குன்னங்குடிபட்டி பெருங்கற்கால சின்னங்கள் (குரக்குப் படை)
குன்னங்குடிபட்டி பெருங்கற்கால சின்னங்கள்: (குரக்குப் படை)
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கருங்காலக்குடி ஊராட்சியில் அமைந்துள்ளது குன்னங்குடிபட்டி ஊர். குன்னங்குடிபட்டி மலையின் தென்கிழக்கு திசையில் அரையினிபட்டி ஊருக்கு செல்லும் வழியில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் புளிந்தோப்பில் பெருங்கற்காலத்தை சேர்ந்த ஈமக்காடு காணப்படுகிறது. கருங்காலக்குடி கிராமம் வருவாய்த்துறை பதிவேட்டில் புல எண்: 80/2, 480/3, 480/6, 480/7 இந்த ஈமக்காடு அமைந்துள்ளது. அருகில் உள்ள நிலங்களிலும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். குன்னங்குடிபட்டி பெருங்கற்படை ஈமக்காட்டில் (Megalithic Burial Site)
- கற்திட்டைகள் (Dolmens)
- கற்பதுக்கைகள் (Cists)
- குத்துக்கற்கள் (Menhirs)
- கல்வட்டங்கள் (Stone Circle)
- கற்குவை வட்டங்கள் (Cairn Circle)
- தாழிகள் (Urns)
உள்ளிட்ட 6 விதமான பெருங்கற்படை சின்னங்கள் காணப்படுகிறது. மேலும் கற்காலத்தை சேர்ந்த கூர் முனைக் கொண்ட கற்கருவிகள் (Stone Age tools) குன்னங்குடிபட்டி ஈமக்காட்டில் காண முடிகிறது. கற்பதுக்கை, கற்திட்டைகளின் பலகைக்கல் மீது கற்குழிகள் (Cup marks) காணப்படுகின்றன. இந்த தொல்லியல் சின்னங்களை நோக்குகின்ற போது இவ்விடத்தின் கால கணிப்பு 10,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. உரிய ஆய்வுகள் வழியே இவ்விடத்தின் தொன்மை அறியப்பட வேண்டும். மேலும் கருங்காலக்குடியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள், 2200 ஆண்டுகள் பழமையான தமிழிக் கல்வெட்டுகள், குகைத்தளங்கள், சமண பள்ளி; 1000 ஆண்டுகள் பழமையான சமணத் துறவியின் சிற்பம், 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால அழப்பெருமாள் கோயில், திருச்சுனை சிவன் கோயில், சதி நடுகல், 400 ஆண்டுகள் பழமையான வயலிக் கண்மாய் ராவுத்தர் மடை என பல வரலாற்று சுவடுகளை கருங்காலக்குடி கொண்டிருக்கிறது. குன்னங்குடிபட்டி ஈமக்காட்டின் தென்மேற்கு மூலையில் சிவன் கோயில் நிலக்கொடைக்கு சான்றாக வைக்கப்படும் சூலக்கல் ஒன்றும் காணப்படுகிறது. கற்காலம் முதல் தற்காலம் வரை தொடர்ச்சியாக மக்களின் வாழிடமாக கருங்காலக்குடி இருந்து வருகிறது என்பதை பறைசாற்றும் பல்வேறு தொல்லியல் சான்றுகள் கருங்காலக்குடியில் கிடைக்கின்றன.
எனவே தமிழ்நாடு தொன்மை மற்றும் வரலாற்று சின்னங்கள், தொல்லியல் தளங்கள் பாதுகாப்பு சட்டம் 1966இன் (The Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 ) கீழ் குன்னங்குடிபட்டி பெருங்கற்படை தொல்லியல் சின்னங்கள் காணப்படும் ஈமக்காட்டை தொல்லியல் நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டுமெனவும், அதன் பின் இவ்விடத்தின் பண்பாட்டை, தொன்மையை அறியும் வகையில் அகழாய்வு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கிட்டத்தட்ட 11 அடி உயரம் 11 அடி அகலம் கொண்ட கற்களை கொண்டு கல் பதுக்கை, கற்திட்டை ஏற்படுத்தி அதில் தாழி உள்ளே இறந்தவர்களை வைத்து அவர்களது குலச் சின்னங்கள், வழிபாட்டு பொருள்கள், பயன்படுத்திய பொருள்கள் இன்னும் பலவற்றை இரண்டு மற்றும் மூன்று அறைகளாக எடுத்து புதைத்து வழிபாடு செய்துள்ளார்கள். அதில் ஒரு கல்திட்டையில் ஓரடி விட்டமுள்ள இடுதுளையுடன் கூடிய தடுப்பு கல்லும் காணப்படுகிறது. இங்கே மேற்பரப்பில் பானை ஓடுகளும் கிடைக்கின்றன. இதே போன்ற பெருங்கற்கால சின்னங்கள் மேலூர் வட்டம் பெருமாள் அடிவாரம் நரசிங்கம்பட்டி, அரிட்டாபட்டி, உசிலம்பட்டி வட்டம் அல்லிகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவணம் செய்துள்ளோம். இந்த இடங்களை பாதுகாத்து வரலாற்று மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் தகவல் பலகைகள் வைக்க வேண்டும்.
https://ebird.org/checklist/S199612811
https://ebird.org/checklist/S199569014
https://www.etvbharat.com/ta/!state/neolithic-stone-dating-back-10000-years-discovered-near-madurai-tamil-nadu-news-tns25100402289
வயலிக் கண்மாய் & வயலிப்பாறை:
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், நெல்லுகுண்டுபட்டி ஊராட்சியில் வயலிப்பாறையை தெற்கு கரையாக கொண்டு அமைந்துள்ளது வயலிக் கண்மாய். (Lat & Long:10.153802, 78.381122) வயலிப்பாறையும் கண்மாயும் வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. வயலிப்பாறையின் வடச் சரிவில், தென்சரிவில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. வயலிக் கண்மாயின் மடையில் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
வயலிப் பாறையின் வடசரிவில் உள்ள கல்வெட்டு கிபி 12-13 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. மாடக்குடையான் சீராளன் திருவெண்காடுடையான் என்ற ஊர்க் கணக்கன் இவ்வூர் குளத்தின் கலிங்கை அமைத்ததைத் தெரிவிக்கிறது.
வயலிப்பாறையின் தென்சரிவில் உள்ள கல்வெட்டு கிபி 1713 - 1722 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இப்பகுதியில் எட்டு மாமரங்கள் நட்டு கிணறு வெட்டியதை தெரிவிக்கிறது.
வயலிக்கண்மாய் மடையில் கிபி 18ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு காணப்படுகிறது. அதில் வத்தலை ராவுத்தர் என்பவர் அமைத்த மடை என்று குறிப்பிடுகிறது. இந்த கல்வெட்டு செய்திகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட 'மதுரை மாவட்ட கல்வெட்டு தொகுதி -1' நூலில் இடம்பெற்றுள்ளது.
வயலிக் கண்மாயில் சீழ்க்கை சிறகி (Lesser Whistling-Duck), நெடுங்கால உள்ளான் (Black-winged Stilt), செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing), பொரி உள்ளான் (Wood Sandpiper), முக்குளிப்பான் (Little Grebe), அன்றில் (Glossy Ibis), சின்ன கொக்கு (Little Egret), குளத்து கொக்கு (Indian Pond-Heron), உன்னி கொக்கு (Eastern Cattle-Egret), தகைவிலான் (Barn Swallow), நெல்வயல் நெட்டைக்காலி (Paddyfield Pipit), நீர்காகம் (Indian cormorant), புள்ளிமூக்கு வாத்து (Indian spot-billed duck), வெண்மார்பு நீர்கோழி (White-breasted waterhen), வெண்மார்பு மீன்கொத்தி (White-throated kingfisher), சிறிய மீன்கொத்தி (Common kingfisher), செந்நாரை (Purple heron), சாம்பல் நாரை (Grey heron) என சுமார் 20 வகையான பறவைகள் வயலிக் கண்மாயில் ஆவணம் செய்யப்பட்டது.
Comments
Post a Comment