மதுரை அரிட்டாபட்டியில் துரும்பன் பூனை (Rusty-Spotted Cat)

மதுரை பெருமாள்மலை அடிவாரமான அரிட்டாபட்டி சாலை ஓரத்தில் இறந்து கிடந்த துரும்பன் பூனை (Prionailurus rubiginosus) ஒன்றின் உடலை சூழலியல் ஆர்வலர் திரு. விஸ்வா மற்றும் சிவஹர்சன் கடந்த 19.07.2025 அன்று கண்டறிந்தார்கள். 

அரிட்டாபட்டி சாலையில் கண்டறியப்பட்ட துரும்பன் பூனையின் உடல்


பூனை குடும்பத்தில் உள்ள புலி, சிறுத்தை ஆகிய விலங்கினங்கள் பற்றி அனைவரும் அறிவோம். பூனை குடும்பத்தில் உள்ள வெருகு, துரும்பன் பூனை பற்றி பலரும் அறிவதில்லை. புனுகு பூனை, மரநாய் போன்றவை பூனையை ஒத்து இருந்தாலும் அவை தனி விலங்கின குடும்பத்தை சேர்ந்தவை. பூனை குடும்பத்தை சேர்ந்த வெருகு என்றழைக்கப்படும் காட்டு பூனை, துரும்பன் பூனை, புள்ளி துரும்பன் பூனை, புலி, சிறுத்தை இவையே தமிழ்நாட்டில் காணப்படும் பூனையினங்கள் ஆகும். பூனை குடும்பத்தை சேர்ந்த சிவிங்கபுலி இந்திய காடுகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக காணப்பட்டது. வேட்டை, வளர்ப்பு விலங்காக மாற்றுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தியாவில் இருந்த சிவிங்க புலி விலங்கினம் 1952 ஆம் ஆண்டு முற்றிலுமாக அழிந்து விட்டது என இந்திய அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.        

2016-ஆம் ஆண்டுமுதல் துரும்பன் பூனைகளின் எண்ணிக்கை அச்சுறு நிலையை (Vulnerable) எட்டியுள்ளதாகப் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் (IUCN) அறிவிக்கப்பட்டுள்ளது. துரும்பன் பூனை - பூனை குடும்பத்தின் மிகச்சிறிய இனங்களில் ஒன்றாகும். இப்பூனைகளின் வாழிடங்களான இலையுதிர் காடுகள் அருகிவருவதாலும் பிளவுபடுவதாலும் இவை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளன. 

அருகி வரும் மற்றும் அச்சுறுத்தலை சந்திக்கும் காட்டுயிர்களை பாதுகாக்கும் நோக்கில் இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் தோற்றுவிக்கப்பட்டு  இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1972இன் படி துரும்பன் பூனை பட்டியல் 1இல் வைக்கப்பட்டுள்ளது. அருகி வரும் மற்றும் அச்சுறுத்தலை சந்திக்கும் காட்டுயிர்களையே பட்டியல் 1இல் இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் வகைப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

உலகில் காணப்படும் பூனையினங்களில் கரும்பாதப் பூனையும், துரும்பன் பூனையும் அளவில் மிகச்சிறியவையாகும். ஈர இலையுதிர்காடுகள், உலர் இலையுதிர்காடுகள், புதர்க்காடுகள், புல்வெளிக்காடுகள் ஆகிய சில குறிப்பிட்ட வகைச் சூழல்களில் மட்டுமே துரும்பன் பூனைகள் காணப்படுகின்றன. துரும்பன் பூனைகள் ஓர் இரவாடியாகும். மேலும் தோற்றத்திலும் சிறியதாக இருப்பதால் வனத்துறையால் நிகழ்த்தப்படும் காட்டு விலங்குகள் கணக்கெடுப்புகளில் கூட இப்பூனைகளின் இருப்பு குறித்து பதிவாகுவதில்லை. தமிழ்நாட்டிலும் இப்பூனைகள் குறித்த ஆவணங்களும் பதிவுகளும் அரிதாவே காணப்படுகிறது. இந்நிலையில் மதுரை அரிட்டாபட்டியில் இறந்த நிலையில் துரும்பன் பூனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. 

மதுரை பேரையூர் து.கிருஷ்ணாபுரம் பகுதியில் வாழும் பளியர் பழங்குடி மக்கள் இப்பூனையை உறங்காவலி பூனை என்று அழைக்கின்றனர். சிறுமலையில் வாழும் பளியர்கள் இதனை கல்லொண்டி பூனை என்று அழைக்கின்றனர். இலங்கை தமிழ் அகராதி இப்பூனையை துரும்பன் பூனை என்று குறிப்பிடுகிறது.

இதற்கு முன்பு 29.10.2023 அன்று மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மலம்பட்டி பெருமாள்மலை கரடு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் இரண்டு காட்டு பூனை குட்டிகள் புகுந்துவிட்ட செய்தியினை அப்பகுதிவாழ் மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். அதில் ஒரு குட்டி மீண்டும் காட்டுக்குள் ஓடிவிட்டது. இப்பூனைக் குட்டியானது துரும்பன் பூனை வகையை சேர்ந்தது என்று அறிந்து மதுரை மாவட்ட வனத்துறை ஊழியர்கள் நேரடியாக சென்று துரும்பன் பூனை குட்டி ஒன்றினை மீட்டு மதுரை மாநகரில் உள்ள காட்டுயிர் புணர்வாழ்வு பராமரிப்பு மையத்திற்கு கொண்டு வந்தனர். துரதிர்ஷ்ட்டவசமாக அப்பூனை குட்டி இரு வாரத்திற்குள் இறந்து போனது. 



மேலூர் மலம்பட்டியில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகேயுள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து மீட்டு வரப்பட்ட துரும்பன் பூனை

மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் மதுரை அழகர்மலையும் - பெருமாள்மலையும் அதன் அடிவார பகுதிகளும் துரும்பன் பூனைகளின் வாழிடமாக உள்ளது என்பதை உறுதி செய்கிறது. சாம்பல் நிற தேவாங்கு, உடும்பு, முள்ளெலி, கீரி, துரும்பன் பூனை உள்ளிட்ட காட்டு விலங்குகள் அரிட்டாபட்டி சாலையில் இவ்வாறு விபத்தில் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இதனை தடுக்க தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு வனத்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை மற்றும் ஊர்வனம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வா கேட்டுக் கொண்டார்.



Hindu Tamil Youtube channel Video: https://youtu.be/ve6RVJsY_aE?si=o_srZzyLUvKxXI7u

https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/madurai/rusty-spotted-cat-rescue-in-madurai/tamil-nadu20231030170735248248611

- தமிழ்தாசன்

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)

22.07.2025

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

வறள் புல்வெளிகள், கள்ளிக்குடி - பண்பாட்டுச் சூழல் நடை

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை