பறவைக் காணுதல் நிகழ்வு - சாமநத்தம்
மதுரை மாவட்டத்தில் அதிக அளவில் நீர்நிலை சார் பறவைகள் காணப்படும் முக்கியமான நீர்நிலைகளில் ஒன்று சாமநத்தம் கண்மாய்.
புள்ளி மூக்கு வாத்து, தாழைக்கோழி, நீல தாழைக்கோழி, நீர்காகம், முக்குளிப்பான், அரிவாள் மூக்கன், நாமக்கோழி, நெடுங்கால் உள்ளான், சிறிய கொக்கு, நடுத்தர கொக்கு, பெரிய கொக்கு உள்ளிட்ட பறவைகள் 1000 முதல் 2000 வரையிலான எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக சாமநத்தம் கண்மாயில் இருப்பதை எப்போதும் காண முடியும். பறவைகளின் வலசை காலங்களில் பூநாரை, தகைவிலான், சூறைக்குருவி, பஞ்சுருட்டான், உள்ளான், நீலச்சிறகி என தூர தேசத்தில் இருந்து வலசை வரும் பறவைகள் கூட்டத்தையும் சாமநத்தம் கண்மாயில் காண முடியும். வலசை காலங்களில் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒரே நேரத்தில் 20000 முதல் 30000 பறவைகளை இங்கே காண முடியும். கடந்த 2012 முதல் 2024 வரை சாமநத்தம் கண்மாயில் 191 வகை பறவையினங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளதாக ebird.org இணையதளம் குறிப்பிடுகிறது. 2015 முதல் 2019 வரை சாமநத்தம் கண்மாயின் பறவைகளை ஆய்வு செய்த பறவையிலாளர் திரு. இரவீந்திரன் அவர்களின் ஆய்வறிக்கை இக்கண்மாயில் 150 வகை பறவைகள் இருப்பதை உறுதி செய்கிறது. மதுரை மாவட்டத்தில் பறவைகள் உயிரியல் காப்பகமாக அல்லது பல்லுயிரிய மரபு தலமாக அறிவிக்க தகுந்த இடம் சாமநத்தம் கண்மாய்.
உலக பறவைகள் வலசை நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 11ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை அனுசரிக்கும் விதமாக 12.11.2025, ஞாயிறு அன்று மதுரை சாமநத்தம் கண்மாய் பகுதியில் பறவை காணுதல் நிகழ்வு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் ஏறக்குறைய 40 பேர் வரை பங்கெடுத்தனர். காலை 7 மணி முதல் 10 மணி வரையிலான பறவை காணுதல் நிகழ்வில் 71 வகை பறவைகளை ஆவணம் செய்தனர். எண்ணிக்கையின் அடிப்படையில் நேற்று சுமார் 1000 பறவைகள் வரை சாமநத்தம் கண்மாயில் பார்க்க முடிந்தது.
பேதை உள்ளான், சீழ்க்கைச் சிறகி, நீலச்சிறகி, ஆண்டி வாத்து, பட்டாணி உப்புக்கொத்தி, பச்சைகால் உள்ளான், பூஞ்சைப் பருந்து, சேற்று பூனைப்பருந்து, சாம்பல் தகைவிலான் உள்ளிட்ட வலசை பறவைகளை நேற்று (12.10.2025) சாமநத்தம் கண்மாயில் ஆவணம் செய்துள்ளனர். பறவையிலாளர்கள் மரு. தி. பத்ரி நாராயணன், மரு. ஹீமோக்ளோபின், முனைவர் பாட்ரிக் உள்ளிட்டவர்கள் சாமநத்தம் கண்மாயில் உள்ள பறவைகளை வந்திருந்த பங்கேற்ப்பாளர்களுக்கு அடையாளம் காட்டி விளக்கினார். மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் திரு. விஸ்வா சாமநத்தம் கண்மாய் பறவைகள், பறவை பார்த்தலின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
இரு தினங்களுக்கு முன்பு 10.11.2025 அன்று சாமநத்தம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் புல எண் (Survey No) 78 & 82இல் சுமார் 83 ஹெக்டேர் பரப்பளவு உள்ள சாமநத்தம் கண்மாயை ''பல்லுயிரிய வகைமை சட்டம் 2002 (BIOLOGICAL DIVERSITY ACT, 2002) இன் கீழ் பல்லுயிரிய மரபு தலமாக அல்லது காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1972 இன் கீழ் (THE WILD LIFE PROTECTION ACT) பறவைகள் சரணாலயமாக அறிவித்து பல்லுயிரிய பெருக்க நிறைந்த சாமநத்தம் கண்மாயை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய சாமநத்தம் பறவைகள் பட்டியல்: https://ebird.org/checklist/S278811890
ஒளிப்படங்கள்:
------------------
திருவாளர்கள் விஸ்வா, பாலகிருஷ்ணா, கமல் ஆனந்த், கலா, ஹீமோக்ளோபின்
ஓவியம்:
-----------
கூழைக்கிடா ஓவியம்: மு. சாய்கிருஷ்ணா (6வது பயிலும் பள்ளி மாணவர்)
ஆண்டி வாத்து & தாழைக்கோழி ஓவியம்: ஓவியர் முருகராஜ்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
13.11.2025
Comments
Post a Comment