நமது பண்பாட்டில் தேர்

மதுரையில் புகழ்மிக்க சித்திரை திருவிழா கலைக்கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் தேர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை "தேர் பார்க்கலாம் வாங்க" நிகழ்வை 25.04.2026 அன்று ஒருங்கிணைத்தது.



தேர் பயன்பாட்டின் தொன்மை குறித்த தேடுதலில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர் பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் தேர் குறித்த பல்வேறு தகவல்களை நிகழ்வில் பங்கெடுத்தவர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

கோயில் கட்டடக்கலை & சிற்பத்துறை ஆய்வாளர் பேரா தேவி அறிவு செல்வம் கூறியதாவது:

ஒற்றுமைத் திருவிழாவாக ஊர்கூடி தேரிழுப்பதாக மட்டுமல்லாது, நம் பண்டைய படைப்பாளர்களின் திறன்களை உலகின் காதுகளுக்கு உரக்கச் சொல்கிற ஓர் உயரிய உன்னத அற்புத அழகிய கலை விழாவாகவும் நம்மூர்களின் தேர்த் திருவிழாக்களும், தேர்களும் இருக்கின்றன. தர்கா சந்தனக்கூடு விழா, தூய மரியன்னை சப்பரம் உலா போன்றவை நமது தேர் திருவிழாக்களை நினைவூட்டுகின்றன. குறிப்பிட்ட மதம் கடந்து, அத்தனை மதத்தினரின் உச்ச விழாக்களின் முக்கிய இடத்தை இந்த தேர் வேறுபட்ட பெயர்களில் பிடித்துக் கொண்டு மானுட நேயத்துடன் சமூக நல்லிணக்கமும் என ஆன்மிக அழகு பேசுகிறது.




நாகரீக வளர்ச்சியின் ஒன்றாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வண்டியினை உருவாக்கி இருக்கலாம். கைவண்டியாகவும், விலங் குகளை பழக்கிய பிறகு யானை, மாடு, கழுதை போன்ற விலங்குகளைக் கொண்டும் இதனை இழுத்துச் செல்ல பயன்படுத்தி இருக்கிறார்கள். வண்டியிலிருந்தே தேர் உருவாகி இருக்கும். வண்டிகளுக்கு பண்டிகை' என்ற பெயர் இருந்ததை சிந்தாமணி தெரிவிக்கிறது. சக்கரம், பல்லாக்கு, ரதம் எனப் பற்பல வகைகளில் பார்க்க முடிகிறது. ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வருடங்கள் தொன்மையானதாக கருதப்படும் கோவை மாவட்ட குமட்டிப்பதி மலையில் இருக்கும் வெண் சாந்து ஓவியங்களில் தேர் ஓவியம் இடம்பெற்றுள்ளது.






கனமான பொருட்களை எளிதாக நகர்த்த உருளைக் கட்டைகளை (Logs) பண்டைய கால மக்கள் பயன்படுத்தினர். உருளைக் கட்டைகளை வைத்துப் பொருட்களை நகர்த்திய பழங்கால மனிதர்கள், பின்னர் அவற்றைச் சக்கரமாக மாற்றினர். மெசபடோமியாவில் கண்டுபிடிக்கப்பட்ட சக்கரம் சுமார் 5,500 ஆண்டுகள் பழமையானது என அறிஞர்கள் கணித்துள்ளனர். சக்கரத்தின் கண்டுபிடிப்பு மனித வரலாற்றின் மிக முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது, இது விவசாயம், போக்குவரத்து, தொழில் நுட்பம், மற்றும் குயவர் வேலைகளில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது.




தொல்குடி மக்களின் சடங்கு முறைகளில் தேர் பயன்பாடு இருந்துள்ளது. மனிதர்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு புலம் பெயர்ந்து செல்லும் போது பொருட்களை கொண்டு செல்ல வண்டிகள் பயன்ப்படுத்தப்பட்டன. அப்பயன்பாட்டின் நீட்சியாக தேர்கள் உருவாகி இருக்க வேண்டும்.





சங்க காலத்தில் யானைப்படை, குதிரைப்படையுடன் 'தேர்ப்படை' ஒரு மன்னனின் மிகமுக்கியமான பலமாகத் திகழ்ந்தது. மூவேந்தர்கள், வேளிர்கள் பயன்ப்படுத்திய தேர்கள் குறித்த செய்திகளையும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. கடுந்தேர், நெடுந்தேர், பெருந்தேர், திண்தேர், சிறுதேர் என தேர்கள் அவற்றின் அழகு மற்றும் பயன்பாட்டிற்கு ஏற்பப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டன.

மணித்தேர்: இனிய ஓசை எழுப்பும் மணிகளால் அலங்கரிக்கப்பட்ட, அரசர்கள் பயன்படுத்திய அலங்காரத் தேர்.

கொடுஞ்சி நெடுந்தேர்: தேரின் முன்புறம் 'கொடுஞ்சி' எனப்படும் தாமரை மொட்டு வடிவிலான பிடிமானம் கொண்ட கம்பீரமான தேர் பற்றி பொருநராற்றுப்படை (வரி 163) குறிப்படுகிறது.

திணி தோள் இயல் தேர்: தேரின் கணைய மரத்தைப் (எழு) போன்ற உறுதியான, வலுவான தேரை உடைய சேர மன்னன் குட்டுவன் குறித்து சிறுபாணாற்றுப்படை (49) குறிப்பிடுகிறது.

பொலம்படைத் தேர்: பொன்னாலான அணிகலன்கள் மற்றும் தகடுகள் பதிக்கப்பட்ட வெற்றித் தேர்.

முக்கால் சிறுதேர்: குழந்தைகள் பொன்னால் ஆன சிறிய மூன்று சக்கர வண்டியை உருட்டி விளையாடியதை பற்றி பட்டினப்பாலை (வரி 25) குறிப்பிடுகிறது.

தேரின் சக்கரம் முழு நிலா காலத்து வெண்மதி போன்றது என தேற் பற்றி சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது. குயவர்கள் பானை வனைவதற்கு தேர் காலை பயன்படுத்தியதாக இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும் தேர் பற்றிய குறிப்புகள் உள்ளன.



தேர்களை முறையாக செய்வதற்கு இலக்கணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதனை ரத சாஸ்திரம் என்கின்றனர். ரதசாஸ்திர விதிகளின் படியே தேர்கள் வடிவமைக்கப்படுகின்றனர். போதிகை, சிகரம், கலசம், கொடி கொண்டு தேர் முழு வடிவம் பெறுகிறது. திருவிழாவின் போது அலங்கார வண்ணம், திரை சேலைகள், மூங்கில்கள், பூக்கள் கொண்டு தயார் செய்கின்றனர். திருவிழா சமயங்களில், கடவுளின் திருவுருவங்கள் இந்தத் தேர்களில் வைத்து, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.





மேலக் கடம்பூர் என்ற இடத்தில் இருக்கும் கோயில் ஆனது தேர் அமைப்பிலேயே கட்டப்பட்டுள்ளது. இப்பொழுது தேர் பயன்பாடு பெரும்பாலாக கோயில்களில் மட்டுமே உள்ளது. அவை திருவிழாவின் பொழுது இறைவனை வீதி உலா வருவதற்காக பயன்படுத்துகின்றனர். இத்தேரில் புராண சிற்பங்கள், பூதகணங்கள், விலங்குகள், என வரிசைப்படுத்தி சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், கூடல் அழகர் பெருமாள் கோயில், அழகர்கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், போன்ற கோவில்களில் தேர் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.



மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யான தேரோட்டம் மாசி மாதத்தில்தான் முதலில் அரங்கேறியது. நாயக்கர் காலத்தில் அது சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது. அவ்வரலாற்றை நினைவூட்டும் விதமாக தேர்கள் இன்று மாசி வீதியில் நிறுத்தி வைக்கப்படுகிறது. கோயில் தேர்கள் ஒவ்வொரு காலத்திலும் புதுபிக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் மீனாட்சியம்மன் கோயில் தேர் 200 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம்.

பல வருடங்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் தேர் செய்த பின்பு எஞ்சிய மரக்கட்டையினை கொண்டு சிறு சிறு பொருட்கள் செய்து கோயில் பணியாளர்களுக்கு வழங்கியுள்ளனர். தேர் இப்பொழுது தங்கம், வெள்ளியை கொண்டு உருவாக்கப்பட்டு தங்க ரதம், வெள்ளி ரதமாக வீதி உலா வருகின்றன என்று தேவி அறிவு செல்வம் கூறினார்.

பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள் பேசிய காணொளி News Tamil 24X7 செய்தி ஊடகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://youtu.be/IC7jvx7iKVs?si=T08da2gS6l4NR5x7









ஒளிப்படங்கள்: திரு. வெங்கட்ராமன் பரணி வெங்கட்

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை