பெருங்குன்று




    மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக 'பண்பாட்டுச் சூழல் நடை' மாதம் ஒரு ஞாயிறு அன்று நடைபெறுகிறது. இந்நடையில் பல்வேறு துறைசார் அறிஞர்கள், ஆர்வலர்கள் பங்கேற்று, கூடமிடத்தின் புவியியல், தொல்லியல், சூழலியல் செய்திகளை ஆவணம் செய்வர். அவ்வகையில் கடந்த 17.05.2026, ஞாயிறு அன்று காலை பண்பாட்டுச் சூழல் நடையின் 42வது நிகழ்வு மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், தே.கல்லுப்பட்டியில் அமைந்துள்ள தேவன்குறிச்சி மலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் விஸ்வா, பாட்ரிக், தமிழ்தாசன்; காட்டுயிர் ஒளிப்பட கலைஞர்கள் மரு. ஹிமோக்ளோபின், ஜோதிமணி, பாலகிருஷ்ணா, கேசவன், கௌதமா, சூழலியல் ஆர்வலர்கள் நிலா பாண்டியன், லட்சுமி, விளாச்சேரி சதிஷ்குமார், சக்திவேல், கமலேஷ், சீனிவாசன், பெரிய நல்லதம்பி, நீச்சல்காரன் ராஜா, ஹரிபிரசாத் ஆகியோர் பங்கெடுத்தனர். புவியியல் ஆய்வாளர் ஜா. முகம்மது ஹாரிஸ் அவர்கள் மலையின் தோற்றம், தேவன்குறிச்சி மலை பாறைகளில் காணப்படும் கனிமங்கள், அதை கண்டறியும் நுட்பம் ஆகியவற்றை எடுத்துரைத்தார். பண்பாட்டு சூழலியல் ஆய்வாளர் தமிழ்தாசன் தேவன்குறிச்சிமலையின் தொல்லியல் ஆய்வுகள், கோயில் கல்வெட்டு தரும் வரலாற்று செய்திகள் ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

தேவன்குறிச்சி மலையில் சேகரிக்கப்பட்ட கனிம கற்கள்



தேவன்குறிச்சி மலை, ஈஸ்வரப்பேரி கண்மாய் பகுதிகளில் காலை 7 முதல் 11 மணி வரை மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் நிகழ்த்திய பல்லுயிரிய ஆய்வில் தேவன்குறிச்சி மலையில் சுமார் 30 வகை மரங்கள், 50 வகை பறவையினங்கள், 28 வகை வண்ணத்துபூச்சி இனங்கள், 6 வகை ஊர்வன மற்றும் 18 வகை பாலூட்டி வகை விலங்குகள் ஆவணம் செய்யப்பட்டது. புள்ளிமான்கள், முள்ளம்பன்றி, நரி, வெருகு, செம்முக குரங்கு, முள்ளெலி, கீரி, உடும்பு உள்ளிட்ட காட்டு விலங்குகளின் வாழிடமாக தேவன்குறிச்சிமலை விளங்குகிறது. தேவன்குறிச்சி மலையில் 400 ஆண்டுகளுக்கு முன்பு புலி இருந்தது என்பதன் அடையாளமாக புலியை கொன்ற வீரனின் நினைவாக எடுக்கபட்ட நடுகல் மலையின் அடிவாரத்தில் வழிபாட்டில் உள்ளது. பல்வேறு பருவ காலங்களில் விரிவாக ஆய்வு செய்தால், தேவன்குறிச்சிமலையின் உண்மையான பல்லுயிரிய வகைமையை அறிந்துக் கொள்ள முடியும்.

தேவன்குறிச்சி மலையில் 1976-77 ஆண்டில் நடைப்பெற்ற அகழாய்வுகளில் இடைக் கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. மேலும் இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், வளையல்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவைகளும் கிடைத்துள்ளன.

தேவன்குறிச்சி மலை தென்மேற்கு திசையில் பொந்துபாறை என்னும் புடவில் வரலாற்றுக் காலதிற்கு முந்திய வெண்சாந்து குகை ஒவியங்களும், 2000 ஆண்டுகள் பழமையான மழைநீர் வடிகால் கொண்ட கற்படுக்கைகளும் காணப்படுக்கிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள அக்னீஸ்வரன் சிவன் கோயில் கருவறைக்கு பின்புறத்தில் கிபி 10 ஆம் நூற்றண்டைச் சார்ந்த சமணத் தீர்த்தங்கர் சிற்பமும், கோயிலின் கிணற்றில் மகாவீரர் சிற்பமும் காணப்படுகிறது. அக்னீஸ்வரன் சிவன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால கல்வெட்டுகள் தமிழக தொல்லியல்துறையால் ஆவணம் செய்யபட்டுள்ளது. மலையின் வடக்கில் உள்ள ஈஸ்வரப்பேரி கண்மாயிலும் 700 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. 400 ஆண்டுகள் பழமையான புலிக்குத்தி நடுகல்லும் மலையடிவாரத்தில் வழிபாட்டில் உள்ளது.

800 ஆண்டுகள் பழமையான கோயில் கல்வெட்டுகளில் இருந்து தேவன்குறிச்சி மலையின் பெயர் பெருங்குன்று என்றும், அதன் அடிவாரத்தில் இருந்த ஊரின் பெயர் பெருங்குன்றத்தூர் என்றும், ஈஸ்வரப்பேரி கண்மாயின் பெயர் பெரியகுளம் என்றும் அறிந்துக் கொள்ள முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குவாரி பணிகளால் மலையின் கிழக்கு பகுதி சிதைக்கபட்டுள்ளது.



சுமார் 1050 அடி உயரம் கொண்ட தேவன்குறிச்சி மலை தொல்லியல் அடிப்படையிலும் சூழலியல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த மலையாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளைப் பாதுகாப்பதற்காக 2002-ம் ஆண்டு இயற்றப்பட்ட உயிரியற் பல்வகைமைச் சட்டம் (Biological Diversity Act, 2002) படி தேவன்குறிச்சி மலையையும், ஈஸ்வரப்பேரி கண்மாயையும் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறோம்.

தேவன்குறிச்சி மலை:

800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளில் பெருங்குன்று என்றே தேவன்குறிச்சிமலை அழைக்கப்படுகிறது. 






1899 Synopsis of GTS Vol 29 Great Arc Section 8 to 18 or Series A of Southern Trigon


தேவன்குறிச்சி மலை தொல்லியல்:

மனிதகுல வரலாற்றை வரலாற்றுக்கு முந்திய காலம்; வரலாற்றுக் காலம் என இருவகையாக பகுக்கின்றனர். 

வரலாற்றுக்கு முந்திய காலத்தை 4 பிரிவுகளாக வகைப்படுகின்றனர். 

  1. பழைய கற்காலம் (Paleolithic) - 5,00,000 BCE
  2. நுண்கற்காலம் (Microlithic) 10,000 - 4,000 BCE
  3. புதிய கற்காலம் (Neolithic) 4000 - 1000 BCE
  4. இரும்பு காலம் Iron Age (Megalithic) 1000 to 500 BCE

வரலாற்றுக் காலத்தை 4 பிரிவுகளாக வகைப்படுகின்றனர். 

  1. வரலாற்று துவக்க காலம் (Early Historic Period) - 300 BCE to 500 CE
  2. இடை வரலாற்றுக் காலம் (Medieval Period) - 900 CE to 1400 CE
  3. புதிய வரலாற்றுக் காலம் (Modern Period) - 1400 CE to 1900 CE
  4. சமகாலம் (Contemporary History) from 1945 CE

மேற்சொன்ன கால வரையரை, 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு அருங்காட்சியகம் வெளியிட்ட 'Excavation in Tamilnadu - An Archaeological Report' நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சிவகளையில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு குறைந்தது கி.மு. 3345 (அதாவது இன்றைய காலகட்டத்திலிருந்து 5,300 ஆண்டுகளுக்கு முன்பு) வாக்கில் தொடங்கிவிட்டதை அறிவியல் பூர்வமாக உறுதி செய்துள்ளன. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துகள் (தமிழி/தமிழ்-பிராமி) கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் (சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது) சேர்ந்தவை ஆகும். இது தமிழ் மொழியின் மற்றும் சங்க கால நாகரிகத்தின் தொன்மையை, தமிழ்நாட்டில் வரலாற்று காலத்தின் கால வரையரையை உலகிற்கு அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளது. மேற்சொன்ன காலவரையரை பகுப்பில் தமிழ்நாட்டின் இரும்புகாலம் மற்றும் துவக்க வரலாற்றுக் கால தொன்மையும் மீளாய்வு செய்யப்பட வேண்டும்.  


தேவன்குறிச்சிமலையில் வரலாற்றுக்கு முந்திய காலச் சுவடுகள்: 

1. நுண்கற்கால கருவிகள் (Middle stone age Tools) 
2. இரும்பு உருக்கிய செம்புரான் கற்களில் படிந்த கசடுகள் (Iron  Sludge)
3. பாறைக் கீறல்கள் (Petroglyph
4. வெண்சாந்து பாறை ஒவியங்கள் (Rock art / Cave Paintings) 
5. கற்குழிகள் (Cupules)


தேவன்குறிச்சிமலையில் வரலாற்றுக் கால சுவடுகள் 

1. குகை கற்படுக்கைகள் (Cave Rock beds) 
2. மகாவீரர் & ஒரு சமணத்துறவி சிற்பம் -  Mahaveer Idol (கிபி 10 ஆம் நூ) 
3. அக்னீஸ்வரன் கோயில் பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் எண்ணிக்கை 8 - 13th Century Later Pandya Inscription (கிபி 13 ஆம் நூ)
4. புலிக்குத்தி நடுகல் (கிபி 16-17 ஆம் நூ) 
5. ஆங்கிலேயர் கால சர்வே ஸ்டெசன் - British Survey Stone mark (கிபி 1899)



தேவன்குறிச்சிமலைப் பகுதியில் 1976-77 இல் நிகழ்ந்த தொல்லியல் ஆய்விலிருந்து அங்கே 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இடைக் கற்காலத்தைச் சேர்ந்த  மக்கள் பயன்படுத்திய நுண்கற்கருவிகள் கிடைத்துள்ளன. மேலும் அங்கு இரும்பு மற்றும் செப்புக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டன. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய கருப்பு மற்றும் சிவப்பு நிற மண்பாண்டங்கள், கல் மணிகள், வளையல்கள், முதுமக்கள் தாழிகள் போன்றவைகளும் கிடைத்துள்ளன. இடைகற்காலம், இரும்புக்காலம் துவங்கி இன்றைய காலம் வரை மக்களின் வாழிட பகுதியாக தேவன்குறிச்சி இருந்துள்ளது என்பதை தொல்லியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. 

தே.கல்லுப்பட்டியில் செம்பு கால கருவிகள் கண்டறியபட்டத்தை தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் இவ்வாறு குறிப்பிடுகிறார்  

''செம்பு காலத்திலும் (Chalcolithic) பெருங்கற்படை காலத்திலும் (Megalithic) தமிழ்நாட்டில் முறையே செம்பும் இரும்பும் பயன்படுத்தக் கற்றிருந்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் மட்டுமே செம்புப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டால், செம்பு காலத்தின் தாக்கம் மிகக் குறைவாக இருந்ததாக தெரிகிறது. தமிழ்நாட்டில் செம்பு கால பண்பாட்டின் (Chalcolithic) பரவல் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், செம்பு கால தளங்களாக கருதப்படும் டி. கல்லுப்பட்டி மற்றும் ஆதிச்சநல்லூரில் இருந்து சேகரிக்கப்பட்ட தொல்பொருட்கள் பல வகைகளில் குறிப்பிடத்தக்கவை ஆகும்''. (Natana Kasinathan, 1997, The Cultural Heritage of Tamilnadu as Gleaned from Excavation, Pg 14)  




தேவன்குறிச்சிமலையில் குகைப் போன்ற மூன்று புடவுகள் உள்ளன. மூன்று மலைப் புடவுகளும் ஆதி மனிதர்களின் வாழிடமாக விளங்கியது என்பதற்கு சான்றாக வரலாற்றுக் காலத்திற்கு முந்திய பாறைக் கீறல்களும் (Petroglyphs) பாறை ஓவியங்களும் (Roc Art) காணப்படுகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு தொல்லியல் ஆய்வாளர் து. முனீஸ்வரன் அவர்களால் தேவங்குறிச்சி மலையில் சிவன் கோயிலின் அருகே பாறைக்கீறல்கள்  கண்டறியபட்டது. பொந்துபாறை என்றழைக்கப்படும் புடவில் வெள்ளைநிற ஓவியங்கள் காணப்படுகிறது. நீண்ட கழுத்துடைய விலங்கினை மனிதன் வேட்டையாடுவது போன்றும், மனித, விலங்கின உருவங்கள், குறீயிடுகள் கோட்டோவியமாக அங்கே வரையப்பட்டுள்ளன. வெப்பாலை மரத்தின் பாலும், சுண்ணாம்பு சாந்தும் இவ்வோவியங்கள் வரைய பயன்ப்பட்டு இருக்கலாம் என்றும், இந்த ஓவியங்கள் 5000 முதல் 3000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும், வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இதில் கற்படுக்கைகளுடன் கூடிய புடவு ஒன்றும் உள்ளது. இக்கற்படுக்கைகள் சமணத்துறவிகளுக்காக வெட்டப்பட்டதாக இருக்கலாம்.








கற்குழிகள்: 

வரலாற்று காலத்திற்கு முந்திய கற்குழிகள் (Cupules) தேவன்குறிச்சிமலையில் காணப்படுகிறது. பாறை மேற்பரப்புகளில் செயற்கையாகச் செதுக்கப்பட்ட சிறிய, கிண்ண வடிவப் பள்ளங்கள் கற்குழிகள் என்று அழைக்கப்படுகிறடுது. அவை வரலாற்றுக்கு முந்தைய பாறைக்கீறல்களின் மிகப் பழமையான மற்றும் பரவலான வடிவமாகக் கருதப்படுகின்றன. கற்குழிகள் உலகெங்கும் பாறை ஓவியங்கள் காணப்படும் வாழ்விடங்களிலும், பெருங்கற்கால கற்திட்டை, கல்பதுக்கைகள் ஆகியவற்றின் மீதும் காணப்படுகிறது. மதுரையில் தேவன்குறிச்சி, புத்தூர்மலை, கௌரிமலை, சடையனூத்துமலை ஆகிய மலைகளிலும், குன்னங்குடிபட்டி ஈமக்காட்டு கற்திட்டைகளிலும் கற்குழிகள் காணப்படுகின்றன. இவை படையல் செய்வதற்கும், வண்ணப்பூச்சுக்கான நிறமிகளை அரைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன என்றும், ஆழ்ந்த ஆன்மீக சடங்கியல் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கலாம் என்றும், பாறைகளில் இசையை உருவாக்கும் பயன்படுத்தட்டன என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். கற்குழிகள் என்ன நோக்கத்திற்கு குடையப்பட்டன என திட்டவட்டமாக கூற முடியவில்லை. அத்தகைய கற்குழிகள் தேவன்குறிச்சிமலையில் காணப்படுகின்றன. 


பல்சமயக் குன்று:

மலையின் உச்சியில் வரதராஜ பெருமாள் கோயில் ஒன்றும், கார்த்திகை மாத தீபதூண் ஒன்றும், ஆங்கிலேயர் கால சர்வே கல்லும் உள்ளது. மலைக்கு ஏறும் இடைவழியில் ஆஞ்சிநேயர் கோயில் ஒன்றும், மலையின் அடிவாரத்தில் அக்னீஸ்வரன் சிவன் கோயிலும், கோயில் குளமும், கிணறும் அமைந்துள்ளது. கோயில் கருவறைக்கு பின்புறமும், கிணற்றிலும் சமணத் துறவைகளின் சிற்பங்கள் காணப்படுகிறது. சித்திரை மாதம் முதல் நாளன்று மலையுச்சியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு மலையேறி சென்று மக்கள் வழிபடுகின்றனர். தமிழர்களின் ஆதி வழிபாடான நடுகல் வழிபாட்டின் நீட்சியாக புலிக்குத்தி நடுகல் வழிபாடு மலை அடிவாரத்தில் காண முடிகிறது. 


சமண சமயத்தின் சுவடுகள்:

தேவன்குறிச்சிமலை தென்மேற்கு புடவில் உள்ள கற்படுக்கைகள் இம்மலையில் துறவிகளின் பள்ளி செயல்பட்டதை காட்டுகின்றன.  அக்னீஸ்வரன் சிவன் கோயிலின் பின் பகுதியில் நின்ற நிலையில் ஒரு சமணத்துறவியின் சிற்பமும், கோயில் கிணற்றின் மேற்கு சுவற்றில் அமர்ந்த நிலையில் மகாவீரர் சிற்பமும் காணப்படுகிறது. கிபி 10ஆம் நூற்றாண்டு வரை சமண வழிபாட்டுத் தளமாக் இருந்த தேவன்குறிச்சிமலை பின், சைவக் கோயிலாக மாற்றப்பட்டு இருக்கலாம் என கருத இடம் தருகிறது. தே.கல்லுப்பட்டி அருகில் உள்ள காரைக்கேணி, வேளாம்பூர், மேல உப்பிலிக்குண்டு, பொய்கைமலை, புத்தூர்மலை ஆகிய பகுதிகளில் கிபி 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 












அக்னீஸ்வரர் கோயில்:

கோயில் கருவறையில் அக்னீஸ்வரன் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். சிவன் சன்னதியை அடுத்து தாயார் கோமதி அம்மன் சன்னதி அமைந்துள்ளது. கிபி 13 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுச் செய்திகளில் இருந்து இக்கோயில் இறைவனின் பெயர் 'திருவற்கீசுவரமுடைய நாயனார்' என்று அறிந்துக் கொள்ள முடிகிறது. அக்னீஸ்வரன் என்கிற பெயர் 19-20 ஆம் நூற்றண்டு கல்வெட்டுகளில் காண முடிகிறது. 



கோயில் கல்வெட்டுகள் தரும் செய்தி:

தேவன்குறிச்சிமலையில் அமைந்துள்ள அக்னீஸ்வரர் கோயிலில் மொத்தம் 8 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 7 கல்வெட்டுகள் கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் பிற்பாண்டியர் காலத்தை சேர்ந்ததாகும். 1 கல்வெட்டு 1931 ஆம் ஆண்டை சேர்ந்தாகும். இவை தவிர்த்து மலையின் வடக்குபுறத்தில் உள்ள ஈஸ்வரப்பேரி கண்மாயின் மடை கண்ணில் கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றும் உள்ளது.  

இன்றைக்கு தேவன்குறிச்சி மலை என்றும், மலையடிவார ஊரின் பெயர் கல்லுப்பட்டி என்றும், மலையின் அடிவாரத்தில் கோயில் கொண்டுள்ள இறைவன் பெயர் அக்னீஸ்வரன் என்றும், கண்மாயின் பெயர் ஈஸ்வரப்பேரி என்றும் மக்களால் அழைக்கப்படுகிறது. கிபி 13 ஆம் நூற்றண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளில் மலையின் அடிவாரத்தில் உள்ள ஊரின் பெயர் பெருங்குன்றத்தூர் என்றும், கோயில் கொண்டுள்ள இறைவனின் பெயர் திருவற்கீசுவரமுடைய நாயனார் என்றும், மலையின் பெயர் பெருங்குன்று என்றும், மலையின் வடக்குபுறத்தில் அமைந்துள்ள கண்மாயின் பெயர் பெரியகுளம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

கல்வெட்டுகளில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பற்றியும் அவனது பட்டப் பெயர்களான சோணாடு கொண்டருளிய, சோணாடு வழங்கியருளிய ஆகியவையும் குறிப்பிடப்படுகிறது. கோயிலுக்கு இறையிலியாக கொடுக்கபட்ட நிலம் குறித்தும், சந்தியா தீபம் எரிக்க கொடுக்கப்பட்ட கொடை குறித்தும் கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. இவ்வூரின் குறுநிலத் தலைவர்களாக இருந்த எழுவன் சிறந்தன் என்பவர் கோயிலுக்கு இறையிலியாக நிலம் கொடுத்த செய்தினையும், கலிங்கத்தரையன் என்பவன் பெருங்குளம் கண்மாயை சீரமைத்த செய்தியினையும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.  அப்பன் கூத்தர் என்பவரின் (செய்) நிலம் சிவன் கோயிலின் தெற்கில் இருந்ததை கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது. 


செங்குடி நாட்டு பிரிவின் கீழ் பெருங்குன்றத்தூர்  இருந்துள்ளது என்றும், செங்குடி நாட்டு பிரிவு மதுரோதைய வளநாட்டின் நிருவாக அமைப்பின் கீழ் இருந்தது என்பதையும் கோயில் கல்வெட்டுகள் மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது. 

 (ஆதாரம்: மதுரை மாவட்ட கல்வெட்டுத் தொகுதிகள் 2, பக் 83 – 91)





கிணற்றின் கிழக்குச் சுவரில் உள்ள கல்வெட்டு


தேவன்குறிச்சி மலையை ஒட்டியுள்ள பெருங்குன்றத்தூர் செங்குடி நாட்டின் கீழும், செங்குடி நாடு மதுரோதைய வளநாட்டின் கீழும் இருந்தது என்பதை கிபி 13 ஆம் நூற்றண்டு கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. நாடு, வளநாடு குறித்து தொல்லியல் அறிஞர் வேதாசலம் அவர்கள் விளக்கத்தை அறிவது செங்குடி, மதுரோதைய வளநாடு பற்றி அறிந்துக் கொள்ள உதவும்.  


நாடு:
சங்ககாலத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நிலவுடைமை வளர்ச்சியினால் வேளாண் குடிமக்கள் சமூகத்தில் தலைமைச் சிறப்பு பெற்றவர்களாக மாறினர். இதனால் வாழ்கின்ற இடத்தாலும் குடும்ப உறவாலும், உற்பத்தி உறவுகளாலும் ஒன்றுபட்டு அருகருகே இருந்த வேளாண்குடி ஊர்கள் தங்கள் சமூகத்தின் நலன் கருதி ஒரு கூட்டை ஏற்படுத்திக் கொண்டன. இக்கூட்டே வேளாண்சமூக நாடாக மலர்ந்தது. நாடு என்ற பெயரில் தொகுதி தொகுதியாகச் சேர்ந்த வேளாண்குடி ஊர்களில் மூதூர் ஒன்றின்பெயரேபெரும்பாலும். ஒன்றின் பெயரே பெரும்பாலும் அந்நாட்டிற்குப் பெயராக இடப்பட்டது.

இதனால் ஊர் என்பது வேளாண்குடிகளின் தொகுப்பேயாகும். நாடு என்பது குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்த அத்தொகுப்புகளின் கூட்டு அல்லது வேளாண்குடி ஊர்களின் சமூகக் கூட்டைக் குறிக்கும். (முனைவர் வெ. வேதாசலம், ஜனவரி 2019, பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல், பக் 16)

சங்ககாலத்திற்குப் பின்னர் தமிழ்நாட்டில் இருந்த ஊர்களின் பெரும்பகுதி நாட்டிற்கு அடங்கிய வேளாண்சமூக ஊர்களாகவே விளங்கியுள்ளன. இவை பிற்காலத்துக் கல்வெட்டுகளில் வெள்ளான் வகை ஊர்கள் என்று குறிப்பிடப்பட்டன. இவ்வகை ஊர்கள் ஒவ்வொன்றையும் ஊர் என்றழைக்கப்பட்ட ஊரவைகள் நிருவகித்து வந்தன. ஊர்களின் நலனைப் பேணும் வகையில் ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டு ஊர்களின் பிரதிநிதிகள் அடங்கிய நாடு என்றழைக்கப்பட்ட நாட்டவைகள் இருந்தன. இவ்வவையினர் நாட்டார் என்று அழைக்கப்பட்டனர்.

இந்நாட்டவை மூலமாகவும் குடிகளின் தலைவர்களாக விளங்கிய நாடுகிழவர்கள் மூலமாகவும் அரசு வெள்ளான்வகை ஊர்களின் வரிகளை வாங்கி ஊர்களை நிருவாகம் செய்து வந்தது. (முனைவர் வெ. வேதாசலம், ஜனவரி 2019, பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல், பக் 43)

பத்தாம் நூற்றாண்டிலிருந்தே நாட்டின் பெரும்தொகுதியாக விளங்கிய வெள்ளான் வகை ஊர்கள், நாட்டார் என்று அழைக்கப்பட்ட நாட்டுஅவை மூலமாகவே அரசனிடம் தொடர்புகொண்டு விளங்கியுள்ளன. வெள்ளான்வகை ஊர்கள் நாட்டார் மூலமாக அரசிடம் தங்கள் வரியினைச் செலுத்தின என்பதற்கும் வெள்ளான்வகை ஊராரின் பிரதிநிதிகளாகவே நாட்டார்விளங்கியுள்ளார் என்பதற்கும் தெளிவான வெளிப்படையான சான்றுகள் பாண்டிய நாட்டில் கிடைக்கின்றன. (முனைவர் வெ. வேதாசலம், ஜனவரி 2019, பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல், பக் 46)

சங்ககாலத்தில் நாட்டிற்கு உரிமையுடையவர்கள் என்ற பொருளில் தமிழ் அரசர்கள் கிழவன் / கிழவோன் என்ற பெயரினைப் பூண்டு விளங்கினர். உள்நாட்டில் இருந்த ஊர்களின் குடித்தலைவர்களாக விளங்கியவர்கள் கிழான், கிழார் என்ற பெயரினைப் பூண்டு விளங்கினர். (முனைவர் வெ. வேதாசலம், ஜனவரி 2019, பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல், பக் 49)

வளநாடு: 

பாண்டிய நாடு பத்தாம் நூற்றாண்டிற்கு முன்பு முற்காலப் பாண்டியர் காலத்தில் பல சிறு நாடுகளாகப் பிரிந்து விளங்கியுள்ளது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு சோழர்கள் பாண்டிய நாட்டின் பெயரினை மாற்றியதோடு அல்லாமல் பாண்டிய நாட்டின் நிலப்பரப்பை, இரண்டு ஆறுகளை எல்லைக்கோடுகளாக வைத்து நிருவாகத்திற்காகப் பல பிரிவுகளாகப் பிரித்தனர். அவற்றிற்கு 'வளநாடுகள்' என்று பெயரிட்டுப் பாண்டிய நாட்டில் பல உள்நாட்டு அரசியல் நிருவாக நிலப்பிரிவுகளை ஏற்படுத்தினர். பாண்டிய நாட்டில் ஏற்கனவே தொன்றுதொட்டு நாடு,கூற்றம் என்ற பல பெயர்களில் இருந்து வந்த சமூக அடிப்படையில் அமைந்த உள்நாட்டு நிலப்பிரிவுகளிடையே தங்களது ஆதிக்கத்தினை உணர்த்தும் வகையில் இவ்வளநாட்டுப் பிரிவுகளைச் சோழர்கள் உருவாக்கித் தங்களது பெயரினையும் அவற்றிற்கு இட்டுள்ளனர். 

தாமிரபரணிக்கும் அதற்கு வடக்கேயுள்ள வைப்பாற்றிற்கும் இடையிலிருந்த பகுதி 'முடிகொண்ட சோழவளநாடு' என்றும் வைகையாற்றிற்கு வடக்கேயும் வெள்ளாற்றிற்குத் தெற்கேயும் இருந்த பகுதி ‘ராசேந்திர சோழவளநாடு' என்றும் அழைக்கப்பட்டன. பதினொன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் இடைக்காலப் பாண்டியர் காலத்திலிருந்து சோழர் ஏற்படுத்திய இவ்வளநாட்டுப் பிரிவுகள் வழக்கிழந்தன. ஆனால், மதுரை நகரை உள்ளடக்கிய மதுராந்தக வளநாடு மட்டும் 'மதுரோதையவளநாடு' என்று பாண்டிய மன்னரது பெயரில் மாற்றம் பெற்று பதினான்காம் நூற்றாண்டு வரை இருந்தது. சோழர்களுக்கு முன்பே பாண்டியர்கள் கேரளசிங்க வளநாடு நிருவாக அமைப்பை உருவாக்கினர் என கூறும் வகையில் சான்றுகளும் கிடைத்துள்ளன. (முனைவர் வெ. வேதாசலம், ஜனவரி 2019, பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல், பக் 5 -8)  

செங்குடிநாடு: 

பாண்டிய நாட்டில் நாடுகளைக் குறிக்க நாடு என்ற பெயரோடு கூற்றம், வளநாடு, முட்டம், இருக்கை, ஊர்க்கீழ், குளக்கீழ், ஆற்றுப்போக்கு, ஆற்றுப்புறம், என்று பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு நாடு தோற்றம் எடுத்த காலத்தில் அப்பகுதியில் இருந்த மூத்த தொல்குடிகள் வாழ்ந்த மூதூர் ஒன்றின் பெயரே நாட்டிற்குப் பெயராக இடம்பெற்றிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.   சீவநல்லூர், அபிமானமேருபுரம் (செங்குடி நகரம் / செங்குன்றாபுரம்), கடுங்கோமங்கலம் (பேரையூர்), கருங்குளம் (இறங்கல்மீட்டன்), கலியன்குளம், கல்லூரல்பாறை, கவியங்கோட்டை, காடனேரி, காரைக்கண்ணி (காரைகேணி), கிழவனேரி, கொற்றனேரி, சிறுகுன்றத்தூர் (குன்னத்தூர்),  திசையன்குளம், தென்கோம்பி,  வடகோம்பி, நக்கனேரி, நல்லமறம், நாகனேரி, நாட்டார்மங்கலம், பத்மதளதேவிகச்சதுர் வேதிமங்கலம், திரளி, புளியங்குடி, புளியங்குளம், பெருங்குன்றத்தூர், பொக்கனேரி, பொற்பாதேவிச்சதுர் வேதிமங்கலம் (கள்ளிக்குடி), மங்கலகருங்குளம், முருகனேரி, வையூர் உள்ளிட்ட ஊர்கள் செங்குடி நாட்டு பிரிவின் கீழ் இருந்தன. (முனைவர் வெ. வேதாசலம், ஜனவரி 2019, பாண்டிய நாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல், பக் 144 - 146)


ஈஸ்வரப்பேரி பெரிய கண்மாய்:

கல்வெட்டுகளில் இக்கண்மாயின் பெயர் பெரியகுளம் என்றே குறிப்பிடப்படுகிறது. பொதுபணித்துறை ஆவணங்களின் படி ஈஸ்வரப்பேரி கண்மாய் வைப்பாறு வடிநில கோட்டத்தின் கீழ் நேரடி ஆற்றுப்பாசனமற்ற கண்மாயாக வைக்கப்பட்டுள்ளது. சுமார் 126 ஹெக்டேர் (311 ஏக்கர்) நீர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் மூலம் 108.5 ஹெக்டேர் வேளாண் நிலம் பாசனம் பெறுகிறது. கண்மாயின் முழுக் கொள்ளவு 149.73 மீட்டர் ஆகும்.  வருவாய்த்துறை ஆவணங்களின்படி 124.33 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் தே.கல்லுப்பட்டி ஊராட்சியின் புல எண் 190/1 அமைந்துள்ளது. சாப்டூர் மலைகளில் உற்பத்தியாகும் கௌண்டா நதியின் மூலம் நீர் வரத்தை இக்கண்மாய் பெறுகிறது. மலையை ஒட்டியுள்ள கண்மாய் கரையில் மடைக்கு அருகில் கன்னிமார் சிலை வழிபாட்டில் உள்ளது.  

ஈஸ்வரப்பேரி கண்மாய் புவியியல் அச்சு (GPS Location): 9.735120, 77.840950












தேவன்குறிச்சி பல்லுயிரியச் சூழல்:

தேவன்குறிச்சி மலையில் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரிப்புலிகளின் வாழிடமாக விளங்கி இருக்கிறது என்பதற்கு மலையின் அடிவாரத்தில் காணப்படும் நாயக்கர் கால புலிக்குத்தி நடுகல் சான்று பகிர்கின்றது.  தேவன்குறிச்சி மலையின் பல்லுயிரிய சூழலை விரிவாக ஆய்வு செய்ய வேண்டும்.




தேவன்குறிச்சி மலை பாலூட்டி வகை விலங்குகள்:

1. Spotted Deer / Chital - புள்ளி மான் 
2. Indian Wild Boar - காட்டுப் பன்றி 
3. Jungle Cat - காட்டுப் பூனை / வெருகு 
4. Small Indian Civet - புனுகு பூனை 
5. Common Palm Civet - மரநாய் 
6. Indian Grey Mongoose - சாம்பல் நிறக் கீரி
7. Golden Jackal - பெருநரி
8. Bare bellied Hedgehog - முள்ளெலி 
9. House shrew - மூஞ்சூறு 
10. Indian Hare - காட்டு முயல் 
11. Bonnet Macaque - செம்முக குரங்கு 
12. Grey Slender Loris - சாம்பல் நிற தேவாங்கு 
13. Indian crested porcupine - முள்ளம்பன்றி 
14. Three Striped palm squirrel - மூவரி அணில்
15. Indian Gerbil - இந்திய வெள்ளெலி 
16. Greater Bandicoot Rat - பெருச்சாளி 
17. Brown Rat - பழுப்பு நிற எலி 
18. House Mouse - சுண்டெலி

Interacted with Local people to document Mammals using Photos of the species and survey sheet. Bats need to studied in Thevankurichi Hill. Mammals list Documented by Thamizhthaasan on 17.05.2026 




16.05.2026 அன்று தே.கல்லுப்பட்டி - குன்னத்தூர் சாலையில் அடிபட்டு இறந்த புள்ளிமான். வனத்துறையால் மீட்டு செல்லப்பட்டது. தகவல் மற்றும் புகைப்படம்: S.K. நாகராஜ், கல்லுப்பட்டி


தேவன்குறிச்சி மலை பறவைகள்:

தேவன்குறிச்சிமலையில் ஒரு அரைநாள் பொழுதில் மட்டுமே 51 வகை பறவைகள் ஆவணம் செய்தோம். விரிவான ஆய்வுகள் இப்பறவைகளின் எண்ணிக்கை உயர உதவும்.   

Thevankurichi Hillock Birds Checklist - https://ebird.org/checklist/S340586349

Eswaraperi Heritage Lake Birds Checklist  - https://ebird.org/checklist/S340660951

1. Indian Peafowl - மயில்
2. Rock Pigeon (Feral Pigeon) - மாடப் புறா 
3. Eurasian Collared-Dove - கள்ளிப்புறா
4. Spotted Dove - புள்ளிப் புறா
5. Laughing Dove - சிறிய தவிட்டுப் புறா 
6. Greater Coucal - செம்போத்து
7. Eurasian Hoopoe - கொண்டலாத்தி
8. Blue-faced Malkoha - பச்சை வாயன் 
9. Pied Cuckoo (Jacobin Cuckoo) - சுடலைக் குயில்
10. Asian Koel - ஆசிய குயில் 
11. Common Hawk-Cuckoo - அக்கா குயில் 
12. Little Swift (Indian House Swift) - நாட்டு உழவாரன் 
13. Asian Palm Swift - பனை உழவாரன்
14. White-breasted Waterhen - கம்புள் கோழி
15. Red-wattled Lapwing - சிவப்பு மூக்கு ஆள்காட்டி 
16. Indian Pond-Heron - குருட்டுக் கொக்கு
17. Glossy Ibis - அரிவாள் மூக்கன்
18. Eastern Cattle Egret - உண்ணிக் கொக்கு
19. Oriental Honey-buzzard - தேன் பருந்து 
20. Indian Spotted Eagle - இந்திய புள்ளிக் கழுகு
21. Bonelli's Eagle - இராசாளிப் பருந்து 
22. Shikra - வல்லூறு 
23. Black Kite - கரும்பருந்து 
24. Spotted Owlet - புள்ளி ஆந்தை
25. White-throated Kingfisher - வெண்தொண்டை மீன்கொத்தி 
26. Asian Green Bee-eater - பச்சைப் பஞ்சுருட்டான்
27. Indian Roller - பனங்காடை 
28. Coppersmith Barbet - செம்மார்புக் குக்குறுவான்
29. Black-rumped Flameback - பொன்முதுகு மரங்கொத்தி 
30. Rose-ringed Parakeet - பச்சைக்கிளி
31. Common Woodshrike - காட்டுக் கீச்சான் 
32. Black Drongo -  கருங்கரிச்சான் 
33. Rufous Treepie - வால்காக்கை 
34. House Crow - காகம் 
35. Large-billed Crow - அண்டங்காக்கை 
36. Common Tailorbird - தையல் சிட்டு 
37. Jungle Prinia - காட்டுக் கதிர்க்குருவி 
38. Red-vented Bulbul - செங்குதக் கொண்டைக்குருவி
39. Yellow-billed Babbler - வெண்தலை சிலம்பன்
40. Brahminy Starling - கருங்கொண்டை நாகணவாய் 
41. Common Myna - நாகணவாய் 
42. Indian Robin - கருஞ்சிட்டு
43. Pale-billed Flowerpecker - வெளிர் அழகு பூங்கொத்தி 
44. Purple-rumped Sunbird - ஊதாப்பிட்டு தேன்சிட்டு
45. Purple Sunbird - ஊதாத்தேன்சிட்டு 
46. Loten's Sunbird - பெரிய அலகு தேன்சிட்டு  
47. White-browed Wagtail - கருப்பு வெள்ளை வாலாட்டி

கீழ்காணும் பறவைகள் மலையடிவார தேவன்குறிச்சி கண்மாய் பகுதிகளில் ஆவணம் செய்தோம்.

48. Red-naped Ibis - செந்தலை அன்றில் 
49. Zitting Cisticola - விசிறிவால் கதிர்க்குருவி
50. Baya Weaver - தூக்கணாங்குருவி
51. Paddyfield Pipit - வயல் நெட்டைக்காலி





















மலை மரங்கள்: 

Trees of Thevankurichi Hillock - Documented by PR Viswanath and Sathishkumar Vilacheri

1. அரசு - Ficus religiosa
2. அரளி - Cascabela thevetia
3. இச்சி - Ficus amplissima
4. உதியம் - Lannea coromandelica
5. மருதம் - Terminalia arjuna 
6. வேம்பு - Azadirachta indica
7. நாவல் - Syzygium cumini
8. தேக்கு - Tectona grandis
9. வில்வம் -   Aegle marmelos
10. எலுமிச்சை - Citrus × limon 
11. நாகலிங்கம் - Couroupita guianensis
12. புளி - Tamarindus indica
13. ஆவி - Holoptelea integrifolia
14. வெப்பாலை - Wrightia tinctoria 
15. மரமல்லி - Millingtonia hortensis
16. வெள்வேலம் - Vachellia leucophloea 
17. உசிலை -Albizia amara
18. மஞ்சநத்தி - Morinda tinctoria 
19. மஞ்சகடம்பு - Haldina cordifolia
20. குருந்தம் - Atalantia monophylla
21. சதுரக்கள்ளி - Euphorbia antiquorum 
22. சூரை இலந்தை - Ziziphus oenoplia 
23. புங்கை - Pongamia pinnata
24. தவசி முருங்கை - Justicia glauca
25. விஷ்ணுகிராந்தி - Evolvulus alsinoides
26. நாய்க்கடுகு - Cleome viscosa
27. நெய்வேலி காட்டாமணக்கு - Ipomoea carnea
28. வெள்வேலம் - Vachellia planifrons

வெப்பாலை, கருவேலம், மஞ்சனத்தி உள்ளிட்ட மரங்களே பரவலாக மலையில் காணப்பட்டன. அரளி, மரமல்லி, நாகலிங்கம் உள்ளிட்ட அயல் மரங்கள் கோயில் வளாக பகுதியில் காணப்பட்டது. நரந்தம் புல் (Cymbopogon flexuosus











தேவன்குறிச்சிமலை வண்ணத்துப்பூச்சிகள் பட்டியல்:


Thevankurichi Hillock Butterflies Checklist by Mr. Kamalesh
1. Common Mormon — கறிவேப்பிலை அழகன் / கறிவேப்பிலை அழகி
2. Common Rose — உரோசா அழகி / ரோஜா வண்ணத்தி
3. Crimson Rose — ராஜா வண்ணத்தி (சிவப்புடல் அழகி)
4. Lime Butterfly — எலுமிச்சை அழகி
5. Grass Yellow — மஞ்சளாத்தி / புல் மஞ்சள்
6. Mottled Emigrant — திட்டு வெள்ளையன் (அவரை வெள்ளையன்)
7. Common Emigrant — கொன்னை வெள்ளையன் / கொள்ளை வெள்ளையன்
8. Small Salmon Arab — சிறிய சந்தன அரபு
9. Large Salmon Arab — பெரிய சந்தன அரபு
10. Cabbage White — கோஸ் வெள்ளையன் / கொக்கி குறி வெள்ளையன்
11. White Orange Tip — வெண் ஆரஞ்சு நுனி / வெண் சிறகன்
12. Great Orange Tip — பெருஞ்சிறகான் (செஞ்சிறகன்)
13. Yellow Orange Tip — மஞ்சள் ஆரஞ்சு நுனி / மஞ்சள் சிறகன்
14. Tawny Coster — செவ்வந்தி சிறகன்
15. Plain Tiger — வெந்தய வரியன் / புலி வண்ணத்தி
16. Danaid Eggfly — பசலை சிறகன்
17. Grey Pansy — சாம்பல் வசீகரன்
18. Lime Blue — எலுமிச்சை நீலன்
19. Forget-Me-Not — பருப்பு நீலன் / மறவாமை நீலன்
20. Lesser Grass Blue — சிறிய புல் நீலன் / கரும்புல் நீலன்
21. Striped Pierrot — கோடு விகடன்
22. Indian Skipper — இந்திய தாவி
23. Dart sp. — அம்பு தாவி இனம்
24. Common Banded Awl — பொது கோடு துளைத்தாவி
25. Double Banded Crow - இரு பட்டைக் கருப்பன்
26. Common Pierrot - புள்ளி நீலன்











The below species were documented by Mr. P.R. Vishwnath on 17th May 2026 between 7Am to 10 PM

Ants
1. Camponotus compressus (Indian Black Ant)
2. Camponotus rufoglaucus (Velvet Sugar Ant)
3. Tetraponera rufonigra (Arboreal Bicolored Slender Ant)
4. Crematogaster sp (Acrobat Ant)
5. Camponotus sericeus (Silky Sugar Ant)
6. Oecophylla smaragdina (Asian Weaver Ant)

Wasp
1. Ropalidia jacobsoni ( Small Paper Wasp)
2. Allorhynchium argentatum (Black Potter Wasp)

Honey Bee
1. Apis dorsata (Rock Bee).
2. Apis florea (Red Dwarf Honey bee)

Damselfly
1. Ceriagrion coromandelianum (Coromandel Marsh Dart Damselfly)

Fly
1. Chrysosoma leucopogon (Long Legged Fly)
2. Tachinidae sp (Tachinidae fly)
3. Musca domestica (Common House Fly)

Spider
1. Pardosa pseudoannulata (Pond Wolf Spider)

Amphibians 
1. Firouzophrynus hololius (Gunthers Toad)

Reptiles
1. Cnemaspis gracilis(Slender Day Gecko)
2. Psammophilus dorsalis (South Indian Rock Agama)
3. Calotes Versicolor ( Garden Lizard)


பல்லுயிரிய மரபு தளம் கோரிக்கை:

தொல்லியல் நோக்கிலும் சூழலியல் நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த தேவன்குறிச்சி மலையையும், ஈஸ்வரப்பேரி கண்மாயையும் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  இந்தியாவில் உள்ள தாவரங்கள், விலங்கினங்கள் மற்றும் நுண்ணுயிரிகளைப் பாதுகாப்பதற்காக 2002-ம் ஆண்டு இயற்றப்பட்ட உயிரியற் பல்வகைமைச் சட்டம் (Biological Diversity Act, 2002) படி தேவன்குறிச்சி மலையையும், ஈஸ்வரப்பேரி கண்மாயையும் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவிக்க வேண்டும். 


சங்க இலக்கியத்தில் பெருங்குன்று

சங்கப்பாடல்களில் பெருங்குன்றுகள் குறித்து பல்வேறு இடங்களில் சுட்டப்படுகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய திணைகளில் காணப்படும் பெருங்குன்றுகள் குறித்து புலவர்கள் பாடியுள்ளனர். திருச்சி மாநகரின் நடுவில் உள்ள மலைக்கோட்டை மலையை நெடும் பெருங்குன்றம் என்றே குறுங்குடி மருதனார் பாடுகிறார். 


கறங்கு இசை விழவின் உறந்தை குணாது
நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள் (அகநானூறு 4: 14-15)

உறையூர் என்னும் ஊரின் கிழக்கு (குணாது) திசையில் உள்ள நெடும் பெருங்குன்றம் என்று பாடுகிறார். உறையூர் நகரின் கிழக்கு திசையில் மலைக்கோட்டை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தேவன்குறிச்சி மலை பாலை பெருவழியில் உள்ள மலையாகும். பாலை பெருவழியில் உள்ள பெருங்குன்றுகள் குறித்த பாடல்கள் சங்க இலக்கியத்தில் காணப்பட்டாலும், நற்றிணை 2ஆம் பாடலும், அகநானூறு 19 & 45 ஆம் பாடலும் ஈராயிரமாண்டுகளுக்கு முந்திய தேவன்குறிச்சி மலையின் இயல்பை காட்டுவதாக அமைகிறது. 

சங்கப் புலவர் பெரும்பதுமனார் எழுதிய பாடல் (நற்றிணை 2) பெருங்குன்றை படம்பிடித்து காட்டுகிறது. 

பாலை வழியில் அமைந்து குளிர்ந்த பெருங்குன்றில் ஈச்ச மரங்கள் (Phoenix sylvestris) காற்றில் அசைந்தாடுகிறது. இவ்வழியில் புலிகள் மனிதனை தாக்கும் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. மான் வேட்டையாட இண்டு (Pterolobium hexapetalum) மற்றும் ஈங்கை (Mimosa tortasynonym / Acacia pennata) புதரில் காத்திருக்கும் புலிக்குட்டியின் (குருளை) பாலை நிலத்தின் காட்டு வழியை கடக்கும் இளையோனை பற்றி நற்றிணை 2ஆம் பாடல் குறிப்பிடுகிறது. 

வெள்ளிவீதியார் பாடிய பாடல் ஒன்று பெருங்குன்று குறித்த செய்திகள் காணப்படுகிறது. அகநாநூறு 45 ஆம் பாடலில் கோடைகாலத்தில் வாகை மரத்தின் (Albizia lebbeck) நெற்று கொத்துகள் காற்றில் அசையும் போது எழுப்பும் ஒலியானது விட்டு விட்டு ஒலிக்கும் பறையிசை போல கேட்கிறது. அவ்வோசை கேட்கும் பெருங்குன்றத்தில் நீர்வளமற்ற வறண்ட பாதையை கடந்து வரும் யானைகளை கொல்லும் புலிகள் நிறைந்திருங்கும் காட்டு வழி அமைந்திருக்கிறது எனக் வெள்ளிவீதியார் பாடல் குறிப்பிடுகிறது. 


யா மரத்து உச்சியில் அமர்ந்திருக்கும் பருந்து எழுப்பும் சோகமான (உயா) ஒலியும், துடியான மகுளி இசைக்கருவியின் கடுமையான குரலையுடைய குடிஞை என்னும் ஆந்தையின் ஒலியும் கேட்கும் நெடும் பெருங்குன்று என்று பொருந்தில் இளங்கீரனார் (அகநாநூறு 19) பாடுகிறார்.    

சங்க இலக்கியத்தில் குன்றூர்:

குன்றுகளை ஒட்டி அமைந்த ஊர்களை குன்றூர், குன்னூர், குன்றத்தூர், குன்னத்தூர், குன்றக்குடி, குன்னங்குடி என்று அழைக்கிற வழக்கம் தமிழ்நாட்டில் இன்றும் பரவலாக காண முடிகிறது. 'குன்றூர், குன்றக சிறுகுடி, குன்றகத்ததுவே குழு மிளை சீறூர்' என குன்றுகளை சார்ந்த ஊர்கள் குறித்த செய்திகள் சங்க இலக்கியத்தில் காண முடிகிறது. பல ஊர்களை உள்ளடக்கிய ஆட்சி பரப்பை நாடு என்பர். குன்றுகளை உடைய நாட்டை, குன்று நாடு, முட்ட நாடு என்று வரையரை செய்தனர். குன்று நாட்டு தலைவனை குன்று நாடான் என்றும், குன்றத்து கிழவன் என்றும், குன்றுகளில் வாழ்ந்த மக்கள் குன்ற குறவர் என்றும் சங்க இலக்கியம் பாடுகிறது.  

இளங்கீரனார் இயற்றி பாடல் (நற்றிணை 62) ஒன்றில் கோடை வெயில் சுட்டெறிக்கும் குன்றூர் குறித்த செய்தி காணப்படுகிறது. நற்றிணையிலும் (280), குறுந்தொகையிலும் (164) முதிர்வேளிர் குன்றூர் குறித்த செய்திகள் காணப்படுகிறது.   


புதுக்கோட்டை, திருமய்யம், அருகே நெரிஞ்சிக்குடி கண்மாய் கல்வெட்டில் பாண்டிய நாட்டு குன்று இருக்கை நாட்டு உழக்குடி குறித்த செய்தி வருகிறது. (Inscription text of the Pudukkottai State, 2002 Pg 24)

அக்னீஸ்வரம் கோயில் கல்வெட்டுகள் விவரம்:

கல்வெட்டு எண்: 1

அமைவிடம்: குளத்திற்கு அருகில் உள்ளது

ஆண்டு: கிபி 13 ஆம் நூற்றாண்டு

மன்னன்: மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கல்வெட்டு சுருக்கம்: 4 வரி கல்வெட்டு

சோணாடு வழங்கியருளிய என்ற மாறவர்மன் சுந்தரபாண்டியனின் பெயர் இடம் பெறுகிறது. சந்தியா தீபம் எரிக்க சந்திராத்திதவரை இறையிலியாக நிலம் அளிக்கபட்டதையும், நிலத்தின் எல்லைகள் பற்றியும் குறிப்பிடப்படுகிறது. எல்லைகளில் ஒன்றாக கோயிலின் அருகேயுள்ள பெரியகுளம் குறிப்பிடப்படுகிறது.    

 

கல்வெட்டு எண்: 2

அமைவிடம்: அக்னீஸ்வரன் கோயில் மதில் மேல் வெளிப்புறம்

ஆண்டு: கிபி 13 ஆம் நூற்றாண்டு

மன்னன்: மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கல்வெட்டு சுருக்கம்: 4 வரி கல்வெட்டு

ஸ்ரீ கோமாறபற்மரான திரிபுவனச் சக்கரவர்த்திகள் சோணாடு….. நாயனாருக்கு சந்தியா தீபம் ஒன்று எரிக்க சந்திராத்திதவரை இறையிலியாக நிலம் அளிக்கபட்டதை குறிப்பிடுகிறது. தெற்கு எல்லையில் அப்பன் கூத்தர் ரின் செய் (நிலம்) இருப்பதை கல்வெட்டு தெரிவிக்கிறது.

 

கல்வெட்டு எண்: 3

அமைவிடம்: அக்னீஸ்வரன் கோயில் மதிலில் உள்ள கல்

ஆண்டு: கிபி 13 ஆம் நூற்றாண்டு (1233 - 17வது ஆட்சியாண்டு)

மன்னன்: மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கல்வெட்டு சுருக்கம்: 2 வரி கல்வெட்டு

பாண்டிய தேவற்கு ஆண்டு யஎ (17) என்றும் திருவற்க்கீசுவரமுடைய நாயனர் என்று இறைவன் பெயரையும் பற்றி கல்வெட்டு தெரிவிக்கிறது.

 

கல்வெட்டு எண்: 4

அமைவிடம்: சிவன் கோயில் தென்புறம் கோட்டைச் சுவரில் உள்ள தனிக் கல்  

ஆண்டு: கிபி 13 ஆம் நூற்றாண்டு

மன்னன்: மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கல்வெட்டு சுருக்கம்: 4 வரி கல்வெட்டு

சோணாடு கொண்டருளிய சுந்தரபாண்டிய தேவற்கு என்றும் இவ்வூரைச் சேர்ந்த எழுவன் சிறந்தன் என்பவன் சந்திராதித்தவரை கோயிலுக்கு விடபட்ட நிலக்கொடை குறித்தும் குறிப்பிடுகிறது.

 

கல்வெட்டு எண்: 5

அமைவிடம்: சிவன் கோயில் தென்புறக் கோட்டைச் சுவர்  

ஆண்டு: கிபி 13 ஆம் நூற்றாண்டு

மன்னன்: பிற்பாண்டியர்

கல்வெட்டு சுருக்கம்: 4 + 4 + 3 வரி கல்வெட்டு

சந்தியா தீபம், நில எல்லைகள் பற்றிய குறிப்புகளை தருகிறது. பெருங்குன்றத்து வெள்ளாளர் செய் என்கிற எல்லை பற்றி கல்வெட்டு குறிப்பிடுகிறது.

 

கல்வெட்டு எண்: 6

அமைவிடம்: சிவன் கோயில் கருவறை தென்சுவர்  

ஆண்டு: கிபி 13 ஆம் நூற்றாண்டு

மன்னன்: பிற்பாண்டியர்

கல்வெட்டு சுருக்கம்: 5 வரி கல்வெட்டு

எழுவன் சிறந்தானன் இறையிலியாக கோயிலுக்கு விட்டுக் கொடுத்த செய்தியை குறிப்பிடுகிறது. உதைய வளநாட்டு செங்குடிநாட்டு பெருங்குன்றத்தூர் பற்றி குறிப்பிடுகிறது.

 

கல்வெட்டு எண்: 7

அமைவிடம்: சிவன் கோயிலுக்கு பின்புறம் கிணற்றுக்குள் உள்ள தனிக்கல்

ஆண்டு: கிபி 13 ஆம் நூற்றாண்டு

மன்னன்: பிற்பாண்டியர்

கல்வெட்டு சுருக்கம்: 4 வரி கல்வெட்டு

பெருங்குன்றத்தூர் கிழவன் பற்றி குறிப்பிடப்படுகிறது.

 

கல்வெட்டு எண்: 8

அமைவிடம்: சிவன் கோயில் வடபுறம் உள்ள தனிக்கல் மற்றும் குளத்திற்கு அருகில் உள்ள தனிக்கல்

ஆண்டு: கிபி 1931

மன்னன்: ஆங்கிலேயர் ஆட்சி

கல்வெட்டு சுருக்கம்: 10 + 2 வரி கல்வெட்டு

இக்கோயில் இறைவனின் பெயர் அக்னீஸ்வரர் என்றும் இக்குளத்தின் படிக்கட்டுகளை மீனாட்சிபுரம் சுப்பிரமணியத் தேவர் மகன் கட்டினார் என்றும் முதல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இரண்டாம் கல்வெட்டு 2 வரி மட்டுமே கிடைத்துள்ளது. அதில் அக்கினீசுரம் என்று குறிப்பிடுகிறது.  

(ஆதாரம்: மதுரை மாவட்ட கல்வெட்டுத் தொகுதிகள் 2, பக் 83 – 91)

கல்வெட்டு எண்: 9
அமைவிடம்: ஈஸ்வரபேரி கண்மாய் மடை முதல் கண்ணின் கீழே உள்ள கல்
ஆண்டு: கிபி 13 ஆம் நூற்றாண்டு
மன்னன்: பிற்பாண்டியர்
கல்வெட்டு சுருக்கம்: 6 வரி பாடல் வடிவு கல்வெட்டு

இப்பகுதியில் குறுநில தலைவன் அல்லது பாண்டிய மன்னனின் அதிகாரியாக இருந்த கலிங்கத்தரையன் என்பவன் பெருங்குன்றைப் பெருங்குளம் சீரமைத்த செய்தியினை கல்வெட்டு தெரிவிக்கிறது. அருகிலுள்ள மலைப்பாறை முகட்டில் சூலம், சந்திரன், சூரியன் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளன.   
(வே.இராஜகுரு & து.முனீஸ்வரன், ஆவணம் 2021, பக் 39)









































ஈஸ்வரப்பேரி ஊரில் இருந்த வீடு ஒன்று 

ஒளிப்படங்கள்: திரு. கௌதமா, பாலகிருஷ்ணா, விஷ்வா, கேசவன், சதிஷ்குமார், கமலேஷ், சக்திவேல், நிலா பாண்டியன், ஹிமோக்ளோபின், தமிழ்தாசன்

எழுத்து & தொகுப்பு
தமிழ்தாசன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை

Comments

Popular posts from this blog

கள்ளங்காடு பெருங்கற்கால சின்னங்களும் அழகுநாச்சியம்மன் கோயில்காடும்

இராமநாதபுரம் கிழக்கு கடற்கரையின் பல்லுயிர் சூழலும் பண்பாட்டுக் கூறுகளும்

அருவிமலை - பண்பாட்டுச் சூழல் நடை