செய்திகள்:
Comments
Post a Comment