அய்யனார் கோயில் ஓடை அணை - பண்பாட்டுச் சூழல் நடை

 அய்யனார் கோயில் ஓடை அணை - பண்பாட்டுச் சூழல் நடை


பண்பாட்டுச் சூழல் நடையின் 13 வது பயணமாக பேரையூர் வட்டம் மள்ளபுரம் ஊராட்சி ம.கல்லுப்பட்டி ஊரின் அருகேயுள்ள அய்யனார்புரம் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் கோயில் ஓடை அணைக்கு 21.01.2024 அன்று சென்று இருந்தோம். அதிகாலை 4.30 மணிக்கு அடைக்கலம் முதியோர் இல்லத்தில் இருந்து 30 பேர் கொண்ட குழுவாக அண்ணா கல்லூரி வழங்கிய வாகனத்தில் அய்யனார் கோயில் ஓடை அணைக்கு சென்றோம். நான்கு பக்கமும் மலைகள் சூழ்ந்த அழகான பசுமையான நிலப்பரப்பு.




நாம் இருப்பது மதுரையா இல்லை பொள்ளாச்சியா என எல்லோருக்குள்ளும் ஐயம் ஏற்படும் அளவுக்கான பனிசூழ் பசுமை பரப்பு. வாழை காத்த அய்யனார் கோயிலுக்குள் வந்து அமர்ந்தோம். அய்யனார் கோயில் விவசாய பாசன சங்கம் உறுப்பினர்கள் - திரு. வினோத், காளியப்பன், மு. ராமர், மு. இடும்பசாமி, நேசமணி உள்ளிட்டவர்கள் நம்மை வரவேற்று இந்நிகழ்வுக்கும், நமது ஆய்வு பணிக்கும் துணையாக இருந்தார்கள். அய்யனார் கோயில் வரலாறு, திருவிழா, அய்யம்பூமி, அய்யனார் அணை, மலைப்பாதை, வேளாண் பயிர்கள், யானைகளின் நடமாட்டம், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள், அவர்கள் நடத்திய போராட்டங்கள், அரசிடம் அவர்கள் வைத்த கோரிக்கை என பல தரப்பட்ட கருத்துகளை திரு. வினோத் உள்ளிட்ட விவசாய சங்க உறுப்பினர்கள், ஊர் பெரியவர்கள் எங்களுடன் பகிர்ந்து கொண்டனர். விவசாயிகளின் கருத்துகளை அறிந்த பின் அங்கிருந்து எங்களை அய்யனார் கோயிலின் பின்புறமுள்ள குன்றில் வாழும் பளியர் பழங்குடி மக்களின் குடியிருப்பு பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.



பளியர் பழங்குடி மக்களின் வாழ்வியல், அவர்கள் அன்றாடம் சந்திக்கும் சிக்கல்கள், அவர்களின் வாழ்வியல் தேவை உள்ளிட்டவைகளை கேட்டறிந்த பின் அவர்களோடு ஒரு குழு புகைப்படம் எடுத்துவிட்டு இறங்கினோம். பின் அங்கிருந்து புலவர் ஊரணி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டீஸ்வரன் கோவில் ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தோம். காலை உணவை முடித்துவிட்டு, விவசாய சங்கம் ஏற்பாடு செய்திருந்த உழவு இழுவையுந்து வாகனம் (tractor) காத்திருந்தது. அதில் ஏறி வேளாண் நிலங்களுக்கு ஊடாக யானைகள் வந்த வழித்தடத்தையும் ஆவணம் செய்தோம். ஏரசல் அருவி, கரடியூத்து, சின்ன கோழியூத்து, பெரிய கோழியூத்து நீர் சேர்ந்து வரும் ஓடை நீரில் குளித்துவிட்டு, யானை சேதப்படுத்திய மு.இடும்பசாமி அவர்களின் தோட்டத்திற்கு சென்றோம். அங்கே எங்களுக்கு எலுமிச்சை பழச்சாறு, இளநீர், கொய்யா பழம், சப்போட்டா பழம் வழங்கி அன்புடன் கவனித்தனர். அவர்களின் விருந்தோம்பல் பண்பு மெய்சிலிர்க்க வைத்தது. யானை சேதப்படுத்திய வயலையும் நேரில் சென்று ஆவணம் செய்தோம். வரும் வழியில் , குதித்தோடிய கொம்புடைய புள்ளி மான், கேளையாடு எழுப்பிய சத்தம், யானை கூட்டத்தின் லத்திகள், பெரும்பூனையின் கால்தடம், பூச்சிகள் உள்ளிட்டவைகளை திரு. விஸ்வா மற்றும் திரு. ஆறுமுகம் அவர்கள் ஆவணம் செய்தார்கள். பறவைகள் ஆவணம் செய்யும் குழு ஏறக்குறைய 68 வகை பறவைகளை ஆவணம் செய்தனர். வண்ணத்துப்பூச்சிகளை ஆவணம் செய்யும் குழு 45 வகை வண்ணத்துப்பூச்சிகளை ஆவணம் செய்தனர். பண்பாட்டுக் குழு அய்யனார் கோயில், சிலை, பளியர் மக்களின் உரையாடல் ஆகியவற்றை ஆவணம் செய்தனர். தாவரங்களையும் ஒரு குழு ஆவணம் செய்தது. நேரமானதால் அய்யனார் கோயில் அணை முடித்துவிட்டு உலைப்பட்டி போக வேண்டும் என்கிற எங்கள் திட்டத்தை மாற்றிவிட்டு மதுரை திரும்பினோம்.

நாம் குழுவாக செய்த ஆய்வுகளை ஆவணமாக தொகுத்து கீழே எழுதி இருக்கிறோம்.

மலைகளும் மலையோடைகளும்:
அய்யனார் கோயில் பின்புறமாக அல்லது அணையின் கிழக்கில் இருந்து வடக்கு வரை வரிசையாக இருக்கும் மலை குன்றுகள் - ஒணான் கரடு, மொட்டை மலை, நெல்லு விளஞ்சான் பாறை, சூழி மலை, சட்டி கவுத்தான் பாறை, கோவரன் குட்டம், ஊமன் குட்டு, அல்லிச்சுனை பாறை, தொண்டான் குழிப்பாறை, கிளியூத்து, அமைச்சுனை, கரடி ஊத்து, சின்ன கோழி ஊத்து, யானைக்கல்லு, கட்டளைக்கோம்பை, கன்னிமார் ஊத்து வெள்ள பாறை, மாவிலங்கி கணவாய், பண்ணி உருண்டான் பாறை, பெரியவீரச்சுனை மலை, தலை வெட்டி நாகசாமி மலை, பாலகோம்பை, பண்ணைக்காடு மலை உள்ளிட்ட மலைகள் சூழ அமைந்துள்ளது அய்யனார் கோயில் ஓடை அணை. இரண்டு மலைகள் ஒன்றொடு ஒன்று உரசி சந்திக்கும் இறக்கமான பகுதியை கவுளி / கவளி என்று மக்கள் அழைக்கின்றனர். இப்பகுதியில் கணவாய் வழியே இருந்த மலைப்பாதை தேனி செல்வதற்கு வசதியாக இருந்ததாகவும், அது தற்போது பயன்பாட்டில் இல்லை என்றும் கூறுகிறார்கள். அதனால் இவர்கள் மூன்று மணி நேரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இந்த கணவாய் பகுதியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்ததனர்.

நீரோடைகள்:
அல்லிச்சுனை, கிளியூத்து, ஆமைச்சுனை, எரசல் (இரைச்சல்) அருவி, கரடியூத்து, சின்ன கோழியூத்து, புளிச்ச தண்ணியூத்து, பெரிய கோழியூத்து, கன்னிமார் ஊத்து உள்ளிட்ட மழைநீரோடைகள் தான் அய்யனார் அணைக்கு நீராதாரமாக இருக்கிறது. கணவாய் தண்ணி, பூவூத்து, வெள்ளப்பாறை தண்ணி, கட்டளகோம்பை ஆறு உள்ளிட்ட ஓடைகளும் இம்மலையில்உருவாகி தேனி மாவட்டம் பக்கமாக நீர் இறங்குகிறது. கேரளா மாவட்டம் மறையூரில் இரச்சல்பாறா அருவியை போல இங்கும் விழும் அருவிக்கு இரைச்சல் அருவி என்று பெயர் வைத்துள்ளனர். அருவிநீர் மலையுச்சியில் இருந்து விழும் சத்தம் தூரத்தில் இருந்தாலும் அதன் இரைச்சல் கேட்கும் என்பதால் ஒரு அருவிக்கு எரசல் அருவி என்று பெயர் வைத்துள்ளனர். (தகவல் சேகரிப்பு: தமிழ் தாசன் & தமிழினியாள்

அய்யனார் கோயில் ஓடை நீர்த்தேக்கம்:
மேற்சொன்ன சிற்றோடைடைகள் அனைத்தும் அய்யனார் கோயில் அருகே ஒன்று சேர்ந்து ஓடையாக வருவதால் அய்யனார் கோயில் ஓடை என்று அழைக்கப்பட்டு, அதன் குறுக்கே கட்டப்பட்ட நீர்த்தேக்கம் என்பதனை குறிக்கும் விதமாக அய்யனார் கோயில் ஓடை நீர்த்தேக்கம் அல்லது அணை என்று அழைக்கப்படுகிறது. அய்யனார் கோயில் ஓடை அணை 2004 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இப்போது அய்யனார் கோயில் அணையின் உட்புற பகுதி அணை கட்டுவதற்கு முன்பு வேளாண்மை செய்யும் காடாக இருந்தது. அதனை நீர்த்தேக்கமாக கட்டினால் கோடைகாலத்திலும் வேளாண்மை செய்யலாம் என்கிற கணக்கீட்டின் அடிப்படையில் விவசாயிகள் தங்கள் நிலத்தை அரசுக்கு கொடுத்தனர். அணை கட்டியபிறகு இதுநாள் வரை அணை நிறைந்து மறுகால் பாயவில்லை என்றும், அணை கட்டுவதற்கு முன்பு ஓடைகளில் நீர் வரத்து இருந்த போது அதனை நம்பி நெல், பருத்தி, மிளகாய் தொடர்ந்து பயிரிட்டு வந்ததாகவும், அப்பகுதி விவசாயி மு. இடும்பசாமி தெரிவித்தார். அணையின் சுவர் வழியே ஆங்காங்கே பொத்தல் விழுந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. அய்யனார் அணை சுமார் 55 ஏக்கர் பரப்பளவு கொண்டதும், அதில் 21 அடி வரை நீரைத் தேக்க முடியும் என்பது கணக்கீடு. இந்த அணையை மறுசீரமைப்பு செய்யவும், அணையில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி தூர்வார வேண்டும் என்று தொடர்ந்து அரசிடம் கோரிக்கையும், போராட்டங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர்.

அய்யனார் கோயில் ஓடை நீர்த்தேக்கம் விபரம்:
தேக்க முழு மட்டம் (FTL): 341.2 அடி (Feet)
அதிகபட்ச நீர் மட்டம் (MWL): 344.5 அடி
கரையின் மேல்மட்டம் (TBL): 351.0 அடி
கரையின் மேற்பரப்பு அகலம் (TWB): 12 அடி
படுகை மட்டம் (DBL): 304.5 அடி
அணையின் கொள்ளளவு (GCR): 22.15 கன அடி (McFt)
மொத்த ஆண்டு கொள்ளளவு: 60.48 கன அடி
தலை மதகு நேரடி பாசனப்பரப்பு (Ayacut): 725 ஏக்கர்
மிகைநீர் முதல் மதகு பாசனப்பரப்பு: 528 ஏக்கர்
மிகைநீர் இரண்டாவது மதகு பாசனப்பரப்பு: 196 ஏக்கர்
அய்யனார் கோயில் ஓடை அணை மறுகால் நீர் சூலப்புரம் கண்மாய், மீனாட்சிபுரம் கண்மாய் கடந்து திருமங்கலம் வரை வரட்டாறு என்ற பெயருடன் செல்வதாக ஊர் மக்கள் தெரிவித்தனர்.
(தகவல் சேகரிப்பு: தமிழ்தாசன்)

வாழைக் காத்த அய்யனார் கோயில்:
மதுரை மாவட்டம் ம. கல்லுப்பட்டி. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வாழைக் காத்த அய்யனார் கோயில் உள்ளது . அய்யனார் நமக்கு காவல் தெய்வமாக இருக்கிறார். பொதுவாக மரங்கள் நிறைந்த பகுதிகளிலும் ,நீர்நிலை பகுதிகளான ஆறுகள், ஏரிகள் , குளங்கள் மற்றும் ஊர் எல்லை பகுதிளிலும் ஊரு கால அய்யனார், ஏரி காத்த அய்யனார், மடை காத்த அய்யனார், மறுகால் தாங்கிய அய்யனார், கூந்தப்பனை அய்யனார் போன்ற பெயர்களில் காவல் தெய்வமாக நமக்கு இருக்கிறார். மதுரையை பொறுத்தவரை குதிரை வாகனத்தில் அவருக்கு காவலாக கருப்பணசாமி , வேட்டை மற்றும் காவல் நாயுடன் இருப்பார். இங்கும் அவ்வாறு குதிரை மீது மிகப் பிரம்மாண்டமாக அமர்ந்து காட்சியளிக்கிறார். அய்யனார் கோயிலைச் சுற்றி வாழைத் தோப்புகள் நிறைந்து இருந்துள்ளது . தோப்பிற்கு காவலாக அய்யனார் இருந்துள்ளதால் காலப் போக்கில் இந்த அய்யனார் வாழை காத்த அய்யனார் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார். இப்பொழுது ஒரு சில வாழை மரங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு இருக்கிறது. இங்கு தலமரமாக சமீபத்தில் மலைவேம்பு மரத்தை வைத்திருக்கிறார்கள். வாழை மரத்தை வைத்தால் பெயருக்கு ஏற்ற பழமை மாறாத அய்யனாராக இருப்பார். தற்பொழுது கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் காலத்திற்கு ஏற்ற மாதிரி அய்யனார் பூரண புஷ்கலையுடன் ஒரே பீடத்தில் பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள். பொதுவாக கோயில்களுக்கு வேண்டுதலாக உரல், ஆட்டுக்கல், அம்மி கல், மணி, தொட்டில், பூசை பொருள்கள் போன்றவைகள் கொடுக்கப்படும். இக் கோயிலிலும் ஒரு ஆட்டுக்கல் அய்யனார் கிட்டங்கு வினோத் கண்ணன் என்பவரால் நூறு வருடங்களுக்கு உள்ளாக கொடுக்கப்பட்டுள்ளது . கோயிலுக்கு படையல் செய்பவர்களும் ,கோயில் அருகே குடியிருக்கும் பளியர் இன மக்களும் இந்த ஆட்டுக் கல்லை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அய்யனார் கோயில் வழிபாடு & திருவிழா:
இந்த அய்யனாரை சுற்றுவட்டார ஏழு ஊர் மக்கள் வழிபடுகிறார்கள். இந்த ஏழு ஊரையும் சேர்த்து அய்யம்பூமி என்று அழைக்கிறார்கள். சித்திரை முதல் தேதி அன்று ம.கல்லுப்பட்டி , பெருமாள்பட்டி, மள்ளபுரம், சேடப்பட்டி, அய்யம்பட்டி, எம் எஸ் புரம், எஸ் எஸ் புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருவிழாவை நடத்துகின்றனர் . தேனி, திண்டுக்கல் மதுரை மாவட்ட மக்களும் இத் திருவிழாவில் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது அய்யனாருக்கு சைவப் படையலும் காவலுக்கு இருக்கும் கருப்பண்ண சாமிக்கு கோயில் வெளியே அசைவப் படையலும் கொண்டு வழிபாடு செய்கிறார்கள். இப்பொழுது கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் அசைவப் படையல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அருள்மிகு பாண்டீஸ்ரன் கோயில்:
ம.கல்லுப்பட்டியில் இருந்து அய்யனார் கோயில் செல்லும் வழியில் அணைக்கு அருகே புலவர் ஊரணியின் கரையில் அமைந்துள்ளது. நம் வழிபாட்டில் முக்கியமாக இருப்பது கல்லும், மரமுமே . நம் காவல் தெய்வமாக இருப்பவர்கள் கருப்பசாமி, பாண்டி முனி போன்றவர்கள். இங்கு பாண்டீஸ்வரர் என்ற பெயரில் மிக பழமையான ஆல மரத்தை இப்பகுதி மக்கள் வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயம் செழிக்கவும், உடல் நலத்திற்காகவும், குழந்தை வரத்திற்காகவும் பொங்கல் வைத்தும், மணிகளை கட்டியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்கின்றனர். (தகவல் சேகரிப்பு: பேரா. ப. தேவி அறிவு செல்வம், Devi Arivu Selvam கோயில் கட்டிடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர்)

வேளாண்மை பயிர்கள்:
மழைக்காலத்தில் - நெல் (அட்சயா & பாலூட்டு), கடலை, வாழை, பருத்தி, மிளகாய், தக்காளி, கத்திரிக்காய், வெங்காயம், உள்ளிட்ட பயிர்கள் போடப்படுகிறது. நீர் அல்லது பாசன வசதியில்லாத வேளாண் காட்டில் தட்டாம் பயிறு, மொச்சை, சோளம், குதிரைவாலி, கம்பு உள்ளிட்ட மானாவாரி பயிர்கள் போடப்படுகிறது.
(விபரம் அளித்தவர்: திரு.மு. இடும்பசாமி, விவசாயி, ம.கல்லுப்பட்டி)




பளியர் பழங்குடி குடியிருப்பு:
அய்யனார் கோவில் அருகே உள்ள சிறு குன்றின் மேல் பளியர் இனத்தை சேர்ந்த ஐந்து குடும்பங்கள் குடிசை அமைத்து 13 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். காட்டில் இருந்து இறக்கப்பட்ட பின்னர் அவர்கள் சமூகமாக ஆக்கப்பட்டுள்ளார். நாடோடி சமூகத்திற்கு குறிப்பாக குறிப்பிட்ட காலத்தில் வாழ்வாதாரத்திற்கு இடம் பெயரும் வழக்கம் கொண்ட சமூகம். நிலத்திற்கு உரிமை இல்லாத காரணத்தினால் அரசின் சலுகைகள், வசதிகள் அல்லது மின்சார கட்டுமானங்கள் ஏதும் இன்றி கற்கால மனிதர்கள் போல் வனத்தை மட்டுமே நம்பிக்கையாக அது வழங்கும் கிழங்குகளையும், கனிகளையும், கீரைகளையும், தேனையும், இன்னும் பல காடுபடு பொருட்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். முதல் தலைமுறை பள்ளிக்கு சென்று கொண்டிருக்கிறது. அதில் பொண்ணு என்னும் பெயருள்ள ஒரு பளியர் பெண் படிக்கும் ஆசை இருந்தும் ஒன்பதாவது வகுப்போடு பள்ளிப்படிப்பை குடும்ப வறுமை காரணமாக நிறுத்திவிட்டார். ஐந்து குடும்பங்கள் திரு. முத்தையா அவர்கள் தலைமையில் தாண்றிப் பாறையில் இருந்து 2020 வாக்கில் இங்கு குடி வந்துள்ளனர். இங்கு கிடைக்கும் கிழங்குகள், காய்கறிகளை கொண்டு வாழ்கின்றனர். மின்சாரம் கிடையாது. இங்கு இருக்கும் ஊற்றுத் தண்ணீரே இவர்களுக்கும் ஆடுகளுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. வீட்டின் அருகே வரை ஒற்றை யானை ஒன்று வந்து செல்வதாகவும் தெரிவித்தனர். யானை வந்து சென்றதற்கான அடையாளமாக இப்பகுதியில் யானைச் சாணமும் இருந்தது. இவர்கள் தங்களது குலதெய்வமாக பளிச்சி ஆத்தா மற்றும் ஏழு கன்னிமார்களை வணங்குகின்றனர். பளியர் இன சிறுவர்கள் சிலர் ம.கல்லுப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக சிலர் தங்களது படிப்பையும் நிறுத்தி உள்ளனர். ஒரு காலத்தில் மலையே தனதாகக் கொண்டு வாழ்ந்த பளியர் இன மக்கள் மின்சாரம் , தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இம் மலையில் தங்களது குல தெய்வத்தையும், அய்யனாரையும் நம்பி வாழ்கின்றனர். (பேரா. தேவி, திரு. விஸ்வா பதிவில் இருந்து) பளியர் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். பளியரின குழந்தைகள் கல்விக்கு அரசு வழி வகை செய்ய வேண்டும். பளியரின குழந்தைகளுக்கு எந்த கட்டணமும் பெறாமல் பள்ளிக்கூடத்திற்கு அழைத்து செல்லும் ஆட்டோ ஓட்டுநர் தென்னரசு அவர்களை மனதார பாராட்டுகிறோம்.

பாலூட்டிகள்:
இம்மலைக்காட்டில் வாழும் காட்டுயிர்கள் என விவசாயிகள் வாய் மொழியாக சொன்ன தகவல்: யானை, கரடி, செந்நாய், சிறுத்தை, கேளையாடு, புள்ளிமான், கடாமான், காட்டுமாடு, தேவாங்கு, வரையாடு, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, முள்ளெலி, அணில் உள்ளிட்ட காட்டு விலங்குகள் இப்பகுதியில் தங்கள் பார்த்துள்ளதாக தெரிவித்தனர். நம் குழு இந்த பயணத்தில் நேரடியாக ஒரு ஆண் புள்ளிமானை பார்த்தது. கேளையாடு சத்தம் கேட்டு பதிவு செய்யப்பட்டது. தரையில் கிடந்த முள்ளம்பன்றியின் முள்க்கீற்று வழியாகவும், காட்டுமாடு எழும்புகளை கொண்டும், நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் யானை சாணம் புகைப்படம் வழியாகவும் ஆவணம் செய்யப்பட்டது. (தகவல் சேகரிப்பு: திரு. ஆறுமுகம், மரு. ஹீமோக்ளோபின் & விஸ்வா Vishwa Wishtohelp )

யானைகள் வழித்தடம்:
கோவை மாவட்டம் தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் யானைகள் நடமாடும் இடங்களில் உள்ள சட்டவிரோத செங்கல்சூளை தொடர்பான வழக்கில், யானைகள் வழித்தடம் குறித்த நிலை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தில் வனத்துறை 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்து இருந்தது. அந்த அறிக்கையில் இந்திய காட்டுயிர் கணக்கெடுப்பின்படி 19 வழித்தடங்கள் இருந்ததாகவும் தற்போதைய ஆய்வில் மேலும் 36 வழித்தடங்கள் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மதுரை வனப்பகுதியும் அடக்கமா இல்லையா என்பது தெரியவில்லை. மதுரை வனப்பகுதிக்கு உட்பட்ட வாசிமலை பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதை அதன் கால்தடம் மற்றும் சாணம் ஆகியவற்றை கொண்டு ஆவணம் செய்து 2015 ஆண்டு மதுரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்து இருந்தோம். அதன் பிறகு அல்லது அதற்கு முன்பு மதுரை வனப்பகுதிக்குள் யானைகள் வழித்தடம் குறித்த ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டதாக அறிய முடிகிறது. அய்யனார் கோயில் ஓடை அணைப்பகுதி முழுதும் யானை சாணம். கூட்டமாக யானைகள் இப்பகுதிக்கு வருகிறது. சமீபத்தில் இடும்பசாமி அவர்களின் நெல் வயலை சேதப்படுத்தி செய்தியை தினமலர் உள்ளிட்ட நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. விவசாயி மு. இடும்பசாமி அவர்கள் யானைகள் வந்ததை காணொளி பதிவும் செய்து இருக்கிறார். அதையும் தினமலர் இணையத்தில் வெளியிட்டுள்ளது ( https://youtube.com/shorts/TKHICeuAOzk?si=Lle6rQPgy_-9F586 ). எனவே மதுரை மாவட்ட வனப்பகுதிக்குள் யானைகள் வரவு இருப்பதை நம்முடைய இந்த பயணமும் ஆவணம் செய்துள்ளது. இது தொடர்பான புகைப்பட ஆவணங்களை மதுரை மாவட்ட வனத்துறைக்கு கொடுக்க இருக்கிறோம். யானைகள் வழித்தடம் மதுரை வனப்பகுதிக்குள் இருப்பதையே அங்கீகரிக்க வேண்டும். யானைகள் சேதப்படுத்திய இடும்பசாமி அவர்களின் பயிர்களுக்கு இழுப்பீடு வழங்க வேண்டும்.




பறவைகள்:
பறவையியலார்கள் - கண் மருத்துவர் ஹீமோக்ளோபின், காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் ஜோதிமணி, ஜோதிகண்ணன் அவர்கள் ஏறக்குறைய 70 வகை பறவைகளை ஆவணம் செய்துள்ளனர். அவர்கள் ஆவணம் செய்த பறவைகளின் பெயர் மற்றும் எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. Rock Pigeon (Feral Pigeon) - மாடப் புறா (3)
2. Eurasian Collared Dove - கள்ளிப்புறா (10)
3. Spotted Dove - புள்ளிப் புறா (2)
4. Laughing Dove - சிவப்பு கள்ளிப்புறா (9)
5. Greater Coucal - செம்போத்து (2)
6. Sirkeer Malkoha - செவ்வாயன் (2)
7. Blue-faced Malkoha - நீலமுக பூங்குயில் (2)
8. Pied Cuckoo - கருப்பு வெள்ளை மீன்கொத்தி (1)
9. Asian Koel - குயில் (1)
10. Gray-bellied Cuckoo - சாம்பல் வயிற்று குயில் (1)
11. Common Hawk-Cuckoo - அக்கா குயில் (1)
12. Asian Palm Swift - பனை உழவாரன் (5)
13. Little swift - நாட்டு உழவாரன் (4)
14. Crested Treeswift - கொண்டை உழவாரன் (3)
15. White-breasted Waterhen - வெண்மார்பு நீர்க்கோழி (1)
16. Red-wattled Lapwing - செம்மொக்கு ஆள்காட்டி (4)
17. buttonquail sp. குறுங்காடை (1)
18. Little Cormorant - சிறிய நீர்காகம் (2)
19. Indian Pond-Heron - குருட்டு கொக்கு (7)
20. E. stern Cattle Egret - உண்ணிக் கொக்கு (12)
21. Medium Egret - நடுத்தர கொக்கு (1)
22. Black winged Kite - கருந்தோள் பருந்து / கள்ள பருந்து (1)
23. Short toed Snake Eagle - ஓணான் கொத்தி கழுகு (2)
24. Greater Spotted Eagle - இந்திய புள்ளிக் கழுகு (1)
25. Shikra - வைரி (3)
26. owl sp.- ஆந்தை (1)
27. Common Kingfisher - சிரல் / சின்ன மீன்கொத்தி (1)
28. White-throated Kingfisher - வெள்ளைத் தொண்டை மீன்கொத்தி (2)
29. Asian Green Bee-eater - பச்சை பஞ்சுருட்டான் (3)
30. Blue-tailed Bee-eater - நீலவால் பஞ்சுருட்டான்
31. Chestnut-headed Bee-eater - செந்தலை பஞ்சுருட்டான் (1)
32. Indian Roller - பனங்காடை (2)
33. Coppersmith Barbet - செம்மார்பு குக்குறுவான் (1)
34. Brown-headed Barbet - பச்சைக் குக்குறுவான் (1)
35. Eurasian Kestrel - சிவப்பு வல்லூறு (1)
36. Rose-ringed Parakeet - பச்சைக் கிளி (1)
37. Black Drongo - கரிசிச்சான் / ரெட்டைவால் குருவி (6)
38. Indian Paradise-Flycatcher - வேதிவால் குருவி / அரசவால் ஈப்பிடிப்பான் (1)
39. Brown Shrike - பழுப்பு கிச்சான் (2)
40. Bay-backed Shrike - கருஞ்சிவப்பு முதுகு கீச்சான் (1)
41. House Crow - வீட்டுக் காகம் (8)
42. Large-billed Crow - அண்டங்காக்கை (4)
43. Jerdon's Bushlark - புதர் வானம்பாடி (1)
44. Common Tailorbird - தையல் சிட்டு (2)
45. Jungle Prinia - காட்டு கதிர்குருவி (2)
46. Ashy Prinia - சாம்பல் கதிர்குருவி (2)
47. Plain Prinia - கதிர்குருவி (2)
48. Blyth's Reed Warbler - நாணல் கதிர்குருவி
49. Barn Swallow - தகைவிலன் குருவி (1)
50. Red rumped Swallow - செம்பிட்ட தகைவிலான் (170)
51. White browed Bulbul - வெண்புருவ கொண்டைக்குருவி (10)
52. Red vented Bulbul - செங்குத்த கொண்டலாத்தி (8)
53. Yellow eyed Babbler - மஞ்சள் கண் சிலம்பன் (1)
54. Large Gray Babbler - பெரிய வெள்ளை சிலம்பன் (2)
55. Yellow-billed Babbler - மஞ்சள் அலகு சிலம்பன் (10)
56. Common Myna - நாகணவாய் (5)
57. Indian Robin - கருஞ்சிட்டு (4)
58. Oriental Magpie-Robin - வண்ணாத்தி குருவி (1)
59. Pied Bushchat - புதர்சிட்டு (1)
60. Thick-billed Flowerpecker - பருத்த அலகு பூங்கொத்தி (1)
61. Pale-billed Flowerpecker - வெளிர் அலகு பூங்கொத்தி (2)
62. Purple-rumped Sunbird - ஊதா பிட்ட தேன்சிட்டு (4)
63. Purple Sunbird - ஊதா தேன்சிட்டு (5)
64. Indian Silverbill - இந்திய வெண்தொண்டை சில்லை (3)
65. Scaly-breasted Munia - புள்ளி மார்பு சில்லை (2)
66. House Sparrow - சிட்டுக் குருவி (5)
67. White browed Wagtail - வெண்புருவ வாலாட்டி (4)
68. Black rumped Flameback - பொன் முதுகு மரங்கொத்தி (1)
69. Black hooded Oriole - கருந்தலை மாங்குயில் (2)
70. Common Iora - மாம்பழ சிட்டு (1)
71. Indian Peafowl - மயில் (4)
72. Gray Junglefowl - வெள்ளை கானாங்கோழி (1)
73. Changeable Hawk-Eagle - குடுமிப் பருந்து (1)
74. Rosy Starling - சோளக்குருவி (12)
75. Crimson-backed Sunbird - (1)
76. Painted spurfowl female - வண்ணச் சுண்டாங்கோழி (1)
77. Glossy ibis - அன்றில் / அரிவாள்மூக்கன் (4)
78. Open billed stork - நத்தை கொத்தி நாரை (8)
79. Barn owl - கூகை ஆந்தை (1)
80. Spotted owlet - புள்ளி ஆந்தை (2)

வண்ணத்துப்பூச்சிகள் :
இப்பயணத்தில் ஏறக்குறைய 43 வகை வண்ணத்துப்பூச்சிகள் ஆவணம் செய்யப்பட்டது. வண்ணத்துப்பூச்சிகளை தாவிகள் / துள்ளிகள், அழகிகள், வெள்ளையர்கள் / மஞ்சள்கார்கள் / நுனிசிறகன், நீலன்கள் என வகைப்படுத்தி கீழே பட்டியலிட்டுள்ளோம்.

Skipper: தாவிகள் / துள்ளிகள்
1.Grizzled Skipper- புல் தாவி
2.Fulvous pied flat-சிறு பழுப்பு இலையொட்டி

Swallowtail: அழகிகள்
3.Common Jay-நாட்டு நீல அழகி
4.Common Bluebottle-நீல சங்கழகன்
5.Crimson Rose- ராஜா வண்ணத்தி
6.Common rose-ரோஜா வண்ணத்தி
7.Common Mormon -கறிவேப்பிலை அழகன்
8.Blue Mormon-கருநீல வண்ணன்
9.Southern Birdwing- பொன்னழகன்

Yellows and whites: வெள்ளையர்கள், மஞ்சள்கார்கள், நுனி சிறகன்
10.Great Orange Tip-பெருஞ்சிறகான்
11.Yellow Orange Tip-மஞ்சள் ஆரஞ்சுகடவி
12.Plain Orange Tip-ஆரஞ்சு நுனிச்சிறகன்
13.Crimson Tip-செங்கடவி
14.Large Salmon Arab- பெரிய வெளிர்சிவப்பு வெள்ளையன்
15.Common Jezebel-இச்சைமஞ்சள் அழகி
16.Common Emigrant-கொள்ளை வெள்ளையன்
17.Mottled Emigrant-அவரை வெள்ளையன்
18.Common Albatross -பருபலா வெள்ளையன்
19.Common gull- ஆதொண்டை வெள்ளையன்
20.Lesser Gull -மங்கிய மஞ்சாடை
21.Common Wanderer- நாடோடி பட்டாம்பூச்சி
22.Psyche-சுற்றும் வெள்ளையன்

Blues:நீலன்கள்
23.Common pierrot- கரும்புள்ளி நீலன்
24.Black Spotted Pierrot-காட்டுப்புள்ளிபரப்பன்
25.Banded Blue Pierrot-பட்டை நீலன்
26.Angled Pierrot-கொக்கி நீலன்
27.Common Cerulean-புங்க நீலன்
28.Common Silverline-வெள்ளிவரையான்
29.Bright Babul Blue-அடர் பபூல் நீலன்
30.Forget me not-பருப்பு நீலன்
31.Lime blue-எலுமிச்சை நீலன்
32.Zebra Blue-வரிக்குதிரை நீலன்

33.Plain Tiger-மஞ்சள் புலி
34. Dark Blue Tiger-கருநீலப்புலி
35.Common Crow-அரளிவிரும்பி
36.Danaid Eggfly-பசலைச் சிறகன்
37.Lemon pansy-நீல வசீகரன்
38.Yellow Pansy -மஞ்சள் வசீகரன்
39.Chocolate pansy-சாக்லேட் வசீகரன்
40.Common Leopard-சிறுத்தை பட்டாம்பூச்சி
41.Common Nawab-இரட்டைவால் சிறகன் /நவாப்
42.Tawny Coster-செவ்வந்தி சிறகன்
43. Club beak-?

ஒருங்கிணைப்பு
மதுரை இயற்கை பண்பாட்டு மையம் (MNCF)
24.01.2024

#madurai_wildelephants
#madurai_heritage
#maduraibiodiversity
#maduraibirds
#maduraibutterflies

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை