பறவைக் கெண்டையும் - நன்னீர் மீன்களும்

    ஆறுகள், ஏரிகள், ஒடைகள், கிணறுகள் போன்ற உப்புத்தன்மை குறைந்த நன்னீர் அமைப்புகளில் வாழும் மீன்களை நன்னீர் மீன்கள் (Freshwater fishes) என்பர். அயிரை, ஆரா, உழுவை, கெண்டை, கெளிறு, குரவை, வாளை, விரால், வெளிச்சி ஆகியவை தமிழ்நாட்டில் காணப்படும் நன்னீர் மீன் வகைகள் ஆகும். இம்மீனினங்களில் பல்வேறு சிற்றினங்களும் உள்ளன. நீர்நிலைகளின் உயிரியல் மற்றும் உணவுச் சங்கிலியில் முக்கிய இணைப்பாக நன்னீர் மீன்கள் விளங்குங்கின்றன. கொசு முட்டைகளை (larvae) உண்டு நோய் பரவலை கட்டுப்படுத்துகின்றன. நன்னீர் உயிர்சூழலின் சமநிலையை பேணுகின்றன. நன்னீரின் தரம், தன்மை அதில் ஏற்படும் மாற்றங்களை அறிவுறுத்தும் உயிரினமாக (Indicator Species) நன்னீர் மீன்கள் திகழ்கின்றன. சூழலில் மட்டுமல்ல பண்பாட்டிலும் மீன்கள் முக்கிய அங்கமாக இருக்கின்றன்.



    மிகத் தொன்மையான நாகரிகம் உடையதெனக் கருதப்படும் கிரெக்கம், எகிப்து, பாபிலோனியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளின் புராணங்களில் மீன்களைப் பற்றிய பல செய்திகள் கிடைக்கின்றன. "செழுமைக் கடவுள்" என்று போற்றப்படுகின்ற தெய்வங்களுள் 'மீனும்' முக்கிய இடத்தினை பெற்றுள்ளது. தமிழகத்தின் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்களில் பாண்டியர்கள் இரட்டை கயல் மீனைத் தங்கள் அரசச் சின்னமாக போற்றினர். பறக்கும் கொடியிலும், நாணயங்களிலும், ஓவியங்களிலும், கோயில்களிலும், செப்பெடுகளிலும், கல்வெட்டுகளிலும், முத்திரைகளிலும், அணிமணிகளிலும், இசைக்கருவிகளிலும் எங்கும் எதிலும் மீனையே பயன்படுத்திய காரணத்தால் பாண்டியனை 'மீனவன்' என்றும், 'கடலவன்' என்றும் குறிப்பிடுவதுண்டு. கீழடி அகழாய்வுகளில் மீன் சின்னம் பொறித்த மக்கள் பயன்படுத்திய பல்வேறு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன.




    கடல் மீன் வகைகளில் சுறா, அயிலை, கோட்மீன், பெருமீன்; நன்னீர் மீன் வகைகளில் அயிரை, ஆரல், கயல், கெண்டை, கெளிறு, மலங்கு, வரால், வாளை உள்ளிட்ட மீன் வகைகள் குறித்து சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. சிற்றிலிக்கியங்களில் ஒன்றான பள்ளு இலக்கியத்தில் பல்வேறு வகையான மீனினங்களின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

    தூண்டில், பானைப் பொறி, பத்தக்கட்டை, ஊத்தா, பல்வேறு வகை மீன்பிடி வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தொழில்நுட்பங்களும், மீன்பிடித் திருவிழாக்களும் நன்னீர் மீன்கள் மற்றும் அதன் உயிர்சூழலோடு தமிழ் சமூகம் கொண்ட வாழ்வியல் பிணைப்பினைகளுக்கு சான்று பகிருகின்றன.

    உலகமயம் மற்றும் நகரமயம் ஆகியவற்றின் விளைகளால் உலகெங்கும் நன்னீர் ஆதாரங்களான ஆறு, ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் திட மற்றும் திரவ கழிவுகளால் மாசடைந்து வருகின்றன. மற்றொரு புறம் நன்னீர் ஏரிகள், கண்மாய்கள் அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 


    நன்னீரில் மட்டுமே வாழப் பழகிய இயல் மீனினங்கள் (Native Fishes) கழிவு நீர் பெருக்கத்தால் அழிந்து வருகின்றன. நகரங்கள் மற்றும் நகர்ப்புற நீர்நிலைகளில் இயல்பாக காணப்பட்ட ஆரா, வெளிச்சி போன்ற மீன் வகைகள் அழிந்துவிட்டன. சில இடங்களில் அருகிவிட்டன.

    உணவு தேவையை கருத்தில் கொண்டு, திலேபி, கட்லா, ரோகு போன்ற அயல் மீன் இனங்கள் (Exotic Fishes) நம் நன்னீர் ஏரி மற்றும் அணைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. வேறு சில காரணங்களால் கொசு மீன், உறிஞ்சி மீன் (Sucker fish) போன்ற அயல் மீன்களும் அறிமுகப்படுத்தப்பட்டன.

    அயல் மீனினங்கள் உணவு, வாழிடம் போன்ற தேவைகளுக்கு உள்ளூர் இயல் மீன்களுடன் போட்டியிடுகின்றன. சில அயல் மீன்கள் சிறிய உள்ளூர் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டைகள், இளம் மீன்களை உண்ணுகின்றன. பல அயல் மீன் இனங்கள் கழிவுநீரில் தப்பி பிழைக்கும் தகவமைப்பை பெற்றுவிட்டன. இதனால் இயல் நன்னீர் மீன் இனங்கள் அழிவுக்கு தள்ளப்படுகின்றன. உணவுச் சங்கிலி (Food chain) மாற்றமடைகிறது. சில இனங்கள் அதிகமாக பெருகி, நீர்நிலையின் இயற்கை சமநிலையை குலைக்கின்றன. இயல் உயிரினங்களின் இருத்தலுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அயல் உயிரினங்கள் ஆக்கிரமிப்பு உயிரினங்களாக (Invasive Spceies) பரிணமித்துவிட்டன். குறிப்பாக ஆப்பிரிக்க தேளி மீன்களை இந்தியா நீர்நிலைகளில் வளர்ப்பதற்கு 2024 ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது.

    ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டுகள் நன்னீர் மீன் இனங்களின் வலசை, பரவல், இனப்பெருக்கம் போன்றவற்றிற்கு பெரும் தடையாக உள்ளது. சாலமன் மீனின் வலசையை அணைகள் பாதிக்கிறது என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்தின. சாலமன் மீனின் வலசையை கணக்கில் கொண்டு அமேரிக்காவின் கல்போர்னியா மாகாணத்தில் களமத் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைகள் அகற்றப்பட்டன.

    இருந்தபோதும் நன்னீர் உயிர்சூழல் மீதான ஆய்வுகள், ஆவணங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன. இதனால் அழிவுக்குள்ளாகும் நன்னீர் உயிர் சூழலின் நிலைக் குறித்து அறிந்து கொள்ள இயலாத நிலையே நீடிக்கின்றது.

    நன்னீர் மீனினங்கள் தொடர்பான விழிப்புணர்வை பரவலாக்கும் பொருட்டு மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் காணப்படும் நீர்நிலைகளில் நன்னீர் மீன்களை மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை தொடர்ச்சியாக ஆவணம் செய்து வருகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு வைகையாற்று வடிநிலப் பகுதியில் காணப்படும் 62 வகை நன்னீர் மீன் இனங்களை ம.இ.ப.அறக்கட்டளை ஆவணம் செய்து தொகுத்தது. அதில் 11 வகை மீன்கள் அயல் மீனினங்கள் ஆகும். பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தால் (IUCN) செம்பட்டியலில் வைத்துள்ள அம்பு குரவை, வண்ணாத்திக் கெண்டை, சொட்ட வாளை, வாளை உள்ளிட்ட 4 மீன் இனங்கள் வைகையாற்றில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. மேலும் நன்னீர் மீன்களை உண்டு வாழும் நீர்நாய்கள் மூலவைகை பகுதியில் இன்றும் கூட்டமாக வாழ்வதை 2024 வைகை பல்லுயிரிய ஆய்வு வெளிப்படுத்தியது.

    இயல் மீனினங்களை விட அயல் மீனினங்களின் எண்ணிக்கையும், பரவலும் வைகையில் பல்கி பெருகி இருந்ததை 2024 வைகை ஆய்வு வெளிப்படுத்தியது. வேலா கெளுத்தி, மீசை கெளுத்தி, புள்ளி அயிரை, வெளிச்சி, ஆரா, செங்காவி கெண்டை, காவிரிக் கெண்டை, பறவைக் கெண்டை உள்ளிட்ட பல இயல் மீன் இனங்கள் வைகையாற்றில் காணாமல் போய்விட்டன.

    1986 காலகட்டத்தில் முனைவர் இந்திரா அவர்கள் வைகைவடிநில பகுதியில் ஆய்வு செய்து தொகுத்த நன்னீர் மீன்கள் பட்டியலில் உள்ள 19 வகை நன்னீர் மீனினங்கள் 2024 ஆம் ஆண்டில் ம.இ.ப அறக்கட்டளை ஆய்வில் கண்டறிய இயலவில்லை. அவைகள் அருகிவிட்டதா, அழிந்தவிட்டதா என்பதை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். நன்னீர் ஏரிகளில் இயல்பாகவும் பரவலாகவும் காணப்பட்ட பல நன்னீர் மீனினங்கள் இன்று அரிதாகவிட்டன.

    இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு முன்பு வைகை வடிநிலப்பகுதியில் முனைவர் இந்திரா அவர்களால் ஆவணம் செய்யப்பட்ட கோர்சுலா வகை கெண்டை மீன்கள் மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் உள்ள மருதூர் கண்மாயில் 24.03.2026 அன்று காட்டுயிர் ஆய்வாளர் திரு. கிஷோர் அவர்களால் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.

    முகிலிடே குடும்பத்தைச் சேர்ந்த கதிர்-துடுப்பு மீன் இனமான ரைனோமுகில் கோர்சுலா (Rhinomugil corsula) மீன்கள், ஆறுகள் மற்றும் கழிமுகங்களில், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் மியான்மரில் உள்ளிட்ட தெற்காசிய பகுதியில் காணப்படுகிறது. இதன் கண்கள் தலைப்பகுதியின் மேல் உயரமாக அமைந்துள்ளதுடன், குறுக்காகப் பிரிந்திருப்பதால், நீர்மட்டத்தின் மேல் மற்றும் கீழ் பகுதிகளை ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது. இதனால், நீரில் நீந்திக்கொண்டே எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும், மேல்மட்டத்தில் உள்ள பூச்சிகளை வேட்டையாடவும், மேலும் காற்றிலிருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்ளவும் உதவுகிறது. இம்மீனை உள்ளூர் மக்கள் பறவைக் கெண்டை என்று அழைக்கின்றனர் என்று கிஷோர் தெரிவித்தார். பாசன கால்வாய்களோடு இணைக்கப்படாத தனித்த நீர்நிலைகளில் நன்னீர் உயிர்சூழல் குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டிய தேவையை பறவைக் கெண்டை மீனின் இருப்பு நமக்கு வலியுறுத்துகிறது.





    நன்னீர் மீன் இனங்கள் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தகுந்த எந்த முயற்சிகளையும் இதுவரை நாம் முன்னெடுக்கவில்லை. அழிந்து வரும் நன்னீர் மீனினங்களையும், அதன் வாழிடங்களையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழ்தாசன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை
25.03.2026

Fish that live in freshwater bodies with low salinity such as rivers, lakes, streams, and wells are called freshwater fishes. Loach, Spinny Eel, Goby, Carp, Mystus, Snakehead Fish, Catfish, and Red Carp are some freshwater fish species found in Tamil Nadu. Many sub-species also exist among these fishes. Freshwater fishes play an important role in aquatic ecosystems and food chains. They help control the spread of diseases by feeding on mosquito larvae. They maintain ecological balance and also act as indicator species, reflecting the quality and changes in water.

Fish are important not only ecologically but also culturally. In ancient civilizations such as Greece, Egypt, Babylonia, China, and India, there are many references to fish in mythology. Fish hold a significant place among deities associated with prosperity. Among the three Tamil dynasties—Chera, Chola, and Pandya—the Pandyas adopted the twin fish as their royal emblem. Because fish symbols were widely used in their flags, coins, paintings, temples, inscriptions, seals, ornaments, and musical instruments, the Pandya king was often referred to as “Meenavan” (the one associated with fish) and “Kadalavan” (the one associated with the sea). Archaeological excavations at Keeladi have also unearthed pottery fragments bearing fish symbols.

Sangam literature mentions various fish species, including marine fishes like shark (Suraa), mackerel (Ayilai), Kotmeen and Perumeen, as well as freshwater fishes like Ayirai, Aarl, Kayal, Kendai, Keluthi, Malangu, Varaal, and Vaalai. In the minor literary work Pallu literature, names of many fish species are compiled.

Fishing techniques such as hooks, pot traps, wooden devices, and various types of fishing nets, along with fishing festivals, reflect the close relationship between Tamil society and freshwater ecosystems.

Due to globalization and urbanization, freshwater resources such as rivers and lakes across the world are increasingly polluted by solid and liquid waste. At the same time, lakes and irrigation tanks are being encroached upon for development projects.

Native fish species that are adapted to freshwater environments are declining due to Domestic and Industrial sewage inflow. Fish species like Aara (Barred Spiny eel) and Velichi (Reba carp), which were once common in urban water bodies, have disappeared in many places and become rare in others.

To meet food demands, exotic fish species such as Tilapia, Catla, and Rohu have been introduced into freshwater lakes and reservoirs. Additionally, species like mosquito fish and sucker fish have also been introduced for various reasons.

These exotic species compete with native fishes for food and habitat. Some even feed on smaller native fishes, their eggs, and juveniles. Many exotic species can survive in polluted water, giving them an advantage. As a result, native freshwater fish populations are declining, and the food chain is being altered. Some species multiply excessively, disturbing ecological balance. Such harmful non-native species are called invasive species. Notably, in 2024, the Green Tribunal banned the cultivation of African catfish in Indian water bodies.

Dams constructed across rivers obstruct fish migration, distribution, and breeding. Studies have shown that dams affect the migration of salmon fish. Considering this, dams across the Klamath River in California, USA, were demolished in some places.

Despite these issues, there is a lack of sufficient studies and documentation on freshwater ecosystems. This makes it difficult to understand the extent of biodiversity loss in freshwater.

To raise awareness, the Madurai Nature Cultural Foundation has been documenting freshwater fishes in water bodies around Madurai. In 2024, MNCF recorded 62 freshwater fish species in the Vaigai River basin, of which 11 were exotic species. Four species listed in the IUCN Red List, including Kelaart’s Snakehead, Butter catfish and Sareng catfish were also documented. Additionally, studies revealed that otters, which feed on freshwater fish, still live in groups in the upper Vaigai region.

The 2024 study also revealed that exotic fish species outnumber native ones in the Vaigai. Several native species such as Gangetic mystus, Whiskered Mystus, Common spiny loach, Reba carp, Barred Spiny eel, Twospot barb, Kaveri rasboora and Corsula have disappeared.

In a study conducted in 1986 by Dr. Indira, 19 freshwater fish species were listed in the Vaigai basin. However, these species were not found in the 2024 study, and it remains unclear whether they are extinct or critically endangered.

Recently, on 24.03.2026, wildlife researcher Mr. Kishore documented a fish species called Rhinomugil corsula (locally known as Paravai Kendai) in the Maruthur irrigation tank near Melur in Madurai district. This fish belongs to the Mugilidae family and is found in rivers and estuaries across South Asia, including India, Bangladesh, Nepal, and Myanmar. It is known as the "false four-eyed fish" because its eyes are positioned high on its head and parted horizontally, allowing it to see above and below the water surface simultaneously to avoid predators while intake of atmosphere oxygen and attack the insect prey near the surface while swimming.

The presence of this species highlights the need for detailed studies of isolated freshwater ecosystems not connected to irrigation canals.

So far, no significant efforts have been made to conserve freshwater fish species. The Tamil Nadu government must implement special schemes to protect endangered freshwater fishes and their habitats.


Photo Credits: R.Kishore

-- Thamizhthaasan
Madurai Nature Cultural Foundation
25.03.2026

Hindu Onilne News Edition:
Need to document freshwater fish species in waterbodies, say conservationists - https://www.thehindu.com/news/cities/Madurai/need-to-document-freshwater-fish-species-in-waterbodies-say-conservationists/article70815659.ece

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை