மதுரையில் கவைவால் கொண்டைக் கரிச்சான்

மதுரை மாவட்டத்தில் கவைவால் கொண்டைக் கரிச்சான் குருவி (Hair-crested Drongo – Dicrurus hottentottus) முதல்முறையாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது.


இந்தப் பறவை சீனா, வங்காளதேசம், வடகிழக்கு இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இயல்பாகக் காணப்படுகிறது. குளிர்காலங்களில் தென்னிந்திய பகுதிகளுக்கு வலசையாக வரக்கூடியது. மலர்தேன் மற்றும் பூச்சிகளை உணவாகக் கொள்ளும் இப்பறவைகள் பெரும்பாலும் சிறிய குழுக்களாகச் செயல்படுவதுடன், அதிக ஒலியெழுப்பும் தன்மையுடையவையாகும்.

கருமை நிறம் கொண்ட, மினுமினுப்பான உடல்தோற்றத்துடன் காணப்படும் இப்பறவையின் நெற்றியில் நீளமான, மெல்லிய முடி போன்ற இறகுகள் தெளிவாகக் காணப்படும். வால் பகுதி ஆழமாக இரண்டாகப் பிளந்த (deeply forked tail) அமைப்பைக் கொண்டது என்பது இதன் முக்கிய அடையாளமாகும்.

இந்த அரிய பதிவு 08.02.2026 அன்று மதுரை மாவட்டம் மஞ்சமலை அடிவாரப் பகுதியில், மருத்துவர் ஹீமோக்ளோபின் மற்றும் பாலகிருஷ்ணா அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இங்கு காணப்பட்ட கவைவால் கொண்டைக் கரிச்சான், இமயமலைப் பகுதிகள் அல்லது வடகிழக்கு இந்தியாவிலிருந்து வலசையாக வந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

பொதுவாக அடர்ந்த காடுகளில் காணப்படும் இப்பறவை, மலையடிவாரப் பகுதிகளிலும் சமவெளிகளிலும் அரிதாகவே தென்படும். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் முதல்முறை இப்பறவை பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பறவையை திண்டுக்கல் கரந்தமலை பகுதியில் ஆவணம் செய்திருப்பதாகவும் அப்போதும் இப்பறவை அயல்மரத்தில் காணப்பட்டதாகவும் பறவையியலாளர் மரு. பத்ரி நாராயணன் அவர்கள் தெரிவித்தார்.

மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF) சார்பில் மதுரை மாவட்ட பல்லுயிரிய பதிவேடு தொகுக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 320-க்கும் மேற்பட்ட பறவைகள் ஆவணம் செய்யப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலில் புதிய விருந்தினராக இணைந்துள்ள கவைவால் கொண்டைக் கரிச்சான் குருவியை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.






படமெடுத்தவர்கள்: மருத்துவர் ஹீமோக்ளோபின் & பாலகிருஷ்ணா
படத்தில் உள்ள பறவை: கவைவால் கொண்டைக் கரிச்சான்
Hair-crested Drongo (Dicrurus hottentottus)
கரிச்சான் அமர்ந்திருக்கும் மரம்: இலவம் (Ceiba pentandra)


அதே நாளில், அதே பகுதியில் மூன்று வகை கரிச்சான் குருவிகளும், மூன்று வகை மாங்குயில்களும் மருத்துவர் ஹீமோக்ளோபின் & பாலகிருஷ்ணா
அவர்களால் ஆவணப்படுத்தப்பட்டன. அவை
1. கவைவால் கரிச்சான் / Hair-crested Drongo (Dicrurus hottentottus)
2. சாம்பல் கரிச்சான் / Ashy Drongo (Dicrurus leucophaeus)
3. வெண்வயிற்று கரிச்சான் / White-bellied Drongo (Dicrurus caerulescens)
4. மாங்குயில் / Indian Golden Oriole (Oriolus kundoo)
5. கருந்தலை மாங்குயில் / Black-hooded Oriole (Oriolus xanthornus)
6. கரும்பிடரி மாங்குயில் / Black-napped Oriole (Oriolus chinensis)








ஒளிப்படங்கள்: காட்டுயிர் ஒளிப்பட கலைஞர் பாலகிருஷ்ணா


மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை
10.02.2026

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை