பெருமாள்மலை - ஓணான் கரடு

 

மலை ஓணான் - South Indian Rock Agama, ஓணான் கரடு, மதுரை

மலை அறிதல் - ஓணான் கரடு பயணம்:

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சூலபுரம் அருகே பாப்பிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள மலைக் கரடுகளை ஆவணம் செய்யும் நோக்கில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக 'மலை அறிதல்' நிகழ்வு 12.07.2026, ஞாயிறு அன்று காலை நடைப்பெற்றது. சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெருமாள்மலை - ஓணான் கரட்டு பகுதியில் தொல்லியல் மற்றும் பல்லுயிரியச் சூழலை குழுவாக ஆவணம் செய்தோம். 

பெருமாள்மலை - ஓணான்கரடு பகுதியில் மூன்று நடுகற்கள் பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் புதிதாக கண்டறிந்து வெளிப்படுத்தினார். 800 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் துவங்கி 500 ஆண்டுகள் பழமையான நடுகற்கள் இம்மலைகளில் காணப்படுகிறது. சிற்பிகளால் பாதியில் கைவிடப்பட்ட நடுகற்கள், நடுகற்களை தேர்வு செய்த பாறைகளின் வெட்டுத் தடங்கள் ஆகியவை இம்மலைகளில் காணப்படுகின்றன. 18.07.2026 அன்று பேரா. தேவி அறிவு செல்வம் தலைமையிலான ''மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை" ஆய்வுக் குழுவினர் சலுப்பான் கரடு அடிவார பகுதியில் மேற்பரப்பு ஆய்வை மேற்கொண்டனர். அப்போது 3000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகளை அங்கே கண்டறிந்தனர். 


கொம்பன் ஆந்தை, கள்ளிப்புறா, நீலமுக பூங்குயில், வல்லூறு, கருந்தோள் பருந்து உள்ளிட்ட 50 வகையான பறவைகளை, பறவையிலாளர் இரவீந்திரன், ஹீமோக்ளோபின், ஜோதிமணி, சக்திவேல், பாலகிருஷ்ணா, வெங்கட்ராமன், பேட்ரிக், உள்ளிட்டோர் பெருமாள்மலை - ஓணான் கரடு மலையில் ஆவணம் செய்தனர்.  செங்கத்தாரி, நஞ்சுண்டான், வெருவெட்டான், இச்சி, வெள்வேலம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தாவரங்களை, தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன், கா. ரவீந்திரன் ஆகியோர் இம்மலைகளில் கண்டறிந்து ஆவணம் செய்தனர்.  

பாறை ஓணான், விசிறித் தொண்டை ஓணான், உடும்பு உள்ளிட்ட ஊர்வன உயிரினங்களை காட்டுயிர் ஆய்வாளர் விஷ்வா இப்பகுதியில் ஆவணம் செய்தார். செங்கடவி, மஞ்சளாத்தி, வெந்தய வரியன், கரும்புள்ளி நீலன், புல்வெளித் துள்ளன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வண்ணத்துபூச்சிகளை முதுகலை விலங்கியல் மாணவர் கமலேஷ் இப்பகுதியில் ஆவணம் செய்தார்.  

நெடுநரி, வெருகு, புள்ளிமான், செம்முக குரங்கு,புனுகுபூனை உள்ளிட்ட 20  பாலூட்டி வகை விலங்குகள் இப்பகுதியில் இருப்பதை காட்டுயிர் ஆய்வாளர் தமிழ்தாசன் கணக்கெடுப்பு மூலம் ஆவணம் செய்தார். 

கோரிக்கை

1. தொல்லியல் நோக்கிலும் பல்லுயிரியச் சூழல் நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக விளங்கும் பெருமாள்மலை - ஓணான் கரடு மலைப் பகுதியை பாதுகாக்கும் பொருட்டு, தமிழ்நாடு உயிரியியல் வகைமைச் சட்டம் 2007இன் கீழ் (Section 37 of the Biological Diversity Act, 2002) பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க தமிழ்நாடு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

2. சலுப்பான் கரடு அடிவாரப் பகுதியில் மனித எலும்புகளும் முதுமக்கள் தாழியும் கிடைத்த இடத்தில் விரிவான அகழாய்வுகள் மேற்கொள்ள்பட்டு தொன்மையான தமிழர் பண்பாட்டை வெளிக்கொணர தமிழ்நாடு தொல்லியல்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

3. தமிழ்நாடு பண்டைய மற்றும் வரலாற்று நினைவுச்சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம், 1966இன் கீழ் (Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966) பெருமாள்மலை - ஓணான் கரட்டு மலையில் உள்ள தொன்மையான நடுகற்களும், நடுகற்கள் வெட்டுப் பாறையும் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.


பெருமாள்மலை - ஓணான் கரடு:

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சூலபுரம் அருகே பெருமாள்மலை - ஓணான்கரடு மலை அமைந்துள்ளது. இரண்டு மலைகளும் ஒன்றொடு ஒன்று ஒட்டியே காணப்படுகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருமலைகளும் ஓணான்கரடு என்றே அழைக்கப்பட்டது. மலையுச்சியில் உள்ள பெருமாள் கோயில் சிறப்பு பெற்றதும் அம்மலை பெருமாள் மலை என்று ஊர் மக்களால் அழைக்கப்பட்டது  என சங்கரலிங்கபுரம் ஊர் பெரியவர்கள் தெரிவித்தார்கள். ஓணான்கள் அதிக அளவில் இம்மலையில் காணப்படுவதால் ஓணான்கரடு என பெயர் வைத்துள்ளனர். 

அதே போல அரசின் வருவாய்த்துறை ஆவணத்தில் பெருமாள் மலையும், ஓணான் கரடும் ஒரே புல எண்ணில் (புல எண்401) வைக்கப்பட்டுள்ளது. இவ்விருமலைகளும்  சுமார் 290 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது. பெருமாள்மலையின் தெற்கில் 300 மீட்டர் அருகில் அமைந்துள்ள சலுப்பான் கரடு பாப்பிநாயக்கன்பட்டி வருவாய் கிராமத்தில் புல எண் 104இல் உள்ளது. அதன் பரப்பள்வு 26.51 ஹெக்டேர் ஆகும். (ஆதாரம்: Tamil Nilam Geo Info)

பெருமாள் மலை 380 மீட்டர் உயரமும், ஓணான் கரடு 300 மீட்டர் உயரமும், சலுப்பான் கரடு 180 மீட்டர் உயரமும் கொண்ட கரடுகளாக விளங்குகின்றன.  (Google Earth)


பெருமாள்மலை / GPS - 9.822457, 77.693398

ஓணான்கரடு / GPS - 9.828821, 77.697733

பெருமாள்மலை

பெருமாள்மலை

ஓணான்கரடு

ஓணான் கரட்டு மலையின் செழிப்பை எடுத்துரைக்கும் நரந்தம் புற்கள் (Lemon Grass)



தரகம் புற்கள் என்றழைக்கப்படும் நரந்தம் புற்கள் (Lemon Grass)

சலுப்பான் கரடு:

சலுப்பான்கரடு மலை அடிவாரத்தில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள் காணப்படுகிறது. இதன் அருகே ஆண் சிற்பம் ஒன்றுக் காணப்படுகிறது. சலுப்பான் கரட்டில் காணப்படும் அரண்மனை பாறையில் சாப்டூர் ஜமீனுக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான வேட்டை மண்டபம் காணப்படுகிறது. வேட்டையாட வரும் சாப்டூர் ஜமீன் இம்மண்டபத்தில் தங்கி வேட்டையாடுவார்கள் என ஊர் மக்கள் தெரிவித்தனர். 

சலுப்பான் கரடு தாழிகள் குறித்த பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

''சங்க காலத்திற்கு முன்பு அதாவது 2000 வருடத்திற்கு முன்பாக தமிழகத்தில் இறந்தவர்களை மண் பானையில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இதில் முழு உடலையும் உள்ளே வைத்து புதைப்பார்கள்.  மண்பானையில் முழு உடலையும் வைத்து புதைப்பார்கள் அல்லது இறந்தவர்களின் எலும்புகளை சேகரித்து அதனை பானையில் வைத்தும் புதைப்பார்கள் அல்லது இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மட்டும் தாழிப் பானையில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த மண்பானை கருப்பு சிகப்பு நிறத்தில் இருக்கும்.

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் பாப்பிநாயக்கன்பட்டி - சங்கரலிங்கபுரம் பகுதியில் பேரா. தேவி அறிவு செல்வம் தலைமையிலான மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளை ஆய்வுக் குழுவினர்கள் இப்பகுதியை மேற்பரப்பு கள ஆய்வு செய்தனர். இங்கு இருக்கும் சலுப்பான் கரடு அடிவாரத்தில்  2000 வருடங்கள் தொன்மையானதாக கருதப்படும் கருப்பு சிவப்பு நிறத்திலான தாழி பானைகள் மூன்று சிதைந்த நிலையில்  கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கரடு அருகே இருக்கும் பாப்பிநாயக்கன்பட்டி கண்மாயிலும் மண்ணில் புதைந்த நிலையில் தாழி பானை ஒன்று இருக்கிறது. கரடில் இருக்கும் தாழிப் பானையின் உள்ளே எலும்பு துண்டுகளும் காணப்படுகிறது.

இப்பகுதி முழுவதும் கருப்பு சிவப்பினால் ஆன பானை ஓடுகள் விரவிக்  கிடக்கின்றன. இது ஒரு ஈமக்காடாக காட்சியளிக்கிறது. சலுப்பான் கரடு மலை அடிவாரப்பகுதியை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை அகழாய்வு செய்ய வேண்டும் எனவும், ஓணான் கரட்டு மலையில் உள்ள பழமையான நடுகற்களை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.


https://www.facebook.com/share/v/1P3yVnQ4iK/




சலுப்பான் கரடு அடிவாரம் - மண்ணில் புதையுண்டு கிடக்கும் தாழி


சலுப்பான் கரடு அடிவாரம் - மேற்பரப்பில் காணப்படும் பானை ஓடுகள்

ஆண் சிற்பம் 

அரண்மனை பாறை - சாப்டூர் ஜமீன் வேட்டை மண்டபம் 

அரண்மனை பாறை - கல்மண்டபம் 



நான்குபுற எல்லைகள்:

பெருமாள்மலை - ஓணான்கரடு கிழக்கில் பாப்பிநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம் ஊர்களும்; வடக்கில் செல்லாயிபுரம் - சூலபுரம் ஊர்களும்; மேற்கில் ம.கல்லுபட்டி ஊரும் அமைந்துள்ளது. தெற்கில் எத்திலாமலை என்றழைக்கப்படும் சிறுமலை அமைந்துள்ளது. 


திணை:

திணையியல் அடிப்படையில் காடும் காடு சார்ந்த முல்லை நிலமாக இப்பகுதி விளங்குகிறது. இம்மலையில் காணப்படும் நடுகல் வீரன் புல்லாங்குழல் இசைப்பது போன்றும், அவனது இரண்டு பக்கங்களில் இரண்டு மாடுகள் பாய்ந்த நிலையிலும் உள்ள நடுகல் இப்பகுதியின் மேய்ச்சல் வாழ்வியலுக்கு சான்றாகும். மாடு உள்ளிட்ட கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகவும், மழைநீரை நம்பி வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களின் பாசனக் கண்மாய்களுக்கு நீர்வரத்தைக் கொண்டு வரும் நீர்பிடிப்பு பகுதியாகவும் இங்குள்ள மலைகள் திகழ்கின்றன. பெருமாள்மலை - ஓணான்கரடு பகுதியின் கருப்பொருட்களை இனி விரிவாக காண்போம்.  

இரண்டு பக்கமும் மாடுகள் சூழ நிற்கும் நடுகல் வீரன்

பெருமாள்மலை - ஓணான்கரடு அடிவாரதில் மேயும் கிடைமாடுகள்

தென்முட்ட நாடு:
மன்னர் ஆட்சிகாலத்தில் பல ஊர்களை உள்ளடக்கிய நிர்வாக பிரிவை 'நாடு' என்று அழைத்தனர். மேலத்திருமாணிக்கம் ஊரில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலை சுற்றி இருந்த ஊர்கள் தென்முட்ட நாடு என அழைக்கப்பட்டது என அக்கோயில் கல்வெட்டுகளில் இருந்து நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது. பிற்கால பாண்டியர்களின் ஆட்சியில் ஆயுதராமநல்லூர், கூடற்குடி, கொள்ளிக்குடி, திருமணிக்கயம், பொன்னம்பல காட்டினமங்கலம், மைசிற்குடி, வெம்பக்குடி, வெள்ளெரிசில் குலசேகரநல்லூர் ஆகிய ஊர்கள் தென்முட்ட நாட்டு நிர்வாகத்தின் கீழ் இருந்தன. (மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2, தமிழ்நாடு தொல்லியல்துறை வெளியீடு, பக் 1-72)    

திருமணிக்கயம் - திருமாணிக்கம் என்றும், கூடற்குடி மீனாட்சிபுரம் என்றும் மருவிவிட்டன. (முனைவர் வெ. வேதாசலம், ஜனவரி 2019, பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல், பக் 169) ஆயுதராமநல்லூர் - இராமநாதபுரம் என்று மருவியிருக்கலாம். சங்கரலிங்கபுரம் ஊரில் உள்ள சிவன் கோயில் பாண்டியர் காலத்து கோயில் என்றும், அக்கோயிலின் இறைவனின் பெயர் சங்கரலிங்கேஸ்வரர் என்றும், அதனால் ஊருக்கும் சங்கரலிங்கபுரம் என்று பெயர் வந்தது என்றும், கோயிலில் காணப்படும் நந்தி நூறாண்டு பழமையான நந்தி என்றும் ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். இந்த செய்திகள் ஆய்வுக்குரியது. சங்கரலிங்கபுரத்தில் சிதைந்த நிலையில் இருந்த சிவன் கோயில் அண்மையில் புணரமைக்கப்பட்டு புதிதாக எடுத்துக் கட்டியுள்ளனர். 
 
சங்கரலிங்கபுரம் சிவன் கோயில்



பெருமாள் கோயில்:
பெருமாள்மலையின் உச்சியில் ஆலமரத்தடியில் இருக்கும் பாறையை பெருமாள் கோயில் என்று ஊர் மக்கள் வழிபடுகிறார்கள். ஆண்டுக்கொருமுறை புராட்டாசி மாதம் பெருமாள் திருவுருவம் மலையுச்சிக்கு கொண்டு வரப்பட்டு, வழிபாடு செய்யப்படுகிறது. வழிபாடு முடிந்தபின் மீண்டும் ஊருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட நாக உருவச் சிலைகளை பெருமாள் கோயிலில் வைத்து வழிபடுகிறார்கள். கோயில் என்று சொல்லத்தக்க கட்டடங்கள் மலையுச்சியில் இல்லை.  மரத்தடி கோயிலாக பெருமாள்கோயில் காட்சியளிக்கிறது. பெருமாள் கோயிலுக்கு மேலே உள்ள மலையுச்சியில் தீபம் மற்றும் விளக்கேற்றும் தீபக்கம்பம் ஒன்றுள்ளது. ஓணான்கரடு மலையின் உச்சியில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட லிங்கம், நந்தி, நடராசர் ஓவியங்கள் பாறையில் காணப்படுகிறது.  

ஆலமரத்தடி பெருமாள் கோயில்

பெருமாள் பாறையும், நாக தெய்வங்களும் 


பெருமாள்மலை - புடவு

விளக்குப் போடும் கம்பம்



ஓணான்கரட்டு அண்மைக்கால ஓவியம்

ஓணான்கரட்டு அண்மைக்கால ஓவியம்


நீராதரமாக விளங்கும் மலைகள்:

பெருமாள்மலை - ஓணான்கரடு மலைப்பகுதிகள் குண்டாற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாகும். இம்மலைகளைச் சுற்றியுள்ள ஊருணிகளுக்கும் பாசன கண்மாய்களுக்கும் இம்மலைகளே நீராதாரமாக விளங்குகின்றன.  ஓணான்கரடு மலையில் பெய்யும் மழைநீர் ஓடை வழியாக சென்று சங்கரலிங்கபுரம் கங்கதரன் ஊருனியை நிரப்புகிறது. கங்கதரன் ஊருணி 1.26 ஹெக்டேர் பரப்பளவுக் கொண்டது. திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு நிலக் கொடை அளித்தவர்களில் ஒருவரின் பெயர் கங்காதரன் என்று கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கிறது. அவர் இவ்வூரணியை வெட்டியிருக்கலாம், அதனால் அவர் பெயரால் இவ்வூரணி அழைக்கப்பட்டிருக்கலாம். 

ஓணாண் கரட்டிலிருந்து மழைநீரைக் கொண்டு செல்லும் ஈசப்பாறை ஓடை தி.இராமநாதபுரம் தெப்புக்குட்டி கண்மாய்க்கும், அதன் மறுகால் திருமாணிக்கம் பெரிய கண்மாய்க்கும் பாய்கிறது. ஓணான் கரட்டில் இருந்து செல்லாயிபுரம் வழியாக வரும் ஓடை, செல்லாயிபுரம் ஊருணிக்கும்,  திருமாணிக்கம் பெரியக் கண்மாய்க்கும் நீரைக் கொண்டு வருகிறது. திருமாணிக்கம் பெரியக் கண்மாய் - மீனாட்சிபுரம் கண்மாய் என்றும் அழைக்கப்படுகிறது. அக்கண்மாயில் கிபி 9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் காணப்படுகிறது. (ஆதாரம்: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி-2 நூல், பக் 83)

  பெருமாள்மலை - சலுப்பான் கரட்டிலிருந்து வரும் நீரோடை பாப்பிநாயக்கன்பட்டி பாப்பிநாயக்கம்பட்டி ஊருணிக்கும், குப்பம்மாள் சமுத்திரம் கண்மாய்க்கும்  நீராதாரமாகவும் விளங்குகிறது. குப்பம்மாள் சமுத்திரம் கண்மாயில் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என ஊர் பெரியவர்கள் தெரிவித்தார்கள். அது உண்மையெனில் இப்பகுதி பெருங்கற்காலத்தில் இருந்தே (சுமார் 3000 ஆண்டுகள் முதல்) மக்களின் வாழிடமாக இருந்து வருகிறது என்று சொல்லலாம்.    

இம்மூன்று கண்மாய்களும் குண்டாறு வடிநிலக் கோட்டத்தில் உள்ள பாசனக் கண்மாய்களாகும்.  தி.இராமநாதபுரம் கண்மாய் மூலம் 11.54 ஏக்கர் வேளாண் நிலமும், திருமாணிக்கம் பெரியக் கண்மாய் மூலம் 127 ஹெக்டேர் வேளாண் நிலமும், குப்பம்மாள் சமுத்திரம் மூலம் 59.24 ஹெக்டேர் வேளாண் நிலமும் என மொத்தம் 194.78 ஹெக்டேர் (சுமார் 500 ஏக்கர்) வேளான் நிலங்கள் பாசனம் பெறுகின்றன என நீர்வளத்துறை ஆவணங்கள் கூறுகின்றன. (https://cdn.s3waas.gov.in)

இவை பாசனக் கண்மாய்களாக மட்டுமல்ல, கால்நடைகள், காட்டுயிர்களுக்கான நீராதாரமாகவும் விளங்குகின்றன. நீருள்ள போது மீன்பிடி சமூகங்கள், சலவைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரமாவும், நீரற்ற கண்மாயில் வெள்ளரி, பூசணி உள்ளிட்ட காய்கறிகளை பயிரிடும் நிலமற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதரமாகவும் இக்கண்மாய்கள் விளங்குகின்றன. இக்கண்மாய்களில் நடைபெறும் மீன்பிடித்திருவிழாக்கள் புகழ் பெற்றவை.    

பெருமாள்மலை - ஓணான் கரட்டில் இருந்து வீரசக்திக் கோயிலை கடந்து வரும் நீரோடை சங்கரலிங்கபுரம் ஊரின் மேற்கிலும், கிழக்கிலும் உள்ள காளியம்மன் ஊருணிக்கும், தோப்பூருணிக்கும் நீரை வழங்குகின்றன. இவ்வூருணிகள் மக்களின் குடிநீராதாரமாக உள்ளன. 

பெருமாள்மலை அடிவாரத்தில் கன்னிமார் சுனையும், பெருமாள்மலை உச்சியில் பெருமாள் சுனையும், ஓணான்கரட்டில் ஒரு சுனையும் உள்ளன. இந்த சுனைகள் எப்போதும் வற்றாத சுனைகளாம். அதன் காரணமாக ஊர் மக்கள் ''ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத சுனை'' என்ற சொலவடையால் அழைக்கின்றனர். தித்திக்கும் சுவைமிக்க இச்சுனை நீரும் மக்களின் குடிநீராதாரமாக உள்ளன.   


கன்னிமார் ஊற்று, பெருமாள்மலை அடிவாரம் / GPS - 9.819139, 77.692883


கன்னிமார் ஊற்று

மலையுச்சி பெருமாள்கோயில் சுனை

ஓணான்கரடு சுனை
தி.ராமநாபுரம் கண்மாயிலிருந்து திருமாணிக்கம் கண்மாய்க்கு செல்லும் மறுகாலோடை
கன்னின்மார் சுனை அருகே ஆர்பரித்து மழைக்கால ஒடை. குப்பம்மாள் சமுத்திரம் கண்மாயின் நீர்வரத்து 

கங்கதாரர் ஊருணி (எ) பாறை ஊருணி

தி.இராமநாதபுரம் & திருமாணிக்கம் கண்மாய்களை நிரப்பும் ஈசப்பாறை ஓடை


சங்கரலிங்கபுரம் ஊருக்கு குடிநீராதாரமாக விளங்கும் ஊருணிகளுக்கு நீர்க் கொண்டு வரும் மலையோடை


மீனாட்சிபுரம் (எ) திருமாணிக்கம் பெரியக் கண்மாய் மடைத்தூண்


மடைத்தூணில் காணப்படும் கிபி 9ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு

பாப்பிநாயக்கன்பட்டி கண்மாய் மீன்பிடித்திருவிழா



வேளாண்மை: 

மலையை சுற்றி சங்கரலிங்கபுரம், பாப்பிநாயக்கன்பட்டி, சூலபுரம் உள்ளிட்ட ஊர்களின் முக்கிய வாழ்வாதரமாக வேளாண்மை திகழ்கிறது. இப்பகுதி செம்மண் பூமியாக இருக்கிறது. மழையை நம்பியும், கண்மாய் பாசனத்தை நம்பியும், கிணற்று பாசனத்தை நம்பியும் வேளாண்மை நடைபெறுகிறது. கரும்பு, பருத்தி, இருங்கு சோளம், மக்கா சோளம், கம்பு,  வரகு, எள்ளு, குதிரைவாலி, சூரியகாந்தி, கடலை, வெங்காயம் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள், மலர்கள் பயிரிடப்படுகிறது. 

உழுது தயார் நிலையில் இருக்கும் நிலம். பின்புறத்ததில் பெருமாள்மலையும் ஓணான்கரடும்


நெல் வயலும் கரும்பும், பின்னணியில் ஓணான்கரடு மலை








கால்நடை வளர்ப்பு: 

பெருமாள்மலை - ஓணான் கரடு மலையின் மீதும் அடிவாரப் பகுதியில்  ஆடுகள், நூற்றுக்கணக்கான கிடை மாடுகள், பால் மாடுகள் மேய்கின்றன. செம்மறி, வெள்ளாடு, பால் மாடுகள் வளர்ப்பு மலையைச் சுற்றியுள்ள ஊர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. 


முனியீஸ்வரன் கோயிலும் செம்மறி ஆடுகளும்

இராணுவ பயிற்சி:

சங்கரலிங்கபுரம், பாப்பிநாயக்கன்பட்டி ஊர்களின் உள்ள இளைஞர்களில் 100க்கும் மேற்பட்டோர் இந்திய இராணுவத்தில் சேருவதற்கு பயிற்சி எடுத்து வருகின்றனர். இவ்வூர்களில் உள்ள பலரும் இராணுவத்தில் பணி புரிபவர்களாகவும், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். உடற்பயிற்சி மேற்கொள்வதற்கும், மலையேறுவதற்கும் ஓணான்கரடு மலை இவ்வூர் இளைஞர்களின் இயற்கை உடற்பயிற்சி கூடமாக விளங்குகிறது. இவ்வூருக்கு இராணுவ நகர் என்று பெயர் சூட்டும் அளவுக்கு பல இராணுவ வீரர்களை உருவாக்கி இருக்கிறது இம்மலை. இன்று நேற்றல்ல, பல நூறாண்டுகளாக வீரம் செறிந்த மண்ணாக இருக்கிறது என்பதற்கு இம்மலையில் நடப்பட்டிருக்கும் நடுகற்களே சான்று. 

இரணுவ பணியில் சேரும் வேட்கையோடு உடற்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள்


இரணுவ பணியில் சேரும் வேட்கையோடு மலையேறும் இளைஞர்கள். Photo Credit: DW

ஓணான் கரடு பகுதியில் தொல்லியல் ஆய்வு: 

கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் பெருமாள்மலை - ஓணான்கரடு பகுதியில் 12.07.2026 அன்று ஆய்வு செய்தார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ளதாவது 

''போரில் வீர மரணம் எய்திய வீரர்களின் நினைவாகவோ செயற்கரிய செயல் செய்த சான்றோர்களின் நினைவாகவோ கல் நட்டு அதில் அவர் பெயரையும் பெருமைகளையும் செதுக்கி வைப்பது பண்டைய வழக்கம். இதனைத்தான் நடுகல் என்கிறோம்.

வீரக்கல் கவலையக்கல், கடவுளெய்திய கல் என இலக்கியங்களும் உழலைக்கல் என்ன மதுரை தமிழ் அகராதியும் நட்டகல் என புறநானூறும் நடுகல் என சிலப்பதிகாரமும் கூறுகிறது.


நடுகல் எடுப்பது பற்றி கிமு ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அதாவது 2600 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் சொல்லப்படுகிறது. அதில் 6 முறைகள் உள்ளதாக தொல்காப்பியம் சுட்டிக் காட்டுகிறது. 

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்
சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று 
இருமூன்று மரபின் கல்லொடு புணர  (புறத்:5/19-21) என்கிறது தொல்காப்பியம்.


நடுகல் நடும் 6 முறைகள்:

1. காட்சி:

நடுகல் அமைப்பதற்காக, போர் நடந்த இடத்தில் உள்ள சிறந்த கல்லைத் தேர்ந்து எடுத்தல்.

2. கால்கோள்: 

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லிற்கு மாலை சூட்டி, சடங்குகள் செய்து நடுகல் நடவு செய்வதற்கான செயலைத் தொடங்குதல்.

3. நீர்ப்படை:

கல்லைக் கொண்டுவந்து அதனை நீராட்டி, அதன் வெப்பத்தைத் தணித்துத் தூய்மைப்படுத்துதல்.

4. நடுதல்: 

சுத்திகரிக்கப்பட்ட அந்த நடுகல்லில் வீரனின் பெயர், அவனது வீரம் மற்றும் பெருமைகளைப் பொறித்து அவனுக்குரிய இடத்தில் நட்டு வைத்தல். 

5. பெரும்படை: 

நடுகல்லாக நட்ட கல்லினைத் தெய்வமாக பாவித்து, சிறப்பு வழிபாடுகள் செய்து பெரும் படையல் இடுதல்.

6. வாழ்த்தல்: 

அவ்வழியில் நின்றுகொண்டு, அந்த வீரனின் புகழையும் தியாகத்தையும் போற்றி வழிபட்டு வாழ்த்துதல்.

இவ்வாறு நடுகல் நடுவது குறித்து தொல்பகாப்பியம் குறிப்பிடுகிறது. தொல்காப்பியர் நடுகல் எடுப்பதற்குச் சொன்ன இலக்கண முறையை, இளங்கோவடிகள் அப்படியே பின்பற்றித் தமது காப்பியத்தின் காட்சி காதையில் முதலாவதாக அமைத்தார்.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு
– (புகார்:0/84-85)

புறப்பொருள் வெண்பா மாலை பொதுவியல் திணையில் கல்காண்டல், கல்கோள் நிலை, கல் நீர்ப்படுத்தல், கல் நடுதல், கல் முறைப்பழிச்சல், இற்கொண்டு புகுதல் என்பன நடுகல் என்று கூறுகிறார்.

கல்காண்டல் என்பது கல்லைக் காணல் என்பதைக் குறிக்கிறது. வீரனது உருவம் பொறித்து நடுவதற்கேற்ற கல்லைத் தேர்வது என்பது இதன் பொருள். 

இதில் குறிப்பிட்டுள்ளதுபடி நடுகல்லிற்காக கல்லை தேர்ந்தெடுப்பதற்கான தடயங்கள் பெருமாள்மலை - ஓணான் கரடு மலையில் 3க்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இது போன்று நடுகல்லிற்கு கல்லை தேர்ந்தெடுத்த தடயத்தை இந்த மலையில் இரண்டு இடங்களில் பார்க்க முடிகிறது. 


ஓணான் கரடு பகுதி நடுகற்கள்:

பெருமாள்மலை - ஓணான்கரடு மலையில் மூன்று நடுகற்கள் காணப்படுகின்றன.

பெருமாள் மலையின் அடிவாரத்தில் கன்னிமார் ஊற்று செல்லும் வழியில் மூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் நின்ற நிலையில் ஆண் உருவமானது காட்டப்பட்டுள்ளது. இடது பக்கம் புல்லாங்குழல் வைத்து இசைப்பது போலவும் கால்களின் இரண்டு பக்கங்களில் இரண்டு மாடுகள் பாய்ந்த  நிலையிலும், வலது கை மேற்புறத்தில் மற்றொரு மாடும் கட்டப்பட்டுள்ளது. சிற்பத்தின் இடது காலானது முன்னோக்கி வைத்த நிலையில் இடது பக்கவாட்டுக் கொண்டை போட்டு இடுப்பில் இடை ஆடையுடன் வளரி போன்ற ஆயுதம் காட்டுப்பட்டு உள்ளது. இச்சிற்பமானது இப்பகுதியில் இருந்த இனக்குழு தலைவராக இருந்திருக்கலாம் என தெரிய வருகிறது. இந்நடுகல்லின் சிற்ப அமைதியைக் கொண்டு  இதன் காலம் 600 ஆண்டுகள் பழமையானது என கருதலாம். 

இந்நடுகல்லை கடந்து கன்னிமார் ஊற்று செல்லும் வழியில் 100 அடி தூரத்தில் மலை அடிவாரத்தில் மற்றொரு நடுகல் காணப்படுகிறது. இதுமூன்றடி உயரம் 2 அடி அகலம் கொண்ட பலகை கல்லில் ஆண் பெண் சிற்பமானது நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளது. ஆண் சிற்பத்தின் இடது கையில் கேடயமும் வலது கையில் ஓங்கி நிலையில் பெரிய வாளும் இறுக்கி கட்டிய இடுப்பு ஆடையில் குறுவாளும் காட்டியுள்ளனர். பெண் சிற்பத்தில் இடது பக்க கொண்டை போட்டும், வலது கையில் குடுவையும்  இடது கையானது தேய்ந்த நிலையில் இருப்பதால் விவரங்கள் தெரியவில்லை. இந்நடுகல்லின் சிற்ப அமைதியைக் கொண்டு  இதன் காலம் 800 ஆண்டுகள் பழமையானது என கருதலாம். 

இந்நடுகல்லின் மிக அருகில் பாறை மீது நடுகல் எடுக்க பாறையை உளியால் வெட்டிய தடயங்கள் காணப்படுகிறது. வீரச் செயலின் காரணாமக இறந்து போன இரண்டு வீரர்கள் நினைவாக இரண்டு நடுகற்கள் எடுப்பதற்கு பாறையை தேர்வு செய்து அளவெடுத்து வெட்டும் பணி நடைப்பெற்றுள்ளது. எதோ ஒரு காரணத்தால் அது கைவிடப்பட்டுள்ளது. அப்பணி நிறைவுப் பெற்று இருந்தால் இவ்விடத்தில் மேலும் இரண்டு நடுகற்கள் காட்சிப்படுட்டிருக்கலாம்.   

ஓணான் கரடு மலையடிவாரத்தின் கிழக்குமுனையில் ஆண் பெண் சதிகல் சிற்பம் அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. தலைவன் இறந்தவுடன் மனைவி சதி ஏறியதை தெரிவிக்கும் விதமாக இந்த நடுகல் காட்டப்பட்டுள்ளது. சதியேறியதின் அடையாளமாக பெண்ணின் கையில் மங்கல சின்னமான கண்ணாடியும் வளையல்களும் காட்டியுள்ளனர். இந்நடுகல்லின் சிற்ப அமைதியைக் கொண்டு  இதன் காலம் 600 ஆண்டுகள் பழமையானது என கருதலாம். 

இந்நடுகல் அமைந்துள்ள பகுதியில் நடுகல் பாறைகள் வெட்டியெடுக்கபட்டு சிற்ப அமைதி செதுக்கும் பணிகள் துவக்கநிலையில் கைவிடப்பட்ட இரண்டு கற்கள் காணப்படுகிறது.   

இவைப் போக சலுப்பான் கரடு மலை அடிவாரத்தில் உடைந்த நிலையில் ஆண் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. இப்பகுதியில் விரிவாக ஆய்வு செய்தால் பல தொல்லியல் சான்றுகளை கண்டறிய முடியும்'' என பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்வறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடுகற்கள் எடுப்பதற்காக வெட்டத் துவங்கி கைவிடபட்ட பாறை



துவக்க நிலையிலேயே சிற்பிகளால் கைவிடபட்ட நடுகல்

800 ஆண்டுகள் பழமையான நடுகல்

600 ஆண்டுகள் பழமையான நடுகல்

600 ஆண்டுகள் பழமையான சதி நடுகல்

GPS - 9.828619, 77.701107

GPS - 9.823047, 77.697864

GPS - 9.821832, 77.697693



சலுப்பான் கரடு அடிவாரத்தில் உள்ள ஆண் சிற்பம்

பெருமாள்மலை - ஓணான் கரடு தாவரங்கள் 

இப்பகுதி ஒரு முல்லைநிலம் என்பதற்கு இம்மலையில் காணப்படும் தாவரங்கள் சான்றாகும். குறைவான மழைப் பகுதியில் வளரக்குடிய வெப்பமண்டல தாவரங்களே பரவலாக இப்பகுதியில் காணப்பட்டன. இத்தாவரங்களை சார்ந்துள்ள பாலூட்டி வகை விலங்குகள், பறவைகள், ஊர்வன உயிரினங்களுக்கு இம்மலையும், மலைத் தாவரங்களும் வாழ்வாதாரமாக இருக்கின்றன. இம்மலையில் கீழ்காணும் தாவரங்களை இரண்டு மணி நேர கள ஆய்வில் தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் ஆவணம் செய்தார்.   

  1. நஞ்சுண்டான் 
  2. இலந்தை 
  3. வேம்பு 
  4. வெருவெட்டான் 
  5. உசில் 
  6. வெள்வேலம் 
  7. வெப்பாலை
  8. மஞ்சநத்தி 
  9. மலை ஆவாரை
  10. ஆவாரை 
  11. முள் கிளுவை 
  12. ஆலம் 
  13. இச்சி 
  14. சீமை கருவேலம்
  15. செங்கத்தாரி
  16. திருகு கள்ளி 
  17. நிலக்குமிழ் 
  18. காரை 
  19. மதுக்காரை 
  20. களா
  21. தவசி கீரை 
  22. வெண் பூலா 
  23. செங்காந்தள்
  24. பிரண்டை 
  25. பழம்பாசி 
  26. விஷ்ணு கிராந்தி 
  27. அவுரி 
  28. குருவிச்சி 
  29. தாத்தா பூ 
  30. வெள்ளருகு 
  31. அம்மன் பச்சரிசி 
  32. பேராமுட்டி 
  33. பேய் விரட்டி 
  34. சிவனார் வேம்பு  
  35. சுக்கு நாறி புல் 
  36. எருக்கு 
  37. பெரியாநங்கை 
  38. கொழுஞ்சி 
  39. யானைக் குன்றிமணி
  40. துளசி 
  41. நாய் கடுகு
  42. மூவிலை (நரிபயறு)
  43. கவிழ் தும்பை 
  44. பண்ணை கீரை 
  45. பற்படாகம் 
  46. நெருஞ்சி 
  47. ஓரிதழ் தாமரை 
  48. சிறு புள்ளடி
  49. நில சடைச்சி 
  50. மூக்கிரட்டை
  51. தலைச்சுருளி
  52. முசுண்டை
  53. நரந்தம் புல் (அ) தரகம் புல் 
உள்ளிட்ட 53 வகை தாவரங்கள் பெருமாள்மலை - ஓணான் கரட்டில் தாவரவியல் ஆய்வாளர் திரு. கார்த்திகேயன் அவர்களால் ஆவணம் செய்யப்பட்டது. இப்பகுதியின் தாவர வகைமை குறித்த அறிய விரிவான ஆய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். 
 

மதுக்காரை - Mountain Pomegranate (Catunaregam spinosma)




செங்காத்தாரி (Capparis sepiaria)

கார்த்திகை மாம்பிளி:
இம்மலைகளில் உள்ள பல்வேறு தாவரங்களை ஊர்மக்கள் மூலிகையாக பயன்படுதுகின்றனர். மலைகளில் காணப்படும். எலுமிச்சை வாசம் கொண்ட தரகம் புல்லை வைத்து ஊரில் குடிசை, மாட்டு கொட்டகை ஆகியவற்றுக்கு ஓலைக்கூரை அமைக்கிறார்கள். காய்ந்த தரகம் புல்லை மாம்பிளி என்றும், சிலுந்துமுடி என்றும் அழைக்கின்றனர். கார்த்திகை திருவிழா கொண்டாட்டத்தில் தரகம்புல் முக்கிய இடம் பிடிக்கிறது. கார்த்திகை திருநாளில் திருவண்ணமலையில் கொண்டாடப்படும் மாவளியைப் போல  மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் ஒணான்கரடு மலையைச் சுற்றியுள்ள ஊர்களில் மாம்பிளி கொண்டாடப்படுகிறது. பனைமரத்தின் பூங்கொத்துக்களால் (அல்லது உலர்ந்த பொருட்களால்) செய்யப்படும் 'மாவளி'யை தீப்பற்ற வைத்து, கயிற்றில் கட்டி காற்றில் வட்டமாக சுற்றும் ஒரு பாரம்பரிய நிகழ்வு பெரிய கார்த்திகை அன்று தொண்டை மண்டலத்தில் நடைபெறுகிறது. அதேபோல காய்ந்த தரகம்புற்களை புல்லுக்கட்டுப் போல கட்டி, அதன் ஒருமுனையில் தீவைத்து சிலம்பம் போல் மாம்பிளி தீப்பந்ததை சுற்றுகின்றனர். கார்த்திகை மாதம் சொக்கப்பனை கொளுத்துவதற்கும் சிலுந்துமுடி என்றழைக்கப்படும் காய்ந்த தரகம் புற்களையே பயன்படுதுகின்றனர். கார்த்திகை திருநாளன்று சங்கரலிங்கபுரம் சிவங்கோயிலில் 1008 விளக்கு ஏற்றப்படுகிறது. கார்த்திகையில் சிவன் கோயில் கோபுரத்தில் ஏற்றப்படும் முதல் விளக்கும், 1008வது விளக்கும் மாம்பிளி என்றழைக்கப்படும் தரகம்புற்களை கொண்டே பாரம்பரியமாக ஏற்றப்படுகிறது. 


பாப்பிநாயக்கன்பட்டி இளைஞர்கள் சுற்றும் மாம்பிளி 


கார்த்திகை திருநாளன்று சங்கரலிங்கபுரம் சிவங்கோயிலில் 1008 விளக்கு ஏற்றப்படுகிறது. 


பாலூட்டி வகை காட்டுவிலங்குகள்:

பெருமாள் மலை - ஓணான் கரடு ஆகிய பகுதியில் வாழும் பாலூட்டிகள் குறித்து அறிய, உள்ளூர் மக்களிடம் விலங்குகளின் புகைப்படங்களை காட்டி கணக்கெடுப்பு செய்தோம். பாலூட்டிகள் கணக்கெடுப்பின் மூலம் கீழ்காணும் விலங்குகள் பெருமாள்மலை - ஓணான் கரடு மலையில் இருப்பதை பதிவு விலங்கியல் ஆய்வாளர் தமிழ்தாசன் ஆவணம் செய்தார். 

  1. நெடுநரி (Canis aureus)
  2. குறுநரி (Vulpes bengalensis)
  3. வெருகு (Felis chaus)
  4. செம்முக குரங்கு (Macaca radiata)
  5. புள்ளிமான் (Axis axis)
  6. காட்டுப்பன்றி (Sus scrofa)
  7. புனுகுப்பூனை (Paradoxurus hermaphroditus)
  8. மரநாய் (Viverricula indica)
  9. முள்ளெளி (Paraechinus nudiventris) - Vulnerable
  10. சாம்பல் நிறக் கீரி (Herpestes edwardsii)
  11. முள்ளம்பன்றி (Hystrix indica)
  12. குறுமுயல் (Lepus nigricollis)
  13. தேவாங்கு (Loris lydekkerianus)
  14. மூவரி அணில் (Funambulus palmarum)
  15. குறுமூக்கு வவ்வால் (Cynopterus sphinx)
  16. கருஞ்செவி வவ்வால் (Taphozous melanopogon)
  17. வெள்ளெலி (Tatera indica)
  18. பாறை எலி (Cremnomys cutchicus)
  19. வயல் எலி (Mus booduga)
உள்ளிட்ட 19 வகையான பாலூட்டி வகை விலங்குகள் பெருமாள்மலை - ஓணான் கரடு மலையை வாழிடமாக கொண்டுள்ளது. இதில் செம்முக குரங்கு, தேவங்கு, முள்ளெலி ஆகிய காட்டுயிர்கள் அழியும் நிலையில் (Redlist) உள்ள விலங்குகளாக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) பட்டியலிட்டுள்ளது. பாலூட்டு விலங்குகள் கணக்கெடுப்பு வழியே, இப்பகுதியில் என்னென்ன காட்டு விலங்குகள் உள்ளது என்பதை அறிய முடிந்தது. இது ஒரு முதல்நிலை தரவு ஆகும். இதன் அடிப்படையில் விலங்குகளின் எச்சம், கால்தடம், இருப்பிடம், நடவடிக்கை, வாழிட சிக்கல், மனித - விலங்கு எதிர்கொள்ளல் ஆகியவற்றை அறிந்துக் கொள்ள விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

ஓணான் கரடு - பெருமாள்மலை பறவைகள்:

பெருமாள்மலை - ஓணான் கரடு மலைப் பகுதி புதர் செடிகளை நம்பி வாழும் புறா, சிட்டு, வானம்பாடி, குயில், சிலம்பன் வகை பறவைகளுக்கும்; மலைப் இடுக்குகளில் காணப்படும் கொம்பன் ஆந்தை பறவைக்கும்; சிறுப்பறவைகள், சிறுபாலூட்டி விலங்குகள், ஊர்வன உயிரினங்களை வேட்டையாடும் கழுகு, பருந்து, வல்லூறு போன்ற வேட்டை பறவைகளுக்கும் நல்லதொரு வாழிடமாக உள்ளது. இப்பகுதியில் இரண்டுமணி நேர ஆய்வில் 50க்கும் மேற்பட்ட பறவையினங்களை ஆய்வுக் குழுவினர் ஆவணம் செய்தனர். 
  1. மயில் - Indian Peafowl (Pavo cristatus)
  2. கவுதாரி - Gray Francolin (Ortygornis pondicerianus)
  3. மாடப் புறா - Rock Pigeon (Columba livia)
  4. பட்டைக் கழுத்து புறா - Eurasian Collared-Dove (Streptopelia decaocto)
  5. புள்ளிப் புறா - Spotted Dove (Spilopelia chinensis)
  6. கள்ளிப் புறா - Laughing Dove (Spilopelia senegalensis)
  7. செண்பகம் - Greater Coucal (Centropus sinensis)
  8. கள்ளிக் குயில் - Sirkeer Malkoha (Taccocua leschenaultii)
  9. நீலமுகப் பூங்குயில் - Blue-faced Malkoha (Phaenicophaeus viridirostris)
  10. சுடலைக் குயில் - Pied Cuckoo (Clamator jacobinus)
  11. குயில் - Asian Koel (Eudynamys scolopaceus)
  12. அக்காக்குயில் - Common Hawk-Cuckoo (Hierococcyx varius)
  13. பனை உழவாரன் - Asian Palm Swift (Cypsiurus balasiensis)
  14. செம்மூக்கு ஆள்காட்டி - Red-wattled Lapwing (Vanellus indicus)
  15. வல்லூறு - Shikra (Tachyspiza badia)
  16. பச்சை பஞ்சுருட்டான் - Asian Green Bee-eater (Merops orientalis)
  17. வெண்மார்பு மீன்கொத்தி - White-throated Kingfisher (Halcyon smyrnensis)
  18. பனங்காடை - Indian Roller (Coracias benghalensis)
  19. காட்டுக் கீச்சான் - Common Woodshrike (Tephrodornis pondicerianus)
  20. செம்மார்பு குக்குறுவான் - Coppersmith Barbet (Psilopogon haemacephalus)
  21. மாம்பழச்சிட்டு - Common Iora (Aegithina tiphia)
  22. கரிச்சான் - Black Drongo (Dicrurus macrocercus)
  23. வால்காக்கை - Rufous Treepie (Dendrocitta vagabunda)
  24. காக்கை - House Crow (Corvus splendens)
  25. அண்டங்காக்கை - Large-billed Crow (Corvus macrorhynchos culminatus)
  26. வானம்பாடி - Ashy-crowned Sparrow-Lark (Eremopterix griseus)
  27. புதர் வானம்பாடி - Jerdon's Bushlark (Plocealauda affinis)
  28. தையல்சிட்டு - Common Tailorbird (Orthotomus sutorius)
  29. காட்டுக் கதிர்குருவி - Jungle Prinia (Prinia sylvatica)
  30. சாம்பல் கதிர்குருவி - Ashy Prinia (Prinia socialis)
  31. கதிர்குருவி - Plain Prinia (Prinia inornata)
  32. செம்பிட்டத் தகைவிலான் - Eastern Red-rumped Swallow (Cecropis daurica)
  33. செம்பிட்ட கொண்டைக்குருவி - Red-vented Bulbul (Pycnonotus cafer)
  34. கருஞ்சாம்பல் சிலம்பன் - Large Gray Babbler (Argya malcolmi)
  35. மஞ்சள் அலகு சிலம்பன் - Yellow-billed Babbler (Argya affinis)
  36. மஞ்சள் கண் சிலம்பன் - Yellow-eyed Babbler (Chrysomma sinens)
  37. சிலம்பன் - Common Babbler (Argya caudata)
  38. நாகணவாய் - Common Myna (Acridotheres tristis)
  39. புதர்சிட்டு - Indian Robin (Copsychus fulicatus)
  40. வெளிர் அலகு பூங்கொத்தி - Pale-billed Flowerpecker (Dicaeum erythrorhynchos)
  41. ஊதாப்பிட்ட தேன்சிட்டு - Purple-rumped Sunbird (Leptocoma zeylonica)
  42. ஊதா தேன்சிட்டு - Purple Sunbird (Cinnyris asiaticus)
  43. வெண்புருவ வாலாட்டி - White-browed Wagtail (Motacilla maderaspatensis)
  44. புதர்சிட்டு - Pied Bushchat (Saxicola caprata)
  45. இராபக்கி - Indian Nightjar (Caprimulgus asiaticus)
  46. கொம்பன் ஆந்தை - Indian Eagle Owl (Bubo bengalensis)
  47. கருந்தோள் பருந்து - Black-winged kite (Elanus axillaris)

உள்ளிட்ட 47 வகை பறவைகள் பெருமாள்மலை - ஓணான் கரடு பகுதியில் பறவையியல் ஆய்வாளர்கள் திருமிகு ந.இரவீந்திரன், ஹீமோக்ளோபின், ஜோதிமணி, சக்திவேல், பேட்ரிக் டேவிட், பாலகிருஷ்ணா, செல்வக்குமார், கா.ரவீந்திரன், வெங்கட்ராமன், விஷ்வநாத் ஆகியோரால் ஆவணம் செய்யப்பட்டது. கள்ளிப்புறாவின் கூடும், முட்டையும் ஓணான் கரடு மலையில் பார்க்க முடிந்தது. இம்மலையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு மணி நேர கள ஆய்வில் 47 வகை பறவைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவக் காலத்திலும் இப்பகுதியை விரிவாக ஆய்வு செய்தால் 150க்கும் மேற்பட்ட பறவைகளை நாம் இங்கே அடையாளம் காண முடியும்.    

https://ebird.org/checklist/S370971058


பச்சை பஞ்சுருட்டான் - Asian Green Bee-eater

புதர் வானம்பாடி - Jerdon's Bushlark

பனங்காடை - Indian Roller

வானம்பாடி - Ashy-crowned Sparrow-Lark


மஞ்சள் கண் சிலம்பன் - Yellow-eyed Babbler

ஊதா தேன்சிட்டு - Purple Sunbird



செம்மார்பு குக்குறுவான் - Coppersmith Barbet
மாம்பழச்சிட்டு - Common Iora

சாம்பல் நிற சிலம்பன் - Large gray babbler

பட்டைக் கழுத்து புறா - Eurasian Collared-Dove

கள்ளிப் புறா - Laughing Dove


கள்ளிப் புறா கூடு மற்றும் முட்டை



சிலம்பன் - Common Babbler


வண்ணத்துப்பூச்சிகள்:

முல்லை நிலத்திற்குரிய தாவரங்களும், அதை சார்ந்து வாழும் வண்ணத்துபூச்சிகளும் இப்பகுதில் பரவலாக பார்க்க முடிந்தது. இம்மலையில் கீழ்காணும் வண்னத்துபூச்சிகளை இரண்டு மணி நேர கள ஆய்வில் முதுவியல் விலங்கியல்துறை மாணவர் திரு. கமலேஷ் அவர்கள் ஆவணம் செய்தார்.   

     1. Lime Butterfly - எலுமிச்சை அழகி
     2. Common Emigrant - கொள்ளை வெள்ளையன் / கொன்னை வெள்ளையன்
     3. Mottled Emigrant - திட்டு வெள்ளையன் / அவரை வெள்ளையன்
     4. Crimson Tip - செங்கடவி / கருஞ்சிவப்பு நுனிச்சிறகன்
     5. White Orange Tip - வெள்ளை ஆரஞ்சு முனையன்
     6. Small Orange Tip - சிறிய ஆரஞ்சு முனையன்
     7. Small Grass Yellow - சிறிய புல்வெளி மஞ்சளன்
     8. Common Grass Yellow - மஞ்சளாத்தி / பொதுவான புல்வெளி மஞ்சளன்
     9. Common Gull - மஞ்சாடை / ஆதொண்டை வெள்ளையன்
     10. Small Salmon Arab - சிறிய சால்மன் அரேபியன் (வெளிர்சிவப்பு வெள்ளையன்)
     11. Pioneer - முன்னோடி வெள்ளையன்
     12. Plain Tiger - வெந்தய வரியன் / மஞ்சள் புலி
     13. Common Leopard - சிறுத்தை வரியன்
     14. Tawny Coster - அகல் விளக்கு வரியன் / விளக்கெண்ணெய் பூச்சி
     15. Common Pierrot - கரும்புள்ளி நீலன்
     16. Gram Blue - அவரை நீலன்
     17. Lime Blue - எலுமிச்சை நீலன்
     18. Lesser Grass Blue - சிறிய புல் நீலன்
     19. Small Grass Jewel - சிறிய புல்வெளி ரத்தினம்
     20. Indian Skipper - இந்தியத் துள்ளன்
     21. Indian Dart - இந்திய அம்பன் / புல்வெளித் துள்ளன்

    உள்ளிட்ட 21 வகை வண்ணத்துப்பூச்சிகள் அமேரிக்கன் கல்லூரி மாணவர் திரு. கமலேஷ் அவர்களால் இப்பயணத்தில் பெருமாள்மலை - ஓணான் கரடு மலையில் ஆவணம் செய்யப்பட்டது. விரிவான ஆய்வுகள் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்ககூடும். 


    Pioneer - முன்னோடி வெள்ளையன்

    Crimson Tip - செங்கடவி 


    Common Pierrot - கரும்புள்ளி நீலன்

    Tawny Coster - அகல் விளக்கு வரியன்




    Indian Skipper - இந்தியத் துள்ளன்


    ஊர்வனங்கள் (Reptiles) 
    ஓணான் கரடு என்கிற மலையின் பெயருக்கேற்ப மலை ஓணான்கள் இப்பகுதியில் பரவலாக பார்க்க முடிந்தது. இம்மலையில் உடும்பும் உள்ளது என ஊர் மக்கள் தெரிவித்தனர். இப்பயணத்தில் நேரில் பார்த்த ஊர்வன உயிரினங்களை காட்டுயிர் ஆய்வளர் திரு. விஷ்வநாத் ஆவணம் செய்தார்.  

    1.  விசிறித் தொண்டை ஓணான் - Sitana ponticeriana (Fan Throated Lizard)
    2. மலை ஓணான் - Psammophilus dorsalis (South Indian Rock Agama) 
    3. பெரு அரணை - Eutropis carinata (Keeled indian Mabuya)


    மலை ஓணான் - South Indian Rock Agama

    விசிறித் தொண்டை ஓணான் - Fan Throated Lizard

    மலை ஓணான் - South Indian Rock Agama

    விசிறித் தொண்டை ஓணான் - Fan Throated Lizard


    விசிறித் தொண்டை ஓணான் - Fan Throated Lizard


    மலை ஓணான் - South Indian Rock Agama

    விசிறித் தொண்டை ஓணான் - Fan Throated Lizard

    விசிறித் தொண்டை ஓணான் - Fan Throated Lizard

    மலை ஓணான் - South Indian Rock Agama



    மலை ஓணான் - South Indian Rock Agama


    பூச்சிகள் (Insects)
    1. இந்திய காகிதக் குளவி - Ropalidia marginata (Indian Paper Wasp) 
    2. நரைமுடி தேன் எறும்பு - Camponotus rufoglaucus (Velvet Sugar Ant) : 
    3. சிராசன எறும்பு - Crematogaster (Acrobat Ant) 

    பெருமாள்மலை - ஓணான்கரடு பகுதியில் ஊர்வனங்கள் மற்றும் பூச்சிகளை காட்டுயிர் ஆய்வாளர் திரு. விஷ்வநாத் அவர்கள் ஆவணம் செய்தார்.  

    Cucumber Moth (Diaphania Indica)





    Nymph of Shield or Jewel bug

    நரைமுடி தேன் எறும்பு - Velvet Sugar Ant (Camponotus rufoglaucus)

    இந்தியக் காகிதக் குளவி - Indian Paper Wasp (Ropalidia marginata)

    சிராசனா எறும்பு - Acrobat Ants (Crematogaster sp)

    ஒரே மலையில் மூன்று பழமையான நடுகற்கள்; ஆடைக்கும் கோடைக்கும் வற்றாத சுனைகள்; குடிநீர் ஊருணிக்கும் பாசனக் கண்மாய்க்கும் மழை நீரை கொண்டு செல்லும் நீரோடைகள்; கிடை மாடுகளின் குளம்படிச் சத்தம்; நெடுநரி, காட்டுப் பூனை, மரநாய், முள்ளம்பன்றி, உடும்பு, மலை ஓணான் உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடம்; கள்ளிப்புறா, புதர்ச்சிட்டு, கொம்பன் ஆந்தை, செம்மார்பு குக்குறுவான், கருங்குயில் உள்ளிட்ட பறவைகள் சிறகடிக்கும் ஓசை என பசுமையாக உள்ளது ஓணான்கரடு. 

    இவ்வாறு பல வரலாற்று மற்றும் சூழலியல் சிறப்புகளைக் கொண்ட செழிப்பான முல்லை நிலத்து வாழிடமாக விளங்கும் ஓணான் கரடு பகுதியை தமிழ்நாடு உயிரியியல் வகைமைச் சட்டம் 2007இன் (Section 37 of the Biological Diversity Act, 2002) கீழ் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க தமிழ்நாடு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக கேட்டுக் கொள்கிறோம். 

    நன்றி:
    • திரு. பெத்துமுனி, சங்கரலிங்கபுரம்
    • திருமதி. விமலா, எழுமலை 
    • திரு. வினோத், ம.கல்லுப்பட்டி
    • திரு. பெத்தனன், ஊர்த் தலைவர், சங்கரலிங்கபுரம்
    • திரு. கு. பிச்சையப்பன், சங்கரலிங்கபுரம்
    • திரு. செல்லத்துரை, சங்கரலிங்கபுரம்
    • திரு. ராசுதேவர், சங்கரலிங்கபுரம்
    • திரு. செல்லத்தேவன், சங்கரலிங்கபுரம்
    • திரு. சரத்குமார், சங்கரலிங்கபுரம்
    • திரு. கார்த்திக், சங்கரலிங்கபுரம்
    • திரு. தனுஷ்கோடி, சங்கரலிங்கபுரம்
    • திரு. மாரியப்பன், சங்கரலிங்கபுரம்
    • திரு. முனியாண்டி, சங்கரலிங்கபுரம்
    • சிறுவர்கள் போத்திஸ் & மித்திஸ் 
    வந்திருந்த அனைவருக்கும் ஊர் சார்பாக காலை உணவை ஏற்பாடு செய்த திரு. செல்லத்துரை அவர்களுக்கும், மதுரையில் வந்திருந்த ஆய்வு குழுவினருக்கு ஒரு போக்குவரத்து வாகனத்தை (Ertiga Car) ஏற்பாடு செய்த பெத்துமுனி அவர்களுக்கும் நன்றி.  

    ஒளிப்படங்கள்:

    ஜோதிமணி, வெங்கட்ராமன், பாலகிருஷ்ணா, விஸ்வநாத், பெத்துமுனி, அருண்பிரபு, செல்வக்குமார், இரவீந்திரன், தேவி அறிவு செல்வம், தமிழ்தாசன்

    ஆய்வுக் குழு

    • பேராசிரியர் முனைவர் ப. தேவி அறிவு செல்வம், கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர், மதுரை 
    • திரு. அறிவு செல்வம், தொல்லியல் ஆய்வாளர், மதுரை 
    • திரு. ந. இரவீந்திரன், பறவையிலாளர், மதுரை 
    • மருத்துவர் த. ஹீமோக்ளோபின், அரவிந்த் கண் மருத்துவமனை, பறவையிலாளர், மதுரை 
    • திரு. கா. ரவிந்திரன், முன்னாள் வனத்துறை அலுவலர்,  மதுரை 
    • முனைவர். திரு. ஜெ. பேட்ரிக் டேவிட்,  விலங்கியல் ஆய்வாளர்,  மதுரை 
    • திரு. சு. செல்வக்குமார், பறவையியலாளர், மதுரை 
    • திரு. நே. கார்த்திகேயன், தாவரவியல் ஆய்வாளர், மாவட்ட பசுமைக்குழு உறுப்பினர், மதுரை 
    • திரு. பு.இரா. விஷ்வநாத், காட்டுயிர் ஆய்வாளர், மதுரை 
    • திரு. ச. ஜோதிமணி, காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், மதுரை
    • திரு. உ. பால கிருஷ்ணா, காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், மதுரை
    • திரு. ரெ. வெங்கட்ராமன், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர், மதுரை
    • திரு. தமிழ்தாசன், பண்பாட்டுச் சூழலியல் ஆய்வாளர், மதுரை 
    • திருமதி. சு. நாகதேவி, ஆசிரியர், மதுரை 
    •  திரு. மு. கமலேஷ், முதுகலை விலங்கியல் மாணவர்
    • திரு. க. சக்திவேல், பறவையியலாளர்
    • செல்வன். அகிலேஷ் & பிரணவ், மாணவர்கள், டி.வி.எஸ் பள்ளி, மதுரை

    எழுத்து தொகுப்பு பணி:
    - தமிழ்தாசன் 


    ஆய்வாளர்கள், உதவியாளர்கள், ஊர் மக்கள் பங்கேற்ற மலையறிதல் நிகழ்வு புகைப்படம்:






















































    ஊடக செய்திகள்:
    1. https://www.etvbharat.com/ta/state/archaeologists-find-rock-that-was-allocated-for-hero-stone-near-madurai-tns26071303670
    2. https://arasiyaltoday.com/demand-for-the-tamil-nadu-government-to-declare-it-an-archaeological-site
    3. https://www.facebook.com/share/v/1P3yVnQ4iK



    Comments

    Popular posts from this blog

    கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

    அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை